இடிக்கப்பட்ட சுவரும், இடிக்க வேண்டிய சுவர்களும்!

னித நாகரீகத்தின், மானுடத்தின் கறை போலிருக்கிற அந்தச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது.  உத்தப்புரத்தின் தலித் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. நேற்று மதுரை கலெக்டருக்கு ’பெருந்திரள் மனு’ கொடுக்க உத்தப்புரத்திலிருந்து வந்திருந்தனர். இரண்டு வருடங்களாக அங்கு நடைபெற்ற முக்கிய சம்பவங்களையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருக்கும் எங்கள் கரிசல் குழு சார்பில் நான், ஒளிப்பதிவாளர் பிரியா கார்த்தி, தம்பி பாலு மூன்று பேரும் சென்றிருந்தோம். வயதானவர்களிலிருந்து,  பச்சிளம் குழந்தைகளை சுமந்துகொண்டு வந்த தாய்மார்களென நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். கொளுத்தும் மதுரை வெயிலில் பலரும் காலில் செருப்பில்லாமல் நடந்த காட்சிகளை பிரியா கார்த்தி அங்குமிங்கும் ஓடிச்சென்று தனது 'பானாசோனிக் 102B'யில் ஏற்றிக்கொண்டு இருந்தான்.

 03

பொன்னையா என்னும் முதியவர், “சுவரை இடித்து பாதை மட்டும்தான் போட்டு இருக்காங்க. அது வழியா மனுஷங்க மட்டும்தான் போகலாமாம். ஆத்திர அவசரத்துக்கு, ஒரு பிரசவத்துக்குக் கூட ஆட்டோ வரக்கூட அங்க இருக்குற போலீஸ்காரங்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்க” என்றார். ”பஸ் நிறுத்தத்தில் ஒரு நிழற்குடை அமைக்க மறுக்கிறாங்க. ஆதிக்க சாதியினரோடு நாங்களும் சரிசமமா அங்க உக்காந்து விடுவோமாம். அதுக்கு ரெண்டு பேரும் நிக்கிறோம்னு அவங்க சொல்றாங்க” என ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே போனார்.  உத்தப்புரம் மக்களுக்காக போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திக் கொண்டு இருக்கிற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவரும், சி.பி.எம் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான தோழர் சம்பத் சொன்ன விஷயம் அதிர்ச்சியாயிருந்தது. சி.பி.எம் இராஜ்ய சபா எம்.பியான தோழர் டி.கே.ரெங்கராஜன், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மூன்று லட்சம் ருபாயை, உத்தப்புர பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க ஒதுக்கி மதுரை கலெக்டருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நிழற்குடை கட்டினால் அங்கு பதற்றம் உருவாகும் என, நிதியை மறுத்து கலெக்டர் பதில் எழுதியிருக்கிறாராம்.

ஊரின் சாக்கடை தலித் மக்கள் வாழும் பகுதிக்குள்தான் ஓடுகிறது. அதைத் திருப்பிவிட வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற கோரிக்கையும் கவனிக்கப்படுவதாய் இல்லை. ஆதிக்க சமூகம், அரசு இயந்திரம், காவல்துறை என ஒன்று சேர்ந்து உத்தப்புர தலித் மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பது உண்மையாகிறது. சுவரை, சி.பி.எம் அகில இந்தியச் செயலாளர் பிரகாஷ் காரத் 2008 மே 7ம் தேதி பார்க்க உத்தப்புரத்திற்கு வருகிறார் என்றவுடன் அவசர அவசரமாக ஒரேநாளில், 15  அடி மட்டும் உடைத்து பாதையை உருவாக்கித் தந்த தமிழக அரசு, அதற்குப் பிறகு, அந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்கின்றனர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.

