அற்ப மானிடன்

paintings on uterus

அவள் வலியில் துடித்தது, அவளுக்கு கர்ப்பப்பையில் கட்டி ஒன்று இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது, கர்ப்பப்பையை  உடனடியாக எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியது, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியது  எல்லாம் நாட்களை வழக்கத்தின் பாதையில் இருந்து மாற்றிவிட்டன.  மாத்திரை, மருந்து, தண்ணீர், உணவு என நோயாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே நுழைந்து வெளியேறியும், வந்தவனுமாய் இருந்தேன்.

 

கடந்த பத்துப் பதினைந்து நாட்களாய், வங்கி, தொழிற்சங்கம், வீடு எல்லாம் மறந்து அம்முவோடு ஆஸ்பத்திரியில் இருந்தேன்.  “அடேயப்பா, வீட்டுல ஒண்ணுன்னா மாது துடிச்சுப் போயி கூடவே இருக்காரே” பலரும் வியந்தது உள்ளுக்குள் ஒரு சந்தோஷத்தைத் தந்தது உண்மை.

 

என்ன, ஏது என்று கேட்ட நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் உறவினர்களிடம் “அவளுக்கு யூடிரஸ் ரிமுவ் பண்ணணும்” என நான் சொல்லிய போதெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தாள். ஆபரேஷனுக்கு முந்திய இரவில் நான் மட்டும் கூட இருந்தேன். அவளுக்குத் தைரியம் சொல்லுவதாய்  கைகளை இறுகப் பற்றினேன். மெல்ல சிரித்தவளாய் சொன்னாள். “நம் மகளும், மகனும் அங்குதான் முளைத்தார்கள். செல்லங்கள் அங்கிருந்துதான் நம்மிடம் வந்தார்கள். அதன் பணி முடிந்து விட்டது.” என்றாள்.  அவள் கண்களில் ஈரம் வழிந்தது. வேண்டிய யாரோ போன் செய்தார்கள் அவளுக்கு. ‘எனக்கென்ன.... அவங்க கூடவே இருக்காங்க..” என அம்மு தன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்வது கேட்டது.

 

அவள் கூடவே நான் எங்கு இருக்கிறேன்.  அவள் எங்கே? நான் எங்கே?  வாழ்வின் அர்த்தம் தோன்றாத அற்ப மானிடன்.

courtesy : painting by Nicole Rose Gelormino

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. வாழ்வின் அர்த்தங்கள் எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பதாக/

  பதிலளிநீக்கு
 2. சீக்கிரம் குணமடைய எங்களது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. //அதன் பணி முடிந்து விட்டது.” என்றாள். அவள் கண்களில் ஈரம் வழிந்தது.//

  தம் கடமைகளை நிறைவேற்றியவர்கள் என்றாலும் தாய்தந்தையரை இழக்க ஒப்புவதில்லையே நாம்? அந்த உணர்வுதான் வந்தது எனக்கு.

  பதிலளிநீக்கு
 4. விரைவில் குணமடைய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என்பது மட்டும் உங்களது எழுத்தில் இருந்து புரிகிறது...

  தங்களது கஷ்டங்களை, உடல் உபாதைகளை ஒரு ஞானியைப் போல எதிர்கொள்கின்றனர் பெண்கள். தன்னைப் புரிந்து கொண்டு தனக்கு எப்படி உதவுவது எப்படி என்று தவியாய்த் தவிக்கும் கணவனைக் கண்களால் தடுத்தாட்கொண்டு புன்னகை செய்கின்றனர். தவிர்க்க மாட்டாதபடி அப்போது கண்களிலிருந்து விடைபெறும் நீர்த் தாரை அந்தக் காதலை மேன்மைப் படுத்துகிறது. கால காலமாக உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாத கவனத்தைக் குறித்த உள்ளார்ந்த புகார்களை அந்த நீர் கழுவிவிட, தூய அன்பால் பெண்கள் எப்போதும் மன்னிக்கும் வரம் பெற்று வந்திருக்கின்றனர்.

  கருப்பை அகற்றுதல் உடல் ரீதியாக ஏற்படுத்தும் வலிமைக் குறைவு ஒரு புறம், உளவியலில் பெண்கள் அடையும் உளைச்சல் அதிகம் பேசப்படாத விஷயம்.

