உரத்துக் கேட்கும் மவுனம்....
நடுகல் இருக்கக் கூடும் சிகாகோ மண்ணில்
தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய
கயிறுகளின் நடுக்கம் நிழலாடக் கூடும்
சிறைச் சுவர்களில்
வெற்றி எக்காளமிட்ட வெறிநாய்களின்
புழுத்துப் போன கனவுகள் தட்டுப்படக் கூடும்
தூக்கு மேடையின் பாதாளக் குழியில்
வானொலிப் பெட்டியின் ஒலியளவைக் குறைப்பதுபோல்
பின் ஒரு போதும் பேச விடாதபடிக்குத்
திருகிப் போட்ட முதலாளித்துவத்தின் கைகள்
வீழ்ச்சி கண்ட தங்களது பொருளாதாரத்தின்
தோல்வியைக் கூட உழைப்பாளிகளின் கணக்கில்
எழுத அலைந்து கொண்டிருக்க
உலகெங்கிலுமிருந்தும்
அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறியும் வேகத்தோடு
ஒன்றிணைந்து ஒரே கரமாக நீண்டு செல்லும் பாட்டாளிகளின் கை,
அதே குரல் நாண்களை எதிர்த் திசையில் திருகிப்
பேச வைக்கும் ஒவ்வொரு மே தினத்திலும்
முழங்க வைக்கும் ஒவ்வொரு போராட்ட நாளிலும்
மவுனத்தின் இடி முழக்கமாய்
-எஸ்.வி.வேணுகோபாலன்
எந்த பழி பாவத்துக்கும் அஞ்சாத காங்கிரஸ்
காங்கிரஸ் என்னும் இந்தக் கட்சிதான் நமது நாட்டை ஆள்கிறது என்னும் உண்மை அவமானத்தைத் தருகிறது. வெள்ளையும் சுள்ளையுமாய் வந்து இந்த கனவான்கள்தான் தேசீயக் கொடியை ஏற்றி, கம்பீரமாகப் பேசுகிறார்கள் என்பது ஆத்திரத்தைப் பற்ற வைக்கிறது. ஆட்சிக்காகவும், அதிகாரத்துக்காகவும் எதையும் செய்வார்கள் அவர்கள் என்பது இதோ, ஒரு பயங்கர சதியாக வெளிவந்திருக்கிறது. மேற்குவங்கத்தில் தொடர்ந்து இடதுசாரி முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்ததும், அதன் முதல்வராக ஜோதிபாசு இருந்ததையும் சகித்துக்கொள்ள முடியாத காங்கிரஸின் வெறி அம்பலப்பட்டு இருக்கிறது. கம்யூனிஸ பயங்கரத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கும் பேரில், பிரிட்டனின் உளவுத்துறையும், இந்திய உளவுத்துறையும் சேர்ந்து சர்வதேச கூலிகளின் மூலமாக சர்வசாதாரணமாக இதை நிகழ்த்தியிருக்கின்றன. 15 வருடங்களுக்குப் பிறகு, அந்தச் சதிகாரர்கள் இப்போது எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
1995 டிசம்பர் 18ம் தேதி நள்ளிரவில், மே.வங்கத்தின் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன்னணி அரசுக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறையில் இறக்குமதி செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்று குவித்து வருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதையேச் சாக்காக வைத்து, மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது அப்போது மத்தியிலிருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலிருந்த காங்கிரஸின் திட்டமாய் இருந்திருக்கிறது. ஏற்கனவே 1988ல், ராஜீவ் காந்தி பிரதமராய் இருக்கும்போது இது போலக் காரணம் காட்டி, சி.பி.எம் ஆட்சிப்பொறுப்பிலிருந்த திரிபுராவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது. இவையெல்லாவற்றையும், கிம் டேவி என்னும் அந்த சர்வதேசக் கூலிப்படைத் தலைவனே சொல்கிறான்.
விமானத்தின் மூலம் வந்து ஆயுதங்களைப் போட்டது, அதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பு,பிறகு தப்பிச் சென்றது, நாடறிந்த ஒரு எம்.பியின் காரில் பாதுகாவலர்களின் துணையோடு சென்றது என எல்லாவற்றையும் கிம்டேவி சொல்கிறான். (ஆங்கிலத்தில் படிக்க: http://pragoti.org/node/4379 ) கத்தோலிக்கத் திருச்சபைகளுக்காகவும், ஆனந்த மார்க்கத்திற்க்காகவும் அவன் சேவை செய்ததாகவும் குறிப்பிடுகிறான். இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம்டேவி, இந்தப்பின்னணியிலேயே உண்மைகளை வெளியிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறான். புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவன் கூறியுள்ளான். இதுபோல், மே.வங்கத்தில் இடது முன்னணி அரசுக்கு எதிராக அமெரிகிக்கத் தூதரகம் மம்தாவுக்காகவும், காங்கிரஸுக்காகவும் பணியாற்றுவதை சமீபத்தில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.
இந்த தேசத்தில் ஒரு மாநிலத்தில் இடதுசாரி அரசு ஆட்சி நடத்துவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரு சர்வதேச சதிக்கு திட்டமிடப்படுகிறது. சத்தியாக்கிரகத் தோன்றல்களான காங்கிரஸ் பேர்வழிகள் அந்தச் சதிக்காக எதையும் செய்யத் தயாரகிறார்கள். எந்த பழி பாவத்துக்கும் அஞ்சாத இவர்கள்தாம் சுதந்திரம், ஜனநாயகம், தேசப்பற்று குறித்து எல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள்.
இவ்வளவு நடந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவரோ, பிரதமரோ இதுகுறித்து வாயைத் திறக்காமல் இருக்கிறார்கள். ஆனால், பாறை போன்ற இந்த மௌனம், அவர்களின் இறுக்கத்தையும், இதயமற்ற அரசியலையும் சொல்கிறது.
காட்டிக் கொடுக்க மாட்டார் கருணாநிதி!
குபீரென்று சிரித்தான் என்று நமது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அடிக்கடி வரும். அதென்ன குபீர் சிரிப்பு என்று தோன்றும். எதிர்பாராமல் திடுமென வாய்விட்டு சிரிப்பு வருவதற்கு அப்படி ஒரு அர்த்தம் என்று தெளிவு ஏற்பட்டது. அந்த குபீர் சிரிப்பை இன்றைக்கு நானும் அனுபவித்தேன். கட்சியின் உயர்மட்டக்குழுவில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருக்கமானப் பேச்சைப் படித்த பிறகு வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்?
சமீப காலமாக தி.மு.க தலைவரின் பேச்சுக்கள் இப்படி சிரிப்பை வரவழைப்பதாக இருக்கின்றன. விரைவில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையும் மிஞ்சிவிடுவார். இரண்டு நாட்களுக்கு முன்பு, “கனிமொழியும், தயாளு அம்மாளும் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்கிறார்களே” என ஒரு நிருபர் கேட்டதற்கு. “இதயமற்றவர்களின் கேள்விகள் அவை” என்று தி.மு.க தலைவர் சொன்னபோதே சின்னதாய் ஒரு குபீர்ச் சிரிப்பு வந்தது. தேசத்தின் நிதியைச் சுருட்டியவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும்தான் இங்கு இதயங்கள் இருக்கும் போலும். அதைச் சுட்டிக்காட்டுபவர்கள் இதயமற்றவர்கள் போலும். இதை நாம் கலைஞர் அகராதி என இனிக் கொள்வோமாக!
இப்போது தலைவர், ‘என் சோகக் கதையை கேளு உடன் பிறப்பே’ ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார். கனிமொழி அவர் மகள் என்பதால் வளர்ச்சி பெற்றதாய் யாரும் கருத முடியாதாம். கட்சியின் தொண்டராக சேவையாற்றித்தான் அவர் முன்னுக்கு வந்தாராம். கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல் பாதுகாப்பதாம். கோபாலபுரத்திலேயே இருக்கிறாராம். மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே அவர் செல்லவில்லையாம். இவ்வளவு அதிமுக்கிய விஷயங்களை கட்சியின் உயர்மட்டக்குழுவில் பேசியதெல்லாம் கூட பரவாயில்லை. அதற்கெல்லாம் கூட எனக்கு குபீர் சிரிப்பு வரவில்லை. “என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கிற சூழ்ச்சிக்கு நான் என்றும் அடி பணிந்தவனல்ல” என்ற வரிகளைப் பார்த்ததும்தான் குபீர் சிரிப்பு வந்தது.
