இந்தப் பொங்கல்!

 

pongal

 

காலையில் எழுந்ததும், “சபரி மலைக்குச்  சென்றவர்களில் நூறு பேருக்கு மேலே இறந்துவிட்டதாக’ டி.வி பார்த்து அம்மு சொன்னாள். துயரச்செய்திகளுக்கு நாளும் கிழமையும் இல்லை.  அதன் விபரங்களைத் தெரிந்துகொள்ள கஷ்டமாயிருந்தது.  வீட்டிற்கு வெளியே ஈரம் சொட்டிய வெளி விரிந்திருந்தது அமைதியுடன். வாசல்களில் கோலங்கள் அழகழகாய் மலர்ந்திருந்தன. இறந்தவர்களின் வீட்டு வாசல்கள் பற்றி யோசனையாயிருந்தது.  அய்யப்பன் கைவிட்டு விட்டாரே!

 

வெளியே செல்வதில்லை எனவும், டி.வியைப் பார்ப்பதில்லை எனவும் உறுதி பூண்டு இருந்தேன். எங்கள் வங்கியில் பணிபுரியும் சுப்பிரமணியன் என்பவரது அலைபேசி அதை உடைத்துவிட்டது. அவருடைய மகன் கணேஷ்வர் சன் டிவியில் நடக்கும் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் பங்கேற்பதாகவும், பாருங்கள் என்றும் சொன்னார்.  பார்த்தேன். வயது பனிரெண்டு பதிமுன்றுதான் இருக்கும் என நினைக்கிறேன். தேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர்களுக்குரிய சகல அசைவுகளோடும், சொற்பிரயோகங்களோடும் பேசியது ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட விஷயங்கள் என்பது பேச்சில் தெரிந்தாலும், அதை வெளிப்படுத்திய தெளிவும், விதமும் பிடித்திருந்தது. கான்வெண்ட்டில் படிக்கும் பெற்றோர்களின் அவலங்களையும்,  அந்தக் கல்விமுறைச் சுரண்டும் விஷயங்களையும் போட்டு உடைத்தான். பெரும் ஆரவாரத்துடன் அமர்ந்திருந்த பெரியவர்கள் கைதட்டிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு பாவமாய் இருந்தது.

 

ழுதுவதெல்லாம் எழுத்தல்ல’ என்று சாருநிவேதிதாவைப் பற்றிய எழுதிய பதிவு ‘அபத்தமானது’ என்று நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பஸ்ஸை கூகிளில் விட்டிருந்தார்.  என் கருத்தொன்றை நான் முன்வைக்கும் அதே வேளையில், அவரது கருத்தை வெளிப்படுத்துவது முற்றிலும் சரியே.  இதுதான் சமயம் எனக் காத்திருந்த ‘நண்பர்கள்’ தங்கள் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருந்தனர்.   நான் அவைகளைப் பொருட்படுத்தப் போவதில்லை. ராம்ஜி யாஹூவும், சித்தார்த் வெங்கடேசனும் பேசியவை மட்டுமே எனக்கு முக்கியமாகப் பட்டன. அவைகள் குறித்து  எழுத வேண்டியிருப்பதாகத்  தோன்றியது.  ஏற்கனவே எழுதி வைத்திருந்ததை இந்தப் பொங்கல் நாளில் முடித்தும் விட்டேன். பதிவுகளாக வெளியிடுவேன்.

 

ரண்டு ம.க.இ.க தோழர்கள் வீட்டிற்கு வந்து  புதிய ஜனநாயகம் பத்திரிகை தந்து சென்றார்கள். ஒவ்வொரு மாதமும் இது போல வழக்கமாய் வருவார்கள். நான் இல்லையென்றாலும், என் மனைவியை “தோழர்” என்று அழைத்துக் கொடுத்துச் செல்வார்கள்.  “நாங்கள்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆகிவிட்டோமே, எங்களிடம் ஏன் வருகிறீர்கள்” என்றேன் ஒருமுறை. சிரித்துக்கொண்டே, “பேசுவோம் தோழர்” என்பார்கள்.  “என் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்” என்றாலும்,  அமைதியாக  “பேசுவோம் தோழர்”தான். அவர்களுடைய பொறுப்பும், அதில் இருக்கிற ஈடுபாடும் பிடிக்கும்.  உள்ளே வாருங்கள் என்றால், ‘பரவாயில்ல தோழர்’ என்று வெளியேதான் நிற்பார்கள். இன்று வலுக்கட்டாயமாய் அழைத்தேன்.  ஒருவர் உள்ளே வந்தார். சந்தோஷமாக இருந்தது.

