மக்களை நோக்கி நகரும் திரைப்பட இயக்கம்

 

05

னிக்கிழமை இரவு ஒரு மணிக்கு குற்றாலம் போய்ச் சேர்ந்து, தூங்கிக்கொண்டு இருந்த கருணாவை எழுப்பினோம். கதவைத் திறந்து “ஆஹா... வாங்கய்யா..” என என்னையும், பிரியா கார்த்தியையும் வரவேற்றார். இரண்டு நாட்களாய் மாறி மாறி கூட்டமும், அமர்வுகளும், விவாதங்களும் அவரை அழுத்தியிருக்கும். அதையெல்லாம் உதறி பயிற்சி முகாம் அனுபவங்களை உற்சாகமாய் பேசிக்கொண்டு இருந்தார். எழுந்து நின்று “வாங்க. இப்ப அருவியில யாரும் இருக்க மாட்டாங்க. குளிக்கப் போவம்” என்றார். வெளியில் வருடிக்கொண்டு இருந்த குளிர்ந்த காற்றும், அவரது பேச்சும் புத்துணர்வைத் தந்தன. அதுதான் இப்போது அனைவருக்கும் தேவை. இந்த நேரத்துக்கும் தேவை.

 

திரைப்படங்கள் குறித்து விமர்சித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது அடுத்த அடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கின்றனர். வியாபாரம், பொழுதுபோக்குத்தான் சினிமா என்று ஒரு பக்கம் பெரும்பாலோர் கருத்துக்கு ஆட்பட்டு இருக்கும் சமூகத்தில், ‘சினிமா ஒரு அற்புதமான கலைச்சாதனம், உண்மைகளுக்கு மிக நெருக்கமான வடிவம்’ என்னும் புரிதலோடு அதனை தோளில் தூக்கிவைத்து மக்களை நோக்கிச் செல்வது என்று முடிவு செய்து முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் (தமுஎகச) அதற்கான திட்டமிடுதலோடு களம் இறங்கி வருகின்றனர்.

குப்பைகளாய் கொட்டிக் கொண்டு இருக்கும் தமிழ்த்திரைப்படங்களில் அபூர்வமாக வரும் நல்ல திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது கொடுத்து வந்து கொண்டு இருந்தது தமுஎகச. தங்கள் மேடைகளில் சினிமா குறித்த ரசனையை உயர்த்துவதற்கான உரையாடலைத் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அதன் கலைஞர்கள் ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுப்பதிலும் இறங்கி இருக்கின்றனர். இப்போது நல்ல உலக சினிமாக்களையும், தங்கள் படைப்புகளையும் சேர்த்து மக்களிடம் கொண்டு செல்கிற காரியத்தை துவக்கி இருக்கின்றனர்.

06

கருணா உரையாடுகிறார்

தமுஎகசவுக்கு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தக் கிளைகள் ஒவ்வொன்றும் திரைப்படக் கழகங்களை பதிவு செய்து வருகின்றனர். தமுஎகசவிற்கென்று இப்போது சொந்தமாக பல புரொஜக்டர்கள் இருக்கின்றன. நல்ல திரைப்படங்களை சேகரித்து ‘திரைப்பட வங்கி’ ஒன்று உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. பல மாவட்டங்களை உள்ளடக்கி பகுதி பகுதியாக ‘திரைப்பட இயக்கத்தை’ அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமுஎகசவின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், நாடகக்கலைஞரும், குறும்பட இயக்குனருமான தோழர் கருணா அவர்கள் இதனை ஒருங்கிணத்து நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்த மாதம் 22, 23, 24 தேதிகளில் குற்றாலத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முகாம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதிநாளன்று நிறைவுரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தேன்.

காலையில் பயிற்சி முகாமிற்கு வந்தவர்களை சந்திக்க முடிந்தது. எண்பது பேர் போல வந்திருந்தனர். பாதிக்குப் பாதி வயதானவர்களே இருந்தனர். அதில் எனக்கு வருத்தமே. “என்ன தோழர் இது” என்றேன் கருணாவிடம். “இப்போது பரவாயில்லை” என்றார். ‘மூழ்கும் நதி’ ஆவணப்பட இயக்குனரும், ‘அவள் பேர் தமிழரசி’ இயக்குனர் மீரா கதிரவனும் வந்திருந்தனர். மீரா கதிரவன் முந்தைய நாளின் அமர்வில் உரையாற்றி இருந்திருக்கிறார். ஆர்வத்தினால் திரும்பவும் வந்திருந்தார்.

விவாதங்களில், பலர் பங்கெடுத்துக் கொண்டனர். திரைப்படங்கள் எடுப்பது குறித்து சிலர் பேசும்போது கருணா குறுக்கிட்டு, “இந்த முகாம் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிடுவது குறித்து மட்டுமே” எனறார். திரைப்பட இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்த போதிலும், அவற்றை ஒரு சம்பிரதாயமாகவே உணர்ந்திருந்தது போல எனக்குப் பட்டது. அதுகுறித்துப் பேசுவதென தீர்மானித்துக் கொண்டேன்.