காட்டிக்கொடுத்தல் என்றால் துரோகம், உட்பகை என்ற அர்த்தங்கள் எல்லாம் உண்டு. குறளுக்கு உரை எழுதியவருக்கு அது தெரியாதா என்ன? அந்த அர்த்தம்தான் இங்கு அவரது திருவாயால் அனர்த்தமாகியிருக்கிறது. ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸை உலகம் பழிக்கிறது. கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனை வரலாறு தூற்றுகிறது. காட்டிக்கொடுத்தல் இழிவானது. எல்லாம் சரி. ஆனால் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தது ‘கொலையாளிகளிடம்’. கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிகொடுத்தது ‘ஆங்கிலேயரிடம்’. ஆனால் கருணாநிதியோ கட்சியைக் காட்டிக் கொடுக்க மறுப்பது ‘மக்களிடம்’. ஆஹா!
இதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள் போலும். ஆக, மக்களிடம் மறைக்க கோடி கோடியாய் வைத்து இருக்கிறார் தமிழனத்தலைவர் & தமிழக முதல்வர்.
“ஆர்டர்.... ஆர்டர்...”
மாதவராஜ் பக்கங்கள் - 33
பரீட்சை பேப்பர் திருத்தச் செல்வதற்கு டீச்சர்கள் வேன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நேற்று காலை அம்முவை அழைத்துச் சென்றேன். வேனில் அவள் ஏறியதும் வண்டியைத் திருப்பினேன். மெயின் ரோட்டின் எதிரே இருந்த டீக்கடையில் நண்பர்கள் இருவர் உட்கார்ந்து கைகாட்டினார்கள். என்னோடு வங்கியில் பணிபுரிபவர்கள். சட்டென்று அவர்களை நோக்கி நேராக வண்டியைச் செலுத்தவும் அந்த விபரீதம் நிகழ்ந்தது.
மெயின் ரோட்டில் மனைவி குழந்தைகளோடு வேகமாக வந்துகொண்டு இருந்த அந்த பைக்கை ஓட்டியவர் நிச்சயம் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார். டீக்கடையில் உட்கார்ந்திருந்த நண்பர்களும் மற்றவர்களும் சத்தமாய் அலற ஆரம்பித்தார்கள். எதுவோ நிகழப் போகிறது என நான் இடப்பக்கம் திரும்பியபோது மிக அருகில் அந்த பைக்கைப் பார்த்தேன். அடுத்தகணம் பெருஞ்சத்தத்தோடு மோதிக்கொண்டோம்.
எப்படி என்று தெரியவில்லை. எனது பைக் கொஞ்சம் தள்ளி விழுந்துகிடக்க நான் நின்று கொண்டு இருந்தேன். அவர்கள் மூவரும் ரோட்டின் இன்னொரு பக்கம் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் பைக்கின் வீல் சுற்றிக்கொண்டு இருந்தது. எல்லோரும் ஓடி வந்தார்கள். அவர்களைத் தூக்கி விட்டார்கள். அவர், அவர் மனைவி, ஒரு சின்னப் பெண். எல்லோரும் எழுந்து நின்றார்கள். யாருக்கும் ஒன்றும் இல்லை. அவர் மனைவி அழ ஆரம்பித்தார்கள். அந்தச் சின்னப் பெண்ணும் அழுதாள். அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘பாத்துப் போக வேண்டாமா?’ என ஒருவர் என்னைப் பார்த்தார்.
திரும்பிப் பார்த்தேன். ரோட்டின் மறுபக்கம் வேனிலிருந்து அம்மு இறங்கி நின்று, பதற்றத்துடன் என்னைப் பார்த்தாள். “ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல..” என அவளிடம் சொன்னேன். ரோட்டைக் கடந்து என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். “ஒண்ணுமில்லம்மா, நீ போய்ட்டு வா” என அவளைத் திருப்பி அனுப்பினேன்.
அந்தப் பெண்மணி இன்னும் விசும்பிக்கொண்டு என்னைப் பார்த்தார்கள்.தவறு என்னுடையது. பெரும் குற்ற மனப்பான்மையோடு எனது பைக்கை தூக்கி நிறுத்தினேன். அந்த பைக்கை ஓட்டிவந்தவர், அவரது மனைவியிடம், அடி பட்டிருக்கிறதா என விசாரித்துக்கொண்டு இருந்தார். நான் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. நண்பர்கள் இருவரும், “நீங்க போங்க” என்றார்கள். நான் சென்றால்தான் அம்மு நிம்மதியாவாள் என்று தெரிந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அம்முவை பார்த்து புறப்படுவதாக கையசைத்துவிட்டுக் கிளம்பினேன்.
வீட்டில் பைக்கை நிறுத்திய போதுதான், வண்டியின் முன்பாகம் இடது பக்கம் திரும்பியிருந்ததைப் பார்த்தேன். குழந்தைகள் இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வீடு அமைதியாக இருந்தது. இடது கட்டை விரல், வாட்ச் கட்டியிருந்த பகுதி, முழங்காலில் லேசாய் வலி தெரிந்தது. சிராய்ப்புகள் இருந்தன. டிஞ்சர் போட்டுவிட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தேன். அந்த மூவரும் கீழே விழுந்து கிடந்ததும், அந்தப் பெண்கள் அழுததும் ஞாபகமாய் இருந்தது.
நேரமாக ஆக காலில் இடது கட்டைவிரல் வலியெடுக்க, லேசாய் வீங்கியிருந்தது. பாதத்தை கீழே வைக்க முடியவில்லை. அம்மு போன் செய்து விசாரித்தாள். அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மூத்த மகள் பிரீத்து எழுந்து, “என்னப்பா” என்றாள். “ஒண்ணுமில்லம்மா. லேசா” என்று அரைகுறையாய்ச் சொல்லி வங்கிக்குச் சென்றுவிட்டேன். போகிற வழியில் அந்த டீக்கடை இருந்தது. கடைக்காரர் தெரிந்தவர்தான். “அண்ணாச்சி, அவங்களுக்கு ஒண்ணுமில்லய” என்றேன். என்னைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே, “என்ன சார் அப்படி சட்டுன்னு திரும்பிட்டீங்க” என்றார். “ஆம்பிளையாளுக்கு ஒண்ணுமில்ல, பொம்பளயாளும் ஒண்ணுமில்லன்னுதான் சொன்னாங்க. வீட்டுக்குப் போனப்புறம்தான் தெரியும்” என்றார். கஷ்டமாக இருந்தது. “யார் அவங்க, தெரிமா” என்றேன். “தெரியல சார், பக்கத்து ஊராயிருக்கும்னு நெனைக்கேன்” என்றார். டீ ஆற்றிக்கொண்டு இருந்த மாஸ்டர், “நல்ல வேளை சார், நீங்க அப்படித் திரும்பவும் பைக் வந்துச்சு. ஒரு காரோ, லாரியோ வந்துருந்ததுன்னா. கவனமாயிருங்க” என்றார். தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன்.
நடக்க முடியவில்லை. ரொம்ப வலித்தது. பிரியா கார்த்திக்கு போன் செய்தேன். வந்தான். டாக்டரிடம் அழைத்துச் சென்றான். எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வன் அறம்தான் டாக்டர். “என்ன, இப்படி?” என சிரித்துக்கொண்டே பரிசோதித்தார். எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். இடது கட்டைவிரலில் ஒரு hairpoint அளவுக்கு crack இருப்பது போலத் தெரிவதாகச் சொன்னார். சாயங்காலம் “ஆர்த்தோ வருவார், பார்த்துக்கொள்ளலாம்” என இரண்டு ஊசிகளிட்டு அனுப்பினார்.
ஆஸ்பத்திரிக்குள் ஒரு பெண்மணியும் அவளருகே ஒரு சின்னப் பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த இருவரும் இல்லை. ஆனால் அவர்களைப் போலவே இருந்தார்கள். ‘ச்சே, ஏன் அப்படி சட்டுன்னு திருப்பினேன்?’. வதைக்கிறது.
திருடனும் நாற்பது அலிபாபாக்களும்!
சுற்றி நின்றிருந்தது கூட்டம். ஒருவனைப் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார்கள். அருகில் சென்று விசாரித்த போது, “பிக்பாக்கெட் மாட்டிக்கிட்டான்” என்றான் ஒருவன்.
சட்டைக் கிழிந்திருக்க அந்த மனிதன் தரையில் கிடந்தான். அவனது முதுகில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே இருந்தான் ஒருவன். காலால் எட்டி மிதித்தான் ஒருவன். கிடைத்த இடைவெளியில் போய் நங்கு நங்கென்று குத்திவிட்டுப் போய்விட்டான் ஒருவன். அடிப்பதற்கு ஆசைப்பட்டும், கூச்சப்பட்டும் நின்றார்கள் ஒருசிலர். பாவம் என்று பரிதாபப்பட்டார்கள் வேறுசிலர்.
