என்னைத் தூக்கிச் சென்ற ராட்சசக் கழுகு

 

“அவம்பாட்டுக்கு இருந்த எம்புள்ளைய ராட்சசக் கழுகு மாதிரி வந்து தூக்கிட்டுப் போயிட்டான்” என்று என் அம்மா அடிக்கடிச் சொல்வார்கள். பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக இருந்தவரும், ‘ராமையாவின் குடிசை’, ‘என்று தணியும்’ ஆவணப்படங்களின் இயக்குனரும், மிகச்சிறந்த மேடைப் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார்தான் அந்த ராட்சசக் கழுகு. அப்போது அவர் எங்கள் தொழிற்சங்கத்தில் பொதுச்செயலாளராய் இருந்தார். சாத்தூரில் மூன்றரை வருட காலம் பணிபுரிந்துவிட்டு, சொந்த ஊர்ப்பக்கத்தில் மாறுதல் வாங்கிச் சென்ற சில காலத்தில் அம்மா இப்படி புரிந்து கொண்டார்கள். காந்தி, நேரு, காமராஜ் என்று காங்கிரஸ் தலைவர்களாய் இருந்த எங்கள் வீட்டிற்குள் வேறொருவனாகி இருந்தேன். கிருஷ்ணகுமாரிடம் இருந்து கடிதம் வந்தால் போதும். அம்மா அன்று முழுவதும் அவரை வசவு பின்னி எடுத்து விடுவார்கள். “இதோ கெளம்பிருவான். இனும் எப்ப வருவானோ? இப்படி அலைஞ்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும். கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்துல சேந்தா உருப்படவா?. என்னதான் சொல்லி எம்புள்ளையக் கெடுத்தானோ அவன்.” என்று ஆரம்பிக்கும் அம்மாவின் வருத்தம், சாத்தூருக்கு புறப்படும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்.

அம்மாவின் புரிதல் அவ்வளவுதான். புறச்சுழல்களே விதிகளாய் மாறுகின்றன என்பதை நான் விளக்க முற்பட்டதில்லை. தொழிற்சங்கம் என்றால் என்ன என்று அறிந்திராத எனக்கு முதல் போஸ்டிங், சாத்தூரில் இருந்த எங்கள் தலைமையலுவலகத்தில் போட்டததிலிருந்து திசை மாற ஆரம்பித்தது. வெப்பம் மிகுந்த அந்தக் காலக்கட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெரிய ஈடுபாட்டோடு நான் இணையவில்லை. சங்கத்தின் பொதுச்செயலாளராய் இருந்த அவரோடு பேசுவதற்கே எல்லோரும் தயங்கினார்கள். நிர்வாகம் அப்படி ஒரு கெடுபிடியை ஏற்படுத்தியிருந்தது. அதை நானேதான் உடைத்துக் கொண்டேன்.

ஒருநாள் சாயங்காலம் மெயின் ரோட்டில் எதற்காகவோ நடந்து போய்க்கொண்டு இருந்தபோது ஒரு இடத்தில் சின்னதாய் கூட்டம் நின்றிருந்தது. பாம்பை வைத்துக் கொண்டு ஒரு வித்தைக்காரன் தெளிவாக, வேகமாக, அவர்களுக்கே உரிய சுருதியோடு பேசிக்கொண்டு இருந்தான். தள்ளி சென்று கொண்டிருந்த எனக்கு அந்த கூட்டத்தில் கிருஷ்ணகுமார் நின்று கொண்டிருந்தது ஆச்சரியத்தை தந்தது. பின்னால் சென்று அந்த உயரமான மனிதரின் முதுகில் தட்டி "ஹலோ" என்றேன். திரும்பிப் பார்த்தவர் முகமெல்லாம் சட்டென மலர்ந்தவராய் "நீங்க மாதவராஜ்தான... ஏ.சி.டில வேலை பாக்குறீங்க இல்ல.." என ஒன்றிரண்டு தடவை பார்த்திருந்தாலும் மிகச் சரியாக சொன்னார். "நீங்க இங்க நிக்குறீங்க..?' சின்ன கேள்வியோடு நான் இழுக்க, "நின்னா என்ன..அவனோட பேச்ச கவனிங்க.. அது ஒரு கலை. கூட்டத்தை எப்படி தன் பக்கம் வைத்திருக்கிறான் பாருங்க" என்றார். சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பி ஒருமுறை பார்த்துக் கொண்டார். தோளில் ஜோல்னாப்பை தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி "வாங்க ஒரு டீ சாப்பிடலாம்" என்று பதிலை எதிர்பாரமலேயே நடக்கத் தொடங்கினார். கூடவே சென்றேன்.