  வாழ்வின் அர்த்தம் என்ன என்று கேட்கிறீர்களே மாதவ், அது தான் வாழ்வின் அர்த்தம். குடியிருந்த கோயில் என்று எம் ஜி ஆர் படம் ஒன்றிற்குத் தலைப்பிட்டதும், கருவறை வாசனை என்று கனிமொழி எழுதியிருப்பதும் ஒருபுறம் இருக்க, (கலீல் கிப்ரன் மொழியில்) தன் வழி உலகிற்கு வந்து சேர்ந்த செல்லங்களை நினைவுகொண்டு வலியைப் பொருட்டாகக் கருதாது கடக்கும் இடத்தில் அம்மு எப்பேர்ப்பட்ட கவிதயைப் படித்துவிடுகிறார்.
  அடுத்த ஆறு மாதங்கள் மருத்துவர் சொல்லி அனுப்பும் முன்னெச்சரிக்கை அம்சங்கள் அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் மாதவ். வாழ்வின் அர்த்தம் அதன் ஒவ்வொரு படியிலும் உங்களோடு பயணம் செய்து கொண்டுதான் இருக்கும்...

  பல நாட்களாக இறுக்கமாக சார்த்தி வைத்திருந்த உங்கள் இலக்கிய சன்னலை அம்மு திறந்து கொடுத்திருக்கிறார்...
  காற்றும் வெளிச்சமும் அதன் வழி பாயட்டும் தொடர்ந்து...

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 6. eagerly opened the mail to read your article..It is unfortunate...get strength to face the situation..our affection to AMMU..we wish her speedy recovery...take care...

  பதிலளிநீக்கு
 7. சீக்கிரம் குணம்பெற வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. //‘எனக்கென்ன.... அவங்க கூடவே இருக்காங்க..” என அம்மு தன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்வது கேட்டது.//

  வாழ்வின் அர்த்தம் வெளிப்பட்ட கணம் இதை விட வேறேது இருக்கமுடியும்.

  உங்களை வாசிக்க வாய்க்கவில்லை என்பது ஒரு இழப்பாக இருந்தாலும், அதன் காரணம் இழப்பைப் புறந்தள்ளுகிறது.

  உங்கள் வாழ்க்கைத்துணைக்கு அவருக்கு மிக அவசியமான, அருகாமையான கணங்களில் நீங்கள் இருக்க அமைந்திருக்கும் இத்தருணமே அவருக்கு மிக மிக அலாதியான மருந்தும் கூட.

  அவர் விரைவில் பூரண குணமடையட்டும் என இறைவனை ப்ரார்த்திக்கிறேன் மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 9. துணைவியார் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அந்நிலையை நாங்கள் கடந்து விட்டபடியால், மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பது தெரியும்...

  விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 11. மாதவ் ஜி! விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 12. சகோதரி சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன் ...

  பதிலளிநீக்கு
 13. மாதவராஜ்... அம்மு விரைவில் குணம் அடைந்து இயல்புநிலைக்கு வரட்டும். பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 14. அன்பு நண்பர் மாதவ் ...சகோதரி அம்மு உடல்நிலை சீக்கிரம் சரியாகும் ... நீங்கள் தைரியமாக இருங்கள் ... தனக்குள் ஈற்று ...இன்னொரு உயிரை மாற்றும் ...வாடகை இல்லா வீடு ...கருவென்னும் கவிதையின் ஏடு ...அம்மா என்ற சொல்லுக்கான கூடு .... காலம் படுத்தும் பாடு ...அதையும் சரிசெய்யும் விஞ்ஞானம் ..அன்புடன் சீனிவாச மூர்த்தி (..பல்லவன்)

  பதிலளிநீக்கு
 15. தோழர் மாதவ்! இது மிக மிக நுட்பமான விசயம்; பெண்களின் மெல்லிய உணர்வுகளுடன் ஆயுசு பரியந்தமும் பேசுகின்ற ஒரு உறுப்பை அவ்வளவு எளிதில் இழந்துவிட அவர்களின் மனது ஆயத்தமாக இல்லை, ஒரு நோயின் பொருட்டு இழந்துவிடவும் விரும்புவதும் இல்லை. ஆண்களால் இதன் வேதனையை உணர்ந்து விடவும் முடிந்திடுமோ? இது உளவியல் சம்பந்தப்பட்டது, இதன் பின்னர் உங்கள் மனைவிக்கு உடனடியாக வேண்டியது உங்கள் அரவணைப்பும் இது குறித்த புரிதலும்தான். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்...இக்பால்

  பதிலளிநீக்கு
 16. தோழர் மாதவ்! இது மிக மிக நுட்பமான விசயம்; பெண்களின் மெல்லிய உணர்வுகளுடன் ஆயுசு பரியந்தமும் பேசுகின்ற ஒரு உறுப்பை அவ்வளவு எளிதில் இழந்துவிட அவர்களின் மனது ஆயத்தமாக இல்லை, ஒரு நோயின் பொருட்டு இழந்துவிடவும் விரும்புவதும் இல்லை. ஆண்களால் இதன் வேதனையை உணர்ந்து விடவும் முடிந்திடுமோ? இதன் பின்னர் உங்கள் மனைவிக்கு உடனடியாக வேண்டியது உங்கள் அரவணைப்பும் இது குறித்த புரிதலும்தான். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இக்பால்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!