“போலீஸ்ல புடிச்சுக் குடுங்க “ என்றான் ஒருவன்.
“இதுக்கு மேலயும் அடிக்காதீங்க, செத்துக் கித்துப் போயிருவான் ” என்றான் ஒருவன்.
“வாயத் திறந்து பேசுறானாப் பாருங்க, கல்லுளி மங்கன்?” என்றான் ஒருவன்.
கை கால்களை மடக்கி, தாயின் வயிற்றுக்குள் சுருண்டிருப்பதைப் போல தரையில் கிடந்தான் அந்த மனிதன். தொண்டைக்குழி, அடிவயிறு, நெஞ்சுக்கூடு எல்லாம் துடித்துக்கொண்டு இருந்தன. லேசாய் அசைந்து வாயைத் திறந்து, கட்டைவிரலைத் தூக்கி தண்ணீர் என்று சைகையில் கேட்டான். அப்போதும் அவன் கண்கள் மூடியே இருந்தன.
ஒரு அமைச்சர் கைதாகிறார்!
எலிகள் பெருகி விட்டன. பயிர்களை நாசம் செய்தன. கண்ணில் பட்ட எலியொன்றை விரட்டினார்கள். அது ஒடி ஓளிந்த பொந்தொன்றை வெட்டித் தேடினார்கள். மண்ணுக்குள் ஒன்றிலிருந்து ஒன்றாய்ப் பிரிந்து எல்லாப் பக்கங்களிலும் பொந்து பொந்துகளாய் போய்க் கொண்டே இருந்தன. தோட்டம் முழுவதும் எலிப்பொந்துகள். அடுத்த தோட்டம், பக்கத்துத் தோட்டம் எல்லாம் எலிப்பொந்துகள்.
ஒரு எலியை ஒருவழியாய் பிடித்தார்கள். வாலைப் பிடித்துத் தூக்கினார்கள். அந்தக் கதையை ஊருக்குள் சாகசமாய் சொல்லிக் கொண்டார்கள்.
கண்முன்னால் கடவுள் இறந்துவிட்டார்!
மருந்து மாத்திரை பலனளிக்கவில்லை. செயற்கை சுவாசம் செலுத்த முடியவில்லை. டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அற்புதங்களை நிகழ்த்திய கடவுள், கண்முன்னால் இறந்து போய்விட்டார்.
தொலைக்காட்சிகளில் கடவுளின் மரணம் முக்கியச் செய்திகளாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. கடவுளின் உடல் மட்டும்தான் நம்மை விட்டு நீங்கியிருக்கிறது என தேற்றிக்கொண்டவர்கள் மத்தியில் ‘கடைசி வரையில் அவரது முடி மட்டும் அப்படியே இருந்தது’ என்றார் பரவசம் பொங்க ஒரு பக்த கோடி.
கடவுள் சேர்த்து வைத்த கோடி கோடியான சொத்துக்கள் உயிரோடு இருக்கின்றன. கட்டிக் காப்பாற்ற ஒருவர் வேண்டும். நாளை அடுத்த கடவுள் வந்துவிடுவார் எப்படியும்.
மோடி : எழுந்திருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டும், எழுதப்பட்ட வரலாற்றின் தீர்ப்பும்!
வெறிபிடித்த வாட்களின் முன்னால் கண்களில் மரண பயம் தெறிக்க, கும்பிட்டு நிற்கும் அந்த இளைஞனின் முகம் கடந்தகாலத்திற்குள்ளிருந்து இன்னும் தலையெட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பும், 50 கரசேவகர்களும் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் மூஸ்லிம் மக்களை நரவேட்டையாடிய சங்பரிவாரத்தின் கொலைவெறியும் தாண்டவமாடுகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகும் அந்த அதிர்வுகள் இன்னும் இந்த நிலத்தில் அடங்காமலிருக்கிறது. கோத்ரா ரயில் எரித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பெரும் குறைபாடுகளோடும், குளறுபடிகளோடும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சங்பரிவாரத்தினர் நடத்திய எல்லையற்ற வதைகளுக்கும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் இங்கு பெரிதாய் எந்த தீர்ப்புகளும் இல்லை.
இப்போது, இவையெல்லாவற்றுக்கும் மூலமாகவும், மூளையாகவும் இருந்தவரைச் சுட்டிக்காட்டியபடி நீண்டிருக்கின்றன உண்மையின் விரல்கள். முஸ்லிம்களுக்குச் ‘‘சரியான பாடம்’’ கற்பித்திட வேண்டும் என்று கூறி, முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்திற்கும் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி உடந்தையாக இருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்களுடன் உறுதிவாக்குமூலம் ஒன்றை மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில், 2002-ல் முஸ்லிம்கள் மீது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மதவெறிப் பரிவாரம் இனப்படுகொலைகளை நடத்திய சமயத்தில் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட், தற்போது உச்சநீதிமன்றத்தில் உறுதி வாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், ‘‘கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீக்கிரையாக்கப்பட்டு அதில் பயணம் செய்த 50 கரசேவகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, 2002 பிப்ரவரி 27 அன்று பின்னிரவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அப்போது அவர் காவல்துறை அதிகாரிகளிடம், இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதித்திடுமாறு கேட்டுக்கொண்டார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் சஞ்சீவ் பட் குறை கூறியிருக்கிறார். இக்குழுவானது தன் பணியை செய்யவில்லை என்றும், இனப்படுகொலைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வந்த சாட்சிகளையும் கூட மிரட்டியது என்றும் குறிப்பிட்டுள்ள சஞ்சீவ் பட், அதன்காரணமாகத்தான் உச்சநீதிமன்றத்தில் உண்மைகளைக் கூறுவதற்காக, தானே உறுதி வாக்குமூலம் பதிவு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
‘‘கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது. இச்சம்பவத்தைக் கண்டித்து ஏற்கனவே பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இனியும் நடக்காத வகையில், முஸ்லீம்களுக்குச் சரியான பாடம் கற்பித்திட வேண்டும். இந்துக்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. அவர்களது கோபம் வெளிப்பட அனுமதிக்க வேண்டியது அவசியம்’’ என்று முதல்வர் மோடி, காவல்துறை அதிகாரிகளிடையே பேசியதாக பட் தனது உறுதி வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மோடியின் இந்தப் பேச்சு, காவல் துறையினர் மத்தியிலும் மாநில நிர்வாகத்தின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது அடுத்தநாளே நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் வெளிப்பட்டது என்று சஞ்சீவ் பட் தன் உறுதிவாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இக்கூட்டம் நடைபெற்றபின் அதற்கு அடுத்த நாள் (2002 பிப்ரவரி 28) குல்பார்க் சொசைட்டி படுகொலை சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில்தான் காங்கிரஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த ஜாப்ரி கொல்லப்பட்டார். அப்போது சஞ்சீவ் பட் மாநிலக் காவல்துறை உளவுப்பிரிவில் துணை ஆணையராக இருந்தார். மோடி நடத்திய கூட்டத்திலும் இவர் பங்கேற்றிருக்கிறார்.
முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தன் பணியை ஒழுங்காக செய்யவில்லை. இனப்படுகொலைகள் தொடர்பாக உண் மையைச் சொன்னவர்களையெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மிரட்டுகின்றனர். கே.டி. பந்த் என்பவர் 2002-ல் உளவுத்துறை உதவி அதிகாரியாக இருந்தவர். தன்னைக் குற்றம்புரிந்தவராகக் கருதி, தன்னைக் கைது செய்யப்போவதாக மேற்கண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு மிரட்டுவதாகத் தன்னிடம் கூறியதாக பட் தெரிவித்திருக்கிறார். சஞ்சீவ் பட், உறுதி வாக்குமூலத்துடன், மோடிக்கு எதிராக பல்வேறு சாட்சியங்களையும், ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சஞ்சீவ் பட்டின் இந்த வாக்குமூலத்தை மறுப்பதற்கு குஜராத் அரசும், சிறப்பு புலனாய்வுக்குழுவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், மோடியின் பங்கு என்ன என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் எழுப்பியுள்ளது.
