மாதவராஜ் பக்கங்கள் 14

 

சங்க படத்தின் இயக்குனரின் பேட்டியை செம்மலரில் படித்தேன். புதுக்கோட்டை மாவட்டத்தின், விராச்சிலை ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மனிதர், இன்று ஒரு இயக்குனராகி இருக்கிறார். மகேந்திரன், பாரதிராஜா போன்றோரின் பாதிப்பில் சினிமா தாக்கம் பெற்று, பாக்யா பத்திரிகையில் பணிசெய்து,  சின்னச் சின்ன கவிதைகள் எழுதி பாக்கியாராஜின் கவனம் பெற்று, சேரன் மற்றும் தங்கர் பச்சான் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஒரு வாய்ப்புக்காக காத்துக் கிடந்த அவரது வாழ்வின் நாட்களை அறிய முடிந்தது.

மணிரத்தினத்தின் அஞ்சலியும், ஈரானிய இயக்குனர் மஜித்மஜிதின் children of heavenம், color of paradiseம் பசங்க படம் எடுப்பதற்கான தாக்கங்களாய் இருந்தன என்கிறார். அப்போது  ஈரானில் குழந்தைகளை மையப்படுத்தி அற்புதமான படங்கள் வருகிறதேயென்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. “ஈரானில் குறிப்பிட்ட வயது தாண்டிய பெண்களை வைத்து படம் எடுக்க முடியாது. காதல் கதைகளும் சொல்ல முடியாது. அதனால் பெரும்பாலான படங்கள் குழந்தைகளையும், பெரியவர்களையும் சுற்றியே எடுக்கப்படுகிறது.” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இது உண்மைதானா? விபரமறிந்தவர்கள் இதுபற்றி கருத்துக் கூறுங்களேன்.

 

தென்ன அறுபத்தொன்று’ என்று ஒரு நாட்டுப்புறக் கதையை பதிவாக சொல்லியிருந்தேன். சாத்தூர் அருகே கீழ ஓட்டம்பட்டியைச் சேர்ந்த சிவிலியன் என்னும் சிறுவன் பத்து வருடங்களுக்கு முன்பு சொன்ன கதை அது. அதில் வரும் கதாநாயகியை ராக்காச்சி என்னும் சுடுகாட்டுக்காரி விரட்டுவாள். இவள் வந்து கதவைப் பூட்டிக் கொள்வாள். ஆத்திரத்தில் ராக்காச்சி தனது விஷப்ல்லை வீட்டின் வாசலில் புதைத்து வைத்து விடுவாள். பிறகு கதவைத் திறக்கும்போது கதாநாயகியான பெண் அந்த விஷப்பல்லை மிதித்து விடுவாள். மயங்கிவிடுவாள்.

நேற்று லட்சத்தீவின் ராக்கதைகள் என்னும் சிறுவர்களுக்கான கதைபுத்தகம் படித்தேன். அரபிக்கடலில் சிதறிக் கிடக்கும் லட்சத்தீவுகளின் நாடோடிக் கதைகளை மலையாள எழுத்தாளர் முல்லக்கோயா தொகுத்திருக்கும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு அது. தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர்கள் எழுத்தாளர் உதயசங்கரும், பாரதி புத்தகாலயமும். அதில் ’கொக்காத்திக் கிழவி’ என்னும் கதையைப் படித்தேன். அதிலும் சூன்யக்காரிக் கிழவிக்குப் பயந்து ஒரு பெண் வீட்டின் கதவுகளைப் பூட்டிக் கொள்கிறாள். கொக்காத்திக்கிழவி என்னும் சூன்யக்காரி தனது விஷ நகத்தை வாசலில் பதித்துவிட்டுச் செல்கிறாள். பிறகு கதவைத் திறக்கும் பெண் அதை மிதித்து மயங்கி விழுகிறாள்.

வாசலில் விஷத்தை புதைத்து வைத்துப் போவதாக இருக்கும் வழக்கத்தை தமிழ்நாட்டில் ஒரு சிறுவனும், லட்சத்தீவில் உள்ள நாடோடிக்கதைகளும் ஒன்று போல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! 

