பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 1

 

 

பார்க்கிறபோதெல்லாம் அப்போது படித்த ஒரு நாவலுக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறவராக என் தோழன் மணிமாறன் இருப்பார். தமிழ் இலக்கியப் பரப்பின் கதைகளை தொடர்ந்து வாசித்து வந்தாலும், அது குறித்த கருத்துக்களையும், உரையாடல்களையும் காற்றிலே கரைத்துக் கொண்டு இருந்த மனிதன் அவர். என்னமோ நேர்ந்து, அவை குறித்த தனது குறிப்புகளை இப்போது தீக்கதிர் பத்திரிகையின் இலக்கியச்சோலையில் எழுத ஆரம்பித்திருக்கிறார். சந்தோஷமாயிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் வெளிவந்து, அவர் வாசித்த நாவல்கள் குறித்து பகிர்ந்துகொள்ளத் துணிந்திருக்கிறார். கேட்போம்.....

bookmark 1. நாவலெனும் விசித்திரம்!
ம.மணிமாறன்

 

புத்தக வாசிப்பு குறித்து பேசுவது என்கிற நினைப்பே எனக்குள் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகிறது. எப்போதிருந்து இது துவங்கியிருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் எங்கள் ஊர் பொட்டலில் சோவியத் புத்தகக் கண்காட்சி நடக்கும். புத்தகம் வாங்க கையில் காசு இருக்காது. மெருகு குலையாத அதன் தோற்றத்தைக் காண்பதற்கும், பொங்கிப் பெருகும் புத்தக வாசத்தை நுகர்ந்திடவெனவே நான் அங்கு போவேன். அந்த நொடியிலிருந்தே புத்தகங்களின் மீதான பெரும் விருப்பம் எனக்குள் முளைவிடத் தொடங்கியிருக்கும் என்று தோன்றுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை உடலின் ஒரு பாகத்தைப் போல புத்தகம் என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. நவீன வாசகன் தனக்கும், புத்தகத்துக்குமான உறவினைக் குறித்து எழுதிப் பார்த்தால் சுவாரஸ்யமான நாவல் கூட உருவாகலாம்.

புத்தகங்கள் விதவிதமான வடிவிலானவை. தன் கல்குதிரையை எழுத்தாளர் கோணங்கி பலவடிவில் விதவிதமாக உருவாக்கிப் பார்க்கிறார். ஒரே தன்மை நம்முள் ஏற்படுத்தும் அயர்ச்சியில் இருந்து மீளவேண்டும் என்கிற எண்ணமே இதற்கு காரணம். நமக்குக் கிடைக்கும் மின் புத்தகம் வட்டவடிவம். கணினித் திரையில் அது செவ்வக வடிவில் காணக் கிடைக்கிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புத்தகம் உண்டு என்பதைப்போல ஒவ்வொரு புத்தகமும் தன் வாசகனை கண்டடைவதைத் தவிர வாசகனுக்கும், புத்தகங்களுக்கும் வேறு மார்க்கம் இனியில்லை.

அக்கறையான கருத்தியல் தளத்தில் இயங்குபவர்களின் தனித்த ஆயுதம் புத்தகம் மட்டுமே. உலகம் முழுமையும் இடதுசாரிகள், வலதுசாரிகள், முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் ஆத்திகம், நாத்திகம், மூடநம்பிக்கை, விழிப்புணர்வு என வகைப்படுத்தப்பட்ட நேரெதிரான கோட்பாடுகளுக்கும் கூட தன் கருத்தைப் பிரபலப்படுத்த புத்தகங்களைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

அழகியல், மன அழுக்குகளை அகற்றும் அருமருந்து என விதவிதமான காரணங்களை தன் எழுத்திற்கான காரணம் என்று எழுத்தாளர்கள் அடுக்கினாலும் நிச்சயம் எழுத்து என்பது, குறித்த நோக்கத்துடன் தான் செய்யப்படுகிறது. கட்டுரையாக இருந்தாலும், புனைகதையாக இருந்தாலும் யாவற்றிற்கும் அவற்றிற்கேயான தனித்த குணங்களோடு உரிய நோக்கமும் உண்டு என்பதை அதனைக் கற்றுணர்கிற வாசகனால் எளிதில் உணரமுடியும். ஏன் புத்தகங்கள் படிக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு நிச்சயம் நமக்கு ஒற்றைப் பதில் கிடைக்கப்போவதில்லை. இதுகாறும் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒற்றைத் தன்மையை அழித்து எழுதி பன்மைத்துவத்தை முன் வைக்கும் கூர்மையான ஆயுதம் புத்தகம். இப்படிப்பட்ட புத்தகங்களுக்குள் உறைந்து கிடப்பவற்றுள் நாவல் எனும் இலக்கிய வகைமைக்கும் தனித்த குணம் உண்டு.