இப்படிப்பட்டவர் காலத்தில்தான் குஜராத் வளர்ச்சி கண்டிருப்பதாக சில பத்திரிகைகள் நெஞ்சு விம்ம பேசுகின்றன. ‘இவர் போல ஒரு முதல்வர் தமிழகத்துக்கு எப்போது கிடைப்பார்?’ என தினமலர் சில வாரங்களுக்கு முன்பு தனது ஏக்கத்தைத் தெரிவித்திருக்கிறது. இவர்தான் தனக்குப் பிடித்த தலைவராக காந்தியவாதி அன்னா ஹசாரே அகமகிழ்ந்திருந்தார். கடந்தகாலத்தை இவர்கள் மறந்துவிட்டுப் பேசுகிறார்களா? அல்லது இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்று கருதுகிறார்களா? அல்லது மனம் திருந்திய மனிதனாக ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது அவரது இந்த கிரிமனல் செய்கைகளைத்தான் இவர்கள் கொண்டாடுகிறார்களா?
எப்படி இருந்தாலும், வரலாற்றில் ஹிட்லர்களின் வரிசையில்தான் மோடிக்கு இடமிருக்கிறது. அந்த தீர்ப்பை யாராலும் திருத்தவோ, அழிக்கவோ முடியாது.
(ஆதாரம்: தீக்கதிர்)
வம்பரங்கம் 15 : கறுப்புப் பணமும், கறுப்பு மனமும்!
கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது. ஆட்சியாளர்களோ அவைகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறார்கள். “கறுப்புப் பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க இயலாது” என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.
நமது வங்கிகளில் சில ஆயிரம் கடன் வைத்திருந்தால் கூட அவர்களது பெயர்கள் நாளேடுகளில் வருகின்றன. அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. ஆனால் இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி, சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள கனவான்களின் பெயர்களை வெளியிடுவது பாவம் என மன்மோகன்சிங் அரசு கருதுகிறது.
இந்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. கறுப்புபணம் கைப்பற்றுதல் தொடர்பாக அமலாக்கப் பிரிவினர் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், சில பிரச்சினைகளில் உள்துறை அமைச்சகத்தையும், அயல்துறை அமைச்சகத்தையும் அணுக வேண்டியிருப்பதால், தாங்கள் கையறு நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தனர். இதன் அடிப்படையில், “நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை கைப்பற்றுவது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT- Special Investigation Team) அமைத்திடலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தவுடன் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. ஆனால் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைக்கச் சொல்லியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கல்லாய் இருக்கிறது மத்திய அரசு.
பதிவுலகம்: கொண்டாடுவோம் வாருங்கள்!
மனித வாழ்வின் மகத்துவமான அடையாளங்களில் ஒன்று புத்தகம். நாளை உலக புத்தக தினம். பாரதி புத்தகாலயம், இதனைக் கொண்டாடும் விதமாக ‘உலகப் புத்தக தினம்’ என ஒரு வலைப்பக்கம் ஆரம்பித்து இருக்கிறது.
இரண்டே நாட்களில் நூற்றுக்கும் அதிகமான பதிவுகளில், புத்தகங்களின் பட்டியலைத் தந்திருக்கிறது. சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையிலான ஐயாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களின் பட்டியல், பதிப்பகம், விலை என தொகுத்திருக்கிறது.
அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங்களை அனைவரும் அடைய சூளுரைப்போம். பிறந்தநாள் பரிசாகவும், திருமணநாள் அடையாளமாகவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களே நமது வாழ்வில் இடம்பெற அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன்!
எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனத்தோடு சாகித்திய அகாடமி இணைந்து ஏற்படுத்தியுள்ள இவ்விருது முதன்முறையாக தமிழுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய யாமம் நாவல் இந்த பெருமையை அவருக்குத் தந்திருக்கிறது. மகிழ்ச்சியான செய்திதான் நமக்கும், தமிழ் இலக்கியத்துக்கும்.
அவர் எழுதிய கதையான ‘கபாடபுரம்’ சிறுகதையிலிருந்துதான் எஸ்.ராவோடு பழக்கம். அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார் என நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலரான டாக்டர் வல்லபாய் அவர்கள் கிளினிக்கில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது எழுத்தாளர் கோணங்கியோடு வந்து கைப்பிரதியில் இருந்த அந்தக் கதையைத் தந்தார். நான், காமராஜ், டாக்டர் வல்லபாய் எல்லோரும் படித்தோம். கோணங்கியின் எழுத்துக்களைப் போல இருந்ததாகப் பட்டது. வலிந்து ஏன் மொழியை இவ்வளவு முறுக்கி இறுக்கமாக்க வேண்டும் என்று தோன்றியது. புரியவில்லை என்றோம். எஸ்.ரா சிரித்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் செம்மலரில் தொடர்ச்சியாக அவரது சில கதைகள் வந்திருந்தன. அவை புரியும்படியாகவும், அற்புதமாகவும் இருந்தன. எழுத்தாளர் வண்ணதாசனின் பிரதேசங்கள் எஸ்.ராவிடம் தென்பட்டது. ஆனாலும் அவருக்கு கோணங்கியின் பாதிப்பும், கோணங்கி எழுத்துக்களின் மீதான ஈர்ப்பும் வேறொரு திசைக்கு இழுத்துக்கொண்டு இருந்ததாகவே நான் புரிந்துகொண்டேன். இது எங்கள் வட்டத்தில் பலருக்கும் இருந்தது. பிறகு சுபமங்களாவில் வெளிவந்த அவரது ‘தாவரங்களின் உரையாடல்’ போன்ற கதைகளின் மொழி மீது வசீகரம் இருந்தாலும், ஒருவித அயற்சியை ஏற்படுத்தியது.
சாத்தூரில் எங்களுக்கு நெருங்கியத் தோழராகவும், இப்போது ஹோமியோபதி மருத்துவராகவும் இருக்கிற ச.வெங்கடாச்சலத்தின் தம்பிதான் அவர். பிறகு அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம். பல நேரங்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வீட்டில். சில நேரங்களில் சி.பி.எம் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், பரந்த வாசிப்பும் கொண்டவருமான எஸ்.ஏ.பெருமாள் (எஸ்.ஏ.பி) அவர்களோடு. எப்போதும் கோணங்கியோடுதான். விவாதங்கள்தான். அவருக்கும், கோணங்கிக்கும் இருக்கும் கிண்டல், விவாதங்களை ரசிக்கவும், தொடரவும் வைக்கும். , எஸ்.ராவின் வாசிப்பிலும், விவரிப்பிலும் எஸ்.ஏ.பிக்கு ஒரு மரியாதை உண்டு.
அறிவொளி காலத்தில், சாத்தூருக்கு பொறுப்பாளராக அவரது அண்ணன். ச.வெங்கடாசலம் இருந்தார். வங்கி, தொழிற்சங்கம் இல்லாத நேரங்களில் நானும் காமராஜும் பெரும்பாலும் அறிவொளி அலுவலகத்தில்தான் இருப்போம். நாட்கணக்கில் எஸ்.ரா அங்கு வந்திருப்பார். பார்க்கிற நேரமெல்லாம் புத்தகத்தோடுதான். பேச்சு, பேச்சு, என பேசிக்கொண்டே இருப்பார். அவரோடு இருந்த பல பொழுதுகள் இரவுகள்தாம். அவர் எழுத்துக்களிலும் இரவின் ரசம் சொட்டிக்கொண்டே இருக்கும். காய்ச்சல் வந்த ஒரு பகலில், வாசிப்பவனுக்குள்ளும் மஞ்சள் நிறம் தகிக்க வைக்கும் அவரது சிறுகதை (பேர் தெரியவில்லை) என்னை பிரமிக்க வைத்த கதைகளில் ஒன்று.
அவருக்குத் திருமணமானது, சன்.டிவிக்கு செய்தி அனுப்புகிறவராக இருந்தது, விருதுநகரில் டி.டி.பி செண்டர் வைத்து இருந்தது என அவரது நாட்களை அறிவேன். ஒருமுறை எங்கள் தொழிற்சங்கத்திற்கான சர்க்குலர் ஒன்றை கம்ப்யூட்டரில் டைப் அடித்து, அவர் பிரிண்ட் எடுத்து கொடுத்த போது ‘தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர் இவர்’ என்னும் நினைப்பு வந்து லௌகீக வாழ்வின் வதை உணர்ந்தேன். அவற்றையெல்லாம் புத்தக வாசிப்பின் மூலமே ஈடுசெய்துகொண்டவராக, தன்னைப் புதுப்பித்துக் கொண்டவராகத் தெரிந்தார். கதைகளும், தொகுப்புகளுமாய் எழுதி முடித்து வளர்ந்து கொண்டே இருந்தார். அவர் சென்னை சென்ற பிறகு எப்போதாவதுதான் சந்திக்க முடிந்தாலும், அவரை பற்றிய செய்திகள் எங்காவது இருந்து வந்துகொண்டேதான் இருந்தன. அவை எல்லோருக்கும் தெரிந்தவைகளாகவே இருந்தன. அந்த நிலைக்கு அவர் உயர்ந்து இருந்தார்.
