ஆதிக் காதலும், காவியக் காதலும்

ஒடுகிறாள். அவன் துரத்துகிறான். ஒரு மரத்தின் அருகில் போய் மூச்சு வாங்க நிற்கிறார்கள். விரல்கள் மெல்ல மெல்ல நெருங்குகின்றன. பார்வைகள் மயங்குகின்றன. விரல் நுனிகள் தொடுகின்றன. தீண்டுகின்றன. கோர்க்கின்றன. கடல் அலைகள் நுரை பொங்க கரையில் மோதுகின்றன. ஆயிரமாயிரம் புறாக்கள் எழும்பி சடசடவென்று பறக்கின்றன. தந்தனம் தந்தனம் என வெள்ளையுடை தேவதைகள் சேர்ந்திசைக்கிறார்கள்.

இவை எதுவும் அப்போது நிகழவில்லை. விலங்குகளின் உணர்வுகள் மட்டுமே மனிதர்களிடம் இருந்தன. எதையும் மறைத்துக் கொள்ளாத காட்டுமிராண்டிகளாயிருந்தனர். விதைகளையும், வேர்களையும், கனிகளையும் உண்டு மரங்களில் வசித்து வந்தனர். குடும்ப உறவுகளற்ற வெளியில் வானத்தின் கீழ் எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் ஒருவரோடு ஒருவர் தங்கள் உடல்களை பகிர்ந்து கொண்டனர். இனப்பெருக்கத்தின் உந்துவிசையான உடல் இச்சை தவிர எந்த கண்களிலும் ரகசியங்கள் இருக்கவில்லை. பெண்களே குழுக்களில் தீர்மானிப்பவர்களாகவும், நிர்மாணிப்பவர்களாகவும் இருந்தனர். தங்கள் தேவைக்கதிகமாக அல்லது பராமரிப்புகளுக்கு அதிகமாக மனிதர்கள் எதையும் உற்பத்தி செய்யவில்லை. குடும்பங்கள் தாய் வழியிலும், சந்ததிகள் தாய் மூலமுமே நிச்சயிக்கப்பட்டனர். பெண் சக்தி மிக்கவளாய் உயர்ந்திருந்தாள். வாழ்வின் அர்த்தங்களும், மாயங்களும், உயிர்ப்பும் அவளே கொண்டிருந்ததாய் கருதப்பட்டாள். இயற்கையின் ரகசியங்கள் புதைந்தவளாய் தோன்றினாள். படைப்பாற்றல் கொண்ட அவளது ரத்தம் சிந்தும் உடலின் கூறுகளை அறிய முடியாமல் ஆண்கள் பெண்களை போற்றி வந்தனர். அடங்காத வேட்கை கொண்டவளாகவும், புனிதமானவளாகவும், கடவுளாகவும் பெண் சித்தரிக்கப்பட்டாள். பெண் தெய்வங்களுக்கு பல காதலர்கள் இருந்தனர். அவள் மட்டும் நிலைத்திருக்க காதலர்கள் மரணமடைந்து போனார்கள்.

வேட்டையாடிக் கொண்டிருந்தவர்கள் மாடுகள், பன்றிகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்களை மேய்த்தார்கள். கால்நடைகள் மெல்ல மெல்ல ஆண்களின் சொத்துக்களாய் மாறின. புல்வெளிகளைத் தேடி நதிகளின் கரைகளில் வந்து நின்றார்கள். விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்த இந்த வளர்ச்சிப் போக்கில்தான் குடும்பங்களும் உறவுகளும் தோன்ற ஆரம்பித்தன. ஆண்கள் குடும்பத்தின் தலைவர்களானார்கள். பெண்கள் வீடுகளுக்குள் நிலைக்கப் பெற்றார்கள். ஒரு பெண் கருவுறுவதற்கு ஒரு ஆண் போதும் என்பதை ஆண் அறிந்து விட்டிருந்தான். தனது சொத்துக்களுக்கு வாரிசுகளை நியமிக்க ஆண் தனக்குப் பிறந்தவனை அடையாளம் காண வேண்டியிருந்தது. தந்தை வழி சமூகத்தின் இந்த தோற்றுவாயில்தான் ஒரு வலிமையான உறவு குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்புநெறியாக, பெண்களின் பிறவி ஒழுக்கமாக நிலைநிறுத்தப்பட்டது. நாகரீகத்தின் அடுத்த வளர்ச்சியாக இதனை உயர்த்திடாமல், மதங்களும், கடவுள்களும் முழுக்க முழுக்க ஆண்களின் பக்கம் நின்று பெண்களின் வீழ்ச்சியாக இதனை நிச்சயம் செய்யவே கட்டளைகளையும், விதிகளையும் பிறப்பித்தன. பல்லாயிரம் ஆண்டுகளாய் நீடித்திருந்த தனது வரலாற்றைத் தொலைத்து, பெண் தலைகுப்புற வீழ்ந்த இடம் இதுதான்.

