டெல்லியில் நடக்கும் ரம்மி விளையாட்டு!

அதற்கு மேலும் அவர்களால் காத்திருக்க முடியவில்லை. கடைசிக்கட்ட வாக்குப் பதிவு மே 13ம் தேதி முடிந்த அந்த வினாடியில், சரியாக மாலை 5 மணிக்கு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகளை வெளியிட ஆரம்பித்தது. ’அப்பாடா.. சத்தங்கள் ஓய்ந்துவிட்டன என்று தேசத்தின்  முக்கிய வீதிகளில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனையை ஆரம்பித்த பொழுதில், டைம்ஸ்நவ்வின் எடிட்டர் கோஸ்வாமி பிரஸ்தாபிக்க, நான்கைந்து ‘விற்பன்னர்கள்’ உட்கார்ந்து இந்திய அரசியலின் தலைவிதியைப் போட்டு அலசு அலசு என்று அலச ஆரம்பித்தார்கள்.

போன தடவை ‘இந்தியா ஒளிரும்’ என்று நடத்திய இவர்களது கணிப்புகள் எல்லாம் உடைந்து நொறுங்கிய அதே ஆந்திராவில் இருந்து தொடங்கினார்கள். தெலுங்கு தேசத்திற்கு-15, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி-5, காங்கிரஸ்-14, சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்ஜியம்-5, இடதுசாரிகள்-2, இதர-1 என்று கம்ப்யூட்டர்க் கிளிகள் சீட்டுகளை கலர் கலராய் எடுத்து விரித்தன. மளமளவென விற்பன்னர்கள் சீட்டுக்களை எடுத்து அவரவர்களுக்கேற்ப  ஜோடி சேர்க்க ஆரம்பித்தார்கள். சிரஞ்சீவிக்குக் கிடைக்கும் 5ம் காங்கிரஸுக்கு வந்தால், இழப்பைச் சரிக்கட்ட உதவும் என்றார்கள். அடுத்து பீகாருக்கு கிளிகள்,  நிதிஷ் -19, பி.ஜே.பி - 10, லல்லுவும், பஸ்வானும் சேர்ந்து -6, காங்கிரஸ் -3, இடதுசாரிகள் -1, இதர -1  என்று சீட்டுக்களை விரித்தன.  காங்கிரஸ் ரொம்ப குறைந்து விட்டது எனக் கவலைப்பட்டு, நான்காவது அணியிலிருந்து லல்லுவையும், பஸ்வானையும் அத்தோடு சேர்த்து வைத்தார்கள். பா.ஜ.கவோடு நிதிஷைச் சேர்த்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள். இப்போது இந்தக் கருத்துக் கணிப்புகளின் நோக்கமும், செய்தியும் பிடிபட ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு மாநிலமாக சீட்டுக்கள் விரிய விரிய, பக்கத்தில் வேறு காட்சிகளும் மின்னல் வெட்டுக்களாய் திரையில் விரிகின்றன. கண்ணாடி இறக்கப்பட்ட கார்கள் மாறி மாறி வருகின்றன. போகின்றன. சோனியா காந்தி இறங்குகிறார். மன்மோகன் குனிந்து தலையாட்டுகிறார். அத்வானி யோசிக்கிறார். மோடி காரிலிருந்து இறங்குகிறார். நிதிஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் நீட்டிய மைக்கில் எதோ சொல்கிறார். காரில் ஏறும் ஜெயலலிதா பேசுகிறார். மாயாவதி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். முலாயம் நடக்கிறார். தேவகவுடா போகிறார். காங்கிரஸ்  நம்பர் 200 ஐ எட்டுகிறது. பா.ஜ.க நமபர் 180ஐத் தொடுகிறது. மூன்றாவது அணி 100க்குள் சுருங்குகிறது, காங்கிரஸ் அல்லது பா.ஜ.கவுக்குத்தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என மூன்றாவது அணியிலும், உதிரிக்கட்சிகளிலும் ஊசலாட்டத்தோடு இருப்பவர்களை உறிஞ்சிக் கொள்வது என்பதுதான் இந்த டிஜிட்டல் தந்திரங்களின் இலட்சியம்.
இந்தியப் பெருமுதலாளிகளின் சதி ஆட்டம்தான் இது. ஒன்று காங்கிரஸ் வர வேண்டும், அல்லது பா.ஜ.க வரவேண்டும் என்னும் வெறி கொண்ட பேயாட்டம் இது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் கோடி கோடியாய் கொடுத்து, தொகுதியில் செலவழிக்க வைத்து, மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க வைத்து எண்களை முதலாளிகள் தங்கள் வசப்படுத்த முயற்சித்தது முதல் கட்டம். வந்த எண்களை தங்களுக்கேற்ப கூட்டி, கழித்து கட்டமைக்கப் பார்க்கும் இந்த தருணம் இரண்டாவது கட்டம். இடதுசாரிகளின் ஆதரவோடு மூன்றாவது அணியொன்று ஆட்சியமைக்குமானால் தங்கள் நலன் பாதிக்கப்படும் என்பதுதான் பெருமுதலாளிகளின் இத்தனை அதிவேக சுழற்சிகளுக்குமான மையப்புள்ளி.  அமெரிக்கத் தூதர்கள் இருவர் சிரஞ்சீவியைப் போய்ப் பார்க்கும் அளவுக்கு அவர்களது அத்துமீறல்கள் வெளிப்படையாகி இருக்கின்றன.

