தி.மு.க தலைவருக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் கொடுத்த சர்டிபிகேட்!



நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் வீட்டில் இருக்கிற பாக்கியம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பயணங்களும், தொழிற்சங்கக் கூட்டங்களுமாய் கழிந்த நாட்களிலிருந்து ஆசுவாசமாகி இணையப்பக்கம் வந்தால், மெயிலில் ஒரு சோதனை காத்திருந்தது. “எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள், தி.மு.க ஆட்சிக்காலம் தமிழர்களுக்குப் பொற்காலம் என்று சொல்லியிருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்துக்களைப் பதியவும்” என்று நண்பர் ஒருவர்  மெனக்கெட்டு இருந்தார். இதுகுறித்து நான் சொல்கிற கருத்துத்தான் அவருக்கு ரொம்ப முக்கியம் போல தெரிந்திருக்கிறது! இப்படியொரு கேள்வி எழாவிட்டால், ஏதும் பிரச்சினையில்லை. நாம் பாட்டுக்கு எதையாவது வாசித்துக்கொண்டு, எதையாவது எழுதிக்கொண்டு போய்விடலாம். முன்வைக்கப்பட்ட பிறகு, எதையாவது சொல்லித்தான் தீர வேண்டி இருக்கிறது.

அண்மையில் தமிழக அரசின் கவிஞர் பாரதி விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு அவர் பேசுகையில், “தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி. அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் அவர். இன்னும் பல எழுத்தாளர்களை வருங்காலத்தில் அவர் கௌரவப்படுத்த வேண்டும் ” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதே விழாவில், கவிஞர் வைரமுத்து தலைகால் புரியாமல் பேசியதை யாரும் பொருட்படுத்தவில்லை.  ‘எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படிப் பேசிவிட்டாரே!’ என்பதுதான் பலருக்கும் வருத்தமளித்திருக்கிறது.  தமிழ் கூறும் நல்லுலகம், தன் காலத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் காட்டுவதாகவே இந்தக் கேள்வி படுகிறது.

‘தம் மக்களின் நலன்’ மட்டுமே இந்த தமிழ்நாட்டை விட, தமிழ்நாட்டு மக்களை விட  முக்கியம் என  நடைபெறும் ஒரு ஆட்சியை,  ‘தமிழர்களின் பொற்காலம்’ எனச் சொல்வது எப்படிச் சரி என்பது இந்தக் கேள்வியிலேயே  தொக்கி நிற்கிறது.  தமிழகத்தையே இருளில் மூழ்க வைத்த கட்சிக்கு இப்படியொரு பொய்யான மதிப்பீடா என்னும் கோபம் இருக்கிறது. ஊருக்கும் உலகுக்கும் தெரிந்த உண்மை, தமிழ்நாட்டின் மிக முக்கிய எழுத்தாளருக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கிண்டலும்  தெரிகிறது.  திராவிடக் கட்சிகள் மீதும், கருணாநிதி மீதும் கடுமையான விமர்சனங்களை காத்திரமாக முழங்கிய மனிதருக்கு இப்போது என்னவாகிவிட்டது என்ற இன்னொரு கேள்வியும் இதற்குள் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து அவஸ்தைப்படவோ, ஆச்சரியப்படவோ எதுவுமில்லை என்பது மட்டுமல்ல, தேவையுமில்லையென்பதே எடுத்த எடுப்பில் தோன்றுகிறது. அதிகம் பேசாமல், பெரும்பாலும்  அமைதியாகவே  இருக்கிற எழுத்தாளர் ஜெயகாந்தனும் இப்போது ஒரு சிறு புன்னகையால் இதனைக் கடந்து விடுவார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின்  இலக்கிய உலகுக்கும், அரசியல் உலகுக்கும் இடையில் பெரும் பள்ளத்தாக்குகளும், சரிவுகளும்  உண்டு.  அதை அவரே கண்டும் இருக்கிறார்.  “நான் சம்பந்தப்பட்ட பிறதுறையின் தன்மை எதுவாயினும், அவற்றின் பாதிப்பு எனது இலக்கியத்தோடு சமப்ந்தப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் இப்படிப்பட்ட முன்கூட்டிய ஒரு தீர்மானத்துடனேயே நான் பிற துறைகளில் பிரவேசித்தேன்” என அவரே உணர்ந்தும் இருக்கிறார்.  அவருடைய படைப்புகளில்  பொதுவாக (எல்லாவற்றிலும் அல்ல!) இருக்கும் தர்க்க நியாயங்கள்  அவருடைய அரசியல் பார்வைகளில்  இருப்பதில்லை.  சமூகத்தின்  ‘முரண்பாடுகளை’ப் பற்றிப் பேசுவதற்குப் பதில் அவர்  சமூகத்தில் இணக்கத்தையும், இசைவையும் பற்றியுமே அதிகமாகக் கவலைப்பட ஆரம்பித்தார்,  பேசினார். அடங்காத செருக்கு கொண்ட அவரின்  அரசியல் தெளிவுகள் எல்லாம்  இப்படியாக, கால ஓட்டத்தில் ‘போதும்’ என்கிற ரீதியில் மெல்ல மெல்லக் கரையொதுங்க ஆரம்பித்தன.   

