மாரடியானை பச்சா விளையாட்டில் யாரும் ஜெயிக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும்போது எங்களுக்காக மைதானத்தில் வேப்பமரத்தடியில் அவன் காத்து நிற்பான்.
வலது கையில் வட்டக்கல் கொண்டு முன்னே தரையில் கிழிக்கப்பட்ட கோட்டுப் பாத்திக்குள் வீசிப் போட்ட காசுகளுக்குள் நான் கைகாட்டிய நாலணாவை குறிபார்த்து, அத்தியில் ஊன்றி நிற்கும் அவனது இடதுகாலில் கெண்டைக்கால் திமிர் விடைத்து இருக்கும். வட்டக்கல்லில் அடிபட்டு நாலணா மட்டும் பாத்தியைவிட்டு வெளியே தெறிக்கும்.
எங்களுக்கு அத்தியை பக்கத்திலும் அவனுக்கு ஒரடி பின்னாலும்கூட வைத்துப் பார்த்தோம். நான், விஷ்ணுராம், மகாதேவன், விக்னேஷ்வரன், வெங்கடேசன், சாலமன் எல்லோருமே தோற்றுப் போனோம்.
'உன் அம்மா வள்ளியைப் போல நீயும் கக்கூஸ் அள்ளப்போ' என்று கணக்கு வாத்தியார் அவன் கெண்டைக்காலில் அடித்து விரட்டிய பிறகு அவன் பள்ளிக்கூடத்துக்குள் ஒருநாளும் வந்ததேயில்லை.
இருபது வருடம் கழித்து ஒருநாள் அவனை பூச்சிக்காட்டு மந்தையில் வைத்துப் பார்த்தேன். பஸ்ஸைவிட்டு இறங்கிய என்னை "சார்..சவாரி வேணுமா" அழைத்தான். சைக்கிள் ரிக்சாவில் ஏறி அமர்ந்தேன். கஞ்சா வாடை அடித்தது.
"நாந்தான் மாது...என்னைத் தெரிகிறதா" என்றேன்.
"ஆமாம் சார்" பெடல் ஊன்றி அழுத்திய அவனது கெண்டைக்காலில் என் கண்கள் பதிந்தன.
(இது ஒரு மீள் பதிவு)
*
//"ஆமாம் சார்" //
பதிலளிநீக்குஇது வலியின் உச்சகட்டமல்லவா
இந்தச் சின்னஞ்சிறுகதை எனக்குப் பிடித்திருக்கிறது
பதிலளிநீக்கு//'உன் அம்மா வள்ளியைப் போல நீயும் கக்கூஸ் அள்ளப்போ' என்று கணக்கு வாத்தியார் அவன் கெண்டைக்காலில் அடித்து விரட்டிய பிறகு அவன் பள்ளிக்கூடத்துக்குள் ஒருநாளும் வந்ததேயில்லை.//
பதிலளிநீக்குகெண்டைக்காலில் பட்ட அடியை விட இந்த வார்த்தைகள் தந்த வலியே பள்ளிக்கூடம் பக்கமே வரவிடாமல் செய்கிறது பல மாரடியான்களை... இதுபோல ஆயிரமாயிரம் மாரடியான்களை நம் கந்தக பூமியில் காணலாம்.
கெண்டைகால் திமிரை உடலுக்கு எற விடாமலும் ,அதையும் வற்றச் செய்வதிலும் சமூகம் தன் பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளது!
பதிலளிநீக்குகதிர்!
பதிலளிநீக்குநிச்சயம். அந்த வலியை இந்த சமூகம் எப்போது அறியுமோ?
நந்தா!
நன்றி.
சரவணக்குமார்!
கந்தகபூமியில் மட்டுமில்லை தம்பி. இந்தியா முழுக்க இருக்கிறார்கள்.
வேல்ஜி!
ஆம் நண்பனே... இந்தியச் ச்மூகத்தின் சாபக்கேடுகளில் இதுவும் முக்கியமான ஒன்று.
அன்புள்ள தோழரே
பதிலளிநீக்குமறைந்த இராஜாஜி அவர்கள் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வருவதற்கு எந்த சிந்தனை ஆணிவேராக இருந்ததோ, பல்லாண்டுகள் கழித்தும் அந்த சிந்தனையின் அடையாளத்தை நம்மால் அழிக்கவே முடியவில்லையே என்கிற ஆதங்கம் மேலோங்குகிறது. பெரும்பான்மை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அருந்ததியர் உள்ஒதுக்கீடு குறித்த நியாயங்களை நாம் இன்னும் விரிவாக, ஆழமாக எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளது என்றே தோன்றுகிறது.
உங்கள் மாவட்டத்தில் தானே பள்ளியில் ஆசிரியர்கள் உபயோகிக்கும் கழிப்பறைகளை அருந்ததிய இன மாணவர்களை விட்ட கழுவச் சொன்ன கொடுமை நடந்தது?
//பெரும்பான்மை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அருந்ததியர் உள்ஒதுக்கீடு குறித்த நியாயங்களை நாம் இன்னும் விரிவாக, ஆழமாக எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளது என்றே தோன்றுகிறது.//
பதிலளிநீக்குபிற்பட்டவர்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டை ஏற்றுகொண்ட மாணவர்களிடம் கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள வைக்கமுடியவில்லை.
அதையே ஏற்க மறுப்பவர்களிடம் எப்படி உள் ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேச வைக்க முடியும்
பவித்ரா பாலு!
பதிலளிநீக்குஆமாம். தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
சுரேஷ் (பழனியிலிருந்து)!
