மீண்டும் மைக்கேல்மூர், மீண்டும் ஒபாமா, மீண்டும் நான், மீண்டும் அனானிகள்

 

Itsdifferent என்னும் நண்பர், சென்ற பதிவிற்கு 14வது பின்னூட்டமாக ஒரு தகவலைத் தெரிவித்திருந்தார். “நோபல் பரிசு குறித்து ஒபாமாவுக்கு இரண்டாவது கடிதத்தை மூர் எழுதி இருக்கிறார். அவரது நிலைபாடு இப்போது மென்மையாய் தெரிகிறது” என தெரிவித்திருந்தார். இன்று காலையில்தான் மெயிலில் பார்த்தேன். லிங்க் மூலம் மூரின் இரண்டாவது கடிதத்தையும் படித்தேன். அதுகுறித்து நம் மக்களிடம் சொல்ல வேண்டியதும், பதிவு செய்ய வேண்டியதும் அவசியம் என நினைத்தேன். சட்டென்று அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

வேறொன்றுமில்லை. சில நாட்களாக அனானிகள் மாறி மாறி பின்னூட்டங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வேலைவெட்டி இல்லாமல் தினமும் எதாவது பதிவு போடுவதற்கு துடித்துக்கொண்டு இருக்கிறேனாம். அரைகுறையாம். தெரிந்ததையெல்லாம் உளற ஆசைப்படுகிறேனாம். பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள். பாவமாய் இருக்கிறது. நன்றாகத் தெரிந்தவர்கள்தான் அவர்கள். (statcounter லிங்க் மூலம் சென்று recent visitors activityயில் கிளிக் செய்தால் யார் வந்தது, எப்போது பின்னூட்டம் இடப்பட்டது என்பதைத்தான் பார்க்க முடிகிறதே! தொடர்ந்து கண்காணித்தால் போதும்.) ஏன் இப்படி அனானியாக வந்து புலம்ப வேண்டும் எனத் தெரியவில்லை. நேரடியாகவே சொல்லித் தொலைக்கலாமே. நான் ஒன்றும் மறுக்கப் போவதில்லையே.

எல்லாம் தெரியும் என்று நான் நினைத்தால் என்னைப் போல் ஒரு முட்டாள் இருக்க முடியாது. என்னளவில் தெரிந்ததை, என் சிற்றறிவுக்குப் புரிந்ததை பதிவுலகத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அதுகுறித்த கருத்துக்களை, ஆரோக்கியமான எதிர்வினைகளை உள்வாங்கிக் கொள்கிறேன். அந்த விவாதத்தில் சில வெளிச்சங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து என்னை வெளிப்படுத்துகிறேன். தேடியறியும் காரியம்தான் இதுவும். அரைகுறைகள் தேடித்தான் ஆகவேண்டும். எல்லாம் தெரிந்துவிட்டால் இந்த லேப்டாப் எதற்கு? பிளாக் எதற்கு? இந்த அனானிகள் எதற்கு?

உன்னைப்போல ஒருவனைத் தொடர்ந்து எழுதினேனாம். இப்போது நோபல் பரிசைப் பற்றித் தொடர்ந்து எழுதுகிறேனாம். நாளை என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாவிட்டால் அவர்கள் மண்டை உடைந்து விடுமாம். (ஐயோ! இந்தப் பாவமும் எனக்கு வந்து சேர வேண்டுமா!) நான் என்ன செய்யட்டும், ஆனானப்பட்ட மைக்கேல் மூரே, ஆனானப்பட்ட ஒபாமாவைப் பற்றி நேற்றும், இன்றுமாய் தொடர்ந்து எழுதும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?

 

பாமா நோபல் பரிசு பெற்றதையொட்டி மைக்கேல் மூர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தை இரண்டு தினங்களுக்கு முன் பதிவு செய்திருந்தேன். நேற்று மூர் தனது இரண்டாவது கடிதத்தை எழுதி இருக்கிறார். (முழுமையாக கடிதத்தைப் படிக்க விரும்புவோர் இங்கு சென்று படித்துக் கொள்ளுங்கள்.) அதில் உள்ள முக்கிய விஷயங்களை மட்டும் இப்போது பகிர்ந்து கொள்வோம்.

நான் கடிதத்தை எடுத்துத் திரும்பவும் படித்தேன். ஒபாமாவின் முக்கிய தினத்தைக் கிழித்து நேற்று முழுவதும் வலதுசாரி இயந்திரங்களின் வெறுப்பு உமிழ்ந்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். இடதுசாரிகளான நானும் மற்றவர்களும் அதையேச் செய்வது எப்படி சரியாய் இருக்கும் எனத் தோன்றியது.

