சில அபத்தமான கேள்விகளும், சில அர்த்தமுள்ள கேள்விகளும்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அப்பாவைப் பெத்த அப்பா ஜோஸ்யம் பார்த்து வைத்ததாய்ச் சொல்வார்கள். ரொம்ப பொறுமையும், சாந்தமும் தவழும் முகமாக குழந்தையில் இருந்ததால் இப்படி பெயர் வைத்ததாகவும் அம்மா சொல்வார்கள். (அபத்தம். பொறுமையும்  இல்லாதவன். சாந்தமும் இல்லாதவன். பிற்காலத்தில் அம்மாவே இதையும் சொன்னார்கள். அம்முவிடம் கேட்டால் இன்னும் வண்டவாளம் வெளிப்படலாம்.) பெயர் பிடிக்கத்தான் செய்கிறது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சந்தோஷம் என்றாலும், வருத்தமென்றாலும் சட்டென்று கண்கலங்கும். வாய்விட்டு அழுதது என்றால், இந்த டிசம்பருக்கு முந்தைய டிசம்பரில், சிறுநீரகக் கோளாறால் அவதியுற்று இறுதியில் கோமா நிலைக்குச் சென்று விட்ட அம்மாவோடு ஆஸ்த்திரியில் இருந்த 28 நாட்களில் எத்தனையோ முறை.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
(அபத்தமான கேள்வி). உங்களுக்கும் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
(அபத்தமான கேள்வி). இன்னிக்கு என்ன குழம்பு சாப்பிட்டோம் என்கிற ஞாபகம் இல்லாத மனிதன் நான். பொதுவாக மீன் குழம்பு பிடிக்கும். அப்புறம் சுடச்சுட ரசம் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பழகுவேன். லேசில் நெருங்கிப் பழக மாட்டேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
(அபத்தமான கேள்வி). தெளிந்த நீர் நிரம்பிய (எங்கள் ஊர்ப்பக்கம் பார்க்க முடியும்) குளத்திலும், வாய்க்காலிலும் மல்லாந்து நீச்சலடித்துக் கொண்டே கிடப்பது ரொம்பப் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அனிச்சையாகவே அவர்களின் கண்களைத்தான் பார்க்க வருகிறது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது, ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் வரும் தன்னை மறந்த ஈடுபாடு. பிடிக்காதது, மற்ற வேலைகள் எதன் மீதும் சிரத்தையற்றுப் போவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது: வெளிப்படையாய் இருப்பது.
பிடிக்காதது: சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது (நம்மையும் ஸ்கூல் பசங்க மாதிரி நடத்துவது. கேட்டால் நீங்கள் உங்களையே மறந்து அலையுற ஆளு.அதான் திரும்பத் திரும்பச் சொல்றேன் என்கிறாள்.)

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அபத்தமான கேள்வி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அபத்தமான கேள்வி. லேப்டாப்பை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். டிவியில் பையன் வைத்திருக்கும் போகோ சேனல் கார்ட்டூன் பட இசை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு (பேனாவில் மட்டும்). பிடித்த கலர் வேறு.

14. பிடித்த மணம்?
தனியா ஒரு பதிவே போட்டிருக்கேன்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
யாரையும் வம்புக்கிழுக்கப் போவதில்லை.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
தீபா - குட் டச் பேட் டச், டோட்டா சான், மனசாட்சியின் குரல், சின்னஞ்சிறு உலகம், மிஷாவும் நானும், அம்மாச்சி வெற்றிலை பிராந்தி, ஒரு கதை இன்னும் பல. (இன்னும் எழுதப்போவதில் எவ்வளவோ)

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட், கபடி, எல்லாம் பிடிக்கும் என்றாலும் குடும்ப விளையாட்டான ரம்மிதான் நமபர் ஒன்.

18. கண்ணாடி அணிபவரா?
(அபத்தமான கேள்வி). ஆம்

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பார்க்கிறோம் என்று பிரக்ஞையற்று பார்க்க வைக்கும் திரைப்படங்களை.

20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க... டிவிடியில். பிரிண்ட சரியில்லாததால் கொஞ்ச நேரத்தில் பார்க்காமல் விட்டுவிட்டேன்.

