ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

lenin

 

வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயமாதல் என்ற பெயரில் உருவான அக-புற நெருக்கடிகள் எளியமனிதர்களை மூச்சுத்திணறச் செய்து ஒடுக்கிவருகிறது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து தெருவில் இறங்கிப் போராடி வெற்றி பெற்று வருகிறார்கள்.

துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரத்திலிருந்து எதேச்சதிகார ஆட்சி நடத்திய அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அரசு அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன் றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அடக்கு முறைகளைப் பற்றிய பயமின்றி  கடல் போன்று மக்கள் திரண்டு ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்து புதிய அரசை உருவாக்கியிருக்கிறார்கள்.

எண்ணெய் வளத்திற்காக பல ஆண்டுகாலமாக அமெரிக்கா தன் பிடியில் வைத்திருந்த வெனிசுலாவிலும் இது போன்ற மக்கள் எழுச்சியே அதிபர் சாவேஸ் அரசை உருவாக்கியது. இந்த எல்லா மக்கள் எழுச்சிகளுக்கும் ஒரே அடித்தளம்தான் உள்ளது. அது தான் ருஷ்யப் புரட்சி என்று அழைக்கப்படும் நவம்பர் புரட்சி.

மனிதகுல வரலாற்றில் பெரும் பான்மை நாடுகள் போரின் வழியாக கைப்பற்றப்பட்டு அடிமையாக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கான மனிதர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அந்த நாட்டின்  பூர்வீக குடிமக்கள் இரண்டாம் பட்ச பிரஜைகளாக நடத்தப்படுவார்கள். அந்த நிலையை மாற்றி ஒரு தேசத்தின் அரசியல் மாற்றத்தை மக்களே முன்நின்று நடத்தியது ருஷ்ய புரட்சியில் தான் நடந்தேறியது.

ஜாரின் அதிகார ஒடுக்குமுறைகளைத் தாங்கமுடியாமல் மக்கள் ஒன்று திரண்டு நிலப்பிரபுத்துவ அதிகாரத்தைத் தூக்கி எறிந்து பொதுவுடைமை ஆட்சியை உருவாக்கிக் காட்டியதே ருஷ்யபுரட்சியின் அளப்பரிய சாதனை.

அது தற்செயலாக உருவான ஒன் றில்லை, உருவாக்கப்பட்டது. அதன் பின்னே மார்க்ஸின் சிந்தனைகளும் லெனினின் வழிகாட்டுதலும் களப்பணியாளர்களின் ஒன்று திரண்ட போராட்டமும் கலைஇலக்கியவாதிகளின் இடைவிடாத ஆதரவும் ஒன்று சேர்ந்திருக்கிறது.

ருஷ்யப் புரட்சி குறித்து நிறைய வரலாற்று ஆவணங்கள், வீரமிக்க சம்பவங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மைக்கேல் ஷோலகோவின் "டான் நதி அமைதி யாக ஓடிக் கொண்டிருக்கிறது" என்ற நாவல் புரட்சி காலகட்ட ரஷ்யாவை மிகவும் துல்லியமாகச் சித்தரிக்கிறது. நவம்பர் புரட்சியைப் பற்றிய ஐசன் ஸ்டீனின் அக்டோபர் அல்லது உலகை குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப் படம் ஒரு அரிய ஆவணக்களஞ்சியம். அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது உடல் சிலிர்த்துப் போய்விடுகிறது.

ருஷ்யப் புரட்சியை நினைவு கொள்ளும்போது  அதை ஒரு மகத்தான வரலாற்றுச் சம்பவம் என்று மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக் கொண்டோம், வரலாறு நமக்கு எதை நினைவு படுத்துகிறது, எதை நாம் முன்னிறுத்திப் போராடவும் முன்செல்லவும் வேண்டியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.

கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, இனி பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தும் அரசு ஒருபோதும் உருவாகாது என்ற பொய்ப்பிரச்சாரத்தை உலகின் முக்கிய ஊடகங்கள் அத்தனையும் கடந்த பல வருசங்களாகத் தொடர்ச்சியாக செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது நிஜமில்லை என்பதையே கிரீஸ், பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பின்லாந்து என்று ஐரோப்பாக் கண்டத் தின் சகல போராட்டங்களும் நிரூபணம் செய்தபடியே இருக்கின்றன.