என கடிதத்தின் ஆரம்பத்தில் தனக்குள் மாற்றம் வேண்டும் என்பதை அவர் உணருகிறத் தருணம் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில், ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்கு அதிகார மையங்களிலிருந்தே கண்டனங்கள் வருவதைப் பார்க்கிற மூர், ஒபாமா குறித்து இந்த நேரத்தில் எப்படி புரிந்து கொள்வது என முயற்சிக்கிறார். இந்த கடிதத்தின் சாராம்சமே அதுதான்.

நாம் தொடர்ந்த யுத்தங்களால் சலிப்புற்று, களைப்புற்று இருக்கிறோம். இந்த இரண்டு யுத்தங்களில் நாம் செலவிட்ட பெரும் தொகை ஏறத்தாழ இந்த தேசத்தை பொருளாதார ரீதியாகவும், மனோரீதியாகவும்  திவாலாக்கி இருக்கிறது. ஈராக்கில் யுத்தத்திற்கு செலவிட்ட தொகையின் மூலம், மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். நமக்காக ஒபாமா மெல்ல பயணமாகிறார். பைத்தியக்காரத்தனமான எட்டு வருடங்களை நல்ல திசைக்குத் திருப்பும் இந்த முயற்சியில் நாம் அவரோடு இருக்கிறோமா என பார்க்கிறார். யாரால் இதனை ஒன்பது மாதங்களில் செய்ய முடியும்? அவர் என்ன சூப்பர்மேனா?

என்று கேள்வி எழுப்பி “ மாறுதலுக்கான நமது வாழ்வின் நம்பிக்கையை புறம் தள்ளிவிடக் கூடாது” என்று வலியுறுத்துகிறார்.

“அவர் என்ன செய்துவிட்டார்? அவருக்கு ஏன் இந்த நோபல் பரிசு” என பலர் கேட்கிறார்கள்?. அவர் அமெரிக்காவுக்கு அதிபராகி இருக்கிறார். அதற்குத்தான் இந்தப் பரிசு!

என மூர்க்கத்தனமான புஷ்ஷின் அத்தியாயம் முடிக்கப்பட்டதும், உலகத்தின் அச்சத்தைப் போக்கியதுமே  நோபல் பரிசு பெறுவதற்கு போதுமான தகுதிகள் என விளக்குகிறார்.  தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இரண்டாவது முறையாகவும் நோபல் பரிசு பெறுகிற மனிதராய் ஒபாமா விளங்க வேண்டும் என்று கடிதத்தை  முடிக்கிறார்.

மாறுதல்களை நோக்கி அமெரிக்காவையும், உலகத்தையும் நகர்த்த வேண்டும் என்னும் மூரின் கனவுகளே கடிதத்தில் எழுத்துக்களாய் விதைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகாரத்தின் பிடியில் இறுகி இருக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா என்ன செய்யப் போகிறார் என்பதை இப்போதைக்கு காலம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது. கடந்தகால வரலாறு வேறு செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கிறது. மைக்கேல் மூருக்கும் அது தெரியும் என்பதுதான் சுவாரசியம்.

 

பூக்களிலிருந்து சில புத்தகங்களுக்கு ஏராளமான சுட்டிகள் வந்து கொண்டு இருக்கின்றன. நிறைய வலைப் பக்கங்களையும் படிக்கிறேன். பலரது எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்கின்றன. அவர்களது மொத்த வலைப்பக்கப் பதிவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டு இருக்கிறேன். எழுத ஆரம்பத்ததிலிருந்து அவர்கள் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும், மாறி இருக்கிறார்கள் என்பதும் புரியமுடிகிறது! அந்தப் புரிதலோடு ‘என்னைக் கவர்ந்த பதிவர்கள்’ என்று மாதத்திற்கு குறைந்த பட்சமாக இருவரையாவது அடையாளம் காட்ட நினைத்திருக்கிறேன். நாளை அதில் முதலாமவர்.....!

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //எல்லாம் தெரியும் என்று நான் நினைத்தால் என்னைப் போல் ஒரு முட்டாள் இருக்க முடியாது. // - உண்மை. எல்லாம் தெரியும் என்பவர்களால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாது.

