ரொம்ப நாளைக்குப் பிறகு நேற்று மிஸ்டர்.பி.பியை சந்தித்தேன். பி.பி என்றால் பி.பெருமாள்சாமி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சாத்தூரில், பாண்டிய கிராம வங்கி தலைமையலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, மணிசங்கர் லாட்ஜில் தங்கியிருந்த போது என்னோடு ஒரே அறையில் தங்கியிருந்தவன். பிறகு நான், அவன், காமராஜ் எல்லோரும் சங்க அலுவலகத்திலும் ஒன்றாகவேத் தங்கியிருந்தோம். அங்கு கொஞ்சநாள் இடதுசாரிச் சிந்தனைகளால் உந்தப்பட்டு, தீவீரமாக இருந்தான். திருமணம், வேறு ஊருக்கு மாறுதல் எல்லாம் ஆனபிறகு சந்திப்பின் இடைவெளிகள் அதிகரித்தன. எப்போதாவது சந்திப்பது என்றாகிப் போனது. இப்போது ‘வாழ்க வளமுடன்’ என்கிறான். நிதானம் கூடியிருக்கிறது. ஹோமியோவின் சிறப்புக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறான். வாழ்வை அமைதியாக சுவாசித்துக் கொண்டு முகம் இருக்கிறது.
மணிசங்கர் லாட்ஜில் அவனோடு வாழ்ந்த நாட்களை நண்பர்களோடு உட்கார்ந்து நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். எல்லோரும் “பி.பியா..!” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தார்கள். பி.பியும் என்னைப்பார்த்து கையை நீட்டி, நீட்டி அடக்கமாட்டாமல் சிரித்தான். நீங்களும் தெரிந்து கொள்ளலாம். தப்பில்லை.
கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்திருந்தாலும், வணிக வங்கியில் எதாவது வேலை கிடைத்துப் போய் விட மாட்டோமா என்பது அப்போது எங்களைப் போன்றவர்களின் மனநிலையாக இருந்தது. எனவே அதற்கான விண்ணப்பங்களை ஒன்றுபோல அனுப்பிக் கொண்டு இருப்போம். ஒருமுறை திருவனந்தபுரத்தில் எழுத்துத் தேர்வுக்கு கடிதம் வந்திருந்தது. எதோ உல்லாசப் பயணம் போல நான்கைந்து பேர் சென்றோம். முந்திய நாளே சென்றுவிடோம். ஒரு அறை எடுத்துத் தங்கி, மாலையில் ஒரு பாரில் போய் உட்கார்ந்தோம். பி.பி மட்டும் “என்னடா... நாளைக்கு எக்ஸாம்..’ என்று லேசாய் முணுமுணுத்துக் கொண்டே வந்தான். ஒரு ரவுண்டு முடியுமுன்னால், அவன் பில்ட்டர் சிகரெட்டைத் தலைகீழாக பற்ற வைக்க, பக்கத்து மேஜையில் உட்கார்ந்திருந்தவர் அதைச் சுட்டிக்காட்டினார். இவன் சிரித்துக் கொண்டு இருந்தான். ஜோதிமுருகன் “இங்க காபரே உண்டு.... போகலாமா...” என்றவுடன் பிளாக் பைப்பரின் தைரியத்தில் சரியென்றோம். அவனுக்கு ஏற்கனவேத் தெரியும் போல. அனாயாசமாக அழைத்துச் சென்றான். மனமும், மனமில்லாமலும் பின் தொடர்ந்தான் பி.பி.
