முதல்வருக்கு கமல்ஹாசன் போட்ட சோப்பிலிருந்து பொங்கும் நுரை!

 

“முதல்வர் விழாவில் நான் அடிக்கடி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுவது சிலருக்குப் பிடிக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை. பிடித்தவர்கள் அவரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் என்னத்துக்கு சோப்பு போடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அவர் தமிழில் குளிப்பவர். அவருக்கு சோப்பு போட வேண்டிய அவசியமில்லை” இப்படி உலகநாயகன் சமீபத்தில் முதல்வருக்கு தமிழ்ச்சோப்பு போட்டு குளிப்பாட்டி இருக்கிறார்.

எதையாவது சொல்லி வைக்கணுமே என்று வாய்க்கு வந்த மாதிரி பொது இடங்களில், விழாக்களில், இப்படியெல்லாம் ஒருவரை இன்னொருவர் பேசுவதைப் பார்க்கும்போது எரிச்சல் வரும். சரி அவர்கள் அளவு அவ்வளவுதான் என சமாதானப்படுத்திக்கொண்டு, வேறு எதிலாவது சிந்தனையை செலுத்த முயற்சிப்பது வழக்கமாகி விடும். கமலஹாசன் போன்றவர்களும் நாலு பேருக்கு மத்தியில் இப்படி தத்துப்பித்தென்று உளறிக் கொட்டுகிறார்களே என்னும்போது சங்கடமாகி விடுகிறது. அருவருப்பாகவும் இருக்கிறது.

எல்லோரும் ஒருவரை ‘ஆஹோ’, ‘ஓஹோ’வென சகட்டுமேனிக்கு ஒரு இடத்தில் பாராட்டிக்கொண்டு இருக்கும்போது, மொத்த கூட்டமும் அதற்கு தலையாட்டி ஆரவாரிக்கும்போது, யாருக்கும் இப்படியெல்லாம் நிகழக்கூடுமோ என்றும் யோசனை செல்ல ஆரம்பித்தது. மேடையில் ஏறினால், தன்னை மறந்து சலங்கை அதிர, அபிநயத்தோடும் ஓங்காரக் குரலோடும் வெறி கொண்டாடும் கூத்துக்கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்கள் ஒரு மேடையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் காலில் விழுந்து கும்பிட்டாராம். வயதான அந்த அற்புதக் கலைஞர் செய்த காரியத்தை நேரில் பார்த்துவிட்ட பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி துடித்துப் போய்விட்டார். பின்னொருநாளில் என்னிடம் சொல்லி அவ்வளவு வருத்தப்பட்டார். தனிமையில் பாவலர் ஓம்முத்துமாரி அவர்களும் இதற்கு சங்கடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவருக்கு என்ன நிகழ்ந்தது, எப்படி புத்தியை பறிகொடுத்தார் என்பது முக்கியமானதாக இருக்கிறது.

பாராட்டப்படுகிற மனிதருக்கு சமூகத்தில் இருக்கும் அதிகாரம், செல்வாக்கு, பிரபலம் போன்றவைகளே பாராட்டுகிறவர்களுக்கு இப்படியான தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்துகின்றன. உள்ளுக்குள் அம்மனிதர் குறித்த சிந்தனைகள் ஒன்றாகவும், வெளியில் வரும் கருத்துக்கள் வேறாகவும் இருக்கின்றன. அவரும், அவரைச் சார்ந்தவர்களும் சந்தோஷப்படுகிற மாதிரி அல்லது தன் மீது எந்த வித்தியாசமான பார்வையும் விழுந்திடாதவாறு பேசவோ, காலில் விழவோ வேண்டியதாகிவிடுகிறது. நானும் உங்களுக்கு வேண்டியவர்தான் என காட்ட வேண்டியதாகிவிடுகிறது. தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. “பா... பா... அப்பா” என விவேக்கின் லூஸுத்தனமான புகழ்ச்சிகளையும் கேட்டு இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே என புன்சிரிப்போடும், பூரிப்போடும் வீற்றிருக்க ஆசையிருக்கிறதே! ‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்னும் பெரியாரின் வார்த்தைகள் இப்பேர்ப்பட்ட அரங்கங்களுக்குள் நுழைய அனுமதியின்றி வெளியேத்தான் நிற்க முடிகிறது.