அந்தக் கடையிலேயே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அவரே பேசினாலும், அவ்வப்போது நான் பேசியதையும் ரசித்துக் கொண்டார். என்னிடம் இருந்த இலக்கிய ஆர்வத்தை புரிந்து கொண்டவராக பாரதியை, இந்திராபார்த்த சாரதியின் குருதிப்புனலை, பாலைவனச்சோலை படத்தை, செம்மீனை, கந்தர்வனின் மீசைக் கவிதையை, சிவாஜி கனேசனை என உரையாடல் பற்றி படர்ந்து சென்று கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஓவ்வொரு விஷயத்திலும் அவரிடம் தெரிந்த தீர்க்கமும், நுட்பமும் முற்றிலும் என்னை வசப்படுத்தியிருந்தன. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாமே என்றுதான் பிரிந்தேன்.

அவ்வப்போது அவரைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்த நான், அவரோடு சங்க அலுவலக்த்திலேயே தங்க நேர்ந்ததுதான் ஒட்டுமொத்தமாக என் வாழ்வை மாற்றியமைத்தது. அதுவும் ஒரு விபரீதமாகவே நிகழ்ந்தது. சாத்தூரில் தங்கியிருந்த காலங்களில், முதல் ஒரு வருடத்திற்குள் வேறு வேறு  இடங்களுக்கு எங்கள் ஜாகையை மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. ஒரு இடமும் சரியாக அமையவில்லை. ஐந்தாவதாக கமர்சியல் டாக்ஸ் ஆபிஸின் மாடி கிடைத்தது.

சாயங்காலமானால் எதோ வெறுமை சூழ்ந்து கொள்ள, பிடிப்பற்ற வாழ்வில் எதையோ தேடுவது போல இருக்கும். அறைக்கு பெரும்பாலும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகுதான் போவேன். காலையில் எல்லோரும் குளித்து முடித்துக் கிளம்பிய பிறகுதான் எழுந்து சோம்பல் முறிப்பேன். வங்கியில் வேலை முடிந்த பிறகு சினிமா, பழைய ரூமில் உள்ள நண்பர்களோடு அரட்டை, பேக்பைப்பர் விஸ்கி என்று கழியும். பாண்டுகுடியிலிருந்து சாத்தூருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருந்த காமராஜ் சாயங்கால நேரங்களில் வந்து ஒரு சிகரெட் குடித்துவிட்டு எதாவது புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பான். எப்போதாவது சீக்கிரத்தில் அறைக்குச் சென்றால் ஜீவாவை பாடச் சொல்லி தாளம் போட்டு கூத்தடிப்போம்.  அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தங்கமாரியப்பனுக்குத்தான் இந்த சத்தங்கள் அவ்வளவாக பிடிக்காது.

அந்த அந்தி வேளையில் எங்கள் அறை களை கட்டியிருந்தது. அழகப்பனும் வழக்கத்தை மீறி உற்சாகமாயிருந்தான். திடுமென கதவைத் தள்ளிக் கொண்டு நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தார்கள். கூட இருக்கிற அறை நண்பர்களைப் பார்க்க வந்தவர்களாய் தோன்றவில்லையென்றாலும், "யார் வேணும்" என்றேன். "உனக்கு எந்த ஊருடா" என்று மிரட்டலாக பதில் வந்தது. விபரீதமாய்த் தெரிந்தாலும், "என்ன மரியாதையில்லாம பேசுறீங்க" என்று கேட்பதற்குள் முன்னால் இருந்தவன் வேகமாக பெல்ட்டை சுழற்றினான். எதிர்பாராத சுளீரால் நிலைகுலைந்து நிதானிப்பதற்குள் பெல்ட்டை மீண்டும் சுழற்றினான். தடுப்பதற்கு உயர்ந்த என் முன்னங்கையில் பெல்ட் சுற்றியது. சுண்டி இழுக்கவும் பெல்ட்  என் கைக்கு வந்தது. தைரியம் கொண்டு மோசமான கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டு பெல்ட்டை ஒங்கிய நான் அந்த கணத்தில் பின்னால் நின்றவனின் அசைவைப் பார்த்தேன். தோளுக்குப் பின்னால் இருந்து நீண்ட அரிவாள் அவன் கைகளுக்கு மின்னல் போல வந்தது.