எத்தனைதான் மறைத்தாலும் ஒரு விஷயம் அவர்களையும் மீறி வெளிப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் அவைகளின் சொந்தக் காலில் நிற்கும் வலுவை வேகமாக இழந்து வந்து கொண்டு இருக்கின்றன என்பதுதான் அது. ஆந்திராவில் இனி தெலுங்கு தேசத்திற்கும், காங்கிரஸுக்குமான போட்டி இராது. சிரஞ்சீவிக் கட்சிக்கும், தெலுங்கு தேசத்திற்குமான போட்டியாகத்தான் இருக்கும். காங்கிரஸ் இவைகளில் எதாவது ஒன்றோடுதான் இனி நிற்க முடியும். பீகாரில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. ஒரு காலத்தில் உ.பியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இப்போது ஒற்றை இலக்கைத் தாண்டுவது கூட இல்லை. ம.பி, இராஜஸ்தான், கேரளா, டெல்லி,  போன்ற சில மாநிலங்களில்தான் சொந்த செல்வாக்கு உள்ளது. பா.ஜ.கவுக்கு குஜராத், கர்நாடகம், ம.பி, இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் சொந்த செல்வாக்கு. மாநிலக் கட்சிகள் பாராளுமன்றத்தில் தங்கள் செல்வாக்கை நிலநாட்டிக் கொள்ளும் தருணம் நெருங்குகிறது. இந்த மாநிலக் கட்சிகளை அரவணைத்து, ஒருமுகப்படுத்தி மூன்றாவது அணி அமைக்க இடதுசாரிகள் முயற்சித்து வந்தன.  தேர்தலுக்குப் பிறகு இந்த நிலைமை தெளிவாகும், மேலும் சில கட்சிகள் மூன்றாவது அணியில் சேரும் வாய்ப்பு இருக்கும் என்பதுதான் இடதுசாரிகளின் பார்வை. அதைச் சீர்குலைத்து, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே காங்கிரஸும், பா.ஜ.கவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே இத்தனை அழிச்சாட்டியங்களும்.

சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அமர்நாத்திடம் காங்கிரஸின் திக்விஜய் நேற்று மன்னிப்புக் கேட்டு உறவுகளை அவசர அவசரமாகப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார். மோடி ஜெயலலிதாவிடம் பேசி வருகிறாராம். கமல்நாத், நவீன் பட்நாயக்கிடம் பேசுகிறார்கள். ராஜ்நாத் , திருமண விருந்தில் அமர்நாத்திடம் எதோ சொல்கிறார். சிரஞ்சீவியோடு பேசுவதற்கு ஆட்கள் செல்கின்றனர். சரத்பவாரிடம் சோனியாவே பேசுகிறார். அன்புமணி ராமதாஸிடம் பேச காங்கிரஸ் ஏற்பாடு செய்கிறது. இந்தச் சீட்டு விளையாட்டில் பா.ஜ.க ரம்மி சேர்த்தாலும், காங்கிரஸ் ரம்மி சேர்த்தாலும் அது இந்தியப் பெருமுதலாளிகளின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெற்றி. ஏனென்றால் அவர்கள் கையிலிருக்கும் சீட்டுகள்தான் பா.ஜ.கவும், காங்கிரஸும்.