‘பூ’ படத்திற்கான தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், பரிசளிப்பு விழாவில் நடந்த கூத்துக்களைச் சொன்னபோது வாய்விட்டுச் சிரித்தோம். மிகுந்த அவமானமாகவும் இருந்தது. முதல்வரை பாராட்டிப் பேசுவதும், இடையிடையே நடிக நடிகரின் ஆட்டங்களுமாய் மூன்று நான்கு மணி நேரமாய் மேடை களேபரமாய் இருந்ததாம். தனக்கு முன்வரிசையிலும், பின் வரிசையிலும் உட்கார்ந்திருந்த பல முன்னணி சினிமா நட்சத்திரங்களும், இயக்குனர்களும் அந்த குளிர்பதன அறைக்குள் புழுங்கி வெந்து போய்க் கிடந்ததைப் பார்க்க முடிந்திருக்கிறது. மிக முக்கியமான இயக்குனர் ஒருவர், எழுத்தாளர் தமிழ்ச்செல்வனிடம் சொன்னாராம் “சார். ஒங்களுக்குப் பரவாயில்ல. இந்த ஒரு தடவைதான். இனும வரமாட்டீங்க. நாங்க அப்படியில்ல. இன்னொரு மாசத்துல எதாவது விழா இருக்கும். வந்தேயாகணும். எங்க நெலமையப் பாத்தீங்களா?’” எனச் சொல்லி சிரித்து வேதனையைக் கரைத்திருக்கிறார். எல்லாம் பார்த்து, பூத்துப் போன பிறகு மேடையில் பரிசு பெற்ற கலைஞர்களை வரிசையில் நிற்கச் சொல்லி, திருப்பதி கோவிலில், ‘பெருமாளை தரிசிக்கும்’ விதமாய் அனுப்பி விரட்டியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் பரிசளித்து முடித்தாகிவிட்டது. பரிசுபெற்றவர்களும் கலைஞர்கள்தானே!

இந்தப் புழுக்கத்தை ஒரு கருணை மனு போல வெளிப்படுத்தியதற்கே, நடிகர் அஜித் இங்கே நெப்போலியன் போனபார்ட்டுக்குப் பிறகு உலகம் பார்த்த வீரன் போல புகழப்பட்டார். அதுவே பெரிய காரியம் என்பது போல சித்தரிக்கப்பட்டதில், அஜித்தின் தைரியம் தெரியவில்லை, நடக்கும் அடக்குமுறைகளும், அதற்கு எதிராக மண்டிக்கிடக்கும் வெறுப்புமே தெரிந்தது. அதையுணர்ந்து சரிசெய்யத் தோன்றாமல், அஜித்துக்கு எதிராக அரசின் கோபம் திரும்பியது. அடுத்தநாளே அவர், முதல்வரை நேரில் சந்தித்து, கைகட்டி உட்கார்ந்து பேசிவிட்டு, வெளியே வந்து பிரச்சினை சுமூகமாய் முடிந்தது’ என்று சிரித்து அமைதியாகிப்போனார். அவ்வளவுதான் அஜித். சினிமாவில் தொடைதட்டி வீரவசனம் பேசுவது போல் நிஜத்திலும் முடியாது என்பது அவருக்கும் தெரியும். கமலுக்கும் தெரியும். அதனால்தான் இந்த சோப்பு வார்த்தைகள். தமிழையே சுவாசிப்பவர், தமிழுக்கே அர்ப்பணித்தவர் என்பதெல்லாம் அலுத்துப் போக தமிழிலேயே குளிப்பவர் என்று இந்த புதிய சொல்லாடல் போலிருக்கிறது.

