கனவாக வாழ்ந்தவன்!

“நீங்க ஆறுமுகனேரியில்தானே படித்தீர்கள். நான் உங்கள் நண்பர் அழகுவேலின் மகன் ரஞ்சித்” என்று தன்னை அறிமுகப்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னால் ஒருநாள் எனக்கு அவன் மெயில் அனுப்பியிருந்தான். ஆர்குட் மூலம் அறிந்திருக்க வேண்டும். ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ஆர்குட்டில் அவனது புரோபைலைப் பார்த்தேன். கொஞ்சம் ஒல்லி, மற்றபடி அப்படியே என் பால்ய காலத்து நண்பன் அழகுவேலாய் சிரித்துக்கொண்டு இருந்தான். இளைஞன் ஒருவனின் ரசனைகளும், உணர்வுகளும் அவன் scrapsல், போட்டோக்களில், வீடியோக்களில் ததும்பிக் கிடந்தது.

அழகுவேல் போலில்லை இவன் எனவும் தோன்றியது. அரட்டைகளும், நையாண்டிகளுமாய் இருந்தாலும் அழகுவேல் கொஞ்சம் சீரியஸான பேர்வழி. ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்து வரை என்னோடு கூடவே வந்தான். பிறகு சென்னையில், பெரம்பூரில் அவனது அண்ணனின் கடைக்குச் சென்று விட்டான். கோவில் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வருவான். பூங்கா, ரெயில்வே ஸ்டேஷன் சென்று நான், அவன், ரஞ்சன் சாலமன், அருள் எல்லாம் பேசிக்கொண்டே இருப்போம். டி.எம்.எஸ், சுசிலா பாடல்களில் கரைந்து போய் பாடுவான். சென்னைக்குப் போய் கடிதங்களாய் எழுதுவான். டிகிரி முடித்து, நானும் சென்னை சென்ற பிறகு ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாதவராம் ஹைரோட்டில் உள்ள அவனது கடைக்குச் சென்று விடுவேன். பெரம்பூர் ரெயில்வே ஸ்டேஷன் சென்று பேசிக்கொண்டு இருப்போம். புரசைவாக்கம் சென்று எதாவது தியேட்டரில் படம் பார்ப்போம். சில நாட்களில் மெரீனாவில் கடல் முன்னே அமர்ந்து பரவசமடைவோம். திருமணத்திற்கு முன்பே அம்முவை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறேன்.

வேலை கிடைத்து சாத்தூர் வந்த பிறகு, நான் வேறொரு திசையில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். ஒருதடவை, எங்கள் சங்க அலுவலகத்துக்கு வந்த அழகுவேல், “என்னடா, கவர்ன்மெண்டுக்கு எதிரா பெரிய சதி செய்ற கும்பல் மாரி பேசுறீங்க.” என்றான். சிரித்துக் கொண்டேன். “அந்தப் பால் வடியும் மாது இல்லை நீ” என வருத்தப்பட்டான். அதற்கும் சிரித்துக் கொண்டேன். அவனது திருமணம், எனது திருமணம் என காலங்கள் வேகமாக பயணிக்க, அவனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அரிதாகிப் போனது. அழகுவேலும், அவனது நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த பில்டர்ஸ் நிறுவனம் பிரமாதமாக இருப்பதாகவும், அவனும் நல்ல நிலைமைக்கு உயர்ந்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். நான்கைந்து வருடங்களின் இடைவெளியில்தான் அவனை சென்னையில் சந்திக்க முடியும். ஒருதடவை வீட்டிற்குப் போனபோது அவனது மகனிடமும், மகளிடமும் “இதுதான் மாது மாமா. என் கூட படிச்சாங்க.” என என்னை அறிமுகப்படுத்தினான். செல்போன் வந்த பிறகு எதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பேசுவான்.