  //என்னளவில் தெரிந்ததை, என் சிற்றறிவுக்குப் புரிந்ததை பதிவுலகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.// தொடர்ந்து செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஒபாமாவுக்கு நோபல் பரிசு


  ஒபாமாவுக்கு அல்ல
  அமெரிக்காவுக்கு
  நோபல் பரிசு

  செய்த
  சாதனைக்காக அல்ல
  செய்யக் கூடாது என்ற
  போதனைக்காக

  பாராட்டுவதற்காக அல்ல
  மனிதநேயம்
  வலியுறுத்துவதற்காக

  போதும் ரத்த ஆறு
  அதன் ஊற்றுக் குழி அடைக்க
  பலி தருகிறோம்
  உலக உன்னத நோபல் பரிசையே
  என்ற அகிம்சை வதை

  மனித மாமிச
  உண்ணா விரதம் காக்க
  உலக கௌரத்தையே
  உணவாய்ச் சமைத்த விருந்து

  இந்த அழகான திரிஷ்டிப் பூசணியைக்
  கழுத்தில் மாட்டிவிட்டால்
  நரபலி கேட்கும் சாத்தான்
  வாக்குறுதி மீறி வெறிகொண்டாலும்
  அடக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு

  இனியும் ஓர் ஆயுதம்
  அமெரிக்கக் கைகளில் முளைத்தால்
  அது குடிக்கப்போவது
  முதலில்
  நோபல் பரிசின்
  குறை உயிரைத்தான்

  அன்புடன் புகாரி

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் தெரியும் என்று நான் நினைத்தால் என்னைப் போல் ஒரு முட்டாள் இருக்க முடியாது. என்னளவில் தெரிந்ததை, என் சிற்றறிவுக்குப் புரிந்ததை பதிவுலகத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அதுகுறித்த கருத்துக்களை, ஆரோக்கியமான எதிர்வினைகளை உள்வாங்கிக் கொள்கிறேன். thats all!

  பதிலளிநீக்கு
 4. அனானிகளை கண்டுக்காதிங்க தோழர்

  பதிலளிநீக்கு
 5. //மாதத்திற்கு குறைந்த பட்சமாக இருவரையாவது அடையாளம் காட்ட நினைத்திருக்கிறேன்.//

  வரவேற்க வேண்டிய விசயம்

  பதிலளிநீக்கு
 6. ஏய் ஒபாமா.

  உனக்கு தில் இருந்தால் என்னுடைய முட்டுசந்தில் வந்து என்னுடன் நேரடியாக மோதிப்பார்...

  இப்படிக்கு
  முருகேசன்

  பதிலளிநீக்கு
 7. ராபின்!
  நிச்சயமாய் தொடருவேன்.

  அன்புடன் புகாரி!
  //இனியும் ஓர் ஆயுதம்
  அமெரிக்கக் கைகளில் முளைத்தால்
  அது குடிக்கப்போவது
  முதலில்
  நோபல் பரிசின்
  குறை உயிரைத்தான்//
  சரியாகச் சொன்னீர்கள்


  வால்பையன்!
  ஆனா அவங்களப் பாத்தா பாவமா இருக்கே....


  ரவிக்குமார்!
  நன்றி தோழா!


  கதிர்!
  நன்றி.


  செந்தழல் ரவி!
  நீங்க சும்மா ஒண்ணும் சொல்ல மாட்டீங்க. ஆனா புரியலையே...

  பதிலளிநீக்கு
 8. அனானிகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நேரத்தில் உங்களின் ஆக்க பூர்வ சிந்தனைகள் எழுதுங்கள் சார் அவர்கள் கிடக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 9. நேசமித்ரன்!
  மிக்க நன்றி.
  அப்படியே ஆகட்டும்.

  பதிலளிநீக்கு
 10. தோழர் வணக்கம்...

  சிவப்பைக் கண்டால் பல மிருகங்கள் மிரளத்தான் செய்யும்.

  அதற்காக சிவப்பு, நிறம் மாறிவிட முடியுமா... அதன் இயல்பை இழந்துவிட முடியுமா?

  நீங்கள் தொடருங்கள்... அனானிகளை முதலில் விட்டு, அப்புறம் வெட்டுவோம்!

  -சிவா

  குறிப்பு: இப்போது நான் தங்களுக்கு பின்னூட்டம் இடுவது புதிய மின்னஞ்சலிலிருந்து. ஒரு மாறுதலுக்காக நோக்கியாவின் ovi!

  Shankar07@ovi.com

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!