செம்மொழி மாநாடு: நடந்ததும், நடக்க வேண்டியதும்

எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் செம்மொழி மாநாடு குறித்து எழுதியதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்:

யாரும் எதிர்பாராத அளவுக்கு இம்மாநாட்டுப் பொது நிகழ்வுகளில் மக்கள் லட்சக் கணக்கில் திரண்டு பங்கேற்றது மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. கோவை நகர மக்கள் 22 ஆம் தேதி பேரணி ஒத்திகையில் துவங்கி, குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் எல்லாப் பொது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். சில பத்திரிகைகள் குறிப்பிடுவது போல இது வெறும் வாண வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் என்று புறக்கணிக்க முடியாது. கல்வெட்டுகள் , செப்புப் பட்டயங்கள், நம் பண்பாட்டு அடையாளச் சின்னங்கள் இவற்றின் தொகுப்பாக வைக்கப் பட்டிருந்த கண்காட்சியைப் பார்க்கத்தான் ஏராளமான கூட்டம் என்பது நமக்குச் சொல்லும் உண்மை என்ன? சமூக நிலைமைகளால் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, நமது பண்பாடு சிதைவதை மவுன சாட்சியாக நின்று பார்க்க வேண்டியிருப்பதான யதார்த்தம், தமிழ் மக்களின் சமூக உளவியலில் ஏற்படுத்தியுள்ள குற்ற உணர்வின் வெளிப்பாடாகவும் இந்த அபரிமிதமான கூட்டத்தை நாம் புரிந்து கொள்ளலாம் அல்லவா? ஏதோ ஒருவிதமான தமிழ் உணர்வில் தான் மக்கள் திரண்டனர்.அந்த அளவில் சமூக மனதில் தமிழ் சார்ந்த ஒரு எழுச்சியை இம்மாநாடு ஏற்படுத்த உதவியது எனக் கூறலாம். மாநாட்டு ஏற்பாடுகள் (பொருள்சார்) மிகச் சிறப்பாக இருந்தன. ஆய்வாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்படி தவிர.

ஆனால் பொங்கி எழுந்த இந்த மக்கள் உணர்வைக் கணக்கில் கொண்டு அல்லது பயன்படுத்தி மொழிக்கான அறைகூவலை விடுப்பதற்கோ, மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிரான உணர்வாக இந்த எழுச்சியை மாற்றுவதற்கோ இம்மாநாடு தவறிவிட்டது என்றே கூற வேண்டும். நாடா ளுமன்றத்தில் தமிழில் பேசவும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புக்குமான ஏற்பாடு மற்றும் உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டு மொழியாக தமிழை ஆக்குவது, இவ்விரண்டுக்குமான ஒரு வாய்மொழி இசைவைக்கூட மத் திய அரசிடமிருந்து பெறவும் அதற்கான நியாயமான கோபத்தைக் கூட வெளிப்படுத்தவும் இம்மாநாடு தவறி விட்டது.

வெளியில் நடந்த பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவையெல்லாம் கலைஞர் நாமா வளியாகச் சவசவத்துப்போனது. ஆனால் மாநாட்டு ஏற்பாட்டில் இதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் உள்ளே ஆய்வரங்கிற்கு அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். நாம் பிப்ரவரி முதலே மீண்டும் மீண்டும் கூறியது போல தமிழின் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களிடம் கட்டுரைகளைக் கோரிப்பெறாமல் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்கிற ஏற்பாடுதான் ஆய்வரங் கம் நீர்த்துப்போகக் காரணமாயிற்று. விளம்பரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வந்ததில் உள்ள ஜனநாயக உள்ளடக்கத்தை நாம் வரவேற்ற அதே நேரத்தில், துறைசார்ந்த அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு வழியும் திசையும் காட்ட வேண்டிய ஆய்வரங்கம் இப்படி வீணடிக்கப்பட்டதே என்கிற வேதனையைப் பதிவு செய்தாக வேண்டும்.

அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்ற வெளி நிகழ்வு ஒவ்வொரு கட்சியும் தமிழ் மொழி குறித்த தங்கள் நிலைபாட்டைச் சொல்வதாக சிறப்பாகவே அமைந்தது.தோழர்கள் சீத்தாராம் யெச்சூரியும் து.ராஜாவும் நம்முடைய கோரிக்கைகள் பலவற்றைத் தொட்டுப்பேசியது குறிப்பிடத்தக்கது.

