காற்றின் காதலர்!

'...ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்றார் மகாகவி.  'உங்களைப் பார்த்ததும் தான் மூச்சே வந்தது...' என்று நிம்மதி அடைகின்றனர் மனிதர்கள்.    'யார்கிட்டேயும் மூச்சு விடக் கூடாது' என்று யாராவது யாரிடமாவது ரகசியம் பாதுகாக்க அறிவுறுத்துகின்றனர்.   மூச்சுக்கு மூச்சு நாம் பயன்படுத்துகிற சொல்லாக இந்த மூச்சு இருக்கிறது.   இந்த மூச்சுக் காற்றை உள்வாங்கிப் பிரித்துச் சேர வேண்டியதை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பிக் கொடுத்து, தேவையற்றதை மண்டையிலடித்து வெளியேற்றிக் கொண்டிருக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலையைச் செய்துவரும்  காற்றின் காதலர் நுரையீரலார் உண்மையில் மிகவும் மென்மையானவர். மற்ற ஈரல்கள் சற்று கெட்டியான அமைப்பு கொண்டவையாக விளங்குவதால், நுரைப் பஞ்சு போன்ற மிருதுவான தன்மைக்குத் தான் இவருக்கு அந்தப் பெயர் போலிருக்கிறது.  இந்தப் பஞ்சு மெத்தையின் அரவணைப்புக்குள் பத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது இதயம்.

மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து  எஸ் வி வேணுகோபாலன்

மூக்கு வழியே நுழையும் காற்று பின்னர் மூச்சுக் குழல் வழியே பயணம் செய்து காற்று சிற்றறைகளை வந்து அடைகிற இடத்தில், ஆக்சிஜன் பிரித்தெடுக்கப்பட்டு  இரத்தத்துடன் கலக்கிறது.  கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.  கவிழ்ந்திருக்கும் ஒரு மரம் போன்ற உள் அமைப்பு கொண்ட நுரையீரல் இந்த சுவாசப் பணியை அத்தனை நேர்த்தியாக முடிப்பதால் தான், நாம் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது. நிறைகுடம் தளும்பாது என்பது போல், இந்த அசாத்தியமான பெரும்பணியை நுரையீரலார்  எத்தனை தன்னடக்கமாகச் செய்து கொண்டிருக்கிறார். 

இயற்கை கொண்டாடிகளாக இருக்கும்வரை மனிதர்களுக்கு ஒரு குறைவுமில்லை.  'உன் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நான் இருப்பேன்' என்று காதலன் பாடுவது, காற்றுக்கு நேரும் மாசு குறித்த (Air Pollution) கவலையோடு கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. 'பொது வாழ்வில் தூய்மை' என்று எல்லோரும் சொல்லிக் கொள்ளும் நிலையைத் தான் நுரையீரலும் விரும்புகிறது. மாசு மருவற்ற வாழ்க்கையை அனுபவிக்க ஊழல் மிகுந்த சமூக வெளி  அனுமதி மறுக்கிற போது ஜனநாயகத்திற்கும் மூச்சு திணறுகிறது.    சுகாதாரமற்ற சூழலின் நெடியில் நோய்கள் தான் கொண்டாட்டம் போடுகின்றன.

மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 20 - 25 சதவீதம் பேருக்கு மூச்சு விடுதல் சம்பந்தமான பிரச்சனை (Respiratory Problems) தான் அதிகமாக வாட்டுகிறது என்று சொல்லப் படுகிறது.  அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அள்ளித் தெளித்துப் பூசப்படும் பவுடர் நெடியின் ஒவ்வாமையைச் சொல்லலாம்.  இயல்பான வளர்ச்சியை முடக்கும் செயற்கை சாதனங்கள் அழகை விட ஆபத்தைத் தான் வருவிக்கின்றன.  வியர்வை துவாரங்களை மூடுவதோடு, சுவாசத்தையும் பாதிக்கும் பவுடர்களைத் தவிர்த்து விட வேண்டும்.  உணவுப் பொருளான பால் பவுடர் நெடி கூட சில குழந்தைகளுக்கு மேற்சொன்ன சுவாசம் தொடர்பான பிரச்சனையை உருவாக்கும்.  இதைச் சரிவர அணுகினாலே மருந்துகளைத் தவிர்த்து உடல் நலம் பேணிவிட முடியும்.

