சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!
சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப் படுத்திவிடக்கூடாது. சமூக இடைவெளி களால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கமாகும். சாதி, வர்க்கம், வட்டாரம் போன்ற வற்றாலான சமூக வேறுபாடுகள், சமூக இடைவெளிகளுக்கு சாதகமான கல்விமுறை, பாடத்திட்டம் கைவிடப்படவேண்டும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது
|
மாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வியின் துவக்கம் இருக்கிறது. நமது கவலையெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாணவர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாயமான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான் சமச்சீர்க்கல்வி என்பதில் எதிர்பார்க்கிறோம்.
| கட்டுரையாளர் |
ஒரேவிதமான பாடத்திட்டம் என்பது மட்டுமே இதற்குப் பயன்படுகிறதா என்பதுதான் நமது அக்கறையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் வெவ்வேறு விதமான கல்வி அமைப்புகளை முற்றிலுமாக மாற்றிவிட முடியும் என நம்ப முடியாது. இன்றுள்ள பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம். அதனால்தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வியாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூலமாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்துவிட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். equitable standard education ஏன் இன்று இல்லை? பாடத்திட்டத்தினால் மட்டும் தானா? சமத்துவமற்ற நிலையிலுள்ள மழ லையர், பொதுக்கல்வியில் நுழைந்து 10வது வரை படித்து வெளிவரும்போது கல்வியிலும், கல்வியினால் பெறும் அறிவு - விழிப்புணர்வு -ஆற்றல்- திறன்- பண்பு ஆகியவற்றிலும் சமநிலையை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். சமூக, சமய, வர்க்க இடைவெளி கள் பொதுக்கல்வியின் மூலமாக 10 அல்லது 12 ஆண்டுகளில் அகற்றப்பட்டிருக்க வேண்டும். நமது அரசின் நோக்கங்கள், திட்டங்கள் - முன்னுரிமைகள் - நிதி ஒதுக்கீடுகள் - அதிகாரிகள் -ஆசிரியர்கள் போன்றோரது அக்கறை, ஈடுபாடு ஆகியவையும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.
சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலையருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம், ஆமாம் சமகவனமல்ல, செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக்கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக்கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.
|
குறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற்குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும். சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது. நலிந்த பிரிவு மாணவர்கள்-மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.
சமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத்திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் (curriculam) என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் (syllabus) பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்திவிட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு (egalitarian social order) எதிரான சதியாகவே ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.
|
வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்? இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்?
கல்வித்திட்டம் என்பது மழலையர் - சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி, விளையாட்டுகள், உடலுழைப்பு, ஒழுக்கக்கல்வி, திறன் வளர்த்தல் போன்ற பல்வேறு கூறுகளை எந்தெந்த அளவில் புகுத்துவது என்பதை அந்தக்கல்வித்திட்டம் தீர்மானிக்க வேண்டும். ஓவியம், இசை, நடனம், கைவினைத்திறன் போன்றவை கல்வித்திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். வெவ்வேறு விதமான கூறுகளுக்கு வெவ்வேறு தகுதிகளைக் கொண்ட பயிற்சி ஆசிரியர்களையும், வட்டாரங்களுக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்: மாணவர் விகிதத்தையும் கல்வித் திட்டம் குறிப்பிடவேண்டும். குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித்திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப்பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை (curriculam for equatable standard education) கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.
கல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு (Theocracy) நடைபெறும் போது மதக்கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன்படுத்துவர், அரசவம்சங்களோ தங்களது வம்சங்களை இந்திரகுலம், சந்திரகுலம், சூரிய குலம், அக்கினி குலம், தேவகுலம் என்றெல்லாம் புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
ஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையையும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன் பட்டன.
அரசாணையும், அரசனது எதேச்சதிகாரத்தையும் புனிதப்படுத்தும் விதுர நீதி, தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம் போன்றவையெல்லாம் இவ்வாறுதான் பாடத்திட்டங்களில் கருவிகளாக்கப்பட்டன. இதே அடிப்படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவியாகத்தான் மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளும், பிற தர்மசாத்திரங்களும் கல்வித்திட்டத்தில் இடம்பெற்றன.
|
இன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதி-வர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.
எனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி (English for empowerment) என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாடமொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.
