அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை!

party

ஒரு கிராமத்து பெண்மணியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசும் போது, அந்த அம்மா, அதைவிட தனது பிரச்சினையையே  பெரிதாக பார்த்ததை தீராத பக்கங்கள்-1ல் பதிவு செய்திருந்தேன். அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை என்றும் முடித்து இருந்தேன். இதுதான் நமது மக்களின் மனோநிலையாக இருக்கிறது என்று ரெங்கா தனது பின்னூட்டத்தில் பொதுவாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் சிலர் அந்தக் கருத்தை ஆமோதித்தும் இருந்தனர். அனானியாக வந்த 27 வயது தம்பி, இப்படி எழுதுவது சரியா என்று கேட்டு இருந்தார். மக்களின் மனோநிலை குறித்தும், நமது சமூகச்சூழல் குறித்தும் ஓரிரு வரிகளில் விளக்கம் சொல்லிவிட முடியாது சுருக்கமாக சொல்வதற்கும் என்பதால் இந்த தொடர் பதிவு அவசியம் எனக் கருதுகிறேன்.

இப்படி அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை என்பது ஒரு சமூக மாற்றத்துக்கு பெரும் விரோதமானது என்பதை முதலிலேயே சொல்லி விடுவது நல்லது என நினைக்கிறேன். நெருக்கடி மிகுந்த வாழ்க்கை ஒவ்வொருவரையும் இப்படியான கோட்டுக்குள் அடைத்து அதற்குள்ளேயே முட்டி மோதிக் கொள்ள வைக்கிறது. தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என ஒவ்வொருவரையும் சுருங்கிடச் செய்கிறது. ‘வெளியே வா’ என்று அவர்களை அழைத்து அழைத்துக் களைத்துப் போய் கிடக்கின்றன நமது பல இயக்கங்கள்.

இந்த இருபத்தைந்து வருட கால தொழிற்சங்க அனுபவத்தில் நொந்து போனது இப்படிப்பட்ட மனோபாவத்தால்தான். விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், வேலை நியமனத்தடை, குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியகளை நியமித்து உழைப்பைச் சுரண்டுவது போன்ற எந்த கோரிக்கையை விடவும் இங்கு ஒருத்தருக்கு அவருடைய பணிமாறுதல்தான் பெரும் பிரச்சினையாகிறது. அதைப் பற்றிப் பேசாமல் நீங்கள் அரசின், நிர்வாகத்தின் எந்த நடவடிக்கையை விமர்சித்தாலும் அவர்களது காதுகளையேப் போய்ச் சேராது. ஒருநாளைக்கு ‘இவ்வளவு தூரம் நான் பஸ்ஸில் போகிறேன்’, ‘இவ்வளவு காசு செலவழிக்கிறேன்’, ‘இரத்த அழுத்தம் வேறு இருக்கிறது’ என்று அவர்கள் தங்கள் கஷ்டங்களையே விவரிப்பார்கள். கேட்டாக வேண்டும். அதைத் தீர்க்க முயல வேண்டும். ‘நாளைக்கு ஒரு கண்டனப் பேரணி வாருங்கள் என அழைத்தால், “மகள் இந்த வருஷம் பிளஸ் டூ படிக்கிறாள், பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டும், முக்கியமான வருஷம் பாருங்க...” என்று சொல்லி கருமமேக் கண்ணாக பைக்கை ஸ்டார்ட் செய்வார். “சரி, அடுத்த தடவை வந்துருங்க..” என அவர் முகம் சுளிக்காமல் அனுப்பி வைக்க வேண்டும்.