ஊடகச் செய்திகளால் அவற்றை மறைக்க முடியவில்லை. ஐரோப்பாவில், அரபு நாடுகளில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மக்கள் எழுச்சி எதை அடையாளம் காட்டுகிறது. புரட்சி ஒரு போதும் தோற்றுப்போவதில்லை என்பதைத்தானே காட்டிக் கொண்டிருக்கிறது. வீதியில் இறங்கிப் போராடும் மக்கள், தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதற்குச் சான்றாக ருஷ்ய புரட்சியையே நினைவு கொள்கிறார்கள். அதுதான் நவம்பர் புரட்சியின் உண்மையான வெற்றி.

ருஷ்யப் புரட்சி வரலாற்றில்  பல முன்மாதிரிகளை உருவாக்கியது. அந்த மாற்றம் மானுடவிடுதலையின் ஆதார அம்சங்கள் தொடர்பானது. நாகரீகம் அடையத் துவங்கிய நாளில் இருந்தே மனிதர்கள் சம உரிமையுடன் வாழும் கனவுகளுடன் தான் வாழ்ந்து கொண் டிருந்தார்கள். ஆனால் அதை எந்தச் சமூக அமைப்பும் அவர்களுக்குத் தர முன்வரவில்லை. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த பிரபுக்களின் ஆட்சியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்திற்கே முதல் உரிமை தந்தது.

வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மதவாத இனவாத ஒடுக்குமுறைகளும் எளிய மனிதர்களை வாட்டி வதைத்தன. அந்த இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டெடுத்து, மக்களுக்கான அரசை உருவாக்கியதோடு பொதுவுடைமை என்ற சித்தாந் தத்தை வாழ்வியல் நெறியாக உருமாற்றியது. ரஷ்ய புரட்சியின் காரணமாக ருஷ்யாவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட் டன. தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. ஜாரின் பிடியில் இருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டது. ரஷ்யா சுதந்திர நாடாக, முழுமையான சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.

இந்த முன்முயற்சிகள் உலகின் பலதேசங்களுக்கும் வழிகாட்டுவதாக இருந்தன. நவம்பர் புரட்சியைப் போல ஒன்று தங்களது நாட்டிலும் உருவாகி விடாதா என்ற ஏக்கம் உலகெங்கும் தோன்றவே செய்தது. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானமேதைகள் இதை வெளிப்படையாகவே ஆதரித்து, அறிவியல் பூர்வமான சமூகமாற்றம்  என்று கொண்டாடினார்கள்.

நவம்பர் புரட்சியால் உருவான முக்கிய பாடம் உலகின் சகல அதிகார அடக்குமுறைகளையும் மக்கள் நினைத்தால் தூக்கி எறிந்து மாற்றிவிட முடியும் என்பதே. அதனால்தான் ருஷ் யப்புரட்சி மகாகவி பாரதிக்கு உத்வேகமான யுகப்புரட்சியாகியிருக்கிறது. மாய கோவ்ஸ்கியை நம் காலத்தின் மகத்தான கனவு நிறைவேற்றப்பட்டது என்று கொண்டாடச் செய்திருக்கிறது.

மனித சமூகத்தின் சகல கேடுகளுக்கும் உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதார அராஜகமே. அது வளர்ந்து வரும் நாடு களைப் பரிசோதனை எலிகளைப் போலாக்கி, தனது சொந்த லாபங்களுக்குப் பலிகொடுத்து வருகிறது. அன்றாட வீட்டு உபயோகப்பொருளில் துவங்கி ஆயுதவிற்பனை வரை சகலமும் பொருளாதார அராஜகத்தின் கைகளில் தானிருக்கிறது. ஆனால், பொது வுடைமை சித்தாந்தத்தைத் தனது வழி காட்டுதலாக எடுத்துக் கொண்ட நாடுகள் இதிலிருந்து மாறுபட்டு, மக்களின் உண்மையான வளர்ச்சிக்கான செயல்பாடுகளையே மேற்கொள்கின்றன.

