ஏசுவும் நாமே, யூதாஸும் நாமே!

 

 

 

“சாமியாரின்
வலது பக்கத்தில்
ஒரு சின்னக்குழந்தை.
நான்கு வயசுக்
குழந்தை. பாவாடை
முந்தானையில்
சீடை மூட்டை கட்டிக்கொண்டு,
படித்துறையில் உட்கார்ந்து
காலைத் தண்ணீரில் விட்டு
ஆட்டிக்கொண்டு இருக்கிறது.
சின்னக் கால்காப்புகள்
தண்ணீரிலிருந்து வெளிவரும்போது
ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் கண்சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆகவேண்டும்”

 

தொட்டுத் தொட்டு பயணிக்கும் நினைவுகளின் திசையற்ற சுற்றலில், படித்த இந்த வரிகள் சிலநேரங்களில் வந்து அசை போட   வைக்கின்றன.  ‘சாமியாரும், குழந்தையும், சீடனும்’ என்கிற சிறுகதையில் வருகிற இந்த இடத்தை போகிற போக்கில் வாசிக்கிறவர்களும் கடந்துவிட முடியாது. கதையைச் சொல்லிச் செல்கிற புதுமைப்பித்தனும் இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி “இதோ இதைப் பாருங்கள்’ என்று அதிசயித்து நிற்கிறார். குழந்தைகளே அற்புதங்களாகவும், அதிசயங்களாகவும் நம்முன் நடமாடுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மை! இதனோடு தொடர்ந்து எப்போதோ படித்த இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது.

 

 

ஒரு ஓவியன் இயேசு நாதரின் வாழ்க்கையை ஓவியமாய் தீட்ட மிகுந்த அர்ப்பணிப்போடு முயற்சியில் இருப்பான். முதலில் குழந்தை இயேசுவை வரைவதற்கு பொருத்தமான குழந்தையைத் தேடுவான். எல்லாக் குழந்தைகளுமே இயேசுவாய்த் தானிருக்கும். ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்து வரைவான். இப்படி இயேசுவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதற்கேற்ற முகங்களைத் தேடி அந்த சாயல்களில் வரைந்து கொண்டே இருப்பான். காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். வருடங்கள் கடந்து கொண்டே இருக்கும். ஒரு கலை வேள்வியாய் அந்த ஓவியன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருப்பான். இறுதியாக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் முகத்திற்கு கொடூரமான, ஈவிரக்கமற்ற ஒரு முகம் வேண்டியதிருக்கும். தேடி அலைவான்.

 

 

ஒரு மோசமான இடத்தில் அப்படி ஒரு மனிதனை சந்திப்பான். உறைந்து போன கண்களோடு அந்த மனிதனின் முகம் கொடூரமாயிருக்கும். ஓவியன் அவனை அழைத்து வருவான். ஓவியக் கூடத்தில் நுழைந்து அங்கு வரைந்திருக்கும் படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு வந்த அந்த மனிதன் திடீரென கேவிக் கேவி அழ ஆரம்பிப்பான். ஓவியன் ஒன்றும் புரியாமல் அவனை என்ன, ஏது என்று விசாரித்து சமாதானப்படுத்த முயற்சிப்பான். அந்த மனிதன் தனது முகத்தை பொத்தியபடி "இருபது வருஷங்களுக்கு முன்னால் நீங்கள் வரைந்த குழந்தை இயேசுவின் முகம் என்னுடையதுதான் " எனச் சொல்லி கதறுவான். ஒவியன் அதிர்ச்சியுற்று நிற்பான்.

 

 

புதுமைப்பித்தன் காட்டும் குழந்தையின் பாதமே மறைந்து போன ஏசுவின் முகமும்! வாழ்வின் ஒரு புள்ளியில் இயேசுவும், யூதாஸும் ஒரே மனிதனாயிருக்கிற காட்சி இது. இந்த சமூகத்தின் சோகச் சித்திரம் இது. எல்லோருக்குள்ளும்  காணாமல் போன ஒரு குழந்தையின் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. தங்கள் சொந்த உருவங்களை இழந்துவிட்டு வாடிப் போய்விடுகின்றனர். இப்படி உருக்குலைத்துப் போடுவதே மனிதருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் குடியேறிவிடுகிற கள்ளமும் கபடமும்தான்.