எல்லாவற்றையும், ரஞ்சித்தின் மெயில் கிளறிவிட்டிருந்தது. அன்றைக்கு அவனது வீட்டில் பார்த்த சின்னப் பையனா இவன் என ஆச்சரியமாய் இருந்தது. அழகுவேலிடம் ஒருதடவை போனில் பேசும்போது அவனைப்பற்றிக் கேட்டேன். பெயர் ரஞ்சித் என்றும், பெங்களூரில் படித்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னான். “உன் பையன் என்னோட ஃபிரண்ட் தெரியுமா” என்றேன். ஆச்சரியப்பட்டான். சொன்னேன். “ஆர்குட்னா என்ன?” என்றான். சிரித்துக்கொண்டேன். “சுப்பிரமணியபுரம் கதாநாயகியை எனக்குப் பிடிக்கும், அந்தப் பெண் என் அம்மாவைப் போல இருக்கிறாள்” என ஒருமுறை ஆர்குட்டில் அவன் விளையாட்டாய் எழுதியதை அழகுவேலிடம் சொன்னேன். அதைச் சரியாய் உள்வாங்கிக் கொள்ளாமல், அவன் மகனிடம் கேட்டு இருக்கிறான். ரஞ்சித் சாட்டில் வந்து “என்ன அங்கிள், எங்கப்பாக் கிட்ட என்ன சொன்னீங்க” என்றான். எதோ தவறு நடந்திருக்க வேண்டும் எனப் புரிந்துகொண்டு, நடந்ததைச் சொன்னேன். “இவ்வளவுதானா, தேங்க்ஸ் அங்கிள்” என்றான். அழகுவேலை போனில் கூப்பிட்டு, ”முட்டாள்”, ”முட்டாள்” எனத் திட்டினேன். ஹா, ஹாவென சிரித்தான். “என் கூடயும் ஃபிரண்டா இருக்கச் சொல்லுடா” எனறான் பரிதாபமாய். “நான் அவனை ஒருதடவை நேரில் பார்க்க வேண்டும்” என்றேன். “போடா, என்னையே நீ பார்க்குறது இல்ல” என கோபப்பட்டான்.

இப்போது சில மாதங்களாய் ரஞ்சித்தைச் சாட்டில் சந்திக்கவில்லை. ஆர்குட்டில் போயும் பார்க்கவில்லை. கூகிள் பஸ்ஸில் வந்து என் பதிவுகள்  சிலவற்றில், பிடித்திருப்பதாய் அவன் குறிப்பிட்டு இருப்பதை பார்த்தேன். அழகுவேலிடம் இருந்தும் போன் வந்து நாளாயிற்று. இன்று காலை 7 மணி போல இருக்கும். ரஞ்சன் சாலமன் காஞ்சிபுரத்திலிருந்து போன் செய்தான். “மக்கா, அழகுவேலின் பையன் ரஞ்சித் நேத்து நைட் பெங்களூர்ல பைக் ஆக்சிடெண்ட்ல இறந்துவிட்டான்” என்றான். “ஐயோ” என்று கதறிக்கொண்டு எழுந்தேன். “சென்னையில் இன்று சாயந்தரம் அடக்கமாம்” என்று குரல் தழுதழுத்தான். உடலெல்லாம் நடுங்கியது.

கணிணியைத் திறந்து ஆர்குட் சென்று அவனைப் பார்த்தேன். அவன் பேசிக்கொண்டு இருந்தான். சிரித்துக்கொண்டு இருந்தான். நண்பர்களோடு குலாவித் திரிந்தான். அவன் ப்ரோபைலில் “Face ur Fears...Live ur Dreams” என்றிருந்தது. தொண்டை அடைக்க, அழ ஆரம்பித்தேன்.

“கனவாகத்தான் வாழ்ந்து மறைந்தாயோ, என் சின்னஞ்சிறு நண்பனே!”

“வலிமிகுந்த இந்த நனவிலிருந்து எப்படி மீள்வாய், என் அருமை நண்பனே!”

Comments

41 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நெஞ்சை உலுக்குகிறது மாதவராஜ் சார்! என்ன சொல்வது என்றே விளங்கவில்லை காலம் என்னதான் சொல்லக் காத்திருக்கிறது என்று ஒன்றுமே புடிபடவில்லை....உங்களோடு சேர்ந்து வலியினை பகிர்ந்து கொள்கிறேன் சார்!

    ReplyDelete
  2. \\ஹா, ஹாவென சிரித்தான். “என் கூடயும் ஃபிரண்டா இருக்கச் சொல்லுடா” எனறான் பரிதாபமாய்.//
    :(



    என் அஞ்சலிகள்.

    ReplyDelete
  3. மனசு ரொம்ப வலிக்குது...! முகம் தெரியாத அந்த சிறுவனுக்கும் எனது அஞ்சலி.

    ReplyDelete
  4. கண்ணில் நீர் பெருக இந்தப் பின்னூட்டம்

    அந்த சிறு தளிரின் ஜீவன் அமைதியுறட்டும்

    அந்தத் தகப்பன் இக் கொடுந்துயரில் ஆறுதல் அடையும் நண்பர்கள் அருகிருப்பார்களாக

    கலங்க வைத்து விட்டது சார்
    உங்களுக்கும் என் தோள்கள்

    ReplyDelete
  5. கண்ணீரை வரவழைத்த பதிவு...