ஒரு கணம்தான். சர்வாங்கமும் நடுங்கிப் போக, தப்பித்துக் கொள் என்று உள்ளுக்குள் அலறியது. பின்பக்கம் திறந்திருந்த வாசல் வழியே ஒட்டமெடுத்தேன். யாரோ துரத்துவது தெரிந்தது. வாசலைத் தாண்டி பரந்திருந்த சின்ன மொட்டை மாடியைக் கடந்து, சுவரை தாண்டி கீழே சரிந்திருந்த ஓடுகளில் உட்கார, வழுக்கி கீழே போய் குதித்தேன். அது கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தின் பின்பக்கம். உள்ளேயிருந்து இரண்டு பேர் வேகமாக அருகில் வந்து 'என்ன சார்...என்ன சார்" என்று பதறினார்கள். மூச்சு வங்கிக்கொண்டு "மேலே யார்னு தெரில ..கொஞ்சம் பேர் வந்து அடிக்கிறாங்க" என்றேன். எனக்குப் பின்னால் அழகப்பனும் என்னைப் போலவே ஓடுகளின் வழியே கீழே வந்து சேர்ந்தான். ஓடுகளில் உட்காராமல் குதித்ததால், ஓடுகள் காலை அங்கங்கு வசமாக கிழித்து விட்டிருந்தன. சிராய்ப்புகளில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பரிதாபமாக நின்றிருந்தான். மேலே சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஜீவாவும், தங்கமாரியப்பனும் மாட்டிக் கொண்டு விட்டார்கள். என்ன ஆச்சு என்று தெரியாமல் தவிப்பாயிருந்தது. அதற்குள் அலுவலகத்தில் உள்ளவர்களும், தெருவில் உள்ளவர்களும் வெளியே கூடிவிட, மரப்படிகளின் வழியே தம் தம்மென்று சத்தங்கள் எழும்பி மெல்ல அடங்கியது.

"போய்ட்டாங்க", "யார்னு தெரியல", "எதுக்கு வந்து அடிச்சாங்க" குரல்கள் கேட்டன. அழகப்பன் மேலே சென்றான். நான் அசையாமல் கீழேயே உட்கார்ந்திருந்தேன். குற்ற உணர்ச்சி வதைத்தது. நான் மட்டும் தப்பித்து ஓடி வந்தது நியாயமாக படவில்லை. அலுவலகத்தில் இருந்த ஒருவர் "சார்...எதாவது குடிக்கிறிங்களா?' என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து மேலே போனேன். ஜீவா ஒரு மூலையிலும், தங்க மாரியப்பன் இன்னொரு மூலையிலும் நின்றிருந்தார்கள். தெருவில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஜீவாவின் அருகில் செல்ல தெம்பில்லாமல் வாசலில் உட்கார்ந்து விட்டேன். சூட்கேஸ்கள் தூக்கியெறியப்பட்டிருக்க துணிகள் அறை முழுவதும் இறைந்து கிடந்தன. ஜீவா அவரது முழங்கையை பார்த்துக் கொண்டிருந்தார். அருவாளின் பின்பக்கத்தால் அடித்திருக்க வீங்கியிருந்தது. தங்க மாரியப்பனின் கண்கள் சிவந்திருக்க, முகம் வீங்கிப் போயிருந்தது.

கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணகுமார், பெருமாள்சாமி, காமராஜ் என நிறைய தோழர்கள் வந்து விட்டனர். கிருஷ்ணகுமார் பதற்றத்தோடு அருகில் வந்து தோளில் கைவைத்து அமைதியாக இருந்தார். ஜீவாவின் அருகில் போய் பார்த்தார். சட்டென்று "வாங்க ஆக வேண்டியதைப் பார்ப்போம்" என்றார். போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறப்பட்டது. ரோட்டோரக் கடையில் இட்லி சாப்பிட்டதும், கிருஷ்ணகுமார் எல்லோரையும் சங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே இரவு தங்கச் செய்தார்.

எவ்வளவு யோசித்தாலும் அசம்பாவிதம் ஏன் நடந்தது என்று ஊகங்கள் மட்டுமே மிஞ்சின. காலையில் சங்கத்தலைவர் பரமசிவம் வீட்டில் டிபன் சாப்பிடும்போது ஜீவா மெதுவாக என்னிடம் கேட்டார். "ஏல நீ எதாவது சேட்டை பண்ணியா". அதிர்ச்சியாய் இருந்தது.  அறையில் தங்கியிருந்தவர்களில் நான் மட்டுமே எந்த வரைமுறையும், ஒழுங்கும் இல்லாதவனாக கருதப்பட்டேன். இரவு வெகுநேரம் கழித்து தூங்கச் செல்வது தவிர பெரும்பாலும் தங்கியது கிடையாது. இருந்தாலும் நான்தான் காரணமாக இருக்க முடியும் என பேச்சு நிலவியது அவமானமாய் இருந்தது. அடுத்தநாள் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கணேசன் புதிரை அவிழ்த்தார். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி அப்போதுதான் திருமணமாகியிருந்த இளம் தம்பதியினர் இருந்ததாகவும், பிரம்மச்சாரிகளின் நடமாட்டங்களை, பேச்சுக்களை ஜன்னல் வழிபார்த்த அந்த கணவனுக்கு எரிச்சலாக இருந்ததாம். யாரை சொல்லி என்ன ஆகப்போகிறது. கேட்டுக் கொண்டு இருந்த கிருஷ்ணகுமார் "சரி...விடுங்க...இனும நீங்க அங்க போக வேண்டாம்...இங்கேயே தங்கிக்கங்க" என்றார். நான், அழகப்பன், ஜீவா, பெருமாள்சாமி சங்க அலுவலக வாசிகளானோம். 42-பி, எல்.எப்.தெரு என்னும் முகவரி எங்கள் விலாசமானது.

தொழிற்சங்கப் பணிகளும், இலக்கியமுமாக வாழ்க்கை அங்குதான் விசாலமானது. காலம் என்னும் ராட்சசப் பறவைதான் என்னைத் துரத்தி வந்து அங்கு கொண்டு போய்ச் சேர்த்தது. இதற்கு, பாவம் கிருஷ்ணகுமார் என்ன செய்வார்?