 

த்தப்புரத்தின் ஊரின் வடக்குப் பகுதியில் வ.உ.சி நற்பணி மன்றம் இருக்கிறது. தெற்குப் பகுதியில் அம்பேத்கர், இமானுவேல் சேகரன், ஒண்டி வீரன் படங்கள் காணப்படுகின்றன. இரண்டு பகுதிகளுக்கும் நடுவே 600 மீட்டர் நீளத்திற்கு 12 அடி உயரத்திற்கு ஒரு கோட்டை போல அந்தச் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. ”1989க்கு முன்பு வரை நாங்கள் இருவரும் சகஜமாக, சமமாக, நட்புறவோடுதான் இருந்தோம்” என்று சொல்லும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் முருகேசன், “ஜான்பாண்டியன் உத்தப்புரம் வந்து போன பிறகுதான் தலித் இளைஞர்கள் எங்கள் பெண்களை கிண்டல் செய்வதும், வீண் வம்பு செய்வதும் உருவானது” என்கிறார். ஆனால் தெற்குப் பகுதி தலித் மக்களோ “நாங்கள் தெருவில் செருப்பு போட்டு நடக்க முடியாது. அவர்களை ஐயா என்றுதான் சொல்ல வேண்டும். பஸ்ஸில் அவர்கள் நிற்க நாங்கள் உட்கார்ந்திருக்கக் கூடாது” என பல கொடுமைகளைச் சொல்கின்றனர்.

“அடிக்கடி பிரச்சினை வந்தவுடன், ரெண்டு பக்கமும் உக்காந்து பேசித்தான் அந்தச் சுவரைக் கட்டினோம்.” என்கின்றனர் வடக்குப் பகுதி மக்கள். “இல்லை,  ஒரு மண்டபத்துல அவங்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி, எங்களில் ஐந்து பேரை நடுவே உட்காரவைத்து சுவரைக் கட்டிக் கொள்வதற்கு எழுதி வாங்கினர். அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன்.அன்றைக்கு நான் கையெழுத்துப் போடவில்லையென்றால் திரும்பி வந்திருக்க முடியாது” என்கிறார் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பொன்னையா. இந்த கட்டப் பஞ்சாயத்து ஒப்பந்தம் அப்போதிருந்த மதுரை கலெக்டருக்கும் தெரியுமாம். ‘இதற்கு நான் ஒப்புதல் அளிக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் கட்டிக் கொள்ளுங்கள்”  என்று கலெக்டர் சொல்லியிருக்கிறார். இப்படி பல கதைகளோடு உத்தப்புரம் சுவர் பெரிதாய் நிற்கிறது. சுவரின் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் அணில்கள் ஓடி விளையாடிக் கொண்டு இருக்கின்றன.

 

லித் மக்களின் கோரிக்கையை ஏற்று, சுவரை இடித்தவுடன், தாங்கிக் கொள்ள முடியாத வடக்குப் பகுதி மக்கள் தங்களிடமிருந்த 330 ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டு, வீடுகளைப் பூட்டிக் கொண்டு மலைக்குச் சென்றுவிட்ட்னர். எங்கிருந்தெல்லாமோ வேன்களில் வந்து அந்த மக்களுக்கு ஆதரவுகள் தெரிவிக்கப்பட்டன. ஊடகங்கள், மலையில் முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என பெரிது பெரிதாய் செய்திகள் போட்டன. ஊருக்குப் பொதுவாய் இருக்கிற அரச மரத்தையும், முத்தாலம்மன் கோவிலையும் தங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை அவர்களுக்கு கொடுத்து விட்டால் பஸ் நிறுத்தம், நிழற்குடை எல்லாம் பறிபோகும் என்பது தலித் மக்களின் அச்சம்.”முத்தாலம்மன் அவர்களுக்கு மட்டும் சாமியா எங்களுக்கு இல்லையா” என்ற கேள்வியும் நியாயமானது. அரசு இரண்டு பக்கமும் தலையாட்டிக் கொண்டு இருக்க, மீண்டும் 2008ல் கலவரம் உண்டானது. தலித் மக்கள் பகுதிக்குள் காவல்துறை நுழைந்து வீடுகளையும், வீட்டில் உள்ள பொருட்களையும் சிதைத்து போட்டு இருக்கிறது. அவற்றை படம் பிடிக்கச் சென்ற எங்களுக்கு கத்திக் கதற வேண்டும் போலிருந்தது. கொடியன்குளத்தில் நடந்ததாய் கேள்விப்பட்டு இருந்ததை உத்தப்புரத்தில் பார்த்தோம். ஆண்கள் மீது வழக்குகளைப் போட, அவர்கள் தலைமறைவாகி இருந்தனர். பெண்கள் இருந்த வீடுகளில், ஃபேன், டிவி, கட்டில் என சின்னச் சின்ன வசதியான பொருட்களையெல்லாம் உடைத்து நொறுக்கியிருந்தனர். ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலேயே லத்தியால் குத்தப்பட்டதாய் சொல்லி அழுதார்கள். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி மிதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடனடியாக தலையிட்டு, மதுரையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சாட்சிகள், ஆவணங்களை கொடுத்து நீதி விசாரணை நடத்தச் சொன்னது. இப்போது இடைக்கால நிவாரணமாக 10 லட்சத்து 28 ஆயிரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

