ஒரு சுத்திகரிப்பு நிலையத்தின் கதை

அந்த இளைஞனுக்குத் தெலுங்கு மொழி மட்டும்தான் தெரியும்.  யாரோ ஒரு புரோக்கர் மூலம் அறிமுகமாகியிருந்த அவன் எதற்காக ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து சேர்ந்தான் என்பது தெரியாது.  வேலை கிடைக்காத கொடுமை அவனது முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.  அவன் ஒப்புக் கொண்ட ஒரு வேலை இழுத்துக் கொண்டே இருந்ததால் அவனைப் பராமரிக்கும் செலவும், அவன் நழுவி ஓடிவிடாது கண்காணிக்கும் பொறுப்பும் சேர்ந்து விட்டிருந்தது.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் அவனோடு பேச நேர்ந்த அந்த சோதனையான நேரத்தை மறக்க முடியாது. அவனால் பயனடைய இருந்த ஒருவர் இந்தப் பிரச்சனை  ஏதும் அறியாதவராக, எப்படியாவது தன்னைத் தனது குடும்பம் உயிர்காத்து வீடு கொண்டு சேர்த்துவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையோடு புரசைவாக்கம் மருத்துவமனை ஒன்றில் படுத்துக் கிடந்தார்.  அவரது உடலில் பழுதடைந்துபோன முக்கியமான உறுப்புக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்குத் தான் இந்த இளைஞன் தேவைப்பட்டான்.  கதையை வளர்ப்பானேன்... சிறுநீரகங்கள்  இரண்டுமே பழுதடைந்து விட்டிருந்த அந்த நோயாளிக்குத் தனது சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்துப் பொருத்துவதற்கு அந்த இளைஞன்  ஒப்புக் கொண்டிருந்தான்.

மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து  எஸ் வி வேணுகோபாலன்

இயற்கை அளித்த கொடையான இரட்டைச் சிறுநீரகங்களில் ஒன்றை வைத்துக் கொண்டு கூட  உயிர் வாழமுடியும்.  உயிருக்கு உயிரான இந்தச் சிறுநீரகத்தை அந்த அளவு நெருக்கடிக்குக் கொண்டு  செல்லாதிருந்தால், இன்னமும் அருமையாக வாழ முடியும்.  ஒருவர் சாதுவாகத் தனது வேலையை ஓசைப்படாமல் பார்த்துக் கொண்டிருந்தால் அதை மதிக்கிற சமூகமாக நாம் பழகவில்லையே.   அவரைத் தேவையில்லாமல் சீண்டிவிட்டு, அப்புறம் பிரச்சனையை வளர்த்துக் கொண்டு மல்லாட வேண்டாமே...கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா..

'கிட்னி' என்று பரவலாக அழைக்கப்படும் சிறுநீரகம் அல்லது சிறுநீரகங்கள் வயிற்றுக்குள்  இருந்தாலும், முதுகுக்குப் பின்புறமாக 'அந்தரத்தில்' தொங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான உடல் உறுப்பாகும்.  (அந்தக் காலத்தில் விதைப்பையைத் தான் சிறுநீரகம் என்று சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தனர்). இரத்த சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லிக் கொள்ளத் தக்க உடல் பகுதியான சிறுநீரகம், பல லட்சக்கணக்கான சிறப்பு செல்களைக் கொண்டிருக்கின்றது.   நெஃப்ரான் என்று அவற்றுக்குப் பெயர்.  சிறுநீரகம் குறித்த துறைக்கு இதனாலேயே 'நெஃப்ராலாஜி என்று பெயர்.

இரத்த ஓட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் ஓய்வு ஒழிச்சலற்ற இந்த செல்கள் இரத்தத்திலிருந்து தண்ணீரையும், தேவையற்ற இதர கழிவுப் பொருள்களையும் பிரித்துக் கொடுக்க, அவை சிறுநீரகப் பாதை வழியாக ஓடி சிறுநீர்ப் பையை எட்டுகின்றன. சிறுநீராக வெளியேறுகின்றன. கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமல்ல, தேவையான தண்ணீரை அல்லது சத்துப் பொருள்களை மீண்டும் உறிஞ்சிக் கொள்ளவும் செய்கின்றன இந்த செல்கள்.

