இவள், அவன், இன்னொரு அவன்
இப்படி நடக்குமா என்றும் தோன்றியது. நடக்க வேண்டும் என்றும் சிந்தனை உந்தியது. தம்பி பாலு, மிகச்சாதாரணமாக இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, “இன்னிக்குத்தாண்ணே இவளுக்கு இரண்டாம் கல்யாணம்” என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டான்.
அம்மு சென்னைக்குச் சென்றுவிட்ட இந்த ஒருமாத காலத்தில், கடந்த பத்து நாட்களுக்கும் மேல் என் கூடவே இருக்கிறான் பாலு. உத்தபுர ஆவணப்பட வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன். அவனது நித்திய கண்டம் என்னும் கதையை ஏற்கனவே தீராத பக்கங்களில் பகிர்ந்திருக்கிறேன். பதினெட்டு வருடத்திற்கு முன்பு எழுதிய கதை அது. அப்போது அவன் இருபது வயதுக்கும் குறைவாகத்தான் இருந்திருப்பான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் விநோதமானவை. அதிர்ச்சியானவை. வாழ்வின் சகல பகுதிகளிலும் எட்டிப்பார்த்தும், இருந்தும் வந்திருக்கிறான். அவைகளைப் பற்றியெல்லாம் அவ்வப்போது இங்கு பகிரலாம்.
வீட்டிலிருந்தால் காலையில் எழுந்து டீ போட்டுத் தருவான். குக்கரில் அரிசி வைக்காமல், பாத்திரத்தில் பொங்குவான். வடிதண்ணீர் சூடாய் தந்து “இதக் குடிங்கண்ணே.... தேவாமிர்தம் போல இருக்கும்” என்பான். எப்போதோ வாழ்ந்த ஊரும், வீடும் அந்த நேரம் அருகில் வரும். புத்தகங்களை அலமாரியில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டு தவம் போல படித்துக் கொண்டே இருப்பான். திடுமென வாய்விட்டுச் சிரிப்பான். “என்னடா..” என்று காத்திருந்தால் சுவாரசியமான ஒரு கதை அந்த வேதாளத்திடமிருந்து வரும். அப்படி அறிய நேர்ந்ததுதான் இதுவும்.
அவனுக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்திருக்கிறது. கணவன் மீது ரொம்பப் பிரியமாய் இருப்பாளாம். தீப்பெட்டி அட்டை ஒட்டுவதில் காசைச் சேமித்து, அவனுக்கு ஆசை ஆசையாய் சட்டைகள் எடுத்துத் தருவாளாம். ‘அத்தான்’ என்று கூப்பிடுவதில் அப்படியொரு பாசம் பொங்குமாம். ஒரு வருடத்திற்குள் எல்லாம் கரைந்து போயிருக்கிறது. எந்நேரமும் இவளை அந்த வீட்டில் கரித்துக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ‘மலடி’, ‘மலடி’ என்று வாய்கூசாமல் தெருவெல்லாம் கேட்க ஊதியிருக்கிறார்கள். அடுத்த வருடத்திற்குள், சாதி சனங்களை வைத்துப் பேசி இவளை விலக்கிவைத்தும் விட்டார்கள். இவளது அவன் இன்னொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தும் கொண்டானாம்.
இதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியமானது. அவனது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி, இன்னொருவன் மனைவியில்லாமல் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறான். இவள், அந்த இன்னொரு அவனுக்கு இரண்டாம் தாரமாய் இப்போது வாழ்க்கைப்பட்டு இருக்கிறாளாம். அதே தெருவில் போய் வாழப் போகிறாளாம். சொல்லிவிட்டு, பாலு கடகடவென சிரித்தான். “அண்ணே, இப்போ அந்த மொதப் புருஷங்காரன் இவ வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுக்கிட்டு தெருவுல நடக்க முடியுமாண்ணே” என்றான். நான் அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன். திரும்பவும் சிரித்தான். “இப்ப இவளுக்கும் அந்த இன்னொருவனுக்கும் குழந்தை பெறந்து, அவனுக்கு குழந்தை பெறக்கலன்னா..” என்று அடக்க மாட்டாமல் சிரித்து, “தாயளி சாகட்டும்” என்றான் கோபத்தோடு.
நான் அவனிடம் மெல்ல “அந்த இரண்டாம் புருஷன் இவளை எப்படி நடத்துவான்னு எதிர்பார்க்குற. இவளை அவனும் கொடுமைப்படுத்த மாட்டான்னு நினைக்கிறியா?” கேட்டேன். கொஞ்சமும் யோசிக்காமல், “இருக்கட்டும்ணே. குழந்தையப் பெத்துக்கிட்டு வந்துர வேண்டியதுதான. என்ன கெட்டுப் போச்சு” என்று கொஞ்சம் நிறுத்தி, “அண்ணே, இந்த உலகத்துல வாழுறதுக்கு வழியா இல்ல..” என முடித்தான்.
நான் பாலுவையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவனோ, வீட்டிற்கு வெளியே போய் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான்.
கனவாக வாழ்ந்தவன்!
“நீங்க ஆறுமுகனேரியில்தானே படித்தீர்கள். நான் உங்கள் நண்பர் அழகுவேலின் மகன் ரஞ்சித்” என்று தன்னை அறிமுகப்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னால் ஒருநாள் எனக்கு அவன் மெயில் அனுப்பியிருந்தான். ஆர்குட் மூலம் அறிந்திருக்க வேண்டும். ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ஆர்குட்டில் அவனது புரோபைலைப் பார்த்தேன். கொஞ்சம் ஒல்லி, மற்றபடி அப்படியே என் பால்ய காலத்து நண்பன் அழகுவேலாய் சிரித்துக்கொண்டு இருந்தான். இளைஞன் ஒருவனின் ரசனைகளும், உணர்வுகளும் அவன் scrapsல், போட்டோக்களில், வீடியோக்களில் ததும்பிக் கிடந்தது.
அழகுவேல் போலில்லை இவன் எனவும் தோன்றியது. அரட்டைகளும், நையாண்டிகளுமாய் இருந்தாலும் அழகுவேல் கொஞ்சம் சீரியஸான பேர்வழி. ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்து வரை என்னோடு கூடவே வந்தான். பிறகு சென்னையில், பெரம்பூரில் அவனது அண்ணனின் கடைக்குச் சென்று விட்டான். கோவில் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வருவான். பூங்கா, ரெயில்வே ஸ்டேஷன் சென்று நான், அவன், ரஞ்சன் சாலமன், அருள் எல்லாம் பேசிக்கொண்டே இருப்போம். டி.எம்.எஸ், சுசிலா பாடல்களில் கரைந்து போய் பாடுவான். சென்னைக்குப் போய் கடிதங்களாய் எழுதுவான். டிகிரி முடித்து, நானும் சென்னை சென்ற பிறகு ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாதவராம் ஹைரோட்டில் உள்ள அவனது கடைக்குச் சென்று விடுவேன். பெரம்பூர் ரெயில்வே ஸ்டேஷன் சென்று பேசிக்கொண்டு இருப்போம். புரசைவாக்கம் சென்று எதாவது தியேட்டரில் படம் பார்ப்போம். சில நாட்களில் மெரீனாவில் கடல் முன்னே அமர்ந்து பரவசமடைவோம். திருமணத்திற்கு முன்பே அம்முவை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறேன்.
வேலை கிடைத்து சாத்தூர் வந்த பிறகு, நான் வேறொரு திசையில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். ஒருதடவை, எங்கள் சங்க அலுவலகத்துக்கு வந்த அழகுவேல், “என்னடா, கவர்ன்மெண்டுக்கு எதிரா பெரிய சதி செய்ற கும்பல் மாரி பேசுறீங்க.” என்றான். சிரித்துக் கொண்டேன். “அந்தப் பால் வடியும் மாது இல்லை நீ” என வருத்தப்பட்டான். அதற்கும் சிரித்துக் கொண்டேன். அவனது திருமணம், எனது திருமணம் என காலங்கள் வேகமாக பயணிக்க, அவனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அரிதாகிப் போனது. அழகுவேலும், அவனது நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த பில்டர்ஸ் நிறுவனம் பிரமாதமாக இருப்பதாகவும், அவனும் நல்ல நிலைமைக்கு உயர்ந்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். நான்கைந்து வருடங்களின் இடைவெளியில்தான் அவனை சென்னையில் சந்திக்க முடியும். ஒருதடவை வீட்டிற்குப் போனபோது அவனது மகனிடமும், மகளிடமும் “இதுதான் மாது மாமா. என் கூட படிச்சாங்க.” என என்னை அறிமுகப்படுத்தினான். செல்போன் வந்த பிறகு எதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பேசுவான்.
எல்லாவற்றையும், ரஞ்சித்தின் மெயில் கிளறிவிட்டிருந்தது. அன்றைக்கு அவனது வீட்டில் பார்த்த சின்னப் பையனா இவன் என ஆச்சரியமாய் இருந்தது. அழகுவேலிடம் ஒருதடவை போனில் பேசும்போது அவனைப்பற்றிக் கேட்டேன். பெயர் ரஞ்சித் என்றும், பெங்களூரில் படித்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னான். “உன் பையன் என்னோட ஃபிரண்ட் தெரியுமா” என்றேன். ஆச்சரியப்பட்டான். சொன்னேன். “ஆர்குட்னா என்ன?” என்றான். சிரித்துக்கொண்டேன். “சுப்பிரமணியபுரம் கதாநாயகியை எனக்குப் பிடிக்கும், அந்தப் பெண் என் அம்மாவைப் போல இருக்கிறாள்” என ஒருமுறை ஆர்குட்டில் அவன் விளையாட்டாய் எழுதியதை அழகுவேலிடம் சொன்னேன். அதைச் சரியாய் உள்வாங்கிக் கொள்ளாமல், அவன் மகனிடம் கேட்டு இருக்கிறான். ரஞ்சித் சாட்டில் வந்து “என்ன அங்கிள், எங்கப்பாக் கிட்ட என்ன சொன்னீங்க” என்றான். எதோ தவறு நடந்திருக்க வேண்டும் எனப் புரிந்துகொண்டு, நடந்ததைச் சொன்னேன். “இவ்வளவுதானா, தேங்க்ஸ் அங்கிள்” என்றான். அழகுவேலை போனில் கூப்பிட்டு, ”முட்டாள்”, ”முட்டாள்” எனத் திட்டினேன். ஹா, ஹாவென சிரித்தான். “என் கூடயும் ஃபிரண்டா இருக்கச் சொல்லுடா” எனறான் பரிதாபமாய். “நான் அவனை ஒருதடவை நேரில் பார்க்க வேண்டும்” என்றேன். “போடா, என்னையே நீ பார்க்குறது இல்ல” என கோபப்பட்டான்.