 

01 நேற்று நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஒரு இளஞரை சுட்டிக் காட்டி, ’இவர்தான் உத்தப்புரச் சுவரை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர்’ எனச் சொன்னார்கள். முப்பத்தைந்து வயது போலிருக்கும் பெயர் சுரேஷ். எல்.ஐ.சி.ஊழியர். அவரிடம் பேட்டி எடுத்தோம். “தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இன்சூரன்சு ஊழியர் சங்கமும் ஒரு அங்கம். மதுரை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் என்னென்ன வடிவங்களில் இருக்கிறது என்பதைக் கள ஆய்வு மூலம் கண்டறிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. நாங்கள் பல தோழர்களுடன் இணைந்து,  47 இடங்களில் ஆய்வு செய்தோம். ஒவ்வொன்றும் ஒரு வடிவமாக இருந்தது. அதில் ஒன்று உத்தப்புரச் சுவர். அங்கு நான் போயிருந்தேன். ஊருக்குள் போய் சிலரிடம் பேசினேன். ஊருக்குள் ஓடும் சாக்கடை, பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை என பல விஷயங்களைச் சொன்னார்கள். பஸ ஏற்றிவிடக் கூட வந்த மகாலிங்கம் என்பவர் இந்த ஊரில் இப்படியொருச் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது என்றார். நான் எதோ சின்னச் சுவராக இருக்கும் என நினைத்தாலும், பார்க்க புறப்பட்டேன். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. நனைந்துகொண்டு சென்று பார்த்தபோது, அப்பா...! நடுங்கியேப் போனேன்.” என முகம் துடிக்கச் சொன்னார்.  ஜூராசிக்பார்க் படத்தில் டயனசரை முதலில் பார்க்கிற போது ஏற்பட்ட அதிர்ச்சி அவர் கண்களில் தெரிந்தது.

அவரிடமிருந்து தகவல்களைப் பெற்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பத்திரிகையாளர்களைக் கூட்டித் தெரிவித்தது. ஹிந்து பத்திரிகை சார்பில் நேரடியாக உத்தப்புரம் சென்று பார்த்தபோது இன்னொரு கொடுமையும் தெரிய வந்தது. அந்தச் சுவரின் சில இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருப்பது!  சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ நன்மாறன் அவர்கள் அந்தப் பத்திரிகை செய்தியினை சட்டசபையில் வாசிக்க, ஆடிப்போயிருக்கிறார். தமிழக முதலமைச்சர்.