21. பிடித்த பருவ காலம் எது?
மனமும் உடலும் குளிரும் காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இரா.நடாஜன் எழுதிய ‘ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்’. சிறுவர்களுக்கான நாவல்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
(அபத்தமான கேள்வி.) கடலுக்குள் தென்னை மரங்கள் இருக்கிற அதே விண்டோஸ் படம்தான். மாற்றவேயில்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அதற்கென மனம், நேரம் என நிறைய காரணிகள் இருக்கின்றன. ஒரு நேரம் பிடிப்பது, இன்னொரு நேரம் பிடிக்காமலும் போகலாம். தீபா சொன்ன மாதிரி கரண்ட் வந்தவுடன் ஃபேன் ஒடும் சத்தம். ஏறி உட்கார்ந்த பஸ் புறப்படும் எஞ்சின் சத்தம் என நிறைய சொல்லலாம்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கௌஹாத்தி.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எல்லாவற்றிலும் தொட்டுத் தொட்டு பார்ப்பதுதான் இதுவரையில் நானாக இருந்திருக்கிறேன்.. தனியாத் திறமை.... ம்ஹூம்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத  விஷயம்?
சுயநலம். பொய்.போலித்தனம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சிவப்பு மண்ணும், முந்திரிக்காடுகளும் அடர்ந்த எங்க ஊர்த் தேரிக்காடுதான். அதன் அருகில் உள்ள நவ்வாப்பழ மரங்களும், தாழம்புதர்களும் அடர்ந்த சுனை.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்போதும் போல் இப்படியே இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தெரியாமல் செய்ய விரும்பும் காரியம் எதுவுமல்ல. இல்லாமல் செய்ய விரும்பும் காரியங்கள் இருக்கின்றன.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அதைப் புரிந்துகொள்ளதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

*

கருத்துகள்

25 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பின் மாதவராஜ்

    நல்லா பதில் சொல்லி இருக்கீங்க - அபத்தத்துக்கும் அர்த்தத்துக்கும்

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. //பசங்க... டிவிடியில். பிரிண்ட சரியில்லாததால்//

    :(

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கூறுவது போல் நிரையக் கேள்விகள் அபத்தமானதே.
    (இருந்தாலும் இதை உருவாக்கியவர்கள் ஒரு பொழுதுப் போக்காகவே உருவாக்கி இருக்கக் கூடும் அது பயணித்துப் பயணித்து எல்லோர் கைகளுக்கும் செல்லும் போது அதன் பொழுதுப் போக்கு உடைபட்டு அபத்தமாகி விட்டது என்று எண்ணுகின்றறேன்)

    ஒவ்வொரு பதிலும் நேர்த்தி.
    மனதிற்கு ஒப்புக்கொண்டதை வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள்.
    (இந்த தொடர் பதிவை வாசித்து வந்ததில் ஒன்றை புரிந்து கொள்ள முடிந்தது எல்லோருக்குள்ளும் இருக்கும் சாத்தான் கோபம்!!! ஒரே ஒருவருக்கு மட்டும் காமம்)

    பகிர்வு நல்லதாகவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. மனம் திறந்து பதில் சொன்னமைக்கு பாராட்டுகள் (அ) நன்றி (அ) வாழ்த்துகள்.

    ஆ.முத்துராமலிங்கம் கூறியதேதான் எனது பதிலும்!! ஒரு சில பதில்களையும் ரசித்தேன்!!!

    பதிலளிநீக்கு
  5. என்னது பசங்க DVD வந்தாச்சா ?

    நல்லா வாழும் திரை துறை :)

    பதிலளிநீக்கு
  6. கடைசியில உங்களையும் அரசியல்வாதியாக்க பார்த்திருக்காங்க...
    --அபத்தம் என்று போட்டுவிட்டு எழுதிய பதில்கள் ரசித்தேன்--

    பதிலளிநீக்கு
  7. சுவாரசியம்! வெளிப்படையான பதில்கள்!

    பதிலளிநீக்கு
  8. சீனா!
    நல்லாவா பதில் சொல்லியிருக்கேன்....!

    கையேடு!
    சிரிக்கிறீங்களா...

    டக்ளஸ்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதில்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் படியாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  10. ஆ.முத்துராமலிங்கம்!
    பொழுதுபோக்கிற்கு என்றாலும் இன்னும் சுவாராசியமாக கேள்விகளை வைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
    எதோ மனசுக்குப் பட்டதை படபடவென சொல்லிவிட்டேன்.

    ஆதவா!
    பகிர்வுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    அனானி!
    திரைப்படத்துறைக்கு இதுவா கேடு?


    வெங்கிராஜா!
    எப்படியோ தப்பி விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சந்தனமுல்லை!
    யாத்ரா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஏற்கனவே என்னையே பிரபல பதிவர்ன்னு சொல்லி ஒருத்தர் இந்த தொடர் பதிவு எழுத கூப்பிட்டதுக்கு, மனைவியிடம் ஏற்கனவே அவமானபட்டாச்சு.
    http://joeanand.blogspot.com/2009/06/blog-post.html

    இப்போ இவரு வேற இதெல்லாம் அபத்தமான கேள்விகள்-ன்னு உண்மையே வெளிச்சம் போடுறாரு. நீ ஒரு அபத்தக் களஞ்சியம், அதுனால தான் உன்னையே கூப்பிட்டிருக்காங்க-ன்னு அடுத்து வேற அசிங்கப்படனும் போலேருக்கே?