இப்போது சில மாதங்களாய் ரஞ்சித்தைச் சாட்டில் சந்திக்கவில்லை. ஆர்குட்டில் போயும் பார்க்கவில்லை. கூகிள் பஸ்ஸில் வந்து என் பதிவுகள் சிலவற்றில், பிடித்திருப்பதாய் அவன் குறிப்பிட்டு இருப்பதை பார்த்தேன். அழகுவேலிடம் இருந்தும் போன் வந்து நாளாயிற்று. இன்று காலை 7 மணி போல இருக்கும். ரஞ்சன் சாலமன் காஞ்சிபுரத்திலிருந்து போன் செய்தான். “மக்கா, அழகுவேலின் பையன் ரஞ்சித் நேத்து நைட் பெங்களூர்ல பைக் ஆக்சிடெண்ட்ல இறந்துவிட்டான்” என்றான். “ஐயோ” என்று கதறிக்கொண்டு எழுந்தேன். “சென்னையில் இன்று சாயந்தரம் அடக்கமாம்” என்று குரல் தழுதழுத்தான். உடலெல்லாம் நடுங்கியது.
கணிணியைத் திறந்து ஆர்குட் சென்று அவனைப் பார்த்தேன். அவன் பேசிக்கொண்டு இருந்தான். சிரித்துக்கொண்டு இருந்தான். நண்பர்களோடு குலாவித் திரிந்தான். அவன் ப்ரோபைலில் “Face ur Fears...Live ur Dreams” என்றிருந்தது. தொண்டை அடைக்க, அழ ஆரம்பித்தேன்.
“கனவாகத்தான் வாழ்ந்து மறைந்தாயோ, என் சின்னஞ்சிறு நண்பனே!”
“வலிமிகுந்த இந்த நனவிலிருந்து எப்படி மீள்வாய், என் அருமை நண்பனே!”
மாதவராஜ் பக்கங்கள் - 23
இந்தக் காலைதான் நிதானமாக வந்திருக்கிறது. எப்போது விடிந்தது, எப்போது இருட்டியது என அறியாமல் பத்துப் பனிரெண்டு நாட்களாக பைத்தியம் பிடித்துக் கிடந்த நேற்று வரையிலான தருணங்கள் ஒரு பயணத்தின் அனுபவமாய் சுகமாய் அசைந்து கொண்டு இருக்கின்றன நினைவுகளில். தூங்காமல், நேரத்திற்கு சாப்பிடாமல், உத்தபுர மக்களின் அசைவுகளை மானிட்டரில் பார்த்து பார்த்து, தேர்ந்தெடுத்து, அடுக்கி, கோர்த்து, ஒருவழியாக ஆவணப்படமாக உருப்பெற்று விட்டது. இரண்டு வருடங்களாக உத்தப்புரத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை அவ்வப்போது எடுத்து வைத்திருந்த இருபத்தைந்து மணி நேரத்துக்கும் மேலான காட்சிகளை, நாற்பது நிமிடங்களுக்குள் நிறைத்துச் சொல்லுவது என்பது கடுமையானதாயிருந்தாலும் சுவராசியமானதுமாகும். இடையில் மாறி, மாறி மதுரைக்கும், சென்னைக்கும், நெல்லைக்குமென பயணங்கள் வேறு. மூளையும், உடலும் கொதித்துப் போனாலும், சினிமா என்பது அனுபவித்து வேலை பார்ப்பதற்கு எவ்வளவு அருமையான இடம் என்றே தோன்றுகிறது.
‘வரும் 28ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டில் இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது, முடித்துத் தாருங்கள்’ என எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும், சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.சம்பத் அவர்களும் சொல்லியதன் பேரில் இந்த வேகம் காட்ட வேண்டியதாகிவிட்டது. சி.பி.எம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ் காரத் அவர்கள் இந்த மாநாட்டிற்கு வருகிறார் என்பது கூடுதல் கவனத்தையும், சிறப்பையும் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் தமிழிகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை மேலும் கூர்மை படுத்தியதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஒரு தனித்த பங்கு இருக்கிறது. தலித் மக்களை தனிமைப்படுத்தி உத்தப்புரத்தில் எழுப்பப்பட்ட சுவரை அகற்றக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரம் பேர் பங்கு கொண்டதும், அதில் ஆயிரம் பேருக்கு மேல் பிறன்மலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்களாய் இருந்ததும் நிச்சயம் சாதாரண விஷயமல்ல. இப்படியான காரியங்களை ஆவணப்படுத்துவதில் சந்தோஷமும், நிறைவும் இருக்கிறது, அது எவ்வளவு பெரும் உழைப்பைக் கோரினாலும்.
திருநெல்வேலியில், நண்பர் முனிஷ்தான் எடிட் செய்தார். பகலில் அவரை உட்கார வைப்பது சிரமம். ஷூட்டிங், மீட்டிங் என்று வெளியே சென்று விடுவார். அப்படியே இருந்தாலும் போன்கால்கள் தொடர்ந்து வந்து இடையூறு செய்யும். அந்நேரங்களில், அவரது உதவியாளர்களில் சிலர், தேவையான காட்சிகளை வெட்டி, பிராஜக்டில் சேமித்து வைப்பார்கள். அதில் விசு என்ற பையன் இந்த நாட்களில் நெருக்கமாகிவிட்டான். தனக்கு அடுத்த வாரத்தில் திருமணம் என்று சொல்லி, “கண்டிப்பாய் வரணும் சார் நீங்க” என்று அழைத்தான். அவன் கண்களில் கனவுகள் இருந்தன. அடிக்கடி உட்கார்ந்திருந்த இடத்திற்கு அவனை இழுத்து கொண்டு வந்து சேர்க்க வேண்டியிருந்தது.
முனிஷ் |
இரவில்தான் முனிஷ் கிடைப்பார். அருகில் உட்கார்ந்து, காட்சிகளைச் சொல்லிக்கொண்டு இருப்பேன். பிரிமியரின் டைம் லைனில் காட்சிகளை கோர்த்துக்கொண்டு இருப்பார். அன்புத்தம்பி பாலு அருகில் உட்கார்ந்து அவ்வப்போது டீக்களோ, பழங்களோ தருவித்துக்கொண்டு இருப்பான். ஒளிப்பதிவாளராயிருக்கும் பிரியா கார்த்தி முடிந்தவரையில் கூட உட்கார்ந்து பார்ப்பான். ஆனாலும் இரண்டு மணிக்கு மேல் அசந்து விடுவான். முனிஷ் என்னை பரிதாபமாக பார்த்து, “சார், ஒரு இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு ஐந்து மணிக்கு எழுந்து வேலையைத் தொடர்வோம்” என்பார். நான் பதிலே சொல்லாமல், அடுத்த காட்சி எது என்பதை விளக்கிக் கொண்டு இருப்பேன். ஒருநாள் தாங்க முடியாமல் “இந்த பாவம் உங்களை சும்மா விடாது” என்பார். விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு மேல், மெயின் ரோட்டுக்குச் சென்று டீ குடித்துவிட்டுத் திரும்புவோம். சகுந்தலா ஓட்டல் தாண்டி, கொஞ்சம் தூரத்தில் தாமிரபரணியின் தண்ணீர் திட்டுக்கள் பளபளத்துக் கிடக்கும்.
‘இந்தக் காட்சி வேண்டும்’, ‘இந்தக் காட்சி தேவையில்லை’ போன்ற விவாதங்களும் கூடவே வரும். எடிட் செய்வது மட்டும் தன் பணி என்றில்லாமல், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் முன்வைத்து செழுமையாக்குவதில் முனிஷ் கெட்டிக்காரர்தான். இந்த ஈடுபாடுதான் அவரை வளர்த்துக்கொண்டு இருக்கிறது. பிரியா கார்த்தி, இந்த பனிரெண்டு நாட்களாக தன் ஸ்டூடியோவை, குடும்பத்தை மறந்து போயிருந்தான். சென்னக்கு சென்று இருக்கும் அம்முவும், என் குழந்தைகளும் போனில் பேசும்போது தவிப்பாய் இருக்கும். ஒரே டிரஸ்ஸை போட்டுக்கொண்டு பாலு அலைந்து கொண்டு இருந்தான். படத்தின் காட்சிகளும், சத்தங்களுமே சிந்தனையை அடைத்துக்கொண்டு இருந்தன.
அந்த விஷயத்தைச் சொல்லவில்லை, அந்த சம்பவத்தை காட்சிப்படுத்தவில்லை, அவரது குரல் சரியாக கேட்கவில்லை என்கிற குறைபாடுகள் இம்சை செய்தன. இன்னும் படத்தை சிறப்பாய் செய்து இருக்கலாம் என்பது உள்ளுக்குள் ஒடிக்கொண்டே இருந்தது. எதையும் சரி செய்வதற்கு நேரமில்லை. திங்கட்கிழமைக்குள் படத்தை முடித்து மாஸ்டர் காப்பியை சென்னைக்கு அனுப்பியாக வேண்டியிருந்தது.
நேற்று காலையில் எடிட்டிங் முடிந்து, டைட்டில் அடித்து, rendering கொடுத்து, டி.வி.டியாக மாற்றும் நேரம் அப்பாடா என்றிருந்தது. பிரியா கார்த்தி உடல்நலம் கெட்டு ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான். வயிற்றுப் போக்கும், வாந்தியுமாய் இருந்தது. அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றோம். ஒரு கல்யாண வீட்டில் வீடியோ எடுக்க வேண்டி இருக்கிறது எனச் சொல்லி முனிஷ் புறப்பட்டுச் சென்றார். வெளியில் வெயில் அலை அலையாய் மிதந்து தகித்தது. பிரியா கார்த்திக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. என் கையில் உத்தப்புரத்தின் மாஸ்டர் காப்பி அப்போது இருந்தது.
இடிக்கப்பட்ட சுவரும், இடிக்க வேண்டிய சுவர்களும்!
