செல்வேந்திரனின் பதிவைப் படித்தேன். பொதுவெளியில் நம்பிக்கைக்கு மோசம் ஏற்பட்டுவிட்டதாய் , பதிவுலகம் சார்பாக அவரது கோபம் வெளிப்பட்டு இருந்தது. இன்னும் பின்னூட்டங்களும், தொடர் பதிவுகளும் வரக்கூடும். விளக்கங்களும், தவறுகளை சரிசெய்வதும் தொடரக்கூடும். அது ஒரு புறமிருக்கட்டும்.
செல்வேந்திரன் பதிவில் மோகன்குமார் கவலைப்பட்டு இருப்பது குறித்தும் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியதிருக்கிறது. இனி இதுபோல் முன்கை எடுப்பதில், மற்றவர்களுக்குத் தயக்கம் வரும் என்பது உண்மைதான். முகம் காணாத, எங்கோ இருக்கும் ஒருவரின் துயரத்திற்கு, இணையத்தின் வழி உதவிக்கரம் நீட்டுவது பதிவுலகின் சிறப்பு. அதற்கு ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது. நடந்தவைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பதிவுலகை முன்னெடுத்துச் செல்வோம். அது மிக முக்கியம்.
என்னுடன் வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவர், அவரது கிளையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார். பாதுகாப்பு அறைக்குள் அவரும் அவரது கேஷியரும் பணம் எடுக்கச் சென்றிருக்கின்றனர். பெட்டகத்தின் கதவைத் திறந்து பணம் எடுக்கும் வேளையில் மின்சாரம் போய்விட்டது. ஒரே இருட்டு. சட்டென்று அந்தக் கேஷியர், நண்பரின் கைகளைப் பிடித்துக் கொண்டாராம். நண்பருக்கு என்னவோ போலாகிவிட்டதாம். உடனே அந்தக் கேஷியர் சொன்னாராம், “சார், தப்பா எடுத்துக்காதீங்க, நான் உங்களை சந்தேகப்படல. என்னுடைய கைகள் உங்கக் கிட்டத்தான் இருக்குன்னு உங்களுக்குத் தெரியணும்” என்றாராம்.
இந்த வெளிப்படைத்தன்மை இது போன்ற பண விவகாரங்களில் முதன்மையானது, அவசியமானது. அடுத்தது எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தாலும், தனிநபர்கள் பொறுப்புக்கு விடுவதை விட, ஒரு குழுவாக அமைத்துக் கொள்வது நலம். மூன்றாவது ‘அவர் பார்த்துக் கொள்வார் ’ என்ற மனோபாவத்துடன் அந்தக் காரியத்தை ஆதரித்துவிட்டோ அல்லது பணம் செலுத்தியதோடோ நில்லாமல், என்னவாகியது என்று தொடரும் கேள்விகள் நம்மிடம் வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று உணர்வதே எப்போதும் ஆரோக்கியமானது.
‘கணக்கை’ சும்மா ஒன்றும் ‘கணக்கு வழக்கு’ என்று தமிழில் சொல்லவில்லை, நண்பர்களே!