அவருடைய வாசிப்பும், பயணங்களும், பெரும் உழைப்பு கொண்ட எழுத்துக்களும் இதற்கெல்லாம் காரணம் என்ற போதிலும் எல்லோருக்கும் புரிகிற மாதிரி, ஆனந்த விகடனில் அவர் எழுதியவையே பெரும் வாசகப் பரப்பை விரித்துக்கொண்டது. அடுத்தடுத்த தளங்களுக்குக் கொண்டு சென்றது. எழுத்தாளர் கோணங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டும், தொகுப்புகளை வெளியிட்டுக்கொண்டும், கல்குதிரைகளை கொண்டு வந்துகொண்டும் அப்படியே இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது, அவர் அருகிலேயே எஸ்.ரா இருப்பதாகவும் ஒருகணம் தோன்றி மறைவதைத் தவிர்க்க முடியவில்லை.
அமைப்புகளின் மீது எஸ்.ராவுக்கு விமர்சனங்கள் இருந்தபோதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தோழர்களோடு அவருக்கு எப்போதும் நெருக்கமும், நட்பும் உண்டு. இந்த பரஸ்பரம் தொடர்ந்து இன்றுவரை நீடித்து வந்துகொண்டு இருக்கிறது. இது அவரது சிறப்பு.
விஷயம் அறிந்ததும் போன் செய்தேன். “வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன்!”
எழுத்தென்பது…
நான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள்.
நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழுதினேன். அழகாய் இருப்பதாய்ச் சொன்னார்கள்.
நான் திருடன். என் திருட்டுத்தனத்தை எழுதினேன். நேர்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள்.
நான் என்னை மறைத்து, உயர்வாய் எழுத ஆரம்பித்தேன் ஒருநாள். எல்லோரும் சேர்ந்து நின்று ‘பொய்யன்’, ‘அசிங்கமானவன்’, ‘திருடன்’ எனப் பழித்தார்கள். என் எழுத்துக்களே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன.
அன்னா ஹசாரேவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரா?
எனது முந்தையப் பதிவுக்கு, ஹரிஹரன் என்னும் நண்பர் கடைசியாக வெளியிட்ட பின்னூட்டம் இது:
இது எவ்வளவு தூரம் உண்மை என இன்னும் முழுமையாய்த் தெரியவில்லை. ஆராயப்பட வேண்டியதும், தெளிவுற வேண்டியதும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site
http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005
The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site
http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
but this is a paid site.
அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை!
மந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை, இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். இன்று இந்தியாவின் நாயகர் போல முன்னிற்கிறார். தேசத்தின் ஊழல் கறையை அகற்ற வந்த உத்தமர் அவர் என்று முழக்கங்கள் கேட்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஃபேஸ்புக், டுவிட்டர் என எங்கெங்கு காணினும் ‘அன்னா ஹசாரே;, ‘அன்னா ஹசாரே’. திடுமென இப்படியொருவர் எங்கிருந்து குதித்து வந்தார் என்று யாரும் கேட்கவில்லை. மக்கள் அனைவரும் அவர் பின்னால் திரண்டு நிற்பதாய் என்.டி.டி.வி, டைம்ஸ் நௌவும் காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இவர்தான் நம் நம்பிக்கை என கைகாட்டுகின்றன. சாத்தூரின் ஒருச் சின்ன டீக்கடையில் பேப்பர் படிக்கும் நான்கைந்து பேரின் விடிகாலைப் பேச்சில் இப்போது அன்னா ஹசாரேவும் இருக்கிறார்.
எல்லோரும் பேசிக்கொண்டு இருந்த விஷயத்தைத்தான் அவரும் பேசினார். “ஊழலை ஒழிக்க முடியும்” என பேசியபோதெல்லாம் ஏளனமாய் சிரித்த அலுவலக நண்பன் இப்போது அன்னா ஹசாரேவின் விசிறி. ஊழலை அதிகாரபூர்வமாக்கிவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டே வேதனைப் பட்டபோது, “ஆமாம், வேறு என்ன செய்ய முடியும்?” என அங்கலாய்த்தவர்கள் இப்போது அன்னா ஹசாரேவின் பேரை உச்சரித்தபடி ஊர் ஊருக்குக் கூட்டம் நடத்துகிறார்கள். மக்களின் மனமாற்றங்கள் இங்கு ‘உடனடி’யாக நடந்துவிடுகின்றன.
நீண்ட காலமாக, இடதுசாரி கட்சிகள் ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக் கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும், சினிமா நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள். தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன. ஊழலில் திளைக்கும் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன. இதெல்லாம் ஊடகங்களுக்கு தேவையில்லாதவை. அன்னா ஹசாரே என்னும் தேவதூதர் வந்து ஊழல் பற்றிப் பேச வேண்டும். அதற்காக காத்திருந்தார்கள் போலும்.
ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பால் மசோதா வரைவை தயாரிக்கும் கமிட்டியில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற வேண்டும் என அன்னா ஹசாரே கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். மத்திய அரசு அதனை நிராகரித்து, ஒரு குழுவை அமைக்க முன்வந்ததும், ஹசாரே காலவரையற்ற தன் உண்ணாவிரதத்தை ஒருநாள் துவக்கினார். தொலைக்காட்சிகள் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தன. அவ்வளவுதான் சடசடவென எங்கும் தீப்பற்றிக்கொண்டது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வேண்டும். அது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி தொட்டு நின்ற பிறகு வந்தது. அன்னா ஹசாரேவும் வந்துவிட்டார். இனி ஊழலை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதாய் வரிந்து கட்டி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.
இந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
நடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும். அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில் வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.
ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு வெறுப்புற்றும், சகித்துக்கொண்டும் இருந்த மக்களின் உணர்வுகளுக்கு அன்னா ஹசாரே உருவம் கொடுக்கத் தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது. இது விதி. இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும் கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.
இப்படி ஒரு சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இந்த மசோதா சரியாக நிறைவேற்றப்பட்டால், ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தக் கூடும். ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள் இன்னொரு புறம். இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை நாளைக்கு அமல்படுத்தப் போகிறவர்கள். சிரிப்பாக இல்லை?
இந்த தேசத்தில் திண்டாமைக்கு எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே? இதோ, மதுரையில் அதிகார மையத்திற்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக சகாயம் என்னும் ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பணியைச் செய்யவிடாமல் அரசு கெடுபிடிகள் செய்கிறது. இந்த இடம்தான் முக்கியமானது. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது? நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம். ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம்.
அன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ? இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டாரோ?
இரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம். அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது? மந்திரம்தான்.
கணக்கு வழக்கு
செல்வேந்திரனின் பதிவைப் படித்தேன். பொதுவெளியில் நம்பிக்கைக்கு மோசம் ஏற்பட்டுவிட்டதாய் , பதிவுலகம் சார்பாக அவரது கோபம் வெளிப்பட்டு இருந்தது. இன்னும் பின்னூட்டங்களும், தொடர் பதிவுகளும் வரக்கூடும். விளக்கங்களும், தவறுகளை சரிசெய்வதும் தொடரக்கூடும். அது ஒரு புறமிருக்கட்டும்.
செல்வேந்திரன் பதிவில் மோகன்குமார் கவலைப்பட்டு இருப்பது குறித்தும் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியதிருக்கிறது. இனி இதுபோல் முன்கை எடுப்பதில், மற்றவர்களுக்குத் தயக்கம் வரும் என்பது உண்மைதான். முகம் காணாத, எங்கோ இருக்கும் ஒருவரின் துயரத்திற்கு, இணையத்தின் வழி உதவிக்கரம் நீட்டுவது பதிவுலகின் சிறப்பு. அதற்கு ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது. நடந்தவைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பதிவுலகை முன்னெடுத்துச் செல்வோம். அது மிக முக்கியம்.
என்னுடன் வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவர், அவரது கிளையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார். பாதுகாப்பு அறைக்குள் அவரும் அவரது கேஷியரும் பணம் எடுக்கச் சென்றிருக்கின்றனர். பெட்டகத்தின் கதவைத் திறந்து பணம் எடுக்கும் வேளையில் மின்சாரம் போய்விட்டது. ஒரே இருட்டு. சட்டென்று அந்தக் கேஷியர், நண்பரின் கைகளைப் பிடித்துக் கொண்டாராம். நண்பருக்கு என்னவோ போலாகிவிட்டதாம். உடனே அந்தக் கேஷியர் சொன்னாராம், “சார், தப்பா எடுத்துக்காதீங்க, நான் உங்களை சந்தேகப்படல. என்னுடைய கைகள் உங்கக் கிட்டத்தான் இருக்குன்னு உங்களுக்குத் தெரியணும்” என்றாராம்.