மனித நாகரீகத்தின், மானுடத்தின் கறை போலிருக்கிற அந்தச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. உத்தப்புரத்தின் தலித் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. நேற்று மதுரை கலெக்டருக்கு ’பெருந்திரள் மனு’ கொடுக்க உத்தப்புரத்திலிருந்து வந்திருந்தனர். இரண்டு வருடங்களாக அங்கு நடைபெற்ற முக்கிய சம்பவங்களையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருக்கும் எங்கள் கரிசல் குழு சார்பில் நான், ஒளிப்பதிவாளர் பிரியா கார்த்தி, தம்பி பாலு மூன்று பேரும் சென்றிருந்தோம். வயதானவர்களிலிருந்து, பச்சிளம் குழந்தைகளை சுமந்துகொண்டு வந்த தாய்மார்களென நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். கொளுத்தும் மதுரை வெயிலில் பலரும் காலில் செருப்பில்லாமல் நடந்த காட்சிகளை பிரியா கார்த்தி அங்குமிங்கும் ஓடிச்சென்று தனது 'பானாசோனிக் 102B'யில் ஏற்றிக்கொண்டு இருந்தான்.
பொன்னையா என்னும் முதியவர், “சுவரை இடித்து பாதை மட்டும்தான் போட்டு இருக்காங்க. அது வழியா மனுஷங்க மட்டும்தான் போகலாமாம். ஆத்திர அவசரத்துக்கு, ஒரு பிரசவத்துக்குக் கூட ஆட்டோ வரக்கூட அங்க இருக்குற போலீஸ்காரங்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்க” என்றார். ”பஸ் நிறுத்தத்தில் ஒரு நிழற்குடை அமைக்க மறுக்கிறாங்க. ஆதிக்க சாதியினரோடு நாங்களும் சரிசமமா அங்க உக்காந்து விடுவோமாம். அதுக்கு ரெண்டு பேரும் நிக்கிறோம்னு அவங்க சொல்றாங்க” என ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே போனார். உத்தப்புரம் மக்களுக்காக போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திக் கொண்டு இருக்கிற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவரும், சி.பி.எம் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான தோழர் சம்பத் சொன்ன விஷயம் அதிர்ச்சியாயிருந்தது. சி.பி.எம் இராஜ்ய சபா எம்.பியான தோழர் டி.கே.ரெங்கராஜன், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மூன்று லட்சம் ருபாயை, உத்தப்புர பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க ஒதுக்கி மதுரை கலெக்டருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நிழற்குடை கட்டினால் அங்கு பதற்றம் உருவாகும் என, நிதியை மறுத்து கலெக்டர் பதில் எழுதியிருக்கிறாராம்.
ஊரின் சாக்கடை தலித் மக்கள் வாழும் பகுதிக்குள்தான் ஓடுகிறது. அதைத் திருப்பிவிட வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற கோரிக்கையும் கவனிக்கப்படுவதாய் இல்லை. ஆதிக்க சமூகம், அரசு இயந்திரம், காவல்துறை என ஒன்று சேர்ந்து உத்தப்புர தலித் மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பது உண்மையாகிறது. சுவரை, சி.பி.எம் அகில இந்தியச் செயலாளர் பிரகாஷ் காரத் 2008 மே 7ம் தேதி பார்க்க உத்தப்புரத்திற்கு வருகிறார் என்றவுடன் அவசர அவசரமாக ஒரேநாளில், 15 அடி மட்டும் உடைத்து பாதையை உருவாக்கித் தந்த தமிழக அரசு, அதற்குப் பிறகு, அந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்கின்றனர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.
உத்தப்புரத்தின் ஊரின் வடக்குப் பகுதியில் வ.உ.சி நற்பணி மன்றம் இருக்கிறது. தெற்குப் பகுதியில் அம்பேத்கர், இமானுவேல் சேகரன், ஒண்டி வீரன் படங்கள் காணப்படுகின்றன. இரண்டு பகுதிகளுக்கும் நடுவே 600 மீட்டர் நீளத்திற்கு 12 அடி உயரத்திற்கு ஒரு கோட்டை போல அந்தச் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. ”1989க்கு முன்பு வரை நாங்கள் இருவரும் சகஜமாக, சமமாக, நட்புறவோடுதான் இருந்தோம்” என்று சொல்லும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் முருகேசன், “ஜான்பாண்டியன் உத்தப்புரம் வந்து போன பிறகுதான் தலித் இளைஞர்கள் எங்கள் பெண்களை கிண்டல் செய்வதும், வீண் வம்பு செய்வதும் உருவானது” என்கிறார். ஆனால் தெற்குப் பகுதி தலித் மக்களோ “நாங்கள் தெருவில் செருப்பு போட்டு நடக்க முடியாது. அவர்களை ஐயா என்றுதான் சொல்ல வேண்டும். பஸ்ஸில் அவர்கள் நிற்க நாங்கள் உட்கார்ந்திருக்கக் கூடாது” என பல கொடுமைகளைச் சொல்கின்றனர்.
“அடிக்கடி பிரச்சினை வந்தவுடன், ரெண்டு பக்கமும் உக்காந்து பேசித்தான் அந்தச் சுவரைக் கட்டினோம்.” என்கின்றனர் வடக்குப் பகுதி மக்கள். “இல்லை, ஒரு மண்டபத்துல அவங்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி, எங்களில் ஐந்து பேரை நடுவே உட்காரவைத்து சுவரைக் கட்டிக் கொள்வதற்கு எழுதி வாங்கினர். அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன்.அன்றைக்கு நான் கையெழுத்துப் போடவில்லையென்றால் திரும்பி வந்திருக்க முடியாது” என்கிறார் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பொன்னையா. இந்த கட்டப் பஞ்சாயத்து ஒப்பந்தம் அப்போதிருந்த மதுரை கலெக்டருக்கும் தெரியுமாம். ‘இதற்கு நான் ஒப்புதல் அளிக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் கட்டிக் கொள்ளுங்கள்” என்று கலெக்டர் சொல்லியிருக்கிறார். இப்படி பல கதைகளோடு உத்தப்புரம் சுவர் பெரிதாய் நிற்கிறது. சுவரின் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் அணில்கள் ஓடி விளையாடிக் கொண்டு இருக்கின்றன.
தலித் மக்களின் கோரிக்கையை ஏற்று, சுவரை இடித்தவுடன், தாங்கிக் கொள்ள முடியாத வடக்குப் பகுதி மக்கள் தங்களிடமிருந்த 330 ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டு, வீடுகளைப் பூட்டிக் கொண்டு மலைக்குச் சென்றுவிட்ட்னர். எங்கிருந்தெல்லாமோ வேன்களில் வந்து அந்த மக்களுக்கு ஆதரவுகள் தெரிவிக்கப்பட்டன. ஊடகங்கள், மலையில் முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என பெரிது பெரிதாய் செய்திகள் போட்டன. ஊருக்குப் பொதுவாய் இருக்கிற அரச மரத்தையும், முத்தாலம்மன் கோவிலையும் தங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதை அவர்களுக்கு கொடுத்து விட்டால் பஸ் நிறுத்தம், நிழற்குடை எல்லாம் பறிபோகும் என்பது தலித் மக்களின் அச்சம்.”முத்தாலம்மன் அவர்களுக்கு மட்டும் சாமியா எங்களுக்கு இல்லையா” என்ற கேள்வியும் நியாயமானது. அரசு இரண்டு பக்கமும் தலையாட்டிக் கொண்டு இருக்க, மீண்டும் 2008ல் கலவரம் உண்டானது. தலித் மக்கள் பகுதிக்குள் காவல்துறை நுழைந்து வீடுகளையும், வீட்டில் உள்ள பொருட்களையும் சிதைத்து போட்டு இருக்கிறது. அவற்றை படம் பிடிக்கச் சென்ற எங்களுக்கு கத்திக் கதற வேண்டும் போலிருந்தது. கொடியன்குளத்தில் நடந்ததாய் கேள்விப்பட்டு இருந்ததை உத்தப்புரத்தில் பார்த்தோம். ஆண்கள் மீது வழக்குகளைப் போட, அவர்கள் தலைமறைவாகி இருந்தனர். பெண்கள் இருந்த வீடுகளில், ஃபேன், டிவி, கட்டில் என சின்னச் சின்ன வசதியான பொருட்களையெல்லாம் உடைத்து நொறுக்கியிருந்தனர். ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலேயே லத்தியால் குத்தப்பட்டதாய் சொல்லி அழுதார்கள். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி மிதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடனடியாக தலையிட்டு, மதுரையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சாட்சிகள், ஆவணங்களை கொடுத்து நீதி விசாரணை நடத்தச் சொன்னது. இப்போது இடைக்கால நிவாரணமாக 10 லட்சத்து 28 ஆயிரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
நேற்று நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஒரு இளஞரை சுட்டிக் காட்டி, ’இவர்தான் உத்தப்புரச் சுவரை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர்’ எனச் சொன்னார்கள். முப்பத்தைந்து வயது போலிருக்கும் பெயர் சுரேஷ். எல்.ஐ.சி.ஊழியர். அவரிடம் பேட்டி எடுத்தோம். “தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இன்சூரன்சு ஊழியர் சங்கமும் ஒரு அங்கம். மதுரை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் என்னென்ன வடிவங்களில் இருக்கிறது என்பதைக் கள ஆய்வு மூலம் கண்டறிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. நாங்கள் பல தோழர்களுடன் இணைந்து, 47 இடங்களில் ஆய்வு செய்தோம். ஒவ்வொன்றும் ஒரு வடிவமாக இருந்தது. அதில் ஒன்று உத்தப்புரச் சுவர். அங்கு நான் போயிருந்தேன். ஊருக்குள் போய் சிலரிடம் பேசினேன். ஊருக்குள் ஓடும் சாக்கடை, பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை என பல விஷயங்களைச் சொன்னார்கள். பஸ ஏற்றிவிடக் கூட வந்த மகாலிங்கம் என்பவர் இந்த ஊரில் இப்படியொருச் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது என்றார். நான் எதோ சின்னச் சுவராக இருக்கும் என நினைத்தாலும், பார்க்க புறப்பட்டேன். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. நனைந்துகொண்டு சென்று பார்த்தபோது, அப்பா...! நடுங்கியேப் போனேன்.” என முகம் துடிக்கச் சொன்னார். ஜூராசிக்பார்க் படத்தில் டயனசரை முதலில் பார்க்கிற போது ஏற்பட்ட அதிர்ச்சி அவர் கண்களில் தெரிந்தது.