இப்படி அளவுக்கு மீறிய, பொய்யான, போலியான பேச்சுக்களைக் கேட்கும்போது இந்த நாட்டுப்புறக்கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. எறும்பும், சில்லானும் நண்பர்களாம். உரலில் நெல் குத்தும்போது எறும்பு அதற்குள் அகப்பட்டு செத்துப் போனதாம். உடனே சோகம் தாளாமல் சில்லான் மொட்டை அடித்துக் கொண்டதாம். அதைக் கேள்விப்பட்டு, வருத்தப்பட்ட ஒரு ஆலமரம் தன் கிளை ஒன்றை முறித்துக் கொண்டதாம். அங்கு வந்த யானை, சோகத்தைக் காட்டும் பொருட்டு தன் தந்தத்தை உடைத்துப் போட்டதாம். தண்ணீர் குடிக்க வந்த அந்த யானையிடம் எறும்பு செத்த சோகத்தை கேள்விப்பட்ட குளம் ஒரு அடி தண்ணீரை குறைத்துக் கொண்டதாம். வயலுக்கு தண்ணீர் பாய்க்க வந்த உழவன், குளத்திடம் எல்லாக் கதையையும் கேட்டு, தாங்க முடியாமல் கோணல் மாணலாக உழுது வைத்தானாம். அவனுடைய மனைவி நடந்ததையறிந்து தன் பங்குக்கு தலையில் இருந்த கஞ்சிக் கலயத்தை போட்டு உடைத்தாளாம். இப்படி ஒரு எறும்பு இறந்ததுக்கு ஒரு ஊரே பொய்யாய் சோகம் தெரிவிப்பதில் இருக்கும் கிண்டல்தான், இப்படி பொய்யான புகழுரைகளிலும் தொனிக்கிறது என்பதை சொல்பவர்களும், அதைக் கேட்பவர்களும் புரிந்துகொள்வதாய்த் தெரிவதில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

தமிழில் குளிப்பவர் என்றால், தமிழில் சொல்லப்பட்டு இருக்கும் நல்லருங்கருத்துக்களால் அழுக்குகள் நீங்கி இருக்க வேண்டும். அவர் போற்றுகிற வள்ளுவத்தால் சுத்தம் பெற்றிருக்க வேண்டும்.

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கும் உலகு” என்கிறது ஒரு குறள். அதாவது, காதுபட கண்டித்துப் பேசினாலும் அதைப் பொறுத்து, அதில் சுட்டிக்காட்டப்பட்ட தன் குற்றங்களைத் திருத்திக்கொள்கிற அரசனின் ஆட்சியின் கீழ் வாழ உலகமக்கள் விரும்புவார்கள். அப்படியா இருக்கிறது? இப்படி எத்தனைச் சொல்லலாம்!

வள்ளுவரே! தாங்கள் சொல்வது இன்னதென்று அறியாத இவர்களை என்ன செய்வது?

கருத்துகள்

35 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அய்யன் என்று அழைக்கப் பட விரும்பும் ஒருவருக்கு யார் சொல்வது கேட்கும் ?அணுகாது விலகாது தீக்காயும் அமைச்சர் யாருளர்

  பதிலளிநீக்கு
 2. எறும்பு செத்த கதை கிளாஸ் சார்

  பதிலளிநீக்கு
 3. எழுதவேண்டும் என்று தோன்றிய விடயம்...உங்களின் ஈட்டி பாயும் வார்தைகளுக்கு அவர்களிடம் கண்டிப்பாக பதில் இருக்காது...

  பதிலளிநீக்கு
 4. நேற்று கமலஹாசன் சோப்பு நுரை பார்க்கும் போதே என்னடா முதல் முறையா இப்படி நிறத்துல வருதேன்னுதான் மனதுக்குப் பட்டது.

  பதிலளிநீக்கு
 5. //தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.//

  அறிவு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் இவைகளுக்கும் மாற்றாக இன்னும் வெற்றிடமே உள்ளது என்பதும் உண்மை.