இப்படி வடிகட்டி வெளியேற்றுவதற்கும், வடித்துக் கட்டி உள்ளிழுத்துக் கொள்வதற்கும் வசதியாக நெப்ரான்களின் மேற்புறம் மெல்லிய சவ்வு போன்ற ஒரு திரை அமைந்திருக்கிறது.  இந்த நுட்பமான  மென்மையான  ஏற்பாட்டைத் தனமையாகக் கையாள வேண்டும் என்பதை அன்றாட அலுவல்களின் பதட்டத்தில் மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

சுத்தப் படுத்துவது, கழிவுகளை அகற்றுவது  இவற்றோடு  முக்கிய  உறபத்தி  வேலைகளையும்  ஏற்றுக் கொண்டிருக்கிறார்  இளவல் சிறுநீரகத்தார்.  இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தக்க வேலையை அவரது பிரத்தியேகத் தயாரிப்பு ஒன்று கவனித்துக் கொள்கிறது.  இரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அடிப்படையான 'எரித்ரோய்டின்' அன்னாரது பங்களிப்பு தான்.  எனவே முறுக்கிக் கொண்டுவிடாமல் அவரை 'அரவணைத்து' வாழவேண்டியது நமது கடமையாகும்.

இரத்த அழுத்தத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதை அவரது பொறுப்பில் விட்டிருக்கிறோம் என்கிற போது,  இரத்த அழுத்தம் கட்டிற்குள் நிற்காமல் வாட்டி எடுத்தால் அவரும் பாதிப்புக்குள்ளாவார் என்பதைத் தனியே விளக்க வேண்டியதில்லை.  நீரிழிவு என்று சொல்லப்படும்  சர்க்கரை  பிரச்சனையும் கூட சிறுநீரகச் செயல்பாட்டில் இடையூறு உருவாக்கக்  கூடும்.  ஆரோக்கியமான உடல் நலம் இருப்போரும், ஆண்டுக்கு ஒருமுறை இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது.  தொடர்ந்து நீடிக்கும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் இயக்கத்திற்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி பாதிப்புகளை நோக்கி இட்டுச் செல்ல வாய்ப்புண்டு.  அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளலாம்.   சர்க்கரை பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்திருந்தால், அதாவது உணவு முறையில் எந்த சமரசமும் செய்து கொண்டுவிடாமல் உரிய பாதுகாப்பைக் கடைப்பிடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு பற்றிய கவலை இல்லாதிருக்கலாம்.

புரோட்டின் அதிகமாக உடலிலிருந்து வெளியேறுவது கூட சிறுநீரகம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு.  நுரைத்துக் கொண்டு வெளியேறும் சிறுநீர் அதன் அடையாளம்.  எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் அபாயம் இருக்கிறதா, இல்லையா  என்று அறிந்து கொண்டுவிட முடியும். 

இவை முன்பு அறிமுகம் செய்த மெல்லிய சவ்வில் ஏற்படும் பாதிப்புகளால் வடிகட்டும் தன்மையில் நேரும் சிக்கல்களாகும்.  அதில் கவனமாயிருக்க வேண்டுமானால், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மருந்துகள் ஆகியவற்றில் சில நியதிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.  துரித உணவு (Fast food ), பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், உப்பும் எண்ணெய் வகைகளும் அள்ளிப் பரிமாறித் தயாரிக்கப்பட்டிருக்கும் வித விதமான உணவு வகைகள், ஊறு விளைவிக்கும் சுவையூட்டிகள் மற்றும் செயற்கை வண்ணங்கள்  உள்ளிட்ட  நச்சான  வேதியல் பொருள்கள் மிகுந்த தயாரிப்புகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். இதற்கான உறுதி, மருத்துவரது அறைக்குள் இருக்கும் போது மட்டுமல்ல, எதிரே சாப்பாடு கொண்டு வந்து வைக்கப்படும் போதும் இருக்க வேண்டும்.

பொதுவாக ஓட்டல் சாம்பாரிலும், இதர உணவுப் பொருள்களிலும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.  அது உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் அதிகம் சாப்பிட இயலாதவாறு இருப்பதற்குமான பிரத்தியேக ஏற்பாடு. (வீட்டில் எத்தனை தோசைகளை வெளுத்துக் கட்டுவீர்கள்...ஓட்டலில் அதே மாதிரி சாப்பிட ஏன் முடிவதில்லை ? அப்படி சாப்பிட விட்டால் பில் எகிறும், அப்புறம் ஓட்டலுக்கு ஆள் வருவது குறைந்துவிடுமே! நீங்கள் சுவைத்துச் சாப்பிடவும் வேண்டும், தொடர்ந்து வரவும் வேண்டும் என்றுதான் இப்படி ஏற்பாடு!).