சமச்சீர் கல்வி என்ற அடிப்படையில் மொழிப்பிரச்சனையை அணுகும்போது ஓர் உண்மையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜப்பான், சீனா போன்றில்லாமல் இந்தியா ஒரு கூட்டாட்சி. அதுவும், பல்வேறு மொழி, பண்பாட்டு இனங்களைக் கொண்ட கூட்டாட்சி. அமெரிக்கக் கூட்டாட்சியிலும், ஆஸ்திரேலியக் கூட்டாட்சியிலும், ஆங்கிலம் மட்டும்தான் ஒரே மொழி. ஜெர்மானியக் குடியரசில் ஜெர்மானிய மொழி மட்டுமே. சோவியத் யூனியன் வாழ்ந்திருந்தபோது வட்டாரமொழிகளுடன் ரஷ்ய மொழியும், சுவிட்சர்லாந்தில் (மிகச்சிறிய ஒரு கூட்டாட்சி) மூன்று ஐரோப்பிய மொழிகள்.
|
இத்தகைய தனித்தன்மை கொண்ட கூட்டாட்சியில் மையக்கல்வி அமைப்பு களை முற்றிலுமாக மாற்றிவிட முடியுமென்றோ, குறைத்துவிட முடியுமென்றோ தோன்றவில்லை. எனவே வட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.
வட்டார மொழிக்கல்வியை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. இப்போதும் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக கட்டாயப் பாடமாக இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்கிறது. ஆனாலும் ஆங்கிலமொழித் திறன் பொதுப்பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இல்லாமல் போவதேன்? திட்டமிடுதலில் குறைபாடுள்ளதா? நடைமுறைப்படுத்துவதில் ஈடுபாடின்மை, அக்கறையின்மை, நாணயமின்மை உள்ளதா? ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, மழலையர் பள்ளியிலிருந்தோ ஆங்கில மொழிப்பாடமோ, ஆங்கிலவழிப் பாடமோ என்பது பொறுப்பற்ற பிதற்றலாகவே படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா? இதே நிலைதான் தாய்மொழி அல்லது வட்டார மொழித்திறன் தொடர்பானவற்றிலும் இருக்கிறது. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக்காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும்.
சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச்சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள(?) மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது. இது பாச உணர்ச்சியுடன், என்னைப்போல என் சகோதர மக்களுக்கும் வாய்ப்பும், வளர்ச்சியும் செழிப்பும் வேண்டும்; எனவும், எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு (mindset) இதில் தேவை. மனிதநேயம் மட்டுமல்ல, மனிதநியாயமும் இதில் நம்மை வழிநடத்த வேண்டும். அந்த உளப்பாங்கும், அணுகுமுறையும்தான் உண்மையான நாட்டுப்பற்றை வெளியிடுவதாகவும், நடைமுறைப்படுத்துவதாகவும் அமையும்.
நன்றி: தீக்கதிர்
மாதவராஜ் பக்கங்கள் 17
பூக்களிலிருந்து புத்தகங்களுக்கு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சுட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டு மெயிலுக்கு வந்திருந்தன. அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முக்கியப் பதிவர்கள் பலரது சுட்டிகள் வரவில்லை.
ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்து படித்து, ஓரளவுக்கு பதிவுகளை அறிந்து வைத்திருந்தேன். வம்சி புக்ஸிலிருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார். சினிமா குறித்து வந்த விமர்சனங்களையும், செய்திகளையும் புத்தகங்களாக்குவதில் சிரமங்கள் இருப்பதாகச் சொன்னார். அரசியல் கட்டுரைகளைத் தவிர்த்து இலக்கிய நயம் கொண்டதாய் இருந்தால் நலம் என்றார். அனுபவங்கள், சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என பிரித்துக் கொள்ளலாம் என்றார். அனுபவங்களும், கவிதைகளும்தாம் அற்புதமாக வலைப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன. சிறுகதைகள் அதிக அளவில் தேறுமா எனத் தெரியவில்லை. பார்ப்போம். இந்த ஒரு வாரமாய் “பூக்களிலிருந்து புத்தகப் பணியும்’ நின்று போயிருக்கிறது. நேரமில்லை.
முன்னைப் போல பிளாக் பக்கம் வர முடியவில்லை. விருப்பமான பதிவர்களின் எழுத்துக்களை கொஞ்சநாளாய் வாசிக்க முடியவில்லை. எழுதவும் முடியவில்ல. இடையிடையே கார்ட்டூன்கள், மீள் பதிவுகள் என பதிவுகள் போட்டு ஒப்பேற்றிப் பார்த்தேன். இந்த ஆக்கத்தில், உங்கள் “பிளாக்கில் malware இருக்கிறது” என்று ஒரு தகவலை கூகிள் குரோமும், நண்பர்களும் நான்கு நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நேரம் வாய்த்தது. சரிசெய்து புதிய templateக்கு மாறினேன். பதிவுகள் எழுதமுடியவில்லை. நேரமில்லை.