எல்லோருடனுமான இந்த இணக்கமும், இசைவுமே அந்த மேடையில் எழுத்தாளர் ஜெயகாந்தனை  அப்படிப் பேச வைத்திருக்க வேண்டும்.  தமிழர்களின் பொற்காலம் என்றவர், தி.மு.கவின் ஆட்சியைப் பற்றி பேசவில்லை. கலைஞர்களையும், கலையையும் போற்றுகிற தன்மையைத்தான்  பட்டும் படாமல் குறிப்பிட்டு இருக்கிறார்.  நடிகை ரம்பாவின் திருமணத்திற்கும் வேலைவெட்டி இல்லாமல் போய், வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வரின் கலைத்தொண்டை  பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் பார்த்தவர்களுக்கு, இந்த வார்த்தைகள் பெரும் பகடியாய்க் கூடத்  தெரிய நேரலாம். இதற்கு அர்த்தம், பொழிப்புரையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்காமல்,  ஒரு நகைச்சுவையாக  கேட்டுச் சிரித்துவிட்டுப் போகலாம்.

யாருடைய காலத்தையும் பொற்காலம் என்பதை கிண்டலடிக்கிற, கிழிக்கிற  தீர்க்கமிக்க எழுத்தாளர் இப்போது,  அந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார்  என்றால், அதிலிருக்கும் சம்பிரதாயத்தைத்தான்  புரிந்துகொள்ள முடிகிறது.  தனக்கு விருது வழங்கியதற்காக, மேடை  நாகரீகம் கருதி எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் செய்த ஒரு செய்முறை இது.  அவ்வளவுதான்.  மற்றபடி, இந்த சர்டிபிகேட் ஒன்றும் செல்லாது என்றும்,  இது அர்த்தமற்றது, பொய்யானது என்றும் அவருக்கும் தெரியும்.  மேடையில்  தான் உதிர்த்த அந்த வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஆல்பமாய் மாட்டிக்கொண்டவர்களைப் பார்த்து அவர் சிரிக்கவே செய்திருப்பார். 

”மனிதன் ஏன் பொய் சொல்கிறான்?” என்ற கேள்விக்கு,  எழுத்தாளர் ஜெயகாந்தன் ஞானரதம் பத்திரிகையில் இப்படி பதில் சொல்லியிருந்தார்: “தன் பலவீனத்தை மறைக்கவே மனிதன் பொய் சொல்கிறான். எவன் தன்னிடம் பலவீனங்கள் இல்லையென்கிற நிலை எய்துகிறானோ, அவனிடம் பொய் இருப்பதில்லை”. யாரோடும்  சத்திய ஆவேசத்தோடு முரண்பட்டு, தர்க்கங்கள் புரிந்து நின்றவர், அதை இன்று இழந்து நிற்பதும், யாரோடும் முரண்பட வேண்டாமே என்கிற மென்மையான அணுகுமுறை கொண்டிருப்பதுவுமே இப்போது எழுத்தாளர் ஜெயகாந்தனின் பலவீனம்.

