வம்சி சிறுகதைப் போட்டி மற்றும் குடும்ப நூலகம்

“வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள் என்ன ஆச்சு?”. தொலைபேசிகள், பின்னூட்டங்கள், தனி மடல்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் பதிலுக்கு பவா.செல்லத்துரையையும், அவரது துணைவியார் ஷைலஜா அவர்களையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

 
“பொறுங்க தோழர்,  நடுவர் குழுவில் நாஞ்சில் நாடனுக்கும், பிரபஞ்சனுக்கும் அனுப்பி வைத்துவிட்டோம். தமிழ்நதி அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. விரைவில் அனுப்பி வைத்துவிடுகிறோம்”
“நாஞ்சில் நாடன் காரைக்குடி பக்கம் ஷூட்டிங் சம்பந்தமாக இருக்கிறார். வர சில நாட்கள் ஆகுமாம்.”
“பிரபஞ்சன் இன்னும்  சில கதைகள் மட்டுமே படிக்க வேண்டியிருக்கிறதாம். ஓரிரு நாட்களில் அவரது முடிவைச் சொல்லிவிடுவார்.”
”தமிழ்நதிக்கு தாமதமாக அனுப்ப முடிந்தது. விரைவில் படித்துவிட்டுச்  சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.”
“நாஞ்சில் நாடன் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்.”
“பிரபஞ்சனும் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்”
இப்படியே தொடர்ந்த உரையாடல்களின் கடைசியாக இன்று காலை வம்சி பதிப்பத்தின் சார்பில் ஷைலஜா அவர்கள், ”நாளை தமிழ்நதி முடிவுகள் சொல்லி விடுவார். புத்தாண்டுச் செய்தியாக அறிவித்துவிடலாம்” எனச் சொன்னார். கொஞ்சம் தைரியமாக தீராத பக்கங்களின் பக்கம் வந்திருக்கிறேன்.

நண்பர்களே, மன்னியுங்கள். இந்த சிறுகதைப் போட்டியில் அறிவித்த தேதிக்கு ஒரு மாதம் கழித்துத்தான் முடிவு சொல்கிற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. தொகுப்பிற்கான கதைகள் ஒரளவுக்கு முடிவு செய்து அச்சுக்கு அனுப்பக் கூடிய நிலையில் இருப்பதாகவும், தமிழ்நதி அவர்கள் முடிவுகள் தெரிவித்தவுடன் இறுதி செய்துவிடலாம் எனவும், நிச்சயம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தொகுப்பை கொண்டு வந்துவிட முடியும் எனவும் பவா.செல்லத்துரை இப்போதும் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்.  எழுத்தாளர்கள் பிரபஞ்சனும், நாஞ்சில்நாடனும் அறிவித்த முடிவுகளைக் கேட்டேன். சொல்ல முடியாது,  அதை வம்சி இறுதி செய்தபிறகே சொல்வோம் என்று சிரிக்கிறார். ஆனால் பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் முதலிரண்டு கதைகளை ஒன்றுபோல் சொல்லியிருக்கிறார்கள் என ஆச்சரியமாகச் சொன்னார்.

நண்பர்களே இன்னும் ஒருநாள் பொறுத்துக்கொள்ளுங்கள் முடிவுகளுக்காக. உங்களோடு நானும் காத்து இருக்கிறேன்.

 

barathi puthagalayam family library

பாரதி புத்தகாலயம் சார்பில் குடும்ப நூலகம் என ஒரு திட்டம் யோசிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கொரு நூலகம் அமைப்பதற்கான ஆரோக்கியமான சிந்தனையுடன் இது  அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

குறைந்த பணம் செலுத்தி, அதிக தள்ளுபடியில் உங்களுக்குத் தேவையான எவ்வகையானப் புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.100 செலுத்தி குடும்ப நூலகத்தின் உறுப்பினராகுங்கள்.

ரூ.2000/- செலுத்தி ரூ.3000/- மதிப்புள்ள புத்தகங்களையும்,
ரூ.5000/- செலுத்தி ரூ.8000/- மதிப்புள்ள புத்தகங்களையும்
ரூ.12000/- செலுத்தி ரூ.20000/- மதிப்புள்ள புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

அணுகுவீர்:
பாரதி புத்தகாலயம்
421,அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை- 18
தொலைபேசி: 044- 24332424 / 24332924

ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல திட்டம் ஐயா..

    அது சிறப்புற என் வேண்டுதல்களும்..

    பதிலளிநீக்கு
  2. தகவல்களுக்கு நன்றி தோழர்...

    பதிலளிநீக்கு
  3. இன்னும் ஒரு நாள்தானே.. பொறுத்துக்க மாட்டோமா என்ன?..

    இப்படிக்கு,
    நாளை வரை நகம் கடித்துக் கொண்டிருப்போர் சங்கம் :-))

    பதிலளிநீக்கு
  4. பிரபஞ்சனும், நாஞ்சில்நாடனும் தேர்வு செய்த கதையை எழுதியவர் யார் என்று அறிய ஆவலாயிருக்கிறோம். மேலும், நாஞ்சில்நாடன் காரைக்குடி பக்கம் ஷூட்டிங்கில் இருக்கிறாரா? கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது? அப்படியென்ன படம் கேட்டுச்சொல்லுங்கள். பாரதிபுத்தகாலயத்தின் குடும்பநூலகம் நல்லதிட்டம். என்னிடம் பாரதிபுத்தகாலய புத்தகங்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கின்றன. அதில் ச.தமிழ்ச்செல்வனின் 'எது கலாச்சாரம்?' எஸ்.ரா'வின் 'கிறுகிறுவானம்' இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள். தாங்கள் எழுதிய 'ஆதலினால் காதல் செய்வீர்' புத்தகமும் முக்கியமான புத்தகம்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவ்

    வலைப்பூ சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தொகுப்பாக வாசிக்கக் காத்திருக்கிறேன்..உங்களோடு அலைபேசியில் கேட்டறிந்தபோது, கண்ணீர் உகுக்க வைக்கும் அற்புத வாசிப்பு காத்திருக்கிறது என்கிற குறிப்பு என்னைக் கிளர்ச்சியுற வைக்கிறது. இதெல்லாம் நிகழ்வதில் உங்களது பங்களிப்பு வழக்கம்போலவே என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

    ஏனோ, திடீரென்று நினைத்துக் கொண்டேன், நான் வலைப்பூ பதிவர் அல்ல என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டது எவ்வளவு பெரிய பிழை என்று...நான் மிகச் சிலரது வலைப்பூக்களை மட்டுமே வாசிப்பவன். நமது தோழன் காமராஜ் சிறுகதைகளை எனது தரப்பில் இருந்து பரிந்துரைத்திருக்க முடியும், தவறி இருக்கிறேன், அதே போலவே ராகவன் உள்ளிட்ட அருமையான எழுத்தாளர்கள் சிலரது கதைகளை நிச்சயம் நான் இணைப்பு கொடுத்து பதிவு செய்திருக்க வேண்டும்...

    பதிவுலகம் என்பதால் நமக்கு பங்கு இல்லை என்று வாசித்த சமயமே தவறான மனத்தடை உருவாகி விட்டது. இழப்பு என்னைச் சுடுகிறது.

    உங்களுக்கும், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், தமிழ்நதி அப்புறம் வம்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், வணக்கங்கள் கூடவே நன்றியும்.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  6. வம்சி நல்ல புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.

    பாரதி புத்தகாலயம் தமிழ் மக்களிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் தூண்டும் வண்ணம் திட்டமிடுகிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!