  பதிலளிநீக்கு
 6. நாளைக்கு முதல்வர் இடத்திற்கு வேறொருவர் வந்தால் இவர்கள் என்ன சோப்பு போடுவார்கள் என அறிய ஆவலாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. /தாங்கள் சொல்வது இன்னதென்று அறியாத இவர்களை என்ன செய்வது?/

  அது தெரியாமத்தான சார் மாத்தி மாத்தி ஓட்டைப் போட்டு இவங்களையே ஆள விட்டுட்டிருக்கோம்.

  பதிலளிநீக்கு
 8. நம்ம என்ன சொன்னாலும் முதல்வருக்கு உரைக்க போறதுல்ல மாது சார். வயசான மெச்சூரிட்டு வரும்னு சொல்வாங்க. இந்த ஆள் விசயத்துல அது அப்படியே தலைகீழ். இதுல மத்தவங்க யாராவது இத பத்தி சொன்னா என்னய புகழ்றத பார்த்து வயித்ட்தெரிச்சல்னு பேட்டி குடுக்கவேண்டியது. என்னத்த சொல்ல.

  பதிலளிநீக்கு
 9. //அவர் தமிழில் குளிப்பவர். //


  ஆமா ! இவுரு முதுகு தேச்சு விட்டவர்!

  பதிலளிநீக்கு
 10. //நடிகர் அஜித் இங்கே நெப்போலியன் போனபார்ட்டுக்குப் பிறகு உலகம் பார்த்த வீரன் போல புகழப்பட்டார்.//


  வாஸ்தவம் தான் ! அம்மணமா திரியுற ஊர்ல கோவணம் கட்டுனவன் கோமாளிதானே!

  பதிலளிநீக்கு
 11. //தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.//

  ஆம்.

  பதிலளிநீக்கு
 12. மாதவ்ஜி! என்ன செய்வாங்களோன்னு பயமா இருக்கு. எதுக்கும் கொஞ்சம் பம்மியே எழுதும் ஐயா! . ..காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 13. Though there is an absolute truth in what you saida dn words are as sharp as ..., there are many innocent people blindly follow the leaders. Beware of them.

  There are more important issues to be addressed than this.

  பதிலளிநீக்கு
 14. சமூகம் பயணப்படும் திக்கு திசை பார்த்து மிகுந்த சினத்தோடும், பொறுப்போடும் எழுதியிருக்கிறீர்கள் மாதவ்..

  ஏற்கெனவே தமிழ்த் திரையுலகம் கிட்டத்தட்ட மும்பை நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. திரைப்படைப்புகள் ஒரு சிலரது விரல் சொடுக்குகளில் வைத்துத் தீர்மானிக்கப்படுவதாகவும், யார் யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் சில ஆளுமைகளின் அபிலாஷைகளுக்குட்பட்டதாகவும் மாறிக் கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது.

  திரையில் எதை நமது நாயகர்கள் அடித்துச் சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கிறார்களோ நிஜத்தில் அந்தப் பீடங்களுக்குமுன் மண்டியிடாமல் நாலடி எடுத்துவைக்க முடியாது போல் தெரிகிறது.

  இதில் சோப்பு, குளியல் இதெல்லாம் ஆற்றாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அருவருப்பின் நக்கலாகவும் இருக்கலாம். ஆமோதிப்பாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

  கலையின் நிலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயக வெளியே சிக்கலில் நேரிப்படும்போது ஒரு திரைக் கலைஞன் மட்டும் ஹீரோ போல மாபெரும் சபையில் வித்தியாசமாக எழுந்து முழங்கிவிடுவான் என்றெல்லாம் எதிர்பார்க்கும் இடத்தில் தமிழ்த் திரையுலகமும் இல்லை. மாற்றுப் பண்பாட்டுச் சூழலும் அத்தனை வலுவாக அறியப்படவில்லை.

  இந்த எழுத்து இது குறித்த பிரக்ஞையை மேலும் விரிவான எல்லைகளுக்குக்
  கொண்டுபோகட்டும்...

