"நீங்கள் என்னை வெளியே கூட்டிச் செல்வதே இல்லை"
"என்ன இப்படிச் சொல்கிறாய். போன வாரம் சித்தப்பாப்பொண்ணு கல்யாணத்திற்குச் சென்றோமே"
அவளுக்கு தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏக்கம் இன்னும் தொடருகிறது. பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். ஆண் அதில் உள்ள வார்த்தைகளின் அகராதி அர்த்தம் பற்றியே யோசிக்கிறான். தன்னை பிரத்யேகமாக கவனித்து வெளிகளில் அழைத்துச் செல்ல அவன் முனைப்பில்லாமல் இருக்கிறான் என்பதுதான் அவள் சொல்ல நினைத்தது. இரண்டு பேரும் ஒரே மொழியில் பேசினாலும் அர்த்தம் வேறு வேறாக தொனிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருந்தவள் அவள் என்பதையும், வெளியே செல்வதற்கு தாகம் இருக்கும் என்பதும் ஆண்களுக்கு புரிவதில்லை. அவன் சதா காலமும் வெளியில் அலைந்து கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். மீண்டும் அவளோடு வெளியே செல்ல சலிப்பு வருகிறது. வீடுகளின் அகமும், புறமுமான இந்த இரு உலகங்களுக்குள் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக்கடை பெஞ்சுகளில் ஆண்கள் பேசுகிற விஷயங்களுக்கும், வீட்டுத்திண்ணைகளில் பெண்கள் பேசுகிற விஷயங்களுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.
பெண் யாருடனாவது அல்லது தன்னோடாவது பேசிக்கொண்டே இருக்கிறாள். யுகம் யுகமாய் தனிமையில் வெந்து வெந்து போயிருக்கும் அவள் தன்னை வெளிப்படுத்துவதற்கும், உலகத்தை கிரகித்துக் கொள்ளவும் பேசிக் கொண்டே இருக்கிறாள். சோர்வான சமயங்களில் தன்னையே உற்சாகப்படுத்திக் கொள்ள, கூண்டுக்குள் இருக்கும் மிருகங்களும், பறவைகளும் சத்தம் போடுவதைப் போல அவள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆண்களுக்கு இந்தப் பேச்சுக்கள் அர்த்தமற்றதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கின்றன. அவன் மௌனமாக இருக்கிறான். வெளியுலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யோசிக்கவும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவனுக்கு வீட்டிற்குள் மௌனமே தேவைப்படுகிறது. ஆண் தன்னை சக்தி வாய்ந்தவனாகவும், இலட்சியங்கள் கொண்டவனாகவும் எப்போதும் கருதிக் கொள்கிறான். வீட்டைத் தாண்டியே அவன் அறிவு வேலை செய்கிறது. அவன் பெண்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை எப்போதாவதுதான் கூறுகிறான். பிரச்சினைகளை தன்னால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான். பெண் புத்திமதி சொன்னால் தனக்கு இழுக்கு என்பது ஆண்களில் நரம்புகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பெண்கள் அன்பானவர்களாக, பொறுமையானவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அடுத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் கடமையாக இருக்கிறது. அதை அவள் செய்து கொண்டே இருக்கிறாள். உணவு என்பது ஆணுக்கு உடல் தேவையாக மட்டுமே இருக்க, பெண்ணுக்கோ அது உறவை பலப்படுத்துவதாகவும், பராமரிப்பதாகவும் இருக்கிறது. தோசைகளை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். சோறு பொங்கிக் கொண்டே இருக்கிறாள். இத்தனை செய்தாலும் ஆண் தன்னை கவனிப்பதில்லை என்பது அவளது வருத்தமாகவும், வேதனையாகவும் ஒலிக்கிறது. எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும் தனக்கு எதுவும் தரப்படுவதில்லை என்னும் உணர்வு அவளுக்குள் ஓளிந்திருக்கிறது.
ஆணோ, பெண் தன்னை மாற்ற முயல்கிறாள் என்று குற்றஞ்சாட்டுகிறான். அவனுக்குள் கடந்த காலங்களின் பயம் இன்னும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற போது ஆண் அடையாளமற்று இருந்தது அவனது மரபணுவில் அதிர்ச்சியாய் உறைந்திருக்கிறது. அவள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் தான் வீழ்த்தப்படும் தந்திரம் இருப்பதாகவே அவனுக்கு அசீரீரி ஒலிக்கிறது.