இதற்கு என்ன காரணம் இருக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

 

து ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். இன்றோடு 17 நாட்களாகி விட்டன. 1981லிருந்து 28 வருடப்பழக்கம்.  இதற்கு முன்பும் ஓரிரு முறை நிறுத்திப் பார்த்திருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களில், ’சரி ஒன்றே ஒன்று’ என்று ஆரம்பித்து, வழக்கம் போல் தொடர்ந்து விடும். இந்தமுறை அப்படி இருக்கப் போவதில்லை. இப்போது சிகரெட் அடிக்க வேண்டும் என்கிற அந்த துடிப்புச் சுத்தமாய் அடங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல இருந்தாலும் இருவரைச் சொல்ல வேண்டும். ஒன்று எனது இரண்டாவது அண்ணன். அவனும் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தவன். இப்போது விட்டுவிட்டான். ‘அது ஒன்றும் கஷ்டமில்லை’ எனச் சாதாரணமாகச் சொன்னான்.  அடுத்து மிக முக்கியக் காரணம் அம்மு.  “நிறுத்தணும்னா நிறுத்திருவீங்க. உங்களால முடியுமுங்க..” இப்படியே சொல்லிக்கொண்டு இருப்பாள். எரிச்சலடையாமல் அருகில் இருப்பவர்கள் கொடுக்கிற உற்சாகமும் தைரியமும் முக்கியமானவை இதுபோன்ற பழக்கமுள்ளவர்களுக்கு.

 

ன்னைக் கவர்ந்த பதிவர்கள் என்று ஏற்கனவே அமிர்தவர்ஷிணி அம்மாவைப் பற்றி எழுதியிருந்தேன். நாளை அடுத்தவர்..!

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //“உங்களால் முடியுமுங்க. நிறுத்தணும்னா நிறுத்திருவீங்க. உங்களால முடியுமுங்க..”//

  முடியல!...

  பதிலளிநீக்கு
 2. சிகரெட்டை விட்டது ரொம்ப நல்லது. குடியாவது குடிக்கறவங்க கிட்னியை மட்டும்தான் பாதிக்கும். இது சம்மந்தம் இல்லாதவங்களையும் பாதிக்கும்.

  //வாசலில் விஷத்தை புதைத்து வைத்துப் போவதாக இருக்கும் வழக்கத்தை தமிழ்நாட்டில் ஒரு சிறுவனும், லட்சத்தீவில் உள்ள நாடோடிக்கதைகளும் ஒன்று போல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! //

  மகாபாரதமும் ராமாயணம் கீழைக்கிழக்கு நாடுகள்ல பரவின மாதிரி ஏதோ ஒரு காலத்துல பரவி இருக்குமோ :)

  பதிலளிநீக்கு
 3. \\சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். இன்றோடு 17 நாட்களாகி விட்டன. 1981லிருந்து 28 வருடப்பழக்கம்.//
  மிகவும் சந்தோஷம் அண்ணா.இந்த வைராக்கியம் விட வேண்டும் என நினைக்கும் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையுமென நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. நான் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஈரானிய படம் ஒன்றை பார்த்திருக்கிறேன் .. பெயர் நினைவில் இல்லை... அதை பற்றி தேடும்போது இந்த பட்டியல் கிடைத்தது..

  http://www.iranianmovies.com/Merchant2/merchant.mvc?

  பதிலளிநீக்கு
 5. அண்ணே, சிகரெட் விடுறது ரொம்ப ஈஸி. நானே ஏழெட்டுத் தடவைவிட்டிருக்கேன்..

  பதிலளிநீக்கு
 6. பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் அல்லவா?

  சிகரெட் புகையின் எரிச்சல் படாத உங்கள் நுரையீரலுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. அன்பு மாதவராஜ்,