அதே போல், பிஸ்கட்டுகள், பேக்கரி வகையறாக்கள், எந்தச் சத்தும் தராமல் வயிற்றை அடைக்க மட்டுமே பயன்படும் நொறுக்குத் தீனிகள்   போன்றவற்றிலும் (அவை இனிப்பு பிஸ்கட்டாக இருந்தாலும்) தேவையைப் போல் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உப்பு கொட்டிக் கிடக்கிறது.

'தின்ற உப்புக்கு நாம் துரோகம் செய்ய மாட்டோம், ஓட்டல்காரர்களுக்கு எதிராக எதுவும் செய்ய mattom '  என்று மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியும்.  ஆனால், இப்படி உபரியாகத் தின்னும் உப்பு நமது 'கிட்னிக்கு' நாமே செய்யும் துரோகம் என்பதை உணர வேண்டும்.  எனவே, இவற்றில் அதிகம் ஆழ்வது தவிர்க்கப் படவேண்டும். குழந்தைகளுக்குப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

தரமற்ற மருந்துகள், எந்த நோய்க்காகவும் மருத்துவரது ஆலோசனைக்கு அதிகமான காலத்திற்கு அல்லது அதிகமான அளவிற்கு (Excess Dosage) எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள், அடிக்கடி எடுத்துக் கொள்ளப்படும் வலி நிவாரணிகள், தோலில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது தோலில் ஏற்படும் வியாதிக்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள், அதிக உலோகப் பொருள்கள் போன்றவை சிறுநீரகச் செயல்பாட்டில் தீவிரத் தலையீடு  செய்து பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அடுத்து முக்கியமான விஷயம், திருவாளர் தண்ணீரைப் பற்றியது.  உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்தால், சிறுநீரகப் பாதை வறண்டு கிடக்கும்.  அங்கிருந்து புறப்படும் கிருமித் தொற்று சிறுநீரகத்தாரைத் தாக்கும்.  நமது உடல் எடைக்கு ஏற்ப (உடல் எடை உபரியில்லாதிருப்பது  எல்லாவற்றுக்கும் நல்லது என்பதைத் தனியே விவாதிக்க வேண்டும் என்றாலும், நினைவூட்டலுக்கு இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது).  தண்ணீர் குடிக்க வேண்டும்.  கோடை காலத்திலும்,   வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற பிரத்தியேகக் காரணங்களால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போதும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.  அதே நேரத்தில், தேவைக்கு அதிகமாக லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது சிறுநீரகத்திற்குக் கூடுதல் வேலையைத் தரும்,  அதுவும் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


இதெல்லாம் ஏன் சொல்லவேண்டியிருக்கிறது என்றால், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, சிறுநீரகத்தின் நிலைமை கொஞ்சம் சிக்கலாகிறவரை பரிசோதனையில் தெரிவதில்லை.  இரண்டாவது,   நெஃப்ரான் செல்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது.  இழந்தால் இழந்ததுதான்.


சிறுநீரகங்கள் பழுது அடைந்துவிட்டால், அந்த வேலையை அயல் பணியாக இயந்திரங்களைக் கொண்டு 'அவுட் சோர்சிங்' செய்து தான் இரத்த சுத்திகரிப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.  'டயாலிசிஸ்' என்று அழைக்கப்படும் இந்த வேலையை, வாரத்திற்கு ஒரு முறை, இரு முறை என்று செய்து கொள்வதற்கோ, ஒரு கட்டத்தில் மாற்று சிறுநீரகம் தான் பொருத்த வேண்டும் என்று முடிவு எடுப்பதற்கோ பெருந்தொகை தேவைப்படும்.  வருமுன் காப்பது தான் நல்லது.  முற்றிய நிலையில் அதற்குத் தேவையான சிகிச்சைக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொள்வதும், அதற்கான பணத்தைத் திரட்டுவதும் வேதனையான விஷயம் அல்லவா..