அதேபோல், வாயால் ஊதி குழந்தைகளுக்குச் சளியைத் தீர எடுத்துவிடுகிறேன் என்று சொல்லி தங்களது வாயிலுள்ள கிருமியையையும் குழந்தைகளுக்குப் பரப்பிவிடும் சேவைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது.  நுரையீரலில் எப்பொழுதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும்.  சளி ஏதோ தேவையில்லாமல் இருக்கிறது என்ற நினைப்பு தேவையில்லை. முழுவதும் உலர்ந்த நிலையில் நுரையீரல் இயங்குவதே சாத்தியமற்றது. 

சின்னச் சின்ன சளி, தும்மல் எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டு மருத்துவரிடம் ஓடத் தேவையில்லை.  நமது உடல் சவால்களை எதிர்கொண்டுதான் தனது எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் கொள்கிறது.  தேவையற்ற உயிர்க்கொல்லி மருந்துகளை (Anti-biotic drugs) அடிக்கடி எடுத்துக் கொள்வது, நோய்க் கிருமிகள் தங்களை இன்னும் தயார்ப்படுத்திக் கொள்ளவே உதவும். அதனால் இன்னும் இன்னும் அதிக வீரியமுள்ள உயிர்க் கொல்லி மருந்துகளுக்காக ஓட வேண்டியிருக்கும்.   உடல் நலம் பாதிக்கும்.

மூச்சை நல்லா இழுத்து விடுங்க என்று மருத்துவர்கள் சொல்வது, நுரையீரல் தேவையான அளவிற்குக் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றும் தகுதியோடு இயங்குகிறதா என்று பார்க்கத் தான்.  ஆனால், பலர் இந்தப் பரிசோதனையை  சிகரெட்டை வைத்துக் கொண்டு செய்து பார்ப்பது தான் வேதனையானது. ஊக்கமூட்டியாகச் சேர்க்கப்படும் நிகோடின் கூடவே புகைத்தலுக்கு அடிமைப்படுத்தவும் செய்கிறது.  நச்சு வேதியல் கலவையின் தார், மூச்சுப் பாதை நெடுக அடையாக அப்பிக் கொள்கிறது. பின்னர் எப்போதாவது புகைத்தலை நிறுத்திவிட்டாலும் கூட படிந்த கரி படிந்தது தான். 

இந்த மாதிரி செய்திகள் ஒன்றிரண்டைப் பார்த்த மாத்திரத்தில் சிலர், 'சே இன்றோட நிறுத்திரணும் இந்தச் சனியனை' என்று வேகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அந்த வேதனையை மறக்க (அதென்னது, ஆமாம், புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றிக்  கொள்வார்களாம்.... மற்றதை யார் எடுத்து ஆற்றுவது?) அடுத்த நாளிலிருந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து துவங்குவார்கள்.  ஒரே முறை சிகரெட் பழக்கத்தைக் கை விட்டவர்களை விட, அடிக்கடி சிகரெட்டை விட்டவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். இல்லையா....

நாம் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், புகைக்கிற மனிதர்களைக் குறித்தா..மன்னிக்கவும். அவர்களாவது தமது பழக்கத்திற்கு ஒரு விலையைத் தாமே கொடுக்கின்றனர். அது பற்றிய சாதக பாதகங்களுக்கு அவர்கள் பொறுப்பு.  ஆனால் சம்பந்தமில்லாது பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிப் பேசுவோம் முதலில்.  அடுத்தவர்கள் விடும் புகையை அருகிலிருந்து உள்ளிழுத்துக் கொண்டிருக்க நேர்ந்து அவர்களைவிடவும் அதிகமான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் இவர்கள். 