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தொலைபேசித்துறையில் சேர்ந்த புதிதில் பெருமாள்சாமி சின்னமுனியாண்டி என்கிற இருவர் உங்களை கிருஷ்ணகுமார் குறுக்கிட்டதைப்போல் என்னைக் குறுக்கிட்டார்கள். குறிவைத்தார்கள் என்றும் கூட சொல்லலாம்.
    எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்த என்னை கர்ர்கியின் 'தாய்' நாவலையும் நிரஞ்சனாவின்'நினைவுகள் அழிவதில்லை'யும் கொடுத்து படிக்க வைத்தார்கள். கூட்டங்கள், போராட்டங்கள், சகோதர சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றல் என்று காலம் செல்ல ஆரம்பித்தது.
    உங்கள் அம்மா புலம்பிய்தைப்போல் எனது அம்மாவும் புலம்ப ஆரம்பித்தார்கள். எழுதப்படிக்கடத்தெரியாத என் அம்மா நான் படித்துக்கொண்டிருந்தால் அவன் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பார். எழுதிக்கொண்டு இருந்தால் படித்துக்கொண்டிருப்பதாக சொல்லுவார்.
    ஆனாலும் ராட்சஷ கழுகாக நான் குறிப்பிட்ட இருவரையும் சொன்னதே இல்லை. மாறாக இவன் கட்சி கட்சின்னு அலையிறானேன்னு பக்கத்து வீடுகளில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கம் எல்லாம் தெரியாது கட்சி மட்டும் எப்படியோ தெரிந்து இருந்தது. உங்கள் பதிவு எனது அம்மா சொன்ன வார்த்தைகளை அசை போட வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த அளவுக்கா சேட்டை செய்வீர்கள். எப்படியே தப்பினிர்கள் அல்லவா?. நல்ல சம்பவங்கள். பேச்சிலர்ஸ் வாழ்க்கை மிகவும் அருமைதான் என்றாலும் அளவேடு இருந்தால் என்றும் இனிப்பாக இருக்கும். மாலைவேளை தனிமைக் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் ஒன்று கோவிலுக்கு போவேன். இல்லை என்றால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் தனியாக நடப்பேன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவராஜ்,
    எல்லா அம்மாக்களுக்கும் தன் பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருக்கிறது இன்னமும் கூட. உங்களைப் போல தொழிற்சங்க அலுவலகங்கள் அனுபவம் இல்லை எனக்கு, எந்தவித ஒழுங்கு, ஒழுங்கற்ற அமைப்பினோடும் எனக்கு தொடர்பு இருந்ததில்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம், சினிமா, புத்தகங்கள், கவிதை, இசை கொஞ்சம் மனிதர்கள் இவை மாத்திரமே. உங்கள் உலகம் பற்றிய போதுமான புரிதல்கள் எனக்கு புத்தகம் கற்றுக் கொடுத்ததே. கொஞ்சம் தெருக்கூத்து, வீதி நாடகங்கள் என்று ஈடுபாடு இருந்தாலும் இந்த பதிவைப் போன்ற அனுபவங்களை படிக்கும்போது என் போன்றவர்கள் இழந்தது நிறைய என்று தோன்றும். ஆனால் தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் பேச எனக்கு அநேக வாய்ப்புகள், அனுபவங்கள் உண்டு எனக்கு. மும்பையில் ஒரு நகை தொழிற்சாலை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேசிய அனுபவம் வித்யாசமானது. கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதை புதுப்பிக்க எழுப்பிய பல்வேறு மேம்படுத்தப்பட்ட கோரிக்கைகளை( நடைமுறைக்கு ஒவ்வாத சில) கையாண்டு தொழிற்சாலையின் ஒப்பந்தப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியதோடு என் வேலை முடிந்துவிடும். இதில் நான் புதிதாக தெரிந்து கொண்டது, எவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்பது மாத்திரமே!
    இதுபோன்ற பிரதாப அனுபவங்கள் இல்லாமல் வெறும் ஏட்டுச்சுரக்காயாய் மனக்கிறது(?!)என் சமையல்.

    அழகாய் இருந்தது பதிவு,

    வாழ்த்துக்களுடன்,
    ராகவன்

    பதிலளிநீக்கு
  4. அம்மாவின் கண்களுக்கு நீங்கள் மீட்க இயலாத இரையென தென்பட்டதால்,கிருஷ்ணகுமார் கழுகாக தெரிந்திரிக்கிறார்!

    எங்காவது கிடந்து மட்கிப்போவதை விட கழுகிற்கு இரையாவது நல்லதுதான்.

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  5. கிருஷ்ணகுமார் பேசிய வரிகளைப் படிக்கும் போது அந்த கரகரப்புக் குரல் அப்படியே மனதில் ஓடுகிறது.

    ஆனாலும் அடிவாங்கினது கொடுமைங்க..

    பதிலளிநீக்கு
  6. //அடுத்தநாள் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கணேசன் புதிரை அவிழ்த்தார்//

    மனசுக்கு வலிச்சாலும் காரணம் தெரியாம வலிக்கிறது கொடுமை... அட் லீஸ்ட் தெரிஞ்சுகிட்டீங்க.... ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  7. ராட்சசக் கழுகை நானும் அருகிருந்து பார்த்திருக்கிறேன் :)

    எதிரிருப்பவரைக் கவரும் பேச்சுக்கலையும், மேடை ஆளுமையும் கண்டு பிரமித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு காரணம் என்றாலும் காலம் என்ற கழுகின் பார்வை முன்னால் யாரும் தப்பமுடியாது....