நாவல் என்றால் என்ன? நாவல் ஏன் எல்லா மொழியிலும் வியந்தோதப்படுகிறது. நாவலின் வடிவம் எப்படியிருக்கலாம். இவை குறித்து எல்லாம் இந்த அறிமுகக் கட்டுரையில் விளக்கிட முடியுமா? என்று தெரியவில்லை. தொடர்ந்து வர இருக்கிற இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் நாவல்கள் சிலவற்றைப் பற்றிய என்னுடைய அபிப்ராயத்திற்கு பிறகு வாசகர், அவரளவில் ஒருவிதமான முடிவிற்கு வர வாய்ப்புண்டு என்று மட்டும் தோன்றுகிறது.

தமிழின் தலைநாவலான பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு முன்பே தமிழ்மக்களுக்கு கதைகளோடும், புத்தகங்களோடும் பெரும் தொடர்புண்டு. கூட்டாக அமர்ந்து ஒருவர் பாராயணம் வாசிக்க, மற்றவர் கேட்பது இன்றைக்கும் தென்தமிழகத்தின் கிராமங்களில் ஒரு சடங்கைப்போல நிகழ்த்தப்படுகிறது. அச்சு இயந்திரங்களுக்குப் பின்னான நாட்களில் எல்லா இலக்கிய வகைமைகளைப் போலத்தான் நாவலும் தமிழ்ப் புலத்திற்கு அறிமுகமானது.

தமிழில் மொத்த இலக்கிய செயல்பாட்டின் விவாதப் பொருளாக எழுத்துகளில் கவிதை இருந்ததைப் போல தொண்ணூறுகளில் இருந்து சற்றேறக்குறைய இன்று வரை நாவலே இருந்துவருகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை தன் நாவலின் வழியாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறான். இப்போது சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும் நவீன எழுத்தாளன் தான் அடையவேண்டிய உயர்ந்த பீடமென நாவலாசிரியன் எனும் பதத்தையே தனக்குள் கனவாக காண்கிறான். எனவே இலக்கியத்திற்குள் தன்னை சட்டாம் பிள்ளையாகப் பாவித்துக் கொண்ட எழுத்தாளர்கள் இருவர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழில் நாவலே இல்லை என தமிழ் நிலமெங்கும் அரற்றிக் கொண்டிருந்தனர். அதுவரை தான் வாசித்துப் பிரமித்திருந்த மோகமுள்ளும், பஞ்சும் பசியும், கோபல்ல கிராமமும் நாவல் இல்லையா என என்னைப் போன்ற வாசகர்களை அதிர்ச்சியுறச் செய்வது மட்டும் அவர்களின் நோக்கமல்ல. அவர்கள் அடுத்த வருடத்தில் எழுதப்போகும் நாவலுக்கான வாசக மனதைத் தயாரிப்பதற்கான திட்டமிடலே என்பதை யாவரும் அறிந்தனர். விஷ்ணுபுரமும், உபபாண்டவமும் வாசகக் கவனம் பெற்றதற்கு பிரதியின் வல்லமையைத் தாண்டி அரசியலும் இருந்தது என்பதே நேர்மையான வாசக மதிப்பீடாகும். அதற்கு முன் உருவாக்கப்பட்ட நாவல்கள் எல்லாம் நாவலுக்கான முயற்சிகளே என்றால், நாவல் என்பது என்ன? என்ற கேள்வி நம்முள் எழத்தான் செய்கிறது.

இந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த இலக்கிய வடிவமே நாவல். காவியங்களின் போதாமையைச் சரி செய்யத் தோன்றிய இலக்கிய வடிவம் இது. காவியங்களின் கச்சிதமான கதையாடல் நல்லதுக்கும் கெட்டதுக்குமான யுத்தம். முடிவில் நல்லது வெற்றி பெறும் என்கிற நேர்கோட்டு வடிவிலானது. இக் கதையாடலைக் கலைத்துப் பார்த்த அ-நேர்கோட்டு எழுத்தியலே நாவலைக் கட்டமைத்தது. காவியத்தில் வாசகனுக்கு பார்வையாளன் என்பதைத் தாண்டி வேறு எந்த இடமும் இல்லை. ஆனால் பின் நவீனத்துவ நாவல்கள் வாசகனின் பங்கேற்பைக் கோருகின்றன. எனவேதான் காவியங்களால் எட்டமுடியாத மாபெரும் உயரத்தையும் எட்டுகிற இலக்கிய வகைமை நாவல் என்கிற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்தடைந்தனர்.

