அனுபவங்களின் உற்சாக வாசல்!

children 1 பொதுவாகக் குழந்தைகளைப் பார்க்கும்போது நீ வளரும் போது என்னவாக ஆக விரும்புகிறாய் என்ற கேள்வியை அலுக்கிற வரை கேட்பது மனிதர்களது இயல்பு. கொஞ்சம் மாறுதலாக, மூத்த குடிமக்கள் யாரையாவது கேட்டுப் பாருங்களேன், நீங்கள் வாய்ப்பிருந்தால் வேறு என்னவாக விரும்புகிறீர்கள் என்று - பழையபடி குழந்தைப் பருவத்திற்குப் போக விரும்புவேன் என்று பலரும் சொல்லக் கூடும்.  

மனிதர்களை வயது அடிப்படையில் வரிசையாக  ஒரு வட்ட வடிவில் மானசீகமாக நிறுத்தினால் பிஞ்சுக் குழந்தையின் கையைக் கோப்பது   ஒரு தாத்தாவோ, பாட்டியோவாகத் தான் இருக்கும் அல்லவா!  ஒரு குழந்தையைப் புரிந்து கொள்வதும், முதிய மனிதர் ஒருவரைப் புரிந்து கொள்வதும் எவ்வளவு நுட்பமான அனுபவமாக இருக்கிறது என்பதற்கு இந்த எளிய பரிசோதனையிலிருந்து விடை கிடைப்பது மாதிரி தெரிகிறது இல்லையா..

ஒரு குழந்தையிடம் தட்டுப்படும் மேதைமையும், வயது முதிர்ந்த மனிதர்களிடம் வெளிப்படும் குழந்தைத்தனமும் இன்னும் கூடுதலான சிந்தனைகளைத் தூண்டக் கூடும்.  மேதைமை என்பதை அறிவின் அடிப்படையில் மட்டும் நோக்கத் தேவையில்லை. குழந்தைப் பருவம் மதிக்கத் தக்க, போற்றி வளர்க்கத் தக்க, ரசித்துக் கொண்டாடத் தக்க அனுபவங்களின் திறந்தவெளி என்று மட்டும் சொல்லிவிடலாம்.

கறை படாத பார்வை, சுயநலனற்ற நோக்கு இந்தப் பிரிசங்களின் வழியே எந்தக் குழந்தையையும் பார்க்க வாய்த்தவர்கள் வரம் பெற்றவர்கள்.   பின்னால் வருகிற இந்தக் கவிதையை வாசியுங்களேன்:

எதனாலோ அந்த தோசையை
பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.
அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு
அந்த தோசையைச் சுட்டிக்காட்டி
அது தன்னுடையது என்று
முன்பதிவு செய்துகொண்டது

இதை கவனிக்காமல் அந்த தோசையை
என் பார்சலில் வைத்துக்
கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.
மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு
வெளியே வரும்வரை
திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்
என் கை நடுங்கிக் கொண்டிருந்தது.

- முகுந்த் நாகராஜன்

எழுத்தாளர் கல்கியின் ஒரு கட்டுரையின் தலைப்பு: குழந்தைகள் மாநாடு.  குழந்தைகள் மாநாடு ஒன்றிற்குச் செல்லும் அவரை வாசலிலேயே தொண்டர் குழு சிறுவர்கள் நிறுத்திவிடுவார்கள். குழந்தைகள் அல்லாதோரை உள்ளே விடும் பேச்சுக்கே இடமில்லை என்பது போல் பார்பார்கள். " என்னை ஏன் உள்ளே விடக் கூடாது?" என்று கேட்பார் கல்கி. "உம்மை ஏன் உள்ளே விட வேண்டும்?" என்று கேட்பார்கள் பையன்கள்.  இதுதான் சங்கடம், கேள்வி கேட்டால் பதிலாகக் கேள்விகள் தான் வரும் குழந்தைகளிடமிருந்து....என்று சொல்லித் தொடர்ந்து எழுதிப் போவார் அவர்.

இந்தக் கேள்வி கேட்கும் தன்மை தான் குழந்தைப் பருவத்தின் சுவாரசியமான அம்சம். அவர்களது வளர்ச்சிக்கான வித்து அதில்தான் பொதிந்திருக்கிறது.  பெரியவர்கள் அதைத் தான் அவ்வப்போது ஈவிரக்கமின்றிப் பிடுங்கிப் போடுவதும், நசுக்கி எறிவதும், மிதித்துத் தேய்ப்பதுமாக இருக்கிறோம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அந்தக் கேள்வியின் நுனியைப் பிடித்துக் கொண்டு போனால் ஒரு பதிலின் அடுத்த நுனி இன்னும் பெரிய கேள்வி தான் என்பதும், அது பதில் சொல்வதாகக் கருதிக் கொள்பவரின் அறிவையும் இன்னும் விசாலமாக்கும் என்பதும் ரசமான அனுபவமாக இருக்கும். 