 

லைஞரின் பொங்கல் வாழ்த்துச் செய்தியினை இன்றுதான் படித்தேன். கல்லூரி நாட்களில் அவரது நெஞ்சுக்கு நீதியை படித்து, பக்கம் பக்கமாக அப்படியேச் சொல்வேன். இப்போதெல்லாம் அவர் என்ன பேசினாலும் சிரிப்பாக வருகிறது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை” என்னும் குறளை  அவர் மேற்கோள் காட்டுவது  எவ்வளவு முரணானது. பகுத்துண்டு என்றால் என்ன? பல்லுயிர் என்றால் என்ன?

 

பொங்கலுக்கு வாங்கும் கரும்புகள் வீட்டில் அப்படியே இருந்து விடுகின்றன. குழந்தைகள் விருப்பம் காட்டுவதில்லை.  ஒரு வீட்டில் ஒரு மனிதன் மட்டுமே  ஒன்றைச் சாப்பிடுவது என்பது பெரும் கொடுமை! ஆனாலும் தொடர்ந்து வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.  கரும்பு இல்லாமல் பொங்கல் இல்லை என்பது ஒரு சடங்காக மட்டுமாகி விடுமோ?

 

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இனிய பொங்கல் வாழ்த்துகள் மாது அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. இந்த கதம்ப பொங்கல் சிறப்ப இருக்கு அதி கருணாநிதி பொங்கல் வாழ்த்து சிரிப்பா இருந்தது...

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பக்கத்துக்கு இன்றுதான் முதன் முறையாக வருகின்றேன். ஒரு சுவாரசியமான வலைப்பதிவினை இவ்வளவு காலம் தவறவிட்டுள்ளோமோ எனும் கழிவிரக்கம் தோன்றுகின்றது.

    பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா!!!!!!

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணே.

    கரும்பு. நேற்று அப்பாவிடம் கரும்பு வாங்கினீர்களாவெனக் கேட்டேன். வாங்கினேன் ஆனா பேரப்புள்ளைகள்தான் சாப்பிட்டது. எனக்கு எங்கப்பா பல்லு இருக்கு. அதெல்லாம் ஒரு காலத்தோட முடிஞ்சு போச்சு என்றார்கள்.

    அதனால நல்ல சாப்பிடுங்க :)

    பதிலளிநீக்கு
  6. பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பொங்கல் விழா முடிந்ததும் இதைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.
    கேரளாவில் பல எழுத்தாளர்கள் கம்ம்யுனிச கொள்கைகளுடன், கம்ம்யுநிச்ட்களுடன் இனைந்து பணியாற்றுகின்றனர். கம்ம்யுனிச கொள்கைகளை மறுப்பதில்லை, கேலி செய்வதில்லை.

    ஆனால் தமிழகத்தில் ஒரு சில எழுத்தாளர்கள் (மொத்த எண்ணிக்கை ஐந்திற்கும் குறைவே) மட்டுமே கம்ம்யுனிச கொள்கைகளுடன் உடன் படுகின்றனர். பெரும்பான்மை எழுத்தாளர்கள், வாசகர்கள் கம்ம்யுனிச எதிர்ப்புடனே இருக்கின்றனர்.

    என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. குறை தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள், இயக்குனர்கள் மீதா அல்லது தமிழக கம்ம்யுனிச தலைவர்கள்,தோழர்கள் மீதா என்று தெரிய வில்லை

    பதிலளிநீக்கு
  7. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!