முடிந்தும் முடியாத கதைகள்: குட்டிச்சுவர்களிடம் பேசியவள்

old woman hands

ஒரு விதவைத்தாய். அவளுக்கு இரு மகன்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

படிப்படியாக விதவைத்தாய்க்கு வீட்டில் மரியாதை குறைந்து வந்தது. முதலில் அவள் பேச்சை அலட்சியம் செய்தனர். பிறகு அவள் எது பேசினாலும் ‘வள்’ என்று விழுந்தனர். இப்போது அவளைப் பேசவே விடுவதில்லை. மகன்கள்தான் இந்த அவமரியாதையைத் தொடங்கி வைத்தனர். மருமகள்களும் ஆர்வமாக அவர்களைப் பின்பற்றினார்கள்.

வசவுகள் தினமும் கூடி வந்தன. விதவைத் தாய்க்கு மனத்துயரம் பெருகியது. வீட்டில் ஒருவரிடமும் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. பேசிப் பகிர்ந்து கொள்ளாமல்  துயரம் பெரும் பாரம் ஆகியது. மனப்பாரம் தாங்காமல் உடல் வீங்கிப் பெருத்து வந்தது.

இப்போது வீட்டில் பரிகாசமும் கூடிவிட்டது. ‘ஆனை’ என்று பட்டப் பெயர் சூட்டினார்கள் மருமகள்கள். ‘சாப்பாட்டை கொறை’ என்று தாயைத் திட்டினார்கள் மகன்கள்.

ஒருநாள் மாலை வீட்டில் யாரும் இல்லை. “வீட்டைப் பார்த்துக்கொள்” என்று அம்மாவுக்குக் கட்டளை போட்டு விட்டு வெளியே போய் விட்டார்கள்.

பாரம் தாங்காமல் தாய்க்கு மூச்சுவிடக் கூட முடியவில்லை. கதவைச் சாத்திவிட்டு அவள் வெளியே புறப்பட்டாள். மெல்ல நடந்து ஊரின் எல்லைக்கு வந்துவிட்டாள்.

ஊரின் எல்லையில் பாழடைந்த சிறு சத்திரம் ஒன்று இருந்தது. அங்கே போய் உட்கார்ந்தாள். வீட்டில் பேசவே முடியாத தாய், சத்திரத்தின் குட்டிச் சுவர் ஒன்றைப் பார்த்துப் பேசினாள். தன் மூத்த மகன் தன்னைப் படுத்துகிற பாட்டையெல்லாம் சொன்னாள். அவள் சொல்லி முடித்ததும் அந்தச் சுவர், அவளது வார்த்தைகளின் பாரம் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது. அம்மாவின் உடல் பாரமோ கொஞ்சம் குறைந்தது.

அடுத்தச் சுவர் பக்கம் திரும்பி மூத்த மருமகள் தன்னைப் பேசுகிற பேச்செல்லாம் சொன்னாள். அந்தச் சுவரும் தொம்மென இடிந்து விழுந்தது. அம்மாவின் உடலும் பாதியாகக் குறைந்து விட்டது.

இன்னொரு சுவரைப் பார்த்து, இளைய மகனைப் பற்றிச் சொன்னாள். அவன்தான் அம்மா என்றும் பார்க்காமல் அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு வருபவன். பாதிச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சுவர் சரிந்தது. அம்மா உடம்பும் லேசாகியது.

மீதம் ஒரு சுவர்தான். பேசவேச் செய்யாமல் இவளைப் பார்த்து காறி காறித் துப்பும் இளைய மருமகளைப் பற்றிச் சொன்னாள். அந்தச் சுவரும் இடிந்து விழுந்தது. அம்மாவின் பாரம் தீர்ந்தது. மெலிந்து துரும்பைப் போலத் தெரிந்தாள்.

வீட்டுக்குப் போனாள். எல்லோரும் வீட்டில் இருந்தனர். ஒரு மாலைப் பொழுதுக்குள் மெலிந்து இளைத்துவிட்ட மாமியாரைப் பார்த்து மருமகள் திகைத்துப் போனார்கள். “அம்மா...நீயா!” என்று மகன்கள் கண்கலங்கினார்கள்.

கதை முடிந்தது. முடியாமல் உங்களை எதாவது செய்கிறதா...

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் சொல்லி இருக்கும் கதையில் உள்ளதுபோல் தான் என் குடும்பமும் நாங்கள் இரு மகன்கள் தந்தை கிடையாது அதனால் படிக்கும் அதிகமாக வலித்தது

    பதிலளிநீக்கு
  2. உன் கிட்ட சொல்றதுக்கு அந்த சுவத்துகிட்ட சொல்லலாம்னு ஒரு பேச்சு ஞாபகத்துக்கு வருது

    பதிலளிநீக்கு
  3. கதை படிக்க சற்று திகைப்பாக இருந்தது இப்படிபட்ட மகன்களை எல்லாலாலாலாம் என்ன பன்னலாம்னு கூட சிந்தனை,
    ஆனா இது கதை ஆச்சே.
    நாட்டுபுறகதையில ஏதாவது
    உள்அர்த்தமிருக்கும்னு நினைக்கரேன்.
    இருந்தாலும் நான் யோசித்தது
    நாம் ஒரு விசயத்தின் மீது அல்லது
    ஒருவரின் மீது எவ்வளவுதான் வெருப்பும் எரிச்சலும் கோபமுமுற்றாலும் அது அல்லது அந்நபர் பரிதாபத்துக்குள்ளாகும் போது சட்டென்று நம்மனம் இளகிவிடும்.
    நிச்சயம் இது இருக்காது என்று நினைக்கின்றேன் இருந்ததாலும் தோன்றியதை எழுதிவிட்டேன்

    பதிலளிநீக்கு
  4. :-( கொஞ்ச நேரத்துக்கு முன் தான் அம்மாவிடம் ”பேசாதே அம்மா” என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிப் ”பேசும்மா” என்றதும் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

    Jokes apart, நல்ல கதை. நெஞ்சம் கனத்தது.

    வயதானவர்களுக்குப் பேசுவது அதைப் பிறர் கவனித்துக் கேட்பதும் தான் (empathizing)மருந்து என்பதை அழகாகச் சொல்கிறது கதை.

    தொடர்ந்து (முடியும் போதெல்லாம்) கதை சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  5. //கதை முடிந்தது. முடியாமல் உங்களை எதாவது செய்கிறதா..//

    இது முடிந்த கதையல்ல, பெரும்பாலான குடும்பங்களில் தொடரும் கதை...

    பேசுவதற்கு ஒரு ஆள் கிடைக்காமல் (கிராமங்களில் கூட) முதியவர்கள் படும்பாடு இருக்கின்றதே... :(

    பதிலளிநீக்கு
  6. முடிந்த கதையை தங்களுக்குள் முடியாமல் வைத்திருக்கும் அனைவருக்கும் என நன்றிகள்.

    கதை மிக நேரான விஷயத்தை சொல்கிறது.

    பெண்கள் தங்கள் ஆற்றாமையை, தவிப்பை பேசிக்கொள்ள ஒரு இதயம், ஒரு இடம் வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!