எழுதுவதெல்லாம் எழுத்தல்ல (1) : காதலும் காமமும்!




“இடதுசாரிகளின் பார்வையில் காமம், காதல் குறித்தும் எழுதுபவர்கள் வெறுப்புக்குரியவரே’ என்று ராம்ஜி யாஹூ என்னைப் பற்றிய ஒரு கருத்தாக கூகிள் பஸ்ஸில் சொல்லியிருந்தார். என்னைப்பற்றிய கருத்தாக இல்லாமல், ஒட்டுமொத்தமாக இடதுசாரிகள் என்று அவர் குறிப்பிட்டதால்  சில விஷயங்களை இங்கே பகிரத்தோன்றியது.  இவர் மட்டுமல்ல, இன்னும் பலரும் இப்படி நினைத்திருக்கக் கூடும். இடதுசாரிகளைப் பற்றியோ அல்லது காமம், காதல் பற்றியோ அவரவர்களது புரிதல்களிலிருந்து  இவ்வகை அபிப்பிராயங்களும் நிர்ணயிப்புகளும் உருவாகி இருக்க வேண்டும்.

தசைகளாலும், மூளையாலும் இந்த மனித சமூகத்தை சேர்ந்தவர்கள்தாம் இடதுசாரிகள் என்பதையும், காமமும், காதலும் மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடும் உணர்வுகள்தாம் என்பதையும் எடுத்த எடுப்பில் சொல்லி விடுவது அவசியமாகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திரிகையில் ஆச்சரியமாகப் படிக்க நேர்ந்த இந்த ஒரு பக்கக் கதையைச் சொல்ல வேண்டும். ஒரு முதலாளி அவரது செல்லப் பெண்குழந்தையோடு கம்பெனிக்கு வருவார். காக்கிச் சட்டை போட்ட சிலபேர் அவரது அறைக்குள் சென்று மேஜையைக் குத்தியும், ஆவேசமாக தன் தந்தைக்கு எதிரே கைகளை நீட்டியும் பேசுவதை கண்ணாடி அறை வழியே அவள் பார்ப்பாள். தான் அழைத்து வந்த பூனைக்குட்டியோடு நீண்ட ஹாலில் விளையாடிக்கொண்டு இருக்கும் அவள் பயந்து போவாள். சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வருவார்கள். முரடாகவும், தீவீரமாகவும் இருக்கும் அவர்களைப் பார்த்து ஒடுங்கி நிற்பாள். அவளது கையிலிருந்த பூனைக்குட்டி குதித்துக் கீழே ஓடும். அவள் அதை துரத்திப் பிடிக்கச் செல்வாள். பூனைக்குட்டி அங்குமிங்கும் போக்குக் காட்டும். காக்கிச் சட்டை அணிந்த அந்த நான்கு பேரும் அங்குமிங்கும் அந்தப் பெண்குழந்தையோடு சேர்ந்து ஓடுவார்கள். சிறிதுநேரத்தில் பூனைக்குட்டியைப் பிடித்து, அந்தப் பெண்குழந்தையின் கன்னங்களைத் தட்டி, சிரித்தபடியே கொடுப்பார்கள். அவள் ‘தாங்க்ஸ் அங்க்கிள்’ என சிரிப்பாள். சிறிதுநேரம் கழித்து அவள் பார்க்கும்போது, அதே நான்கு பேரும் பழையபடி தன் தந்தையிடம் கடுமையாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அவளுக்கு பயமாய் இருக்காது. அவ்வளவுதான் கதை. அவ்வளவுதான் விஷயமும்.