டிக்கெட் வாங்கி, மங்கிய வெளிச்சத்திலான அறைக்குள் நுழைந்தோம். மேடையில் இரண்டு மூன்று பேர் எதோ ஆங்கில பாப் பாடலுக்கு கிதார் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு, எரியவும் மேடையில் ஒரு பெண் நின்றிருந்தாள். கிதார், டிரம்ஸ் இசைக்கு ஆடினாள். ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கூட்டம் நோக்கி எறிந்தாள். கடைசியாய் டூ பிஸ் உடையில் ஆடி அடங்க விளக்குகள் முழுசாய் பிரகாசித்தன. பிறகு கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து புன்னகைத்துக் கொண்டே வந்தாள். அப்படியொரு வழக்கம் போலும். கண்ணன் “என்ன... அவ்வளவுதானா?’ என்றான். “இன்னும் இருக்குடா” என்றான் ஜோதி முருகன். அதற்குள் அவள் எங்கள் அருகே வந்துவிட்டு இருந்தாள். கைகொடுத்தாள். நாங்களும் கொடுத்தோம். அவளுடைய கை சில்லிட்ட மலர் போலிருந்தது. பி.பி மட்டும் கைகளை மார்பின் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு விறைத்துப் போனவனாய் உட்கார்ந்திருந்தான். அவள் அவனை நோக்கி கைகளை நீட்டியபடி காத்திருந்தாள். “ம்... குடுடா” என்றான் ஜோதி முருகன். மாட்டேன் என்பது போல தலையை ஆட்டினான். “என்ன குழந்தை... கண்களையும் கட்டிக் கொள்ள வேண்டியதுதானே” என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, அவள் அடுத்த மேஜைக்குச் சென்றாள். பி.பிக்கு அவமானமாய் இருந்திருக்க வேண்டும். வேகமாய் எழுந்து அங்கிருந்து வெளியேறப் போனான். சமாதானப்படுத்த முயற்சித்துப் பார்த்தோம். முடியவில்லை. என்ன செய்ய. அவனோடு சேர்ந்து நாங்களும் வெளியேற வேண்டியதாயிற்று. முழுசும் பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் எங்களுக்கு. அவனோ சாத்தூர் திரும்பும் வரை எங்களோடு பேசவேயில்லை.
இதுநடந்து கொஞ்சநாள் கழித்து, ஒருநாள் இரவு பக்கத்து அறையில் தங்கியிருந்த சண்முகம் என்பவர் எங்கள் அறைக்கு வந்தார். யூனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் பணிபுரிபவர் அவர். மெல்லத் தயங்கி, “சார்... பக்கத்துல ஒரு இடத்துல பி.எஃப் போடுறாங்க... ஆளுக்கு நாப்பது ருபா” என்றார். அந்த வயதில் பிரம்மச்சாரிகள் எங்களுக்கு இது பெரிய விஷயம்தான். பாலின உணர்வின் வேட்கையும், சுவராஸ்யமும் ததும்பிய பருவம் யாரை விட்டது? கண்ணன் உடனே “நாங்க வர்றோம்..” என்றார். ஊருக்குப் போவதற்கு வைத்திருந்த பணத்தில் இருந்து தயங்காமல் நான் நாற்பது ருபாய் உடனே கொடுத்தேன். பி.பி மட்டும் கொஞ்சம் யோசித்தான். பிறகு அவனும் தந்தான். தேவி ஓட்டலில் போய் புரோட்டாக்கள் சாப்பிட்டுவிட்டு, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு இருட்டுச் சந்துக்குள் சென்றோம். அது ஒரு பழைய தீப்பெட்டி ஆபிஸ். ஏற்கனவே இருட்டுக்குள் இருபது பேர் போல உட்கார்ந்திருந்தார்கள். சத்தமே இல்லை. இந்தப் படம் பார்க்கிறவர்கள் எப்போதும் இப்படி உறைந்துதான் போகிறார்கள். நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் டெக்கில் படம் போட்டார்கள். ஒரு டாக்டர். ஒரு பெண்னை பரிசோதிக்கிறார். படுக்க வைக்கிறார். அடுத்த சில கணங்களில் திரையில் நடந்த சமாச்சாரங்களைப் பார்த்து நமது பி.பி குபீர், குபீர் என இருமுறை சிரித்தான். சின்னச் சின்ன சலசலப்புகளோடு அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவன் தோளைப் பிடித்து அடக்கினேன். அவன் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பது போலிருந்தது. சட்டென வாயைப் பொத்திக் கொண்டு வேகமாய் வெளியே ஓட ஆரம்பித்தான். நானும், கண்ணனும் பின்னாலேயே சென்றோம். வாசலைத் தாண்டி தெருவுக்கு வந்ததும் ஒரு சுவர் ஒரமாய் குனிந்து நின்று வாந்தியெடுத்தான். சாப்பிட்ட புரோட்ட்டாக்களின் துண்டுகளாய் கக்கினான். பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் சோடா வாங்கிக் கொடுத்து அறைக்கு அழைத்து வந்தோம். வந்ததும், பாயை விரித்துப் படுத்துக் கொண்டான்.