இன்னும், தேர்தல் முடிவு அறிவிக்க 24 மணி நேரமே இருக்கிறது டிவியில் கவுண்ட் டவுன் காண்பிக்கப்படுகிறது. ஆட்களையும், கட்சிகளையும் பிடிப்பதற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம்தான் அது. அவர்களை அவசரப்படுத்தும் அறிவிப்புதான் அது. மக்களுக்கு அல்ல!

 

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மண்டை காய்கிறது இவர்கள் அடிக்கும் கூத்துக்களால்:(

  பதிலளிநீக்கு
 2. supervv comrate........

  cards only in their hand.....

  but the peoples are in our hand.......

  that alternative hands must alternate the country...

  johnpaul.s.

  பதிலளிநீக்கு
 3. //சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அமர்நாத்திடம் காங்கிரஸின் திக்விஜய்//

  அமர்நாத் அல்ல அமர்சிங்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா15 மே, 2009 அன்று 11:01 AM

  இந்த விளையாட்டில் சிபிஎம் மட்டுமென்ன யோக்கியமானவர்களா?.
  நேற்றுவரை நவீன் பட்னாயக், பாஜகவின் கூட்டாளி.காந்தமலில்
  நடந்ததெல்லாம் அவருக்கு தெரியாதா?. இன்று அவருடன் கூட்டணி.பாஜகவுடன் உறவைத் யார்
  உறவை துண்டித்தாலும் அவர் மதச்சார்பற்றவாதி என்று கொண்டாடி மூன்றாம் அணியில் சேர்த்துக் கொள்வீர்கள். இது சந்தர்ப்பவாதமில்லையா?. தெலுங்கு தேசமும் பாஜகவின் முன்னாள் கூட்டாளி. இவர்கள் நாளைக்கே அணி
  மாறலாம்.ஆனால் இவர்களை வைத்துக்கொண்டு மாற்று அரசியல்
  என்று புளுகுகிறீர்கள்.மாயவதிகள்,
  நாயுடுக்கள்,பட்நாயக்கள்,ஜெயலலிதாக்கள்,ராமதஸ்கள் என யாருடனும் சேரும் சிபிஎம்,சிபிஐக்கு பாஜக,காங்கிரசை குறை கூற
  எந்தத் தகுதியும் இல்லை.

  காங்கிரசின் வீழ்ச்சியால் சிபிஎம்
  வலுப்பெறவில்லை. மூன்று
  மாநிலங்களில்தான் நீங்கள் வலுவாக
  இருக்கிறீர்கள். அங்கும் கூட்டணிக்குள் குத்து வெட்டு.
  பல மாநிலங்களில் சிபிஎம் கட்சி பெயரளவிற்கே இருக்கிறது. பஞ்சாபில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்ட கட்சி
  உங்கள் கட்சி. தமிழ்நாட்டில் விஜயகாந்த் கட்சிக்கு உங்களை விட
  அதிக ஒட்டு கிடைக்கிறதே.அது ஏன்.
  கர்நாடாகவில் பாஜகவின் அசுர வளர்ச்சி 15 ஆண்டுகளில் நடந்தது. சிபிஎம் அங்கே எப்படி இருக்கிறது?
  ஏன் வளரவேயில்லை?. இன்னும் 30 ஆண்டு கழித்து தமிழ்நாட்டில் சிபிஎம் இருக்குமா இல்லை இன்னொரு லெட்டர் பேட் கட்சி ஆகிவிடுமா?

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா15 மே, 2009 அன்று 11:10 AM

  அப்படியே இதையும் கொஞ்சம் படியுங்கள்
  http://election.rediff.com/interview/2009/may/14/loksabhapoll-interview-with-ashok-mitra.htm

  பதிலளிநீக்கு
 6. superv comrate.........

  they can play only with cards.......
  but the people join with our hands.....
  that hands will make alternate in everything.......

  பதிலளிநீக்கு
 7. ஜெயா,மாயாவதி,தேவகௌடா இவர்களை வைத்து மூன்றாம் அணி ஆட்சி நடத்தி எதை சாதிக்கப் போகிறீர்கள்??? யார் உங்கள் பிரதமர்?