ஏன் நேரமில்லை என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் வங்கியில், ஏழுமாத கர்ப்பிணிப் பெண் ஊழியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம், திடுமென டிரான்ஸ்பர். “இது மோசமானது” என்று நாங்கள் சங்கத்திலிருந்து சொன்னோம். அந்தப் பெண் ஊழியரோ, “பரவாயில்ல. நான் போகிறேன். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, குழந்தை பிறந்த பிறகு பிப்ரவரி மாதம் செல்கிறேன்” என்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்குச் சென்ற எங்களிடம் “கர்ப்பமடைவதும், பிள்ளை பெறுவதும் வாழ்வின் ஒரு பகுதி. இதற்கெல்லாமா வங்கி உதவ முடியும்” என்றது.
இன்னொரு பெண் ஊழியர் விருதுநகர் மாவட்டத்தில் பணி புரிகிறார். திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகின்றன. அவரது கணவர் திண்டுக்கல் அருகே பணி புரிகிறார். எங்கள் வங்கியின் வத்தலக்குண்டு கிளைக்கு ஆள் தேவைப்படுகிறது. அந்த இடத்திற்கு நாங்கள் அந்தப் பெண் ஊழியருக்கு டிரான்ஸ்பர் கேட்டோம். அதற்கு நிர்வாகம் சொன்ன பதில் கொடூரமானது! “ஓஹோ...! இரண்டு பேரையும் வங்கிச் செலவில் சேர்த்து வைக்க வேண்டும். அந்தம்மா conceive ஆவாங்க. அதுக்கும் வங்கிச் செலவில் maternity leave கொடுக்க வேண்டுமோ” என்று சொன்னது. கடுமையாக கண்டித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.
எங்கள் நிர்வாகத்தின் கோர முகத்தை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு இருக்க முடியும்.
ஏற்கனவே எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிந்து கொண்டு இருக்கிற தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, அதில் தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் இருவரும் மீண்டும் பணியலமர்த்தப்பட்ட விபரங்களை இங்கே பதிவிட்டு தெரியப்படுத்தி இருந்தேன். நிர்வாகம் மெல்ல மெல்ல தற்காலிக ஊழியர்களை கிளைகளிலிருந்து வெளியே அனுப்பத் தொடங்கியது. லேபர் கமிஷனர் முன்பு தாவா ஏற்படுத்தி, அதை உயர்நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி, தொழில்தாவா முடியும் வரை தற்காலிக பணியாளர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என முறையிட்டோம். எங்கள் வேண்டுதலில் உள்ள நியாயத்தை ஏற்று Status quo நிலைநிறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் நிர்வாகத்தின் வன்மம் மிகுந்த தாக்குதல்கள் இப்படி அரங்கேறுகின்றன.
வங்கி நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர் இங்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் தொடர்ந்து மரியாதையில்லாமல் பேசுவது நீடிக்கிறது. பெண் ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன. நட்பு ரீதியான மனோபாவம் கொஞ்சமும் இல்லாமல், அனைவர் மீதும் வெறுப்பை மட்டுமே காட்டுகிற மனிதர்கள் உயர் பொறுப்புக்கு வந்தால் இப்படியெல்லாம் ஆகும் போலும்.
வங்கியில் இதரக் கடன்கள் எதையும் ஊக்குவிக்காமல், ஏறத்தாழ எங்கள் வங்கியை ’நகைக்கடன் வங்கியாக’ மாற்றி விட்டது. வங்கியின் நலன் மற்றும் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு விமர்சனம் செய்கிற சங்கத்தின் மீது பாய்கிறது.
இப்போது பொருளாதாரச் சலுகைகள் எதையும் கோரிக்கை வைக்காமல், வங்கியைக் காப்பாற்றவும், ஊழியர்கள் சுயமரியாதையை நிலைநிறுத்தவும் போராடத் துவங்கியுள்ளோம். பழிவாங்கும் மாறுதல்கள் போடப்படுகின்றன. ’போஸ்டர் ஒட்டினோம்’ என்றெல்லாம் கூட சங்கத் தலைவர்கள் மீது சார்ஜ் ஷீட்கள் வினியோகிக்கப்படுகின்றன. சஸ்பன்ஷன், டிஸ்மிஸ் என அடக்குமுறையின் குரல்கள் ஒலிக்கின்றன. வரட்டும்.
இருள் நிறைந்த காலத்தில்
பாடல் எதைப் பற்றியதாக இருக்கும்?
