இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்

இந்திய தேசத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831-1897) என்ற பெயர் மகத்தான ஒன்றாகும்.  மராட்டிய மாநிலத்தின் சதாரா மாவட்டத்திலுள்ள நெய்கா(ம்)வ் என்ற சிற்றூரில் பிறந்த அவரது தந்தையார்  காந்தோஜி நெவ்சே ஆவார்.  தாயின் பெயர் லட்சுமி.

வரலாற்றாசிரியர்கள் என்போர் (உண்மையைச் சொல்ல) அஞ்சாதவராக, நல்ல நெறியாளராக, சுதந்திர சிந்தனையாளராக, வெளிப்படையான உள்ளம் கொண்டவராக, உண்மையைத் தேடுபவராக, அந்த உண்மையை எந்த இன்னல் நேர்ந்தாலும் நிறுவத் தயாரானவராக இருத்தல் வேண்டும்.  ஆனால், துரதிருஷ்டவசமாக, வரலாற்றாசிரியர்கள் (உண்மை) சிதைக்கப்பட்ட சித்திரங்களையே எடுத்துக் காட்டியுள்ளனர்; உண்மையை ஒருபோதும் அவர்கள் மக்களுக்குச் சொல்லவில்லை.  இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் வரலாற்றைப் புனைவுக்கதைகளோடு குழப்பிக் கொள்ள நேர்கிறது.  மக்களைப் பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ இயலாதோராக மாற்றிவிட்டனர் வரலாற்றாசிரியர்கள்.  பகுத்துப் பார்த்தறிய இயலாதவர்களாக அவர்களை முடக்கிவிட்டனர்.

கீழ்மட்ட மக்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்றை முதன்முதலாகத் துவக்கிய சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது பிறந்த நாள் (ஜனவரி 3) ஏன் 'ஆசிரியர் தினமாக'க் கொண்டாடப்படுவதில்லை என்று நான் எப்போதுமே வியப்பதுண்டு.

மகாத்மா ஜோதிபா ஃபுலே அவர்களும், சாவிதிரிபாய் ஃபுலே அவர்களும் தான் சாதிய போக்குக்கும், பார்ப்பனிய-சாதிய கலாச்சாரத்திற்கும் எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்களில் முதன்மையானவர்கள்.   மராத்திய மண்ணின் இந்தத் தம்பதியினர் பார்ப்பனிய மரபான அம்சங்களுக்கும், சிந்தனைகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டினர்.  ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான இயக்கத்தில் சாவித்ரிபாய்  சரிசம பங்காற்றினார்.  முறைப்படியான பாடசாலைக் கல்வி பெற்றிராதவர்தான் என்றபோதிலும், அவரைப் படிக்குமாறு தூண்டி ஊக்குவித்தார் மகாத்மா ஜோதிபா ஃபுலே.  பின்னாளில் அவர் தமது கணவர் துவக்கிவைத்த பள்ளியின் முதல் பெண் ஆசிரியரானார். உயர்சாதி ஆசாரம் கடைப்பிடித்தவர்களது உதாசீனப் பார்வையை சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியிருந்த அவரது ஆசிரியப்பணி அத்தனை இலகுவானதாயில்லை. அவர்கள் பல முறை இவர் மீது கற்களை எறியவும், சாணத்தை வீசவும் செய்தனர்.  இந்த இளம் தம்பதியினர் எல்லாத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது.  பாடசாலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் ஒரு நாள் விடாது சாவித்ரிபாய் அவர்கள் மோசமான சங்கடங்களை எதிர்கொண்டார்.  கற்கள், சேறு மற்றும் கழிவுகளை அவர் கடந்து சென்ற போதெல்லாம் அவர்மீது விட்டெறிந்தனர்.  ஆனால், சாவித்ரிபாய் இவை ஒவ்வொன்றையும் அமைதியாகவும் அதே வேளையில் துணிச்சலாகவும் எதிர்கொண்டார்.

பிரிட்டிஷ்  சாம்ராஜ்யத்தின் பிடியில் இந்தியா இருந்த காலத்தில் கவனத்தை ஈர்த்த கவிதைகளைப் படைத்த முதல் தலித் பெண் - ஏன், முதல் பெண்மணி சாவித்ரிபாய் ஃபுலே அவர்கள்தான்.  ஆங்கிலத்தின் அவசியத்தையும், கல்வியின் இன்றியமையாமையையும் வலியுறுத்திச் சொல்லும் நவீனக் கவிதைகளின் தாய் சாவித்ரிபாய் ஃபுலே.