அவரிடமிருந்து தகவல்களைப் பெற்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பத்திரிகையாளர்களைக் கூட்டித் தெரிவித்தது. ஹிந்து பத்திரிகை சார்பில் நேரடியாக உத்தப்புரம் சென்று பார்த்தபோது இன்னொரு கொடுமையும் தெரிய வந்தது. அந்தச் சுவரின் சில இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருப்பது! சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ நன்மாறன் அவர்கள் அந்தப் பத்திரிகை செய்தியினை சட்டசபையில் வாசிக்க, ஆடிப்போயிருக்கிறார். தமிழக முதலமைச்சர்.
நேற்று ’பெருந்திரள் தர்ணாவில்’ ஒரு முதியவர் நடக்க முடியாமல் ஒரு தடியை ஊன்றி, ஊன்றி கூட்டத்தோடு சென்று கொண்டு இருந்தார். பிரியா கார்த்தி அந்தக் கால்களை படம் பிடித்துக் கொண்டு இருந்தான். தீண்டாமைக் கொடுமையில் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்பட்டு, வலியில் துடித்து, யுகங்களின் ரேகை படிந்த கால்கள் அவை. நம்பிக்கையோடும், போராடும் வேகத்தோடும் முன்னோக்கிச் செல்கின்றன. அந்தக் கால்களுக்கு வணக்கம் சொல்லி விரைவில் உத்தப்புரம் குறித்த ஆவணப்படம் வெளிவர இருக்கிறது.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு!
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு,
கடன்களைத் திருப்பிக் கட்ட என்னிடம் பணமில்லதததால் என்னையே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். மழை இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளைச்சல் பொய்த்துப் போய்விட்டது. பாரத ஸ்டேட் வங்கியில் நான் வாங்கிய கடன் கட்டாமலேயே உள்ளது. எனது மகன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயரிலும் கடன்கள் உள்ளன.
வாங்கிய கடனைத் திரும்பப்பெற வங்கி ஊழியர்கள் இரண்டு முறை வந்தனர். நாங்கள் வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறோம் என்று நான் நினைத்துப் பார்த்தேன். இந்த நினைவோடு நான் இந்த உலகத்தை விட்டே செல்கிறேன்.
எனது மகன் மற்றும் மருமகளுக்கும் 2010 ஆம் ஆண்டில் வரும் விவசாயப் பருவத்திற்கான கடனை தயவு செய்து வழங்குங்கள். நான் எடுத்த முடிவுக்கு அவர்கள் வராமல் இருக்க இது உதவும்.
இப்படிக்கு
ரத்தன் ராமச்சந்திர ரவுத்
என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்த ரத்தன் ராமச்சந்திர ரவுத் என்ற விவசாயி. மற்ற விவசாயிகளைப் போல இதை வெறும் வெள்ளைக் காகிதத்தில் அவர் எழுதவில்லை. 100 ரூபாய்க்கான பத்திரத்தாளை வாங்கி அதில் எழுதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததோடு, பிரதமர், முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர், தாசில்தார், ஊராட்சித்தலைவர் என்று அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.
காவல்துறையினருக்கு தனியாக அவர் கடிதம் எழுதியுள்ளார். விசாரணை என்ற பெயரில் எனது குடும்பத்தினரை தொந்தரவு செய்துவிட வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ள 2 லட்சம் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைத்தான் எடுத்துக் கொண்டார்கள். அவர்களைப் போல ரவுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு விதர்பாவில் மட்டும் 2010 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து 300 பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகள் ஒருபுறம் இருக்க, அவர்களின் தற்கொலைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களின் நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ அறிவியலுக்கான மகாத்மா காந்தி நிலையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான குடும்பங்கள் மனரீதியாகக் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
டாக்டர் பிரகாஷ் பெஹரே மற்றும் டாக்டர் மாணிக் பிசே ஆகியோர் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. தூக்கமின்மை, களைப்பு, கவலை, எதிலும் ஆர்வமின்மை, பசியின்மை போன்றவை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றன. 31.5 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தாங்களும் தற்கொலை செய்து கொண்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் அவலம் இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது. (ஆதாரம் : தீக்கதிர் நாளிதழ்)
ரத்தன் ராமச்சந்திர ரவுத் அவர்கள் தற்கொலையா செய்து கொண்டார்? முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்குக் கவிஞர் நக்னமுனி அவர்கள் எழுதிய கவிதை வரிகளில், இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறது.
“சூர்யோதத்துக்கு முன் அதிகாலையில்
கலப்பையைத் தோளில் சுமந்துகொண்டு
எலும்பும் தோலுமான காளைகள் தொடர
காடுகளுக்குப் போகின்ற ஒவ்வொரு உழவனிடமும்
சிலுவை சுமக்கும் ஏசுவைக் காண்கிறேன், நான்.
ஆமாம்.
நான் கொலையைப் பற்றி பேசுகிறேன்
இறுதி விருந்தில் யார் காட்டிக் கொடுத்தார்?
ஏசுவுக்குத் தெரியும்.
கொலையாளிகள் யாரென நான் அறிவேன்.”
இந்த அறுபத்து மூன்று வருட சுதந்திர இந்தியாவில், விவசாயத்தைப் புறக்கணித்து, விவசாயிகளின் வாழ்வில் மண்ணள்ளிப் போட்டது யார் என உங்களுக்கும் தெரியும். அணுசக்தி, தொழில்நுட்பம், அந்நிய முதலீடு என ஆயிரமாயிரம் சலுகை அறிவிக்கிறவர்கள், நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்திற்குரிய கவனத்தை செலுத்துவதேயில்லை. மண்ணை நம்பி விதை விதைக்கிறவர்களின் மரணங்களைத்தான் இந்த தேசம் அறுவடை செய்துகொண்டு இருக்கிறது.
இலைகள் அழுத ஒரு மழை இரவு
அங்காடித்தெரு படத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் சாலையோரத்தில் படுத்துறங்கும் மனிதக் காட்சிகளை மறக்க முடியாது. வாழ்வின் விளிம்பில் தொங்கிக்கொண்டு இருக்கும் அம்மனிதர்களின் உலகம் பெருந்துயரம் பேசுபவை. எங்கிருந்து துரத்தப்பட்டு, இங்கு வந்திருக்கிறார்கள் என்னும் கேள்வியை இந்தச் சமூகம் தொலைத்துவிட்டு தலைதெறிக்க எங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறது. அம்மனிதர்களின் ஒரு மழை இரவை தன் கண்ணீர்த்துளிகளால் கவிஞர் நவகவி எழுத, நம் கரிசல்குயில் கிருஷ்ணசாமி அதைப் பாடியிருந்தார். பாடகனின் அடிவயிற்றிலிருந்து எழும்பும் அழைப்பை எளிதில் கடந்துவிட முடியாது. கேட்கும் போதெல்லாம் தொண்டை அடைத்து, விம்மி அழ வைக்கிறது.
|
அடுக்கு மாடி வீடுகள்
ஈரோடு பாஸஞ்சரில் வரும் அண்ணனுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்த போது, எதிர்பாராத விதமாக நண்பனும் அதே ரெயிலிலிருந்து இறங்கினான். ஒரு வருடத்திற்கும் மேலே அவனை ஊரில் பார்க்க முடியவில்லை. டீச்சர் வேலை கிடைத்து எங்கோ பணிபுரிந்து கொண்டிருக்கிறான் என்று மட்டும் தெரியும். பழைய உற்சாகம் தொற்றிக்கொள்ள பேசிக்கொண்டு இருக்கும் போது அண்ணனும் வந்து விட்டிருந்தான்.
“அண்ணா...இது என்னோட நண்பன்...ஈரோட்டுலத்தான் டீச்சரா இருக்கான்.”
“அப்படியா...ஈரோட்டுல நீங்க எங்க இருக்குறீங்க...”
“ஈரோட்டில் மேட்டுப்பாளையம் ரோடு போகுதுல்ல...”
“அங்க...?”
“பால்பண்ணை இருக்குல்ல...”
“அங்க?”
“ஹவுசிங் போர்டு குவார்ட்டஸ் இருக்குல்ல...”
“ ஆமா... அங்க...”
“ பீ குவார்ட்டஸ்ல...”
“அங்க...”
“முதல் தளத்தில்... கதவு எண் நான்கு..”
“அப்படியா... நான் இரண்டாவது தளத்தில்... கதவு எண் ஆறு!”
(இது ஒரு மீள்பதிவு)
முகம் சுளிக்கும் விஷயமல்ல இது!
சிலர் ரசித்து இருந்தாலும், ‘ஜெ என்றால்...’ என்னும் நேற்றைய எனது பதிவு இன்னும் சிலருக்கு முகம் சுளிக்க வைத்து விட்டதோ எனவும் தோன்றுகிறது. ‘மட்டமான ரசனை’ என்று உரிமையோடு கடிந்து கொண்டவர்களும், ‘அய்யே’ என்றவர்களும் இருந்தார்கள். அதில் அரசியல் இருப்பதாக நினைத்து பேசியவர்களும் இருந்தார்கள்.
ஆம், எல்லாம் மறந்து (ஆம், எல்லாம் மறந்து) அந்தக் குழந்தையை, குழந்தைமையை மட்டும் ரசிக்கவிடாமல் எது நம் மண்டையை அடைத்துக் கொண்டு இருக்கிறது?
எழுத யோசித்து, பிறகு வேண்டுமென்றுதான் அப்படி ஒரு பதிவை எழுதினேன். ஒரு எழுத்தை, உலகில் ஒருவருக்கு மொத்தமாய் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அது அவர்தான், அவர் மட்டும்தான் என உறுதி பூண்டு கொண்டால் நான் என்ன செய்ய? அந்தக் குழந்தை என்ன செய்ய..? அது ஒரு எழுத்து. அவ்வளவுதான். வழமையாகிப் போயிருப்பது நமது தவறான புரிதல்களே.
அடுத்தது, ‘அப்படி’ ஒரு விஷயத்தை பொதுவெளியில், எழுதினால் தைரியம் என்கிறார்கள். இப்படி ஒன்று நடந்தால், நம் வீடுகளில், நன்றாகத் தெரிந்தவர்களிடம் சொல்லிச் சிரிக்க முடிகிறபோது ஏன் எழுத்து மட்டும் முகம் சுளிக்க வைக்கிறது?