02

 நானும் என் பங்குக்கு..

மிகுந்த அவஸ்தைகளோடு எடுக்கப்படும் ஆவணப்படங்களைச் சொல்லி, அவை மக்களைச் சென்றடையாமல் எங்கோ தூசியடைந்து போவது, நாம் உண்மைக்கும், சமூகத்துக்கும் செய்கிற மாபெரும் துரோகம் என்றேன். இயக்குனர் கதிர் எடுத்த ‘மூழ்கும் நதி’ ஆவணப்படத்திற்காக அவர் மூன்று நாட்கள் குடும்பத்தோடு போலீஸ் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு தொந்தரவுக்குள்ளானதைச்  சுட்டிக்காட்டி, இந்த சிரமங்கள் கேட்பாரற்று போவது யாருக்கு சம்மதம் என்றேன். அற்புதமான உலக சினிமாக்களை நம் தலைமுறை மக்கள் பார்க்காமலேயே ரசனை கெட்டுப் போய் எந்திரனுக்காக பால் குடம் எடுப்பது குறித்து எந்த வருத்தமும் உங்களுக்கில்லையா எனக் கேட்டேன். இப்போது தேவை நமக்கு கோபம். அசிஙகமான, அருவருப்பான, குப்பையான சினிமாவுக்கு எதிரான பெரும் கோபம். பிரம்மாண்டங்களை எதிப்பதும் பிரம்மாண்டமானதே, நாம் பிரம்மாண்டமானவர்கள் என்பதை உணருங்கள் என்றேன். நமக்கென்று மீடியா கிடையாது, நமக்கென்று தியேட்டர்கள் கிடையாது, நமக்கென்று ஆடியன்ஸ் இருக்கிறார்கள், மக்கள்தான் அவர்கள், தெருக்களே நமது தியேட்டர்கள் எனச் சொல்லி, சாத்தூர்த் தெருவில் children of heaven  திரையிட்ட அனுபவத்தைச் சொன்னேன். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஆயிரக்கணக்கில் மக்கள் அந்த ஈரானிய மொழித் திரைப்படத்தை மெய்மறந்து ரசித்தது ஒரு அபூர்வமான அனுபவம். அந்த அனுபவத்தை நிச்சயம் மக்கள் நமக்குத் தருவார்கள், நாம் தான் தயாராக வேண்டும் என முடித்தேன்.

இயக்குனர் மீரா கதிரவன் எழுந்து, “மாதவராஜ் சொல்வதைக் கேட்ட பிறகு எனக்கும் ஒரு ஆவணப்படம் தயாரிக்க வேண்டும்” எனத் தோன்றுகிறது என்றார். “தமிழ்நாட்டில்தான் இது நடைபெறவில்லை. அடூரிலிருந்து எத்தனையோ புகழ்வாய்ந்த இயக்குனர்கள் ஆவணப்படங்களும் இயக்கியிருப்பதை நான் சொன்னேன். “எந்திரன் போன்ற சுனாமிகள் வரத்தான் செய்யும். நாம்தான் இந்த குற்றாலக் காற்றை மருந்தாக மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என இயக்குனர் மீரா கதிரவன் சொன்னபோது அனைவரும் ஆரவாரித்தனர். பயிற்சி முகாமுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் எழுத்த்தாளர் தமிழ்ச்செல்வனின் ‘வாளின் தனிமை’ சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தனர். ஒரு இளைஞர் அருகில் வந்து அதில் கையொப்பம் இட்டுத்தர கேட்டார். ‘ஒன்றே வாளின் சட்டம். கூராயிருந்தால் வெட்டும்’ என எழுதிக் கொடுத்தேன்.

 

சாயங்காலம் திரும்பி வரும்போது இந்தத் திரைப்பட இயக்கம், அதன் உண்மையான அர்த்தத்தில் நகருமானால் எப்படி இருக்கும் என கனவு காணத் துவங்கினேன். மலைகள் என் கூடவே வந்து கொண்டு இருந்தன.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நல்ல முயற்சி அண்ணே.. முதலிலேயே சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போம்ல..

  பதிலளிநீக்கு
 2. //“வாங்க. இப்ப அருவியில யாரும் இருக்க மாட்டாங்க. குளிக்கப் போவம்” //
  ஆஹா! சூப்பரா இருந்திருக்குமே. பொறாமையா இருக்கு. :)

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு!!!

  முடிந்தால் என் பதிவை பாருங்கள்!!!

  பதிலளிநீக்கு
 4. முகாமுக்கு சென்று வந்தவர்கள் உற்சாகமாக
  உள்ளனர். அருமையான முயற்சி.மூன்று நாட்கள்
  உழைப்பு வீண்போகாது.வெல்லும்.

