திருடர்கள் ஜாக்கிரதை!

இன்று உழைப்பாளர்கள் தினம். கூடவே தேர்தல் நேரம். எனவேதான் இந்தக் கதை.

0000

கிராமத்தில் ஒரு தம்பதி. கணவனும் மனைவியும் நல்ல உழைப்பாளிகள். விவரம் மட்டும் போதாது. யாரையும் சுலபத்தில் நம்பி விடுவார்கள்.

மனைவி காட்டு வேலை, வீட்டு வேலை எல்லாம் செய்து காசு சேர்க்கிறாள். ஆடு மாடுகளும் உண்டு. கணவன் அவற்றை மேய்ப்பான். ஒரு நிமிடம் கூட உட்கார மாட்டான். மேய்க்கும் கம்பை அட்டக் கொடுத்து நின்றபடியே மாடு மேய்ப்பான்.

இவர்கள் மீது திருடனுக்கு கண். வீட்டுக்குள் காசு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. யோசித்தான். நியாயமாய்க் காசு சேர்க்கத்தான் வழிகள் கம்மி. திருடுவதற்கு ஏராளமாய் வழிகள் இருக்கின்றன.

காட்டில் ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருந்தவனிடம் திருடன் போய்ச் சொன்னான். “அண்ணாச்சி! ஒங்க வீட்ல வச்சிருந்த காசு திருட்டுப் போயிடுச்சாமே!” என்றான்.

“அம்மிக்கு அடியில காசு வைக்காதே! அம்மிக்கு அடியில வைக்காதேன்னு சொன்னேன் கேட்டாளா அவள். இப்ப எல்லாம் போச்சு” என்று அரற்றினான்.

திருடன் வீட்டிற்குப் போய் காசை எடுத்துக் கொண்டான்.

பிறகு அவன் ஒருநாள் அதே வீட்டிற்கு வந்து, “அக்கா! காட்டுல அண்ணாச்சி மேச்ச ஆடு மாடெல்லாம் களவாடிட்டுப் போய்ட்டாங்களாமே” என்றான்.

அந்த அம்மாவும் உடனே “ நின்னுக்கிட்டே தூங்காதீங்க. நின்னுக்கிடே தூங்காதீங்கன்னு ஆயிரந்தடவைச் சொல்லிட்டேன். மனுஷன் கேக்கணும்லா” என்று புலம்பினாள்.

திருடன் நேரே காட்டுக்குப் போனான். நின்றுகொண்டே மேய்க்கிறவன் தூங்கிற நேரம் பாத்து ஆடுமாடுகளை ஒட்டிக் கொண்டு போய்விட்டான்.

0000

வேடிக்கையாய் சொல்லப்பட்ட கதைதான். இதனை தொகுத்து அளித்த பேரா.மாடசாமி அவர்கள் ‘உழைப்பளிகளாகிய நமக்கு விவரம் போதலையே என்ற சுயவிமர்சனமும், உழைத்துப் பிழைக்கிறவனை விட ஏய்த்துப் பிழைக்கிறவன் சாமர்த்தியசாலியாக இருக்கிறானே என்ற ஆதங்கமும் இந்தக் கதைக்குள் கிடக்கின்றன’ என்கிறார்.

உண்மைதான். ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய தருணம் இது. கையில் மதிப்புமிக்க ஓட்டினை உழைப்பாளிகள் வைத்திருக்கிறார்கள். ஏமாற்றுவதற்கு ஏராளமான பொய்களோடு வீதியில் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். திருடர்கள் ஜாக்கிரதை.

 

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏய்த்துப் பிழைப்பவன் இருந்து கொண்டேதான் இருப்பான். நம் தலைவிதி அது. :-(

    பதிலளிநீக்கு
  2. //உழைத்துப் பிழைக்கிறவனை விட ஏய்த்துப் பிழைக்கிறவன் சாமர்த்தியசாலியாக இருக்கிறானே என்ற ஆதங்கமும் இந்தக் கதைக்குள் கிடக்கின்றன’ //

    நல்லதொரு விடயத்தொடு கதை சொல்லியிருக்கீங்க.
    ரொம்ப பிடிச்சிருந்தது, சிந்திக வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  3. நாட்டுப்புறக் கதை அசத்துகிறது
    தோழனே.
    அருமை

    பதிலளிநீக்கு
  4. கதை :-).

    //மாற்றுவதற்கு ஏராளமான பொய்களோடு வீதியில் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். திருடர்கள் ஜாக்கிரதை.// உண்மைதான்!

    அவசரமான நேரத்தில் அவசியமான பதிவு!

    பதிலளிநீக்கு
  5. கதை மிகவும் அருமை,
    நல்லதொரு கதையை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பொருட்காட்சிகளில் கும்பல் மிகுந்திருக்கும் போது பொது அறிவிப்பு இவ்வாறு வரும், “மக்களே ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை. தத்தம் பொருட்களை பாதுகாத்து கொள்ளுங்கள்” என. அவரவர் தம்மையறியாமலேயே பணம் இருக்கும் இடத்தை தொட்டு பார்த்து கொள்வார்கள். பல கண்கள் பலரை கவனிக்கும். பிறகு, ஜேப்படிகள் நடக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  7. கல்கி!
    ஏமாறக்கூடாது என்பதில் கவன்மாயிருந்தால்...?

    அனானி!
    நன்றி.

    அனானி!
    நன்றி.

    ஆ.முத்துராமலிங்கம்!
    ரொம்ப சந்தோஷம். நன்றி.

    காமராஜ்!
    நன்றி தோழா!

    சந்தன்முல்லை!
    உங்களின் தொடர்ந்த பாராட்டுக்களும், கருத்துக்களும் உற்சாகமளிக்கின்றன.

    யாத்ரா!
    என் இனிய வாசகரே...நன்றி.

    மங்களூர் சிவா!
    நன்றி.

    டோண்டு!
    ஐயோ! நான் அப்படி ஒரு நோக்கத்துடன் அறிவிப்பு செய்யலைங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!