    உங்க பதில்கள் பிடித்திருந்தது மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  13. //கையேடு!
    சிரிக்கிறீங்களா...//

    அப்படியும் வச்சுகலாம்.. 27 வாசித்துவிட்டு மறுபடியும் 20 ஐ வாசித்துப் பார்த்தால்..

    பதிலளிநீக்கு
  14. \\கடலுக்குள் தென்னை மரங்கள் இருக்கிற அதே விண்டோஸ் படம்தான். \\

    நம்மளுதும் இதேதான் நேற்று காலை வரை.

    மாலையில் கணினியில் ஏதோ செய்தார்கள் டீபாள்ட்டுக்கு போயிடிச்சி.

    (இந்த கேள்வி அபத்தம் அல்ல, இதை பற்றி நிறைய இருக்கு. இயன்ற போது பகிர்கிறேன் - அல்லது வேறு யாரேனும் முயற்சித்தாலும் நலமே)

    பதிலளிநீக்கு
  15. தோழர் மாதவராஜ்,
    உண்மையாக இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினமானதுதான்.
    ஆனாலும் சொல்லிவிட்டீர்கள். அபத்தங்களால் நிரப்பப்பட்டதுதானே வாழ்க்கை.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  16. ஜோ!
    உங்கள் பதிவைப் படித்தேன். சிரித்தேன். சுவராஸ்யமான ஆள்தான் நீங்கள்.

    கையேடு!
    இதெலென்ன பொய்யோ, போலித்தனமோ இருக்கு? ‘பசங்க படம் பாருங்க... உங்களுக்குப் பிடிக்கும் என பதிவர் கேபிள் சங்கர் சொல்லியிருந்தார். தியேட்டரில் பார்க்கத்தான் நினைத்திருந்தேன். எனது மகள் அவளது ஃபிரெண்ட் வீட்டிலிருந்து பசங்க டிவிட் வங்கி வந்தாள். பிரிண்ட் சரியில்லை என்றதும் பார்க்க மனம் வரவில்ல. இதில் என்ன பொய்யோ, போலித்தனமோ இருக்கு என்று தெரியவில்லை. சொல்லுங்கள்... நானும் சிரித்துக் கொள்கிறேன்.


    நட்புடன் ஜமால்!
    பகிர்ந்தால் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.


    திகிழ் மிளிர்!
    நன்றிங்க.


    அகநாழிகை!
    ஆமாங்க.
    எனது பதில்களும் கூட அபத்தங்களாக இருக்கக்கூடும்.:))

    பதிலளிநீக்கு
  17. விளக்கமாகப் பின்னூட்டம் இடாததற்கு முதலில் மன்னிக்கணும்.

    பசங்க திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் படித்திருந்தேன். திரைப்படத்தின் பின் ஒரு இளைய இயக்குனரின் வாழ்க்கைப் போராட்டமே இருப்பதாக அறிகிறேன்.

    போலித்தனத்தை வெறுக்கும் நீங்கள், திருட்டை முதலீடாக வைத்து செய்யும் டிவிடி வியாபாரத்திற்கு துணைபோனதை நினைத்தே வருத்தத்தைத் தெரிவித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. அங்கிள்,
    பின்னூட்டங்கள் சரியாகத் தெரியவில்லை. அதாவ்து இடது புறம் கொஞ்சம் மறைகிறது.
    சரி பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  19. சில கேள்விகள் அபத்தமா இருந்தாலும் அழைத்தவருக்கு மரியாதை செய்து மற்றவரை அழைக்காமல் தவிர்த்தேன்.

    உங்களது பதில்களை நானும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. கையேடு!
    இந்த பசங்க படத்தைப் பொறுத்த வரையில் உங்கள் கவலையைப் புரிந்து கொள்கிறேன்.ஆனாலும் போலித்தனத்திற்கும் இந்த பிரச்சினைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

    இவர்கள் எடுக்கும் இதரக் குப்பைத் திரைப்படங்களைப் பார்க்கும் போது டிவிடி விஷயம், இவர்களுக்கு சரியானத் தண்டனையாகவே இருக்கக் கடவதாக!

    பதிலளிநீக்கு
  21. தீபா!

    இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஃபயர் பாக்ஸிலும், குரோமிலும் இல்லை.

    சரி செய்ய முடியவில்லையே...?

    வேலன்!
    சரிதான் நீங்கள் சொல்வது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //அதைப் புரிந்துகொள்ளதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.//

    ம்ம்ம்ம்ம.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!