கணக்கின்றி புகைக்கும் மனிதர்களது செலவும் கணக்கின்றியே இருக்கும். போதாததற்கு உடல் நல பாதிப்பும்!  ஆனால், தேவையில்லாமல் அடுத்தவரையும் பிரச்சனையில் ஆழ்த்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது?  இந்த இடத்தில்தான், புகை பிடித்தல் என்பது  தனி நபரது விஷயம் என்ற எல்லையைக் கடந்து சமூக பிரச்சனையாக உருவெடுக்கிறது என்பதை பாதிப்புற்றுக் கெஞ்சிக் கொண்டிருக்கும் நுரையீரல்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். 

நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் மாணவரின் அறைக்குள் புகுந்து உரத்த சத்தத்தில் ரேடியோவை அலற விடுவது, தொலைக்காட்சியில் உருப்படாத சினிமா எதையாவது ஓட விடுவது, அவரைப் படிக்க விடாது குறுக்கே குறுக்கே சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு மோசமோ, அதைவிட பல மடங்கு மோசமான வேலையாகத் தான் இந்தப் புகைப் பழக்கம் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நுரையீரலைப் போட்டு அலைக்கழிக்கிறது.  தொல்லைகளுக்கு உள்ளாகும் கல்வியைப் போலவே, சித்திரவதைக்கு உள்ளாகும் நுரையீரலும் நலிந்து போகிறது. 

இந்தப் புகையைக் காட்டிலும் கொடுமையானது, தொழிற்சாலைகள்   மரியாதையில்லாமல் வானத்தைப்  பார்த்துத்  துப்பும் கரும்புகை.  அதனால் பெருகும் சுற்றுச் சூழல் மாசும் நுரையீரல்களை மிகக் கடுமையாக  பாதிக்கிறது.  அவற்றைக் கண்டு கொள்ளாத அரசு நிர்வாக இயந்திரத்தின் போக்கு சமூகத்தை அதைவிடவும்  கடுமையாக தாக்குகிறது. காலகாலத்திற்கும் விறகுக் கட்டை அடுப்பைக் கட்டிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு நேரும்.

சுரங்கங்களிலும், நச்சு வேதியல் கழிவுகளுக்கிடையில் பணியாற்ற வேண்டிய இடங்களிலும்தொழிலாளியின் மூச்சுப் பாதைக்கு பாதுகாப்பு ஏற்பாடு (Mask) செய்து கொடுக்க வேண்டியதைப் பெரும்பாலும் எஜமானர்கள் எவரும் மதிப்பதில்லை.  அவர்களது நுரையீரல் படும் பாடு சொல்ல முடியாதது.  நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்டது என்று மார்தட்டிக் கொள்ளும் நாட்டில், இன்னும் கூட பாதாள சாக்கடையில் மனிதர்களை இறங்கவைத்துச் சுத்தம் செய்யும் கொடுமை தொடர்கிறது.  நச்சு வாயு தாக்கி அவர்கள் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது. 

போபால் விஷ வாயு கசிவு ஏற்பட்ட போது, ஈரத் துணியால் மூக்கைப் பொத்தி நாசி துவாரங்களைக் காத்திருந்தால் அத்தனை பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று பின்னர் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது.  இந்த எளிய எச்சரிக்கையைக் கூட உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்தாத, மனிதநேயமற்ற - லாபவெறி பிடித்த பன்னாட்டு மூலதனம் நடத்திய ரசாயனத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எந்த நுரையீரலுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. 

