அல்லல் படும் ஒரு மனிதரின் எதிரே ஒரு மாய தேவதை தோன்றி, நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால் அந்த மனிதர் என்னை மீண்டும் ஒரு குழந்தையாக்கி விடு என்று கேட்கக் கூடும். குழந்தையாக இருப்பதைவிட இன்பமான வரம் வேறு என்ன இருக்க முடியும் ! கவியரசு கண்ணதாசன் ஒருமுறை உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகில் இருக்க நேர்ந்தபோது, "அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும், ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்" என்று எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. என்னென்ன பிரச்சனைகளை அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சந்திக்குமோ, இப்போதைக்கு இனிமையாகத் தூங்கட்டும் என்பது அதன் சாரம். ஆனால், குழந்தையாகவே இருக்கும்போதும் இன்பமாக இருக்க விடுகிறோமோ என்பதை இந்தக் குழந்தைகள் தினத்திலாவது அசைபோடுவது நல்லது.
அன்பு கொண்டாடி ஆரத் தழுவி முத்தமிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்கப்படும் மரியாதை ஒரு குழந்தைக்கு, அதன் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களில் எவ்வாறெல்லாமோ தேய்ந்து எதிர்திசைக்குப் பயணம் செய்வதை நமது அன்றாடக் காட்சிகள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
குழந்தை பிறக்கிற சூழலில் அன்பு நிலையமாக நாம் அடையாளப் படுத்தும் வீட்டுக்குள், படிப்படியாக கண்ணுக்குப் புலனாகாத துறைகளின் அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. காவல்துறை, உளவு இலாக்கா, நீதிமன்றம் எல்லாம் நிறுவப்படுகின்றன. இவற்றின் துணை நிறுவனங்கள், நடமாடும் 'ஸ்பாட் ஃபைன்' ஏற்பாடு போன்றவை தனி. கள்ளம், கபடம் இல்லாது பிறக்கும் செல்வங்களுக்கு அன்னத்தோடு சேர்த்து, 'சூட்சுமமாக நடந்து கொள்வது எப்படி, நயமாக அடுத்தவர்களிடம் விஷயத்தைத் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வது எப்படி, சமயத்திற்கு ஏற்றாற்போல் காட்டிக் கொள்வது எப்படி, இன்னாரிடம் இப்படியும், அடுத்தவர்களிடம் அப்படியுமாய் பழகுவது எப்படி.....' என்று வாழ்வியல் - மன்னிக்கவும், பிழைப்பியல் கல்வி புகட்டப்படுகிறது. ஆனால், அப்பாவிக் குழந்தை எக்குத் தப்பாக இடம் மாற்றி ஏதாவது எசகு பிசகாகச் சொல்லிச் சிக்கிக் கொண்டுவிட்டால் தொலைந்தது, நடக்கிற நீதி போதனைகளைக் கேட்டால் குழந்தைக்குத் தலைசுற்றிக் கொண்டுவந்து விடும்.
இயற்கையை நேசிப்பது, வாழ்க்கையை இயல்பாக அணுகுவது, கேள்விகள் கேட்பது, அனுபவங்களைத் தாமாகப் பெறுவது, எதிர்ப்புணர்ச்சியோடு போராடுவது போன்றவை கொட்டிக் கிடக்கும் திறந்தவெளியில் குழந்தையைச் சுதந்திரமாக நடக்க விட்டால் குழந்தைகள் மட்டுமல்ல, சமூகமும் சேர்ந்தல்லவா வளரும் ! அதுதான் இங்கு மறுக்கப்படுவது. அது மட்டுமல்ல, பெரியவர்கள், குழந்தைகள் என்ற கோட்டை இஷ்டப்படிக்கு மாற்றி மாற்றிக் கிழித்து எப்படி நடந்தாலும் குழந்தைகள் அந்தக் கோட்டைக் கடந்த குற்றத்திற்கு ஆளாகுமாறு அமைக்கின்றன நமது நடவடிக்கைகள். இதெல்லாம் நீ தலையிடாதே, பெரியவங்க விஷயம் என்று சொன்ன அடுத்த நொடியில் வேறு ஒரு பிரச்சனையில், குழந்தையா நீ, இதெல்லாம் நீயா புரிந்து கொள்ள வேண்டாம் என்று வார்த்தைகள் வந்து விழுகின்றன.