இந்த வெளிப்படைத்தன்மை இது போன்ற பண விவகாரங்களில் முதன்மையானது, அவசியமானது. அடுத்தது எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தாலும், தனிநபர்கள் பொறுப்புக்கு விடுவதை விட, ஒரு குழுவாக அமைத்துக் கொள்வது நலம். மூன்றாவது ‘அவர் பார்த்துக் கொள்வார் ’ என்ற மனோபாவத்துடன் அந்தக் காரியத்தை ஆதரித்துவிட்டோ அல்லது பணம் செலுத்தியதோடோ நில்லாமல், என்னவாகியது என்று தொடரும் கேள்விகள் நம்மிடம் வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று உணர்வதே எப்போதும் ஆரோக்கியமானது.
‘கணக்கை’ சும்மா ஒன்றும் ‘கணக்கு வழக்கு’ என்று தமிழில் சொல்லவில்லை, நண்பர்களே!
ஒரு வாக்காளனின் வாக்கு மூலம்!
தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவுக்கு அ.தி.மு.கவும் வரக்கூடாது என்பதும் எனக்கு நியாயமாகப் படுகிறது.
சென்றமுறை நடந்த சட்டசபை தேர்தலின் போதுதான் ‘இரவுகள் உடையும்’ ஆவணப்படத்தை நான் இயக்கி முடித்திருந்தேன். அ.தி.மு.க ஆட்சியின் கோர முகத்தை அம்பலப்படுத்திய காட்சிகள் படம் முழுக்க இருந்தன. ஒரே காகிதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, பத்தாயிரம் சாலைப்பணியாளர்களின் வாழ்வைச் சொல்லும் கதை அது. அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான படமாக தினமலரிலும், தினகரனிலும், ரிப்போர்ட்டரிலும் செய்திகள் பெரிதாய் வெளியாயின. உளவுத்துறையின் கண்காணிப்புக்குள்ளானோம். படத்தை வெளியாக விடாமல் முயற்சிகள் நடந்தன. சி.ஐ.டி.யூவின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் படம் வெளியானது. தேர்தல் சமயத்தில் பல ஊர்களின் லோக்கல் கேபிள்களில் விடாமல் ‘இரவுகள் உடையும்’ ஓடியது. அந்தப் படம் எடுத்த அனுபவங்கள் எனக்குள் இன்னும் வெப்பமாக இருக்கின்றன. தந்தையை இழந்த குழந்தைகள் செல்லும் பாதையில் பரிதவிப்பு அடங்காமல் இருக்கிறது. “நாங்க என்ன சார் செஞ்சோம், எங்களுக்கு ஏன் சார் இந்தக் கொடுமை” என தீப்பெட்டி அடுக்கிக்கொண்டே கணவனையிழந்த பெண் கேட்ட கேள்வி நெஞ்சை அறுக்கிறது. பைத்தியம் பிடித்து ரோட்டில் அலைந்தவர்கள் முகங்களை இன்னும் மறக்க முடியவில்லை.
அவர்களுக்கும், நான் எடுத்த படத்திற்கும் துரோகம் செய்ய விரும்பாததால், இந்த முறை வாக்களிக்கவில்லை. 30 வருடங்களுக்குப் பிறகு, இந்த தடவைதான் தமிழகத்தில் 80 சதவீதம் வாக்குப் பதிவாகியிருக்கிறது என பெருமிதம் கொள்கின்றனர். 30 வருடங்களில், இந்த தடவைதான் முதன்முறையாக நானும் வாக்களிக்கவில்லை. எனக்கொன்றும் வருத்தம் இல்லை. எதோ ஒருவகையில் மன நிறைவாகவே இருக்கிறது.
நான் மதிப்பும், மரியாதையும் , நம்பிக்கையும் வைத்திருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் அவசியம் என்ற புரிதலுடன், இந்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் தொகுதி உடன்பாடு வைத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சி மேலும் நீடிப்பது என்பது, ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றாகிவிடும் என்னும் கட்சியின் நிலைபாடு சரியானதுதான். விலைவாசி உயர்வுக்கும், மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்களே ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்றாகி விடும் என்னும் கட்சியின் அரசியல் பார்வையும் தெளிவானதுதான்.
ஆனால், இந்தத் தேர்தல் முறை குறித்தும், இதில் இருக்கும் ஜனநாயகம் குறித்தும் எனக்குள் நிறையவே முரண்பாடுகள் வளர்ந்துகொண்டு இருக்கின்றன. அரசியல் என்பது மிக உயர்ந்த மேடை. மனித சமுகத்தின் பரிணாமங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. வரலாற்றின் சிக்கலான கேள்விகளுக்கு விடையறியும் சமூக விஞ்ஞானம் அது. மனிதர்கள் தங்கள் சக்தியை உணர்கிற, பிரயோகப்படுத்துகிற கருவி அது. இப்படித்தான் அரசியலை முன்வைக்கிறது மார்க்சீயம். ஆனால், இங்கு அரசியலென அறியப்படுவது நாற்காலிக்கானச் சண்டைகளும், கூத்துக்களும்தான். அதற்கான சதிகளும், சூழ்ச்சிகளும்தான். உட்காரும் வெறிகொண்டு தார்மீக நெறிகள் அனைத்தையும் மீறுகிற பொறுக்கித்தனங்கள்தான். மக்களை எப்படி ஏமாற்றுவது, பிரச்சினைகளிலிருந்து எப்படி திசை திருப்புவது என்பதே அரசியல் சாணக்கியத்தனம் என பீற்றிக்கொள்ளப்படுகிறது. கேவலம்.
இந்த நாற்காலிச் சண்டைகளை ரசிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் மக்கள் பெரு விருப்பம் கொள்கிறார்கள். பிரச்சினைகளை, கொள்கைகளைப் பேசிய இடதுசாரித் தலைவர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. வடிவேலு என்ன பேசுகிறார் என்பதுதான் முக்கியம். விலைவாசி உயர்வை விட, மின்சார வெட்டை விட தேவையான விஷயங்களை அவர் பேசுவார் என வேகாத வெயிலில் காத்திருக்கிறார்கள். யார் பணம் தந்தாலும் தயக்கமில்லாமல் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த முதலாளித்துவ அமைப்பு, தங்கள் அரசியலுக்கு ஏற்ப மக்களை எப்படிப் பதப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை இந்த தேர்தல்கள் தெளிவு படுத்துகின்றன. உறுதி செய்கின்றன.
இந்தத் தேர்தலில் மக்கள் எதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தீராதபக்கங்களில், நடத்திய கருத்துக்கணிப்புக்கு மொத்தம் 839 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி. கொள்கைகளுக்கு குறைந்த பட்சமாக 8% என்பதும், பணத்திற்கு அதிக பட்சமாக 32% என்பதும் இந்தத் தேர்தல் முறையின் பலவீனங்களைச் சொல்கின்றன. பிரச்சினைகளுக்கு 32% என்பது ஒரு ஆறுதல். பார்ப்போம், தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன என்று.
”ஒரு மாசம் காத்திருக்கணுமா” என்று நேற்று ஓட்டுப் போட்ட ஒருவர் சொல்கிறார். “பரீட்சை ரிசல்ட்டுக்கு காத்திருக்குற மாதிரி இருக்கு” என்று அடக்கமாட்டாமல் இன்னொருவர் சொல்கிறார். பரீட்சை என்றதும் சந்தேகம் வருகிறது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் வைக்கிற பரீட்சையா அல்லது ஆட்சியாளர்களுக்கு மக்கள் வைக்கிற பரீட்சையா என்று எப்படித் தீர்மானிப்பது. இங்கு யார் எழுதியது, யார் மதிப்பெண் போடுவது? மக்கள்தான் மதிப்பெண் போடுகிறவர்கள் என்று ஜனநாயகம் சொல்கிறது. அப்படியென்றால், இங்கு ஃபெயில் ஆகிறவர்கள் எப்போதும் மக்களாகவே ஏன் இருக்கிறார்கள்? குழப்பம்தான்.
வம்பரங்கம் 14: கருணாநிதிக்குச் சில கேள்விகள்
ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம் குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார். அது நமக்குத் தேவையில்லை.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.
கேள்விகள்:
1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?
2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?
3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?
4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?
5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?
6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?