 

02 நேற்று ’பெருந்திரள் தர்ணாவில்’ ஒரு முதியவர் நடக்க முடியாமல் ஒரு தடியை ஊன்றி, ஊன்றி கூட்டத்தோடு சென்று கொண்டு இருந்தார். பிரியா கார்த்தி அந்தக் கால்களை படம் பிடித்துக் கொண்டு இருந்தான். தீண்டாமைக் கொடுமையில் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்பட்டு, வலியில் துடித்து, யுகங்களின் ரேகை படிந்த கால்கள் அவை. நம்பிக்கையோடும், போராடும் வேகத்தோடும் முன்னோக்கிச் செல்கின்றன. அந்தக் கால்களுக்கு வணக்கம் சொல்லி விரைவில் உத்தப்புரம் குறித்த ஆவணப்படம் வெளிவர இருக்கிறது.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. உத்தபுரம் சம்பந்தமா அக்காலகட்டத்தில் நான் போட்ட பதிவிலிருந்து எனது ஒரு பின்னூட்டம் இதோ: (பார்க்க: http://dondu.blogspot.com/2008/05/you-have-nothing-to-lose-but-your.html)

  “இது விஷயமா கலைஞர் சட்டசபையில் இம்மாதிரி பேசினதா விடுதலை. காம்-ல் படிச்சேன்:

  "எல்லோரும் சமம்தான். அந்த நிலையில் இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறுதியிட்டு கூறப்பட்ட பிறகு ஆடவர்கள் சில பேர் - உயர் ஜாதிக்காரர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்ற ஆடவர்கள் சில பேர், நாங்கள் இங்கே வசிக்க மாட்டோம். நாங்கள் பக்கத்திலே உள்ள மலைப் பகுதிக்குச் சென்றுவிடுவோம் என்று ரேஷன் கார்டுகளை யெல்லாம் கூட தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டார்கள் என்று செய்தி வந்தது.
  அது அவர்களுடைய கோபத்தினுடைய அடையாளம் என்று நாம் கருதிக் கொள்ள வேண்டுமே அல்லாமல் அவர்கள் உள்ளபடியே ஜாதி வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று கருத முடியாது, எண்ண முடியாது, நினைக்க முடியாது. அவர்கள் மலைப் பகுதியிலே வாழப் போகிறோம் என்று சொல்லி விட்டுப் போனாலும் கூட அந்த வீட்டுப் பெண்மணிகள் யாரும் செல்லவில்லை என்றும் அவர்கள் எல்லாம் அங்கேயே தான் தங்கி இருக்கிறார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எனக்கு சற்று முன்பு கூட செய்தி சொன்னார்.
  பரவாயில்லை, தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள்.பெண்கள் முன்னேற பெரியார் - அண்ணா பட்டபாடுஅந்தக் காலத்திலிருந்து பெரியாரும் அண்ணாவும் மற்றும் பல தலைவர்களும் பட்ட பாட்டின் விளைவாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்.
  ஆண்களும் நிச்சயமாக முன்னேறுவார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு அங்கே அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாதுகாப்புக்கு சுவர் மாத்திரமல்ல, இன்னும் பாதுகாப்பு தேவை என்று உயர்வர்க்கத்தார் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் சொல்வார்களேயானால், நான் அவர்களுக்கு சொல்வேன். இன்னும் சில மாதங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக் கூடிய அளவிற்கு இராணுவம் வேண்டுமானால் அங்கே வர வழைத்துத் தருகிறேன் - மத்திய அரசுக்கு எழுதி வரவழைத்து இராணுவத்தை வேண்டுமானால் அங்கே வைப்போம்".

  இது என்ன வழவழா கொழா பேச்சு? சுவற்றை புறம்போக்கு நிலைத்தையும் வளைத்து போட்டு கட்டியது முதற்குற்றம். அதற்கே எஃப்.ஐ.ஆர். போட்டிருக்க வேண்டும். செய்து வந்தது வன்கொடுமை. அதற்கும் எஃப்.ஐ.ஆரை. காணோம். அவர்கள் பாதுகாப்பு என்று கூறுவதற்கும் ஜால்ரா போடுவது போல அல்லவா கலைஞர் பேச்சு இருக்கிறது. தலித்துகளையும், அவர்களை வன்கொடுமை செய்பவர்களையும் ஒரே தராசில் வைப்பது போல இல்லை? என்ன ஆயிற்று கலைஞருக்கு”?