ஆண்டுதோறும், போகி பண்டிகையின்போது பழையன கழிதலும், புதியன புகுத்தலும் என்று சொல்லியபடி, கிழிந்த பாய் முதற்கொண்டு ஏராளமான பழம்பொருட்களை வீதியில் வைத்து எரிக்கிறபோது நுரையீரல்கள் அலறுவது போகியின் மேள சத்தத்தில் கேட்காமல் போய்விடுகிறது போலும். தேவையற்ற பழைய பொருள்களை ஏதுமற்றவர்களுக்குக்  கொடுத்துக் கொண்டாடலாம் போகியை - இப்படி நம் வாழ்வில் நாமே கரியைப் பூசிக் கொள்ளாமல். 
நுரையீரல் ஒரு சிறந்த ஜனநாயகவாதி.  நல்ல சுதந்திரமான - காற்றோட்டமிக்க சூழலைத் தான் அது வேண்டுகிறது.  காச நோயாளிகளுக்குக் கூட, மருந்து மாத்திரைகளை விடவும் நல்ல வெளிச்சமும், காற்றும் தவழும் தனியிடத்தில் வைத்திருப்பதே சிகிச்சையின் முக்கிய அம்சமாகும்.  இப்பொழுதெல்லாம் அதற்கான முன்னுரிமையற்ற சிகிச்சை முறை, அவர்களது குணமாகும் தன்மையை பாதிப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.  பன்றிக் காய்ச்சல் பற்றிப் பேய்க் கூப்பாடு போடும் அரசு இயந்திரமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடங்கங்களும் பெரிய செலவற்ற - எளிய சிகிச்சை கிடைக்கப்பெற்றாலே குணமாகிவிடக் கூடிய காச நோய்க்கு ஆண்டுதோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் பலியாவதைப் பற்றிப் பேசுவதேயில்லை.  சுத்தம், சுகாதாரம், நல்வாழ்வுத் திட்டத்திற்கான காற்று வீசாத கொள்கைகளின் கொடுமை இது.

காற்று வருவதற்காக ஜன்னல்களை வைத்துவிட்டு, கொசுவிற்கு பயந்து, அதை இழுத்து மூடிவிட்டு நடக்கிறது நகர வாழ்க்கை.  அப்புறம் ஏர்-கண்டிஷனிங் ஏற்பாடு. தாறுமாறாக ஏறுகிற மின் கட்டணம் அல்லது தவறாத மின் வெட்டு காரணமாக, இரண்டு மணி நேரம் ஏசி போட்டுவைத்து விட்டு அப்புறம் அணைத்துவிட்டு அந்தக் குளிர்ச்சியிலேயே உறங்கிவிடத் துடிக்கும் பட்ஜெட் ஏற்பாடு.  இங்கே தான் பிரச்சனை.  ஏசி இருக்கும்போது காற்று உள்ளும் புறமும் போய் வருகிறது.  ஆனால், ஏசியும் நிறுத்திவிட்டு, ஜன்னல்களையும் அப்படியே மூடி வைத்துவிட்டுத் தூங்கினால், ஒருவர் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை அடுத்தவர் சுவாசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.  இப்படியெல்லாம் நுரையீரலைத் தண்டிக்கக் கூடாது.  காற்றோட்டம் அவசியம் அவசியம் அவசியம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

நல்ல காற்றை உள்வாங்கி, நிறுத்தி, ஆக்சிஜன் சேகரித்துக் கொண்டு அதை இரத்தத்தில் கலந்து அது வேகம் பெற்று உடல் முழுக்கப் பயணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு,  கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி அனுப்பும் வேலையை நுரையீரல் செய்ய, முறையான மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களை அளிக்கவல்லது.  இதயத்தைப் பக்குவமாக அணைத்துக் கொண்டிருக்கும் நுரையீரலை, நாம் பக்குவமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. 

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த தத்துவ ஞானியாகக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் மறைந்தபொழுது, அவரது உற்ற தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகர் ஹைகேட் இடுகாட்டில் வைத்து ஆற்றிய இரங்கல் உரையில், உலகின் மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்றுதான் குறிப்பிட்டார்.  சிந்தனையே மூச்சாக வாழ்ந்து மறைந்தவர் அந்த மேதை. 

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற பாரதி ஒரு பெருமையை, பெருமிதத்தை, கம்பீரத்தைக் குறிப்பிடுகிறார்.  அந்த மூச்சின் சக்தியை முழுமையாக உய்த்துணர நுரையீரல் நலமாயிருக்கட்டும்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றிக் கொள்வார்களாம்.... மற்றதை யார் எடுத்து ஆற்றுவது//


  புகைப்பிடிப்பவர்கள் பெரிதாக ஏதாவது பாதிப்புக்கு ஆளாகும் வரை அந்தப் பழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். அதற்கு, நமக்கென்ன ஆகிவிடப்போகிறது என்கிற அசட்டு தைரியம்தான் காரணம். நம்மால் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்களே என்ற எண்ணம் இருந்தால் அதைச் செய்ய அவ‌ர்களுக்குத் துணிவிருக்காது. இந்த சின்ன சின்னப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தாங்கள் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியுமே தவிர அவர்களால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியைத் தர முடியாது.