இதனாலேயே ஆண் தன்னிடம் பெண் நெருங்கி வரும்போது விலகுகிறான். ஆமை ஓட்டுக்குள் மறைவதைப்போல உள் இழுத்துக் கொள்கிறான். பெண் அவளாக எதையும், பாலியல் தேவையாக இருந்தாலும், முன் வைத்தால் ஆண் முகம் சுளிக்கிறான். குடும்பத்தில் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஆண் முன்மொழிபவனாகவும், பெண் வழிமொழிபவளாகவுமே இருக்க முடிகிறது அங்கு.
எல்லா வீடுகளும் ஆண்களின் வீடுகளாகவே இருக்கின்றன. இந்த சமூகத்தில் திருமணம் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது முழு ஆதிக்கம் செலுத்துவதற்கு உரிமையைத் தந்து விடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் மனதில் அன்புக்கு இடமிருப்பதிலை. தான் என்ன செய்தாலும் அதனை தாங்கிக்கொள்கிறவளாய் அவள் இருக்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு இருக்கிறது. அவளுக்கென்று சுயமான சிந்தனைகளும், செயல்களும் இல்லாமலே இருக்கின்றன. தவறி எதாவது இருந்தாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. காதலின் உணர்வுகளால் உந்தப்பெற்று அவள் எதாவது செய்தால் ரசிக்கப்படுவதில்லை. காதலித்த காலங்களை அவள் நினைவுபடுத்தினாலும் அவனுக்கு சுகமாய் இருப்பதில்லை. அவன் முற்றிலும் வேறொருவனாய் இருக்கிறான். "ஆண் சூரியனிலிருந்து வந்தவன். பெண் பூமியிலிருந்து வந்தவள். இருவரும் காதல் வயப்பட்டு உலவும் இடம் சந்திரனாக இருக்கிறது" என்று அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளுக்கு இப்போது அர்த்தம் இப்படியாகத்தான் தெரிகிறது. மனிதகுல வரலாறு உருவாக்கி வைத்திருக்கும் இந்த முரண்பாடுகளை அறியாமல், ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களை புரியாமல், காதலை பேசுவது என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். நவீன காலத்தில், காதலின் பிரச்சினைகள் இங்குதான் வேர்கொண்டு இருக்கின்றன.
காதலிக்கும்போது தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாமல் இப்படி முரண்பாடுகளாய் இருப்பதை அறியும்போதுதான் அதிர்ச்சியடைகிறார்கள். பெண்களுக்கு, வில்லை ஒடித்து கை பிடித்த இராமராய் காட்சியளித்த ஆண்களே, திருமணத்திற்குப் பிறகு தூக்கிச் சென்ற இராவணர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆண்களுக்கோ சீதைகள் சூர்ப்பனகைகளாய்த் தெரிய மூக்கை அறுத்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் இவை சின்னச் சின்ன எரிச்சல்களாகவும், தற்காலிக இடைவெளியாகவும் வெளிப்பட்டன. இன்று விவாகரத்துக்கு போகுமளவுக்கு வளர்ந்து விடுகிறது. அண்ணல் நோக்கியது, அவள் நோக்கியது எல்லாம் அக்கினிப் பிரவேசத்தில் பொசுங்கிப் போன கதைகளாகின்றன. பெண் தன்னை வெளிப்படுத்த துணிந்து விடுகிறாள். அது கலகமொழியாக வீடுகளிலிருந்து வருகின்றன. கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவியக் காதல்களின் விழி பிதுங்குகின்றன. பிரமைகள் உடைபடுகின்றன.
கடந்த நூற்றாண்டு பெண்கள் தங்கள் அவலத்தை உணர ஆரம்பித்து அதை உடைத்தெறிய ஆரம்பித்த காலமாயிருக்கிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கம் ஏன் ஆணுக்கு மட்டும் இல்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டு முன்னுக்கு வருகிறது. நவீன தொழில் நுட்பமும், தொழில் மயமாக்கலும் பெண்களை வெளியே வரச் செய்திருக்கின்றன. குடும்பத்தின் உற்பத்திகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த பெண் இப்போது தானும் சமூக உற்பத்தியில் பங்கு பெறுகிறவளாக அங்கங்கு சில தடைகளை தாண்டியிருக்கிறாள். ஆண்களின் உலகம் இதனை எதிர்கொள்ள முடியாமல் எங்கே தனது காலம் அபகரிக்கப்படுமோ என அச்சம் கொள்கிறது. பெண்களின் உலகமோ எங்கே தனது காலம் இப்படியே கழிந்து விடுமோ என்று மீறலுக்கு தயாராகிறது. அதுதான் காதலிக்கும் போது இனிக்கிற காதல் சேர்ந்து வாழும் திருமணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிக்கிறது.
சமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.
இதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.
காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. "பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்" என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.
இதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடுகிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.
பெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.
ஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை 'பொஸஸிவ்' என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. 'ஈருடல் ஓருயிர்', 'காற்று கூட நம்மிடையே நுழையாது' என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.
ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.
உங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.
சேர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
கடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.
காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.
ஆதலினால் காதல் செய்வீர்!
(இது ஒரு மீள் பதிவு. மேலும் காதல் குறித்த பதிவுகள் இங்கே)
தோழரே
பதிலளிநீக்குஇந்த பதிவை எத்தனை முறை படித்தாலும் பல வரிகளின் அர்த்தம் புதிதாகவே தோன்றுகிறது..
உள்ளங்கை வெதுவெதுப்பிலும் காதல் இருக்கிறது என்பது உண்மை தான்.. எங்கோ தொலைவில் இருந்தாலும், என்னப்பா செய்றீங்க என்று விசாரிக்கும் குழைவான குரலில் உணரும் காதலை, ஒரே அறையில் உள்ள நெருக்கத்தில் கூடஉணர முடியாது..
ஆனாலும் சமீபத்தில் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியான மாணவ மாணவியரின் செல்போன் பதிவுகளை படிக்கும் போது மனம் பதைத்துப் போனது...
காதலை வெளிப்படுத்தும் கருவியாக காமமும், வெளிப்படுத்தும் இடம் கழிவறையாகவும் போனது, இந்த நுகர்வுச் சூழலில் இளைய தலைமுறையினரின் கலாச்சார சீரழிவின் வெளிப்பாடேயன்றி வேறென்ன-
அன்பின் மாதவராஜ்
பதிலளிநீக்குநீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை - காதலைப் பற்றி
ஓக் மரமும் சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் ஒன்று வளராது என்பது உண்மை - அது பல குடும்பங்களில் இன்று ஒரு பிரச்னையாகி விடுகிறது - நல்ல ஆராய்ச்சி
நல்வாழ்த்துகள்
மிக அற்புதமான படைப்பு
பதிலளிநீக்குஅஜிம்
இதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.
http://tamildotcom.blogspot.com
\\காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும்.\\
பதிலளிநீக்கு\\காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.\\
நேற்று, எனக்கு தெரிந்த பெண், அவள் இடது முழங்கைக்கு கீழே பெரிய புண். என்னவென்று கேட்டேன்.
அவள் கூறிய பதில் அதிர்ச்சியை தந்தது. ஏதோ பெயரை பச்சை குத்தியிருந்தாளாம். பிடிக்காத அவள் அப்பா அதில் சூடு வைத்து விட்டாராம். என்ன கொடூரம்!! எல்லாம் சினிமாக்கள் படுத்தும் பாடு.
இவைதான் காதலாக சித்தரிக்க படுகின்றன.
அருமையான பகிர்வு.
மீள்பதிவுக்கு நன்றி...நான் முன்பு படித்திருக்கவில்லை!
பதிலளிநீக்குநல்ல ஒரு பதிவு
பதிலளிநீக்குமிகவும் அருமையாக உள்ளது.... முந்தைய காதல் பற்றிய பதிவுகளுக்கும் இணைப்பு தந்ததற்க்கு நன்றி.
பதிலளிநீக்குஅற்புதமான நடையில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான கட்டுரை. மீள் பதிவிட்டதற்கு நன்றி மாதவ் அண்ணா.
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்து அகாலமாய் கணவனை இழந்த பெண்கள் ஒரு ஆணை விடவும் நேர்த்தியாய் பிள்ளைகளை ஆளாக்கிவிட்டது..
பதிலளிநீக்கு/பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான்./
யோசிக்க வைக்கிற பதிவு.
மீளப்படித்தாலும் புதிதாக தோன்றும் மெருகு நிறைந்த பதிவு.
பதிலளிநீக்குஅருமையான அலசல் மக்கா.
பதிலளிநீக்குமனசை முன் நிறுத்தும் வாஞ்சை.
காதலின் பெயர் அன்பு அல்லது அக்கறை என்கிற பக்குவம்.
இப்பவே வாசிக்க முடிந்தது.மீள் பதிவிற்கு மேலே குறிப்பிட்ட அன்பும் நன்றியும் மாது.