  இப்போது கேட்கிறேன், இப்படி சப்பைக்கட்டு கட்டும் முதல்வரை வைத்துக் கொண்டு நாம் என்ன நியாயம் எதிர்பார்ப்பது?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 2. கார்,வீடு,ஃபிரிட்ஜ்,எல்.சி.டி டி.வி.,ஸ்கூட்டர்.எதெல்லாம் உண்டோ அதெல்லாம் எல்.ஐ.சி ஊழியனுக்கு இருக்கிறது.இதனைப்பெற்றுத்த ந்ததுஅவன் பெற்ற கல்வி.கல்வியைக்கொடுத்தது இந்த சமூகம்.சமூகம் என்றால் அம்பானி,ஜிண்டால்,பஜாஜ்.பொன்றவர்கள் அலல.அவர்கள் வரியே கொடுக்கமாட்டார்கள்.பின் யார்?நெஞ்சிலே எம்.ஜி.ஆர் பனியனை போட்டுக்கொண்டு பீடி குடிக்கிறானே அவன்பீடிக்கும்,தீப்பெட்டிக்கும் கொடுக்கும்வரி,கொவணத்தைக்கட்டிக்கொண்டு நகக் கண்களில் ரத்தம்வர பூமியைக்கிள்ளி நம் பசியை ஆற்றுகிறானே அவன் அழுக்குத்துணிக்குக்கொடுத்த வரி , இவை தான் நமக்குக் கல்வியாக வந்தவை.நம் பவிசு,நம் வசதி அத்துணையும் அவன் போட்ட பிச்சை.தான்தான் பிச்சை போட்டது என்பது கூட தெரியாத அந்த அப்பாவிக்கு எல்.ஐ.சி ஊழியனே நீ என்ன செய்யப்போகிறாய்? என்று சங்கத்தலைமை அவனை பார்துக்கேட்டது. அதன் விளைவுதான்,சுரேஷ்,ரமேஷ் கண்ணன்,பாலா என்று ஆயிரம் ஆயிரமாக
  எல்.ஐ.சி ஊழியர்கள் வீறுகொண்டு எழுந்துள்ளனர்.மதவ்ஜி,நீங்களும் அதன் அங்கம்தன்.....காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 3. படிக்கப்படிக்க கண்களில் நீர்வராதக்குறைதான்.. எத்தனைக்கொடுமைகள்...

  //இதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்//

  என்னன்னு சொல்றது.... திங்கிற சோத்துலேர்ந்து படுக்குற பாயிவரைக்கும் இந்த மக்களோட கையும் காலும் படாம வந்ததில்ல எதுவும்... என்னைக்கு இந்த மிருகச்சென்மங்கள் உணரப்போகுதோ தெரியல....

  பதிலளிநீக்கு
 4. அந்தக் கால்களுக்கு வணக்கம்

  பதிலளிநீக்கு
 5. //இதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்! //
  ஐயோ.

  சொல்வ‌த‌ற்கு வார்த்தைக‌ள் ஏதும் வ‌ர‌வில்லை. ப‌கிர்வுக்கு மிக்க ந‌ன்றியும் வாழ்த்துக‌ளும்.  ////தீண்டாமைக் கொடுமையில் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்பட்டு, வலியில் துடித்து, யுகங்களின் ரேகை படிந்த கால்கள் அவை. நம்பிக்கையோடும், போராடும் வேகத்தோடும் முன்னோக்கிச் செல்கின்றன. அந்தக் கால்களுக்கு வணக்கம் சொல்லி விரைவில் உத்தப்புரம் குறித்த ஆவணப்படம் வெளிவர இருக்கிறது.// சீக்கிர‌ம்.