“இருட்டைப் பற்றி இருக்கும்”
என்றொரு கவிதைதான் எங்கள் நிலையைச் சரியாய்ச் சொல்லும் என நினைக்கிறேன். சிந்தனைகள், செயல்கள் எல்லாம் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தே இருக்கின்றன. கோரிக்கைகள், கூட்டங்கள், பிரயாணங்கள், பிரச்சாரங்கள் என நாட்கள் சென்று கொண்டு இருக்கின்றன. ’சுற்றி வெளியே நடக்கும் கொடுமைகளின் முன்னால் உங்களின் இந்தப் பிரச்சினையெல்லாம் ஒரு பெரிய விஷயமா’ என்று கேட்கும் குரல்களில் நியாயம் இருக்கலாம். என்ன செய்ய? இந்த சங்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. கூடாது.
எனவே-
சிறிது காலத்துக்கு இங்கு அவ்வப்போதுதான் வரமுடியும். சின்னச் சின்ன இடைவெளிகள். அவ்வளவே. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
*
அவர்களை எடுத்துக் கொண்ட இருட்டு!
அந்த பேருந்து நிலையத்தில் பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும் வாகனங்களின் இரைச்சல்களும் அடங்கிப் போயிருந்தன. நியான் வெளிச்சம் பனியைப் போல கவிந்திருந்தது. டிரைவரால் பஸ் இயக்கப்பட்டவுடன் அவன் முன்புறமாக ஏறி மூன்றாவது வரிசையில் அமர்ந்தான். அவள் பின்புறமாக ஏறி அந்த பஸ்ஸில் ஒரே பெண்ணாக ஏழாவது வரிசையில் அமர்ந்தாள். மொத்தமே பதினோரு பேர்தான். ஆளுக்கொரு வரிசையில் வசதியாய் அமர்ந்திருந்தனர்.
"திருச்செந்தூர் யாரும் இருக்கீங்களா" கேட்டுவந்த கண்டக்டரிடம் "முன்னால அவர் எடுப்பாரு" என்று மெல்ல அவள் சொன்னாள்.
"யாரும்மா" என்று அவர் சத்தமாய் கேட்க மூன்றாம் வரிசையிலிருந்த அவனை கைகாட்டினாள் அவள். திரும்பிய அவனைப் பார்த்து கண்டக்டர் லேசாய் சிரித்தார்.
அவன் சட்டென முகம் திருப்பிக் கொண்டான். இடைப்பட்டவர்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு கண்டக்டர் இப்போது அவன் அருகே வந்தார். "ஒரு திருச்செந்தூர்" என்றான்.
அவனை ஒருமாதிரியாய் பார்த்து விட்டு திரும்பி அவளையும் பார்த்து விட்டு "அந்தப் பொண்ணு நீங்க டிக்கெட் எடுப்பீங்கன்னு சொல்லிச்சே" என்றார். "எனக்குத் தெரியாது" என்றான் அவன்.
கண்டக்டர் வேகமாய் அவளிடம் போய் "என்னம்மா, அந்த ஆள் ஒனக்கு டிக்கெட் எடுக்க மாட்டேங்குறாரு" கத்தினார்.
அவள் வேகமாய் எழுந்து அவன் அருகேப் போய் "எதுக்குய்யா என்னை கூப்பிட்டே..?" கத்தினாள்.
அவன் திரும்பியேப் பார்க்கவில்லை. பஸ்ஸிற்கு வெளியில் பார்வையை புதைத்துக் கொண்டான்.
"நீயெல்லாம் ஒரு ஆம்பிள...த்தூ"
அவன் திரும்பவேயில்லை.
"சரிம்மா..நீயாவது காசு கொடு...டிக்கெட் எடுக்கணும்ல.."
"நா என்ன திருச்செந்தூருக்கு சாமி கும்பிடயா போறேன்?"
கண்டக்டர் விசில் ஊத பஸ் நின்றது. இறங்கிய அவளை இருட்டு எடுத்துக் கொண்டது.
ஓடிய பஸ்ஸிற்குள் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டன. இருட்டு அவனையும் எடுத்துக் கொண்டது.
(திருத்தம் செய்யப்பட்ட மீள் பதிவு இது)
காற்றில் எழுதிய கண்ணீர்ப் பாடல்கள்
“எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
சோறு கேட்டா சோத்தால அடிப்பா
கொழம்பு கேட்டா கொண்டைய அறுப்பா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா”
சின்ன வயசில் இந்தப் பாடலை எங்கள் பள்ளியின் காவல்கார தாத்தா பாடுவார். சுற்றி உட்கார்ந்து கேட்டு கேட்டு மக்கள் சிரிப்பார்கள்.