உணவின் சுவையை குழந்தையாக உணர்ந்து ருசித்துச் சுவைத்துச் சாப்பிட விடாமல், ஊட்டி விடுவது. அந்த வேலையின் போக்கில் குழந்தை ஏதாவது ரகளை செய்தால், இந்த வயதில் உனக்கு என்ன ஊட்டி விடுவது ஊட்டி....என்று பாய்வது. இது உணவு என்றில்லை, எல்லாவற்றிலும் சுட்டிக் காட்ட முடியும். குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் முட்டி மோதி அறிந்து தெளிந்து முன்னேறுவதற்கான உதவியை மட்டும் செய்ய வேண்டியவர்கள், அந்த ஏற்பாட்டில் தேவையற்ற குறுக்கீடுகளை, அதுவும் வன்முறை கிளர்ந்த குறுக்கீடுகளைச் செய்வதும், தாங்களும் அலுத்துக் கொண்டு, குழந்தையையும் நோகடிப்பதையும் வேறு என்ன சொல்வது ?
தங்கள் கனவைக் குழந்தைகள் மீது சுமத்தி பளுவை ஏற்றிவிடுவது குழந்தைகளின் பள்ளிப் பருவத்தைப் பதட்டம் நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. அதன் வெடிப்புகள் அதிர்ச்சியான விளைவுகளைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. மதிப்பெண்களின் துரத்தல்கள் கல்வி கற்றலின் இனிமையைச் சாகடித்து, அச்சமூட்டுகிற ஒரு திகில் பயணமாக மாற்றப்படுகிறது. அதைக் கடந்துவருகிற வேட்கையோ, துணிவோ வளர்த்துக் கொள்ளாத குழந்தைகள் என்னென்ன செய்யத் தலைப்படுகின்றனர் என்கிற துயரமும், அவலமுமான செய்திகளை தினமும் நாளேடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாமும் அடுத்தவரோடு ஒப்பிடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறோம் என்பதை உணரவேண்டும். ஒப்பீடு முன்னேற்றத்திற்கான படிக்கட்டு அல்ல. குழந்தையின் சுயத்தை அழிக்கும் உருட்டுக்கட்டை அது.
குழந்தைகளின் கருத்தை மதிக்காமல் இருந்து கொண்டு, அவர்களை 'வீட்டுப் பொறுப்பு' அறிந்தவர்களாக வளர்க்க முடியாது. இந்த முரண்பாடு தான் தவிர்க்கக் கூடிய மோதல்களைக் குடும்பத்தில் உருவாக்குகிறது. சின்னஞ்சிறு பிஞ்சுகள் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்கிற செய்திகளை மேதாவித்தனத்தோடு கேட்டு நகர்ந்துவிடக் கூடாது. அவர்களது கவனிப்புத் திறன், பேச்சுமொழி, கண் ஜாடைகள்....எல்லா ஜாலங்களையும் ரசித்து ஊக்குவிப்பது வளர்ந்த பிறகும் மதிக்கப்படவேண்டும். 'பிறர்முன்னே மறந்தும் உரையாட மாட்டேன்' என்று யசோதை கண்ணனுக்கு உறுதிமொழி கொடுப்பதாக ஆழ்வார் பாடியிருப்பது (நாலாயிர திவ்விய பிரபந்தம்) கவனிக்கத் தக்கது. அடுத்தவர்முன் குழந்தையை மட்டமாகப் பேசக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்தவர்களை குழந்தைமுன் மட்டமாகப் பேசுவதும் பிறகு சிக்கல் ஏற்படுத்தக் கூடியது.
