பாலியல் குற்றச்சாட்டும், பா.ஜ.க எம்.எல்.ஏவின் கொலையும்!

 

biharmlawoman295

கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏவும், கொலை செய்த பள்ளி ஆசிரியையும்

மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு, இன்னொரு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது வெளிவந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் இந்த தடவை போலீசுக்குப் போகவில்லை. அவரே ஒரு சமையற்கத்தி மூலம் நேற்று தண்டனை அளித்திருக்கிறார்.

ராஜ் கிஷோர் கேசரி மீது சென்ற மே மாதத்திலேயே, ரூபம் பதக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருக்கிறார். அதன் மீது எந்த நடவடிக்கையில் இல்லாமல் போனது மட்டுமில்லாமல், மீண்டும் அவரே எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றதில் கொதிப்படைந்த அந்தப் பள்ளி தலைமை ஆசிரியை கொலை செய்யத் துணிந்திருக்கிறார். அவரது இல்லத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கிக்கொண்டு இருக்கும்போது எம்.எல்.ஏ தனது வாழ்வின் இறுதியை இப்படியாக கண்டிருக்கிறார். ‘பீகாரின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள்’ என பிஜேபி பெருமைப்பட்டுக்கொண்ட நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் நான்காவது முறையாக எம்.எல்.ஏவாக முடிசூட்டிக் கொண்ட ராஜ் கிஷோர் கேசரிக்கு இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்திருக்கிறது.

எம்.எல்.ஏவின் காவலாளிகள் அங்கேயே ரூபம் பதக்கை கடுமையாக தாக்கியதை நிருபர்கள் பார்த்திருக்கிறார்கள். அதனை மறுத்த காவல்துறைதான் இப்போது ரூபம் பதக்கை ’தீவீர விசாரணை’ செய்துகொண்டு இருக்கிறதாம். பத்திரிகைகளில் ஒன்றிரண்டாய் தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. 2006ம் வருடம், அந்தப் பள்ளியைத் துவக்கி வைத்திருக்கிறார் ராஜ் கிஷோர் கேசரி. 2007ல் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகவும் சென்றிருக்கிறார். அந்தப் பள்ளிக்குச் செல்வதற்கு சாலை போடுவதற்கான விண்ணப்பத்தோடு , பலமுறை ரூபம் பதக் எம்.எல்.ஏவை சந்தித்து இருக்கிறார். இந்தப் பின்ணையில்தான் கொலை நடந்திருக்கிறது.

தலைசிறந்த ‘தொண்டரை’ பா.ஜ.க இழந்துவிட்டதாக, அக்கட்சியின் மாநிலத்தலைவர் சி.பி.தாக்கூர் வருத்தமடைந்திருக்கிறார். வழக்கம்போல, இதில் பெரும் சூழ்ச்சியும், சதியும் இருப்பதாகக் கூறி சி.பி.ஐ விசாரணைக்கு ஆளுக்கு முந்தி கோரிக்கை வைத்தும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஹாலப்பா என்பவர் அவரது நண்பரின் மனைவியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டபோதும், இதே “சதி, சூழ்ச்சி” எனும் வார்த்தைகளை எடுத்து உபயோகித்துக் கொண்டது. யோக்கியமான, பெண்களை உயர்வாக மதிக்கிற தங்கள் கட்சிக்கு இதுவரையில் இல்லாத அவப்பெயர் இப்போது உருவாக்கப்படுவதாக கண்ணீர் வடிக்கிறது. நல்லவேளை, சம்பந்தப்பட்ட பெண்கள் முஸ்லீமாகவோ, கிறிஸ்துவராகவோ இல்லை!

இந்தக் கொலைக்கு பா.ஜ, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், லோக்சக்தி உட்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த’ அரசை வலியுறுத்தி உள்ளன. பீகார் முதல்வர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கிவிட்டார். சட்டமும், சகலமும் தன் அதிகாரத்தின் கீழ் என செயல்படும் இந்த எம்.எல்.ஏக்களிடம் இருந்து மக்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?