பெண்கள் பக்கமிருந்து இது போல ஆயிரம் பாடல்களை பின்னாட்களில் அறிய முடிந்தது. ஆனால் சிரிக்க முடியவில்லை.
டாக்டர் முத்துசிதம்பரம் அவர்கள் தொகுத்த பாடல்களில் இருந்து சில கண்ணீர் முத்துக்களை சினேகா என்பவர் தொகுத்து இருந்தார். அதிலிருந்து சிலவற்றை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். சபிக்கப்பட்ட காலம் உங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவி அழுவதை கேட்க முடியும். நாட்டுப்புறப் பெண்களின் இந்தக் குரல்களை வழிவழியாய் காற்று சுமந்து கொண்டு இருக்கிறது. குடும்ப வன்முறையின் கோரக் காட்சிகள் இவை.
*
“மாமன் மகளிருக்க
மாலையிடும் சாமியிருக்க
பேசும் கிளி நானிருக்க
பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு
பெருங்கஷ்டத்துக்கு ஆளாச்சே”
*
“நாடெல்லாம் சுத்திவந்து
நல்லபிள்ளையில்லை என்று
கொணங்கெட்ட மாப்பிள்ளைக்குக்
கொண்டி கொடுத்தார் - எங்களண்ண
கொண்டி கொடுத்தார்”
*
“சோளச்சோறு தின்னமாட்டேன்
சொன்னபடி கேக்கமாட்டேன்
நரைச்ச கிழவன்கிட்ட நானிருந்து
வாழமாட்டேன்”
*
“கள்ளுலே பூச்சி கெடந்தா
கலக்கிக்கலக்கிக் குடிக்கிறாண்டி
சோத்திலே கல்கெடந்தா சொந்தப்
பொண்டாட்டிய அடிக்கிறாண்டி”
*
“கான மிளகு வச்சுக்
கறிக்கு மசால் கூட்டிவச்சுக்
கொழம்பு ஒறைக்குதுண்ணு
என்னைக் கதவடைச்சுக் கொல்லுதாரே
அறியாத ஊரிலேயேத்
தெரியாத வாக்கப்பட்டேன்
அடியாதிங்க புடியாதிங்க - நான்
விடியாம ஓடிப்போறேன்”
*
“அரிசி படியளந்து என்னை
அழைச்சி வந்த
மாமியத்த ஒன்ன ஒரு
அரணபுடுங்குமோ
நீபெத்த புள்ளகிட்ட நான்
அச்சமத்து வாழுவனோ”
*
செல்போன் கார்ட்டூன்கள்!
indian ink என்னும் வலைத்தளத்தில் ;’சைபர் ஹ்யூமர்’ என்னும் தலைப்பில் வைத்த போட்டிக்கு வந்து பரிசு பெற்ற கார்ட்டூன்களில் சில இவை. நகைச்சுவை மட்டுமில்லாமல், நாம் இழந்து நிற்கும் சிலவற்றையும் இந்தப் படங்கள் சொல்கின்றன. உங்களுக்கு எது மிகவும் பிடித்த கார்ட்டூன் என்று சொல்லுங்களேன்.
(1)
(2)
(3)
(4)
(5)
கை கொடுங்கள் சச்சின்!
முன்னர் ஒருமுறையும் சச்சின் ஒரு கருத்து தெரிவித்தார். வெறுக்கவே முடியாத அந்த விளையாட்டு வீரர் மீது அப்போது வருத்தம் கூட வந்தது.
அப்போது மத்தியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தது. வாஜ்பாயின் மூட்டு வலிக்கும், அத்வானியின் வயிற்றுவலிக்கும் கூட பாகிஸ்தான் காரணம் என்னும் அளவுக்கு இந்துத்துவா பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு கிரிகெட் தொடரில் பாகிஸ்தானை வென்றதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தோஷம் தான். கொண்டாடப்பட வேண்டியதுதான். நம் வீரர்களூகு அது மிகப் பெரிய ஊக்கமாகவும், ஆதரவாகவும் இருக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் மற்ற வெற்றிகளுக்கும், பாகிஸ்தானிடம் அடைந்த வெற்றிக்கும் வித்தியாசம் ஏற்படுத்துவதுதான் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. அதற்காக விசேஷ சலுகைகள் ஒரு அரசு அளிக்கிறது என்றால் அந்த அரசுக்கு கிரிக்கெட்டைத் தாண்டி வேறொரு நோக்கமிருக்கிறது என்பதை புரிந்தாக வேண்டி இருந்தது.
