கூடன்குளம்: பிரகடனமாக ஒரு கவிதை

koodankulam movement

 

கூடன்குளம் அணு உலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன.  நிலைபாடுகள், கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் மீறி,  மனசாட்சியைப் பற்றி உலுப்பியபடி, கவிஞர் சமயவேல் எப்போதோ எழுதிய ‘பிரகடனம்’ எனும் இந்தக் கவிதை ஒலித்துக்கொண்டு இருப்பதாகப் படுகிறது.

 

சலிப்படையவே மாட்டேன்
மீண்டும் மீண்டும்
நான் நானாகவே இருப்பேன்!

 

வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
உன்னதம் தேடுவதை
ஒருபோதும் நிறுத்தேன்.

 

உண்மையை
மேலும் மேலும்
காதலிப்பேன்.

 

எல்லா மதிப்புகளும் பூமியில்
இறந்துவிட்டன என்னும்
நவீனவாதம் பொய்யாக்குவேன்.

 

ப்ரியம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்துவிட்டு
மீண்டும் உழுது வைப்பேன்.

 

தத்துவங்கள் வீழட்டும்
தேசங்கள் நொறுங்கட்டும்
உலகம் எதையும் பிதற்றட்டும்
பசித்தவர்கள் பக்கமே என்றும்
நான் இருப்பேன்.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தோழர் மாதவ்,
    மக்களுக்காகக் குரல் கொடுக்க முன் வந்தமைக்கு வாழ்த்துகள். கூடங்குளம் குறித்து, ஜெயலலிதாவைப் போலவே மார்க்சிஸ்ட்டுகளும் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார்கள். நீங்களாவது அணுக்கழிவு குறித்தும், கதிர் வீச்சு குறித்தும், அணு உலைகளின் ஆபத்து குறித்தும் பேசத் தொடங்குங்கள். இந்த சூழலிலும் மௌனமாக இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காகப் பேச வேண்டிய நேரமிது. கூடங்குளம் மட்டுமன்றி உலகில் எங்குமே அணு உலைகள் ஆபத்தானவை. மகாராட்டிரத்திலும், கேரளத்திலும் அணு உலைகளை எதிர்க்கும் கட்சி தமிழ்நாட்டில் மட்டும் எப்படி ஆதரிக்கிறது என்பது என் போன்றோருக்குப் புரியவேயில்லை. வெறும் 500 நிறுவனங்கள் மொத்த மின் உற்பத்தியின் 45 விழுக்காட்டை பயன்படுத்துவதும், மின் கடத்தலில் 30 விழுக்காடு இழப்பு ஏற்படுவதும், காற்றாலைகளின் மின்சாரத்தை நிறுத்தி வைப்பதும், நெய்வேலி மினசாரத்தின் பெரும்பகுதி பிற மாநிலங்களுக்கு அனுப்பப் படுவதும், சில தனியார் நிறுவனங்கள் அரசிடம் பணம் பெற முடியாததால் தங்கள் அனல் மின் உற்பத்தியை நிறுத்தியதும், ஜெயலலிதாவின் வழக்கமான மெத்தனமுமே இன்றைய மின் வெட்டுக்குக் காரணம். இதை உங்கள் பக்கங்களில் விரிவாக எழுதுங்கள். இந்த செய்திகளை என்னுடைய முகநூலில் பல்வேறு அறிஞர்களின் பதிவுகளின் மூலம் இணைப்பு கொடுத்துள்ளேன். தயவு செய்து படியுங்கள். தோழமையுடன், சீனி மோகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழர்!

      அணுசக்தி என்பது ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பம். அதை நாம் ஒட்டுமொத்தமாக மறுதலிக்கமுடியுமா என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. அதேவேளையில், அணு தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக பாதுகாப்பானதாக உருப்பெறவில்லை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருந்திட முடியாது. அதற்கான பயணம் இன்னும் இருக்கிறது என நினைக்கிறேன். முதலாளித்துவம் கோலோச்சும் இந்த அமைப்பில், இருக்கும் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை கொள்ளும் முகாந்திரங்களும் இல்லை. கண்முன் இருக்கும் அனுபவங்கள் அச்சத்தையேத் தருகின்றன. இந்த நிலைமையில், அணு உலையின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும், மக்கள் நலம் பேணாத முதலாளித்துவம் குறித்தும் சேர்த்தே நாம் பேசவேண்டியிருக்கிறது.