  பதிலளிநீக்கு
 5. தமுஎகச வின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.....

  ஏற்கனவே தமிழில் வருகின்ற நல்ல சினிமாவிற்கு விருது வழங்கிவருவது அந்த இயக்குனர்களுக்கு மேலும் சிறப்பான திரைப்படத்தை இயக்க முயற்சி எடுப்பார்கள். பசங்க,பேராண்மை, இரும்புகோட்டை முரட்டுச்சிங்கம் என நல்ல படங்களுக்கும் அதன் இயக்குனர்களுக்கும் பாராட்டுவிழா நடத்தியது மிகவும் தேவையான ஒன்று.

  பதிலளிநீக்கு
 6. நல்ல முயற்சி. வாசிக்க மகிழ்வாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. குறும் படங்கள், ஆவணப் படங்கள் வெற்றி /பிரபலம் அடையாமல் இருக்க இன்னும் ஒரு முக்கிய காரணம்.
  இந்த படைப்பாளிகள்/கலைஞர்கள் இடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது.
  ஒருவருக்கு ஒருவர் இணைந்து எப்படி சிறப்பாக படம் எடுப்போம் என்று சிந்திக்காமல், ஒருவர் எடுத்த ஆவணப் படத்தில் குறைகள் கண்டு பிடிக்கவே தன் வாழ் நாளை வீண் அடிக்கிறார் மற்றொரு ஆவணப்[ பட இயக்குனர்.

  சிற்றிதழ்களின் தோல்வி போலவே ஆவணப் படங்களின் வளர்ச்சியின்மைக்கும் , ஒற்றுமையின்மையே காரணம்.

  பதிலளிநீக்கு
 8. கார்த்திகைப் பாண்டியன்!
  மன்னிக்கவும் தம்பி. இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குச் சொல்வேன்.

  தீபா!
  :-))))

  பொன்ராஜ்!
  படித்தேன். இப்படியெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டாயா!


  கணேசன்!
  மிக்க சந்தோஷம். அந்தப் பொறியை பெரிதாக்குங்கள்.


  ஹரிஹரன்!
  ஆமாம் தோழர். இது அடுத்தக்கட்ட முயற்சி.


  சுரேஷ் கண்ணன்!
  நம் கனவுகள் வசப்படுமானால்,பெரும் சந்தோஷம்தான்.

  பதிலளிநீக்கு
 9. ராம்ஜி யாஹூ!
  சிற்றிதழ்களுக்கும், ஆவணப்படங்களுக்கும் ஒப்பிட்டது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் இவைகளின் தோல்விக்கு ஒற்றுமை, ஒற்றுமையின்மை என்கிற புதுவிளக்கம் தந்திருப்பதுதான் சரியாகத் தெரியவில்லை. வணிகப்பத்திரிகைகளும், வணிக சினிமாக்களும் தங்களுக்குள் இருக்கிற ஒற்றுமையினால்தான் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனவா.

  இந்த அமைப்பு வணிகரீதியானது. அதனைச் சீண்டாத, மேம்போக்கான விஷயங்களையே ஆதரிக்கும். அவைகளையே பிரதானப்படுத்தும். சிற்றிதழ்களும், ஆவணப்படங்களும் இந்த அமைப்பை பல விதங்களிலும் கேள்விக்குள்ளாக்குபவையாக அதன் உள்ளடக்கத்தில் இருக்கின்றன. பெரும் போராட்டத்தோடு அவை தங்களை வெளிக்கொண்டு வரமுடியும். அது மெல்ல மெல்லத்தான் சமூகத்தில் செல்வாக்கை உருவாக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 10. கருணா!
  தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள மாது, நீங்கள் வருவதற்கு முதல் நாள் பயிற்சி முகாமில் உரையாற்றிய என் போன்றவர்களையும், அதற்கும் முதல் நாள் உரையாற்றிய சிவக்குமார் போன்ற மற்றவர்களையும் பற்றிக் குறிப்பிட்டால் உங்கள் ஒளிவட்டத்தில் சற்றுக் குறைந்துவிடுமா என்ன?

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீரசா!
  அய்யய்யோ. மன்னியுங்கள் தோழா. தாங்களும், சிவகுமார் அவர்களும் வந்திருந்தது குறித்துச் சொன்னார்கள். தாங்கள் என்ன பேசினீர்கள், என்ன உரையாடல் நடந்தது போன்றவைகளை அறியவில்லை. அதனால்தான் அதனைச் சொல்லவில்லை. ஆனாலும் தங்கள் பெயர்களை நிச்சயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

  இயக்கத்தின் செயல்பாட்டை வெளிக்கொண்டு வருவதுதான் என் நோக்கம். எனக்கொன்றும் ஒளிவட்டம் எதுவுமில்லை. தேவையுமில்லை.

  பதிலளிநீக்கு
 13. வரவேண்டியதை சொன்ன நீ ...
  வந்ததை சொல்வில்லையே ...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!