நாவலின் கலைவடிவம் தத்துவம். சகல நாவல்களுக்குள்ளும் கலை ரீதியிலான விவாதம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவமின்றி நாவல் இல்லை. ஒரு சமூகத்தின் கூட்டுவிவாதத்தின் கலைரீதியான மாபெரும் வெளிப்பாடே நாவல். எல்லாவற்றையும் வரலாற்றின் முன் நிறுத்தி விசாரிக்கும் விஸ்தாரமான வெளிப்பாட்டு வடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது.

ருஷ்யப் பேரிலக்கியங்களின் வாசம் நுகராத வாசகர் தமிழில் எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இது தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல. உலகின் எந்த மொழியிலும் நாவல் எழுதிட முயற்சிக்கும் எழுத்தாளனுக்கு இலக்கியப் பேராசான்கள் டால்ஸ்டாயும், தஸ்தா வெஸ்கியுமே ஆதர்சங்கள். கார்க்கியின் ‘தாய்’, சோவியத் பேரிலக்கியங்களான ‘வீரம் விளைந்தது’, ‘முதல் ஆசிரியன்’, ‘கண்தெரியாத இசைஞன்’, ‘மண்கட்டியைக் காற்று அடித்துப்போகாது’ என ஏதோ ஒரு ருஷ்ய இலக்கியமே நம்மில் பலரும் படித்த முதல் நாவலாக இருந்திருக்கும். எழுத்தாளர்கள், வாசகர்களின் நாவல் குறித்த பார்வையை வடிவமைத்ததில் ‘போரும் அமைதியும்’, ‘புத்துயிர்ப்பு’, ‘குற்றமும் தண்ட னையும்’, ‘இடியட்’, ‘கரம்சோவ் சகோதரர்கள்’ போன்ற நாவல்களுக்கு பெரும் பங்கு உண்டு.

நாவலுக்கு எவரையும் வசீகரிக்கும் பேராற்றல் உண்டு என உறுதியாக நம்புகிறேன். விதவிதமான வடிவங்களில் என்னிடம் ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யின் பிரதிகள் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் அதை வாங்கிடும் பழக்கம் இன்று வரை எனக்குள் இருக்கிறது. ‘நீலகண்ட பறவையைத் தேடி’ எனும் வங்க நாவலைப் படித்த நிமிடங்களின் பரவசத்தின் ரேகை இன்றுவரை என்னில் பத்திரமாயிருக்கிறது. ஷெல்மாலாகர் லேவின் ‘மதகுரு’வை படிக்காமல் போயிருந்தால் என் வாசிப்பில் பாரதூரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. வாசகனை நுட்பமானவனாக்குவதில் வேறு எந்த வடிவத்தையும்விட நாவலுக்கு பேராற்றல் உண்டு என எளிய வாசகன் என்ற முறையில் நான் உறுதியாக நம்புகிறேன்.

நிகழ்ந்து கொண்டிருப்பது இரண்டாயிரத்திற்கு பிறகான காலம் என வைத்துக் கொண்டு. இக்காலத்தில் தமிழில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய நாவல்கள் குறித்த என்னுடைய அபிபராயத்தை சகவாசகனோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். கிட்டத் தட்ட பட்டியலிட்டால் நூறு நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் எதைப் பொருட்படுத்தி வாசிப்பது, விவாதிப்பது என்கிற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

கா.நா.சுவும், வெங்கட்சாமிநாதனும் அக்கறையுடன், அழகியல் கூறுகளை நெஞ்சில் தாங்கி எனக் கூறிக் கொண்டு பட்டியலிட்டதிற்குள் உள்ள அரசியலை யாவரும் அறிவர். புறக்கணிப்பின் துக்கத்தைச் சுமந்தலைந்த எழுத்தாளர்களின் படைவரிசை நீளமானது. அதற்காக என்னுடைய முன்வைப்பில் அரசியலே இல்லை என்று நான் பொய்சொல்ல விரும்பவில்லை.