      சி.பி.எம் கட்சி,முதலாளித்துவத்தின் பீடமாக இருக்கிற அமெரிக்காவின் 123 ஒப்பந்தத்தை தன் முழு சக்தியோடு எதிர்த்ததை நாம் மறந்திடமுடியாது. ஜெய்தாப்பூர் உட்பட, அணு உலைகளை இன்றைக்கும் எதிர்த்து வரும் சி.பி.எம்மின் நிலைபாட்டில், இந்தப் பின்னணியும் முக்கியமான ஒன்று.

      இந்த நிலைபாட்டை, 123 ஒப்பந்தத்திற்கு முன்பு ஏற்பட்ட ஒப்பந்தங்களோடும் பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை ‘கூடன்குளம்’ மூலமாக காலம் இப்போது சுட்டிக்காட்டுவதாக எனக்குப் படுகிறது. எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்யக் கோருவதாகவும் படுகிறது. அதற்கான விவாதங்கள் எழுகின்றன. விவாதம் செய்வதாலேயே, துரோகம் செய்வதாக எண்ணிட வேண்டாம். சி.பி.எம் கட்சி, மக்களுக்குத் துரோகம் செய்கிறது என்ற வார்த்தைகள் தங்களைப் போன்றவர்களிடமிருந்து வரவேண்டாமே.

      ஜெயலலிதா நேற்று ஒன்று பேசுவார், இன்று ஒன்று பேசுவார்.நாளை ஒன்று பேசுவார். சி.பி.எம் கட்சி அன்று எதைப் பேசியதோ, இன்றும் அதையே பேசுகிறது. இந்த வித்தியாசம் அடிப்படையானது. தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

      நீக்கு
  2. சீனு மோகன் அவர்களே! மே.வங்கத்தில் மின் பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தினார்கள். தொழொலதிபர்களை அதைக்காரணமாக வைத்து, முதலீடு செய்யாமல் பார்த்துக்கொண்டார்கள். மின்சாரம் கேட்ட போது அணு உலை வேண்டுமா என்று பேரம் பெசினார்கள். பாசு எற்க மருத்தார். பக்ரேஷ்வர் திட்டத்திற்கு பணம்கொடுக்க மறுத்தார்கள்.மக்களிடம் சென்றார் பாசு. ரத்த தானம் செய்யுங்கள்.அதனைவிற்று பக்ரேஷ்வரை கட்டுவோம் என்றார். பக்ரேஷ்வர் இன்று செயல் படுகிறது.கேரளத்திலும் அணு உலை வேண்டாமென்றோம். திரிபுராவிலும் கிடையாது.எங்கு எல்லாம் மார்சிஸ்டுகள் தங்கள்செல்வாக்கினால் தடுக்க முடியுமோஅங்கு தடுத்துவிட்டார்கள்.மார்சிஸ்டுகள் மக்களுக்கு துரோகம் செய்ததில்லை.மனச்சாட்சி உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கோள்வார்கள்.---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  3. மோகன் சார் , எல்லாம் ஒரு ரஷ்யபாசம் தான் , ரஷ்யா சீனாவுக்காக இந்தியாவை விற்க கம்யூனிஸ்ட்கள் என்று தயங்கினர் ?

    இந்திய சீனப்போரில் சீன ஆதரவு நிலை எடுத்து இந்தியாவை விற்க முனைந்தது , சீன செல்போன்களை தடைசெய்ய முயன்றவுடன் அதற்காக நம் பாராளுமன்றத்தை முடக்கியது 

    போன்றவற்றின் நீட்சியாகவே ரஷ்ய அணு உலைக்காக வக்காலத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், நண்பரே,

      தங்களுக்கு தோழர்.சீனிமோகன் மிகச்சரியாக விளக்கம் தந்திருக்கிறார் கீழே!

      நீக்கு
  4. தோழர் காஸ்யபன் //எங்கு எல்லாம் மார்சிஸ்டுகள் தங்கள்செல்வாக்கினால் தடுக்க முடியுமோஅங்கு தடுத்துவிட்டார்கள் // என்று சொல்கிறீர்கள். மகிழ்ச்சி! தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலைக்கு முடிவு செய்யப்பட்ட நாள் (1989களில்) முதல் அதன் அடிக்கல் நாட்டப்பட்ட நாள் (1997களில்) வரை உங்கள் கட்சி கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்தச் செய்த நடவடிக்கைகள் என்னென்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்..