  ஆனால், பாவலர் ஓம் முத்து மாரி போன்ற அடிப்படையில் மிகுந்த தன்னடக்கமும் வெகுளித்தனமும் நிறைந்த கலைஞர் செய்ய நேர்ந்ததை நீங்கள் குறிப்பிட்டிருக்காமல் இருந்திருக்கலாம்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 15. வேகமாக படிக்க முடிந்தது :)

  பதிலளிநீக்கு
 16. ஒரு பக்கம் தமிழ் கலையுலகத்தினர் இப்படி விண்ணப்பம் வேண்டி புகழ்வதையும் மாநில சட்டசபையில் தங்கள் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முதல்வரை மன்னர் ரேஞ்சுக்கு புகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது ஒரு மன நோய்க்கான அறிகுறி. ஒருமுறை தந்தை பெரியார் தன்னை புகழ்ந்து பேசிய நபரை மேடையிலேயே கண்டித்து ஒரு தனி நபரை புகழ்வது இயக்கத்திற்கு நல்லதல்ல என்று கண்டித்துள்ளார். அவர் எங்கே பகுத்தறிவு வேடதாறிகள் எங்கே.

  மக்கள் பணத்தை நலதிட்டங்களுக்காக பயன்படுத்தும் போது தனது பெயர் நிலைக்கவேண்டும் என்பதற்காக கலைஞர் காப்பீட்டுத்திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் தன்மானமுள்ள எவரும் இந்த மாதிரியான செயலை நிச்சயம் கண்டிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 17. அடிமையில் யார் பெரிய அடிமை என்பதில்தான் இப்போட்து போட்டியே

  பதிலளிநீக்கு
 18. //உள்ளுக்குள் அம்மனிதர் குறித்த சிந்தனைகள் ஒன்றாகவும், வெளியில் வரும் கருத்துக்கள் வேறாகவும் இருக்கின்றன.//

  மிகச்சரியான கூற்று.... அழுக்குடலின் நாற்றத்தினைப்போக்க இந்த சோப்புபோடல் அவர்களுக்கு தேவைப்படலாம்...

  பல இடங்களில் வல்லினத்திற்கு இனமாகும் மெல்லினம்....

  பதிலளிநீக்கு
 19. /தமிழில் குளிப்பவர் என்றால், தமிழில் சொல்லப்பட்டு இருக்கும் நல்லருங்கருத்துக்களால் அழுக்குகள் நீங்கி இருக்க வேண்டும். அவர் போற்றுகிற வள்ளுவத்தால் சுத்தம் பெற்றிருக்க வேண்டும்.
  //

  தமிழ் அழுக்காகாமல் இருக்கிறவரை நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 20. குளிக்கிறது மட்டுமில்லண்ணே,
  தொவட்டிக்கிறதும் தமிழ்லதான்...

  பதிலளிநீக்கு
 21. அறிவொளி நாட்களில் குமிழங்குளம் மாரிமுத்து என்றொரு கலைஞர் கூட அப்படித்தான்.. சிவகாசியில் ஒரு மகளிர் பள்ளியில் வைத்து பத்துக்கும் மேற்பட்ட கலைக்குழுக்களின் சங்கம நிகழ்ச்சி அது.. பாரதி ராஜா வந்திருந்தார். ஒரு பத்து பதினைந்து தவில்களை வாடகைக்கு பேரா மாடசாமியின் ஆலோசனையின் படி ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடந்தது. மேடையில் அமர்ந்திருந்த பாரதி ராஜாவின் கால்களில் திடீரென விழுந்து விட்டார்..எங்களுக்கு தர்ம சங்கடமாகிப்போனது..