  பசங்க படத்தின் டைரக்டர், பாண்டியராஜ் என்று ஞாபகம், ஒருவேளை அவரின் இயற்பெயர் கிருஷ்ணகுமாராய் இருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம். சாரு நிவேதிதாவின் பசங்க பற்றிய ஒரு மதிப்புரையில் இந்த படத்தை Children of Heaven-னுடன் ஒப்பிட்டிருப்பார், பாண்டியராஜுக்கு இன்ஸ்பிரேஷன் ஈரானிலிருந்து வந்திருப்பது எனக்கு ஆச்சரியமில்லை. பசங்க ஒருபடி மேலே சென்று நம்முடைய பழைய பள்ளிக்காலத்தை ஞாபகப்படுத்தியதில், color of paradise-ல் உள்ள அன்னியத்தனத்தை மாற்றியது எனலாம். சுஜாதாவின் பூக்குட்டி, வண்ணத்துப் பூச்சி என்ற பெயரில் படமாக வந்ததாக ஞாபகம், அது சுஜாதாவின் வேறு எந்த திரைக்கதையான கதைகளை விட நல்லா இருந்திருக்கும் என்று நம்புகிறேன், துரதிர்ஷ்டவசமாக அதை பார்க்க முடியாமல் போய் விட்டது.

  அடிப்படையில் எல்லா ஆரம்ப கால மனிதர்களுக்கும் ஒருவிதமான இயற்கை பற்றிய பயம் இருந்திருக்கிறது, அதை கையாளும் இரண்டு விதமான சக்திகள் எப்போதுமே பிரபஞ்சம் முழுதும் உள்ள மனிதர்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. இது போன்ற பயங்களை, நம்பிக்கைகளை ஏற்றுவதற்கு, தான் சந்திக்கும், உடன் வாழும் மனிதர்களுக்கு பொருத்தி பார்க்க முடியாமல் அதை இரண்டு எதிர் நிலையான விஷயங்களாய் பார்ப்பது என்பது ஒரு உயர்தினையாக்க நிகழ்வாகவே படுகிறது. தேவனின் பாதங்கள் புனிதமாகவும், சைத்தானின் பாத நகங்கள் கூட விஷம் தோய்ந்ததாக பார்ப்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தானே. மனிதனின் பொதுவான சில பயங்கள், சில நம்பிக்கைகள் தான் இது போலுள்ள universal phenomenon களுக்கு மூலம், அது ஒரே மாதிரி இருப்பதற்கான சாத்தியங்கள் நூறு சதவிகிதம் உள்ளது என்றே கருதுகிறேன். எனக்கு உங்களின் கேள்விக்கு பதிலாய் ஏதாவது சொன்னேனா என்பது தெரியாது, ஒரு முயற்சி தான் இது, கேள்விகளுக்கு பதில் என்பது ஒரு சமாதான உடன்படிக்கை தான் எப்போதும். கேள்விகளை மேலும் சில கேள்விகளை கொண்டே அணுக முடியும் என்று நினைக்கிறேன்.

  புகைப்பிடிப்பதை நிறுத்துவது சுலபமானது, நான் நிறுத்தி இருக்கிறேன். உங்கள் quit smoking, முடிவை பிரகடனப்படுத்துங்கள், தண்டோரா போடுங்கள். ஒரு கண்டிப்பான, அன்பான சர்வாதிகாரியிடம் சொல்லுங்கள், நான் என் மனைவியிடம் சொன்னேன். நிறுத்தி விட்டேன்....... அவளிடம் சொல்வதை.

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 8. கிருஷ்ண்குமார் சொல்வது உண்மையாக இருக்கலாம்.அரசாங்கம்,மதநிறுவனங்கள் இவற்றை எதிகொள்ளுதல் சிரமம்தான்,கலைஞர்களுக்கு.சமீபத்தில் கரன் ஜோகர் ராஜ் தாக்ரேயை சந்திக்கும் படி ஆனதே!சிவசேனா ஒரு cultural policeஆக நடந்துகொள்வதை மிகப்பெரிய ஜனநாயக நாட்டிலேயே எதுவும் செய்ய முடிகிறதா என்ன?
  -----------------------------------
  வெளிய வா...உன்ன கவனிச்சுக்கிறேன் என்ற அடிப்படை எண்ணம் காரணமோ!
  -----------------------------------
  நாட்களை எண்ணுவதை விட்டுவிட வேண்டும்.அப்புறம் சுலபமாகிவிடும்.இந்த முறை எனக்கு கைகொடுத்தது.