குழந்தைகளைப் போல் மறப்போம், மன்னிப்போம் பண்பு பெரியவர்களிடம் இலேசில் வந்துவிடாது. அதை அங்கீகரிக்கும் மனசு வேண்டும் நமக்கு. வீட்டின் விதிமுறைகளைப் பெரியவர்கள் மீறுவதைக் குழந்தைகள் சுவாரசியமாகக் கவனித்துக் குறும்பாக அம்பலப்படுத்தவும் செய்யும்போது, மனமுவந்து நமது பிழைகளை ஒப்புக் கொள்வது அவர்களது குணாம்சத்தையும் வளப்படுத்தும். அதைவிட்டு, நியாயப்படுத்தி இரைந்து பொரிந்து தள்ளி அவர்களை வாயடைத்துவிடுவது தவறான முன்னுதாரணங்களைத் தான் அவர்கள் மூளையில் பதியவைக்கும். பின்னர் அதன் தாக்கத்தில் அவர்கள் செயல்படும்போது தாங்க முடியாத சங்கடம்தான் மிஞ்சும்.
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்போது, அன்றைக்கு மட்டுமான பரிசளிப்பாகத் தேர்ந்தெடுத்தால், இனிப்பு ஒரு நாளோடு நாவினின்று அகன்றுவிடும். வேறு வகை பரிசுகளும் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் பரிசளிக்க யோசித்தால் அது இவற்றுக்கெல்லாம் மேலான பெருமையாக அமையும். நூல் வாசிப்பைப் புகட்டப் பெறும் குழந்தைகள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். வண்ண வண்ண சித்திரங்களில் வரி வரியாக அவர்களை உள் நோக்கி ஈர்க்கும் புத்தக உலகம் சொல்லிக் கொடுப்பது கதைகளையும், கற்பனைகளையும் மட்டுமல்ல...காலகாலத்திற்கும் தெவிட்டாத ரசனை உலகின் முகவரிதான் புத்தகம். எதிர்கால வாழ்க்கையிலும் மன உளைச்சல், மன அழுத்தம், தோல்வி மனப்பான்மை குடியேறாது வாழ்க்கையைச் சந்திக்கும் மந்திரங்களை அவை கற்றுக் கொடுக்கும். அப்படியான நூல்களைத் தேடக் கற்றுக் கொடுப்போம் குழந்தைகளுக்கு. அதற்கு நாமும் வாசிப்பை விட்டுவிடாதிருந்தால் இன்னும் கூடுதல் இன்பமாக அமையும் அந்தத் தேடல்.
அல்லல்படும் மனிதரிடம் மாய தேவதை தோன்றி, நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று முதலில் நாம் சந்தித்த கேள்விக்கு, குழந்தைகள் நிரம்பிய சூழலில் அன்பு கொண்டாடியாக வாழ விரும்புகிறேன் என்ற பதிலை அந்த மனிதருக்குச் சொல்லத் தெரிந்திருக்குமானால், அதைவிட இன்பமான வரம் வேறு என்ன வேண்டும்?
(இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எழுதியவர் நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன்)
குழந்தையாக மாறுவதும் குழந்தையைக் கொண்டாடுவதும் கைகோர்க்கிற காலம் உலகம் முழுக்க குழந்தைகள் அலைகிற மாதிரி இருக்கும். அழகு
பதிலளிநீக்குஅவசியமான பதிவு. அவ்வப்போது ரெஃபர் செய்யவேண்டி இருக்கும் எனக்கு!
பதிலளிநீக்குதோழர் வேணுகோபாலன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து விடுங்கள்.
பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!
//அன்பு கொண்டாடும் உலகம் வேண்டும் // அடடே. ஆமாங்க மாதவராஜ். பிடிக்காதவங்க யார் யாருன்னு தொடர் பதிவு போட்டு அன்பு கொண்டாடனும். அருமை போங்க.