உதாரணத்திற்கு, வெனிசுலா, லத் தீன் அமெரிக்க நாடுகளின் தலைவாசல் போலுள்ள சிறிய நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கிறது. அதாவது, இங்கிருந்து நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அதை நேரடியாகக் கொண்டு செல்ல மிகநீண்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருக் கின்றன. அவற்றின் வழியே ஆதாயம் அடைபவை அத்தனையும் அமெரிக்க கம்பெனிகள். நாட்டின் அறுபது சதவீத மக்கள் வறுமையாலும் நெருக்கடியா லும் வாடினார்கள்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மய மாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடினர். தேர்தல் வந்தது, உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவேஸை வெற்றி பெறச் செய்தனர்.

சாவேஸ், அதிபர் பதவிக்கு வந்ததும். எண்ணெய் வருவாயை விழுங்கிக் கொழுத்து வந்த முதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். உடனே அவரை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சாவேஸ் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் மக்கள் எழுச்சியால் அது முறியடிக்கப்பட்டது. இது சாவேஸ் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த  வெற்றி மட்டுமல்ல,  பன்னாட்டு வணிக மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

வெனிசுலாவின் புதிய அரசு பல வழிகளில் உலகிற்கு வழிகாட்டுகிறது. அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது.  குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தனியார் உரிமையிலிருந்த பயிரிடப்படாத நிலங் களை ஏழை விவசாயிகளுக்கு சாவேஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இதற்கு முன்னோடியாக உள்ளது கம்யூனிச அரசான கியூபாவின் ஆட்சி முறை.

அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கியூபாவில் 155 பேருக்கு ஒரு டாக்டர், அதாவது 50 வீடுகளுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைப்பதோடு இறப்பு சதவீதமும் வெகு வாகக் குறைந்திருக்கிறது. அங்கே மருத்துவர்கள் நோயாளிகளின் வீடு தேடிவந்து சிகிச்சை செய்வதோடு மரபு மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒன்றாகவே மேற்கொள்கிறார்கள்.

இன்னும் கூடுதலாகச் சொல்வதாயின், கியூபாவில் மருத்துவக்கல்வி முற்றிலும் இலவசம். அமெரிக்காவில் ஒரு மாணவன் மருத்துவம் படிக்கத் தேவைப்படும் பணம் குறைந்த பட்சம் 70 லட்ச ரூபாய். அதே மருத்துவம் கியூபாவில்  இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. நோய்மையுற்ற மனிதனை நலமடையச் செய்யும் உயரிய சேவை. ஆகவே மருத்துவம் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது தான் சோசலிசம் கண்ட கனவு.

உலகமயமாக வேண்டியது ஆயுதங்களும் அணுகுண்டுகளும் வெறுப்பும் வன்முறையுமில்லை, அனைவருக்குமான கல்வி, அடிப்படை சுகாதாரம், சமாதானம், பெண்களுக்கான சம உரிமை இவையே உடனடியாக உலக மயமாக்கப்பட வேண்டியவை என்கிறது கியூபா. இந்த கருத்தாக்கங்கள் யாவுமே ருஷ்யபுரட்சியில் இருந்துதான் வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது.

முன்னெப்போதையும் விட இன்று பொதுவுடைமைச் சித்தாந்தம் அதிகம் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி வருவதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் அந்த விமர்சனத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

கியூபா தேசத்தின் நல்லெண்ணத் தூதுவராக பணியாற்றியவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்  அவர் இடதுசாரிகளை நேசிப்பதுடன் மக்கள் அரசிற்கான உறுதுணை செய்பவராக இருக்கிறார். அவரது வட்டசுழல் பாதையில் ஜெனரல் என்ற நாவல் வெளியான இரண்டாம் நாள் தனது அத்தனை அரசுப்பணிகளுக்கும் ஊடாக அதிபர் பிடல் காஸ்ட்ரோ அந்த நாவலைப் படித்து முடித்து உடனே ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதினார். கட்சிப்பணிகள், அரசுப்பணிகள் அத்தனைக்கும் இடையில் கலைஇலக்கிய ஈடுபாட்டினை தக்க வைத்திருப்பதே காஸ்ட்ரோவின் வெற்றிக்கான முக்கிய ரகசியம்.

இது போன்ற விருப்பம் லெனினுக்கும் இருந்தது. அவர் தனது போராட்டக் காலத்திலும் தலைமறைவு நாட்களிலும் உன்னதமான இசையையும் டால்ஸ்டாய், கோகல்,  கார்க்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதோடு அந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடவும் செய்தார்.

