தோல் காப்பியம்!

 

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே கண்ணம்மாவிற்காகக் காத்திருக்கும் பாரதி, “மேனி சிலிர்க்குதடி” என்று உருகிப் போகிறார். அவர் மட்டுமல்ல, எந்த மனிதருமே மகிழ்ச்சி, அதிர்ச்சி, பரவசம், திகைப்பு, குதூகலம் என்ற உணர்வுகள் மிகுந்து போகும் நேரத்தில் உடலின் வழி அந்த உணர்ச்சிகளை பிரதிபலிக்கவே செய்கின்றனர்.மயிர் கூச்செரியும் அபாய கரமான விளையாட்டுக்கள் என்றுவிளம்பர வாசகங்கள் எழுதப்படுகின்றன. ‘திடீர்னு சொன்னா என்ன பண்ண முடியும், கோபிக்கு உடம்பு படபடன்னு வந்திருச்சு’ என்று சிறுகதைகளில் ஒரு வரியைக் காண முடிகிறது. சினத்தால் சிவந்தது முகம் என்றோ, கரி படிந்தது போலானது என்றோ கவிஞர்கள் வண்ண வண்ண வருணிப்புகளில் இறங்குகின்றனர். ‘சார், டி.கே.பட்டம்மாள் பாட்டுன்னா என்ன நினைச்சீங்க, பாருங்க சொல்லும்போதே எப்படி புல்லரிக்குதுன்னு’ என்பது போன்ற புளகாங்கித நேரங்களில் தங்கள் கையில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அதிசயத்தைப் பெருமையுற சொல்கிறவர்கள் எண்ணற்றோர் உண்டு.

நமது உடலின் மேலுறையான தோல் ஓர் அபாரமான உணர்ச்சி தெரிவிப்பாளர். அதாவது உடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மட்டுமல்ல, உடலினுள் உள்ள பிரச்சனைகளையும் தோல் குறியீடாக உணர்த்தவல்லது. தோலின் அரிய சேவையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். அந்த அங்கீகாரம் அதனைப் பராமரிப்பதில் வெளிப்படுவது நமக்கு நல்லது.

மனித உடலுக்குக் கவசமாக அமைந்துவிடுகிற தோல் உண்மையான பொருளிலும் நமக்குக் கவசமானதுதான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. எடுத்துக்காட்டிற்கு, தொடு உணர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்களேன். பேசிக்கொண்டே இருக்கும்போது ஏதோ கடித்த உணர்வை வைத்து சட்டென்று கையில் ஏறிக் கொண்டிருக்கும் எறும்பை ஓங்கி ஓர் அடி அடித்துக் கதையை முடித்து விடுகிறீர்கள். சமையலறையில் பதட்டமான காலை நேரம் ஒன்றில் இறக்கி வைத்த குக்கரில் பட்டு விடுகிற கை, சூடுபட்டுக் கொண்டதும் தானே விலகிக் கொண்டு விடுகிறது. கல், முள், கண்ணாடித் துண்டு எதன் மீது கால் பட்டாலும் காலுக்குச் சொந்தக்காரர் எச்சரிக்கை அடைவது தோல் உணர்த்தும் வலியினால்தான். ஆனால்,  சிலர், ‘சே, என்ன எப்ப பார்த்தாலும் ஏதாவது வலிச்சிக்கிட்டு, உயிரை வாங்கிட்டு’ என்று சலித்துக் கொள்வதுண்டு.

இயல்பான இந்த வலியுணர்ச்சி உயிரினத்திற்கு இயற்கை அளித்திருக்கும் கொடை. இதில் தோல் நமக்காற்றும் சேவையை, இம்மாதிரி சேவை கிடைக்கப் பெறாதவர்களான நோயாளிகளைப் பார்த்தாலே நமக்கு புரியும். நரம்புகளில் ரத்த ஓட்டம் பாதிப்புற்று இருக்கும் தொழு நோயாளிகள் தொடு உணர்ச்சியை உணர்வது இல்லை. சூட்டையோ, வலியையோ தோல் உணர்த்த இயலாத நிலை அது.

தோல், உள்ளிருக்கும் உடல்நிலை மாற்றங்கள், கோளாறுகள், பாதிப்புகள் போன்றவற்றின் தகவல் சொல்லியும் கூட. நெஞ்சு வலி என்று துடிப்பவர் களுக்கு இதயத்தில் தான் பிரச்சனையா என்று அறிந்து கொள்வதற்குக் கேட்கப்படும் முக்கிய வினாக்களில், ‘நிறைய வியர்த்துக் கொட்டியதா’ என்பதும் ஒன்று.