  பதிலளிநீக்கு
 22. தமிழன் என்றோர் இனம் உண்டு....தனியே அவருக்கோர் குணம் உண்டு... என்ன கருமம் அது? இதுதானா? தமிழ்நாட்டையும் தமிழனையும் கருணாநிதி குடும்பம் கேவலப்பட்ட நிலைக்கு கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது. பயணம் போகின்ற வாகனத்திலும் வீல்சேரிலேயே உட்காரும் நிலைமையில்தான் கருணாநிதியின் உடல்நிலை இருக்கின்றது, ஆனால் அந்த நிலையிலும் ஒரே இடத்தில் நாலு மணி நேரம் உட்கார முடிகின்றது, சினிமா நடிகைகளின் அரைகுறை ஆட்டத்தைப் பார்க்க முடிகின்றது, கமலஹாசன் போன்றோரின் அசிங்கமான சாக்கடை நுரை போன்ற சொற்களை காதுகுளிர கேட்டு குஷியாக முடிகின்றது என்றால்... கருணாநிதி வக்கிரத்தின் உச்சிக்கு போயாகிவிட்டது என்பதன்றி வேறென்ன? முற்போக்கு வேஷம் போடும் கமலஹாசன் போன்றோர் இப்படி பிதற்றுகின்றார்கள் என்றால், அரசியல் இயக்கம் நடத்துகின்றேன் என்று சொல்லும் திருமாவளவன் போன்றோர் என்ன செய்கின்றார்கள்? உத்தபுரத்தில் வாழும் இரண்டு வித தமிழர்களில் -தாழ்ந்த சாதி தமிழன், உயர்சாதி தமிழன்- உயர்சாதி தமிழன் சுவர் கட்டி சாதித்திமிரை காட்டுகின்றான். இமயம் வென்றான், கடாரம் கொண்டான் கருணாநிதியின் ஆட்சியில் அதில் வெறும் பதினைந்து அடி சுவரை உடைக்கவே மாதக்கணக்கில் கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது, அசையாது மலை போல் இருந்த கருணாநிதியின் நிர்வாகத்தை அசைக்க பிரகாஷ் காரட் என்ற ஒருவர் உத்தபுரத்துக்கே வரவேண்டியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதருக்குத்தான் திருமாவளவன் சமூகநீதி..சமூகமானம்...அம்பேத்கர் விருது போன்ற மேன்மைமிகு சொற்கள் அடங்கிய பாராட்டுப்பத்திரங்களை வாசித்து தள்ளுகின்றார். சுயநல லாபங்களுக்காக அன்றி வேறென்ன? பற்றாக்குறைக்கு 24 மணிநேரமும் அரைகுறை அம்மண ஆட்டம் பாட்டம் காட்டும் டிவி.சானல்களை நடத்தி 'மானமும் அறிவும்' அழகாய்க் கொண்ட தமிழர்களுக்கு மேலும் மானமும் அறிவும் ஊட்டி சமூக சேவை செய்யும் கருணாநிதி குடும்பம்... (திருக்குவளையில் இருந்து வரும்போது ஒரு தகரப்பெட்டி மட்டுமே கையில இருந்துச்சாம்... ஜீ..பூம்...பா...) ஏற்கனவே தனது அசிங்கமான குடும்பச்சண்டையை தீர்க்கும் முயற்சியில் தமிழகத்தை கூறுபோட்டு குடும்ப உறுப்பினர்களின் சொத்தாக மாற்றிய கருணாநிதி, அடங்க மறுத்து கொப்புளித்து வெளியேறும் அழுகிய சாக்கடை நுரை போன்ற குடும்ப சண்டையை மேலும் அடக்கும் முயற்சியாக சட்ட மேலவையை உருவாக்கப் போகின்றாராம். (மேலவையை எம்.ஜி.ஆர். ஏன் ஒழித்துக்கட்டினார் என்பது தெரியாதவர்களுக்கு ஒரு சேதி: தனது இஷ்டமான வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக ஆக்க முயற்சித்தபோது, அவர் ஒரு கடனாளி (insolvent) என்பதால் மேலவை உறுப்பினராக ஆகும் தகுதி இல்லை என்றானது. நிர்மலாவுக்கு இல்லாத மேலவை எதுக்கு, கலைங்கப்பா என்று கலைத்தார் எம்.ஜி.ஆர்). மேலவை இப்புடி படாதபாடு படுத்து. தமிழகமே இப்படி ஒரு சிலரின் கீழவையாக மாறி நாறுகின்றது. எத்தனை சோப்பும் பினாயிலும் ஆசிடும் போட்டு கழுவினாலும் தமிழ்நாட்டின் இந்த அசிங்கம் போகாது. வேண்டுமானால் மேக்கப்பில் சாதனை படைத்த உலகநாயகன் தனது கஷ்டமான மேக்கப்புக்களை கலைக்க, அழிக்க, சுத்தப்படுத்த உபயோகப்படுத்தும் சில சாதனங்களை சிபாரிசு செய்யலாம்.... /‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்னும் பெரியாரின் வார்த்தைகள்../ மாதவ், பெரியாரா? யார் அது? எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி...
  இக்பால்