"அவன் ஒரு அம்பை விடுவித்தான்.
அது அவள் வயிற்றைக் கிழித்தது.
அவளுடைய உள் அவயங்களை ஊடுருவினான்.
அவளுடைய உடலை கீழே வீழ்த்தினான்.
வெற்றிக் களிப்பில் அதன் மீது காலை வைத்தான்".

கி.மு இரண்டாயிரத்தில் பாபிலோனியாவின் படைப்புக் காவியத்தில் ஆணின் அதிகார மாற்றம் இப்படி குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆணே இனப்பெருக்கத்தின் பிரதான பாத்திரத்தை ஆற்றுபவனாகவும், பெண் முனைப்பற்ற முறையில் அவனுடைய விதையை அடைகாக்கும் கருவியாக மட்டுமே ஆனாள். வீடுகளுக்குள்ளூம், பர்தாக்களுக்குள்ளும், அந்தப்புரங்களுக்குள்ளும் பெண்கள் மறைந்து போனார்கள். அவர்களின் அற்புதங்களும், அதிசயங்களும் இப்போது அழுக்காகவும், அசிங்கமாகவும்
பேசப்பட்டது. கணவனையும், குழந்தையையும் பராமரிப்பது அவர்களின் வாழ்வின் அர்த்தமாகி விட்டிருந்தது. பெண்களின் சொர்க்கம் ஆண்களின் காலடியில் கிடந்தது. தனிமை அவளின் பொழுதாகவும், மௌனம் அவளின் மொழியாகவும் ஆனது. கனவுகள், கவலைகள் எல்லாமே பிரத்யேகமாகிப் போக முற்றிலும் ஆண்களிலிருந்து வேறுபட்ட உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

வரலாற்றின் இந்தப் பிழையை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தனிப்பட்ட ஆண்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தியது ஒன்றே ஒன்று தான். காதல் என்னும் அந்த நெருப்பு பற்றிக் கொண்ட போது ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் புனிதமானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் தோன்றினார்கள். சமூகத்தின் தளைகளுக்கு கீழ்ப்படிந்து போகாமல் இருவரும் சேர்ந்து வேறு உலகத்தில் உலவ ஆரம்பித்தார்கள். ஒப்புக்கொள்ள முடியாத அந்த பழைய காலம் காதலை அழகானதாகவும், ஆபத்தானதாகவும் ஆண்களிடம் திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டிருந்தது. பெர்ஷியன், ஐரோப்பியச் சிந்தனைகளில் காதல் வயப்படுவது என்பது ஒரு நோயாகவே கருதப்பட்டு இருக்கிறது. "சைத்தானின் கண்கள்' என்றெல்லாம் சாபமிட்டிருக்கிறது.

அழகான பெண்களை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போகும் ஆண்கள் காதல்வயப்பட்டு தங்களை இழந்து நின்ற காட்சிகளை பார்க்க முடிகிறது. "ரோம் டைபர் நதியில் உருகிப் போகட்டும். விரிந்து பரந்த இந்த சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து நொறுங்கட்டும். எனக்கான இடம் இதோ இருக்கிறது" என்று கிளியோபாட்ராவைப் பார்த்து அரற்றுகிறான் அந்தோணி. "என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள். நீ எனக்கு வேண்டும்" என்று காட்டிற்குள் சகுந்தலையை முதன் முதலில் பார்த்த உடனேயே துஷ்யந்தன் சொல்கிறான்.