பல நூறு விதங்களில் தோலுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்றாலும் அதிகமாகக் காணப்படுகிற பெரிய அளவிலான பிரச்சனைகள் ஒரு பத்து, பன்னிரெண்டு தான் இருக்கும். அவற்றை இரண்டு விதங்களிலிருந்தும் நோக்க முடியும். உடலின் உள்ளுறுப்புகளின் பாதிப்பின் பிரதிபலிப்பாக அவை தோன்றக்கூடும். அல்லது, இவை பின்னர் உடல் உறுப்புகளின் பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும். முன்னதற்கு அந்த உள் பிரச்சனை என்ன என்று கண்டறிந்து அதன் தீர்விற்கு ஏற்பாடு செய்தால்தான் தோலில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். பின்னதற்கு, தோலின் பிரச்சனையைக் களையாவிட்டால், உள் உறுப்புகளில் நேரவிருக்கும் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்குத் தோலில் எளிதில் ஆறாத புண்கள் இருக்குமானால், அந்த அறிகுறியை வைத்து நீரிழிவு (சர்க்கரை) பிரச்சனை இருக்கிறதா என்று மருத்துவர் அதற்குரிய பரிசோதனைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். அதேபோல், சரியாகக் குணப்படுத்தி கொள்ளாமல் அப்போதைக்கு ஏதோ ஆயின்ட்மென்ட் போட்டு அமுக்கி வைக்கப்படும் சிரங்கு வகைகள் ஒழுங்காக கவனிக்கப்படா விட்டால் அந்த அழுத்தி வைக்கப்படும் பிரச்சனைகள் (Suppressed problems) பின்னர் சுவாசக் கோளாறுகளாக மாற வாய்ப்புண்டு. இப்படி தோல் எச்சரிக்கை அறிவிப்பாளராகவும் செயல்படுகிறது.

எனவே, தோல் பராமரிப்பு முக்கியமாகிறது. அந்தப் பராமரிப்பு விஷயத்திற்குச் செல்லுமுன், தோலில் மேற்புறமும், உட்புறமும் குடியிருக்கும் முக்கியமான சிலரது பாரம்பரிய உரிமையை நாம் புறக்கணிக்கக் கூடாது. நமது தோலில் சுமார் 300 - 400 கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. இவற்றால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் நிரம்ப உண்டு. வியர்வைக் கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் இறந்துபோன செல்களையும், திசுக்களையும் இந்த கிருமிகள் தான் தின்று செரிக்கின்றன. உடலைப் பாதுகாக்கின்றன. உடலுக்கு ஒருவித வாசனையையும் தருகின்றன. காவல்துறை வளர்க்கும் மோப்ப நாய்கள் இந்த வாசனையை வைத்துத்தான் குற்றவாளியை மோப்பம் பிடிக்கின்றன. எனவே, கிருமிகளின் குடியுரிமை முக்கியமானது. மெரினா கடற்கரையை அழகுபடுத்த வேண்டுமென்று மீனவர்களை அடித்துத் தள்ளி வெளியேற்றுகிற அரசு நடவடிக்கையைப் போன்றது தான், நம்மவர்கள் பலர் ‘பாடி ஸ்பிரே’ எனப்படும் உடலுக்கு மருந்தடிக்கிற வேலை. அது வியர்வை வெளியேறும் துவாரங்களை மூடுகிறது. கிருமிகளை வாழவிடாது செய்துவிடுகிறது. தோலின் எதிர்ப்புச் சக்தி வீழ்ந்துவிடுகிறது. குளியல் போடும்போது கூட அதிக வேதியல் பொருள்கள் கலந்திராத மிதமான சோப்பினைப் பயன்படுத்துவது நல்லது.

எண்ணெய்ப் பசை இருக்கும் உடல் சகிக்கமுடியாதது என்று நினைத்துவிடக் கூடாது. தோலின் செல்கள் கொழுப்புச் சக்தியாலானவை. எனவே, நமது உணவில் தேவையான கொழுப்பு தவிர்க்கப்படக் கூடாதது. கொழுப்பை ஒரேயடி யாகத் தவிர்த்துவிட்டால் முதுமை சேருமுன்பே தோலில் சுருக்கம் தோன்றிவிடும். வியர்வையும் அவசியமானது. உடல் சீரான வெப்ப நிலையைத் தற்காத்துக் கொள்ள அதன் போக்கில் கண்டு பிடித்திருக்கும் ‘ஏ/சி’ ஏற்பாடு அது. வியர்வையே வராத ஆள் என்றால் அவர் வேறு பல சமிக்ஞை களையும் கூட தோல் மூலம் அறிந்து கொள்ள முடியாது.