தொடரின் நான்காவது விளையாட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போது 'பாகிஸ்தானைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது சந்தோஷமளிக்கிறது' என்று சச்சின் சொன்னார். எந்த அணியை வென்றாலும் அவருக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் என்ற அழுத்தம் ஏன் என்று கேள்வி எழுந்தது. அது அவரின் உண்மையான சந்தோஷமா? யாரையாவது திருப்திப் படுத்த அவர் அடைந்த சந்தோஷமா? அல்லது அவரும் சூழலின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, அடைந்த சந்தோஷமா? எப்படியிருந்தாலும் தவறு என்றே பட்டது. அந்த வார்த்தைகள் வாய் தவறி வந்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொள்ளவே தோன்றியது. எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், சுற்றிலும் வியூகம் அமைக்கப்பட்டிருக்கிற வேளையிலும் விவேகமாய் விளையாடக்கூடிய சச்சின் டெண்டுல்கர் கூட, தன்னை ஒரு கணம் இழந்து விட்டாரோ என்று அடி மனதில் ஒரு சங்கடம் ஏற்பட்டது.
இன்று அதே சச்சினை நினைத்தால் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. விளையாட்டில் நான் நேசிக்கும் ஒரு வீரர், வாழ்க்கையிலும் நான் நேசிக்கிற மனிதராகி இருக்கிறார். அதிகாரமும், ஆணவமும், குறுகிய நலனும், பாசிச முகமும் கொண்ட இயக்கங்களுக்கு எதிராக, தைரியமாகவும், அமைதியாகவும், “மும்பை மாநகரம் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது” என்று கூறி இருக்கிறார். பீகாரிகளை மும்பையை விட்டு விரட்டி விரட்டி அடித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பிடிக்காது. இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தததற்காக “ஆஷ்மியின் தந்தூரியை செய்து கொண்டு வாருங்கள்” என்று சொன்ன அங்கிளுக்கும், ஆஷ்மியை அடித்த மருமானுக்கும் இந்த வார்த்தைகள் தாங்க முடியாதவை. பாரத ஸ்டேட் வங்கியில், மராட்டியர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு போய்விட்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் கொதிப்பை ஏற்படுத்துபவை. தான் செய்வது இன்னதென்று அறிந்தே, இந்தக் காரியத்தை செய்திருப்பதால்தான் சச்சினை மிகவும் பிடிக்கிறது.
சமூகம் மதிக்கிற முக்கியமான மனிதர்கள் இதுபோன்ற தருணத்தில் உண்மையை பேசாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பது, பெரும் கேடுகளுக்கு வழி வகுத்து விடுகிறது. இளைஞர்களின் முன்னுதாரணமாய் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி உண்டு. அவை சுயநலன்களைத் தாண்டி, சமூகப் பொறுப்போடு வெளிப்படும்போது ஆரோக்கியமானதாகின்றன.
கலைஞர்களும், விளயாட்டு வீரர்களும் தத்தம் பிரதேசங்களின் தூதுவர்கள். அவர்களது ராஜ்ஜியம் எல்லையற்றது. தங்கள் திறமையின் மூலம் தங்கள் மண்ணை, அங்கு வாழும் மக்களை உலகமே நேசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் அவரது விளையாட்டுக்கு பெருமை. அவருக்கும் பெருமை.
தாங்க முடியாமல் சச்சினைப் பார்த்து “விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அரசியல் வேண்டாம் உங்களுக்கு” என்கிறார் மூத்த தாக்கரே. மைதானத்தைத் தாண்டியும் உலகம் விரிந்து இருக்கிறது. சச்சினிடமிருந்து பந்துகள் இப்படி எல்லைக்கோட்டைத் தாண்டுவது பார்ப்பதற்கே நல்லாயிருக்கிறது. கைகொடுங்கள் சச்சின்!
பின் தொடரும் செம்மறியாட்டின் குரல்
ஒரு கதை நம்மை என்னவெல்லாம் செய்கிறது!
மலையாளத்தில் இந்தக் கதையை எழுதியவர் மாதவிக்குட்டி. அக்டோபர் 2008 மாத ‘ஒரு இனிய உதயம்’ இதழில் வந்திருந்தது. தற்செயலாக ஒரு நண்பரின் வீட்டில் பார்த்தேன். எடுத்துக்கொண்டு வந்திருந்தேன்.மழை பெய்துகொண்டு இருந்த, இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் படித்தேன். சின்னஞ்சிறு கதை! இன்னமும் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று திருநெல்வேலி, கூட்டம், உரைகள், மனிதர்கள், இன்று தென்காசி, ஒரு துஷ்டி, புல்விரிந்த வெளியில் புளிய மரத்தடியில் உட்கார்ந்து தலைமுடி வழிக்கப்பட்ட அத்தானை பார்த்துக் கொண்டு இருந்த கணங்கள் எல்லாவற்றுக்கும் ஊடே ஈரம் பாவிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும்போது, மேகங்கள் விலகியிருந்த வானத்தின் கீழே தொலைதூரத்தில் செம்மறியாடுகள் ஈரத் தரையை நக்கிக்கொண்டு இருந்தன.