உண்மை-பொய்,  சரி-தவறு, நியாயம்-அநியாயம், நீதி-அநீதி, தருமம்- அதருமம், உயர்வு-தாழ்வு.....இந்த வேறுபாடுகளை நாம் பெரும்பாலும் குழந்தைகளுக்குப் பொதுவில் போதிக்காமல், அந்தந்த நேரத்து நடப்புகளின் மேடையில் நின்று நமக்கு வசதியான கோணத்திலிருந்து அறிவுரை மாதிரி சொல்லிச் செல்கிறோம்.  அதனால் தான் அடுத்த ஒரு நடப்பின் போது அதே அளவுகோலிலிருந்து  குழந்தைகள் அதை அணுகும்போது நமது அப்போதைய பார்வையிலிருந்து முரண்பாடுகள் ஏற்படுவதும், அதன் தவிர்க்கமுடியாத பின் விளைவுகளை, வேதனையான பளுவைக் குழந்தைகள் உளவியல் ரீதியாக  (பல நேரங்களில் உடல் ரீதியாகவும்) எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதும் வளர்ந்த (?) மனிதர்களுக்குப் புலப்படுவதே இல்லை. 

குழந்தைகள் சண்டைக்காரர்களாக இருப்பதும் பெரியவர்களுக்குச் சிக்கலாகத் தெரிகிறது.  ஒரு குழந்தையின் ஒவ்வொரு பிடிவாதத்தின் பின்னாலும், பெரியவர்கள் மறந்து விட்ட அல்லது மறுத்துவிட்ட அல்லது வசதியாக மாற்றிச் சொல்கிற ஏதோ ஒரு விஷயம் இருக்கவே செய்யும்.  சாத்தியமாகாத சத்தியங்களைச் செய்துவிட்டு அப்புறம் பின்வாங்கினால் எப்படி? 

'உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி, மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி...' என்றான் மகாகவி. அதற்கான நிலைக்கு ஒரு குழந்தையை உயர்த்தும் படிக்கட்டுகள் கரடு முரடான ஒரு மேஸ்திரியின் கைவரிசையால் அமைக்கப்பட முடியாதவை. புத்தகங்களில் உள்ளவற்றை தாளம் தப்பாமல் ஒப்புவிக்கும் ஓர் எந்திரனாக உருப்பெறுவதில் என்ன இன்பம் பொங்க முடியும்?

அறிவியல் துடிப்போடு இந்த உலகிற்குள் நுழையும் ஒவ்வொரு குழந்தையும் - பால் பேதமில்லாமல் வாழ்வின் எத்தனையோ அனுபவங்களில் புகுந்தேறி வளர்ந்து வரவேண்டியிருக்கிறது.  பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் முன்பே பெரியவர்கள் சாப்பிடும் உணவுவகைகளை அவர்களுக்குச் சின்னஞ்சிறு அளவுகளாக அறிமுகப்படுத்திப் பழக்க வேண்டும் என்று சொல்கிறது உடல் நல அறிவுலகம்.  இனிப்பும், கசப்பும், காரமும், துவர்ப்பும் என வெவ்வேறு சுவைகளை ருசிக்கப் பழகுவது போலவே, வெற்றியும் தோல்வியும் இரண்டுமே ஏற்கப் பழக்கப் படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எளிதில் நொறுங்கிப் போகிற ஒரு உளச் சிக்கல் இல்லாத மனிதர்களாக எதிர்காலத்தில் வலம் வர முடியும்.  எதிர்ப்புச் சக்தி பெருக்கும் இளமைச் சூழல் தான், சமூகத்தின் முன்னேற்ற நடைக்குத் தாமும் உற்சாகக் காலெடுத்து முன் நடக்கும் மனிதர்களை வழங்க முடியும். வேறுபட்ட வண்ணத் தீற்றல்களாக பல்நோக்கும்,  பல்சுவையும், பல் திறனும் உள்ள குழந்தைகளை உருவாக்கும் சமூகம் பெருமை கொள்ளத் தக்கதாக உருப்பெறும்.