தோற்றங்களின் மூலமும், ’இப்படித்தான்’ என்னும் முன்கூட்டிய முடிவுகள் மூலமும் யாரையும் அறிந்துகொள்வதில் உள்ள பிரச்சினையே இது. இலக்கியம், கலை, வாழ்க்கை குறித்த இடதுசாரிகளின் பார்வைகளை அறிந்துகொள்ளாமல் இடதுசாரிகளை வறட்டுத்தனமானவர்கள், ‘பிடித்ததையேப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பவர்கள்’ என்றும் பலரும் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இவை. மனித சமூகத்திற்காக மாற்றங்களை விரும்புகிறவர்கள், மாற்றங்களுக்காக தங்கள் அருமையான நேரங்களை பயன்படுத்துகிறவர்கள், எப்படி வாழ்வின் சுவைகளிலிருந்து துண்டித்துக்கொள்ள முடியும்? நாளை தனக்கு தூக்குத்தண்டனை என்ற போதும், முந்திய இரவில் சலனமாகும் நினைவுகளில் திருமணமாகி சில காலமே ஆகியிருக்கும் சிறுகண்டன் தன் மனைவியின் இளம் மார்புச் சூட்டை உணர்வானே, ‘நினைவுகள் அழிவதில்லை’யில், அந்தக் காமமும், காதலும் எவ்வளவு அற்புதமானது. எல்லாவற்றையும் துறந்து, எதிலும் பிடிப்பற்றவன் எந்தப் புரட்சியைக் கொண்டு வந்து விட முடியும்? தங்கள் சமூகப்பணிக்கு இந்த அருமையான உணர்வுகளைத் தியாகம் செய்பவர்களே இடதுசாரிகள். ஆசைகளைத் துறந்து நிற்கும் ‘சாமியார்கள்’ அல்ல.

‘இவ்வளவும், இவ்வளவும் எனக்கா?’ என ‘அம்மா வந்தாளும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ என ‘மோகமுள்ளும்’ தமிழ் வாசகப்பரப்புக்குள் வண்ணம் பொருந்திய வார்த்தைகளைச் சிந்திய போது, அதை ரசிக்காமலா போயிருப்பார்கள் வாசித்த எந்த இடதுசாரியும். கு.பா.ராவின் ‘தாய்’ கதையில் வரும் பாலம் என்னும் இளம்பெண் செய்தது தவறு என்று எந்த இடதுசாரியாவது சொல்வானா. விரிந்து பரந்திருக்கும் தமிழ் இலக்கிய வெளியில் இப்படி காமமும், காதலும் அழகழகாக எவ்வளவோ பூத்துக்கிடக்கிறது. அவற்றையெல்லாம் ‘குப்பை’ என்று எந்த இடதுசாரியும் ஒதுக்கியதில்லை. ‘வெறியெழுந்ததும் தாக்கத் துடிக்கும், ஊடுருவத் துடிக்கும் ஆண்குறி. பெண்கள் நடத்த வேண்டும் புரட்சியை. அது இடித்துத் தள்ளாது. கட்டி எழுப்பாது. பிறிதின் சாரத்தை உண்டு தன்னுள்ளிருந்து உதிரமும் உயிரும் கலந்து தந்து புதிய ஒன்றை பிறக்க வைக்கும். ஆம்... பெண்கள்’ என்னும் ஜெயமோகனின் இந்த படைப்பிலக்கிய வாசகங்களை, அவர் மீது எத்தனை விமர்சனங்கள் வைத்திருந்த போதும் ஒரு இடதுசாரி புறக்கணித்துவிட முடியாது. குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் எழுத்தை ‘ஆபாசம்’, ‘வக்கிரம்’ என்று நான் சொன்னதற்கு, ‘இந்த இடதுசாரிகளே இப்படித்தான்’ என மொத்தமாக சிலுவை அறையப் பார்ப்பது விசித்திரமானது.

ஒரு எழுத்தாளன் இப்படித்தான் எழுத வேண்டும், இதைத்தான் எழுத வேண்டும் என்று ஒழுக்க நெறிகளை யாரும் விதிக்கவில்லை. விதிக்கவும் கூடாது. அது அந்த எழுத்தாளனின் பூரண உரிமை. கல்லிலும், வண்ணங்களிலும், ஒளியிலும் உருவகம் பெற்றுள்ள கலையின் இறவாத சக்தியினைச் சொல்லி மனித சமூகம் தன் துன்பங்களையும், இன்பங்களையும் மீண்டும் மீண்டும் வாழ்ந்து உய்யச் செய்வது படைப்பாளியின் தர்மமும் கடமையும். இங்கே உடல் மட்டும் விதிவிலக்காகி விடுமா, என்ன?  காமம்/காதல் குறித்து எழுதுவது கூடாது, அவற்றை வாசிக்கக் கூடாது என்று இடதுசாரிகள் ஒருபோதும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். இங்கு ஆபாசம் என்பதுதான் பிரச்சினை. அதையும் விமர்சனமாகவேச் சொல்கிறோம்.

சம்ஸ்காரா கன்னடப் படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னதை இங்கு பகிரத் தோன்றுகிறது.