  பதிலளிநீக்கு
 8. பக்கா! பக்கா!!
  தொடர்ந்து எழுதுங்கள்..
  நிறைய பதிவை எதிர்பார்கின்றேன்!

  நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
  ஓட்ட குத்துங்க!!

  பதிலளிநீக்கு
 9. அனானிக்கு நவின் பட்நாயக் உடன் தேர்தல் உடன்பாடுகொள்வது அவரை மதசார்பற்றவர் என்று பறைசாற்ற அல்ல. அவர்கள் செய்த தவறுகளில் இருந்து அவர்கள் திருந்த வாய்ப்பளிக்கும் விதமாகவும். அவர்களை மதசார்பற்றவராக மாற்றும் நடடிவடிக்கையின் ஒரு பகுதிதான் தேர்தல் உடன்பாடு

  தேர்தல் உடன்பாடு என்பது வேறு. தேர்தல் கூட்டணி என்பது வேறு. கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில்தான் கூட்டணி. மற்ற இடங்களில் தேர்தல் உடன்பாடு.

  கம்யூனிஸ்ட் கட்சி என்பது அரசியல் கட்சியல்ல. அது ஓர் இயக்கம். அரசியல் என்பது ஓர் அங்கம்தான். பணம், அதிகாரம், மீடியாவைக் கையில் வைத்துக்கொண்டு அராஜகம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் கொள்கை, நேர்மை, தொண்டர்களின் உழைப்பை நம்பியே களத்தில் நிற்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள்.

  தேர்தலில் நின்று சொற்ப சீட்டுகளைப் பெறுவது மட்டுமே கட்சியின் கொள்கை அல்ல. அதே சமயம் தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் நல்ல விஷயங்களை முனைப்போடு கொண்டுவரவும், தீய விஷயங்களைத் தடுத்து நிறுத்தவும் சீட் என்ற துருப்புச் சீட்டு தேவைப்படுகிறது. வீடு எரியும்போது நல்ல தண்ணீரில்தான் தீயை அணைப்பேன் என்று பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கிடைக்கும் கூவம் தண்ணீரிலும் அணைக்க வேண்டும். மக்களோடு நெருங்கவும் கொள்கைகளை எடுத்துச் சொல்லவும் இந்தியா போன்ற நாடுகளில் தேர்தலே பிரதான வழியாக இருக்கிறது.

  தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை இந்த சீட்டுகளை வைத்துதான் தடுத்து நிறுத்த முடிந்தது. மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கிறது. வல்லரசு நாடுகள் தங்களின் குப்பைகளைக் கொட்டும் இடமாக இந்தியாவை எண்ணி வருவதை எதிர்த்து நிற்கவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசாமல் நான்கு பேர் மட்டும் சும்மா பேசி என்ன பயன்?

  மக்களுக்காகத்தான் கொள்கை. மக்களைச் சென்றடையாமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கொள்கையால் என்ன பயன்? கிடைக்கும் வாய்ப்புகளில் நம் இயக்கத்தையும் கொள்கையையும் எப்படி எடுத்துச் செல்கிறோம் என்பதில்தான் இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இந்தியா போன்ற நூறுகோடிக்கும் அதிக மக்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் என்ற நிலை. இதில் ஏதாவது மக்கள் நலனுக்குச் செய்ய வேண்டும் என்றால் எல்லோருடனும் சேர்ந்துதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.  சிபிஎம் கட்சியில் உள்ள ஒவ்வொரு தோழரும் தங்களுக்காகச் சிந்திப்பதில்லை. தங்களுக்காகவோ, தங்கள் குடும்பத்துக்காகவோ நேரத்தைச் செலவு செய்வதில்லை. சக மனிதர்களுக்காகப் போராடுகிறார்கள். சமூகத்துக்காக வேலை செய்கிறார்கள். தன் குடும்பதையும் காப்பாற்றி, தான் சார்ந்திருக்கும் சங்கத்துக்கும் வேலை செய்து, தன் கட்சிக்காகவும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பு உழைப்பு உழைப்புதான் அவர்கள் கண்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் தான் மட்டும் சமுதாயத்துக்காக உழைப்பதில்லை. அவர்களுடைய குடும்பமும் இதில் பங்கெடுக்கிறது. பலர் தங்கள் வேலையை உதறிவிட்டு, கட்சிக்காக முழு நேரமும் உழைக்கிறார்கள். நூறு ரூபாய் சம்பாதிக்கும் தோழர் பத்து ரூபாயைக் கட்சிக்கு கொடுத்து விட்டு வேலை செய்கிறார். உறக்கம் கிடையாது. வேளாவேளைக்கு சாப்பாடு கிடையாது. உடல் நலத்தைப் பொருட்படுத்துவது இல்லை. வேறு எந்தக் கட்சியில் இப்படிப்பட்ட உணர்வாளர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்? இப்படிப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கதான் கட்சி வளரும். ஒருவரை கட்சியில் சேர்பதற்கு முன்று ஆண்டுகள் அவரை கண்கானித்து பிறகுதான் ஆவர் சிபிஎம் கட்சியில் உறுப்பினராக முடியும் இப்படி கட்டுப்பாடுகள் நிறைந்த இயக்கம்தான் சிபிஎம் எனவே வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளை பொருத்து இருக்கிறது.