கல்வி கற்றுக் கொள், போ
சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள்
வேலை செய்யுங்கள்,அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள்
அறிவில்லாதிருந்தால்
இழந்து நிற்போம் அனைத்தையும் -
அறிவிழந்து போனால்
நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா இராதீர்கள், போய் இனியேனும்
கல்வியைப் பெறுங்கள்
ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர்
அனைவரது
துன்பங்களையும் போக்குங்கள்.
படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம்
எனவே படியுங்கள்,
தகர்த்தெறியுங்கள் சாதியச் சங்கிலிகளை
வீசியெறிங்கள் பார்ப்பனிய வேதங்களை
- சாவித்ரிபாய் ஃபுலே

தீண்டப்படாதோரின் நிழல்களைத் தீண்டினாலும் தீட்டு என்று கருதப்பட்டுவந்த காலத்தில் தீண்டப்படாதோரின் தாகத்தைத் தணிக்க தவித்த வாய்க்குத் தண்ணீர்  தரக்கூட மனமற்றிருந்த சமயத்தில், சாவித்ரிபாய் ஃபுலே அவர்களும் மகாத்மா ஜோதி ஃபுலே அவர்களும் தீண்டப்படாதோருக்காக தங்கள் இல்லத்தினுள்ளேயே கிணறு எடுத்தனர்.  இதைப் பார்த்தாவது பார்ப்பனர்கள் மனம் திருந்தி தீண்டப்படாத மக்கள்பால் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வார்களா என்று பார்த்தனர்.  ஆயினும், இது நடந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்றும் கூட தலித் மக்கள் தண்ணிர் உரிமைக்குப் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது.

இழந்துபோன சமூக, கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டுமானால் கல்வி அவசியம் என்பதை மிகச் சரியாகச் சிந்தித்ததால், ஃபுலே தம்பதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி போதிக்க முன்கை எடுத்தனர்.  சாவித்ரிபாய் ஃபுலே 1852ல் தொடங்கி வைத்த 'மஹிளா  சேவா மண்டல்'  (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.  விதவைப் பெண்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற அக்கால சமூக வழக்கத்திற்கு எதிராக மும்பயிலும், புனேவிலும் நாவிதர்களின் வேலைநிறுத்தமொன்றை வெற்றிகரமாக நடத்துமளவு அவர் தீரம் கொண்டிருந்தார்.

1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு தீர்விற்கான பல ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர்.  பல மையங்களில் அவர்கள் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.  பாதிப்புற்ற மக்களிடையே பணியாற்றிய சாவித்ரிபாய் ஃபுலே,  பிளேக் நோயால் தாக்குண்டிருந்த ஒரு குழந்தைக்கு உதவப் போன இடத்தில் கிருமி தொற்றிக்கொண்டதால் மரணமடைந்தார்.

ஜான்சி ராணி, லட்சுமிபாய் போன்றோர் பெயரும், காந்தி-நேரு குடும்பத்தினரின் மனைவியர் பெயர்களும், தோழியர் பெயர்களும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றிருக்க, சாவித்ரிபாய் ஃபுலே போன்ற சரித்திர நாயகியின் பெயர் எப்படி விடுபடப் போயிற்று என்ற கேள்வியை, சிந்திக்கும் திறனுள்ள எவரும் கேட்கவே செய்வர்.

இருண்ட காலத்தில் உன்னதமான ஆசிரியப் பணியைத் துணிச்சலோடு மேற்கொண்ட சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது சிறப்பினை இந்தியப் பெண்கள் சமூகம் அறியாது.  இந்தியப் பெண்கள் கடக்கக் கூடாதென மன்னிக்கவே முடியாத எல்லைக் கோடுகள் கிழிக்கப்பட்டுவந்ததை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிந்தவர் அவர்.  அதற்காக இன்றைய பெண்கள் சமூகம் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும்.

(பர்தீப் சிங் ஆட்ரி அவர்களின் கட்டுரையை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் எஸ்.வி.வேணுகோபாலன்)

 

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. "கல்வி கற்றுக் கொள், போ
    சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள்
    வேலை செய்யுங்கள்,அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள்
    அறிவில்லாதிருந்தால்
    இழந்து நிற்போம் அனைத்தையும் -
    அறிவிழந்து போனால்
    நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்"

    இந்த வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது.
    சிறப்பான பதிவை தந்த மாதவராஜ் அவர்களுக்கு
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பெயர்களை இப்போது தான் அறிந்து கொள்வதால் சற்று வெட்கமாகவும்.

    சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணனையும், விஜயலட்சுமி பண்டிட்டையும், சரோஜினி நாயுடுவையும் தெரிந்த நமக்கு இவர்கள் தெரியாமல் போனது ஏன்?

    பகிர்வுக்கு மிக்க நன்றி வேணுகோபாலன் ஸார்.
    பதிவிட்ட அங்கிளுக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு மறைக்கப்பட்டதோ, அது போலவே தலித் மக்களின் எழுச்சியும்... சாவித்திரி பாய் பூலே பற்றி அதிகம் பேசப்படாததின் காரணம் நாம் அறிவோம்..

    அவர்களுடைய தன்னம்பிக்கையும், தைரியமும் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதவை..குறிப்பாக இளம் விதவைகளை வீட்டில் அடைத்து வைக்கும் பிற்போக்குத்தனத்துடன், அவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் மிருகத்தனமும் நடைபெற்றதை அவர் எதிர்த்துக் குரல் எழுப்பினார்... சரியாக அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  4. I remember to have seen a film called JOTHI BA PULE. Some may scold me.If the distance in time is reconsed what the Pule couple have done is beyond what Dr.Bhima rao Ambedkar and E.V.R has done to the Indian society......kashyapan.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!