கடவுளும் கர்நாடகா சினிமாவும்

 

MANJUL081109pol

அப்பாடி! என்று பெருமூச்சு விட்டு நிற்கிறது பி.ஜே.பி கட்சி. பத்து நாட்களுக்கும் மேலாக நடந்த பிரமாதமான நகைச்சுவைப் படத்திற்கு இப்போது இடைவேளை விடப்பட்டு இருக்கிறது. கடவுள் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

பதவியேற்ற உடனேயே முதல்வர் அறையை பூஜை அறையாக்கி, ஹோமகுண்டம் எல்லாம் அமைத்தவர் எடியூரப்பா. கர்நாடகத்தின் அனைத்துக் கோவில்களுக்கும் சென்று காணிக்கை செலுத்தி வந்தவர் எடியூரப்பா. ஆனாலும் கடவுள் அவரை சோதிக்க ஆரம்பிக்கிறார். படம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

அவருடைய பி.ஜே.பிக் கட்சியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்கள் 41 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை ஓளித்துவைத்துக்கொள்கின்றனர்.  ‘இப்ப என்ன செய்வே’ என அதிபயங்கர சவால் விடுகின்றனர். எடியூரப்பா முதல்வர் பொறுப்பிலிருந்து விலகினால்தான் அந்த எம்.எல்.ஏக்களை உலகுக்கு காட்டுவதாக அறிவிக்கின்றனர். ”நீங்கள் கட்சியை பிளாக் மெயில் செய்கிறீர்களா” என நிருபர்கள் அவர்களிடம் கேட்கின்றனர். “இல்லை. கடவுள் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு” என்கின்றனர் அவர்கள். சஸ்பென்ஸ் கூடுகிறது. கடவுள் என்ன செய்யப் போகிறார் என பார்வையாளர்கள் இருக்கைகளின் விளிம்பில் வந்து உட்கார்கின்றனர்.

கால் வாரப்பட்டு விழுந்த நிலையிலும் “நான் நிறைய காணிக்கை செலுத்தி இருக்கிறேன். கடவுள் என்னை கைவிட மாட்டார்” என்று தன்னம்பிக்கையோடு இருக்கிறார் எடியூரப்பா. தன் பங்குக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கோவாவுக்கு இன்பச் சுற்றுலா அனுப்பி வைக்கிறார். ‘கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்’ பாடலின் ரீமேக் அமர்க்களப்படுத்துகிறது.

கட்சியை என்ன செய்வது தெரியாமல் மேலிட பா.ஜ.க தலைவர்கள் கர்நாடகம் வந்து சேர்கின்றனர்.  காட்சிகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கின்றன. கடவுளின் மீது பாரத்தைப் போட்டு, எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர் கைகளிடையே துண்டைப் போட்டு பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பார்க்கின்றனர். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவரது விசுவாசியான ஷோபா என்பவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டிய நிலைமைக்கு எடியூரப்பா தள்ளப்படுகிறார். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் “என்ன நம்பியவர்களை பலிகிடா ஆக்கிவிட்டேன். முதல்வர் பதவியில் நீடிக்க இதைச் செய்ய வேண்டியதாகிவிட்டது. கடவுளும் என்னை மன்னிக்க மாட்டார்” என கன்னட தொலைக் காட்சியில் கண்ணீர் விட்டு அழுது காண்பித்திருக்கிறார் எடியூரப்பா. உருக்கமான நடிப்பு. அத்தோடு இடைவேளை.

ஷோபாவின் ஆதரவாளர்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிக்கொண்டு இருக்கின்றனரே, எவ்வளவு பேர் சாகப் போகிறார்கள்? எடியூரப்பா இந்த தடவை தப்பலாம், அடுத்த தடவை தப்ப மாட்டார் என, முதல் ரவுண்டு வெற்றியில் இருக்கும் ரெட்டி சகோதரர்களின் அடுத்தக் கட்ட தாக்குதல் என்ன? ரெட்டி சகோதரர்களை எப்படி வஞ்சம் தீர்க்கப் போகிறார் எடியூரப்பா? ”நடந்தது, நடப்பது, நடக்கப் போவது’ அறிந்து பேசுகிற கடவுள் இதையெல்லாம் எப்படித் தீர்த்து, தன் பக்தர்களை மனம் கோணாமல் பாதுகாக்கப் போகிறார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் காலத் திரையில் விரைவில்...