  பதிலளிநீக்கு
 6. உத்தப்புரம் பற்றிய ஆவணப்படம் தயாராவது குறித்து எனது மகிழ்ச்சி.
  சுவர் இடிக்கப்பட்ட காலங்களில் வெளியான சு.வெங்கடேசன் மற்றும் ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரைகளின் சாரம் கொஞ்சமும் குறையாமல் ஒரு "NUTSHELL" ஆக இன்றைய தேதி வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பாக இந்தப்பதிவு வந்திருக்கிறது. பாராட்டுக்கள். தொடரட்டும் இது போன்ற பதிவுகள்.
  வாழ்த்துக்களுடன்,
  திலிப் நாராயணன்.

  பதிலளிநீக்கு
 7. All we have to continue/start the struggle towards end,No rest,,...I am expecting your documentary eagerly

  பதிலளிநீக்கு
 8. உத்தபுரம் தீண்டாமைச் சுவர் பற்றிய பிரச்சனையின் ஆணி வேர் வரை அலசியிருக்கிறது பதிவு. அந்தக் கால்களை வணங்குகிறேன். உத்தபுரம் பற்றிய ஆவணப்படம் மிக அவசியமான ஒன்று மாதவ் அண்ணா.

  பதிலளிநீக்கு
 9. இதுக்கு விடிவேயில்லையா?

  பதிலளிநீக்கு
 10. இடிக்க வேண்டிய சுவர் இங்கேயும் வந்துச் சென்றுள்ளது மைனஸ் ஓட்டு வடிவில். :(

  பதிலளிநீக்கு
 11. தாலித்தின் த‌ற்கால‌த் த‌லைவ‌ர்க‌ள் எங்கே?
  காண்ட்ராக்ட் எடுத்து கொள்ளைய‌டிக்க‌வும்
  புறந‌க‌ர்,சிறுந‌க‌ர், போரூர் ம‌ற்றும் கிராம‌ங்க‌ளில்
  க‌ட்ட‌ ப‌ஞ்சாய‌த்து செய்தும், ரெம்ப பிசியா இருக்காங்க‌.
  ஜான் பாண்டிய‌ன் போன்ற‌ த‌ன்நல‌ சுய‌லாப‌ த‌லைமைக‌ள்
  விதைத்த‌ க‌ச‌ப்பு தாலித்துக‌ளின் முன்னேற்ற‌த்தை
  முன்னெடுக்காது, மூர்க்க‌த்தை தீவிர‌மாக்கிய‌து.
  (ப‌டிச்சி,நல்லா உழைச்சி உய‌ர‌னும்ன்னு வ‌ழிகாட்டாம‌ல்
  அவ‌ங்க‌கிட்ட‌ பொண்ணு கேளுங்க‌டா, யாருக்கும் ம‌ரியாதை
  காட்டாதிங்காடாவென‌ த‌ப்பு வ‌ழிகாட்டிய‌து)
  அர‌சிய‌லும், பிர‌ச்ச‌னையின் த‌ன்மையை விசாரித்து
  தீர்வுக்கு வ‌ழி பாராது, ஓட்டுக் க‌ண‌க்கு பார்ப்ப‌து என‌
  சிக்க‌லை மேலும் குழ‌ப்பி மீன் பிடிக்கின்ற‌ன‌ர்.
  ப‌ல‌ த‌லைமுறை ஆதிக்க‌ ம‌னநிலை மாற்ற‌ம்
  அறிவு வ‌ழியில், ச‌க‌ ம‌க்க‌ள், ஓரின‌ம் என்ற‌ ம‌ன‌ரீதியாய்
  புரித‌ல் உண்டாக்காம‌ல் அவ‌ர்க‌ளின்
  பிரித‌ல் தான் ந‌ம‌க்கு லாப‌மென்று
  அர‌சிய‌ல்வாதி காய் ந‌க‌ர்த்துகிறார்க‌ள்.
  பாவ‌ம் உத்த‌ம்புர‌ம் ம‌க்கள்,
  பாவ‌ம் செய்த‌வ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள்.
  மாகா பாவ‌ம் செய்த‌வ‌ர்க‌ள் த‌மிழர்க‌ள்.