    படித்த மனசே தாங்கமுடியாமல்
    தவிக்கிறது.
    பெற்றவன் நிலையை எண்ணிப்பார்க்கவே
    முடியவில்லை.

    ReplyDelete
  6. படித்துக் கொண்டிருக்க என்னையும் அறியாமல் அய்யோ வந்துவிட்டது. என்ன சாபம் சார் இது:(

    ReplyDelete
  7. ரஞ்சித்தின் குடும்பத்தார்க்கு எனது அனுதாபங்கள்! மீள முடியா துயரம் இது!

    ReplyDelete
  8. மிகுந்த சோகம் மேலிடுகிறது மாது.அந்தப்பிஞ்சு முகம் மனதை கலங்கடிக்கிறது.எனது அனுதாபங்கள்.

    ReplyDelete
  9. மனசு ரொம்ப வலிக்குது...! அந்த சிறுவனுக்கு எனது அஞ்சலி

    ReplyDelete
  10. "அழகுவேலின் பையன் ரஞ்சித் நேத்து நைட் பெங்களூர்ல பைக் ஆக்சிடெண்ட்ல இறந்துவிட்டான்"

    நண்பர் மனஆறுதல் அடைய பிரார்திக்கிறேன்.

    இன்னும் எத்தணை விபத்துக்களில் பிரியமானவர்களை இழக்க போகிறோம் ?

    இந்தியாவில் சாலையில் பயணம் செய்வது மிக அபாயமான செயலாக பொகிறது.

    இது பற்றி எழுத நினைத்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  11. Very sad. My heartfelt condolences. What a cheerful face on the pic! Sad.

    ReplyDelete
  12. ரொம்பக் கஷ்டமா இருக்கு சார். ரஞ்சித்தின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  13. nadars have some problem.......i lost my brother likethis ...i cry again...

    ReplyDelete
  14. என்ன சாபம் சார் இது
    மனசு ரொம்ப வலிக்குது

    ReplyDelete
  15. மனசு ரொம்ப வலிக்குது...!

    ReplyDelete
  16. மனம் கனத்துப் போனது!

    ReplyDelete
  17. இது போல் நிறையச் சந்தித்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் அந்த வலி புதிதாகவே, கொடியதாகவே இருக்கிறது...

    இழப்பிலிருந்து அந்தக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரட்டும்...

    ReplyDelete
  18. மாதண்ணா,
    கண்ணீரை அடக்க முடியவில்லை.
    அழகுவேல் அண்ணனும், குடும்பத்தினரும் எப்படி தாங்கி கொள்ள போகின்றனரோ...

    ReplyDelete
  19. very sad to hear and read.

    I feel you should paste a opening disclaimer message for this post.

    ReplyDelete
  20. நெஞ்சை உலுக்கும் சோகம் அண்ணா. வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    ReplyDelete
  21. வலிக்கிறது.

    :-(

    ReplyDelete
  22. அன்பு மாதவ்

    நான் மறைக்க விரும்பவில்லை....
    ஓர் இளம் வயதுக்காரனின் வசீகர புகைப்படத்தோடு இந்தப் பதிவு துவங்கும்போதே எனக்குள் பகீரென்ற உணர்வு அடிவயிற்றைக் கவ்வியது.

    ரஞ்சனிடமிருந்து மெதுவாகக் கதை அழகுமுத்து பக்கம் போனபோது வேறு மாதிரி ஒரு வலி காத்திருக்கிறதோ என்று உள்மனது எச்சரித்தது. கடைசியில் முதலின் பயந்தது மாதிரியே, இளம்பிஞ்சின் உதிர்தலில் முடித்து உள்ளங்களைப் பிளந்து தள்ளி விட்டீர்களே மாதவ்..

    ஒரு மின்னல் கீற்றாக உங்கள் இணையதள வீதியில் எட்டிப் பார்த்தவன், விடுபட்டிருந்த பழம் தொடர்பின் இணைப்பிற்கு ஒரு எளிய பாலமாக அமைந்தவன், புன்னகையால் எதையும் உள்வாங்கிக் கொண்டு அடுத்த வேலை பார்க்க முடியும் என்ற ரசாயனத்தை இளம்வயது பருவத்திலேயே பழக்கிக் கொண்டிருந்தவன்....
    இப்படி விபத்தால் பிரிவான் என்று யார் எதிர்பார்த்திருக்கக் கூடும்....

    மகனிடம் நட்புக்கான வாசல்கள் திறக்க ஏங்கியிருந்த உங்களது நண்பர் என்ன ஆகியிருப்பார் என்று நினைக்கவே அதிர்ச்சியாயிருக்கிறது...