செம்மறியாட்டின் குரல் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது...
*
செம்மறியாடு
அவளுடைய நாற்பத்து மூன்றாவது வயதில் எப்போதும் தமாஷ் பண்ணும் மூத்த மகன் சொன்னான்.
“அம்மா, உங்களைப் பாக்குறப்போ ஒரு செம்மறியாடுதான் ஞாபகத்துக்கு வருது”
அவள் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். அன்று அவர்கள் எல்லோரும் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே போன பிறகு அவள் கண்ணாடியை எடுத்து கவலையுடன் தன்னுடைய முகத்தை ஆராய்ந்தாள். தன்னுடைய ஒட்டிப்போன கன்னங்களை மீண்டும் சதைப்பிடிப்பானவையாக ஆக்க வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. இளமையும், செழுமையான சரீரமும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய்விரித்துப் படுத்துத் தூங்க மாட்டாள். ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருக்க இப்போது அவளுக்கு மனம் வரவில்லை. சமையலறையில் பால் கொதிக்க ஆரம்பித்தது.
காலை முதல் நள்ளிரவு நேரம் வரை ஓய்வே இல்லாமல் வேலை செய்து, அவள் தன்னுடைய குடும்பத்தை வளர்த்துகொண்டு வந்திருந்தாள். மெலிந்து போய், வெளுத்து இங்குமங்குமாக சில வளைவுகள் விழுந்திருக்கின்றன. எந்த சமயத்திலும் அவள் தளர்ந்து போனதோ, புலம்பியதோ இல்லை. நீர் நிறைக்கப்பட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு குளியலறையிலிருந்து சமையலறைக்கும், சமையலறையிலிருந்து குளியலறைக்கும் நடக்கும்போது அவளுடைய கணவரும், வயதுக்கு வந்த பெரிய பிள்ளைகளும் உதவ முன்வரமாட்டார்கள்.
அவள் படிப்பும், நவநாகரீக விஷயங்களும் இல்லாதவளாக இருந்தாள். வீட்டைப் பெருக்கித் துடைத்து சுத்தம் செய்வதிலும், சமையல் செய்வதிலும், துணிகளை துவைப்பதிலும் அவளுடைய திறமைகளைப் பற்றி அவர்கள் அவ்வப்போது புகழ்வது உண்டு. அப்போது தனது தேய்ந்து போன பற்களைக் காட்டி அவள் புன்னகைப்பாள்.
இளைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று சமையலறையின் இருட்டில் நின்றுகொண்டு அவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
காலப் போக்கில் அவனுடைய கண்களிலும் அவள் செம்மறியாடாக தெரிய ஆரம்பித்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் நடக்கும் நாடகம் பார்க்கத் தானும் அவனுடன் வருவதாக அவள் கூறியபோது. “வேண்டாம் எனக்கு குறைச்சலா இருக்கும்” என மறுத்து விட்டான். “நான் என் கல்யாணப் புடவையைக் கட்டி வருகிறேன்” என்றாள். அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.
மெலிந்து போன அவளது கால்கள், இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருந்தன.ஒருநாள் அந்த இயந்திரத்திற்கும் கேடு வந்தது. காய்ச்சலில் ஆரம்பித்தது. வயிற்றில் வலி விடாமல் இருந்தது. இஞ்சி நீரும், மிளகு ரசமும் உதவவில்லை.
பத்தாவது நாளில் பரிசோதித்த டாக்டர், “இவர்களை உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும். மஞ்சக் காமாலை முற்றிய நிலையில் இருக்கிறது” என்றார்.
பிள்ளைகள் அதிர்ச்சியடைந்தனர். அவளைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு கட்டிலில் படுக்கவைத்து ஒரு வேலைக்காரன் மருத்துவமனையில் தள்ளிக்கொண்டு சென்ற போது, கண்களை விழித்துக்கொண்டு அவள் சொன்னாள்:
“அய்யோ! பருப்பு கரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்”
அவளுடைய கணவரின் கண்கள் கலங்கின.