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்களும் கழக ஆட்சி பொற்காலம் என்று சொன்னாலும், கடந்து போகும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம்

    நீரா ராடியாவையே நாங்கள் கடந்து போக வில்லையா

    பதிலளிநீக்கு
  2. எழும்பூர் ரயில் நிலைய போர்ட்டர் அழகாக சொன்னார்

    யார் தான் ஊழல் செய்ய வில்லை.
    பெரம்பலூர் ராஜா எத்தனை கோடி எடுத்தால் என்ன, உங்களுக்கும் எனக்கும் தினசரி வரவு செலவில் நூறு ரூபாய் கூடப் போகிறதா, குறையப் போகிறதா

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய சப்பைக்கட்டும் ஜெயகாந்தனின் முகஸ்துதி போலவே சறுக்குகிறது.

    இதனை ஜெயகாந்தனின் வாசகன் என்ற முறையில் உரக்கச்சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  4. //அதே விழாவில், கவிஞர் வைரமுத்து தலைகால் புரியாமல் பேசியதை யாரும் பொருட்படுத்தவில்லை. ‘எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படிப் பேசிவிட்டாரே!’ என்பதுதான் பலருக்கும் வருத்தமளித்திருக்கிறது.//


    வைரமுத்துவின் முதுகெலும்பு வளைந்தே நிற்க வேண்டிய உயரத்திற்கே நாற்காலி இருக்கிறது.கூனைப் பார்த்தே பழக்கபட்ட கண்களுக்கு அது பொருட்டல்லல.

    கொடுத்த வாழைப்பழத்திற்கு யானை தும்பிக்கை தூக்கி வாழ்த்துகிறதே என்பதுதான் உறுத்தல்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு விஞ்ஞானி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து இருந்தாலும் நல்ல ஒரு ஆராய்ச்சிக்கு மட்டுமே நோபெல் பரிசு கிடைத்திருக்கும். பரிசு கிடைத்த பிறகு அந்த ஆராய்ச்சியாளர் எவ்வளவு ஆராய்ச்சியில் தோற்றிருந்தாலும், அவரது வாழ்நாள் வரை நோபெல் பரிசு பெற்றது தான் கடைசி வரை நிற்கும். புகழின் உச்சியை அடைந்து விட்டதாகப் போற்ற படுகிறது.

    தமிழ் நாவலாசிரியர்களுக்கு இந்தியா அளவில் மதிக்கக் கூடிய ஞானபீட பரிசு கூட பெற்று முன்னுதாராணமாக் விளங்கும் திரு.ஜெயகாந்தன் அவர்கள், உண்மையில் போற்றத் தக்கவரே. தமிழ் நாவலாசிரியர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தை ஏற்ப்படுத்தி கொடுத்தது அவரது காலத்துப் படைப்புகள். இப்பொழுதும் கூட நாவலாசிரியர்களுக்கு மதிப்பளித்து விருது கொடுத்து வருவதால் அது நாவலாசிரியர்களைப் பொறுத்த மட்டில் பொற்காலம் என்ற நோக்கில் சொல்லியிருக்கலாம். ஏன் ஜெயகாந்தன் அவர்களுக்கு சொந்தக் கருத்து இருக்கக் கூடாதா? அது ஏன் ஒரு பக்க அரசியல் கட்சி மட்டும் சார்ந்ததாக மட்டும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள். அப்போ அவர்கள் சார்ந்த கட்சி ஒட்டி ஜெயகாந்தன் ஐயா கருத்து சொல்லி விட்டால் இவர்களிடம் அவர் நல்லவராகிவிடுவாரா?

    எல்லாவற்றையும் குற்றம் சொல்லி நொட்டைப் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டு தானிருப்பார்கள். கடந்து போவதே நல்லது.