ஆய்வரங்கத் துவக்க விழாவில் உலகத் தமிழ்த் தலைவரே என்று கலைஞரை மார்க்சிய ஆய்வு அறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது நமக்குப் போலவே பலருக்கும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளித்தது.

ஹெர்மன் டீக்கன்,ஷெல்டன் பொல்லாக் போன்ற சமஸ்கிருத அறிஞர்கள், சங்க இலக்கியங்கள் சமஸ்கிருதத்தைப் பார்த்து எழுதப் பட்டவை என்று கூறிவருவதற்கு எதிரான வலுவான ஆதாரங்களைத் தம் உரைகளில் செம்மொழி விருது பெற்ற அஸ்கோ பர்போலா, பன்மொழி அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்,ஐராவதம் மகாதேவன் போன்றோர் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது. இவை காற்றோடு போய் விடாமல் நூல் வடிவில் கொண்டுவரப்பட வேண்டிய உரைகளாகும்.

1020 ஆய்வுக்கட்டுரைகளில் சுமார் 900 கட்டுரைகள் நான்கு நாட்களில் பல்வேறு அரங்குகளில் முன் வைக்கப்பட்டன. பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மட்டுமே எல்லா ஆய்வாளர்களுக்கும் வழங்கப்பட்டது. விவாதத்துக்கெல்லாம் எந்த அரங்கிலும் வாய்ப்பே இருக்கவில்லை.யாராவது கருத்தாளர் வராமல் போயிருந்தால் அதில் கிடைத்த கூடுதல் நேரம் விவாதத்துக்குப் பயன்பட்டது. கட்டுரையாளர்கள் அனுப்பிய 2 அல்லது 3 பக்க ஆய்வுச்சுருக்கங்கள் மேலும் சுருக்கப் பட்டு(ஒரு புரிதலும் இல்லாமல்) ஆய்வரங்க மலரில் அச்சிடப்பட்டிருந்தது பல ஆய்வாளர் களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. வந்த கட்டுரைகளில் பொருட்படுத்தத் தக்க வையாக இருக்கும் கட்டுரைகள் மட்டுமே னும் முழுமையாக நூல் வடிவம் பெற்றால்தான் அந்த ஆய்வுகள் மக்களிடம் போய்ச் சேரும்.

கூடவே நடந்த இணையத்தமிழ் மாநாடு துதிகள் இல்லாமல் நடந்ததாக அறிகிறோம். இலவச மென்பொருள்,எழுத்துரு தகடுகள் வெளியிடப்பட்டுள்ளன. 138 ஆய்வுக்கட்டுரை கள் வாசிக்கப்பட்டுள்ளன. அதிலும் இன்னும் ஒரே யுனிகோட் தமிழ் எழுத்துருவை எல் லோரும் பயன்படுத்துவது, ஒரே மாதிரியான விசைப்பலகை பயன்படுத்த அரசின் கொள்கை முடிவு போன்றவை நடந்தால்தான் கணினிக்கு ஏற்ற மொழியாக இயல்பிலேயே அமைந்துள்ள தமிழ்மொழி ஏற்றம் பெறும்.

நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,பிரணாப் முகர்ஜி இருவருமே இந்த மக்கள் உணர்வெழுச்சி யோடு ஒட்டாமல் விலகி நின்றனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ் குறித்த தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆவன செய்கிறோம் என்று ஒப்புக்குக்கூட இரு மத்திய அமைச்சர்களும் பேசவில்லை. ஒரு தேசிய இனத்தை, அதன் உணர்வுகளை அவமதித்த குற்றத்தை இருவரும் செய்தனர் என்றே கூற வேண்டும்.ப.சிதம்பரம் இன்னும் கூடுதலாக மக்கள் தமிழான வட்டார வழக்கை அவமதித்துப் பேசிய பேச்சு தமிழ் உணர்வாளர் எவராலும் மன்னிக்க முடியாத பேச்சாகும்.

கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கங்களில் கவிதை வாசித்த அத்தனை கவிஞர்களும் தமிழைப் புறக்கணித்து அதீதமான கலைஞர் துதி பாடியது கவிதை உலகுக்குப் பெரும் தலைக் குனிவான நிகழ்வாகும். ஆனால் கருத்தரங்கு களில் பேசிய பலர் சிறப்பாகப் பேசினர். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் பொறுப்பில் தயாரான ‘இனியவை நாற்பது’ பேரணி ஊர்தி கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தன.