அவர்களைக் குறை சொல்லி புண்ணியமில்லை. இந்த அமைப்புதான் ஒவ்வொருவரின் மேலும் ஆமையின் ஓடு கொண்டு பொத்தி வைத்திருக்கிறது. கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளாய் தான் காட்டும் வழியிலேயே பயணம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. தங்கள் பிரச்சினைதான் உலகத்திலேயே பிரதானமானது என நினைத்து அந்த வழியிலேயே ஓட வைக்கிறது. ஒரு நிச்சயமற்ற தன்மையில் சதா நேரமும் காலம் தனிமனிதர்களை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறது. எந்த வாய்ப்பை தவறவிட்டாலும், அதோ கதிதான் என எச்சரிக்கை செய்கிறது. சக மனிதன் ஒவ்வொருவனையும் தன்னை வஞ்சித்து முன்னேற அருகில் நிற்பவனாக சந்தேகம் கொள்ள வைக்கிறது. அவரவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதிலேயே முழுக் கவனமாகிறார்கள். முதலாளித்துவத்தின் மாபெரும் சாபம் மனிதர்களை அழுத்துகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்னும் உண்மையை சிதைத்து, தொழுவத்தில் அவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது.

இப்படிப்பட்ட மனிதர்களிடம் அவர்களின் பிரச்சினைகளைப் பேசிப் பாருங்கள். மிகுந்த நேசத்துக்கும், நம்பிக்கைக்கும் உரிய மனிதராய் நெருங்கி வருவார்கள். எல்லாவற்றையும் உங்களிடம் சொல்வார்கள். கேட்டுக்கொண்டே வெளியே அழைத்து வரவேண்டும். மிகுந்த பொறுமையோடும், நிதானத்தோடும் உரையாடல் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நமது அழைப்புக்கு வந்துவிட மாட்டார்கள் என்பதை இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல ரொம்ப காலம் நெருங்காமல் இருந்துவிட்டு, திடுமென போய் நின்றாலும் வித்தியாசமாய் பார்ப்பார்கள்.

இலங்கைப் பிரச்சினையல்ல, எல்லாப் பிரச்சினைகளிலும் நாம் இந்த சாமானியர்களை அணுகுவதில் உள்ள கோளாறுதான், அவர்கள் பொதுவெளிக்கு வராமல் அன்னியப்பட வைக்கிறது. அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசாமல், ‘இதுதான் முக்கியப் பிரச்சினை, எரியும் பிரச்சினை’ என்று கையைப் பிடித்து இழுக்கவெல்லாம் முடியாது. உணர்வு மயமாக்கி, அவர்களை ஆட்பட வைப்பதும் சரியான முறையாய் இருக்காது. எவ்வளவு சீக்கிரமாய் வருவார்களோ, அவ்வளவு சீக்கிரமாய் வெளியேறவும் செய்வார்கள். மறக்கவும் செய்வார்கள்.

தன் பையன் படிப்புக்கு பீஸ் கட்ட, பணம் அனுப்ப பாடுபடும் அந்தத் தாயிடம், அவர்களது பிரச்சினையைப் பேசி, மகனின் எதிர்காலம் பேசி, அதில் உள்ள பிரச்சினைகள் பேசி, அதற்குப் பிறகு இலங்கையில் நம் தாய்மார்கள் வெடித்துச் சிதறிய தம் குழந்தைகளை மார்போடு அணைத்து அழுகிற சோகம் குறித்துச் சொல்லியிருக்க வேண்டும். அப்போது அந்தத் தாயிடம் மௌனம் உறைந்து பெருமூச்சு வருத்தத்தோடும் ,கோபத்தோடும் வெளிப்பட்டு இருக்கும். அதுபோலவே தமிழக மக்களிடம், அவர்களின் பிரச்சினைகள் எதையும் பேசாமல், இலங்கையை மட்டும் பேசிக் கொண்டு இருந்தால் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை.

“இந்த வாழ்க்கைதான் நமக்குப் பிரச்சினைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் நமக்கு வேதனைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் அவைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்கிறது” என்னும் இந்த வரிகள் தாய் நாவலில் வெளிச்சம் போல வந்து மனதில் இறங்கும். எதிர்கொள்ளும் வாழ்க்கையின் சகல கூறுகளையும் பேச வேண்டும். அப்போதுதான் ‘அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை, அவரவர் கவலை’ என்பது மாறும். சமூகமும் மாறும்.

