பலவித மரணங்களைச் சுமந்தபடி தினசரிகள் நம் வீடுகளுக்குள் வந்து விழுகின்றன. தொடர்ந்து அவைகளை வாசிக்க நேர்ந்து, டீயைக் குடித்தபடி அடுத்த பக்கத்தைத் திருப்புகிறோம். அருகில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அதுகுறித்து சில தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ, யாருக்கோ நேர்ந்த துயரங்கள் நம்மை அழுத்துவதில்லை. ஒவ்வொரு மரணத்திலிருந்தும் எழும் அழுகைகள் நம்மை எளிதில் தீண்டுவதில்லை. ஆகப்பெரும் ஜனசமுத்திரத்தில் இதுவே துயரங்களின் விதியாக இருக்கிறது.
இந்தப் பத்திரிகைகளும் மரணங்களை வியாபாரமாக்கும் முயற்சியில், மரணங்களிலிருக்கிற ஜீவனைக் கொன்று விடுகின்றன. பெரும்பாலான மரணங்களின் தலைப்புச் செய்திகளில் ‘காதலோ’, ‘கள்ளக்காதலோ’ இடம்பெறுகின்றன. அந்த சோக நிகழ்வுகளை உள்வாங்குவதிலும், அசை போடுவதிலும் ஒருவிதமான சுவாரசியம் ஏற்படுகிறது. சமூகம் குறித்த கவலையோ, கருத்தோ இன்றி ஒரு துப்பறியும் கதையின் விறுவிறுப்பில் மனிதர்கள் மாய்ந்து போகின்றனர். நேற்றைய செய்தியின் எந்த தாக்கமும் இன்றி ஒரு புதிய மரணத்தை நாளை அவர்கள் வாசித்துக்கொண்டு இருப்பார்கள்.
அப்படித் தாண்டிவிட முடியாமல் சில மரணச்செய்திகள் நினைவோட்டங்களின் கூடவே வந்து அவஸ்தை தருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் திருமணமான ஒரு பெண்ணை, திருமணத்திற்கு முன்பே விரும்பிய இளைஞன் ஒருவன் கொன்றதும், நேற்று பழனியில் ஒரு பெண் தான் காதலித்தவனோடு வாழச் சென்றதைத் தாங்க முடியாமல் அந்தக் குடும்பத்தில் உள்ள தாய், தந்தை, சகோதரன், சகோதரி என நான்கு பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும் சமூகத்தின் முக்கியமான நோய்களை அடையாளம் காட்டுவதாய் இருக்கின்றன.
முந்தையது, ‘இன்னொருவனுடன் தான் விரும்பியவளை நினைத்துப் பார்க்க முடியாத’ வெறிகொண்ட மனநிலை என்றால் பிந்தையது, “தங்கள் குடும்ப கௌரவம், மானம் எல்லாம் அவளால் பறிபோய் விட்டதே” என்னும் விரக்தியின் உச்சநிலை. இங்கே கொலை செய்தவனும், தற்கொலை செய்தவர்களும் ‘வாழ்வில் மீளவே முடியாத தோல்வியை’ தாங்கள் சந்தித்து விட்டதாக முடிவுக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் மீதெல்லாம் பரிதாபப்படுவதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை.
இரண்டு கொடூரங்களும் பெண்ணுலகத்தின் மீது இழைக்கப்பட்ட பெரும் காயங்களாகவே அறிய முடிகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். கனவும், ஆசையும் ததும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்குள் கழுத்தறுபட்டு கொலை செய்யப்படுகிறாள் ஒரு பெண். எவனோ ஒருவனுக்காக தன் குடும்பத்தையே சாகக்கொடுத்தவள் எனும் விஷம் தொண்டையடைக்க இனி வாழ்க்கை முழுவதும் சாக வேண்டும் இன்னொரு பெண்.
காதல் குறித்து இச்சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதங்களின் வெளிப்பாடே இந்த பைத்தியக்காரத்தனங்கள். காதலை உடல்ரீதியாக பார்க்கும் சமூக மனோபாவமே இகொடூரங்களுக்கு காரணமாகிறது. தான் விரும்பிய பெண்ணுடல் அல்லது தாங்கள் வளர்த்த மகளின் உடல் மீது ஏற்படும் கறைகளாகவே அப்பெண்களின் எதிர்காலம் பார்க்கப்பட்டிருக்கிறது.
பெண் என்பவள் தசையினால் மட்டும் ஆனவள் அல்ல. அன்பு, பரிவு, சினேகம், ஆதரவு என்னும் அற்புதங்களால் ஆனவள் என்பதை அறியாத வரை இந்த மரணச்செய்திகளை நாம் வாசித்துத் தொலைக்க வேண்டியதுதான் போலும்.
சமூகத்தின் மீது ஒரு பிடிப்பு, positive எண்ணத்துடன் செயல் பட வேண்டிய அவசியம், சொல்லிலும் செயலளிலும் ஒரு தொலை நோக்குப் பார்வையுடன், இயலாமையிலும் முன்னின்று செயல்பட உதவும் அமைப்புடன் இதை வெல்ல முடியும். இது ஆரம்ப கால கல்வியுடன் சேர்ந்து வரவேண்டும்.