  பதிலளிநீக்கு
 9. அன்பு மாதவ்


  சிகரெட் புகைப்பதை நிறுத்தியதற்காக, உங்களுக்கு ஓர் அருமையான புத்தகத்தைப் பரிசாக இணைத்துள்ளேன். அது பற்றி இ மெயிலில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். ஆங்கில நூலான இது, குழந்தைகளைப் பற்றியது. மன்னிக்கவும், குழந்தைகளைப் பற்றிப் பெரியவர்களுக்கானது.

  2. ஈரான் பற்றியது: நீங்கள் குறிப்பிட்டதுள்ளதின் பின்னணி எனக்கும் தெரியாது. ஆனால், ஒடுக்கப்படுகிற மக்களிடமிருந்து எதிர்வினையாகப் படைப்புகள், எந்த வடிவத்திலாவது வந்து கொண்டே இருக்கும். அத்தகைய மக்களின் ஆவேசத்தில், எதிர்ப்புணர்ச்சியில் படைப்பூக்கமும், ஆற்றலும் அசர வைக்கும் என்பது வரலாறு நெடுக படர்ந்து இருக்கிறது. இதை ஆய்வாளர்கள் பலர் சொல்லியிருக்கின்றனர். கசக்கிப் பிழியப்படும் மக்களுக்குத் தான் மென்மையின் ரகசியமும், அர்த்தமும் விளங்கும். அப்படியானவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கொள்ளும் கரிசனத்தின் வெளிப்பாடு சினிமாவிலும் வரத்தானே செய்யும்.....

  வாழ்த்துக்களுடன்

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 10. என்னைக் கவர்ந்த பதிவர்கள் என்று ஏற்கனவே அமிர்தவர்ஷிணி அம்மாவைப் பற்றி எழுதியிருந்தேன். நாளை அடுத்தவர்..!//

  காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்!! மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது!!

  கதையில் வந்த கிளிகள் லட்சத்தீவுக்களுக்கு போய் சொல்லியிருக்குமோ!! :-)

  பதிலளிநீக்கு
 12. \\சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். இன்றோடு 17 நாட்களாகி விட்டன. 1981லிருந்து 28 வருடப்பழக்கம்.//

  படிப்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட்டை விடலாமென்று நினைத்து 15லிருந்து 4 சிகரெட்டாகாக் குறைத்தேன் (30 நாட்களுக்கு முன்). ஆனால் மறுபடியும் பழையபடி ஆகிவிட்டது :(

  பதிலளிநீக்கு
 14. நண்பரே

  அது உண்மை தான் ஈரான் இல அறுபது சதவிகித படம் பசங்களை வைத்து தான்
  அங்கே காதல் இருக்காது


  சு மகாராஜன்
  அமீரகம்

  பதிலளிநீக்கு
 15. அலைகள் ஓய்வதில்லை கூட சின்னப் பசங்களை வைத்து எடுக்கப் பட்ட படம்தான்..,

  பாமா ருக்மணி படத்தில்கூட எட்டாம் வகுப்பு பி பிரிவினைக் காட்டுவார்கள்

  பதிலளிநீக்கு
 16. // ஒன்று போல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

  இதற்கு என்ன காரணம் இருக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். //

  உலகின் அனைத்து மொழிகளும் அம்மா, அப்பா ஆகியோரை அழைக்கும் போது ஏற்படுத்தும் உதட்டசைவுகள் ஏறக்குறைய ஒரே மாதிரித்தானே இருக்கின்றன..,

  பதிலளிநீக்கு
 17. anpulla mathavaraj- in my experience what pasnaga film director saying is true. my article on iranian films - 'abbas kirostramien kulandhaigal' an elaboarated article - appeared some time back in tamil cinema journal 'sevvagam'- editor : viswamithran - i have anylsed the whole film culture of iran and its importance in international cinema. anpudan rajendran

  பதிலளிநீக்கு
 18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 19. /ஈரானில் குறிப்பிட்ட வயது தாண்டிய பெண்களை வைத்து படம் எடுக்க முடியாது. காதல் கதைகளும் சொல்ல முடியாது. /

  இது முழுக்க உண்மையா எனத் தெரியவில்லை. the circle என்றொரு படம் பதின்ம மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை சுற்றித்தான் நகர்கிறது.ஈரானின் பெண் அனுகுமுறைகளை மிக நுட்பமாக சிறுவர்களைக் கொண்டே கேள்வியெழுப்புவதையும் அப்பாஸ்கிராஸ்தமியின் படங்களில் காணமுடியும்.