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //இந்த வாழ்க்கைதான் நமக்குப் பிரச்சினைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் நமக்கு வேதனைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் அவைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்கிறது//

  மக்களிடம் அணுக வேண்டிய முறைகளைப் பற்றிய தங்களின் இந்தப் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. தலைப்பின் படியே ஒரு சமூகத்தை இப்படியே தொழுவத்தில் கட்டிப் போட்டிருக்கோமே என்று வேண்டுமானால் வருத்தப் படலாம். அதுவும் ஒரு வல்லரசு என அழைத்துக் கொள்ள ஆசைப்படும் ஒரு நாட்டில் எத்தனை பத்தாண்டுகளுக்குத்தான் தாய்மார்கள் தனது பிள்ளைகளின் படிப்பிற்கு மூக்குத்தியை அடகு வைத்து படிக்க வைக்க கஷ்டப்படுவது?

  இந்த மக்கள்தானே வல்லரசின் ஒரு பகுதியாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் அண்டை அயலோருக்கும் குரல் கொடுக்க முன் வர வேண்டும்...? சமூகம் தானே ஒரு நாடாக பரிணமிக்கிறது?

  பதிலளிநீக்கு
 3. பணம் ஈட்ட வேண்டும் என்ற கவலையால் அக்கறையால் மற்ற எல்லா கவலைகளும் பின்னுக்கு தள்ளப் படுகின்றன.

  அய்யனார் எழுதியது போல, ஆசை (பணம்) என்னும் சாத்தான் நம்மை பிடித்து வைத்து உள்ளதால் வேறு எதிலும் ஆசைப்படும் அளவு கவனம் செலுத்த முடியாமலேயே நம் வாழ்வை முடித்து கொள்கிறோம்.

  பதிவு மிக அருமை மாதவராஜ்.

  குப்பன்_யாஹூ

  பதிலளிநீக்கு
 4. புரிகிறது..அவரவர் வாழ்க்கை..அவரவர் பிரச்சினைகள்! நீங்க சொல்லிய விதம் அபாரம்!

  பதிலளிநீக்கு
 5. என்ன சார் செய்ய சொல்லுறீங்க? ஆண்களில் பாதிப்பேர்க்கு இறங்கிப் போராட நேரமில்லை. பெண்களுக்கு அதற்கான தைரியம் ஊட்டப்படவில்லை. சின்ன வயசில அரசியல் பற்றியும் முற்போக்கான கருத்துக்கள் பற்றியும் பேசும் அதே அப்பா, பெண்னின் ஒரு வயதுக்குப் பிறகு, எங்க குடும்பக் குத்துவிளக்கு, எங்க குளப்பெருமை என்றெல்லாம் சொல்லி பெண் பிறப்பே திருமணத்திக்குத் தான் என்பதுப் போன்ற கருத்தை 'sentiment dialogues, emotional black mails' மூலம் பதிய வைத்துவிடுகிறார்கள். எவ்வளவோ செய்யவேண்டும் என்ற மனம் இருந்தும், சரியான வழித் தெரியாமல், இதோ இதுப் போன்ற பதிவுகள் படித்து, அய்யோ என்ன செய்யலாம் என்று குழம்ப தான் முடிகிறது. ம்ம்ம்ம்....