பதிலளிநீக்குஅன்புள்ள தோழரே
பதிலளிநீக்குகுழந்தைகள் தினமும் கூட மற்றைய தினங்களைப் போல இயந்திரகதியில் கொண்டாடப்படுவது வருந்தத்தக்கது.. தோழர் எழுதிய கட்டுரை, குழநதைகள் குறித்த அணுகுமுறை பற்றிய ஒரு சுயபரிசோதனையை நாம் ஒவ்வொருவரும் செய்யுமாறு துர்ண்டுகிறது.. கள்ளமில்லா குழந்தைகளின் உலகத்தில் கள்ளத்தை, கபடத்தை புகுத்துவதும் நாம் தான்.,.. பின்னொரு நாளில் குழந்தை எப்படி தான் இப்படி கள்ளம் பயின்றதோ என்று வைவதும் நாம் தான்... குழந்தை வளர்ப்பு குறித்து நாம் நிறைய சிந்திக்கவும், பகிர்ந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது..
குழந்தைகள் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளவும், கற்கவும் நாம் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.. குழந்தைகளை உடைமைப் பொருளாகப் பார்க்கத் துவங்கினால் அங்கு உணர்வு பூர்வமான உறவுக்கு இடமில்லை..
an article sympathetic with children,written for adults.
பதிலளிநீக்குDeepa (#07420021555503028936) said...
பதிலளிநீக்குஅவசியமான பதிவு. அவ்வப்போது ரெஃபர் செய்யவேண்டி இருக்கும் எனக்கு!
தோழர் வேணுகோபாலன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து விடுங்கள்.
பகிர்ந்த உங்களுக்கும் நன்றி! //
வழிமொழிகிறேன்.
இயற்கையை நேசிப்பது, வாழ்க்கையை இயல்பாக அணுகுவது, கேள்விகள் கேட்பது, அனுபவங்களைத் தாமாகப் பெறுவது, எதிர்ப்புணர்ச்சியோடு போராடுவது போன்றவை கொட்டிக் கிடக்கும் திறந்தவெளியில் குழந்தையைச் சுதந்திரமாக நடக்க விட்டால் குழந்தைகள் மட்டுமல்ல, சமூகமும் சேர்ந்தல்லவா வளரும் !
பதிலளிநீக்குநான் மிகவும் ரசித்த உணர்ந்த வரிகள்
என் போன்ற இளம் பெற்றோரின் கண்ணாடியாக அமைந்த பயனுள்ள கட்டுரை.
வாழ்த்துக்கள் திரு வேணுகோபால்
அழகுமுகிலன்
.
பதிலளிநீக்குஅன்புள்ள தோழரே
பதிவிற்கு வருகை தந்த குழந்தை கொண்டாடிகள் அனைவருக்கும் எனது நேயமிக்க வாழ்த்துக்கள்.
அதன் வரிகள் சிலவற்றை மிகவும் ரசித்து அது குறித்துப் பேசியிருப்பது மகிழ்வாகவும், பெருகையாகவும் இருந்தது.
திரும்பத் திரும்ப ரெஃபர் செய்ய வேண்டும் என்று பதிவு செய்திருக்கும் தீபா, வழிமொழிந்திருக்கும் அமிர்தவர்ஷனி அம்மா மற்றும் வாழ்த்தியிருக்கும் எஸ் காமராஜ், வேல்ஜி, அழகு முகிலன் ஆகியோருக்கு நன்றி. பவித்ரபாலுவின் சிறப்புப் பதிவிற்கு சிறப்பு நன்றி.
எஸ் வி வேணுகோபாலன்
/***இதெல்லாம் நீ தலையிடாதே, பெரியவங்க விஷயம் என்று சொன்ன அடுத்த நொடியில் வேறு ஒரு பிரச்சனையில், குழந்தையா நீ, இதெல்லாம் நீயா புரிந்து கொள்ள வேண்டாம் என்று வார்த்தைகள் வந்து விழுகின்றன***/
பதிலளிநீக்குஉண்மை....