மாற்று சிறுநீரக விவகாரம் எத்தனை மோசடியாகவும், சட்ட விரோதமாகவும் நடக்கிறது என்பதைக் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்தன. பாதிப்புற்ற நோயாளியைவிடவும், அவருக்கான சிறுநீரகம் வழங்கும் முன்பின் அறிமுகம் இல்லாத கொடையாளரை விடவும் இடையில் 'தரகுவேலை' செய்வோர் அடையும் லாபமே அதிகம். நெறியற்ற மருத்துவர்கள் உள்ளிட்டு  இத்தகைய நீசச் செயலில் இறங்குவோரின் கொள்ளை லாப வெறியில் என்னென்ன அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதும்  தெரியும்.

உடல் நலம் காப்பதற்கு மன வளமும் முக்கிய காரணியாகிறது.  எது உயரிய வாழ்க்கை முறை, எது உண்மையான மகிழ்ச்சி மலரும் பாதை என்பது குறித்த பார்வையையும் உள்ளடக்கியதே உடல் நலம். 

மொழியைக் கடந்த ஓர் இடத்திற்கு வேலை தேடி வந்த அந்த ஆந்திர மாநில இளைஞன், உழைப்பை விற்பதற்குப் பதில் உறுப்பை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதும், அவனது சேவையை எதிர்நோக்கிய பரிதவிப்பில் உயிர் காக்கப் போராட வேண்டிய நிலைக்கு ஒரு நோயாளி தள்ளப்பட்டதும் நமது சமூகத்தின் விசித்திர   முரண்பாடுகள்.  மாற்று வாழ்க்கை முறை மூலமாக  உடலையும், மாற்று சமூக அமைப்பு மூலம் மனித குலத்தையும் மேம்படுத்தும் காலத்தில்தான் இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு கிடைக்க முடியும்.  அதுவரை இதில் லாபம் காணும் கூட்டம் மட்டுமே செழித்துக் கொண்டிருக்கும்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு எழுத்தாளன் மருத்துவனானால் எப்படி இருக்கும்.... அப்படித்தான் இருக்கிறது இக்கட்டுரை!!

    படிக்கும் பொழுது ஒரு வாய் நீர் அருந்தினேன்!!!
    வாசிப்பும் சேர்ந்து உள்ளே சென்றது!!

    அன்புடன்
    ஆதவா.

    பதிலளிநீக்கு
  2. //மாற்று வாழ்க்கை முறை மூலமாக உடலையும், மாற்று சமூக அமைப்பு மூலம் மனித குலத்தையும் மேம்படுத்தும் காலத்தில்தான் இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு கிடைக்க முடியும்.//

    உண்மைதான் அண்ணா.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பயனுள்ள பதிவுங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பயனுள்ள பதிவுங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஓரளவு தெரிந்த விசயமாக இருந்தாலும் தொகுத்து சொல்லும் போது இன்னும் பயனுள்ளதாகிறது. மகுடத்திற்கு தகுதியான இடுகைதான்

    பதிலளிநீக்கு
  6. தறிகெட்டு போன உணவு முறைக்கு நீங்கள் சொன்னது நெற்றியில் அடித்தது போன்று இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. அன்பு மாதவ்

    பொதுவாக உடல் நலம் குறித்த கட்டுரைகளுக்கு எதிர் வினைகள் ஏன் குறைவாக இருக்கின்றன என்பது புதிராகவே இருக்கிறது...

    இந்த ஆழ்ந்த மௌனம் எத்தனையோ விதமான பிரதிபலிப்புகளை உருவகித்துக் கொள்ள வைக்கிறது. சமூக, அரசியல், இலக்கிய விசாரங்களில் பங்கெடுக்கும் நண்பர்கள் உடலும், உள்ளமும் நலமாயிருக்கும் வேட்கையோடு தொடுத்து வைக்கும் இம்மாதிரியான இடுகைகளை ஏதும் சொல்லாமல் கடந்து போவது அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாமல் செய்துவிடுகிறது.

    உலகமயச் சூழலில் நமது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் அடைந்துவரும் மாற்றங்களின் மீதான அறிவியல் பார்வையோடு, மருத்துவர் வெங்கட்ராமன் முன்வைக்கும் குறிப்புகள் உள்ளபடியே அரிதாகவே எழுத்துலகில் காணப்படுபவை. அவை என் மூலம் சொல்லப்படும் வாய்ப்பை நான் எப்பொழுதும் பெருமையாகவே ஏற்றுக் கொள்கிறேன்.

    கருத்து தெரிவித்த அன்பர்களுக்கு எனது நன்றி. இப்படியான விஷயங்களைப் பதிவு செய்ய இடமளிக்கும் மாதவிற்கு நன்றியை எப்படிச் சொல்ல...

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!