    பதிலளிநீக்கு
  6. ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் மீது எந்த தவறும் இல்லை, ஒரு வயது முதிர்ந்த எழுத்தாளனின் பலவீனம் அல்லது கலைஞரின் நட்பு என்று கடந்து சென்றுவிடலாம். பதிவுலகில் ஏற்படும் சிறிய வீம்புச் சண்டைகளுக்கு ஆணாதிக்கம் அது இது என்று தாண்டும் நீங்கள் இங்கே விழுந்த இடத்தை நீங்களே தேடிக்கண்டுபிடியுங்கள். மனிதர்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்று என்று நான் கடந்து போகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. விடுபட்டது.
    ஜெயகாந்தனின் பார்வையில் உண்மையாகவே கலைஞர் காலம் பொற்காலமாக தெரியலாம்.

    பதிலளிநீக்கு
  8. முதல்வரைப் பொறுத்த மட்டில் ,வைரமுத்து அன்றும் இன்றும்- கா...கா...கா தான்,
    ஆனால் ஜெகாவை சிங்கமாகத் தான்
    கண்டோம். காணவிரும்புகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. மாது அண்ணா, இது அவரின் ஒரு சறுக்கல் என்று எடுத்துக் கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  10. ***“தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி. அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் அவர். இன்னும் பல எழுத்தாளர்களை வருங்காலத்தில் அவர் கௌரவப்படுத்த வேண்டும் ” ***

    இதுல என்னத்தை பெருசா பொய் சொல்லிவிட்டாருனு கவலைப்படுறீங்க?

    ஜெயகாந்தனை கண்ணா பின்னானு திட்டாமல் நீங்களும், "எங்கே கருணாநிதியை திட்டினாலும் முதலில் இடம் பெரும்" திரு ராஜ நடராஜனும், ரொம்ப "மென்மையாக" கண்டிக்கிறீங்க! இதுவும் நீங்க செய்ற ஒரு வகையான அரசியல் நாகரிகம்தான்!

    நீங்களும், நடராஜனும் ஜெயகாந்தன் வயசுல இதைவிட நெறையா பொய் சொல்லுவீங்க.

    இந்த பின்னூட்டத்தை எடுத்து வச்சுக்கோங்க.

    வருண் அப்பவே சொன்னாருனு நெனச்சுக்குவீங்க.

    என் பார்வையில் சபை அடக்கத்துடன், அவையடக்கத்துடன் நாகரிகமாக நடந்துள்ளார் ஜெயகாந்தன்!

    பதிலளிநீக்கு
  11. //அதே விழாவில், கவிஞர் வைரமுத்து தலைகால் புரியாமல் பேசியதை யாரும் பொருட்படுத்தவில்லை. ‘எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படிப் பேசிவிட்டாரே!’ என்பதுதான் பலருக்கும் வருத்தமளித்திருக்கிறது\\

    கொடுமையான ஒப்பீடுங்க!

    கவிஞர் கனிமொழி பேசியிருந்தாலும் அதையும் சேர்த்து பட்டியல் இட்டிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  12. 1972 ல் ஒரு கருத்தரங்கில் ஜெயகாந்தன் பேசிய வார்த்தைகள் தான் எனது கண்ணில் பட்டன. இந்த வார்த்தைகளையும், ஜெயகாந்தன் சமீபத்தில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது கலைஞர் மருத்துசெலவுகளை ஏற்றுக் கொண்டதையும் பார்க்கிறோம். இதை இங்கு ஒப்பிட மனது இல்லையென்றாலும், அவரது கருத்தரங்கு பேச்சுக்களை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதோ....