  இதைத்தான் என் பதிவிலும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற பாரதி ஒரு பெருமையை, பெருமிதத்தை, கம்பீரத்தைக் குறிப்பிடுகிறார். அந்த மூச்சின் சக்தியை முழுமையாக உய்த்துணர நுரையீரல் நலமாயிருக்கட்டும்........நன்றாகச் சொன்னீர்கள். மிக அழகான உவமானங்கள்.வாழ்த்துக்கள்.........

  பதிலளிநீக்கு
 3. இன்றே கடைசி என்ற எச்சரிக்கையுடனேயே
  ஒவ்வொரு நாளும் புகைப்பிடிக்கிறேன்
  நாளை விட்டுவிடுவேன் என்றே வாசிக்கிறேன்.
  நாளை மற்றொரு நாளே என்றாகிவிடுவதுதான் வேதனையாக இருக்கிறது.

  நல்ல கட்டுரை தோழ்ர்.

  பதிலளிநீக்கு
 4. பதிவு மீண்டும், மீண்டும் சூப்பரா இருக்கு.....எங்கள் வாழ்த்துகளுடன்

  பதிலளிநீக்கு
 5. நன்றாகச் சொன்னீர்கள்.

  மிக அழகான உவமானங்கள்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அன்பு மாதவ்

  வருகை புரிந்தோருக்கு எனது நன்றி...

  நுரையீரல் ஓர் அற்புதமான உறுப்பு. நாம் தான் அதை எத்தனை பாடாய்ப் படுத்துகிறோம்.

  மரங்களை வெட்டிச் சாய்த்து விட்டு, கான்கிரீட் காடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

  பல ஆண்டுகளுக்கு முன்பு, டைம்ஸ் பத்திரிகை, நாடு தழுவிய ஓவியப் போட்டி நடத்தி தேர்வு செய்யப்பட்டிருந்த படைப்புகளின் கண்காட்சியை சென்னை நகரிலும் வைத்தது. லலித் கலா அகாதெமியில் வைத்திருந்த அந்தக் கண்காட்சியில், கி பி 2050 என்ற தலைப்பு (என்று நினைவு!) ஓவியர்கைத் தூண்டியிருந்தது.

  மியூசியம் என்று தலிப்பின் கீழ் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் மரம் வைத்திருக்கும்.
  கருப்பு தாஜ் என்று எழுதியிருக்கும், மாசு படிந்த காதல் நினைவகத்தின் சித்திரத்தின் மீது.
  ஓராயிரம் குழந்தைகள் வரிசையில் காத்திருக்கும், ஒரே சறுக்கு மரத்தில் ஒரு முறை ஏறி இறங்கி விளையாடும் தனது முறைக்காக.

  இருளுக்குள் அடைந்திருக்கும் பல அடுக்கு மனை ஒன்றில் மேலிருந்து வளைந்து வளைந்து கீழிறங்கி வரும் ஒரு குழாய் வழியாக மிகச் சிறிய பால் ஒளி பாய்வதைப் பார்த்து ஆனந்தமாக ஒருவர் சொல்வார்: நாம் தரும் பணத்திற்கு இத்தனை சூரிய வெளிச்சம் கிடைப்பது இந்த இடத்தில் மிக மலிவுதான்...

  காற்றின் காதலர், சமூக நுரையீரலைப் பற்றியதும்தான்...

  இம்மாத Bank Workers Unity இதழில் வந்திருக்கும் இந்தக் கட்டுரையை,இடுகை செய்து மேலும் பலரை வாசிக்கச் செய்ததற்கு நன்றி.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!