இன்று முதல் ஒரு வாரம் தமிழகத்தின் 12 நகரங்களில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சிகள். விபரங்களுக்கு:
குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சிகள்

இத்தகைய மலர்ச்சியான சிந்தனைப் போக்கில் வளர்க்கப்படும் குழந்தைகள் ஆதிக்கக் கருத்துக்களை ஒளிவுமறைவின்றி எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களாகவே இருப்பார்கள்.  பால் ரீதியான வேறுபட்ட அணுகுமுறைகளை, சாதிய ரீதியான நோக்கை, ஆளுக்கேற்பப் பேசும் பேச்சை என எல்லா அடாவடிகளையும் உடைத்தெறியும் அவர்களது கேள்விக்கு நியாயமான பதிலைத் தரவும், அந்தப் பதில்கள் எழுப்பும் புதிய கேள்விகளுக்கான பதிலாகப் போராட்டங்களை அறிமுகப்படுத்தவும் பெரியவர்கள் தயாராகத் தான் வேண்டும்.

இந்த மாதிரியான உற்சாகமான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளிடம் நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், 'மனிதராக...' என்ற நேர்மையான பதில் கிடைக்கக் கூடும்.

-எஸ்.வி.வேணுகோபாலன்

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இந்த மாதிரியான உற்சாகமான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளிடம் நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், 'மனிதராக...' என்ற நேர்மையான பதில் கிடைக்கக் கூடும்

  பதிலளிநீக்கு
 2. நிச்சயமாக ஒவ்வொரு குழந்தையின் வார்தையிலும் அதுதான் வெளிப்ப்டவேண்டும்.....

  பதிலளிநீக்கு
 3. நல்ல கட்டுரை...
  முகுந்த நாகராஜனின் கவிதை மிக அருமை....
  கல்கியின் கேள்வியும் சிறுவர்களின் பதிலும் அருமை...

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான எழுத்து. முகுந்த் நாகராஜனின் கவிதை என்னவோ செய்கிறது.

  நன்றி வேணுகோபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 5. கவிதை அருமை!

  நான் வளர, வளரப் பக்குவப்படுவதற்கு ஏதாவது ஒரு குழந்தைதான் காரணமாக இருக்கிறது.

  குழந்தைகளிடமிருந்து நான் கற்றுக்கொண்ட‌ விஷயங்கள் நிறைய. என்னுடைய ரோல் மாடல் யார் என்று கேட்டால் அது கண்டிப்பாக என் குழந்தையாகத்தான் இருக்கும்.


  அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. \\நீங்கள் வாய்ப்பிருந்தால் வேறு என்னவாக விரும்புகிறீர்கள் என்று - பழையபடி குழந்தைப் பருவத்திற்குப் போக விரும்புவேன் என்று பலரும் சொல்லக் கூடும். \\
  உண்மைதான். அந்த பிராயத்தின் இனிமையான நினைவுகளை அசை போடுவதே சுகம்.
  முகுந்த நாகராஜனின் கவிதை மிக அருமை....
  அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. அன்பு மாதவ்

  வருகை புரிந்த அனைத்துக் குழந்தை உள்ளத்துக்காரர்களுக்கும் என்றென்றும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

  இரவு முறைத்துக் கொண்டு படுக்கச் செல்லும் குழந்தை அதன் சுவடே தெரியாமல் காலை எழுந்து நமது கழுத்தைக் கைகளுக்குள் சிறைப்படுத்திக் கொண்டு சிரிக்கிறது.

  நமது தவறென்று நமக்கே உறைப்பதை, பரவாயில்லை என்று விட்டுக் கொடுத்து விட்டு அடுத்த விஷயதிற்குச் செல்லப் பக்குவம் உள்ளவர்கள் குழந்தைகள்.

  நமது முரட்டுக் கோபத்தை, பலர் முன்னிலையில் குழந்தையைப் புண்படுத்திவிடும் நமது அசட்டுத் தனத்தை...
  எல்லாம் இலகுவாக மன்னித்துவிட்டுத்
  தமது நேசத்தை மட்டுமே
  மீண்டும் மீண்டும்
  முன்னிலைப் படுத்தும் வரம் பெற்று வந்திருப்பவர் நமது குழந்தைகள்.
  வேறென்ன சொல்ல....

  குழந்தைகளைக் கொண்டாடும் மனிதர்கள், தங்களைத் தாங்களே கொண்டாடும் அருள் பெற்றவர்கள்.
  அனைவருக்கும் மீண்டும் நன்றியும், வாழ்த்துக்களும்....

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!