இலக்கியம் வார்த்தைகளில் இல்லை

90களில் தமிழகத்தில் அறிவுஜீவிகள் பலர்  ஒரு காரியத்தில் தங்களை இணைத்துக்கொண்டு  ஒரு மகத்தான கனவை கண்டனர். அதன் பேர் அறிவொளி இயக்கம்.   பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என ஒரு பெரும் பட்டாளம் கிராமங்களை நோக்கிச் சென்றிருந்தார்கள்.
‘எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்’ என்பதுதான் அந்த இயக்கத்தின் ஆன்னாவும், ஆவன்னாவும். அனைவரும் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும் என்கிற நோக்கம் தாண்டி,  மக்களிடம் இந்த அமைப்பு குறித்த மாற்று சிந்தனைகளை உருவாக்க யத்தனைத்தார்கள். எதிர்பாராத விழிப்புணர்வு தோன்றுவதை விரும்பாத அரசு அந்த இயக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியது. பிறகு நிறுத்தியும் கொண்டது. அரசின் உதவியின்றி இயக்கத்தைத் தொடரும் முயற்சிகளும் மெல்ல மெல்ல கரைந்து போயின. அங்கங்கு அதற்கான அடையாளங்களும், பெரும் அனுபவமும் மிஞ்சின. அறிவொளி இயக்கம் குறித்து, பிறிதொரு சமயம் விரிவாக விவாதிக்கலாம். இங்கு ஒரு அனுபவத்தை மட்டும் பகிர்ந்துகொள்வோம்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சகோதரர் வெங்கடாசலம்தான் சாத்தூர் பகுதியில் அறிவொளி இயக்கத்தின் பொறுப்பாளராய் இருந்தார். அவருடைய அலுவலகத்தில்தான் பெரும்பாலான சமயங்களில் நானும், காமராஜும் இருப்போம். பாடலும் தாளமுமாய் கழிந்த ஒரு உற்சாகமான பொழுதில் ‘கண்ணாடி’ என்ற தலைப்புக் கொடுத்து நான்கைந்து வரியில், அங்கிருந்த கிராமத்து மக்களை கவிதைகள் எழுதச் சொன்னோம்.  தங்களுக்குத் தோன்றியதை எழுதினார்கள். அதில் கவிதை போலிருந்த மூன்றினை விழுது என்னும் பத்திரிகையில் பிரசுரிக்கவும் செய்தோம்.

(1)

ஏய்! கண்ணாடி
என் முகத்தின் அசிங்கத்தையெல்லாம் காண்பிக்கிறாய்
அதனால் நீ எனக்கு நண்பன்

(2)

கண்ணாடியே
எல்லோர் முகத்தையும் நீ பார்க்கிறாய்
உன் முகத்தை எப்படி பார்ப்பாய்?

(3)

கண்ணாடியில்தான்
என் முகம் தெரிகிறது
வாழ்க்கையில்
என் முகம் தெரியவில்லை

இந்தக் கவிதைகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன. வரிகளும்  அது பாட்டுக்கு நீண்டு போயிருந்தன. சரி செய்திருந்தோம். இவைகளை வடிவப்படுத்தினால் இன்னும் அழகு பெறும் என நினைக்கிறேன்.

இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது. சாதாரண மக்களிடம் பெரும் சுரங்கம் போல இருக்கிறது.... கவனிப்பாரற்று!

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. :) நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. அசலான கலக்கல் கவிதைகள்.ஆச்சரியமான அனுபவந்தான்.

    பதிலளிநீக்கு
  3. இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது.
    உண்மை.

    வார்த்தைகளில் அடங்கிவிடுவதா என்ன...வாழ்க்கை?

    பதிலளிநீக்கு
  4. அறிவொளி இயக்கத்தின் மூலமாகத்தான் எங்க ஊரில் பாதி பேர் கையெழுத்து போடவே கத்துக்கிட்டாங்க.
    அது மட்டும் போதும்னு நெனச்சிடுச்சி போல அரசாங்கம்.


    /இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது. சாதாரண மக்களிடம் பெரும் சுரங்கம் போல இருக்கிறது.... கவனிப்பாரற்று!/


    இனி கவனித்து வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  5. //இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது. சாதாரண மக்களிடம் பெரும் சுரங்கம் போல இருக்கிறது.... கவனிப்பாரற்று!//

    உண்மை. கண்ணாடிக் கவிதைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. /இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது. சாதாரண மக்களிடம் பெரும் சுரங்கம் போல இருக்கிறது.... கவனிப்பாரற்று!/

    உண்மைதான். கவிதைகள் அத்தனையுமே அருமை. ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. S. Poem can have a soul when v take it from life. To write such stuffs , an artist should live in others toes. Jus simply by writing about poor man in our home can become intellectual and technical stuff but it wil surely wont hav soul in it

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா...வாழ்வில் இருந்து தொகுக்கப்பட்டு தானே இலக்கியம் உண்டானது.

    உங்களை போன்ற பிரபல பதிவர்கள் இந்த அரசாங்கத்தால் மழுங்கடிக்கப்பட்ட நல்ல விஷயங்கள் குறித்து தனி பதிவே இட்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  9. /*இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது. சாதாரண மக்களிடம் பெரும் சுரங்கம் போல இருக்கிறது.... கவனிப்பாரற்று!*/
    உண்மை தான். கண்ணாடி கவிதைகள் அருமையாக உள்ளன.. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. //இலக்கியம் வார்த்தைகளில்லை. வாழ்க்கையில் இருக்கிறது.// நிச்சயமான உண்மை.

    பதிலளிநீக்கு
  11. சில நேரங்களில் கிராமத்தில் கேட்ட வரிகள் எந்த இலக்கியத்தையும் விஞ்சி விடுகின்றன.. ரசமான பதிவு.

    பதிலளிநீக்கு
  12. ஒரு சிறிய காற்றின் தீண்டல் போல எனக்குப் பல அறிவொளி நினைவுகளைத் தூண்டிவிட்ட பதிவு.இதே போல கடவுளுக்குக் கடிதம் எழுதச் சொன்னபோது கடவுளே எனக்கு ஒரே ஒரு கிரைண்டர் மட்டும் அனுப்பு நான் மவு அரைத்துப் பிழைத்துக்கொள்வேன் என்றும் கடவுளே உன்கிட்டே வந்திருக்கிற என் கணவரை மட்டும் நல்லப் பாத்துக்கோ என்றும் அறிவொளிக் கற்போர் எழுதிய பல கடிதங்கள் நினைவிலாடுகின்றன.

    பதிலளிநீக்கு
  13. v.radhakrishnan!
    ச.முத்துவேல்! (எப்படியிருக்கீங்க நண்பா?)
    என்.விநாயகப்பெருமாள்!
    கவி!
    ராமல்ஷ்மி!
    அம்பிகா!
    ஊசூ!
    அண்டோ!
    அமுதா!
    அடலேறு!
    ரிஷபன்!
    கும்க்கி!

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தமிழ்ச்செல்வன்!
    இதுபோல ஆயிரக்கணக்கான அனுபவங்கள் உங்களுக்குள் நிறைந்திருக்கும். வலையுலகம் அதனை அறிந்திருக்காது!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!