அதென்ன கள்ளக்காதல்?

 

12

சில வார்த்தைகள் மட்டும் இல்லாவிட்டால் நமது ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் கதியற்று, மூச்சுமுட்டித்தான் போகும் போலிருக்கிறது. அந்த வார்த்தைகளுக்குள் லேகியச் செய்திகளை அடைத்து அடைத்து விற்றுத் தீர்த்து ‘நம்பர் ஒன் நாளிதழ்’ என்றோ, ‘செய்திகளை உடனுக்குடன் தருவது’ என்றோ மார்தட்டிக் கொள்கின்றன. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும், கற்பிக்கப்படும் தவறான புரிதல்களும் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அதிலும், இந்த ‘கள்ளக்காதல்’ என்னும் வார்த்தைப் பிரயோகம் இருக்கிறதே, ஐயய்யோ... உலகமே அதில்தான் சுற்றிச் சுழல்வதாய் பக்கத்துக்குப் பக்கம் கொட்டிக் கிடக்கிறது.

கள்ளப்பணம், கள்ளக்கடத்தல் என்பதுபோல் காதலுமா. காதல் என்றால் அன்பு. குறிப்பாக ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. அப்படித்தான் பொதுவாக சொல்லப்பட்டு இருக்கிறது. அன்பிலுமா கள்ளத்தனம்? அப்படியானால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

இந்தக் கேள்வியை, கூகிள் பஸ்ஸிலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்ட போது, நண்பர்கள் சமூகம் விதித்த ஒழுங்குகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் மாறான காதல் என்றும், ஒருவரோடு உறவு வைத்துக்கொண்டே இன்னொருவரோடு உறவு வைத்துக்கொள்வது எனவும் தங்கள் புரிதல்களைச் சொன்னார்கள்.

சமூகம் நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கும்  பொதுப்புத்தியில் இருந்தே கருத்தாக்கங்கள் வெளிப்படுகின்றன. ‘கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக் கொலை’, ‘மாயமான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏரிக்கரையில் பிணமாகக் கிடந்தார் - கள்ளக்காதல் காரணமா?’, ‘கள்ளக்காதலோடு இளம்பெண் ஓட்டம்’ என்று எத்தனை எத்தனை சம்பவங்கள் நம் மண்டைக்குள்ளும், நரம்புக்குள்ளும் ஏற்றிவைக்கப்படுகின்றன. இந்தச் செய்திகளின் வரிகளுக்கு இடையில் உடல் இச்சை கொண்ட ஒரு ஆணையும், பெண்ணையும் சேர்த்தே நாம் வாசிக்குமாறு பழக்கி வைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உடல் இச்சைதான் ‘கள்ளக்காதல்’ என்பதாக நமக்குள் பொறி தட்டுகிறது.

உடல் இச்சை காரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஆண், பெண் உறவுகளின் சிக்கல்களை அறிவதையோ, புரிவதையோ விட்டு ஒற்றை வரியில் எல்லாவற்றையும் உடல் இச்சை என்று  முடிவு கட்டும் அல்லது தீர்ப்பு வாசிக்கும் சொல்லாக இருக்கிறது  இந்தக் ‘கள்ளக்காதல்’. காதலின் வழியாக ‘கள்ளக்காதலின்’ அர்த்தம் காணாமல், ‘கள்ளக்காதல்’ வழியாக காதலின் அர்த்தம் காணும் அளவுக்கு நாம், இந்த வார்த்தைப் பிரயோகங்களுக்குள் ஊறித் திளைத்துப் போயிருக்கிறோம். அதுதான் காதல் என்றால் மேலோட்டமாக ஒன்றையும், ஆழத்தில் வேறொன்றையும் வைத்திருக்கிறோம்.