இலக்கியம் உருவாக்கிய நம்பிக்கைகள் தான் பல தேசங்களிலும் அதிகாரத்தை தூக்கி எறியச் செய்திருக்கிறது.  அதையே வரலாறு நினைவுபடுத்துகிறது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வாசிப்பதும் விடாப்பிடியாக கலை இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதுமே சரியான பொதுவுடைமைவாதிக்கான அடையாளங்களாக இருக்க முடியும்.

நவீன தமிழ் இலக்கியத்தை உரு வாக்கியதிலும் ருஷ்ய இலக்கியத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஸ்டெப்பி யும் பீட்டர்ஸ்பெர்க்கும் சைபீரிய தண்டனைக் கூடங்களும் மௌனப்பனியும் தமிழ் எழுத்தாளர்கள் மனதில் அழியாத சித்திரங்களாக உள்ளன.

அன்றும் இன்றும் ருஷ்ய இலக்கியங்கள் உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அது துயருற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வை, உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததாகும். ருஷ்ய இலக்கியத்தின் பிரதான உணர்ச்சியே வேதனை தான் என்று சிமியோவ் என்ற விமர்சகர் குறிப்பிடுகிறார். உண்மை தான் அது. பசி, வறுமை, சிதறுண்ட குடும்ப உறவுகள், அதிகார நெருக்கடி, கொடுங்கோன்மை என்று சொல்லில் அடங்காத வேதனைகளை மக்கள் அனுபவித்த துயரத்தையே ரஷ்ய படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் முதன்மைப்படுத்தினார்கள்.

ருஷ்ய படைப்பிலக்கியங்களை மறு வாசிப்பு செய்தலும், உரிய கவனப் படுத்துதலும், ருஷ்ய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைகளான ஜசன்ஸ்டீன், வெர்தோ,  டவ்சென்கோ, போன் றவர்களின் திரையாக்கங்களை ஊரெங்கும் திரையிட்டு வரலாற்றை நினைவுபடுத்துவதும்  இன்று இடது சாரிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கலைஇலக்கியச் செயல்பாடாகும்.

மார்க்சின் காலத்தில் இருந்த தொழிலாளர்களுக்கும் இன்றுள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று பல் வேறு இனம், மதம், சாதி, சார்ந்த வேறுபாடுகளுடன்    சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்டவர்களாக நவீன உழைக்கும் வர்க்கம் உள்ளது. அதிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் காலகட்ட மிது. ஆகவே அவர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் வழியே மக்கள் எழுச்சியை உருவாக்குவது அதிக சவாலும் போராட்டங்களும் நிரம்பியது.

பின்நவீனத்துவ சிந்தனையாளர் பியே போர்த்தியோ (pierre Bourdieu)  இன்றுள்ள உலக அரசியல் நெருக்கடிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "நியாயமற்ற விதிகளை உருவாக்கி அதை நாமாக கைக்கொள்ள வைப்பதுடன், அதற்கு மறுப்பேயில்லாமல் ஒத்துப்போகச் செய்வதுமே  உலகமய மாக்கல் செய்யும் தந்திரம்'' என்கிறார்.

எந்த நோக்கமும் இல்லாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும்  உயர்ந்த நோக்கம் ஒன்றின் பொருட்டு நம் உயிரை விடுவது மேலானது என்ற அடையாள அட்டையை ஏந்திய படியே எகிப்தில் மக்கள் திரள் திரளாக கூடி நின்று முழக்கமிட்டது எகிப்திய அரசை நோக்கி மட்டுமில்லை; உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக் கள் அனைவரையும் நோக்கித்தான். ஆகவே அந்தக் குரலுக்கு செவிசாய்க் கவும் அதன் உத்வேகத்தில் செயல்படவும் தயாராவதே ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியாகும்.

 

-எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. "..அதே மருத்துவம் கியூபாவில் இலவசமாகக் கிடைக்கிறது. இது கியூபாவிற்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது. காரணம், அங்கே மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை. "

    அத்தகைய உன்னதமான உலகு கிடைக்கவிடாது தடுத்துக் கொண்டிருப்பது எமது தறுக்கெட்ட அரசியில்தானே.

    பதிலளிநீக்கு
  2. அன்பு மாதவ்

    வணக்கம்...

    அற்புதமான எழுத்து..