    தன்னோடு மனிதனுக்குள்ள உறவு என்பது நான் சாப்பிட வேண்டும். நான் நன்றாக சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமா? என்னை பொறுத்த வரையின் நான் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்பட தயார்.ஆனால், என்னால் இந்த உடம்பு கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. பாவம், இந்த உடம்பு என்னை நம்பியிருக்கிறது. இதைக் கஷ்டப்படவிடமாட்டேன் என்று நான் விளையாட்டாக சொல்வதுண்டு. இதனால் பல விஷயங்கள் நன்றாக புரிகிறது. நான் என்னிலிருந்து என் உடம்பை தனியாக பார்க்க முடிகிறது அல்லவா? மனிதத்தன்மைக்கும் தனித்தன்மைக்கும் முரண்பாடு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனின் தனித்தன்மைக்கும், அவனுக்கும் உள்ள உறவுக்கும் இடையே இவ்வித முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இது பற்றி விளக்குவது ஆத்மீகவாதிகளின் கடமை.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதனுக்கும், இன்றைய மனிதனுக்கும் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் பார்க்க முடியும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் மிருகங்கள் இருந்தன. இப்போதும் மிருகங்கள் இருக்கின்றன.ஆனால் இவைகளிடத்தில் வேற்றுமைகளை காண முடியாது. அதற்கும், இப்பொழுது இருக்கும் சிங்கத்திற்கும் இடையே எந்த வேற்றுமையையும் காணமுடியாது. முடியவில்லை. ஆனால் சர்க்கஸ் கூண்டிலே இருக்கிற சிங்கத்தினிடம் வித்தியாசத்தை காணமுடிகிறது. அது மனிதனால் சுமத்தப்பட்ட மாற்றமே. சிங்கத்தை மனிதன் சக்தியினால் அடக்கி அதன் மேல் ஆட்டுக்குட்டியை நிறுத்தி வைத்துக்காட்டுகிறான். சிங்கத்திற்கும் இந்த ஆட்டுக்குட்டியை எப்போது சாப்பிடுவோம் என்ற எண்ணம் இருக்கிறது. சிங்கம், தன்னை அடித்துக் கொன்று விடுமோ என்ற பயம் ஆட்டுக்குட்டிக்கும் இருக்கிறது. மனிதனோடு உறவு இருப்பதால் தான் இப்படி உணடாகிறது. இல்லையெனில் இந்த பயம், இந்த கற்பனை அவற்றுக்கு ஏற்படாது.

    பதிலளிநீக்கு
  13. அவர் எதை நினைத்து சொல்லியிருந்தாலும், அவர்மீதுள்ள பிம்பங்களை உடைக்காதிருக்கும் பொருட்டு இதை நான் வஞ்சப்புகழ்ச்சியாகவே நம்ப விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. //ஜெயகாந்தனை கண்ணா பின்னானு திட்டாமல் நீங்களும், "எங்கே கருணாநிதியை திட்டினாலும் முதலில் இடம் பெரும்" திரு ராஜ நடராஜனும், ரொம்ப "மென்மையாக" கண்டிக்கிறீங்க! இதுவும் நீங்க செய்ற ஒரு வகையான அரசியல் நாகரிகம்தான்!//

    ஆடிக்கொரு,அமாவாசைக்கு ரெண்டுன்னு போடுற பதிவுகளை விட எனது பின்னூட்டங்களே என்னைப்பற்றிய பதிவுலகின் சரியான மதிப்பீடாக இருக்கும்.

    Varun!Thought of appointing you as my marketing executive for my blog,but you have failed in Q&A buddy:)

    பதிலளிநீக்கு
  15. பதிவின் கடைசி பத்தி... யதார்த்தம். அதுதான் உண்மையும்.

    பதிலளிநீக்கு
  16. மேடை நாகரீகம் கருதி திரு ஜெ காந்தன் அவர்கள் அப்படி பேசி இருக்க வேண்டும். அதற்காக யாரும் அவரை புகழ்ந்ததாக நினைக்க வேண்டியதில்லை. நான் ஆரம்ப காலம் தொட்டு திரு ஜெயகாந்தன் அவர்களது வாசகன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. Only one thing immediately come to my memory.

    That is. . . . .
    The statement on anna leader of DMK by JK at his memorial meeting immediately after his death.

    Sila nerangalil sila manithargal.

    Sorry for english.