  பதிலளிநீக்கு
 12. இரண்டு ஆடுகளை முட்டவிட்டு ரத்தம்
  குடிக்க காத்திருக்கும் நரித்தனம்தான் பிரச்சினை வளர மூலக்காரணம்

  பதிலளிநீக்கு
 13. 600 மீட்டர் நீளத்திற்கு . திருத்தவும்

  பதிலளிநீக்கு
 14. திராவிடம், பெரியார், அண்ணா....இப்படியான 'சொற்களை' இப்போவெல்லாம் தன்னை அறியாமல் கருணாநிதி உளறினால்தான் உண்டு.
  /பெண்கள் முன்னேற பெரியார் - அண்ணா பட்டபாடுஅந்தக் காலத்திலிருந்து பெரியாரும் அண்ணாவும் மற்றும் பல தலைவர்களும் பட்ட பாட்டின் விளைவாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். ஆண்களும் நிச்சயமாக முன்னேறுவார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு.../ கருணாநிதி அப்போ சட்டசபையில் பேசியதா டோண்டு நினைவூட்டுகின்றார். மாதவ், உங்களுக்கு நினைவிருக்கா? மதுரையின் மேயர் ஒரு பெண்மணி (திமுக), உத்தபுரம் மேல்சாதிக்காரர்கள் 'கோபித்துகொண்டு' மலைமேல் வாசம்செய்யப் போனபோது அங்கே அவர்களுக்கு பிரியாணி சாராயம் போன்ற 'நிவாரண' உதவிகள செய்ததில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை தவிர அனைத்து கட்சியினரும் உண்டு - பெண் மேயரின் கணவர் (திமுக) உட்பட. இதுதான் கருணாநிதி தன் கட்சிக்காரர்களுக்கு இதுநாள் வரை ஊட்டி ஊட்டி வளர்த்த பகுத்தறிவு பாடம். திமுகவின் ஆண்கள் எப்படி முன்னேறி இருக்காங்க பாத்தீங்களா? அபாரம்!
  தலித் மக்களின் தலைவன் நான் என்று சொல்லி எளிய அந்த மக்களை பல பொய் வழக்குகளிலும் நீண்ட கால வழக்குகளிலும் சிக்க வைத்து வயிறு வளர்க்கும் தலைவர்கள் ஒரு பக்கம்... தலித்துகளின் சம்பந்தி என்று ஏமாற்றி திரியும் கருணாநிதி மறுபக்கம்... என் முந்தைய பின்னூட்டம் ஒன்றின் பகுதியை இங்கே மீண்டும் பதிய அனுமதியுங்கள். /அரசியல் இயக்கம் நடத்துகின்றேன் என்று சொல்லும் திருமாவளவன் போன்றோர் என்ன செய்கின்றார்கள்? உத்தபுரத்தில் வாழும் இரண்டு வித தமிழர்களில் -தாழ்ந்த சாதி தமிழன், உயர்சாதி தமிழன்- உயர்சாதி தமிழன் சுவர் கட்டி சாதித்திமிரை காட்டுகின்றான். இமயம் வென்றான், கடாரம் கொண்டான் கருணாநிதியின் ஆட்சியில் அதில் வெறும் பதினைந்து அடி சுவரை உடைக்கவே மாதக்கணக்கில் கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது, அசையாது மலை போல் இருந்த கருணாநிதியின் நிர்வாகத்தை அசைக்க பிரகாஷ் காரட் என்ற ஒருவர் உத்தபுரத்துக்கே வரவேண்டியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதருக்குத்தான் திருமாவளவன் சமூகநீதி..சமூகமானம்...அம்பேத்கர் விருது போன்ற மேன்மைமிகு சொற்கள் அடங்கிய பாராட்டுப்பத்திரங்களை வாசித்து தள்ளுகின்றார்/
  ஆனாலும் மாதவ், உங்களுக்கு ரொம்பத்தான்... தமிழர்களின் ஒரர்ர்ர்ரே ஒப்பற்ற தலைவன், பெரியாருக்கு தடி எடுத்து கொடுத்தவர், அறிஞர் அண்ணாவுக்கு பொடி எடுத்துக் கொடுத்தவர் பதினெட்டு ஆண்டு காலம் முதல் அமைச்சராக இருந்து நம்மை எல்லாம் வாழ வைத்தும் இப்போதைய திமுக ஆட்சியின் நான்காவது ஆண்டு நிறைவை கொண்டாடும்போதும்தான் உங்களுக்கு உத்தபுரம் பற்றி ப்ளாக் எழுத தோணுதா? நியாயமா இது?
  /ஊரின் சாக்கடை தலித் மக்கள் வாழும் பகுதிக்குள்தான் ஓடுகிறது/ தமிழ்நாட்டையே சாக்கடையா நாறடிச்சுகிட்டு இருக்கும் கருணாநிதிக்கு இப்போ கண்ணுக்கு தெரிஞ்ச ஒரே தலித் ஆ.ராசா மட்டும்தான். அவரக் காப்பத்தனும்பா மொதல்ல.
  இக்பால்