செம்மீன் படத்தில், வேறொருவனுக்கு மனைவியான கருத்தம்மாவின் நினைவில் பரீக்குட்டி பாடும் ‘மானஸ மைனே வரு, மதுரம் நுள்ளித் தரு, நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே’வில் உருகிப்போகிறோம். சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலா நாவலில், இராணுவத்துக்குச் சென்ற கணவனையும் அவனது குடும்பத்தையும் விட்டு, ஸ்தெப்பிப் புல்வெளியில் தானியாரோடு ஜமீலா செல்வதை இரு பறவைகளின் அழகாகப் பார்க்கிறோம். அதே நாம்தான் தினசரிகளில் செய்திகளைப் படித்து முகம் சுளிக்கிறோம் அல்லது கீழ்த்தரமாக ரசிக்கிறோம். இது விநோதம் இல்லையா?

கள்ளமழை என்றோ, கள்ளக்காற்று என்றோ யாரும் சொல்வதில்லை. காதல் அந்த வகை.  மற்றது வேறு வகை.

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான புரிதல் மாதவராஜ்.
    /அதுதான் காதல் என்றால் மேலோட்டமாக ஒன்றையும், ஆழத்தில் வேறொன்றையும் வைத்திருக்கிறோம்./

    ப்யூட்டிஃபுல். மம்முட்டியின் ஒரே கடல் பார்த்திருக்கிறீர்களா மாதவராஜ். :). அகநாழிகை பதிவில் சுட்டியிருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. [[[செம்மீன் படத்தில், வேறொருவனுக்கு மனைவியான கருத்தம்மாவின் நினைவில் பரீக்குட்டி பாடும் ‘மானஸ மைனே வரு, மதுரம் நுள்ளித் தரு, நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே’ பாடலில் உருகிப் போகிறோம். சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலாவில், இராணுவத்துக்குச் சென்ற கணவனையும் அவனது குடும்பத்தையும் விட்டு, ஸ்தெப்பிப் புல்வெளியில் தானியாரோடு ஜமீலா செல்வதை இரு பறவைகளின் அழகாகப் பார்க்கிறோம்.]]]

    உதாரணம் காட்டுவதற்கு தமிழ்ப் படங்களே கிடைக்கவில்லையா..? இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

    பதிலளிநீக்கு
  3. வானம்பாடிகள் சார்,
    ரொம்ப நன்றி.

    நீங்களும் மலையாளப்படத்தையா சுட்டிக்காட்ட வேண்டும். உண்மைத்தமிழன் வருத்தப்படப் போகிறார்.:-)))


    உண்மைத்தமிழன்!

    தமிழ்ப்படங்களை நீங்களே சொல்லியிருக்கலாமே. :-)))
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. dear madhu

    ungal parvaithan sariyana parvai.

    silar thittuvargalo enru bayamaga irukkirathu.

    balu vellore

    பதிலளிநீக்கு
  5. வழி தவறிப் பாயும் வெள்ளம்..............அந்த வழி முறையை யார் நிர்ணயிப்பது ... சமூகம் தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. மாது சார் நீங்கள் ஒரே கடல் பார்த்தேயாக வேண்டும்

    :)

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான கருத்தை வைத்துள்ளீர்கள்..

    இஅதை பற்றி பேசவே நிறைய ஆழ்ந்த புரிதல் தேவைப்படும்..


    மேலோட்டமாக பார்ப்பவர்க்கு மட்டுமே இவை காமம் சார்ந்தவை..


    இதை பணமாக்கிக்கொள்ளும் சில எழுத்தாளர்களும் ஊடகமும் என்பது பரிதாபம்..

    எந்த ஒரு துணையும் உறவு கொள்ளும் போது தன் துணையை மட்டுமே மனதில் நினைக்கிறான்/ள் என்று யாராகிலும் உறுதியாக சொல்ல முடியுமா?..


    நல்லதொரு விவாதத்தை எடுத்துள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  8. சிந்துசம வெளி அருமையான கரு கொண்ட படம்.. ஆனால் கமர்ஷியலுக்காய் அசிங்கப்படுத்திவிட்டார்கள்..


    காமம் என்பது இயற்கை.. சூழல் அமைவதும் தவறுகள் நடப்பதும் அதே காரணம்..