    பதிலளிநீக்கு
  18. கருணாநிதி, திராவிட இயக்கம் பற்றி புகழவதற்கு சில விஷயங்கள் இருப்பது உண்மை. 'பொற்காலம்' என்று சொல்வதெல்லாம் அபத்தம். நீங்கள் இப்படி subjective ஆக பார்த்து சறுக்கி இருப்பது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. கருணாநிதியும் ஒரு காலத்தில் கொள்கையோடு இருந்தவர்தாமே.ஜெயகாந்தனுக்கு இருக்கும் பலவீனங்கள் அவருக்கு இருக்கக்கூடாதா? கருணாநிதி செய்பவற்றையெல்லாம் மட்டும் கண்டித்து நீங்கள் பதிவு எழுதிகிறீர்கள்.காரணம் அவருடைய செய்கைகள் பொதுமக்களைப் பாதிக்கின்றன. ஜெயகாந்தன் தம்முடைய கருத்தை தம்முடன்,தம் சுற்றத்துடன் மட்டும் வைத்திருந்தால், நீங்கள் சொல்வதுபோல் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால், ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பொது வெளியில் ஒரு கருத்தை முன் வைக்கும்போது, அதை நேர்மையாக விமர்சிக்க வேண்டும். உங்களுடைய பதிவில் மிக நாசுக்காக, ஜெயகாந்தன் பேசியது சிறு தவறு என்பதுபோலக் குறிப்பிட்டு, அவரை உயர்த்தி எழுதியிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

    சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்(கு) அணி.
    (குறள் 118. அதிகாரம்: நடுவுநிலைமை)

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள மாதவராஜ்,
    எனக்கு ஜெயகாந்தன் அவர்களை 1955-60 இடைப்பட்ட காலத்திலிருந்தே பழக்கம். எழும்பூரில் அவரது அன்னையுடன் இருந்த அவர் இல்லத்திற்கு மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன். நாங்கள் நடத்திக்கொண்டிருந்த பாரதி மன்றம் என்ற அமைப்பு நடத்திய மாத நிகழ்ச்சிகளுக்கு, அவரும் விஜயபாஸ்கரன் வாராது இருந்ததே இல்லை. அந் நிகழ்ச்சிகளில் பங்கு பெறாமல் இருந்ததும் இல்லை. அஞ்சாநெஞ்சன்; பொய்மைக்கும் புரட்டுக்கும் அவர் காலன் என்று புகழப்பட்ட அவர் பொய்யைத் தொழுதடிமை செய்யாத அவர் இப்படி ஆகிவிட்டாரே என்று நானும் என் நணபர்களும் அழாக்குறையாக நொந்து நூலாகி நிற்கிறோம்.

    பதிலளிநீக்கு
  21. /தி.மு.க ஆட்சிக்காலம் தமிழர்களுக்குப் பொற்காலம் என்று.../
    ஜெயகாந்தன் சொன்னது என்ன தப்பு? கருணாநிதி ஆட்சியில இவங்கதான் தமிழர்கள்: கருணாநிதி, தயாளு அம்மா, ராசாத்தி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் (அரைத்தமிழன்), ஆ.ராசா (முழுத் தமிழன்), கலாநிதிமாறன், அப்புறம் பேரக் குழந்தைகள். இப்போ சொல்லுங்க, இந்த 'தமிழர்'களுக்கெல்லாம் திமுக ஆட்சிக்காலம் பொற்காலம்தானே? புரியாம பேசாதீங்கப்பா!
    இக்பால்

    பதிலளிநீக்கு
  22. //எழும்பூர் ரயில் நிலைய போர்ட்டர் அழகாக சொன்னார்//

    அது மாதிரி சொன்னவனெல்லாம் நிச்சயம் அல்லகைகளாகதான் நிச்சயம் இருப்பான்.

    பதிலளிநீக்கு
  23. ஜெயகாந்தன் வீழ்தார் என்பது நகைக்கதக்கதல்ல, கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் வெட்கப்பட தக்கது. அவரை ஆதரிக்க, அவரை அங்கீகரிக்க யாருக்கும் மனம் வரவில்லை என்பதே உண்மை. ஜெயகாந்தனின் இலக்கிய பயணமும், அவரின் இலக்கியங்களும் தமிழுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் பெருமை சேர்ப்பதுவே ஆகும். அவர் இப்போது எதுவும் எழுதுவதில்லை என்பது அவர் எடுத்த நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!