பதிலளிநீக்குஎதையும் கடுஞ்சொற்களால் விமர்சிக்கப் படுவதற்கு அஞ்சியே பலவகை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. தவறாக தோன்றுபவற்றை, எடுத்தவுடன் இகழ்வது அல்லது கடுஞ்சொற்களால் விமர்சிப்பது தவிர்த்து, குடும்பம் மற்றும் சுற்றுச் சூழலில் எல்லோரும் செயல்பட்டால் மாற்றம் தெரிய வாய்ப்புண்டு. விலகிப் போய்விடுவர் என்ற அச்சம் தவிர்க்கலாம்.
அன்புத் தோழர் மாதுவிற்கு, நீங்கள் வெளியிட்ட செய்தியோடு கூட எங்கள் பக்கத்து மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் முன்னர் திருச்சியைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதையும் இன்றைய மாலை செய்தித் தாள்களில் படிக்க நேர்ந்தது. இவர்களுக்கெல்லாம் சாதி “அந்த” இடத்தில்தான் புதைந்து கிடப்பதாக்த் தெரிய வருகிறது. வீடு வரை வருவார்கள். சேர்ந்து சாப்பிடுவார்கள். நாங்கள்ளாம் சாதி வேறுபாடுகளை எல்லாம் பார்க்க மாட்டோம் என்று முற்போக்காக பீற்றிக் கொள்வார்கள். ஆனால் ம்கனோ மகளோ “சண்டாளர்களாக” மாறிப் போய் விட்டால் பலமிருந்தால் வெட்டிக் கொல்வார்கள். இல்லாவிட்டால் மானம், கெளரவம் போய்விட்டது என்று செத்துப்போவார்கள். கெளரவக் கொலையை ஆதரித்து தான் உச்சநீதிமன்றத்திலேயே தீர்ப்பு சொல்ல மானங்கெட்ட மாண்புகள் நீதிபதிகளாக உட்கார்ந்து இருக்கிறார்களே. சாதியை ஒழிக்க இன்னும் பல பெரியார்கள் வரவேண்டும்.
பதிலளிநீக்குதங்கள்சமூகப்பொறுப்பிற்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு//நேற்றைய செய்தியின் எந்த தாக்கமும் இன்றி ஒரு புதிய மரணத்தை நாளை அவர்கள் வாசித்துக்கொண்டு இருப்பார்கள்.//
பதிலளிநீக்குஅழகாக சொன்னீர் நண்பரே
மரணம் என்பது தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு செய்தி
அதை நம் வீட்டு கூடத்தில் போட்டு பார்க்கும் போது தான் அதன் அர்த்தம் விளங்கும்.
மனம் கனக்கிறது! நல்ல சமூக கட்டுரை!
பதிலளிநீக்குஇந்த மாதிரி நிகழ்ச்சிகளை பேப்பரில் படிக்கும் போதும் கேட்கும் போதும் மனது மிகவும் வருந்துகிறது. கோபம் மற்றும் விரக்தியே இது போன்ற தவறான முடிவுகளை எடுக்க காரணமாகிறது.
பதிலளிநீக்கு/பெண் என்பவள் தசையினால் மட்டும் ஆனவள் அல்ல. அன்பு, பரிவு, சினேகம், ஆதரவு என்னும் அற்புதங்களால் ஆனவள் என்பதை அறியாத வரை இந்த மரணச்செய்திகளை நாம் வாசித்துத் தொலைக்க வேண்டியதுதான் போலும்./
பதிலளிநீக்குஇத்தகு எண்ணங்கள் முதிர்ச்சி, பக்குவம் சமூகத்திற்கு வந்து பரவுதற்கு முன்பே கலாச்சார சீரழிவுக்கு உதவும் ஊடகங்களும், உபாயங்களும், சமூகத்தின் கால்களைப் பிண்ணிக் கொள்கின்றன. முன்னெடுத்து சமுதாய குறைகளைக் கலைய நேர்மையான சூழல், அளுமை அமைவது குதிரைக் கொம்பாய் இங்கே.
// பெண் என்பவள் தசையினால் மட்டும் ஆனவள் அல்ல. அன்பு, பரிவு, சினேகம், ஆதரவு என்னும் அற்புதங்களால் ஆனவள் என்பதை அறியாத வரை இந்த மரணச்செய்திகளை நாம் வாசித்துத் தொலைக்க வேண்டியதுதான் போலும்.
பதிலளிநீக்கு//
எவ்வளவு அழுத்தமானக் கருத்து.
செய்தித்தாள்களில் கெளரவக் கொலைகளைப் பற்றிப் படிக்கும் போது இந்தச் சமூகத்தின் மீது கோபம் வருகிறது.
அந்தக் கோபத்தால் என்ன செய்ய முடியும் என்றுதான் தெரியவில்லை.