காதல் ஆண்களையும், பெண்களையும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. தனக்கான ஒருவன் என அவளும், தனக்கான ஒருத்தி என அவனும் சகலத்தையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். பால் கசக்க ஆரம்பித்தது. படுக்கை நோக ஆரம்பித்தது. மேகங்களையும், புறாக்களையும் தூது விட்டார்கள். மரணத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். பருகியிருந்த விஷத்தின் துளிகள் ஒட்டி இருந்த ரோமியோவின் உதடுகளிலிருந்து அதைக் குடிக்க முற்படுகிறாள் ஜூலியட். உறங்கிக் கொண்டிருக்கும் டெஸ்டிமோனாவின் கடைசி படுக்கையருகே கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து நிற்கிறான் ஒத்தல்லோ. லைலாவும், மஜ்னுவும் பாலவன மணல் வெளிகளில் காலடிகளை நிரப்பிச் செல்கிறார்கள். அனார்கலியின் கல்லறையில் சலீம் தலையால் மோதி கதறுகிறான். அம்பிகாபதி இறந்ததும் அமராவதியும் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். "காதல் மரணத்தைப் போல வலிமையானது" என்று பாடல்களின் பாடல் என்னும் கிரேக்கப் பாடலில் வரும் வரிகள் காதலின் அமரத்துவத்தை சொல்லிக் கொண்டு இருந்தன.

அருவருப்பாக சித்திரம் தீட்டப்பட்ட பெண்கள் இந்தக் காதலால் அழகானவர்களாகவும், மென்மையானவர்களாகவும் காவியங்களில் சித்தரிக்கப்பட ஆரம்பித்தார்கள். ஆண்கள் அவர்களின் அருகில் போய் தோளில் கை போட்டு நின்ற காட்சிகள் தெரிகின்றன. காதலின் மாயமாய் எல்லாம் புரிகிறது. ஆணும், பெண்ணும் ஒருவரை யொருவர் நேசிப்பது இருக்கும் வரை பெண்களின் மீதான பாலியல் தன்மை மீதான தாக்குதல்கள் ஒரு போதும் முற்றாக வெற்றியடைந்து விட முடியாது" என்று வரலாற்றாசிரியர் ரோஸலிண்ட் மைல்ஸ் கூறுவது உண்மையாகிறது.

இன்னும் ஒரு உண்மை மீதமிருக்கிறது. அது வேதனையானது. இந்த காவியக் காதல்களில் வரும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்த மாந்தர்களாய் இல்லை. சீதை ராமனிடமிருந்து பிரிந்து காட்டில் வசிக்க வேண்டி இருந்தது. துஷ்யந்தனின் மோதிரமும், குழந்தையும் மட்டுமே வாழ்ந்த காலத்தின் மிச்சமாகிப் போகிறது சகுந்தலைக்கு. பெண்களின் சோகங்கள் தீர்ந்திடவில்லை. காதல் அவர்களின் இருண்ட உலகத்தின் சன்னல்களைத் திறந்து விட்டிருந்தாலும் கதவுகள் மூடியபடியே இருந்தன. அவர்களின் உலகம் வேறாகவே இருந்தது. வரலாற்றின் இருட்டில் அது புதைந்து போயிருந்தது.

"நான் உயரே பறக்க விரும்புகிறேன்.
ஆனால் என்னுடைய துணை எப்போதும் கூட்டினிலே ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றது கழுகு.
"என்னால் பறக்க முடியாது. அவ்வாறு முயற்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை. ஆனால் என்னுடைய துணை வானில் உயரே உயரே பறப்பதைக் காண நான் பரவசமடைகிறேன்." என்றது பெட்டைக்கோழி.
அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.
"ஆ.. இதுதான் காதல், என் அன்பே" கூவினர்.
கோழி அமர்ந்தது. கழுகு உயரேப் பறந்தது ஒற்றையாக."

மண வாழ்க்கையின் பேரின்பம் என்று சார்லெட் பெர்கின்ஸ் எழுதிய இந்தக் கவிதையில் அன்றையக் காதல் உலகத்தின் விதிகள் மிகத் தெளிவாக சொல்லப்படுகின்றன. பெண் மௌனமாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் வரை இந்தக் காதலின் புனிதங்கள் போற்றப்பட்டிருந்தன. அவள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும்வரை ஆண்களின் உலகம் காதலைக் கொண்டாடிக் கொண்டு இருந்தது.