 

 

இவை உண்மையில் நமது இயல்புகளில்லை. இந்த அமைப்பும், சமூகமும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இங்கு மனிதர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக நிறுத்தி வைத்து ஆடு புலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. யாரையும் நம்ப முடியாத, நெருங்கி ஒட்டி விடாதபடிக்கு அன்றாட வாழ்க்கை மனிதர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது. முன் பின் தெரியாத ஒரு மனிதனைப் பற்றி மனதிற்குள் முதலில் ஒலிப்பது அபாயச் சங்காகவே இருக்கிறது. சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது  ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் அவனை ஒரு மிகப் பெரிய எதிரியாக உருவகிக்கிற அறிவுதான் நமக்குள் ஊறிக்கிடக்கிறது.  ஒரு புன்னகையை உதிர்ப்பதற்கான விசாலம் இல்லாமல் போயிருக்கிறோம்.

 

 

தனது அடையாளத்தை மனிதன்  குழந்தைகளிடம்தான் இப்போது பார்க்க முடிகிறது. அதுதான் குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தையாக மாற்றி விடுகிற வல்லமை கொண்டு இருக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது. பணம் குறித்த பிரக்ஞையே கிடையாது.. இன்னும் சொல்லப் போனால் அதனாலேயே அவர்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்களது பாதங்கள் அப்படி ஒரு மென்மையாய் இருக்கின்றன.

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு நெகிழ்ந்த தனிமையான தருணத்தில் இதை வாசித்தேன். ‘நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்’என்ற அபத்தமும், வலியும் நிறைந்த வாக்கியத்தை உதிர்த்தவள்-உதிர்த்தவன் எத்தனையைச் சந்தித்திருப்பான்? ள்? வாழ்க்கை மனிதர்களால் தாங்கிக்கொள்ளமுடியாத குரூரங்களைக் கொண்டிருக்கிறது நண்பரே! ஆனால், அதை நாம்தான் உருவாக்குகிறோம் என்பதுதான் விந்தை.

    பதிலளிநீக்கு
  2. /
    குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தையாக மாற்றி விடுகிற வல்லமை கொண்டு இருக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது. பணம் குறித்த பிரக்ஞையே கிடையாது.. இன்னும் சொல்லப் போனால் அதனாலேயே அவர்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள்.
    /

    கண்டிப்பாக!


    மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவ்

    நெஞ்சு சஞ்சலத்திற்குள்ளாகும் போதெல்லாம் குழந்தை உள்ளம் நோக்கிச் சிந்திக்க முடிகிற மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களை அந்த நெகிழ்வான உணர்ச்சிகளுக்குள் கரைத்துக் கொண்டு தெளிந்து கரையேற முடிகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    2. ஏசுவாக இருந்தவன் பின்னர் ஒரு கொடிய சாபமான வாழ்க்கையின் இறுதியில் யூதாஸ’ன் ஓவியத்திற்கு ஒரு மாதிரியாக இருக்க நேர்ந்த கதையை நீங்கள் நினைவுபடுத்தி இருந்தீர்கள். எனக்குத் தோன்றியது, அப்படியான ஒரு யூதாஸ் ஒரு புத்தகம் எழுதி உலகின் விழிப்புக்கு உதவிய அண்மைக்காலக் குறிப்பு ஒன்று:

    நியூ ஹாம்ப்ஷயரில் கள்ளம் கபடமறியாமலிருந்த ஒரு பாலகனாக வளர்ந்த நானா இப்படி ஒரு நிலைக்கு வந்தேன் என்று வெட்கத்தோடு என்னைப் பார்த்துக் கொண்டேன்....

    இந்த வரிகளை, ஓர் அருமையான புத்தகத்தின் முன்னுரையில் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
    புத்தகம்: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். ஆசிரியர்: ஜான் பெர்க்கின்ஸ்.
    அழகு தமிழில் மொழிபெயர்த்தவர்: இரா. முருகவேள்.