  பதிலளிநீக்கு
 6. //நமது பல இயக்கங்கள். இந்த இருபத்தைந்து வருட கால தொழிற்சங்க அனுபவத்தில் நொந்து போனது இப்படிப்பட்ட மனோபாவத்தால்தான். விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், வேலை நியமனத்தடை, குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியகளை நியமித்து உழைப்பைச் சுரண்டுவது போன்ற எந்த கோரிக்கையை விடவும் இங்கு ஒருத்தருக்கு அவருடைய பணிமாறுதல்தான் பெரும் பிரச்சினையாகிறது.//
  தொழிற்சங்க நிர்வாகிகள் பார்வை கோணத்திலிருந்து பேசுகிறீர்கள். அதே யூனியன் நிர்வாகிகள் பற்றி சக தொழிலாளர்கள்/பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கான பட்டியல்கள் கீழே:
  1. தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நேரத்திலும் சங்கம் என பிசியாக இருப்பதால், தனக்கு விதிக்கப்பட்ட வேலைகளை செய்யாது அரசியல்வாதி ரேஞ்சுக்கு நடந்து கொள்கின்றனர். டிசிப்ளின் சுத்தமாக இல்லை. இந்த நிலை கண்டிப்பாகவே பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இல்லை. வேலை நேரஹ்தில் வேலை என்பதில் கண்டிப்பு இருக்கும்.
  2. தத்தா சாமந்த் போன்ற வெளியிலிருந்து வரும் தலைவர்கள் தொழிலாளிகளின் உரிமைகளை மட்டுமே பார்க்கின்றனர். அவர்களது கடமைகளை பற்றி மூச்சு கூட விடுவதில்லை.
  3. கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொழிலை ஆரம்பிக்க முதலீட்டாளர்கள் பயப்படுவதை அறிவீர்கள்தானே.
  4. தன்பாத் போன்ற தீவிர யூனியன் இயங்கும் இடங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் பழம் தின்னு கோட்டை போட்டவர்கள். இதிலேயே அனியாயத்துக்கு சொத்து சேர்த்துள்ளார்கள்.

  இன்னும் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் சொல்ல வந்ததை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 7. தீப்பெட்டி!
  நன்றிங்க.

  யாத்ரா!
  நன்றி.

  தெகா!
  முதலில் இந்த வல்லரசு என்பதே மோசமான வார்த்தை. வல்லூறு என்ரே பதம் தருகிறது.
  மக்களுக்கான அரசுதான் இங்கு வேண்டியிருக்கிறது.

  குப்பன் யாஹூ!
  ஆசை என்பதை விட, சாதாரண மக்களைப் பொறுத்த வரையில் தேவைகள்தான் அலைக்கழிக்கின்றன.

  சந்தன்முல்லை!
  நன்றி.

  பாண்டியன் புதல்வி!
  உண்மைதாங்க. பெண்களைப் பொறுத்தவரையில் அவங்க போராட்டம் வீட்டிற்குள்ளிருந்தே துவக்கப்பட வேண்டும்.

  டோண்டு!
  நீங்க சொன்ன விமர்சனங்கள் முக்கியமானவை. தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நேரத்துக்கு பின்பும், சங்க வேலைதான் பார்க்கின்றனர். எனக்குத் தெரிய பலர் வீட்டில் குழந்தகளோடு செலவக்கும் நேரம் மிகக் குறைவுதான். அலைச்சல், தூக்கமின்மையால் அவதிப்படும் பலரைப் பார்த்திருக்கிறேன். அதையும் மீறி அவர்கள் முடிந்த அளவு அலுவலகங்களில் வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நிர்வாகம் மதிப்பதில்லை. ஆனால் சங்க வேலையும் செய்யாமல், அலுவலக வேலையும் செய்யாமல், ஏன், அலுவலகத்துக்கே வராமல் பல தொழிற்சங்க நிவாகிகள் இருக்கிறார்கள். நிர்வாகம் அவர்களைத்தான் மதிக்கிறது.
  இரண்டாவது, தொழிற்சங்கங்கள் தம் உறுப்பினர்களுக்கு உரிமைகளை மட்டுமே சொல்லித் தருகின்றன. உண்மைதான். work cultureம் பயிற்றுவிக்கப் பட வேண்டும். இப்போது பல தொழிற்சங்கங்கள் இதை உணர்ந்திருக்கின்றன என்றுதான் கருதுகிறேன்.
  எந்த முதலாளியும், தொழிலாளி உரிமைகள் பேசுவதை விரும்ப மாட்டான். அது கேரளா, வங்கத்தில் மட்டுமல்ல.இவைகள குறித்து மறு பரிசீலனைகளும், புதிய பாதைகளும் வகுக்கப்படுகின்றன. ஆனால் சிங்கூரில் என்ன நடந்தது எனபதை நாடே அறியும்!
  தங்கள் விவாதத்திற்கு மிக்க நன்றிங்க.

  அத்திரி!
  நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!