கடவுள் ரொம்ப களைப்பாயிருக்கிறாராம். கால்ஷீட் பிரச்சினையிலும் அவதிப்படுகிறாராம்.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //கடவுள் ரொம்ப களைப்பாயிருக்கிறாராம். கால்ஷீட் பிரச்சினையிலும் அவதிப்படுகிறாராம்.//

  :)
  கடவுள் எதிரே வந்தால் சத்தியம் வாங்கி வைத்துக் கொள்வார்கள்

  பதிலளிநீக்கு
 2. மோசமான நிலைமை தாங்க பிஜேபிக்கு : )

  ஆனா, நம்ம ஊரு பெரியவர், முல்லைப் பெரியாறு போராட்ட நாடகம் நடத்த முயன்று, காங்கிரஸ் மேலிடம் ராஜாவுக்கு சிபியை ரெய்டு மூலம் ஆப்பு வைக்க, உடனே போராட்டத்தை தள்ளி வைத்த திராவிட சிங்கத்தைப் பற்றியும் ஒரு ஆக்ஷன் பதிவு போடுங்கய்யா : )

  பதிலளிநீக்கு
 3. தோழர், இது தொடர்பான எனது பதிவு இது. பாருங்கள்.

  http://savukku.blogspot.com/2009/11/blog-post_09.html

  பதிலளிநீக்கு
 4. This has been happening in all parties and in all countries.

  Some months back we had issues in Kerala (achudaanandhan and state party president, earlier in cong with anthony, karunaakaran),

  in DMK it happened with Vaiko & 9 district secretaries. Even in congress it happended when seethrama kesari period sarath pawar left.

  In TMK chidambaram left from Mooppanaar.

  பதிலளிநீக்கு
 5. How is you party in Kerala. It is VS vs PV. Both were reprimanded by high command.The fighting is not over.Dont worry in the next election LDF will lose and they will have more time to fight.

  பதிலளிநீக்கு
 6. மக்கள் சேவைக்க்காகவே இந்த பாடு..

  பாவம் மக்களும் கடவுளும்..

  அந்த பேர் கரந்த்லஜே” மனதில் புன்னகையுடன் உறுத்திக்கொண்டிருக்கிறது மாதவ்.

  இடையூரப்பாவை வேண்டுமானால் அண்ணன் அஞ்சாநெஞ்சனிடம் பயிற்சியெடுக்க சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 7. ராபின்!
  கோவி கண்ணன்!
  பின்னோக்கி!
  கபிலன்!
  கதிர்!
  கிரகம்!

  ரசித்ததுக்கு நன்றி.

  சவுக்கு!
  அந்தப் பதிவைப் படித்தேன். நிஜமாக சவுக்கால் விளாசி இருக்கிறீர்கள்.

  குப்பன் யாஹூ!
  கேரளாவில் சி.பி.எம்மில் உள்ள பிரச்சினையை, கர்நாடகாவில் உள்ள பிரச்சினையோடு ஒப்பிட முடியாது என நினைக்கிறேன். முதலில் இப்படி மலிவான கோஷ்டி சண்டை கிடையாது. மாநிலத்தில் பிரச்சினை இருப்பினும், கட்சித்தலைமையை இருவருமே மதித்தார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் உயர்மட்டத்திலிருந்தாலும் கட்சி அவர்கள் இருவருக்கும் தண்டனை கொடுத்ததும், இருவரும் ஏற்றுக்கொண்டதும் ஊர் அறிந்தது. பார்த்தது.

  அனானி!
  உங்களைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது!!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!