பதிவு மிக அருமை, பால குமாரனின் புத்தகம் போலவே
பதிலளிநீக்குஇனிது இனிது காதல் இனிது
நல்ல வாசிப்பனுபவம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
எனக்கு நல்ல அறிவுரைகளாக இந்த பதிவை பார்க்கிறேன்.எதிர்காலத்தில் பயன்படும்.சேமித்து
பதிலளிநீக்குவைத்து கொள்கிறேன்.
இன்று காலை,உங்களின் பதின்ம வயதின் குறிப்புகள் பதிவைப் படித்தேன்.பயங்கர சுவாரஸியம்..என்னமா எழுதியிருக்கீங்க..!
///ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.///
பதிலளிநீக்குகாதலைப் பற்றி,மிக அற்புதமான படைப்பு!!!
அருமையான பகிர்வு.
வாழ்த்துகள்!!! வாழ்த்துகள்!!!!
Dear Mathav,
பதிலளிநீக்குI am a regular reader of your blog. You are NOT just lucky to be a Son-in-law of JK, but deserved that post in HIS FEILD by all means and meanings. I have taken the liberty and forwarded this particular article to most of friends who are calling tothank me for that. `Men are from Mars & Women are from Vinus`
M.S.Vasan
பவித்ரா பாலு!
பதிலளிநீக்குஉண்மைதான். சகலத்தையும் நுகர்வுப் பண்டமாக்கும் வியாபார உலகம்தானே இது. காதலை நாம் அதற்கு நிறுத்திப் பார்க்க வேண்டும்.
சீனா சார்!
மிக்க நன்றி.
அஜீம்!
நன்றிங்க. படிக்கிறேன்.
அம்பிகா!
நீ எழுதி இருந்த விஷயம் அதிர்ச்சியடைய வைக்கிறது. இது போன்ற இன்னும் பல சம்பவங்களை நான்றிவேன். அதையெல்லாம் பற்றியும் எழுதணும்.
அன்புடன் அருணா!
நன்றிங்க. காமராஜ் இராஜஸ்தான் நேற்று புறப்பட்டு விட்டான்.
பத்மா!
பதிலளிநீக்குநன்றி.
பிள்ளையாண்டான்.
நன்றி.
செ.சரவணக்குமார்!
நன்றி.
ரிஷபன்!
நன்றி.
காமராஜ்!
நன்றி தோழனே!
பா.ரா!
பதிலளிநீக்குசந்தோஷம் . உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிட்டேன்.
குப்பன் யாஹூ!
நன்றி.
அக்பர்!
நன்றி.
தியாவின் பேனா!
நன்றி.
அ.மு.செய்யது!
பதிலளிநீக்குமனந்திறந்த பாராட்டுக்கு நன்றி.
பதின்மப் பருவம் என்றாலே பயங்கர சுவாரசியமானதுதானே :-))))))
பொன்ராஜ்!
பாராட்டுக்கு நன்றி.
வாசன்!
//I am a regular reader of your blog. You are NOT just lucky to be a Son-in-law of JK, but deserved that post in HIS FEILD by all means and meanings.//
என்னங்க இப்படி சொல்லிவிட்டீர்கள்.
தலைகால் புரியவில்லை. மிக்க நன்றி.
அவள் அப்படித்தான் படத்திலே கடைசிலே ஒரு வசனம் வரும். ஸ்ரீப்ரியா சரிதாவிடம் கேட்பார். 'Women's Lib' ன்னா என்னன்னு தெரியுமா?ன்னு. அவங்க அதுக்கு வெகுளியா அப்படின்னா?ன்னு கேட்பாங்க. நீங்க ரொம்ப லக்கின்னு பாராட்டிவிட்டு படம் முடியும். இது ஒரு தோல்வியின் வெளிப்பாடுதான். ஆனா உங்களின் பதிவு பலப் பல விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கு. அத குடும்பத்திற்குள்ளேயே விவாதிச்சு அப்புறமா விளவுகளைப் பதிவிடுகிறேன். எப்படியாகினும், நல்ல தெளிவான அணுகுமுறை. வாழ்த்துக்கள். நாதன், திருச்சி.
பதிலளிநீக்குஅவள் அப்படித்தானில் அந்த காட்சி என் மனதையும் விட்டு அகலாது.
பதிலளிநீக்குஎன்ன விவாதங்கள் என நான் அறிந்து கொள்ளலாமா தோழா?
நல்ல அலசல். ஆணும் பெண்ணும் வாழ்க்கையைப் பரஸ்பரம் புரிந்து அணுகுதல் மிக முக்கியம்.
பதிலளிநீக்கு