    ஆறுதல் சொற்கள் கொட்டிக் கிடக்கின்றன யாருக்கும் அள்ளிக் கொடுக்க
    நமது அளவில் நிராகரித்து உட்கார்ந்து தவிக்க...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  23. இது விபத்துக்களின் காலமாயிருக்கிறது. இப்போது இவ்வாறாக நிறையக் கேள்விப்படுகிறோம். உங்கள் நண்பரை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

    ReplyDelete
  24. உலுக்கியது.,

    நானும் கூட இருக்கிறேன் மாது. வேறு சொல்ல தெரியல. :-(

    ReplyDelete
  25. ரஞ்சித்தின் குடும்பத்தார்க்கு எனது அனுதாபங்கள்!

    ReplyDelete
  26. அன்பின் மாதவராஜ்

    சடாரென நெஞ்சு பதறி விட்டது - ஆரம்பம் முதலே மகிழ்ச்சியாகப் படித்துக் கொண்டே வந்த போதும் - மனதில் ஒரு சிறு இழை ஓடிக்கொண்டே தான் இருந்தது - காரணம் அனுபவம்.

    ரஞ்சித்தின இழப்பினால் தவிக்கும் அழகுவேல் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மாதவராஜ் - இழப்பினைத் தாங்கும் சக்தி உண்டு - அனுதாபங்கள் மாதவராஜ்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  27. Thanks for every one who is sharing their feelings with us...am unable to express anything more....sahodharanaai irundhum orkutil muham padhithu aluhiraen....kaalam seiyhindra kodumai...

    madhav anna - paesuhiraen ungalodu...amaidhiyanavudan, nandri.

    ReplyDelete
  28. மாதவ் ...

    எனக்கொரு நண்பன் இருந்தான் ... சாய் கிருஷ்ணா ... ஆந்திராவிலிருந்து பொறியியற் படிக்க வல்லம் PMU வந்தவன் ... படிப்பிலும் சரி பண்பிலும் சரி அன்பிலும் சரி ... எங்கள் அனைவருக்கும் அவன் முன்னுதாரணம் ... இளையோருக்கான ஆந்திர மாநில கிரிக்கெட் அணியிலும் விளையாண்டிருக்கிறான் ... ஒழுக்கத்தை காலந் தவறாமையை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அவனிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம் ... தஞ்சை மருத்துவக் கல்லூரி வாசல் அருகிலேயே அவன் பைக் விபத்துக்குள்ளாக 18 வயதில் சென்ற ஆண்டு விடை பெற்று போனான் ...

    வகுப்பில் அவன் ஒரு போதும் சக மாணவிகளிடம் பேசியதோ அவர்களை திரும்பிப் பார்த்ததோ கிடையாது .... அவனிறந்த அன்று தோழிகள் அழுதது எந்த அளவுக்கு அவனை அவர்கள் மதித்தார்கள் நேசித்தார்கள் என்பதை காட்டியது ...

    பல்கலை கழகத்தில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தலை கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென்ற விதி புகுத்தப்பட்டு மாணவர்கள் ,பேராசியர்கள் ,துறை தலைவர்கள் ,டீன்கள் என்ற எவ்வித பாகுபடுமற்று ஸ்ட்ரிக்டாக கடை பிடிக்கப் பட்டது ... இரு மாதங்களில் அனைவரும் சாய் கிருஷ்ணாவை மறந்து போனதால் அவ்விதி கொஞ்ச்சம் கொஞ்சமாக காற்றோடு கலந்து மறைந்து போய் தற்போது இன்னொரு சாய் கிருஷ்ணாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ...

    ReplyDelete
  29. ஆரம்பத்தில் ரொம்ப ரசித்துப் படித்தேன் மாதவராஜ். கடைசியில வாயடைத்துப் போயிட்டேன்... I feel very sad about it...

    ReplyDelete
  30. வருத்தமாக உள்ளது. காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்.:-(

    ReplyDelete
  31. // இப்போது சில மாதங்களாய் ரஞ்சித்தைச் சாட்டில் சந்திக்கவில்லை //

    மாதவ் ஜீ, இந்த வரி வரைக்கும், என்னால் 'துயரை' எதிர்பார்த்திருக்கவில்லை.
    கீழுள்ள புகைப்படத்தைக் கண்டதும், தற்போது '---' படத்தில் 'ஹீரோ' வாக நடித்துக்
    கொண்டிருக்கிறான் என்று சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்.
    மிகப் பெரிய ஷாக்.

    துடிப்பான கொடி சுடுநீர் பட்டு துடிதுடித்த நொடி, பட்டுப் போனது மனது ம‌ட்டுமல்ல ...