எஸ்.வி.வேணுகோபாலன் இதுகுறித்து தெளிவாகச் சொல்லி இருந்தார். “ஒரு குழந்தை புதிதாக தான் கற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆங்கில எழுத்தின் வடிவில் அத்தனை அதிசயித்து லயித்து அதே போன்ற ஒன்றைத் தனது "வெளிப்பாட்டிலிருந்தே" காண முடியும் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்பட்ட குதூகலத்தைக் கொஞ்சமும் ஒளிவு மறைவு இன்றித் தனது சொந்தத்திடம் முக்கியமாகத் தாயிடம் 'தனக்கு இது தெரிந்திருக்கிறது' என்று சத்தமாகப் பகிர்ந்து கொள்வதில் அருவருக்க என்ன இருக்கிறது?”
மேலும், தான் சமீபத்தில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்று, ‘இது’சம்பந்தமாகவே இருப்பதையும் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டு அனுப்பி வைத்திருக்கிறார். முகம் சுளிக்காமல் படிக்கலாம். இது உடல்நலம் சம்பந்தப்பட்டது மக்களே!
(காலைக்) கடன் பட்டார் நெஞ்சம் போல்..........
பொதுத்துறை நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்தப் பெண்மணிக்கு திங்கட்கிழமை தொடங்கி சனி வரையிலும் அலுவலகத்தில் வேலை. ஞாயிறு தவறாமல் மருத்துவமனையில் போய் நிற்க வேண்டும். அவரது நான்கு வயதுக் குழந்தைக்காக. குழந்தைக்கு ஒரு நோயும் இல்லை. எந்தச் சிகிச்சையும் இல்லை. பின் எதற்காக....? வாரம் முழுவதும் வேறு எந்தக் குழந்தையைப் போன்றே சாதாரணமாக உணவு எடுத்துக் கொண்டாலும், விளையாடினாலும், படித்தாலும் ஒரு முக்கியமான செய்கையை மட்டும் அந்தக் குழந்தையால் செய்து கொள்ள முடியவில்லை. Bowels Clearance என்று சொல்கிறோமே அது. அதாவது குடலிலிருந்து கழிவுகளை அகற்ற முடிவதில்லை. அதற்காக வாராவாரம் 'இனிமா' கொடுத்து வேலையை முடித்துக் கொண்டிருந்தனர்.
அப்புறம் நண்பர் ஒருவரது ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கின்றனர். அவர் சொன்னாராம்: "தினமும் காலையில் எழுந்ததும் டாய்லெட்டில் உட்கார வையுங்கள் பார்க்கலாம்". அது வீண் வேலை என்றிருக்கிறார் குழந்தையின் தாய். "பரவாயில்லை. தினம் ஒரு பத்து நிமிடம் வீணாகவே போகட்டும். உட்கார்ந்து பார்த்துவிட்டு வரட்டும்...அது அவனது அன்றாடப் பழக்கமாகட்டும். ஒன்றும் தப்பில்லை..." என்றிருக்கிறார் மருத்துவர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணிக்கு ஞாயிற்றுக் கிழமை டூட்டியிலிருந்து ஓய்வு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இனி(மா) தேவையில்லை என்றானது.
இதைத் தான் 'டாய்லெட் டிரெயினிங்' என்று சொல்கின்றனர். இதை விவாதிக்குமுன் ஒரு விஷயம். நீங்கள் பள்ளியில் தமிழ் இலக்கணம் படித்தவரா...அப்படியானால் 'இடக்கரடக்கல்' என்ற ஒன்றை அறிந்திருப்பீர்களே. இடக்கரடக்கல் காரணமாக இந்த 'முக்கி'யமான விஷயத்தை 'வெளி'யில் யாரும் பேசுவதில்லை. சரி செய்து கொள்ளத் தக்க வேண்டிய வாழ்வியல் அம்சத்தைப் பலரும் 'சிக்கல்' ஆக்கிக் கொள்கின்றனர். ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஊழல்கள் பகிரங்கமாக நடக்கிற தேசத்தில், தவிர்த்தே ஆகவேண்டிய ஆபாசமும் வன்முறையும் 'U' சான்றிதழோடே திரையில் அனுமதிக்கப்படுகிற சூழலில், மலம் கழிப்பதைப் பற்றிப் பேச மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிற சமூக நிலைமையை என்னவென்று சொல்வது!
நமது உடலில் உள்ள வேறு சில உறுப்புக்களைப் போலவே திருவாளர் ஆசனப்பகுதியும் மிகவும் நளினமானவர் (Sensitive). நான்கு பேர் எதிர்ல் கூடுமானவரை நம்மைச் சங்கடப்பட வைக்காமல் எச்சரிக்கையும் செய்பவர். மூளையாகிய தலைமைச் செயலகத்தின் (எழுத்தாளர் சுஜாதாவிற்கு நன்றி!) நேரடி கண்காணிப்பில் - முழு கட்டுப்பாட்டில் இயங்குபவர் என்பதால் அவருக்குரிய மரியாதையைக் கொடுத்துவிடுவது நல்லது.
பிறந்த குழந்தையின் குடல் சுத்திகரிப்பைக் கவனியுங்கள். முற்றிலும் திரவ ஆகாரத்தில் இருக்கும் குழந்தை ஒரு நாளைக்கு ஏழு முறை 'போனாலும்', ஏழு நாளைக்கு ஒரு முறை போனாலும் அது இயல்பானது, மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடவேண்டியதில்லை என்று வீட்டுப் பெரியவர்களுக்கு பாரம்பரிய அறிவு போதித்திருக்கிறது. குடல் சதைகள் தங்களது வளர்ச்சியை, இயக்கத்தை முழுமையடைகிற பருவம் அது.
ஆனாலும் நவீன காலத்தில், பிறந்த இரண்டாவது நாளே குழந்தைக்கு ஏதோ பிரச்சனை என்று மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர் விவரமறியாத ஒரு பெற்றோர். அதற்கும் ஓர் அறுவை சிகிச்சை செய்து பார்த்து 'எல்லாம் நார்மல், ஒரு வாரம் பொறுத்து எப்படி ஆகுது என்று பார்த்துவிட்டு சிகிச்சையைத் தொடரலாம்' என்று சொல்லியிருக்கிற அளவு இன்று மருத்துவத்துறை மனித நேயமற்ற வர்த்தகத் தன்மைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
குழந்தை வளர்கிற பருவத்திலேயே குடல்சுத்தமும் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று என்பதைப் பழக்கிவிடவேண்டும். அது ஏதோ யார் எதிரிலும் பேசக் கூடாத விஷயமாகவும், அருவருப்பான செய்கையாகவும் பெரியவர்கள் உருவகித்துவிட்டால் குழந்தைகளும் சொல்லப் பயந்து அல்லது கூசிப் போய் இயல்பான வெளிப்பாட்டை (தங்களது படைப்பாற்றலைப் போலவே) மறுத்துக் கொண்டு வளர்கின்றனர்.
உடலில் செரிமான இலாக்கா வேலை செய்வது குறித்த அனிச்சை செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்த மாபெரும் ரஷ்ய அறிவியல் அறிஞர் இவான் பாவ்லோவ் அது குறித்த உலக ஞானத்திற்குப் பெரிய பங்களிப்பு செய்தவர். பாவ்லோவ் பரிசோதனை என்பது, அவர் ஒரு நாயைக் கொண்டு செய்ததாகச் சொல்லப்படும் ஒரு முக்கியமான அறிவியல் நடவடிக்கை. குறிப்பிட்ட நேரத்தில் அன்றாடம் மணியின் ஓசையை எழுப்பியதும், நாய்க்கு அருகில் உணவு வந்து சேரும். அதற்குப் பழகிக் கொள்ளும் நாய்க்கு, ஒரு சில நாட்கள் கழித்து மணியின் ஓசைக்குப் பிறகு காலித் தட்டை வைத்தாலும் கூட எச்சில் ஊறவே செய்கிறது. (இந்தச் சோதனை மூலம் அவர் இன்னொரு புதிய நிரூபணத்தையும் வைத்தவரானார். கருத்துதான் முதலில் தோன்றியது. பொருள் என்பது அப்புறம்தான் என்ற கருத்து முதல்வாத தத்துவார்த்தக் கோட்பாடுகளுக்கு எதிரான பொருள்முதல்வாதச் சிந்தனையாளர்களின் கூற்றுக்கு ஆதரவாக இருந்தது இந்த அறிவியல் சோதனை).
இப்படி, காலைக் கடன்களை முடிக்க அவரவருக்குரிய திட்டப்படி செயல்படுவதில் தவறில்லை. அது குடல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவும். சிலருக்கு நடைப்பயிற்சி முடித்துவிட வேண்டும். சிலருக்குச் செய்தித்தாள் வாசிக்கக் கிடைக்காவிட்டால் வேலை நடக்காது. அன்பர்கள் சிலர், 'பாயிலர்ல வென்னி ஊத்தி மேல நெருப்பு பத்த வச்சாத் தான்ப்பா எறங்குது' என்கிற தரிசனத்தில் டீயும் சிகரெட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள். அவரவர் தங்களுக்கு ஆரோக்கியமான ஒரு வழியில் இந்த விஷயத்தை (Routine) முடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
சொல்லிவிட்டால் முடிந்ததா....அவரவர் பிரச்சனை அவரவர்களுக்குத் தான் தெரியும். அப்படியானால் மலச்சிக்கல் என்ற உலக மாந்தரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சனை ஏனய்யா இருக்க வேண்டும் என்றால், நமது பொறுப்பையும் தட்டிக் கழிக்க (!) முடியாது. நமது உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றோடு தொடர்புடையது இது.
உணவில் நார்ச்சத்து குறையக் குறைய, மாவுப்பொருளும் எளிதில் செரிக்க இயலாத உணவுவகைகளும் சேரச் சேர குடல் சிரமத்திற்கு ஆளாகிறது. நாம் அருந்தும் தண்ணீரின் அளவு தேவைக்கான அளவு கிடைக்காமல் போவதும் வேதனைப்பட வைக்கிறது. மனிதக் கழிவில் முக்கால் பங்கு தண்ணீர் வெளியேற்றம். அப்படி இல்லாமல் இறுக்கமான முறையில் இருந்தால், அது நமது வாழ்வின் - மனத்தின் இறுக்கங்களையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கக் கூடும். மனச் சிக்கல்களும் மலச் சிக்கல்களுக்கு இட்டுச் சென்று விடுகிறது.