மறுக்கப்பட்டவர்களின் குரலைப் பதிவு செய்த நாவல்களை வாசகனின் பார்வைக்கு முன்வைக்கிறேன். எந்த முன்முடிவுகளுடனும் கட்டுரையை அணுக வேண்டாம். திறந்த மனதுடன் கட்டுரையைப் படியுங்கள். கட்டுரையில் கவனப்படுத்தப்பட்ட நாவலைத் தேடிப் படியுங்கள்.

வாசகனும், புத்தகங்களும் சந்தித்துக் கொள்ளும் புதிர் விளையாட்டின் கருவியான எழுத்தாளன் அப்போது சந்தோசம் கொள்வான். சந்தோசம் கொள்ளச் செய்யுங்கள் சகவாசகனான அவனை...

(இன்னும் கேட்கலாம்...)

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அரிய சுவாரஸ்யமான தகவல்கள், நன்றிகள்,இன்னும் அதிகம் பகிரவும்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் மாதவராஜ்

    எனக்கு இது போன்ற பதிவுகள் மிகவும் உவப்பு. மேலும் இது போல நிறைய தகவல்களைப் பகிரவும்.

    இப்போது இந்தப் பதிவில் சொல்லப்பட்ட புத்தகங்களைத் தேடித் பிடித்து வாங்குவேன்.

    ஒரு விஷயம். புயலிலே ஒரு தோணி நாவலின் பிரதியைப் பலமுறை வாங்கியதாக சொல்லி இருக்கிறார். நானும் அது போல நிறைய செய்திருக்கிறேன் ! வேறு சில நாவல்கள் !

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. //அழகியல், மன அழுக்குகளை அகற்றும் அருமருந்து என விதவிதமான காரணங்களை தன் எழுத்திற்கான காரணம் என்று எழுத்தாளர்கள் அடுக்கினாலும் நிச்சயம் எழுத்து என்பது, குறித்த நோக்கத்துடன் தான் செய்யப்படுகிறது. கட்டுரையாக இருந்தாலும், புனைகதையாக இருந்தாலும் யாவற்றிற்கும் அவற்றிற்கேயான தனித்த குணங்களோடு உரிய நோக்கமும் உண்டு என்பதை அதனைக் கற்றுணர்கிற வாசகனால் எளிதில் உணரமுடியும்.//

    thanks for sharing.

    பதிலளிநீக்கு
  4. அருமையாக உள்ளது. வெறும் கதைப் புத்தகங்களாக பார்த்தவற்றின் வரலாற்றை அறிவது சுவாரசியம்தான்!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பார்வை வாழ்த்துக்கள்.... சகோதரா...

    பதிலளிநீக்கு
  6. ஒரு நாவல் மீதான விமர்சனம், மதிப்பீடு செய்யும் போது, ஏன் அந்த நாவலாசிரியரைப் பற்றியும் சேர்த்து மதிப்பீடு செய்யப் படுகிறது?

    சமீபத்தில் வந்த ஒரு எழுத்தாளர் அவர்களின் மீதான விமர்சனங்களைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் வருத்தமாகத் தான் இருந்தது. இறந்து போன ஒரு எழுத்தாளனை தர குறைவாக விமர்சனம் செய்யும் அளவிலா ஒருவருது எழுத்துக்கள் மதிப்பீடு செய்யப் படுகிறது. நமது கோர்ட் கூட இறந்தவர் மீதான வழக்குகளை எதுவும் தீர்ப்பு கூறாமல் முடித்து விடும்.

    நான் அவரது படைப்பை படித்தது கிடையாது. ஆனால் 25 வருடம் முன்பு அவர் எழுத்துக்களை மிக நல்ல முறையில் மக்கள் முன் பலர் அறிமுகப் படித்தியதாக ஞாபகம். இப்போது சரிவர நினைவு இல்லை. லீவ் தட் அபார்ட்.

    ஒரு மனிதன் தனது 20 வயதிலிருந்து 30 or 35 வயது வரை, பிறர் எழுதிய நாவல், இலக்கியங்களைப் படித்து, அந்த சமயத்தில் நிலவும் சமுக அரசியல் சூழ்நிலைகளை பார்த்து புரிந்து கொண்டு தனது அறிவு மற்றும் திறமையை வளர்த்துக் கொள்கிறான். இதை ஒரு ட்ரைனிங் period என்று எடுத்துக் கொள்ளலாம்.