  பதிலளிநீக்கு
 15. "அந்தச் சுவரின் சில இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருப்பது! சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ நன்மாறன் அவர்கள் அந்தப் பத்திரிகை செய்தியினை சட்டசபையில் வாசிக்க, ஆடிப்போயிருக்கிறார். தமிழக முதலமைச்சர்"

  இன்னுமா நம்பிக்கிட்டு இருக்காங்க..


  ஆடிப்போனது போல நடித்தார், இல்லையென்றால் இன்றும் சுவர் இருக்குமா? மாவட்ட ஆட்சியர்க்கு தினவு இல்லை, பாப்பாபட்டி,கீரிப்பட்டி உள்ளாட்சி தேர்தல் நடத்திகாட்டிய கலக்டரைப் போல் சமூக அக்கறை உள்ளவராயிருந்தால் நடவடிக்கை நியாயமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 16. படிக்கப்படிக்க கண்களில் நீர்வராதக்குறைதான்.. எத்தனைக்கொடுமைகள்...

  பதிலளிநீக்கு
 17. 1989 களிலிருந்து இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினை.இன்னுமா கலைஞர் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்? தீண்டாமை ஒரு பாவச்செயல் என பாட புத்தகங்களில் அச்சிட்டால் மட்டும் போதுமா? அரசு எப்போது நிஜத்தில் அதை நடைமுறைக்கு கொண்டு வரும்? அடித்தவனை அடக்கியாளும் ஆதிக்கசாதிக்கு ஜனநாயகத்தின் சக்தியை கொண்டு - சட்டத்தின் மூலம் பாடம் கற்பிக்கலாமே? ஏன் தயங்குகிறது அரசு? இதுபோலுமே இரட்டை குவளை முறை, ஆண்டான் அடிமை சம்பிரத்தாயங்கள் மாறனும். மாற்றனும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 18. அய்யா, எனது படைப்பு உங்கள் பார்வைக்கு...

  ஈழ தமிழர்களின் பகத் சிங்...
  http://bharathionline.blogspot.com/2010/05/blog-post_17.html

  ச. செந்தமிழ் பாரதி

  பதிலளிநீக்கு
 19. அருமையான பதிவு!!

  வேறு வேலையில் இறங்கிவிட்டீர்களா?

  புதிய பதிவை காணும்!!!

  பதிலளிநீக்கு
 20. ஒருவன் கம்பு கத்தி கடப்பாக்களுடன் தாக்குகிறான் கிழிபட்டு மிதிபட்டு கத்தவும் திராணியின்றி ஒருவன் சரிந்து கிடக்கிறான்.

  ரெண்டு பேரும் ஏம்பா இப்படி அடிச்சுக்கிறீங்க என பசுப்புகிறார் கலைஞர்.

  த்தூ...

  நெஞ்சு நிறைய நம்பிக்கையோடு நடக்கும் பெரியப்பனுக்கு என் வணக்கமும் மாதவராஜ்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!