இந்தச் சம்பவம் குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைச் செய்திகளுக்கு பலதரப்பட்ட கருத்துக்கள் வாசகர்களிடமிருந்து வந்திருக்கின்றன.  ரூபம் பதக்கைப் பாராட்டிப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ‘இது கொலை அல்ல, தீர்ப்பு’ என்கிறார் ஒருவர். இந்த தீரச்செயலுக்கு, ‘பாரத ரத்னா’ கொடுக்க வேண்டும் என்றுகூட ஒருவர் ஆரவாரத்திருக்கிறார். இதுபோன்ற அரசியல்வாதிகள் குறித்த அபிப்பிராயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன என்பது தெளிவாயிருக்கிறது. மக்களின் அடிமனதில், தேங்கியிருக்கும் இவ்வகை எம்.எல்.ஏக்களின் மீதான் ஆத்திரங்கள் வெளிவந்திருக்கின்றன.

chandra_050310-4

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஹாலப்பா மீதான குற்றச்சாட்டு

 

இதே வேளையில், இக்கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மங்களை அவிழ்த்துப் பார்க்கிறேன் என்று வக்கிரங்களும் வெளிப்படவேச் செய்கின்றன. ரூபம் பதக்கிற்கும் எம்.எல்.ஏவுக்கும் இடையே உறவு இருந்ததாகவும், அதை வைத்து ரூபம் பதக் பிளாக்மெயில் செய்ததாகவும், பணம் கொடுக்க மறுத்த எம்.எல்.ஏவைக் கொலை செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி வாசிக்கப்படுகிறது. ரூபம் பதக் நடத்தைக் கெட்டவர், அதுதான் அவரது கணவர் அவரோடு வாழவில்லை எனவும் சிலர் வரலாற்று ரீதியான ஆராய்ச்சிகளில் ஈடுபடத் துவங்கி இருக்கின்றனர். கர்நாடகாவில் சந்திராவதி என்னும் பெண்ணைக் கற்பழித்துவிட்டதாக ஹாலப்பாவின் மீது குற்றச்சாட்டு வந்தபோது, ‘சந்திராவதியும், அவரது கணவரும் சேர்ந்து ஆடும் நாடகம், சந்திராவதி நடத்தைக் கெட்டவர்’ என்று இதுபோலவே செய்திகள் வந்தன. கணவர் கூட வாழ்ந்தாலும் ‘நடத்தைக் கெட்டவள்’. வாழாவிட்டாலும் ‘நடத்தைக் கெட்டவள்’. என்னய்யா தர்க்கம் இது? இந்த அறிவுகெட்ட, ஆணாதிக்க வக்கிரம் பிடித்த மூளையை என்ன செய்வது?

பொதுவெளியில், அசிங்கம் செய்திருக்கிற, பெருங்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிற இந்த ஆண் புனிதர்களுக்கு அரசின் மரியாதையும், சமூக மரியாதையும் கிடைக்கிறது. பெண்களுக்கு மட்டும் “நடத்தைக் கெட்டவர்கள்’ என்ற பேர் மட்டுமே கிடைக்கிறது. சீதையின் மீது ராமன் விதித்த இந்த ‘நடத்தை விதி’ இன்றுவரை இச்சமூகத்தின் மீது சாபமாய் படிந்து நாற்றமெடுக்கிறது. பெண்கள் அடிபட்டுத் துடிக்கிற அவமானங்களையும், இழப்புகளையும், பாதிப்புக்களையும் இந்த பாழாய்ப்போன ஒழுக்கத்தின் பேராலும், நடத்தையின் பேராலும் இன்னும் எத்தனை நாளைக்கு புதைக்கப் போகிறார்கள்? இது அவர்கள் அரசாங்கம், அவர்கள் சட்டம், அவர்கள் என்ன கதை வேண்டுமானாலும் கட்டுவார்கள். பூசி மெழுகுவார்கள்.

அதோ “என்னைத் தூக்கிலிடுங்கள். நான் வாழ விரும்பவில்லை” என ரூபம் பதக் கதறுகிறார். யார் காதிலேனும் விழுகிறதா? அதன் வலி உணர முடிகிறதா?

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ||‘பீகாரின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள்’ என பிஜேபி பெருமைப்பட்டுக்கொண்ட||

  இதுவே காங்கிரஸ் / லாலு / பொதுவுடமைக் கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இந்த வரிக்குப் பதிலாக என்ன எழுதியிருப்பீர்கள்.

  ஒரு குறிப்பிட்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்லுவதில் எதும் அழுத்தமான காரணம் இருக்கிறதா?

  -0-

  மற்றபடி கட்டுரை ஏற்புடையதே!

  பதிலளிநீக்கு
 2. கதிர்!

  உங்கள் கேள்வியின் நியாயம் புரிகிறது. மற்ற கட்சிகள் எப்படியோ, சி.பி.எம் இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களை வேட்பாளர்களாக மக்கள் முன் நிறுத்தாது.

  பதிலளிநீக்கு
 3. Every Party has criminals. Mathavaraj's colored glasses forces him to put BJP in front of that criminal. This is a widely accepted practice in the print media, to paint the whole party to have done the injustice, whereas the truth is far beyond that. And on top of it, if it is BJP, all such descriptions go under bold letters with underline.

  பதிலளிநீக்கு
 4. Itsdifferent!