7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?
8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?
9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?
10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?
11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?
12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?
13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?
15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?
16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?
17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?
18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?
19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?
20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?
(இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)
கருணாநிதியின் போதைக்கு விஜய்காந்த் ஒரு ஊறுகாய்!
பேரைத் தவறாகச் சொல்லிவிட்டார், சின்னத்தைத் தவறாகச் சொல்லி விட்டார் என விஜய்காந்தைப் பற்றி அனுதினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வேனில் அருகில் நின்ற வேட்பாளரை ஒருமுறைத் தள்ளிவிட்டதை, திரும்பத் திரும்ப ஷாட்டாக எடிட் செய்து, சவுண்ட் எபெஃக்ட் கொடுத்து, நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியை கலைஞர் டி.வி சொன்னது . கேப்டன் டிவியில் “மக்களே நான் ஒங்களுக்குத் துரோகம் செஞ்சா நல்லா இருக்க மாட்டேன், நாசமாப் போவேன்” என்று தெளிவாகக் கேட்கும் குரல், கலைஞர் டி.வியிலும், சன் டிவியிலும், மக்கள் டிவியிலும் குழறுகிறது. ஊர் ஊராக வடிவேலு, குஷ்பு, நெப்போலியன் வகையறாக்கள் விஜய்காந்த்தை ‘ குடிகாரன், முட்டாள்’ என்பதைத் திரும்ப திரும்பச் சொல்கின்றனர். அவர்கள் எதை எதிர்பார்த்து இதையெல்லாம் செய்கிறார்களோ அது மக்கள் மனதில் பற்ற வைக்கவும் படுகிறது.
‘இப்பவே இப்படின்னா, இவரெல்லாம் பதவிக்கு வந்தா’, என்று கவலைகொள்கின்றனர் நம்மக்கள் உடனடியாக. ‘பப்ளிக்ல இப்படி நடந்துக்கிடறவர்கிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்” என்று வேகவேகமாய் சிந்திக்கவும் தலைப்படுகின்றனர். தேர்தல் எதற்கு நடக்கிறது என்பதை மறந்து மக்கள் இப்போது விஜய்காந்தைப் பற்றிப் பேசுகிறார்கள். சக்திவாய்ந்த ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு, ரிமோட்டில் சேனலை மாற்றுவது போல, மக்களின் மனதை எவ்வளவு எளிதாக திசை திருப்பிவிட முடிகிறது அவர்களால்!
தேசத்தின் பொதுநிதியை கோடி கோடியாய் சுருட்டியது, தங்கள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திகார் சிறையில் இருப்பது, தமிழகத்தின் வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது, விலைவாசியை தாறுமாறாக ஏற்றியது, இஷ்டத்துக்கு மின்சார வெட்டை தமிழகத்தில் கொண்டு வந்தது, சினிமா, தொலைக்காட்சித் துறைகளை குடும்பமே கபளிகரம் செய்துகொண்டிருப்பது எனத் தாங்கள் அடுக்கடுக்காய் செய்த பெரும் குற்றங்களையும், அநியாயங்களையும் மக்கள் மறந்து போகட்டும் என விஜய்காந்த்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
நான் ஒன்றும் விஜய்காந்த்துக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் செய்தது, செய்வது சரியென்றும் சொல்லவில்லை. தொப்புளில் பம்பரம் ஒட்டுபவராக, குடிப்பவராக, வசனமாய்ப் பேசிக் கொண்டு இருப்பவராக, அநியாயத்துக்கும் அநியாயத்தைக் கண்டு கொதிப்பவராக சினிமாவில் அவரை எல்லோரும் அறிந்துதானே இருக்கிறோம். புதுசாக எதைப் பார்த்துவிட்டோம். அப்படியே இருந்தாலும் அவரைப் பற்றி நாம் பேசலாம். மக்கள் பேசலாம். கலைஞரின் குடும்பமும், இன்னபிற வடிவேலு வகையறாக்களும் பேசுவதுதான் சகிக்க முடியவில்லை. அதற்கான என்ன யோக்கியதை அவர்களுக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை.
“சினிமாவில் காமெடியனாக இருந்தவர், இப்போது கதாநாயகனாகி விட்டார். கதாநாயகனாக இருந்தவர் இப்போது காமெடியனாகி விட்டார்” என்று துணை முதல்வர் ஸ்டாலினும் அவர் பங்குக்குப் பேசி கைதட்டல்களையும், விசில்களையும் வாங்கிக்கொள்கிறார். சரி. “எப்போதுமே வில்லனாகவே இருக்கிறாரே உங்கள் அருமைத் தந்தை, அவர் மாறவே மாட்டாரா?” என அவரிடம் யார் கேட்பது?
“மத்திய மந்திரி மு.க.அழகிரி டெல்லியை விட்டு விட்டு, தமிழ்நாட்டில் பணியாற்றுவதில் தான் அதிக விருப்பம் என்று சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என முதல்வரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “அது அழகிரியின் தாய்நாட்டுப் பற்றைக் காட்டுகிறது. டெல்லியிலே அவர் பதவியிலே இருந்தாலும், அந்தப் பதவியை தமிழ்நாட்டுக்காகத்தான் முக்கியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.” என பதில் சொல்கிறார். விஜய்காந்த்தை விடவும் நாக்கு குழறுவதாக தெரியவில்லையா? இப்படி மதுரையில் அவர் நேற்று அளித்த பேட்டி உளறல்களின் உச்சம்.
கேள்வி: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இந்த அளவிற்கு கடுமையாக இருப்பதைப் பற்றி?
பதில்: தேர்தல் ஆணையம் என்பது தன்னை ஒரு அரசியல் கட்சியாக ஆக்கிக்கொள்ளாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம் ஆகும். நீதிமன்றத்தைப்போல அவர்கள் அந்த ஆணையத்தை நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுவதைக் காணும்போது, தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளுகிற நிலையை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
கேள்வி: நேற்றையதினம் கோவையிலே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தலைவர் வரவில்லையே, குறிப்பாக விஜயகாந்த் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டாரே?
பதில்: ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேசியிருக்கிறாரே, அது போதாதா? அப்படி வந்தது மாத்திரமல்ல, தி.மு.க. குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம் - ஆனால் சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தைக் குலைத்த கட்சி அல்ல.
கேள்வி: தமிழகத்தில் ஆங்காங்கு பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?
பதில்: எந்தப் பணமும் யாருடையது, எந்தக் கட்சியின் பணம் என்று அறிவிக்கவில்லையே?
நேர்மையான, நாகரீகமான ஒரு அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தைகளாக இவை? ஐயா, விஜய்காந்த் டாஸ்மார்க் போதையில் பேசுகிறார் என்றால், முதல்வர் என்ன போதையில் பேசுகிறாராம்? விஜய்காந்த் குடித்துவிட்டுப் பேசுகிறார் என்றால், கலைஞர் ஐந்து முறையோ, ஆறு முறையோ முதலமைச்சராக இருந்துவிட்டுப் பேசுகிறார். அதுதான் விஷயம். கருணாநிதியின் போதை காலமெல்லாம் பொய்யிலும், புளுகிலும் ஊறியது. மலைகளையும், மக்களையும் விழுங்கக் கூடியது. தமிழகத்தையேச் சுருட்டி குடும்ப தொலைக்காட்சிகளுக்குள் அடைக்கும் வெறி கொண்டது. அது தானாக இறங்கவே இறங்காது. பாவம், விஜய்காந்த். அந்த போதை நீடிக்க கருணாநிதிக்கு கிடைத்த ஒரு ஊறுகாய்!
மு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்!
ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், மதுரையில் பிறந்தது முதல் வசிக்கும் மதுரைவாசி எழுதிக்கொள்வது, உங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நாங்கள் இவ்விடம் நலமல்ல... (எங்கள் நலம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை) நீங்கள் அவ்விடம் நலமா?
எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு, நான் இளைஞனாக இருந்தபோது, மதுரைத் தெருக்களில், நண்பர்களுடன் அவர்கள் கைகளில் கிரிக்கெட் பேட்டுடன் உலா வந்த அழகிரியை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் நீங்கள் நண்பர்களுடன்தான் வருகிறீர்கள். ஆனால் அவர்கள் கைகளில் கிரிக்கெட் பேட்டிற்கு பதில் வேறு ஏதோ இருக்கிறது.