    தனது 35 லிருந்து 50 அல்லது 60 /65 வரை, தன் சொந்தக் காலில், சுய சம்பாத்தியத்தில் வாழும் போது, அவர்களது எழுத்தும் படைப்பும், அப்பொழுது நிலவும் சமுக மற்றும் அரசியல் நிலையை பொறுத்து , மிகத் தெளிவாக, அழுத்தம் மிக்க மிக நல்ல படைப்புகள் வெளி வரும் தருணம். பல எழுத்தாளர்கள் இக்கால கட்டத்தில் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் பொருட்டு நல்ல நாவல்கள் வெளியிட்டு இருப்பார்.

    அதே மனிதன் 60 /70 வயதிற்கு மேல் தன் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் போது, அதுவும் பிற மண்ணில் வாழும் போது, அம்மண்ணின் நிகழ்வுகள் குறித்தும், தான் வாழ்ந்து வந்த பாதையை விட வேறு ஒரு வித்தியாசமான உலகைப் பார்க்கும் போது, அந்த கால கட்டத்தில் அவர்களது எழுத்தும் படைப்பும் வித்தியாசமாகத் தான் இருக்கும்.

    ஆதலால் நான் முதலில் கேட்ட கேள்வியையே கேட்கிறேன்.
    ஒரு நாவல் மீதான விமர்சனம், மதிப்பீடு செய்யும் போது, ஏன் அந்த நாவலாசிரியரைப் பற்றியும் சேர்த்து மதிப்பீடு செய்யப் படுகிறது?

    இதற்கு எஸ்.வீ.வேணுகோபாலன், மற்றும் பலரது கருத்துகளையும் கேட்க விரும்பகிறேன்.

    சொல்வீங்களா? திருப்பி வாதாட அல்ல. அறிந்து கொள்வதற்கு.

    பதிலளிநீக்கு
  7. மணிமாறன் அவர்களின் எழுத்தை இலக்கியச்சோலையில் தொடர்ந்து வாசிக்கிறேன். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தோழர்கள்.கே.முத்தையா,என்.சங்கரய்யா போன்றோர் ஊன்றிய விதைகள் மரமாகி பழுக்க ஆரம்பித்து விட்டது.த.மு.எ.ச நடத்திய நாவல் பொட்டியில் பரிசு பெற்றவர்தான் இந்த மணிமாறன் என்று நினைக்கிறேன். சிறு பையனாக அப்போது அறிமுகம். அதன் பிறகும்.பலமுறை சந்தித்திருக்கிறெண்.
    விஷ்ணுபுரம் படிக்கவில்லை. உப பாண்டவம் படித்திருக்கிறேன்.அருமையான படைப்பு. மணிமாறனுக்கு வித்தியாசமான கருத்து. அவருடைய கட்டுரைத்தொடர் முழுமையடைந்ததும் எழுதுவேன் வாழ்த்துக்கள் மணிமாறன்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  8. சுவாரஸ்யமான தகவல்கள், நன்றிகள்

    பதிலளிநீக்கு
  9. தோழர் காஸ்யபன்!
    த மு எ ச நடத்திய நாவல் போட்டியில் "ஓரடி முன்னால்" என்ற நாவலை எழுதியவர் தோழர் ஒவியர் மணிவண்ணன். 1993 ஆம் ஆண்டு விருதுநகரில் நடத்தப்பட்ட கலை இலக்கிய இரவில் அந்த நாவல் வெளியிடப்பட்டது. மறைந்த தோழர் மீராவின் அகரம் வெளியீடாக மலர்ந்தது அந்த நாவல். அதன் பிரதிகளை நேரில் வாங்க நான் சிவகங்கை சென்ற போது மீரா கூறிய வார்த்தைகள் மறக்கவொண்ணாதது. "மணிவண்ணனை நிறைய எழுதச்சொல்லுங்கள்" என்பதுதான் அவரது வேண்டுகோளாக இருந்தது.
    இந்த மணிமாறன் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் விருதுநகர் மாவட்ட முன்னோடி. கணிதப்பாடத்தில் முதுகலை படித்திருப்பவர். பாண்டி அறிவொளி பூஸ்டர் ஜாதா மற்றும் பி ஜி வி எஸ் எழுத்தறிவுக்கலைப்பயணங்களில் முதன்மைப்பங்கெடுத்தவர்.அறிவொளியின் விருதுநகர் கிராமப்பகுதியின் திட்ட அலுவலராகப்பணியாற்றியவர் (அனேகமாக நானும் அனைத்துப்பணிகளிலும் கூடவே இருந்திருக்கிறேன்) தற்சமயம் முஸ்லிம் மேனிலைப்பள்ளி சிவகாசியில் பணியாற்றி வருகிறார்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!