    தமிழ் படைப்புச் சூழலில் இப்படி சர்வதேச அரசியல் போக்கை மார்க்சிய அணுகுமுறையோடும், சோஷலிச தத்துவார்த்தத்தின் கொடையாக விளைந்த இலக்கியச் செல்வத்தின் ஸ்பரிசத்தோடும், சமூக மாற்றத்திற்கான ஏக்கமும், தாகமும் வெளிப்படும் காதல் மொழியோடும் எழுதத் தக்க எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று வியந்து வாசித்தேன் இன்று காலை.
    எஸ் ரா அவர்களோடு பேசி வாழ்த்துக்களைப் பரிமாறவும் செய்தேன்.

    தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மேற்கத்திய உலகின் குடிமக்களே கிளர்ந்து எழும் இந்த நேரத்தில், நமது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய எத்தனையோ செய்திகளில் ஒரு பெருந் துளி இந்தக் கட்டுரை...

    உடனே நீங்கள் அதை வெளியிட்டது போற்றுதலுக்குரியது..
    ஒரே ஒரு கூடுதல் தகவல்: நாங்கள் 99 % என்று போராடும் மக்கள் மீது தடியடி நடத்தும் அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் சங்கத்திடமிருந்து, நாங்களும் நீங்கள் குறிப்பிடும் 99 %ஐச் சார்ந்தவர்கள் தான் என்று கடிதம் அனுப்பப்பட்டிருக்கும் பதிவை அவசியம்
    இந்த முகவரியைக் க்ளிக் செய்து வாசியுங்கள்...
    http://www.opoa.org/uncategorized/an-open-letter-to-the-citizens-of-oakland-from-the-oakland-police-officers%E2%80%99-association/

    மார்க்ஸ் நீடு வாழ்வார்.

    நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்களுடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  3. பிரமாண்டங்கள் எல்லாமே மனித விரோதமானவை என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன். எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை நவம்பர் புரட்சி குறித்த நல்லதொரு பகிர்வு. நன்றி. உலகமயமாக்கலுக்கு எதிரான தொ.பரமசிவன் அய்யாவின் உரைக்கான இணைப்பு.
    http://maduraivaasagan.wordpress.com/2011/02/28/%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/
    உலகமயமாக்க பின்னனியில் பண்பாடும் வாசிப்பும் – தொ.பரமசிவன்.
    மேலும், அணுஉலைக்கு எதிரான நமது மக்களின் போராட்டமும் வெல்லட்டும்.

    பதிலளிநீக்கு
  4. ulakil muthalaalithduvame iruthiyanadu ena muzhankupavarkaluku savukkadi kodukka tamililum thodanki eruppadu nalladu . thodaranum . vaazhthdukkal .

    பதிலளிநீக்கு
  5. இக் கட்டுரைக்கு எனது முகப்புத்தகத்தில் தொடுப்புக் கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. ரஷ்யப்புரட்சி மகத்தானாக இல்லாவிட்டால் பாரதி ஆகாவென்றெழுந்தது பார் என்று சொல்லியிருப்பானா?

    ரஷ்யாவில் சோசலிஷம் வீழ்ந்ததால் இனிமேல் சோஷலிசத்திற்கு எதிர்காலமே இல்லையென்கிறார்கள். இதுவரை இருந்த சமூக அமைப்புகள் தன்க்குள்ளேயே ஏற்பட்ட நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்த சமுதாய அமைப்பிறகு மாறியது. ஆனால் சோசலிசம் அப்படி தானாக மலர்ந்துவிடும் என்று எண்ணமுடியாது, ஏனேன்றால் சோஷலிசம் வந்தால் முதலாளித்துவ வாதிகளுக்கு இழப்பதர்கு நிறைய இருக்கிறது. 99 சதவீதம் பேரின் போராட்டமே ஒரு சதவீதத்தை வீழ்த்தமுடியும். மதங்கள் சொல்கிற சொர்க்கம் மண்ணில் காண சோஷலிசத்தால் முடியும்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி எஸ்.ரா அவர்களே, உலகைக் குலுக்கிய அந்த பத்துநாட்கள் திரப்படத்தை அறிமௌகம் செய்தமைக்கு. இதற்கான லிங்க் கீழே.

    http://www.youtube.com/watch?v=KeIn8AduwTg&noredirect=1

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!