    ReplyDelete
  32. மாதவ், பிள்ளையை பறிகொடுத்த தகப்பனுக்கும் உங்களை என்னைப் போன்றோருக்கும் என் அனுதாபங்கள். எஸ்.வீ.வீ. சொன்னது போல நாம் எத்தனை சொன்னாலும் அவை உதட்டிலிருந்து உதிரும் சொற்களாய் இருக்க, அழகுவேல் என்ற தகப்பனின், ரஞ்சித்தின் தாயின் இதயம் துடிக்கும் துடிப்பை உதிர்க்கும் கண்ணீரை நம்மால் அளவிட முடியாது, மவுனமாய் தலைகுனிந்து பார்ப்பதை தவிர. வாசிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்கள் வீட்டில், உங்கள் நண்பர்கள் வீட்டில் ரஞ்சித் போல் பிள்ளைகள் இருக்கலாம், 'அப்பா எனக்கு பைக் வேணும்' என்றும் கேட்கலாம். நண்பரே, முடிந்தால் பைக் வாங்கி கொடுக்காமல் இருங்கள், அல்லது முடிந்தவரை தள்ளிப் போடுங்கள். நான் பார்த்தவரை பைக் என்ற எந்திர எமனால் சிறுவயதிலேயே வாழ்க்கை முடிக்கப்பட்ட ரஞ்சித்க்கள் அநேகம். கேவலம் ஒரு எந்திரம் நம் செல்வங்களை கதைமுடிக்க நாமே ஏன் காரணமாக இருக்க வேண்டும்? யோசியுங்களேன்....
    இக்பால்

    ReplyDelete
  33. my heart aches. no words to console you and your friend. I pray the almighty to rest his soul in peace.

    ReplyDelete
  34. தலைப்பை பார்த்தவுடனேயே பயம் வந்தது. சகிக்க முடியவில்லை தோழர். ஓர்குட் ப்ரொபைலை பார்த்து கொண்டிருக்கிறேன். நடந்ததை நம்ப மறுக்கிறது மனம். குடும்பத்தார்க்கு எனது அனுதாபங்கள்.

    ReplyDelete
  35. தோழர் மாதவராஜ்,

    உலகத்திலே மிகப்பெரிய தாங்க முடியாத சோகம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழக்கும்போது உணர்வதுதான் என்று சொல்வார்கள். தன் இரண்டு மகன்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதே இடத்தில் ஒரே மாதிரியான விபத்தில் இழந்து இடிந்துபோன சக ஊழியரின் உயிரற்ற கண்களில் அந்த சோகத்தைப் பார்த்திருக்கிறேன். அடுத்து மனம் பேதலித்துப்போன மனைவியையும் இழந்தார். சென்ற ஆண்டு அவருடைய பெயரை சிறிய மரண விளம்பரத்தில் பார்த்தபோது ஏற்பட்ட வலியை மீண்டும் இப்போது உணர்கிறேன்.
    சில வலிகள் காலப்போக்கில் மங்கித்தான் போகின்றனவேயன்றி மறைவதில்லை. கொடிது கொடிது இளமையில் மரணம் கொடிது.

    விஜயசங்கர்

    ReplyDelete
  36. காலம் தான் ஆற்றவேண்டும் ..ஆனால ஆற்றாது வடுவே வலிக்கும் பயங்கர சோகம் ..
    very sorry .

    ReplyDelete
  37. அன்புள்ள மாதவ், அழகுவேலுக்கு ஆறுதலாக அத்தனை பேரையும் அழ வைத்து விட்டீர்கள். ஆற்றொனாத் துயரம் தான் இது. பயந்து பயந்து தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பைக்
    வாங்கித் தருகிறார்கள். என்ன செயவது விதி(?) பல வழிகளில் துரத்துகிறது, சாலை வழியாகத் தான் பெரும்பாலான நேரங்களில். பாசமாக அவன் புகைப் படத்தைத் தடவியவாறே கண்களில் கண்ணீருடன்... நாகநாதன்.
    .

    ReplyDelete
  38. மனதைக் கலங்கடிக்கும் பதிவு.அஞ்சலிகள்.

    ReplyDelete
  39. DEAR MATHU

    IAM PAUL SUBBIAH. I HAVE READ DEATH NEWS OF ALZHUVEL'S SON FROM UR SITE. ITS VERY SAD &REALLY IAM PARYAING FOR ALZHU'S PEACE.
    PLS CONVEYMY SORROW TO HIM. I DOES NOT KNOW HIS PHONE NO

    PAUL SUBBIAH @SUBBIAH PLILLAI

    ReplyDelete

You can comment here