    முத்துக்குட்டி

    பதிலளிநீக்கு
  5. தோழர் மாதவராஜ் அவர்களுக்கு, வணக்கம். தோழர் சீனி மோகன் கூறியிருக்கும் //கூடங்குளம் குறித்து, ஜெயலலிதாவைப் போலவே மார்க்சிஸ்ட்டுகளும் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார்கள். நீங்களாவது அணுக்கழிவு குறித்தும், கதிர் வீச்சு குறித்தும், அணு உலைகளின் ஆபத்து குறித்தும் பேசத் தொடங்குங்கள். இந்த சூழலிலும் மௌனமாக இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. // ஆகிய கருத்துகளை நானும் வழி மொழிகிறேன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை நீங்கள் கையில் எடுக்காதது அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு எவ்வகையிலும் நட்டமில்லை. எந்தக் கட்சியின் உதவியும் இன்றி அவர்கள் ஏழுமாதம் அறவழியில் போராடப் பழகிவிட்டார்கள். பத்தாயிரம் காவலர்கள் குவிக்கப்பட்ட பிறகும் சாலை வழிகளை அடைத்துவிட்ட பிறகும் உயிருக்கு அஞ்சாமல் படகு வழியாக வந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் களத்தில் நிற்கிறார்கள்! உயிரைத் துச்சமென மதித்துக் களத்தில் நிற்கும் களப் போராளிகள் உறுதியாக வெல்வார்கள்! இதுதான் வரலாறு நமக்குச் சொல்லித்தந்திருக்கும் பாடம்! ஆனால் அப்போராட்டத்தில் சேராமல் இருப்பதன் மூலமும் நாம் சார்ந்திருக்கும் கட்சி தவறான வழியில் செல்லும் போது சுட்டிக்காட்டாமல் இருப்பதன் மூலமும் நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொண்டு மக்களிடம் இருந்து விலகுகிறோம்! அவ்வளவுதான்! உங்கள் கட்சித் தலைவர்களிடம் இதைப் பற்றித் விவாதியுங்கள்! அவர்கள் தவறு செய்வதற்கு நீங்களும் காரணமாக இருந்துவிடாதீர்கள்!
    தோழமையுடன்
    முத்துக்குட்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் முத்துக்குட்டி!

      நியாயத்திற்காகவும், நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடும் மக்கள் என்றும் வெற்றி பெறுவார்கள். மக்கள் சக்தியைவிட நம்பிக்கையும், வலிமையும் கொண்டது எதுவுமில்லை. வரலாற்றின் அனுபவம் கொண்டு நகருவோம்.

      நீக்கு
    2. தோழர், //நியாயத்திற்காகவும், நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடும் மக்கள் என்றும் வெற்றி பெறுவார்கள். மக்கள் சக்தியைவிட நம்பிக்கையும், வலிமையும் கொண்டது எதுவுமில்லை. வரலாற்றின் அனுபவம் கொண்டு நகருவோம்.// என்கிறீர்களே! கூடங்குளம் மக்கள் நியாயத்திற்காகவும், நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடும் மக்கள் என்று சொல்கிறீர்களா? இல்லையா? கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்..

      நீக்கு
    3. கூடன்குளம் மக்களின் போராட்டம் நியாயமானது என்பதுதான் என் கருத்து.

      நீக்கு
  6. //தத்துவங்கள் வீழட்டும்
    தேசங்கள் நொறுங்கட்டும்
    உலகம் எதையும் பிதற்றட்டும்
    பசித்தவர்கள் பக்கமே என்றும்
    நான் இருப்பேன்//.
    எந்த சூழ் நிலையிலும் எந்தக் காலத்திலும் பசித்தவர்கள் பக்கமே நிற்பவர்களைக்காண்பதரிது வாழ்த்துகள் மாது
    பேரன்புடன்,
    திலிப் நாராயணன்.

    பதிலளிநீக்கு
  7. காஸ்யபன் கூறியதையும் அரங்கசாமி கூறியதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சீனி மோகன் என்று தெளிவாக இருந்தும் வழக்கமான “பார்வைக் கோளாறால்” சீனு மோகன் என்று காஸ்யபன்/காஷ்யபன் குறிப்பிடுவது ஏன் ? சரி, தோழர் முத்துக்குட்டி கேட்ட கேள்விகளுக்காவது காஸ்யபன்/காஷ்யபன் பதில் சொல்வாரா ? நாங்கள் செல்வாக்குடன் இருக்கும் பகுதியில் மட்டும் மக்களைக் காப்பாற்றுவோம் என்பது என்ன மாதிரி மார்க்ஸிசம் என்று தெரியவில்லை. அவர் தான் விளக்க வேண்டும். நேரடியாகவே கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அணு உலையை ஆதரிக்கிறார்களே ! இங்கு செல்வாக்கில்லை என்பதனால் கதிர்வீச்சு மூலம் மக்களைக் கொன்று விடலாம் என்று பொருள் கொள்ளலாமா ? இயங்கியலில் தனி மனித மனசாட்சி என்றெல்லாம் ஒன்று இல்லை காஸ்யபன்/காஷ்யபன் அவர்களே. உங்கள் பகுதியில் நான் வைத்த விமர்சனத்திற்கே இன்னும் கள்ள மௌனம் சாதிக்கும் நீங்கள் இங்கு வந்து ஒரு குழந்தையைப் போலப் பேசுகிறீர்கள். மேற்கு வங்கம் குறித்து இங்கு பேச வேண்டாமே. ’டாடா’ விற்காக சொந்த மக்களின் மீது போர் தொடுத்த சிங்கூரும், நந்தி கிராமும் அங்கு தானே இருக்கிறது ?