உடைகள் பெரும்பாலும் பருத்தி ஆடைகளாக, உடலை இறுக்காதவையாக இருந்தால் நல்லது. உடலின் தோல் எதிர்கொள்ளும் அலர்ஜி பிரச்சனை களில் குறிப்பிட்ட வகை துணிமணியினால் ஏற்படும் அரிப்பும் அடங்கும். உள்ளாடைகளை டிடர்ஜெண்ட் வகையறாக்களின் தாக்குதலுக்கு உட்படுத்தாமல், சாதுவான வகை சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

நமைச்சல் உள்ளிட்ட பலவகை தோல் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும். உளைச்சல் (Stress) நேரங்களில் சிலருக்கு “அப்படியே தலை முடியைப் பிச்சிக்கிட்டு ஓடலாம் போலிருக்கு” என்று தோன்றுவதில்லையா. மண்டை காய்ஞ்சிருச்சு என்ற சொல்வழக்கும் இதில் சேர்ந்ததுதான். உடலின் அரிப்புகள்கூட தோல்வி மனநிலை, ஏதோ பறி கொடுத்த உணர்வு, மன அழுத்தம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக இருக்கும். அதனால்தான் சீப்பு, ஸ்கேல் இப்படி எது கிடைக்கிறதோ அதை எடுத்து ஆசை தீர முதுகு அரிப்பைச் சுரண்டி நிம்மதி அடைபவர்களைக் காணமுடியும். அந்த ரணத்திற்கு அப்புறம் சிகிச்சை தேடவேண்டும்! எனவே, மன அழுத்தத்திற்கு உளவியல் ரீதியான சிகிச்சை முறைகளையும், தீர்வினையும் காணாமல் பிரச்சனை தீராது.  எக்சிமா எனப்படும் ஒருவகை தோல் நோயும், ஆஸ்துமாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவரிடம் மாறி மாறி இருக்க வாய்ப்புண்டு. அல்லது ஒரே மனிதருக்கே கூட இரண்டும் இருப்பதுண்டு. மாற்று மருத்துவத்தில் சிகிச்சை எடுப்பதன் மூலம் இரண்டையும் கட்டுக்குள் வைத்து நிவாரணம் தேடலாம்.

சொரியாசிஸ், லுக்கோடர்மா போன்ற தோல் பாதிப்புகள் அதிக விவாதத்தில் இருப்பவை. சொரியாசிஸ் என்பது, தோலின் தன்மை செதில் செதிலாக மாறி ஏற்படுத்தும் அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகள். அப்படியே தோல் துகள்களாகக் கொட்டும். அது சுற்றி இருக்கும் சுற்றங்களை அருவருப்பு அடைய வைக்கிறது. அத்தகைய பாதிப்புற்றவர்களுக்கு முக்கியமாகத் தேவை அரவணைப்பே தவிர புறக்கணிப்பு அல்ல. இது ஒன்றும் தொற்று நோயல்ல. சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் தடையும் இல்லை. எதனால் சொரியாசிஸ் வருகிறது என்பது தீரக் கண்டு பிடிக்கப்படாமையால், அதற்கான தீர்வும் இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. ஆனால் மாற்று மருத்துவ முறைகளில் கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது.

லுக்கோடர்மா என்பது தோலின் நிறமிக்கு ஏற்படும் பாதிப்பால் உடலில் சில பகுதிகள் மட்டுமே வெளுத்துத் தனித்துத் தெரிவதாகும். பல காலமாக இதை ஒரு தீவிர நோய் என்றும், ஏன் வெண் குஷ்டம் என்றும் சொல்லி தொழு நோயாகவும் அடையாளப்படுத்தி இருந்த தவறான போக்கு இன்று மாறிவருகிறது. இது நோயுமல்ல, தொற்றக் கூடியதுமல்ல, இதை வெண்குஷ்டம் என்று அழைக்கக் கூடாது, வெண் புள்ளிகள் என்றுதான் சொல்ல வேண்டுமென்று தமிழகத்தில் இயக்கமே நடத்தப்படுகிறது. பொதுவாக, தமது கணவருக்கு இப்படி வெண்புள்ளிகள் ஏற்பட்டால் மனைவி பொறுத்துக் கொள்கிறார் என்றாலும், மனைவியருக்கு இப்படி ஏற்பட்டால் கணவர்கள் தள்ளி வைத்து விடுகின்றனர் என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது. மக்கள் மத்தியில் தவறான புரிதல் இருப்பதால் ஏற்படும் சமூக புறக்கணிப்பு மாற அரசு முறையான விழிப்புணர்வு அறிவிப்புகள் செய்ய வேண்டுமென்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்தது, கறுப்பா சிவப்பா பிரச்சனை. இதில்தான் நிறமிகளின் வேலை இருக்கிறது. மரபுவழியாக அவரவருக்கு அமையும் நிறத்தை தோலின் நிறமிகள் தீர்மானிக்கின்றன. அமையும் நிறத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, ‘வெளுப்பு தான் எனக்கு வேண்டும் கலரு’ என்று பலர் நிறமாற்ற வேதியல் ஏற்பாடுகளை முயற்சி செய்து பார்த்து நொந்து போகின்றனர். பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாந்த நபர்களில் ஒருவர் அந்த கம்பெனி மீது வழக்கு போட்டு வெற்றி பெற்றதும், சாதுரியமாக அந்த நிறுவனம் விளம்பர வாசகங்களை மாற்றித் தொடர்ந்து அதே வேலையைச் செய்து கொண்டிருப்தும் கண்ணுக்கு நேரே நடப்பவை. பலவகை கிரீம்கள் தோலுக்கு உகந்ததல்ல என்பது ஒன்று. நிறத்தை வைத்து ஆளை மதிப்பிடுவது ஆதிக்க மனோபாவம் என்பது அடுத்தது. தலைமுடியும், மீசையும் கருகருவென்று இருக்க வேண்டுமென்று துடிக்கும் இளைஞருக்கு, தான் மணமுடிக்கும் பெண் மட்டும் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்று தோன்ற லாமா என்று நையாண்டிப் பாடல்கள் பல தமிழில் உண்டு.