  மனிதர்களில் பலவீனமானவர்களும், வக்கிரமானவர்களும் இருக்கவேச் செய்வார்கள். அவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கவேச் செய்யலாம். ஆனால், இப்படிப்பட்டவர்களை ‘கட்சியிலிருந்து இன்ன காரணத்திற்காக இவரை நீக்குகிறோம்’ என சொல்கிற கட்சியாக நான் சி.பி.எம்மைப் பார்த்திருக்கிறேன். உள்ளூரில் தட்டி போர்டு எழுதி வைப்பதிலிருந்து, பத்திரிகைச் செய்தி வெளியிடுவது வரை அறிந்திருக்கிறேன். வேறு ஒரு கட்சியைச் சொல்லுங்களேன், பார்ப்போம். yea, its different!

  பதிலளிநீக்கு
 5. உண்மையில் நீதி வெல்லுமா ? அரசியல் வாதிக்கு போன மட்டும் ரத்தம் அதே ஒரு சாதாரண குடிமகனுக்கு போனால் சிறுநீர் இது தாம்பா அரசியல்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

  பதிலளிநீக்கு
 6. ச‌ட்ட‌ம் அத‌ன் க‌ட‌மையை ஆர‌ம்ப‌த்தில் செய்திருந்தால் அந்த‌ ப‌ள்ளி ஆசிரியைக்கு இந்த‌ அவ‌ல‌ம் ஏற்ப‌ட்டு இருக்காது.என்ன‌ செய்வ‌து அப்பாவி யாரேனும் காவ‌ல் நிலைய‌த்திற்க்கு புகார் கொடுக்க‌ சென்றால், வேட்டியை உருவி அதிகார‌த்தை அப்பாவிக‌ளிட‌த்தில் ம‌ட்டும் காட்டும் ம‌னோபாவ‌ம் இவ‌ர்க‌ளுக்கு.
  இது பீகார் ம‌ட்டுமல்ல‌ இங்கும் கூட‌தான்.

  பதிலளிநீக்கு
 7. முதலில் கட்சிக்கென்று ஒரு ஒழுங்கு, எதிர்காலத் திட்டம் எல்லாம் வேண்டும் அதுவல்லாமல் மதங்களின் மீது காட்டாட்சி நடத்தும் கட்சிகளின் உறுப்பினர்கள் எப்படி இருப்பர். இந்த லட்சணம்தான்.

  பதிலளிநீக்கு
 8. \\\உங்கள் கேள்வியின் நியாயம் புரிகிறது. மற்ற கட்சிகள் எப்படியோ, சி.பி.எம் இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களை வேட்பாளர்களாக மக்கள் முன் நிறுத்தாது. ///

  ஹா..ஹா..ஹா.. ஹா.. 2011 ன் மிகச்சிறந்த காமெடி சார் இது. நம்ம கேரளா பக்கம் நியுசெல்லாம் இங்க யாரும் படிச்சிருக்க மாட்டாங்கன்னு நீங்க நம்பறது மெய் சிலிர்க்க வைக்கிறது சார்.

  பதிலளிநீக்கு
 9. எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்க்கு முன்பு அரசு பெண்களுக்கு எம்.எல்.ஏக்களிடமிருந்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு
 10. இந்தச் செய்தி வெளி வந்தவுடன் அதனை ஆவணப்படுத்தி அதன் மீதான சரியான விமர்சனப் பார்வையை வைத்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 11. எந்த கட்சியோ அது முக்க்கியமல்ல, எஸ் பின்னூட்டம் மிக பொருத்தம். பெண்கள் பாதுகாப்பு இல்லாத நாடாகிவிட்டதே என்று மனம் பதைக்கிறது!

  தனி மனித ஒழுக்கம் என் சீரழிந்து விட்டது?

  பதிலளிநீக்கு
 12. ம.தி.சுதா!
  நன்றி, தம்பி.


  aambalsamkannan!
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.


  உங்களில் ஒருவன்!
  சரிதான். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  Rajaraman!
  சொல்லுங்க சார், கேரளாப் பக்கம் என்ன நடக்கிறது என்று....


  நெல்லைத் தமிழன்!
  இப்படித்தான் பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள். அவர்களைக் கண்டடைய வேண்டும்.


  S!
  மிக்க நன்றி.


  வினோத்!
  ரொம்ப நன்றி.


  வெற்றிமகள்!
  தனி மனித ஒழுக்கத்தை, தனி மனிதர்கள் சீரழிப்பதில்லை. சமூகத்திலிருந்தே அவை உற்பத்தியாகின்றன. மனிதர்களை பலவீனப்படுத்தும் யுக்திகள் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றன. அதை நாம் அடையாளம் கான வேண்டும் முதலில்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!