    அரங்கசாமியின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இங்கு ரஷ்ய-சீன விவாதம் எழவே இல்லை. இப்போதைய ரஷ்யா சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கட்சி எடுக்கவில்லை. வேறு இடத்தில் இந்திய சீனப்போர் பற்றி விவாதிக்க வேண்டும். அதற்கான களம் இது இல்லை. மேலும் கூடங்குளம் ஒப்பந்தம் ரஷ்ய அரசுடன் அல்ல. ஒரு ரஷ்ய நிறுவனத்துடன். ரஷ்யாவிலிருந்து வந்தால் அது சோஷலிசக் கதிர்வீச்சு; ஏழைகளைப் பாதிக்காது என்று கூட சொல்வீர்கள்.

    ஏற்கனவே உங்கள் இந்துத்வா சுதேசி பேசும் வாஜ்பாயி-அத்வானி கூட்டணியும், அமெரிக்க அடிவருடி காங்கிரஸ்காரர்களும் பன்னாட்டு மூலதனத்திற்கு இந்தியாவை விற்று விட்டார்கள். இதற்குக் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுப்பாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இங்கு அணு உலை பற்றி மட்டும் விவாதிப்போமே !

    பதிலளிநீக்கு
  8. மதிப்பிற்குரிய சீனி மொகன் அவர்களே! எழுத்துப்பழையன்றி வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை .பொறுத்தருளும்படி கேட்டுக்கொள்கிறென். அணுஉலையினால் ஏற்படும் ஆபத்தை,கிராமம் கிராமமாக சென்று கலைநிகழ்ச்சிகள் மூலம் மே.வ. மக்களிடையே பிரச்சாரம் செய்தவர்கள் மார்க்சிஸ்டுகள்..ஹிரொஷிமா என்ற பொம்மலாட்டநிகழ்ச்சியை நான் பார்த்திருக்கிறேன். பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சி.,,அணு உலை பற்றி உங்களுக்கு திருப்தி எற்ற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் . இப்பொது சிங்க்றுர் என்று ஆரம்பிகிறீர்கள். நண்பரே1 நான் மார்க்சிஸ்டு கட்சியின் உறுப்பினன்.இதனை மூடிமறைக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு வித்தியாசமான கருத்து இருக்கலாம்.என்ன கருத்து என்பது எனக்கு புலப்படவில்லை.அதெசமயம் மார்க்சிஸ்டு கட்சியின் மீது வெறுப்பு/கோபம் இருக் கிறது என்று கருதுகிறேன் .Let us agree todisagree----காஸ்யபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் காஸ்யபன் //எங்கு எல்லாம் மார்சிஸ்டுகள் தங்கள்செல்வாக்கினால் தடுக்க முடியுமோஅங்கு தடுத்துவிட்டார்கள் // என்று சொல்கிறீர்கள். மகிழ்ச்சி! தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலைக்கு முடிவு செய்யப்பட்ட நாள் (1989களில்) முதல் அதன் அடிக்கல் நாட்டப்பட்ட நாள் (1997களில்) வரை உங்கள் கட்சி கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்தச் செய்த நடவடிக்கைகள் என்னென்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்... என்று கேட்டிருந்தேன். தாங்கள் என்னுடைய கேள்வியை விட்டுவிட்டீர்கள்... தோழர் சீனி மோகன் அவர்களும் என்னுடைய கேள்வியை வலியுறுத்தியிருந்தார்...