    3. தனி மனித அறிவு, ஆற்றல், ஆளுமை, அர்ப்பணிப்பு இவை கூட என்னை வியக்க வைப்பதில்லை. இவற்றைக் காசாக்கப்படக் கூடாத காசோலையாகக் கண்ணுக்கும் கைகளுக்கும் எட்டாத தொலைவில் வைத்துவிட்டு ஒன்றுமறியாதவராக நடக்க சாத்தியமான மனிதர்களே அரியவர்கள். அவர்களே நம்மை பிரமிக்க வைப்பவர்கள். அவர்களது புன்னகை, வாஞ்சை, கண்ணசைவு, மொழி எல்லாமே குழந்தைகளுடையதானவை போலவே இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன....

    அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள்......

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  4. வெகு அருமையான இடுகை!! குழந்தைமையை தொலைப்பது நாமே...திரும்பத் தேடுவதும் நாமே!!

    பதிலளிநீக்கு
  5. உறைந்து போய் இருக்கிறேன். அற்புதம் என்பதைத் தவிர சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை.
    //எல்லோருக்குள்ளும் காணாமல் போன ஒரு குழந்தையின் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. //
    ............

    பதிலளிநீக்கு
  6. ஏசுவும் நாமே யூ தாசும் நாமே .......இந்த உலகம் தான் நம்மை மாற்றி கொண்டு வருகிறது . ...மொத்தத்தில் மாற்றியமைக்க படுகிறோம்.

    பதிலளிநீக்கு
  7. இந்த அமைப்பும், சமூகமும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இங்கு மனிதர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக நிறுத்தி வைத்து ஆடு புலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. யாரையும் நம்ப முடியாத, நெருங்கி ஒட்டி விடாதபடிக்கு அன்றாட வாழ்க்கை மனிதர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது. முன் பின் தெரியாத ஒரு மனிதனைப் பற்றி மனதிற்குள் முதலில் ஒலிப்பது அபாயச் சங்காகவே இருக்கிறது. சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் அவனை ஒரு மிகப் பெரிய எதிரியாக உருவகிக்கிற அறிவுதான் நமக்குள் ஊறிக்கிடக்கிறது. ஒரு புன்னகையை உதிர்ப்பதற்கான விசாலம் இல்லாமல் போயிருக்கிறோம்.

    இன்றைய சமுதாய நிலை அப்பட்டமாக சொல்லப்பட்டுள்ளது

    பதிலளிநீக்கு
  8. இன்னும் சொல்லப் போனால் அதனாலேயே அவர்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்களது பாதங்கள் அப்படி ஒரு மென்மையாய் இருக்கின்றன. * //

    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.

    பதிலளிநீக்கு
  9. அம்ருதா!
    நன்றி.

    தமிழ்நதி!
    தங்கள் பகிர்வு இந்தப் பதிவுக்கு மேலும் அர்த்தங்களைச் சேர்க்கிறது. நன்றி.

    மங்களூர் சிவா!
    நன்றி.

    வேணு!
    எவ்வளவு ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது உங்கள் பார்வையும், பகிர்வும்,. தனிப்பதிவே போடலாம்.
    //தனி மனித அறிவு, ஆற்றல், ஆளுமை, அர்ப்பணிப்பு இவை கூட என்னை வியக்க வைப்பதில்லை. இவற்றைக் காசாக்கப்படக் கூடாத காசோலையாகக் கண்ணுக்கும் கைகளுக்கும் எட்டாத தொலைவில் வைத்துவிட்டு ஒன்றுமறியாதவராக நடக்க சாத்தியமான மனிதர்களே அரியவர்கள். அவர்களே நம்மை பிரமிக்க வைப்பவர்கள்.//
    நன்றி.

    சந்தனமுல்லை!
    நன்றி.

    தீபா!
    பதிவு எழுதும்போது மிகச்சரளமாக வந்த வார்த்தைகளாயிருந்தாலும், எனக்கு மிகப் பிடித்த வரிகளாய் இருந்ததையே நீயும் சுட்டிக் காட்டியிருக்கிறாய். நன்றி.


    நிலாமதி!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    பாலரவிசங்கர்!
    நன்றி.

    அமிர்தவர்ஷிணி அம்மா!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!