    ஆனால் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை மிக அழகான காவியமாய் செதுக்க வேண்டியதை சொதப்பி கீழ்தர படைப்பாக அப்பாவி மகன் கொலை செய்ய வைத்து ஆயுசுக்கும் அவன் மனதுக்கு தண்டனை வழங்கி , கண்ராவி ஆக்கிவிட்டனர்..

    பதிலளிநீக்கு
  9. மாதவ்ஜி! உங்களிடம் இதனைச் சொல்ல சங்கடமாக இருக்கிறது.பயம், கோபம்,பசி.தூக்கம்,என்று பல உணர்வுகள் போன்று காதலும் ஒரு உணர்வுதான்.(அம்மு கம்பை எடுத்துக் கொடுக்க நீங்கள் அடிக்க வந்துவிடாதீர்கள்).பெரியார் இது பற்றி மிக அருமையாக எழுதி உள்ளார். அவர் மிகப்பெரிய சிந்தனையாளர் என்பதை காதல் பற்றிய அவருடைய எழுத்துக்கள் பறைசாற்றும்.தூக்க உணர்வில்,கோப உணர்வில் என்ன புனிதம் இருக்கமுடியும?அதேபோன்றுதான் காதலும்.அது என்ன தெய்வீகக் காதல் --புடலங்காய்?.டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் இது பற்றி நமக்கு புரியவக்கலாமே!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல அலசல்...

    காதலில் ஒரே ஒரு வகை தான். அது தானே உங்கள் வாதம். அது சரி தான்.

    என்றும் எப்போதும் அன்புடன்,

    ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!

    பதிலளிநீக்கு
  11. தோழர் காஸ்யபன்!

    நான் காதலை புனிதம் என்றோ, தெய்வீகம் என்றோ இங்கு முன்வைக்கவில்லை.அதில் எனக்கு சம்மதமுமில்லை.

    உடல் இச்சை என்பது பசி, தூக்கம் போன்ற ஒரு உணர்வாக இருக்கலாம். காதல் அதையும் சேர்த்து விரிவானது, இன்னும் அர்த்தம் கொண்டது என நினைக்கிறேன்.

    அதனோடு ’கள்ள’ என்னும் அடைமொழி சேர்க்கப்படுவதில்தான் எனக்கு கேள்வியும், முரண்பாடுகளும். காதலை, வெறும் உடல் இச்சை மட்டும் சார்ந்ததாகவே கருத வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. தோழர் மாது!
    தனிச்சொத்துடமையின் வெளிப்பாடுதான் ஒருவனுக்கு ஒருத்தி,இந்தக்காதல் அதை அடியொற்றி முதலாளித்துவ ஊடங்களின் பார்வையினின்றும் வெளிப்படும் கள்ளக்காதல் இந்தக் கண்றாவியெல்லாம். புராதன பொதுவுடமை சமூகம் என்ற ஒரு மாபெரும் அமைப்பில் இவைபற்றிக்குறிப்பிடகூட ஒருவனும் இருந்திருக்க மாட்டான். யாரும் யாருடனும் உறவு கொள்ளலாம் என்பது சோசலிச நியதியாகக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  13. கள்ள அடைமொழி தேவையில்லை என்றே நானும் எண்ணுகிறேன். அன்பு யாரிடத்தும் எப்பொழுதும் வரலாம். திருமணத்திற்குப் பின் எதிர் பாலர் மேல் வைக்கும் அன்பு காமத்தால் (உடல் இச்சையால் ) மட்டுமே என்று ஊடகங்கள் சொல்வதை ஏற்க இயலாது.

    பதிலளிநீக்கு
  14. அன்பு மாதவராஜ்,

    எப்படி இருக்கீங்க! கை பிடித்துக் கேட்கும் வாஞ்சையுடன்.

    அருமையான பதிவு...