  பதிலளிநீக்கு
 23. கமல் புத்தி என் இப்டி போகுதோ? அவருக்கும் உள்ளுக்குள்ள அரசியல் ஆசை வந்துடிச்சோ?

  பதிலளிநீக்கு
 24. adhu sari ayya, ummidam panam koodikkanakkil irunthaal, neerum thaan soap enna seyakkai shampoo ellamthaan poduveer enna panna mudiyum

  Kanthasamy

  பதிலளிநீக்கு
 25. நல்லதோர் எழுத்து. அந்தக் குறள் மேற்கோள் மிகப் பொருத்தம். ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் உரைக்காது.

  //தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு...//

  இங்குதான் நமக்குப் போதுமான புரிதல் இல்லையோ என்று ஐயுறுகிறேன். அவர்கள் சினிமாத் துறையில் ஊடாடி, ஊறி அரசியலுக்கு வந்தவர்கள். சினிமாத் துறையில், புகழுதல் போற்றுதல் தேராதவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொல்வார்கள். அதே கலாச்சாரத்தை அரசியலுக்கும் கொண்டுவந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இதில், கமலஹாசன் சோப்புப் போடுவது இயல்பானது. ஆனால் சில இலக்கிய ஆளுமைகளும் போட்டிருக்கிறார்கள் போடுகிறார்கள், அங்குதான் சிரிப்பிற்கு/ வேதனைக்கு...

  கஷ்ட்ட காலம்!

  பதிலளிநீக்கு
 26. அன்பின் மாதவராஜ்

  ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - காலத்தின் கட்டாயம் - பாவம் கமல்

  நல்வாழ்த்துகள் மாதவராஜ்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 27. //“முதல்வர் விழாவில் நான் அடிக்கடி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுவது சிலருக்குப் பிடிக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை. பிடித்தவர்கள் அவரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் என்னத்துக்கு சோப்பு போடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அவர் தமிழில் குளிப்பவர். அவருக்கு சோப்பு போட வேண்டிய அவசியமில்லை” இப்படி உலகநாயகன் சமீபத்தில் முதல்வருக்கு தமிழ்ச்சோப்பு போட்டு குளிப்பாட்டி இருக்கிறார். //

  இம்மாதிரி கமல் பேசியது அவர் வேண்டாவெறுப்பாக இவற்றைப் பொறுத்துக்கொள்கிறார் என்பதை நாசுக்காக கருணாநிதிக்குத் தெரியப்படுத்துகிறார் என்றும் பொருள் கொள்ள இடமிருக்கிறது அல்லவா?

  பதிலளிநீக்கு
 28. ஏங்க இந்த நிகழ்வுகளை எல்லாம் மனதை கல்லாக்கிக் கொண்டு படம் எடுத்து, செய்தி எடுத்து போடுகிறோமே... எங்கள் மனோ நிலை என்ன என்று யோசித்து பார்த்தீர்களா? நாய் பொழப்புடா அப்படினு சொல்லுவாங்க... அது எங்களுக்கும் பொருந்துமோனு தோனுது

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!