கலைஞர் பேசிய பேச்சில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத, தவறான சில கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன.தமிழ் மொழிதான் உலகத்து மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி என்று அவர் கூறியது எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத கருத்தாகும். தமிழுக்கு உண்டான பெருமை கிடைத்தாலே போதும். இல்லாத பெருமைகளை ஏன் ஏற்ற வேண்டும்?

இரண்டாவதாக, களப்பிரர் காலம் தமிழுக்கு இருண்ட காலம் என்று அவர் கூறியது ஒரு ஆரியப்பார்வையாகும். ஆரியச்சார்பு ஆய்வாளர்கள் முன்வைத்த அக்கருத்தை ஒரு திராவிட இயக்கத்தலைவர் விமர்சனமே இல்லாமல் அப்படியே ஏற்றுப்பேசியதை வரலாற்றின் நகைச்சுவை என்று நாம் கடந்து செல்ல முடியாது. தமிழுக்கு மிகப்பெரும் கொடைகளை நல்கியது களப்பிரர் காலம் தான். திருக்குறள் உள்ளிட்ட பதினென்கீழ்க் கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் உருவானது களப்பிரர் காலத்தில் தான். இது குறித்த விரிவான ஆய்வுகளை தமுஎகச தலைவர் அருணன் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் செய்துள்ளனர்.

ஒரு இடத்தில் இம்மாநாட்டுக்கு எதிராகச் சதி செய்த சண்டாளர் யார் என்று தெரியும் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது அதிர்ச்சியளித்தது. சண்டாளர் என்பது ஒடுக்கப்பட்ட சாதியின் ஒரு பிரிவு பெயராகும். அப்பெயரைச் சதிச்செயலுடன் இணைத்து மாநில முதல்வரே பேசியது மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும். சண்டாளன் என்று சர்வசாதாரணமாக இயல்பாக எல்லோரும் பேசுவது பற்றி சமீப காலங்களில் இலக்கிய வட்டாரங்களிலும் தலித் அரசியல் அரங்கு களிலும் நடந்து வரும் தீவிரமான விவாதங்கள் எதுவும் முதல்வருக்குத் தெரியாதா என்கிற கேள்வியை தமுஎகச மாநிலக்குழு எழுப்பியது.

நிறைவுரை ஆற்றிய கலைஞரின் பேச்சில், தமிழில் படித்தோருக்கு வேலை வாய்ப் பில் முன்னுரிமை அளித்திட சட்டமியற்றப் படும் என்றது, நாம் வற்புறுத்தி வந்த நீண்ட காலக் கோரிக்கையாகும்.தமிழ் வளர்ச்சிக்கென்று 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி,சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்போருக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் விருது, செம்மொழி என்ற தலைப்பில் பள்ளியில் பாடங்கள் (இதை சட்டமன்றத்தில் முதன் முதலாகக் கோரிக்கையாக வைத்தவர் நம் தோழர் நன்மாறன் என்பது குறிப்பிடத்தக்கது), தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கத்தின் பொறுப்பில் குறித்த கால இடை வெளியில் செம்மொழி மாநாடு தொடரும் என்ற அறிவிப்பு போன்றவை வரவேற்கத்தக்க அதே சமயம், இவை மெய்யாகவே நடை முறைக்கு வர நாம் தொடர்ந்து கவனித்து வற்புறுத்த வேண்டிய அம்சங்களாகும்.

ஆனாலும் தமுஎகச முன்வைத்த 30 கோரிக்கைகளில் பெரும்பாலானவை இன்னும் கண்டுகொள்ளப்படவே இல்லை. வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தயாரிப்பு, வேர்ச்சொல் அகராதி, கலைக்களஞ்சியம், நாட்டுப்புறப் பல்கலைக்கழகம்,ஒரு பல்கலைக்கழகத்திலேனும் ஒரு நாடகப்பள்ளி, இசைத்தமிழியல் உருவாக்கம்,சங்க இலக்கி யங்களை மக்கள் பதிப்பாக வெளியிடுவது உள் ளிட்ட அடிப்படையான தமிழ் வளர்ச்சிக்கு ஆதாரமான பல விசயங்கள் பற்றி இம்மாநாடு அழுத்தமான மவுனமே சாதித்துள்ளது.

மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட செவ்வியல் கலைஞர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டு கார்களில் அழைத்து வரப்பட, நாட்டுப்புறக்கலைஞர்கள் மைல் கணக்கில் பேரணியில் நடந்து வந்தனர். தெருக்களில்தான் அக்கலைஞர்களுக்கு இட மளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு முன்னால் கோவை மாநகரில் 11 இடங்களில் நடத்தப் பட்ட கலை நிகழ்வுகளிலும் செவ்வியல் கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரம்கூட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்படவில்லை என்கிற மனக்குறை நாட்டுப்புறக்கலைஞர்களுக்கும் நமக்கும் உள்ளது.இது ஒரு குறியீடு போல அமைந்தது. உழைக்கும் மக்களும் அவர்கள் தமிழான நாட்டுப்புற/ வட்டார வழக்கும் அவர்கள் கலைகளான நாட்டுப்புறக்கலைகளும் இழிசனர் வழக்கென்று அந்தக்காலத்திலிருந்து அரண்மனைகளால் புறக்கணிக்கப்பட்டது சனநாயக யுகத்தில் நடைபெற்ற இம்மாநாடு வரை தொடர்கின்றது.நம் மக்கள் தமிழ் சபையேறும் நாள் என்றுதான் வருமோ? என்கிற நம் ஏக்கம் இன்னும் தொடர்கிறது.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. செம்மொழி மாநாடு தமிழ் செழுமையின் அடையாளம்

    பதிலளிநீக்கு
  2. கமெண்ட்டே காணோம்! என்னடா மதுரைக்கி வந்த சோதனை

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மொழிதான் உலகத்து மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி என்று அவர் கூறியது எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத கருத்தாகும். தமிழுக்கு உண்டான பெருமை கிடைத்தாலே போதும். இல்லாத பெருமைகளை ஏன் ஏற்ற வேண்டும்// உலகின் முதன்மொழி தமிழே என்பது பற்றி மொழியியல் அறிஞர் ம. சோ. விக்டர் எழுதியிருக்கும் பல புத்தகங்கள் ஏற்கெனவே அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்துவிட்டன. படித்துப் பாருங்கள்....

    பதிலளிநீக்கு
  4. உலகில் இப்போது உள்ள எட்டுச் செம்மொழிகளுள் ஒன்று தான் முதல் மொழியாக இருக்க முடியும். 'திருவிவிலியத்தின் தொடக்க நூலில் குறிப்பிடப்படும் உலகின் முதல்மொழி எது என்பது பற்றி, சுமேரிய நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது பற்றி, அண்மையில் செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழைய கற்காலக் கருவிகள் வழியாக, இயேசு கிறித்து பேசிய மொழியான எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' ஆகிய பல கருத்துகள் ஏற்கெனவே அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன. தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் மு. தெய்வநாயகம், மொழியியல் அறிஞர் ம. சோ. விக்டர் ஆகியோரின் நூல்களைப் படித்துப் பாருங்கள்.. அறிவியல் அடிப்படையிலான இக்கருத்துகளின் உண்மை தெளிவாக விளங்கும்..

    பதிலளிநீக்கு
  5. அன்பார்ந்த தோழரே,



    தோழர் தமிழ்செல்வனின் கட்டுரையை எங்கள் சங்க இதழான சங்கச்சுடரில் பயன்படுத்த விரும்புகிறேன்.


    ராமன், AIIEA, வேலூர் கோட்டம்.

    பதிலளிநீக்கு
  6. தமிழர்கள் வான வேடிக்கை மட்டும் பார்க்க செல்பவர்கள் அல்ல, தமிழை முதன்மையாக கொண்டு சொல்லப்படும் அணைத்து நிகழ்வுகளுக்கும் செல்வார்கள் என்பதற்கு இந்த செம்மொழி மாநாடு ஒரு உதாரணம்.

    ஜாதகம் பற்றிய ஒரு புதிய மென்பொருள் ஒன்று வந்துள்ளது, அதனை வாங்கியதன் மூலம் நான் பெரிதும் பயனடைந்தேன், அந்த பயனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி அந்த இணையத்தின் முகவரியை இங்கே எழுதிள்ளேன் அதன் மூலம் நீங்களும் பயனடைய என் வேண்டுகோள். www.yourastrology.co.in

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!