  சாதி ஒழிய வேண்டும் பேசும் அரசியல் கட்சிகள், தொகுதிகளில் சாதிக்காரர்களைத்தான் நிறுத்துகிறார்கள். இப்படி சாதி, மதம், அரசியல், தண்ணீர், உணவு, கழிப்பிடம், வேலையின்மை, தொழிற்சாலைகள் மூடல், உயரும் விலைவாசி, மக்கள் அதிகம் பயன்படுத்தும் கத்தரிக்காயில் மரபணுவைப் புகுத்தி, சோதித்துப் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வுக்கூடமாகத் திகழ இந்தியர்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுதல், ஆபத்தான விஷங்களை இந்தியாவில் செய்து பார்ப்பதைத் தடுத்தல், மணல் கொள்ளை, சுற்றுச் சூழல் கேடு, பாலியல் கொடுமைகள், பெண்களுக்கு சம உரிமை, கல்வி, சுகாதாரம் என்று நொடிக்கு ஆயிரம் பிரச்னைகள்... அவற்றுக்கான போராட்டங்கள்...

  எத்தனையோ தோழர்களின் உயிர்களை இழந்து, எத்தனையோ கஷ்டங்களுடன் போராடி வரும் ஒவ்வொரு தோழரும் உயர்ந்தவரே! எல்லோருக்கும் தெரியும், நாளையே புரட்சி வந்து விடும். நாடே மாறிவிடும் என்றெல்லாம் கனவு கொண்டிருக்கவில்லை. ஆனால், என்றோ இந்த நாட்டில் பொதுவுடைமை நிலவும் என்ற நம்பிக்கையில், பின்னால் வரும் சந்ததியினராவது சமமாக வாழவேண்டும். அதற்கு தங்களால் இந்தச் சமூகத்தை ஒரு படி மேலே கொண்டுபோக வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இன்று தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 10. மிக வித்தியாசமாக அலசியிருக்கிறீர்கள்.. நாளை இந்நேரம் இந்த கட்சிக்குக் இரவுக் கொண்டாட்டம் என்பது தெரிந்துவிடும்!!!

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா15 மே, 2009 அன்று 9:22 PM

  //May be India should have a dictator for sometime! //

  ippa mattum enna vaazhudhu?

  பதிலளிநீக்கு
 12. //காங்கிரஸ் அல்லது பா.ஜ.கவுக்குத்தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என மூன்றாவது அணியிலும், உதிரிக்கட்சிகளிலும் ஊசலாட்டத்தோடு இருப்பவர்களை உறிஞ்சிக் கொள்வது என்பதுதான் இந்த டிஜிட்டல் தந்திரங்களின் இலட்சியம்.
  இந்தியப் பெருமுதலாளிகளின் சதி ஆட்டம்தான் இது. //

  புரிகிறது.