புறந்தூய்மை நீரால் அமையும் என்ற வள்ளுவர் அகத்தூய்மை பற்றியும் பேசி இருக்கிறார். துணி வெளுக்க மண்ணுண்டு, தோல் வெளுக்க சாம்பருண்டு என்ற பாரதி மனம் வெளுக்க வழியில்லையே என்று சமூக விமர்சனத்தை முத்துமாரியை அழைத்துச் செய்தார். உடலின் உள்ளுறுப்புகளின் நிலையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அன்றாடம் விலை உயர்ந்த சோப்புக் கட்டியைக் கரைத்துக் குளித்துவந்தால் மட்டும் போதாது என்பதுதான் இந்த இலக்கியங்கள் சொல்வது.

தோல் கவசமாக இருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உணர்வுகளுக்கும்தான். அன்பின் வழியது உயிர்நிலை என்று குறள் கூறும் இலக்கணத்தின்படியான நேயமிக்க வாழ்க்கை முறையில்தான் மனிதருக்குப் பெருமையே இருக்கிறது. அப்படி இல்லாத மனிதர் எவரும் எலும்பும், தோலும் போர்த்திய உடல் என்று வள்ளுவர் இகழ்கிறார்.  தோல் இப்படி தனது கண்ணியத்தை இழந்துவிடாத ‘மெய் சிலிர்க்கும்’ மேலான வாழ்க்கை வாழ வேண்டாமா நாம்?

(ஓமியோபதி மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி., அவர்களது
மருத்துவக் குறிப்புகளின் உதவியோடு
எழுதியவர் எஸ்.வி.வேணுகோபாலன்)

*

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆஹா....ஏதோ பாரதியாருன்னு ஆரம்பிச்ச உடனே, புத்தி எங்கெங்கியோ போக, தொடர்ந்து படிக்க, ரூட் மாறி, தோல் காவியமாகி,

    அடடா....தோழர்...இதுலேயும் வெளுத்துக் கட்டறாரேன்னு பார்த்தா....

    எழுதியவர்:.........

    சே......நல்ல ஏமந்திட்டேன் தோழர்.


    தகவல் அருமை,


    நன்றி
    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  2. முதல் பத்தியிலேயே எழுத்தில் வித்தியாசம் தெரிந்து விட்டது. கீழே சென்று பார்த்தால் என் யூகம் கரெக்ட்!

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. அருமை நல்ல பதிவு.

    . தமிழ் திரை உலகில் கதாநாயகிகள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதும் skin colour thaan.

    ஏன் தமிழகத்தில் கல்யாண மார்க்கெட், வரதட்சனை , வேலை வாய்ப்பு போன்றவற்றை தீர்மானிப்பது கூட தோல் நிறம் தான்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர்களே,

    உங்களைப் பார்த்தே எழுதத் துவங்கினேன்.
    உங்களிலிருந்தே பயணத்தைத் துவக்குகிறேன்.
    என் பிளாக்கிற்கு வருகை தந்து தங்களின் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
    http://yogarajbabu.blogspot.com/
    மிகுந்த நேசத்துடன்
    யோகராஜ் பாபு.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் வேணுகோபாலன் அவர்களின் இலக்கியத்தன்மை மிக்க மொழிநடையில் வந்திருக்கும் இந்த தோல் காப்பியம், தோல் குறித்த சில விளக்கங்களையும் உடல்நலம் குறித்த ஒரு பிரக்ஞையையும் தந்திருக்கும் என நம்புகிறேன். வாசித்தவர்களுக்கும், வேணுகோபாலன் அவர்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!