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. //இப்போது சிகரெட் அடிக்க வேண்டும் என்கிற அந்த துடிப்புச் சுத்தமாய் அடங்கிவிட்டது//

  ஆச்சரியமாக இருக்கிறதே. எனக்கு 19 வருடமாகியும் இன்னும் "அந்த ஆசை" விடவில்லையே!

  எதுக்கும் நான் சிகரெட் விட்ட கதையை வாசிங்க

  பதிலளிநீக்கு
 22. மாதவராஜ் புகை பிடிக்கும் பழக்கம் நீங்கள் விட்டு விட ஆசைப் படுகிறேன்.

  கண்டம் விட்டு கண்டம் போனாலும் மனித இயல்பு, குணங்கள், உறவுகள் மாறாதவை. எனவே கதை கருவிலும் ஒற்றுமை இருக்க வாய்ப்பு உள்ளது.

  எந்த கண்டம் போனாலும் காதல், களவு, ஏமாற்றுதல், கள்ளக் காதல், அம்மா செண்டிமெண்ட், நம்பிக்கை த்ரோகம் கதைகள் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 23. என்மனைவி என்னை சிகரட் பிடிக்கதிங்க என்று அட்வைஸ் மேல் அட்வைஸ் பண்ணி என்னை தொந்தரவு பண்ணுகிறாள் இந்த சனியன எப்படி விடுறதுன்னு தெரியமா முழிச்சிட்டு இருக்கேன்.

  பதிலளிநீக்கு
 24. ப‌ச‌ங்க‌ ப‌ட‌ இய‌ங்குன‌ர், ம‌ற்றும் சில‌ க‌தைக‌ளை ப‌ற்றி சொல்லி இருப்ப‌து சுவார‌ஸிய‌ம். ந‌ல்ல‌து. ந‌ன்றியும் கூட‌

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் நன்றிகள்.

  பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் அவர்களை முதலில் ஆர்.கிருஷ்ணகுமார் (பேட்டி எடுத்தவர்) என குறிப்பிட்டு இருந்தேன். போன் மூலம் சரி செய்யச் சொன்ன சிவராமன் (பைத்தியக்காரன்) அவர்களூக்கு நன்றி. இங்கு சுட்டிக்காட்டியவர்களுக்கும் நன்றி.

  ஈரானில் இளம்பெண்களை மையமாக வைத்து எடுத்த படங்கள் சில பர்த்ததாக அய்யனாரும் சொல்கிரார். நாஸியாவும் சொல்கிறார். இதில் யமுனா ராஜேந்திரன் (மிக்க நன்றி சார்) பசங்க பட இயக்குனர் சொல்வது உண்மை என சொல்கிறார். உலக சினிமா குறித்தும், சினிமா உலகம் குறித்தும் கட்டுரைகள் எழுதி தொடர்ந்து இயங்கி வரும் அவரைப் போன்றவர்களின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. அங்கே இங்கே என்று சில படங்கள் வந்திருக்கக்கூடும். சரியாகத் தெரியவில்லை.

  சிகரெட் விட்டது குறித்து சந்தோஷப்பட்டு இருக்கும் மக்களுக்கு என் நன்றி. ஜாலியாக கருத்துக்கள் தெரிவித்து இருக்கும், ஐந்திணை, ரமேஷ் வைத்தியா, ரோமியா பாய் ஆகியோரது பின்னூட்டங்களை ரசித்தேன்.

  ராகவன், எஸ்.வி.வி ஆகியோரது பின்னூட்டங்கள் எப்போதும் திரும்ப திரும்ப படிக்க வைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 26. /*சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்....*/
  இது போல் சொல்பவர்களைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்று.

  பதிலளிநீக்கு
 27. மாதவராஜ் அண்ணாச்சி, இந்த பதிவை படித்தவுடன் தான் எனக்கே நினைவுக்கு வருகிறது நானும் மூன்று மாதத்திற்கு முன்புவரை சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேனென்று... முதல் ஓரிரு வாரங்கள்தான் கை துறுதுறு என்றிருக்கும். நிங்களும் அதை கடந்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!