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா15 மே, 2009 அன்று 11:11 PM

  அருமை விடுதலை! மதவாதிகளையும் ஊழல் பெருச்சாளிகளையும் அவர்கள் அப்படித்தான் என்று விட்டு விடுகிற இந்த பெருந்தன்மைவாதிகள் கம்யூனிஸ்டுகளிடம் மட்டும் நெற்றிக்கண்ணை திறப்பதாய் நினைத்துக் கொண்டு நொள்ளைக் கண்ணைத் திறப்பார்கள். கணிப்பொறியில் இறங்கி கழட்டுகிற இவர்கள் எந்த களத்திலும் இறங்கியதாய் தெரியவில்லை. வயிறு நிறைய இரை எடுத்து விட்டு பல் குத்தியவாறு பாலிடிக்ஸ் பேசுகிற இவர்களிடம் கம்யூனிஸ்டுகளை பற்றி எவ்வளவுதான் பேசினாலும் இவர்களின் காதுக்குத்தான் எட்டுமே தவிர மூளைக்கு எட்டாது அல்லது எட்ட விடமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா15 மே, 2009 அன்று 11:18 PM

  Mr.Viduthalai, your reply is good but one has to put many smileys in that.I do read Theekathir and Peoples' Democracy. So dont bluff like this. Your party could not tolerate criticism from well wishers and friends. Medha Patkar's committment is well known.
  When she and others started NBA,
  CPI(M) was not supporting them.
  When she criticised your party's stand on Nandigram Theekathir wrote something about her that was too silly to repeat. The idiot who wrote that could not even differentiate between Sunita Narain and Medha Patkar. On Bt Brinjal it is the NGOs like Greenpeace who are in the forefront.So dont try to fool
  others.

  Your party's committment to environmental issues is too well
  known and it is as good as that of BJP.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா16 மே, 2009 அன்று 7:32 AM

  நல்ல பதிவு. உலகின் மாபெரும் தேர்தல் நடைமுறையை ஊனமாக்கும், தாங்கள் விரும்பும் அரசை தெரிவு செய்யும் மக்களின் உரிமையை திருடும் முயற்சிகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்துள்ளீர்கள். இந்தக் கருத்துக் கணிப்புகள் சொல்லும் விற்பன்னர்களுக்கு(?) ( கோடிகளில் கூலிபெரும் பொய்யர்கள் ) எத்தனை முறை மூக்குடைபட்டாலும் தெரிவதில்லை. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கூத்தடிக்கும் பிரணாய்ராய், பர்க்காதத், ராஜ்தீப்சர்தேசாய் போன்ற கூலிக்கு மாரடிப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? பாரதியின் வரிகளில் "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான்" என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 16. வித்யா!
  இலக்கியா!
  அனானி!
  அருண்!
  அனானிகள்1
  பொன்ராஜ்!
  கலையரசன்!
  விஜய்!
  விடுதலை!
  ஆதவா!
  அனானி!
  தீபா!
  அனானி!

  அனைவரின் வருகைக்கும் நன்றி.
  முதலாளித்துவ ஊடகங்களின் சித்து விளையாட்டுக்களை அம்பலப்படுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.
  அதை யாரும் மறுக்கவில்லை என்பது இங்கு ஒரு உண்மை.
  சி.பி.எம் குறித்து கிண்டலும், விமர்சனமும் செய்த அனானிக்கு விடுதலை சரியாக ப்தில் சொல்லியிருக்கிறார்.
  மூன்றாவது அணியில் யார் பிரதமர் என்று கேட்ட பொன்ராஜ்ஜிக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
  இதுவரை எந்த மக்களவைத் தேர்தலிலிலும் நிற்காமல், அமெரிக்காவின் ஏஜெண்டாய் இருக்கிற மன்மோகனைவிட,போன்ராஜ் கூட சிறந்த பிரதமராய் இருக்கக்கூடும்.

  பதிலளிநீக்கு
 17. அன்பின் மாதவராஜ்

  குதிரைப் பேரம் என்பது எப்பொழுதும் உள்ள ஒன்று தான். பேரம் பேசுபவர்களை மட்ட்டும் குறை சொல்லிப் பயனில்லை. விலை போகும் குதிரைகளும் குற்றம் சாட்டப்பட வேண்டியவையே -

  தற்போதுள்ள நிலவரம் - பேரம் பேசும் நிலை இல்லை என்பது தான்

  நல்வாழ்த்துகள் மாதவராஜ்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!