    அடல்ட்ரி, பிறன்மனை இது போன்ற விஷயங்கள் தான் கள்ளக்காதல் என்று பேசப்படுகிறது. தினத்தந்தி போன்ற வெகுஜன விரும்பி தினசரிகளில் சுவாரசியமாய்ச் சொல்ல ஒரு கள்ளத்தனம் தேவையாய் இருக்கிறது... கருணாநிதிக்கு எம்ஜியார் சூடு என்று படித்திருக்கிறேன்... அது போல ஒரு டீஸர் தான் இது போன்ற வார்த்தை பிரயோகங்களே ஒழிய கள்ளக்காதல், அன்பில் இருக்கும் கலப்படத்தையோ தர நிர்ணயங்களையோ குறிப்பிடுவதாக எனக்குத் தோன்றவில்லை. உடல் இச்சை எப்படி கள்ளக்காதல் என்பது... ஒரு சமூக அங்கீகாரத்திற்க்கு உட்பட்ட உடல் இச்சை எப்படி கள்ளக்காதல் என்பது.

    பிறன்மணை அல்லது அடல்ட்ரி என்று சொல்லப்படுவதில் உடல் இச்சை மட்டுமா இருக்கிறது... இன்னும் நிறைய இருக்கிறது மாதவராஜ் என்னை பொருத்தவரை... நாம் எப்படி பார்க்கிறோம், எங்கிருந்து பார்க்கிறோம் என்பது முக்கியம்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  15. //கள்ளமழை என்றோ, கள்ளக்காற்று என்றோ யாரும் சொல்வதில்லை. காதல் அந்த வகை. மற்றது வேறு வகை. //


    நல்ல அலசல்...

    பதிலளிநீக்கு
  16. Madhavraj sir, a different blog, I feel that word is used for a relation which is felt illegal. Love is love, but when one(the couple) is not ready to expose it, i mean wants to keep it a secret, there comes the problem. Love may come at anytime, on anyone, but we should know our limits, else there will be no family and we cannot talk proudly about our culture and heritage. Just felt like saying...all your words are nice

    பதிலளிநீக்கு
  17. தோழா!அது என்ன? "அதையும் செர்த்துவிரிவானது.அர்த்தம் கொண்டது!" முதலில் பெரியாரைப்படியுங்கள்.நிறைய விவாதிக்க வேண்டும்.அன்புடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  18. முதல் மரியாதை படத்தையும் உதாரணம் காட்டலாம் .

    பதிலளிநீக்கு
  19. கணவன் மனைவிக்கு இடையே இல்லாமல், திருமணத்திற்கு வெளியே ஏற்படும் காதல் தவறில்லை என்பதா உங்கள் வாதம்?

    பதிலளிநீக்கு
  20. கை கோர்த்து செல்லும் அண்ணன் தங்கையே காதலர்கள் எனக்கூறும் சமுதாயம் நம்முடையது .
    ஏன் நாளிதழை எடுத்ததும் எல்லோரும் தேடுவது இந்த செய்திகளைத்தான் .
    ஒருவரோடு இணைந்து வாழும்போது மற்ற நபர் மீது வரும் காதல் எல்லாம் கள்ள காதல்தான் .
    அது நல்ல காதல் ஆக வேண்டும் என்றால் விருப்பம் இல்லாது வாழும் நபரின் உறவை முறையாகவும்
    சட்ட ரீதியாகவும் துண்டித்து கொண்டால் போதும் .
    அவ்வாறில்லாது ஒருவருடன் வாழ்ந்து கொண்டு அவருடைய வருமானம் சொத்து மற்ற எல்லா அனுகூலம்களையும் அனுபவித்து கொண்டே மற்றவர் மீது காதல் கொள்வது அது மனம் சார்ந்த காதலாய் இருந்தாலும் உடல்
    சார்ந்தகாதலாய் இருந்தாலும் கள்ளக்காதல் தான்

    பதிலளிநீக்கு
  21. காதலே கள்ளம் ! (நல்லதொரு தொனியில் ) அடி கள்ளிஎன சொல்வதில்லையா??அதுல கள்ள காதல் வேறையையா (just for jest sir )

    அருமையான புரிதல் ..
    இதை தவறாய் புரிந்து கொண்டால் பலதை நியாயப் படுத்தலாம் ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!