    பதிலளிநீக்கு
  9. viruviruppaaka irunthathu

    vithavithamaay
    miisai vaiththoom
    viiraththai engkoo
    tholaiththuvittoom

    ithuthaanee anthak kavithai.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு.

    ஆனால் இன்றைய பீ பீ ஒ உலகில் தொழில் சங்கம் எல்லாம் காண முடிய வில்லை, காணவும் முடியாது.

    நீங்கள் தொழில் சங்கத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மட்டும் எழுதி உள்ளீர்கள், மக்களுக்கு சங்கங்கள் மேல் வெறுப்பு வர காரணம், அங்கு உள்ள ஊழல், அரசியல் தலையீடுகள் போன்றவையே. தொழில் சங்கங்களுக்கு உள்ளும் சர்வாதிகாரம், குழு மனப்பான்மை போன்றவை வந்ததே.(சில ஊழியர் நியமனங்களுக்காக பணம் பெற்றது, ஊழியர் நியமனங்களை பணத்திற்கு விற்றவை போன்றவை).

    பதிலளிநீக்கு
  11. விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் எனக்கு.அது இங்கே: http://karuvelanizhal.blogspot.com/2009/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  12. அன்பின் மாதவராஜ்

    மந்தின் அடித்தளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்கKஐத் தட்டி எழுப்பி - ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு - பலர் பலரை முன்னேற்றி இருக்கின்றனர். அந்த வகையில் ராட்சசக் க்ழுகு செய்தது நல்ல செயல்.

    நல்வாழ்த்துகள் மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  13. இலக்கில்லாமல் திரியும் காலங்களில் இப்படி ஏதாவது ஒரு துடுப்பொ சுக்கானோ நம்மை திசை திருப்புவது ஆச்சரியமானதுதான்.

    B.K பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் கூட்டங்களுக்குச் சென்று ஆ வென்று வாய்திறந்து கேட்டிருக்கிறேன்.

    அவரின் ஆளுமை அதிசயிக்கத் தக்கது. அவரின் பேச்சு உண்மையில் அடைமழை, அருவி, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    மிக அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  14. திலிப் நாராயணன்!
    இந்தப் பதிவு தங்களுக்கும் பல நினைவுகளை கிளறி விட்டு இருக்கிறதை அறிய முடிகிறது. வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் மனிதர்களை சும்மா விடுவதில்லை.


    ராஜ நடராஜன்!
    நானா...!



    பித்தனின் வாக்கு!
    நான் ஒன்றும் சேட்டை செய்யவில்லையே!


    ராகவன்!
    //இதுபோன்ற பிரதாப அனுபவங்கள் இல்லாமல் வெறும் ஏட்டுச்சுரக்காயாய் மனக்கிறது(?!)என் சமையல்.//
    ஒத்துக் கொள்ள முடியாது நண்பரே! சமையல் அருமையாய் இருக்கிறது.


    வேல்ஜி!
    மிக்க நன்றி.


    கதிர்!
    நன்றி.


    பிரபாகர்!
    நன்றி.


    வெயிலான்!
    நன்றி.


    துபாய் ராஜா!
    அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.


    மண்குதிரை!
    நன்றி.


    ராம்ஜி.யாஹூ!
    எல்லாவற்றிலும் கசடுகள் இருக்கின்றன. நாம் எதை தேர்ந்தெடுத்து, அடையாளப்படுத்துகிறோம் என்பது முக்கியம். அதுதான் நல்லவைகளை மேலும் மேலும் வளர்க்க உதவும்.


    பா.ராஜாராம்!
    உங்களின் அன்புக்கும், மதிப்புக்கும் தலை வணங்குகிறேன், நண்பரே!



    இலக்கியா!
    நீங்கள் ரொம்ப காலத்துக்குப் பிறகுதானே அறிமுகமானீர்கள்!

    சீனா!
    நன்றி.


    ஆரூரன்!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!