சரிவிகித உணவு, தேவையான அளவு தண்ணீர், எளிய உடற்பயிற்சி, விரிந்த பார்வையும், பரந்த மனமும் கொண்ட அன்பின் இழையோட்டமிக்க வாழ்க்கை முறை போன்றவை பிரச்சனைகளை உருவாக்குவதில்லை. சலித்த (கோதுமை) மாவு பயன்படுத்திவிட்டு சலித்துக் கொண்டிருப்பதைவிட, சலிக்காத மாவு பயன்படுத்தினால் நிறைய நார்ச் சத்து கிடைக்கும். ஆப்பிள் போன்ற பழங்களில் தோலில் தான் நிறைய நார்ச்சத்து. ஈவிரக்கமில்லாமல் அதைச் சீவித் தள்ளிவிடவேண்டாம்.
இரவு அதீத கண் விழிப்பு, காலையில் தாமதமான திருப்பள்ளியெழுச்சி ஆகியவை அன்றாட வழக்கங்களில் உடைசல் ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் காலையில் ஒன்றும் சாப்பிடாமல் பள்ளிக்கு ஓடுவார்கள். அல்லது காலைக் கடனை வீட்டிலும் முடிக்க நேரமில்லாமல், பள்ளியில் அனுமதி கேட்கவும் வழியில்லாமல் அதனாலேயே தலைவலி, சோர்வு என்று உபரியாகவும் சிக்கல்களைத் தேடிக் கொள்வார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.
ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலோ, பெண்களுக்கு கருப்பைக் கட்டிகளினாலோ, நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், சரியான செரிமானம் அற்ற போக்கு (Irritable bowel syndrome ) ஆகியவை காரணமாகவும் மலச் சிக்கல் வரலாம். பெண்கள் பேறுக்காலத்தின்போதும் மலச்சிக்கலை அனுபவிக்கின்றனர் .
உறக்கம் வருவதற்காக, உளவியல் பிரச்சனைகளுக்காக, கால்சியம் அல்லது இரும்புச் சத்து தேவைக்காக, அமில முறிவிற்காக.... என்றெல்லாம் எடுத்துக் கொள்கிற மருந்துகள் மலச் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை. தவிர்க்க வேண்டிய மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும். மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளைச் சரி செய்ய, நிறைய பச்சைக் காய்கறி, பழவகைகள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தவிர்த்துவிட்டு, எப்படியாவது சிரமப்பட்டாவது வெளியேற்றி விடவேண்டும் என்று முக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குடலிறக்கம் (ஹெர்னியா), மூலம் போன்ற புதிய பிரச்சனைகளை உருவாக்க நேரும். அதேபோல் அடிக்கடி மலமிளக்கி மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆசனவாய் மற்றும் குடல் சதைகளின் இயல்பான செயல்பாடுகளில் அதாவது அவற்றின் அதிகாரங்களில் குறுக்கிடும் ஜனநாயக விரோதப் போக்காகும். எனவே விளைவுகள் விபரீதமாகவே இருக்கும். 'குடலைக் கழுவி உடலை வளர்' என்று இப்படியான மருந்து விற்றால், யாரது உடலை வளர்க்க என்று தெரிந்து கொள்வது நல்லது.
வெளியேற்றும் அளவு, உட்கொண்ட உணவிற்கு விகிதாச்சாரமாயில்லையோ, குறைந்திருக்குமோ என்று ஐயப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ' பழையன கழிதலும், புதியன புகுதலும் ' ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். நடுத்தர வயதைக் கடந்தபிறகு, இப்படி இல்லாமல் இருந்தால், அதுவும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு மலம் கழிக்கும் தன்மையில் (Regular Frequency உள்பட) எந்த வேறுபாடு இருந்தாலும், உடனே செரிமான உறுப்புகள் பற்றிய சோதனை செய்து கொள்வது நல்லது.
கோடான கோடி மனிதர்களுக்குச் சுத்தமான குடிநீரோ, கழிப்பறை வசதியோ செய்துதர மறுக்கும் நாட்டில் நோய்களைத் தடுப்பதைவிட மருத்துவமனைகளைப் பெருக்குவதில் தீவிரம் காட்டும் ஆட்சியாளரையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். தூய்மை அற்ற பாதையில், கல்லில், முள்ளில் நடக்கும்போது நம்மைக் காக்கும் செருப்புகள் அந்தக் கசடுகளைத் தாங்குவதாலேயே தாங்கள் வீட்டிற்குள் (அல்லது ஆலயங்களுக்குள்) நுழைய முடியாமல் நிறுத்தப் படுகின்றன. அதைச் செப்பனிடுபவர்களும் தான்.
அதேபோலவே, நமது குடலையும், உடலையும் சுத்தப்படுத்திவிட்டு வெளியேறுகிற மலத்தைப் பற்றிய நமது தவறான புரிதல் காரணமாகவே அதுவும் அருவருப்பாகப் பார்க்கப்படுகிறது. அதை அகற்றிச் சுத்தம் செய்து தலையில் அள்ளிச் செல்வோரும் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.
இந்த நூற்றாண்டிலும் மனித மலத்தை மனிதன் சுமப்பதைவிடவும் மலச்சிக்கல் ஒன்றும் பெரிய போராட்டமில்லை. மாற மறுக்கும் மனச் சிக்கல்களை உடைக்காமல் ஆரோக்கியமான சமூகமும் இல்லை..
-மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளில் இருந்து எஸ்.வி.வேணுகோபாலன்.
ஜெ என்றால்....
முதல் வகுப்பு படிக்கும் மகனுக்கு, தினசரி காலையில் ‘வெளியே’ போவதை வழக்கமாக்க பிரயாசைப்பட்டாள் தாய். அப்போதுதான் கழிப்பறையில் உட்கார வைத்து, வந்து தனது வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தாள்.
கொஞ்ச நேரத்தில் கழிப்பறையிலிருந்து மகன்காரன் ‘அம்மா இங்க வாயேன்’ என ஆரம்பித்தான். கொஞ்சமும் முயற்சி செய்யாமல் உடனே இப்படிக் கத்துவது அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சென்ற பிறகு ஒவ்வொருநாளும் ‘வெளியே’ செல்கிறேன் என கால்ச்சட்டை முழுக்க நனைத்து உட்கார்ந்திருக்கிறான் என ஆயாம்மா பலமுறை சொல்லி விட்டார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்து பாருடா’ என அதட்டினாள்.
அவன் திரும்பத் திரும்ப “அம்மா இங்க வாயேன்.... அம்மா இங்க வாயேன்” என பெருங்கூச்சல் போட ஆரம்பித்தான். எதாவது பல்லி, கரப்பான்பூச்சி பார்த்துவிட்டிருப்பான் என நினைத்துக்கொண்டு கழிப்பறை சென்றாள்.
பெரும் சாதனை படைத்தவனைப்போல நின்று கொண்டு இருந்தான். ‘அடேயப்பா போய்விட்டானாக்கும், இதுக்குத்தானா’ என்று நினைத்துக்கொண்டே “நல்ல புள்ள” என்று தண்ணீர் ஊற்றப் போனாள்.
“அம்மா, அதை நல்லாப் பாரு.....” என்று கைநீட்டி காண்பித்து “ஜெ மாதிரியே வந்திருக்கு” என்றான். அத்தோடு நில்லாமல் “ஜெ ஃபார்.... ” என்று முகமெல்லாம் குறும்பு பொங்க கேட்கவும் செய்தான்.
புதிய பதிவர்கள் அறிமுகம் -1
தங்கள் கருத்துக்களை, எழுத்துக்களை நான்கு பேருக்குச் சொல்ல வேண்டுமென்று வலைப்பக்கங்களில் புதிய பதிவர்கள் தினம்தோறும் வந்து சங்கமமாகிக்கொண்டே இருக்கின்றனர். தண்ணீரில் குதித்து அவர்களாகவே கைகால்களை அசைத்துக்கொண்டு நீச்சல் பழகுகின்றனர். அவர்கள் யார், என்ன எழுதுகிறார்கள் என்று பலருக்கும் தெரிவதில்லை. அவர்களை வலையுலகத்திற்கு வரவேற்று, வாழ்த்துக்கள் சொல்லும் விதமாகத்தான் இந்த ஏற்பாடு.
1.ஹரிஹரன்:
இவரது வலைப்பக்கம் என் எண்ணம். இதுவரை ஐந்து பதிவுகள் எழுதி இருக்கிறார். அனைத்துமே முக்கியமான விஷயங்களைத் தொட்டு எழுதிய நல்ல பதிவுகள். அரசியலும், சமூகமும் தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களாகச் சொல்கிறார். எந்தத் திரட்டிகளிலும் இன்னும் தன் வலைப்பக்கத்தை இணைக்காமல் இருக்கிறார்.
2.முனியாண்டி:
இவரது வலைப்பக்கம் அடிசுவடு. (அடிச்சுவடு என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்). லாஸ் ஏஞ்சல்சில் இருக்கிறார். இதுவரை 14 பதிவுகள் எழுதியுள்ளார். கவிதை முயற்சிகளாய் இருக்கின்றன. தோன்றுவதை அப்படியே எழுதுகிறார். கவிதைகளாவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும். இவரும் எந்தத் திரட்டியிலும் தன் வலைப்பக்கத்தை இணைக்கவில்லை.
3.காஸ்யபன்:
இவரது வலைப்பக்கம் kashyapan. (தமிழில் வைக்கலாமே!). முன்னர் மதுரையில் இருந்தவர் இப்போது நாக்பூரில் இருக்கிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஒரு நாடகமும் எழுதியிருக்கிறார். தொடர்ந்த இலக்கியப் பரிச்சயமுடைய இந்த 73வயதுக்காரர், அபூர்வமான விஷயங்களை சின்னச் சின்னதாய் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து எழுதுகிறார்.
4. திலீப் நாராயணன்:
இவரது வலைப்பக்கம் அழகிய நாட்கள். இவரைப் புதிய பதிவர் என்று சொல்லிவிட முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிவிட்டார். ஆனால் புதிய பதிவராகவே இருக்கிறார். இப்போதுதான் எனது முயற்சியினால் திரட்டிகளில் இணைந்திருக்கிறார். விருதுநகரில் தொலை தொடர்புத் துறையில் கணக்கியல் அலுவலராக இருக்கும் இவர் தன்னை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். வாழ்வின் மீது அக்கறையும், விமர்சனமும் கொண்ட இவரது எழுத்துக்கள் இன்னும் அடர்த்தியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
5. ராசராசசோழன்:
இவரது வலைப்பக்கம் அ..ஆ... புரிந்துவிட்டது... கற்றது கைமண் அளவு . இவரும் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். ’சராசரி மனிதன்.... கொஞ்சம் தமிழ் இன உணர்வுடன்’ என தன்னை அடையாளப்படுத்தும் இவர் நிறைய எழுதுகிறார். எழுத்தும் நடையும் இயல்பாய் இருக்கிறது. இன்னும் கூர்மை பெற வேண்டும்.