மதுரை மக்களுக்கு, பன்னெடுங்காலமாக ஒரு வழக்கம் இருக்கிறது. தங்களை ஆட்சிபுரிந்த மன்னர்களானாலும் சரி, மக்களாட்சியின் அரசியல் தலைவர்களானாலும் சரி, அவர்கள் பூர்வீக மதுரை மைந்தர்களா அல்லது குடியேறியவர்களா என எண்ணிப்பார்ப்பது கிடையாது. தங்கள் தலைகளில் வைத்து ஆனந்தக்கூத்தாடுவார்கள்... அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் வரையிலும்! எங்களுக்கு சூது, வாது செய்யத் தெரியாது, மனதில் பட்டதை பட்டென சொல்லித்தான் பழக்கம்.
சமீபத்தில் நீங்கள் விடுத்த அறிக்கை எங்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் எங்களை இப்படி கொலைகாரர்களாக... கொள்ளைக்காரர்களாக சித்தரித்ததைப்பற்றி கோபமும் ஒரு சேர வருகிறது. என்ன புரியவில்லையா.. அஞ்சாநெஞ்சரே, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காவல்காத்துக்கொண்டிருந்த அதிகப்படியான போலீகாரர்களை திரும்பப் பெற்றுக்கொண்டது சரிதானே... அவர்களுக்கு தேர்தல் சமயத்தில் வேறுபணிகள் தரலாம் தானே... ஆனால் எங்களால் (மதுரை மக்களால்) உங்களது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டால்... என்று என்றைக்கு அறிக்கை விட்டீரோ அன்றைக்கே எங்களது நெஞ்சம் வெடித்துச் சிதறியது.
உங்களது குடும்பத்தினரால் எடுக்கப்படும் சினிமாவினால்தான் மதுரை கலவர பூமியாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் மதுரை அமைதிப்பூங்காதான்! அஹிம்சையை போதித்த மகாத்மா, உண்ண உணவில்லாத, உடுக்க உடையில்லாத இந்திய மக்களின் வாழ்க்கை நிலையை நினைத்து நெஞ்சம் உருகி, தன் மேலாடையை கழற்றி எறிந்து அரை நிர்வாணக் கோலத்தை பூண்ட புண்ணிய பூமி மதுரை. ஆனால் இன்று, உங்களது நண்பர்கள் சகிதமாக, நீங்கள் கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை எங்கள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது.
உங்களுக்கும், உங்களது உறவினர் தயாநிதி மாறனுக்கும் இடையிலான பிரச்சனையில் எறிந்து சாம்பலானது எங்களது மதுரையின் தொழிலாளர்கள் மூன்று பேர். உலகமே இந்த கொடூரக் காட்சிகளை கலாநிதி மாறனின் தொலைக்காட்சி மூலமாக பார்த்தது. ஆனால் நீதிமன்றத்திற்கு மட்டும் சாட்சிகள் இல்லை. உங்களது ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட அந்த மூன்று தொழிலாளர்களின் சாம்பலின் மேல் நின்று நீங்களும், தயாநிதி மாறனும் இன்று ஓட்டு கேட்கிறீர்கள்.
தேர்தல் ஆணையத்தின் தயவால் நாங்கள், மதுரைவாசிகள், சற்று நிம்மதியாக மூச்சுவிட முடிகிறது. மதுரையில் உள்ள தெருக்கள் முழுவதும் கடந்த ஐந்து வருடங்களாக நீங்களும் உங்கள் மனைவியும், உங்கள் குழந்தைகளும் மிகப்பெரிய பேனர்களாக தொங்கிக்கொண்டு, எங்களது மூச்சுக்காற்றினை முட்டிக் கொண்டிருந்தீர்கள். தெருவெங்கும் தொங்கிக்கொண்டிருந்த நீங்கள், எங்கள் மனதுக்குள் புகும் கலையை மட்டும் கற்க மறுத்துவிட்டீர்கள்.
இந்த மதுரை மாநகரத்திலே பி.ராமமூர்த்தி, ஜானகியம்மாள், சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எங்களோடு ஒருவராக வாழ்ந்து மறைந்த பி.மோகன், தோளோடு தோள் உரசிக்கொண்டு எங்களோடு ஒன் பை டூ டீ சாப்பிடும் நன்மாறன் இவர்களின் வீடுகளுக்கோ, அல்லது இவர்களுக்கோ எத்தனை போலீகாரர்கள் காவலுக்கு இருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
நாங்கள் மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் ஆணையரையும் வேண்டுவ தெல்லாம், தேர்தல் அன்று நேர்மையான வன்முறையற்ற வகையில் வாக்களிக்க எங்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதுதான்.
என்ன வேதனை பார்த்தீர்களா அஞ்சாநெஞ்சரே, இந்த கோரிக்கையைக் கூட உங்களிடம் எங்களுக்கு வைக்கத் தோன்றவில்லை! நீங்கள் எங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மந்திரி!
இந்தக்கடிதத்தை முடிப்பதற்கு முன் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மதுரை மக்கள் என்றைக்குமே பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்! (பாசக்காரர்கள்) அவர்களை உங்கள் அராஜகத்தாலோ அக்கிரமத்தாலோ கட்டுப்படுத்த முடியாது. எங்களை பணத்தால் விலைக்கு வாங்கவும் முடியாது.
வாழ்த்துக்களுடன்.
ஏப்ரல் 13க்காக காத்திருக்கும் மதுரைவாசி
நன்றி : தீக்கதிர்
மாதவராஜ் பக்கங்கள் - 32
இனி அவன் முகத்தைப் பார்க்க முடியாது. நாற்பது வருடங்களுக்கும் மேலான நட்பில் விளைந்த ‘மாது’ எனும் அந்தப் பாசக்குரலைக் கேட்க முடியாது. சென்னையில் கால் வைக்கும் போதெல்லாம் அழகுவேலும் இங்குதான் இருக்கிறான் என்று ஒரு சந்தோஷத்தில் எழும் நினைப்பு இனி அறுக்கும். முந்தா நாள் இரவு அவன் இறந்து விட்டான்.
அவனை உங்களுக்குத் தெரியும். பழையபாட்டுக்களின் மீது பெருங்காதல் கொண்டவன். சென்ற மே 26ல், கனவாக வாழ்ந்தவன் என்று, ரஞ்சித் எனும் சின்னஞ்சிறு நண்பன் காலமானதை இங்கு பகிர்ந்திருந்தேன். அவனது தந்தையும், என் பால்ய சினேகிதனுமான அழகுவேல். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே பெஞ்ச் என கூடவே வந்தவன். எவ்வளவு, எவ்வளவு பேசி, அலைந்து திருந்திருக்கிறோம். எல்லாம் எனக்குள் உருகிக்கொண்டு இருக்கின்றன இந்த நேரத்தில்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவன் தொண்டையில் வந்திருந்த தைராய்டு கட்டியை ஆபரேஷன் செய்து இருந்தான். ஆனால், அது உள்ளுக்குள்ளேயே இருந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அப்பல்லோவில் சிகிச்சை பெற்றிருக்கிறான். நிலைமை விபரீதமான பிறகுதான், மூன்று நாட்களுக்கு முன்பு இன்னொரு நண்பன் போன் செய்து சொன்னான். ஒரு தடவை அவன் முகத்தையாவது பார்த்துவிடுவோம் என்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. மகன் இறந்த வலி, இனி அவனுக்கு இருக்காது. ஆனால், அந்த குடும்பத்திற்கு.....
சுனாமியில், பூகம்பங்களில் என மனிதர்கள் எவ்வளவோ, பெரும் இழப்புகளை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அன்றாட வாழ்வை சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறார்கள் எத்தனையோ கோடி மனிதர்கள். அவர்களின் துயரங்களின் முன்னால் இது ஒன்றுமில்லை எனும் பிரக்ஞையைத் தாண்டியும் வதைக்கிறது. ‘ஐயோ’ என உள்ளுக்குள் அலறிக்கொண்டு இருக்கிறேன்.
அடிக்கடி பார்ப்பதில்லை, பேசுவதில்லை என்றாலும், எங்கோ அவரவர்கள் இருக்கிறார்கள் என்பதே, இயல்பாக நம்மை சஞ்சரிக்க வைக்கிறது. அப்படியில்லை எனும்போது, எதுவும் செய்யத் தோன்றாமல் திகைத்துப் போகிறோம்.
’போன்புக்’கில் அவனது பேர்தான் முதலில் இருக்கும். அழைக்கும் போதெல்லாம் ‘சிங்கார வேலனின் தேவா’ எனும் பாடல் வந்து தடவும். இனி, அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் அழகுவேல் என்றே கேட்கும்....
அழகுவேலைப்பற்றி…
மாதவராஜ் பக்கங்கள் - 24
கனவாக வாழ்ந்தவன்!
கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் யோசனை