//பிற்பட்டவர்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டை ஏற்றுகொண்ட மாணவர்களிடம் கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ள வைக்கமுடியவில்லை.
அதையே ஏற்க மறுப்பவர்களிடம் எப்படி உள் ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேச வைக்க முடியும்/
ஏற்க மறுப்பவர்கள் இருப்பதனால்தான், நாம் பேச வேண்டியிருக்கிறது. நண்பரே! நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதை ஒப்புக் கொள்கிறேன். இப்போதும் பிற்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து பேசப்படும்போது, ஜாதியாக் கட்டுமானத்தில் உச்சியில் இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். அதுபோல அருந்ததியினரின் உள் ஒதுக்கீடுக்கு, பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களில் சில பிரிவினருமே எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்க்கிறோம். இந்த ஜாதி அமைப்பு அப்படிப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கு கீழே ஒருவர் இருப்பதை விரும்புகிறார்கள். இதற்கு எதிரான பிரச்சர்ரங்களை செய்வதும், கருத்து மாற்றங்களையும் உருவாக்குவதுமே நமது முயற்சியாக இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு குறித்து பேசும் பொழுது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படித்த போது, தலித் மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப்புத்தகங்களை ஆசிரியர் வகுப்பில் விநியோகித்தார். எனது சகமாணவி எங்க அம்மா அந்த நோட்டை வாங்க வேணாம்னு சொன்னாங்க என்று மறுத்தாள். ஆசிரியரோ இது அரசின் சார்பில் வருவது என்றும் வகுப்பில் மறுப்பதை கணக்கில் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். ஏன் அப்படி மறுத்தாள் என்று கேட்டதற்கு, சக மாணவர்கள் தன்னை மிகவும் தாழ்ச்சியாக அதை வைத்து கேலி செய்வதாகவும், தனது குடும்பத்தில் முதல் தலைமுறையாக அரசு வேலையில் இருக்கும் அம்மாவும் தங்களால் வாங்கும் சக்தி இருப்பதால் வேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினாள்.
பதிலளிநீக்குஇந்த நோட்டை வாங்க மறுக்கும் தைரியம் இருந்த அம்மாவுக்கு, தனது அலுவலகத்தில் சாதியின் பெயரால் இழிவாக நடத்தப்பட்டதை வாய் திறவாமல் ஏற்றுக் கொள்ளத்தான் முடிந்தது என்பதை பின்னால் அவள் பகிர்ந்து கொண்டாள்.
பெரும்பாலான தலித்துகளிடத்தில் குறிப்பாக தங்களை வேளாலர் என நிலை நிறுத்தும் பள்ளர் ஜாதிகளிலும், பறையர் இனத்தாரிடமும் ஆங்காங்கே உள் ஒதுக்கீடு குறித்த எதிர்ப்பும் கோபமும் இருப்பதை பார்க்கையில் மனம் வெதும்புகிறது. புரிதல் குறைவான மனிதர்களெல்லா நிலையிலும் இருப்பதை கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. இது குறித்து அம்பேத்கரிடம் கேள்வி கேட்ட போது ஜாதி என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு கடக்க முடியாத ஏனிப்படி நிலை எனவும், தலித்துகளில் ஆதிக்கம் இருப்பது கூட இந்த ஏற்பாட்டின் மயக்கம் அல்லது கெடுதி. அதற்கான காரணம் கூட ஜாதிய படிமானம்தான் என்று கூறுகிறார். அடிமைத் தளையிலிருந்து விடுபட நினைப்பது மட்டுமல்ல நிஜ விடுதலை அடிமைப்படுத்தாமல் இருப்பதும்கூட. அடிமைப்பட்டுக் கிடப்பதை விடக்கேவலம் அடிமைப்படுத்த நினைப்பது.
பதிலளிநீக்குசார்! சிறுகதை எனக்குப் பிடித்திருக்கிறது. சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குசிறிய கதை என்று கூற முடியாது. இது ஒரு அனுபவம் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் சில இடங்களில் இக்கொடுமை நடக்கத்தான் செய்கிறது என்பதுதான் வேதனையை அளிக்கிறது.
//அடிமைத் தளையிலிருந்து விடுபட நினைப்பது மட்டுமல்ல நிஜ விடுதலை அடிமைப்படுத்தாமல் இருப்பதும்கூட. அடிமைப்பட்டுக் கிடப்பதை விடக்கேவலம் அடிமைப்படுத்த நினைப்பது.//
பதிலளிநீக்குஇந்த வார்த்தைகளின் சத்தியத்தை புரிந்து கொள்ளத் துவங்கினாலே சமதர்ம சமுதாயம் உருவாகிவிடும்...
:-)
பதிலளிநீக்குநன்றி!
அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள் சார்!
பதிலளிநீக்குபவித்ரா!
பதிலளிநீக்குமிக முக்கியமான, நுட்பமான விஷயம் ஒன்றைச் சொல்லியிருக்கிறீர்கள். பிரக்ஞை எவ்வளவு கொடூரமாக உண்மைகளை புரியவைக்கிறது!
காமராஜ்!
அழுத்தமான உண்மையைச் சொல்லியிருக்கிறாய்.
//அடிமைப்பட்டுக் கிடப்பதை விடக்கேவலம் அடிமைப்படுத்த நினைப்பது// இந்தியா பூராவும் ஒட்டி வைக்க வேண்டிய வாசகம் இது!
ரவிக்குமார்!
மஞ்சூர் ராஜா!
பவித்ராபாலு!
தீபா!
அமிர்தவர்ஷிணி அம்மா!
நன்றிகள்.