இந்த ஐந்து பதிவர்களுக்கும் நாம் நமது வாழ்த்துக்களையும், ஆதரவினையும் தெரிவிப்போம்.
(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)
முதல்வருக்கு கமல்ஹாசன் போட்ட சோப்பிலிருந்து பொங்கும் நுரை!
“முதல்வர் விழாவில் நான் அடிக்கடி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுவது சிலருக்குப் பிடிக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை. பிடித்தவர்கள் அவரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் என்னத்துக்கு சோப்பு போடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அவர் தமிழில் குளிப்பவர். அவருக்கு சோப்பு போட வேண்டிய அவசியமில்லை” இப்படி உலகநாயகன் சமீபத்தில் முதல்வருக்கு தமிழ்ச்சோப்பு போட்டு குளிப்பாட்டி இருக்கிறார்.
எதையாவது சொல்லி வைக்கணுமே என்று வாய்க்கு வந்த மாதிரி பொது இடங்களில், விழாக்களில், இப்படியெல்லாம் ஒருவரை இன்னொருவர் பேசுவதைப் பார்க்கும்போது எரிச்சல் வரும். சரி அவர்கள் அளவு அவ்வளவுதான் என சமாதானப்படுத்திக்கொண்டு, வேறு எதிலாவது சிந்தனையை செலுத்த முயற்சிப்பது வழக்கமாகி விடும். கமலஹாசன் போன்றவர்களும் நாலு பேருக்கு மத்தியில் இப்படி தத்துப்பித்தென்று உளறிக் கொட்டுகிறார்களே என்னும்போது சங்கடமாகி விடுகிறது. அருவருப்பாகவும் இருக்கிறது.
எல்லோரும் ஒருவரை ‘ஆஹோ’, ‘ஓஹோ’வென சகட்டுமேனிக்கு ஒரு இடத்தில் பாராட்டிக்கொண்டு இருக்கும்போது, மொத்த கூட்டமும் அதற்கு தலையாட்டி ஆரவாரிக்கும்போது, யாருக்கும் இப்படியெல்லாம் நிகழக்கூடுமோ என்றும் யோசனை செல்ல ஆரம்பித்தது. மேடையில் ஏறினால், தன்னை மறந்து சலங்கை அதிர, அபிநயத்தோடும் ஓங்காரக் குரலோடும் வெறி கொண்டாடும் கூத்துக்கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்கள் ஒரு மேடையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் காலில் விழுந்து கும்பிட்டாராம். வயதான அந்த அற்புதக் கலைஞர் செய்த காரியத்தை நேரில் பார்த்துவிட்ட பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி துடித்துப் போய்விட்டார். பின்னொருநாளில் என்னிடம் சொல்லி அவ்வளவு வருத்தப்பட்டார். தனிமையில் பாவலர் ஓம்முத்துமாரி அவர்களும் இதற்கு சங்கடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவருக்கு என்ன நிகழ்ந்தது, எப்படி புத்தியை பறிகொடுத்தார் என்பது முக்கியமானதாக இருக்கிறது.
பாராட்டப்படுகிற மனிதருக்கு சமூகத்தில் இருக்கும் அதிகாரம், செல்வாக்கு, பிரபலம் போன்றவைகளே பாராட்டுகிறவர்களுக்கு இப்படியான தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்துகின்றன. உள்ளுக்குள் அம்மனிதர் குறித்த சிந்தனைகள் ஒன்றாகவும், வெளியில் வரும் கருத்துக்கள் வேறாகவும் இருக்கின்றன. அவரும், அவரைச் சார்ந்தவர்களும் சந்தோஷப்படுகிற மாதிரி அல்லது தன் மீது எந்த வித்தியாசமான பார்வையும் விழுந்திடாதவாறு பேசவோ, காலில் விழவோ வேண்டியதாகிவிடுகிறது. நானும் உங்களுக்கு வேண்டியவர்தான் என காட்ட வேண்டியதாகிவிடுகிறது. தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. “பா... பா... அப்பா” என விவேக்கின் லூஸுத்தனமான புகழ்ச்சிகளையும் கேட்டு இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே என புன்சிரிப்போடும், பூரிப்போடும் வீற்றிருக்க ஆசையிருக்கிறதே! ‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்னும் பெரியாரின் வார்த்தைகள் இப்பேர்ப்பட்ட அரங்கங்களுக்குள் நுழைய அனுமதியின்றி வெளியேத்தான் நிற்க முடிகிறது.
‘பூ’ படத்திற்கான தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், பரிசளிப்பு விழாவில் நடந்த கூத்துக்களைச் சொன்னபோது வாய்விட்டுச் சிரித்தோம். மிகுந்த அவமானமாகவும் இருந்தது. முதல்வரை பாராட்டிப் பேசுவதும், இடையிடையே நடிக நடிகரின் ஆட்டங்களுமாய் மூன்று நான்கு மணி நேரமாய் மேடை களேபரமாய் இருந்ததாம். தனக்கு முன்வரிசையிலும், பின் வரிசையிலும் உட்கார்ந்திருந்த பல முன்னணி சினிமா நட்சத்திரங்களும், இயக்குனர்களும் அந்த குளிர்பதன அறைக்குள் புழுங்கி வெந்து போய்க் கிடந்ததைப் பார்க்க முடிந்திருக்கிறது. மிக முக்கியமான இயக்குனர் ஒருவர், எழுத்தாளர் தமிழ்ச்செல்வனிடம் சொன்னாராம் “சார். ஒங்களுக்குப் பரவாயில்ல. இந்த ஒரு தடவைதான். இனும வரமாட்டீங்க. நாங்க அப்படியில்ல. இன்னொரு மாசத்துல எதாவது விழா இருக்கும். வந்தேயாகணும். எங்க நெலமையப் பாத்தீங்களா?’” எனச் சொல்லி சிரித்து வேதனையைக் கரைத்திருக்கிறார். எல்லாம் பார்த்து, பூத்துப் போன பிறகு மேடையில் பரிசு பெற்ற கலைஞர்களை வரிசையில் நிற்கச் சொல்லி, திருப்பதி கோவிலில், ‘பெருமாளை தரிசிக்கும்’ விதமாய் அனுப்பி விரட்டியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் பரிசளித்து முடித்தாகிவிட்டது. பரிசுபெற்றவர்களும் கலைஞர்கள்தானே!
இந்தப் புழுக்கத்தை ஒரு கருணை மனு போல வெளிப்படுத்தியதற்கே, நடிகர் அஜித் இங்கே நெப்போலியன் போனபார்ட்டுக்குப் பிறகு உலகம் பார்த்த வீரன் போல புகழப்பட்டார். அதுவே பெரிய காரியம் என்பது போல சித்தரிக்கப்பட்டதில், அஜித்தின் தைரியம் தெரியவில்லை, நடக்கும் அடக்குமுறைகளும், அதற்கு எதிராக மண்டிக்கிடக்கும் வெறுப்புமே தெரிந்தது. அதையுணர்ந்து சரிசெய்யத் தோன்றாமல், அஜித்துக்கு எதிராக அரசின் கோபம் திரும்பியது. அடுத்தநாளே அவர், முதல்வரை நேரில் சந்தித்து, கைகட்டி உட்கார்ந்து பேசிவிட்டு, வெளியே வந்து பிரச்சினை சுமூகமாய் முடிந்தது’ என்று சிரித்து அமைதியாகிப்போனார். அவ்வளவுதான் அஜித். சினிமாவில் தொடைதட்டி வீரவசனம் பேசுவது போல் நிஜத்திலும் முடியாது என்பது அவருக்கும் தெரியும். கமலுக்கும் தெரியும். அதனால்தான் இந்த சோப்பு வார்த்தைகள். தமிழையே சுவாசிப்பவர், தமிழுக்கே அர்ப்பணித்தவர் என்பதெல்லாம் அலுத்துப் போக தமிழிலேயே குளிப்பவர் என்று இந்த புதிய சொல்லாடல் போலிருக்கிறது.
இப்படி அளவுக்கு மீறிய, பொய்யான, போலியான பேச்சுக்களைக் கேட்கும்போது இந்த நாட்டுப்புறக்கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. எறும்பும், சில்லானும் நண்பர்களாம். உரலில் நெல் குத்தும்போது எறும்பு அதற்குள் அகப்பட்டு செத்துப் போனதாம். உடனே சோகம் தாளாமல் சில்லான் மொட்டை அடித்துக் கொண்டதாம். அதைக் கேள்விப்பட்டு, வருத்தப்பட்ட ஒரு ஆலமரம் தன் கிளை ஒன்றை முறித்துக் கொண்டதாம். அங்கு வந்த யானை, சோகத்தைக் காட்டும் பொருட்டு தன் தந்தத்தை உடைத்துப் போட்டதாம். தண்ணீர் குடிக்க வந்த அந்த யானையிடம் எறும்பு செத்த சோகத்தை கேள்விப்பட்ட குளம் ஒரு அடி தண்ணீரை குறைத்துக் கொண்டதாம். வயலுக்கு தண்ணீர் பாய்க்க வந்த உழவன், குளத்திடம் எல்லாக் கதையையும் கேட்டு, தாங்க முடியாமல் கோணல் மாணலாக உழுது வைத்தானாம். அவனுடைய மனைவி நடந்ததையறிந்து தன் பங்குக்கு தலையில் இருந்த கஞ்சிக் கலயத்தை போட்டு உடைத்தாளாம். இப்படி ஒரு எறும்பு இறந்ததுக்கு ஒரு ஊரே பொய்யாய் சோகம் தெரிவிப்பதில் இருக்கும் கிண்டல்தான், இப்படி பொய்யான புகழுரைகளிலும் தொனிக்கிறது என்பதை சொல்பவர்களும், அதைக் கேட்பவர்களும் புரிந்துகொள்வதாய்த் தெரிவதில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
தமிழில் குளிப்பவர் என்றால், தமிழில் சொல்லப்பட்டு இருக்கும் நல்லருங்கருத்துக்களால் அழுக்குகள் நீங்கி இருக்க வேண்டும். அவர் போற்றுகிற வள்ளுவத்தால் சுத்தம் பெற்றிருக்க வேண்டும்.