இப்படி ஒவ்வொன்றாக பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்புறம் ஒருதடவை சங்க அலுவலகத்தில் தங்கி இருக்கும் போது திடுமென எஙகள் சங்கச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஒரு யோசனை சொன்னார். அப்போதும் இதே தேவி தியேட்டரில், இரவில் அப்படிப்பட்ட படங்கள்தான் ஓடிக்கொண்டு இருந்தன. நாலு வழிச்சாலையால் கொஞ்சம் முன்பகுதி இடிக்கப்பட்டாலும், அதைச் சரிசெய்து, இன்றும் ஷகிலாவின் போஸ்டர்தான். இத்தனை வருட அதன் சரித்திரத்தில், நாங்கள் அங்கு அன்று ஒருநாள்தான் படம் பார்க்கப் போய் இருந்தோம். சங்க அலுவலகத்தில் இருந்த எட்டு பேரும் மொத்தமாய் சென்றோம். இடைவேளைக்கு கொஞ்சம் முந்தி அப்படியொரு சீன் வந்தது. சுத்தமாய் தியேட்டர் மூச்சு பேச்சற்றுப் போனது. கிருஷ்ணகுமார் எழுந்தார். “மகாத்மா காந்திக்கு....” என்று உரக்கக் குரல் கொடுத்தார். நாங்களெல்லாம் “ஜே...” என்றோம். மாறி மாறி மூன்று தடவை பெருங்குரலில் கோஷம் எழுப்பவும், தியேட்டரில் படம் நிறுத்தப்பட்டது. விளக்குகள் போடப்பட்டன. நாங்கள் வெளியேறினோம். தியேட்டர்க்காரர்கள் எஙகள் அருகில் வந்து நாங்கள் வெளியேறுவதை பார்த்தபடி நின்றிருந்தார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் பி.பி அன்று தொண்டை கிழிய குதித்துக் குதித்துக் கத்தியது இன்றும் என் நினைவிலிருக்கிறது.
பேசி, சிரித்து முடித்துவிட்டு “பி.பி! மகாத்மா காந்திக்கு.....” என்றேன் இப்போது. என்னை நோக்கி கைநீட்டியபடி குழந்தை போல் சிரித்துக் கொண்டு இருந்தான் அவன். வாழ்க்கை எத்தனை சுகமான, அழகான கணங்களின் துளிகள் நிரம்பிய நதியாய் ஓடிக்கொண்டு இருக்கிறது!
"இளமையென்னும் பூங்காற்று,,,
பதிலளிநீக்குசுகம்.. சுகம்.. அதில் ஒரே சுகம்..
Sir.. Super! Thanks for this beautiful piece of article.
பதிலளிநீக்குanna super.
பதிலளிநீக்கு:-)) பழைய நண்பர்களுடன் நினைவுகளை மீட்பது சுவாரசியமே!
பதிலளிநீக்குyou have no second thoughts while writting this delicate thing.flow is natural as it happened today.the result is a beautiful story!
பதிலளிநீக்குஅதெல்லாம் ஒரு காலம்...
பதிலளிநீக்குபழைய ஞாபகங்களை கிளறிட்டீங்க..
பிரம்மாதம் ... ஒரு அபாரமான சிறுகதையை அல்லவா எழுதியிருக்கிறீர்கள் ... தலைப்பும் அபாரம் - அனுபவப் பகிர்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
பதிலளிநீக்குஇளமைக்கென்றேயுள்ள பிரத்யேகமான உணர்வுகள், அது பிற்காலத்தில் நினைவு கூறப்படும் போது எழும் புன்னகைகள், என எல்லாவற்றையும் மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள், பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநினைவு ததும்பும் பதிவு. ரசனையான எழுத்து. ரசித்து லயித்து படிக்க முடிந்தது.
பதிலளிநீக்குவண்ணத்துப்பூச்சியார்!
பதிலளிநீக்குபாடலோடு ரசித்ததுக்கு நன்றி.
கார்த்திகேயன்!
மிக்க நன்றி.
அண்டோ!
அப்படியா....!
சந்தனமுல்லை!
ஆமாங்க... அவை தவறுகளாகவும், சிறுபிள்ளைதனங்களாகவும் இருந்த போதிலும்.
வேல்ஜி!
புரிதலுக்கு மிக்க நன்றி.
தீப்பெட்டி!
பதிலளிநீக்குஇப்படியான நினைவுகளின் அலைவரிசை பலருக்கும் ஒன்று போலத்தான் இருக்கும்....
நந்தா!
சந்தோஷமாக இருக்கிறது. நன்றிங்க.
குப்பன் யாஹூ!
நன்றிங்க.
யாத்ரா!
அழகாகச் சொல்கிறீர்கள்.நன்றி.
ஆ.முத்துராமலிங்கம்!
நீங்கள் ரசிக்காவிட்டால், எப்படி...!
கலையரசன்!
பதிலளிநீக்குசுட்டிக்காட்டியதற்கு நன்றி.