“சம்ஸ்காரா பார்த்தேன். நல்ல முயற்சி. அதிலே பிரச்சினைக்குரிய விஷயத்தை வேண்டுமென்றே வலிந்து சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி அதன் கதையிலோ, கருத்திலோ தடை செய்யத் தகுந்த அல்லது வயது வந்தவர்களுக்கு மட்டுமென்று வரம்பு கட்டுகிற பிரச்சினைகள் ஏதுமில்லை.
ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிற மேற்கத்திய பாதிப்பின் காரணமாக அந்தக் கதையின் கதாநாயகனான கிரிஷ்கர்னாடும் ஸ்நேகலதா ரெட்டியும் நெருங்கிப் புணர்கிற ஒரு காட்சியினை ரொம்பவும் காமிரா நயத்தோடு எடுத்திருக்கிறார்கள். இது இந்தப் படத்திற்கு அவசியமில்லாத ஒன்று. எனவே அருவருப்பானதும் கூட. இந்தக் காட்சியை அவர்கள் சேர்க்காமலிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது. ஒரு நல்ல படம் என்ற நற்பெயரோடு நின்றிருக்கும்.
இது மாதிரிக் காட்சிகளை வேண்டாமென்று நாம் சொல்வது ஒழுக்கக் கண்ணோட்டத்தோடு அல்ல. விரசம் என்பதாலும் அல்ல. இதிலே வெறும் வியாபாரம் அல்லது கலைக்குப் புறம்பான வேறு ஈடுபாடு இருக்கிறது என்பது நன்றாகத் தெரிந்து போகிறது.
செக்ஸ் பிரச்சினைகளை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். சமஸ்காராவின் கதை செக்ஸ் பிரச்சினை அல்ல. கலையின் subtletyதான் ரொம்ப  முக்கியம். அதுதான் கலை.
சமஸ்காராவில், இப்படிப்பட்ட subtlety நுட்பத்தோடு பல பகுதிகள் படைக்கப்பட்டும், இந்த ஒரு காட்சியில் என்ன காரணத்தாலோ இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வியாபாரப் பாணியான  performanace of love making என்கிற உத்திக்கு  இரையாகி இருக்கிறார்கள்.
ஒருவன் இறந்து போனதும், சம்ஸ்காரா என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் படத்தில், இறந்தவனுக்குச் செய்யப்படுகிற சடங்குகளையே பிரச்சினையாக ஏற்றுக்கொள்ளுகிற ஒரு கதையில், இறந்தவனைக் காண்பித்து ஒரு mix-இல் எரிகிற சிதையக் காண்பிக்கிற அளவுக்கும், வேறு ஒரு பாத்திரம் ஒரு கிராமத்துப் பெண்ணோடு இதே மாதிரி செக்ஸ் உறவு கொள்வதை அவளை இழுத்துத் தள்ளி அவன் மேல் சாய்கிற அளவோடு அந்தக் காட்சியை முடிக்கிற அளவுக்கும், subtletyயாக கையாண்டிருக்கிற டைரக்டர் இந்தக் குறிப்பிட்ட காட்சியில் மட்டும், எதனால் இவ்வளவு விவரங்களோடு தொடர்ச்சியான காட்சிகளின் மூலம்  ஒரு performanceஆக ஆக்குகிறார் என்பதற்குக் கலாபூர்வமான ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.”
இந்த இடத்திலிருந்து ஆரம்பித்துப் பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

(தொடர்வோம்)

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல பகிர்வு மாதவராஜ், நன்றிகள்.

    இடது சாரிகள் கொள்கைகளுக்கும் போராட்டங்களுக்குமே தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் அளிப்பதால், காதல் காமத்திற்கு இரண்டாம் இடமே அளிப்பார்கள் என்ற அனுமானத்தில் நான் கருத்து கூறி இருந்தேன்.

    கார்ல் மார்க்ஸ் இன் அற்புதமான காதல் வரிகள் (தன மனைவியை காதலித்த காலத்தில் எழுதியவை)



    e! I could a thousand volumes fill,
    Writing only "Jenny" in each line,
    Still they would a world of thought conceal,


    http://marx.eserver.org/1837-young.marx/1836-love.poems.to.jenny.txt

    பதிலளிநீக்கு
  2. Comrade:

    Whatever you write should be readable and then it should be interesting.

    I felt like sitting in front of an age old professor, while reading your article. How I should get rid of this feeling?

    பதிலளிநீக்கு
  3. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    இயல்பான உணர்வு/நிகழ்வுக்கும் இடது சாரிக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!