ராமரோ... பாபரோ...

house

மாயாண்டிக் கொத்தனாரோடு இருந்த வரைக்கும் தொடர்ந்து வேலை இருந்தது குருசாமிக்கு. ஒண்ணுக்கு இருக்கப் போனால் கூட வேலை சுணங்குவதாய் சத்தமிட்ட அவரிடம் சென்ற வாரம் ரோஷம் காட்டிய பிறகு கதை கந்தலாகிப் போனது. ராமசாமி டாக்டர் வீட்டில் பார்த்த அந்த வேலைக்கப்புறம் இரண்டு நாட்கள் தன் ரோஷத்தையே நொந்துகொண்டும், வீட்டில் மனைவியின் புலம்பல்களைக் கேட்டுக்கொண்டும் வெறுப்பில் கழித்தார்.

இந்த மூன்று நாட்கள் சுப்புக்கொத்தனார் புண்ணியத்தில் ஒருவழியாய் ஓடி அடைந்தது. மசூதித்தெருவில் இப்ராஹிம் வக்கீல் வீட்டு மாடியில் பாக்கியிருந்த பூச்சு வேலையும் இப்போது முடிந்துவிட்டது. காலையிலிருந்து நின்றபடியே சாந்து பூசியதில் கழுத்தும் குறுக்கும் வலித்தாலும், கூலி வாங்கி சைக்கிள் அழுத்தும்போது தெரியவில்லை.

வழியில், ஆளும் பேருமாய் அவரும் நின்று கட்டிய வீடுகள் எதிர்ப்பட்டன. குழந்தைகள் விளையாடியபடியோ, பெண்கள் வாசலில் நின்றபடியோ, மரங்கள் அடர்ந்து சிரித்தபடியோ அவை கடந்து சென்றன. பார்த்துக்கொண்டே சென்று, பஜாரின் நெரிசலுக்குள் கரைந்தவர், பிள்ளையார் கோவில் அருகில் உள்ள டீக்கடையில் போய் நின்றார்.

அப்போதுதான் போட்டிருந்த போண்டாவை எடுத்து ஒரு துண்டு பேப்பரில் வைத்து பதமாய் அழுத்திக்கொண்டு டீயொன்று போடச் சொன்னார். போண்டோவை மென்றபடி எண்ணெய் உறிந்த பேப்பரை கசக்கி எறிந்தார். அதில், ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதை அறிவித்து, ‘நமது லட்சியம் மற்றும் நமது செயல்களிலிருந்து பிறழ்வதற்கு காரணமாகும் வகையில் எவரும் பேசவோ அல்லது செயலாற்றவோ வேண்டாம்’ என அவரது நாட்டின் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வீடு கட்ட மட்டுமேத் தெரிந்த அவர், அடுத்தநாள் கவலை தொற்றிகொள்ள டீ குடித்துக் கொண்டிருந்தார்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அவர் கவலை அவர்க்கு. இப்படி இருப்பது கூட பிரச்சனை இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. ராமரோ பாபரோ யார் பக்கம் தீர்ப்பு வந்தாலும் பிரச்னையை தீர்த்துக் கொள்ள மதவாதிகள் தயாராக இல்லை.உழைக்கும் மக்களின் ஒற்றுமை நிறைந்த வாழ்க்கைதான் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. கதை நல்லா இருக்கிறது.

  தீர்ப்பு எதுவாகின் என்ன மதவாதிகளும் மதமும் மாறப்போவதில்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 4. எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது..
  கொஞ்சம் மாறுபடலாம்.

  இவர்களுக்குத் தேவை கோவில் அவர்களுக்குத் தேவை மசூதி
  எங்களுக்குத் தேவை கழிப்பிடம்.

  பதிலளிநீக்கு
 5. நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க நான் இன்றில் இருந்து உங்களுக்கு ரசிகன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!