ஆனால் பெண் இப்போது பேச ஆரம்பித்து விட்டாள். ஆதிக்காதலும், காவியக்காதலும் அவள் மீது படிந்து படிந்து அவைகளின் சாயலாக மாறுவதில் சம்மதமில்லை அவளுக்கு. எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து நிற்கிறாள். இந்தப் புதுவெள்ளத்தில்தான் கலங்கி நிற்கிறது இன்றைய காதல்.

(எனது பதிவுலக ஆரம்ப நாட்களில் எழுதப்பட்டது இது. ‘ஆதலின் காதல் செய்வீர்’ என்னும் சிறு புத்தகத்தின் மூன்றாது அத்தியாயம் இது. முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள சுட்டிகள் மூலம் வாசிக்கலாம்)

1.மாய வண்ணத்துப்பூச்சி 2. உதிரும் சிறகுகள்
 
3.ஆதிக்காதலும் காவியக்காதலும்
 
4. பெண் ஒரு கிரகம், ஆண் ஒரு கிரகம்.
 
5.ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!
 
 

மொத்தத்தில் மீள்பதிவுகளின் தொகுப்பு இது!

*

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையான தொகுப்பு ஸார்.. மிக்க நன்றி.. மறுபடியும் வாசிக்கத் தூண்டும் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. உரைநடை கவிதை நடையாய் இருக்கிறது.காதலைப் பற்றி எழுதியதாலோ?

  பதிலளிநீக்கு
 3. பதிவு கொஞ்சம் நீளம் போல தோன்றினாலும் முழுதையும் படிக்க வைத்த நடை.
  அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. \\\எதையும் மறைத்துக் கொள்ளாத காட்டுமிராண்டிகளாயிருந்தனர் \\\

  மறைத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகே அவர்கள் காட்டுமிராண்டிகளாயினர்.!!! நிர்வாணம் என்பது அப்பட்டம். பிறகு அதில் ஒன்றுமே இல்லையென அர்த்தம். நிர்வாணத்தை மறைக்கப் போய் மனதில் வன்மையும், வக்கிரமும், காமமும் அளவில் மிகுந்துவிட்டன.

  நல்ல கட்டுரை...

  காதல் பற்றி தெரிந்த நபர் கூறக் கேட்டேன். அந்த பெண் ரொம்ப தீவிரமாகக் காதலித்தாளாம். வழக்கம் போல வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. உன்னுடன் ஒருநாள் வாழ்ந்தாலே போதும் என்றாளாம். ஒரு லாட்ஜில் ரூம் போட்டு வேலையை முடித்துவிட்டனர். அடுத்தநாள் நீ யாரோ நான் யாரோ.. இப்போது அந்த பெண்ணுக்கு ரெண்டு பிள்ளைகள். இன்றைய காதல் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறதோ என்னவோ???

  பதிலளிநீக்கு
 5. அருமையான கட்டுரை தொகுப்பு.
  எழுத்து தெளிந்த நீரோடை போல் செல்கின்றது. மிக நேர்த்தி.

  பெண்ணின் ஆதிகாலத்தில் ஆரம்பித்து.
  நாகரீக மாற்றம் அதனால் புரட்டப் படும் பெண்ணின் புனிதம். பின் காதலின் இருப்பு என்று எத்தனை விசயங்களில் பயணிக்கின்றது. அத்தனையும் ஒரு கண்ணியில் மிக அழகான நடையில் கோர்துள்ளீர்கள்.

  நல்லதொரு கட்டுரை இது.

  |ஒரு பெண் கருவுறுவதற்கு ஒரு ஆண் போதும் என்பதை ஆண் அறிந்து விட்டிருந்தான்.|

  இங்குதான் ஆரம்பித்து இருக்குமோ பெண் அடிமை!!

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு கட்டுரை. ஹ்ம்ம்..சுவாரசியமாக இருந்தது படிக்க!
  மற்ற தலைப்புகளையும் படிக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. நர்சிம்!
  நன்றி.

  மங்களூர் சிவா!
  நன்றி.

  வெண்மணிச்செல்வன்!
  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மைந்தனின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பட்டாம்பூச்சி!
  ரொம்பநாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.நன்றி

  ஆதவா!
  பகிர்வுக்கு நன்றி.

  ஆ.முத்துராமலிங்கம்!
  ஆம். நீங்கள் குறிப்பிட்டு இருப்பது மனிதகுல வரலாற்றில் முக்கிய இடம்.


  சந்தனமுல்லை!
  நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!