      நீக்கு
    2. தோழர் காஸ்யபன் அவர்களே ! எழுத்துப் பிழை என்பது எல்லோருக்கும் ஏற்படுவது தான். விடுங்கள், அது பிரச்சினையே இல்லை. அணு உலைகள் குறித்து எனக்கு எந்த திருப்தியும் இல்லை. உலகில் அணு உலை எங்குமே கூடாது என்பது தான் என் நிலைப்பாடு. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் மேற்கு வங்கத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையே சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்காததை ஒப்புக் கொள்கிறீர்கள் என்று சொல்லலாமா ? என் கருத்து மிகத் தெளிவு. முதலாளித்துவத்தின் கையில் மட்டும் இல்லை; பொதுவுடைமைக்காரனிடம் இருந்தாலும் அணு உலை ஆபத்தானது தான். இங்கே மாதவராஜிடனும் முரண்படுகிறேன். பொதுவுடைமை ரஷ்யாவில் தான் செர்னோபில் வெடித்தது.’அணு தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக பாதுகாப்பானதாக உருப்பெறவில்லை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருந்திட முடியாது. அதற்கான பயணம் இன்னும் இருக்கிறது என நினைக்கிறேன். முதலாளித்துவம் கோலோச்சும் இந்த அமைப்பில், இருக்கும் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை கொள்ளும் முகாந்திரங்களும் இல்லை. கண்முன் இருக்கும் அனுபவங்கள் அச்சத்தையேத் தருகின்றன. இந்த நிலைமையில், அணு உலையின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும், மக்கள் நலம் பேணாத முதலாளித்துவம் குறித்தும் சேர்த்தே நாம் பேசவேண்டியிருக்கிறது’ என்று மாதவ் கூறும் போதே கம்யூனிஸ்டுகளின் கையில் அது பத்திரமாக இருக்கும் என்ற தொனி ஏற்படுவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. ஆனால் கோபம் உண்டு என்பது உண்மை.

      நீக்கு
    3. தோழரே!

      செர்னோபில் விபத்தின்போது பொதுவுடமையை ரஷ்யா முழுமையாக அடைந்திருக்கவுமில்லை, அணு தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு முறைகள் முழுமையாக வளர்ந்திருக்கவுமில்லை.

      ஊழல் அற்ற, பொதுநலம் மட்டுமே பேணுகிற, அனைத்து மக்களின் வாழ்க்கையும் முதன்மையானது என்று கருதுகிற அமைப்பில் நிச்சயம் இதுபோன்ற தொழில்நுட்பங்களில் அதிக பாதுகாப்பு முறைகள் பேணப்படும் என நான் நம்புகிறேன்.

      இந்த உலகம், அதன் எதிர்காலம், மக்களின் வாழ்க்கை குறித்து தங்கள் கருத்துக்களில் வெளிப்படும் அக்கறையை மதிக்கிறேன்.

      நீக்கு
  9. சரிங்க சீனிமோகன் ,

    இந்தியாவை சீனாவுக்கு விற்க 1962 மார்க்ஸிட்கள் செய்த முயற்சி பற்றி இங்கே , இப்போது பேசவேண்டாம் . சீன 'தனியார்' செல்பேசிகளை தடைசெய்ததை எதிர்க்க அவர்களது சீனப்பாசம் காரணம் அல்ல என்றே வைத்துக்கொள்வோம்,

    இந்தியாவெங்கும் ஜெர்மன் , பிரான்ஸ் அணு உலைகளை எதிர்க்கும் மார்க்ஸியர்கள் ரஷ்ய அணு உலையை மட்டும் ஆதரிக்க வேறு என்ன காரணம் என எனக்கு அறிந்து சொல்லுங்கள் .

    - ரஷ்ய அமைச்சர் இந்த உலை தடைசெய்யப்பட்டால் இந்திய உறவு கெடும் என்று தன் நாட்டு தனியார் கம்பனிக்காக ஒரு தேசத்தையே பகைக்க தயாரானதை கூட நான் மறந்துவிடுகிறேன் .

    இந்தியா அணுகுண்டு வெடித்ததைக் கூட அவர்கள் எதிர்க்க அவர்களது சீனப்பாசம் காரணம் அல்ல என நம்பிக்கொள்கிறேன் .அதைக்கூட எதிர்ப்பவர்கள் இதை ஏன் ஆதரிக்கிறார்கள் ?

    பதிலளிநீக்கு
  10. மக்கள், கிராமம் கிராமமாக, பெண்கள், குழந்தைகள்,முதியோர் என அனைவரும் ஒரு குரலில் எதிர்ப்பை தெரிவித்து வந்த போது, கட்சியின் கவனம் அந்த போராட்டத்தில் போதிய அளவு அல்ல கொஞ்சமும் இல்லை என்ற சுயவிமர்சனத்தை வைக்கும் மனோபாவத்தையாவது வளர்த்துகொள்வது கட்சியின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் தோழரே!

    பதிலளிநீக்கு
  11. சமயவேலின் பிரகடனம் கவிதை கூடங்குளம் அணுஉலை போராட்டத்திற்காக எழுதப்பட்டது போல மிகவும் பொருத்தமாக உள்ளது. ஒவ்வொரு வரியும் அருமை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!