“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கும் உலகு” என்கிறது ஒரு குறள். அதாவது, காதுபட கண்டித்துப் பேசினாலும் அதைப் பொறுத்து, அதில் சுட்டிக்காட்டப்பட்ட தன் குற்றங்களைத் திருத்திக்கொள்கிற அரசனின் ஆட்சியின் கீழ் வாழ உலகமக்கள் விரும்புவார்கள். அப்படியா இருக்கிறது? இப்படி எத்தனைச் சொல்லலாம்!
வள்ளுவரே! தாங்கள் சொல்வது இன்னதென்று அறியாத இவர்களை என்ன செய்வது?
நிழற்காமம்
மின்சாரம் போன மழையிரவில் மெழுகுவர்த்தி ஏற்றினேன். இருந்த இருட்டெல்லாம் திரண்டு சுவற்றில் பெரும் ஆகிருதியென நிழலாடியது. என் தலையை விட அதன் கை பெரிதாய் இருந்தது. நான் அசைந்த போதெல்லாம் அதுவும் வீடு முழுக்க அசைந்தது. அருகில் போனேன். மேலும் அது பெரியதாகியது. தயங்கியபடி தொட்டுத் தடவினேன். பூதமென ஸ்பரிசம் தட்டுப்பட்டது. மயிர் கூச்செறிய சிலிர்த்துப் போய் வசமிழந்தேன். என்னை அப்படியே எடுத்து விழுங்கியது அது.
களவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்!
இரவின் ஒரு மூலையிலிருந்து அடங்காமல் அழைக்கிறது ஒரு பெண் மனம். அதன் குரலில் இருக்கும் ஏக்கத்திற்கும், தவிப்பிற்கும் நம்மை பறிகொடுக்க வைக்கிறது. பால்யம், பதின்மம், காதல், சமூகம் எல்லாமும் வரிகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு அப்படியே உள்ளிழுக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு கலை இலக்கிய இரவின் மேடையில் முதன்முதலாய் இந்தப் பாடலைக் கேட்ட போது ஏற்பட்ட உணர்வு இப்போதும் வருகிறது. பிரளயன் ஒரு அற்புதமான நாடகக் கலைஞர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, இந்தப் பாடலை எழுதியவர் அவர்தான் என்று அறிந்தபோது மரியாதை கூடியது. அவருக்குள் மேலும் கவிதைகளும், ஒரு தொலைதூரத்து கிராமமும் இருக்கின்றன என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.
இந்தப் பாடல் பெண்மனதின் வரிகள். எழுதியதும், பாடியதும் ஆண்கள். ஆனாலும் கரைந்துருகும் ஒரு பெண்ணை நம்மால் பார்க்க முடிகிறது. நம்மையும் பெண்ணாக உணர முடிகிறது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. கரிசல்குயில் கிருஷ்ணசாமி இதனைப் பாட, மேடைக்குக் கீழே பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்து தலையசைத்து, கண்கலங்கும் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். சிலிர்க்க வைக்கிறது. நீங்களும் கேளுங்கள்.
|
சமீபத்தில் இதே பாடல் களவாணி என்னும் படத்தில் வந்திருக்கிறது. பாடலைப் பாடியவர் வேறு யாரோ. ரசிக்கலாம்தான். ஆனால் கிருஷ்ணசாமியின் குரலில் இருந்த ஆன்மா இதில் இல்லை என்றுதான் சொல்வேன்.
களவாணி படத்தில் வந்த பாடலின் லிங்க் இது. அதையும் கேட்டுப் பாருங்கள்.
நாளை என்பது மற்றொரு நாளல்ல!
ரயில் தண்டவாளத்தின் மீது படுத்திருக்கும் இந்தச் சிவப்புச் சட்டைக்காரர் என்ன சொல்கிறார்...உறுதிமிக்க அந்த முகத்தின் மொழியும், உயர்த்திய முஷ்டியும் தெரிவிப்பது என்ன... ஏப்ரல் 27 அன்று நாடு நெடுக நடந்த மறியலில் உழைப்பாளி மக்கள் அத்தனை ஆவேசமாகப் பங்கேற்றதன் ஒரு மின்னல் அடையாளமாக ஆங்கிலப் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தப் படம் ஆட்சியாளர்களது கொள்கைகளை நிராகரித்து எத்தனையோ செய்திகளைச் சொல்கிறது.
புதிய தாராளமயக் கொள்கை எந்த மேல் பூச்சுமின்றி கூச்ச நாச்சமின்றி பட்டவர்த்தனமாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்று எழுதுகின்றனர் சமூக விஞ்ஞானிகள். 2009 மக்களவைத் தேர்தலின் முடிவுகளில் இருந்து தாங்கள் இனி இடதுசாரிகள் ஆதரவுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை, கவலை கொள்ளத் தேவையில்லை என்று புரிந்து கொண்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இதில் முற்போக்கு என்ன பவிசுக்கு என்று தெரியவில்லை). செல்வந்தர்களைக் கொழுக்க வைக்கும் தமது கொள்கைகளை அவர்கள் மாற்றிக் கொள்ளத் தயாரில்லை என்பது அவர்கள் பேச்சுகள் ஒவ்வொன்றிலும் தெளிவாக்கப்படுகிறது. நடவடிக்கைகளில் பளிச்சென்று தெரிகிறது.
இரண்டு லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்கு அதிராதவர்கள் அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் ஆடிப் போவதிலிருந்து புரிகிறது. மூங்கில் பத்தைகளை, நச்சு விதைகளை அரைத்துச் சாப்பிடும் அளவுக்கு வறுமைக்குத் தள்ளப்பட்டு (ஆதாரம்: ஹர்ஷ் மேந்தர் கட்டுரை - தி ஹிந்து 11 04 2010) இன்னும் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் மக்கள் வாழும் தேசத்தில் ஐ பி எல் என்ற பேரில் நடக்கும் கேலிக் கூத்தில் கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை வைத்து வர்த்தக சூதாடிகளும், அரசியல் சீமான்களும், தொழிலதிபக் கொள்ளையரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
வரைமுறையற்ற சுரண்டலுக்கும், மனிதத் தன்மையற்ற முறையில் தாங்கள் நடத்தப்படுவதற்கும் எதிராகத் தொழிலாளி வர்க்கம் திரண்டெழுந்த கதை தான் மே தின வரலாறு. உழைப்பாளி மக்களின் வாழ்வுத் தரம் பற்றிய மிதமிஞ்சிய அலட்சியமும் அவமதிப்பும் கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்க நலனுக்கு எதிராகத் திரளாமல்
உழைப்பாளி மக்களுக்கு விடியல் கிடையாது என்பதை உணர்த்திய ஆவேசமிக்க வரலாறு அது. மூலதனத்தின் வன்முறை முகத்தை அம்பலப்படுத்திய வரலாற்றுப் பதிவுகள் அதற்குப் பின்னும் தொடரவே செய்தன.
மே தினம் உலகத் தொழிலாளர் திருநாளாக உருப்பெற்றதற்குக் காரணம் அதன் உலகம் தழுவிய தொழிலாளி வர்க்கததின் அடையாளம் ஆகும். "மனிதர்களின் நெஞ்சங்களில் வைரம் பாய்ச்சியும், அவரது முதுகு நிமிர்த்தியும் புவியின் செல்வம் அனைத்தும் தந்தது மானுட உழைப்பே என்றே சொல்லி மனிதரையெல்லாம் எழுப்பியதும்..." (மே தினமே என்ற பாடலில் இருந்து) மே தினம். அது தந்த உத்வேகத்தால் தான் பெயர் அறியப்படாத ஆயிரமாயிரம் தொழிலாளர் தோழர்கள் உரம் பெற்றுக் கனல் பொறியாய் எத்தனையோ களங்களில் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக, மூலதனத்தின் மூர்க்கத்திற்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கின்றனர்.
இந்த ஆண்டின் மே தினத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவில் முதன்முதல் மே தினக் கொண்டாட்டங்களை (சென்னையில் 1923ல்) நடத்திய தொழிலாளி வர்க்க உன்னதத் தலைவர் சிங்காரவேலர் அவர்களின் (1860 - 1946 ) 150 வது பிறந்த நாள் கொண்டாட்டப்படும் வேளையில் அனுசரிக்கப்படும் மே தினம் இது. 1927ல் அமெரிக்காவில் சாக்கோ, வான்சேட்டி என்ற இரு இத்தாலியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த தொழிலாளிகள் மீது போய்க் குற்றச்சாட்டு சுமத்தி ஆளும் வர்க்கம் தூக்கில் இட்டது. அதற்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர் சிங்காரவேலர்.
தண்டனை நிறைவேற்றப்பட இருந்த சூழ்நிலையில் தம்மைப் பார்க்க வந்த ஒருவரிடம் வான்சேட்டி சொன்னது இதுதான்:
"ஒரு ஏழை மீன் விற்பனையாளனான என்னையும், செருப்புத் தொழிலாளியான எனது நண்பனையும் இப்படித் தண்டிப்பதன் மூலம், உலகுக்குத் தெரிய வாய்ப்பின்றி வீணாகப் போயிருக்கக் கூடிய எங்கள் பிறவிகளை அர்த்தமுள்ளதாக்கி உள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். அவர்களை வெருட்டி இருக்கும் எங்களது இருப்பு எங்களது வெற்றி..."
தங்கள் இன்னுயிரை இழக்க நேர்ந்தாலும் அடி பணியோம் என்ற நெஞ்சுரத்தைத் தொழிலாளிக்கு ஊட்டி, ஏனைய மானுடருக்கான பொன்னுலகைச் சமைத்து மனிதகுல விடியலுக்கான வாசல்களைத் திறக்கப் புரட்சி தீபத்தைக் காட்டுகிற மே தினம் விடிகிறது.
சிவப்புச் சட்டைக்காரர் படுத்திருப்பது ரயில்வே தண்டவாளம் என்றாலும், அது இப்போதைய சமூக அமைப்பு இப்படியே பயணப்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவிக்கச் செய்திருக்கும் மறியல். புதிய சமூக எழுச்சிக்கான திசைவழியை நோக்கி மக்களை ஈர்க்கட்டும் மே தினம்....
- எஸ்.வி.வேணுகோபலன்