*
நெஞ்சடைத்துப் போயிருக்கும் உங்களையும் இனி செம்மறியாட்டின் அந்த குரல் விடாது….
அன்பு கொண்டாடும் உலகம் வேண்டும்
அல்லல் படும் ஒரு மனிதரின் எதிரே ஒரு மாய தேவதை தோன்றி, நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால் அந்த மனிதர் என்னை மீண்டும் ஒரு குழந்தையாக்கி விடு என்று கேட்கக் கூடும். குழந்தையாக இருப்பதைவிட இன்பமான வரம் வேறு என்ன இருக்க முடியும் ! கவியரசு கண்ணதாசன் ஒருமுறை உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகில் இருக்க நேர்ந்தபோது, "அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும், ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்" என்று எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. என்னென்ன பிரச்சனைகளை அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சந்திக்குமோ, இப்போதைக்கு இனிமையாகத் தூங்கட்டும் என்பது அதன் சாரம். ஆனால், குழந்தையாகவே இருக்கும்போதும் இன்பமாக இருக்க விடுகிறோமோ என்பதை இந்தக் குழந்தைகள் தினத்திலாவது அசைபோடுவது நல்லது.
அன்பு கொண்டாடி ஆரத் தழுவி முத்தமிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்கப்படும் மரியாதை ஒரு குழந்தைக்கு, அதன் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களில் எவ்வாறெல்லாமோ தேய்ந்து எதிர்திசைக்குப் பயணம் செய்வதை நமது அன்றாடக் காட்சிகள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
குழந்தை பிறக்கிற சூழலில் அன்பு நிலையமாக நாம் அடையாளப் படுத்தும் வீட்டுக்குள், படிப்படியாக கண்ணுக்குப் புலனாகாத துறைகளின் அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. காவல்துறை, உளவு இலாக்கா, நீதிமன்றம் எல்லாம் நிறுவப்படுகின்றன. இவற்றின் துணை நிறுவனங்கள், நடமாடும் 'ஸ்பாட் ஃபைன்' ஏற்பாடு போன்றவை தனி. கள்ளம், கபடம் இல்லாது பிறக்கும் செல்வங்களுக்கு அன்னத்தோடு சேர்த்து, 'சூட்சுமமாக நடந்து கொள்வது எப்படி, நயமாக அடுத்தவர்களிடம் விஷயத்தைத் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வது எப்படி, சமயத்திற்கு ஏற்றாற்போல் காட்டிக் கொள்வது எப்படி, இன்னாரிடம் இப்படியும், அடுத்தவர்களிடம் அப்படியுமாய் பழகுவது எப்படி.....' என்று வாழ்வியல் - மன்னிக்கவும், பிழைப்பியல் கல்வி புகட்டப்படுகிறது. ஆனால், அப்பாவிக் குழந்தை எக்குத் தப்பாக இடம் மாற்றி ஏதாவது எசகு பிசகாகச் சொல்லிச் சிக்கிக் கொண்டுவிட்டால் தொலைந்தது, நடக்கிற நீதி போதனைகளைக் கேட்டால் குழந்தைக்குத் தலைசுற்றிக் கொண்டுவந்து விடும்.
இயற்கையை நேசிப்பது, வாழ்க்கையை இயல்பாக அணுகுவது, கேள்விகள் கேட்பது, அனுபவங்களைத் தாமாகப் பெறுவது, எதிர்ப்புணர்ச்சியோடு போராடுவது போன்றவை கொட்டிக் கிடக்கும் திறந்தவெளியில் குழந்தையைச் சுதந்திரமாக நடக்க விட்டால் குழந்தைகள் மட்டுமல்ல, சமூகமும் சேர்ந்தல்லவா வளரும் ! அதுதான் இங்கு மறுக்கப்படுவது. அது மட்டுமல்ல, பெரியவர்கள், குழந்தைகள் என்ற கோட்டை இஷ்டப்படிக்கு மாற்றி மாற்றிக் கிழித்து எப்படி நடந்தாலும் குழந்தைகள் அந்தக் கோட்டைக் கடந்த குற்றத்திற்கு ஆளாகுமாறு அமைக்கின்றன நமது நடவடிக்கைகள். இதெல்லாம் நீ தலையிடாதே, பெரியவங்க விஷயம் என்று சொன்ன அடுத்த நொடியில் வேறு ஒரு பிரச்சனையில், குழந்தையா நீ, இதெல்லாம் நீயா புரிந்து கொள்ள வேண்டாம் என்று வார்த்தைகள் வந்து விழுகின்றன.
உணவின் சுவையை குழந்தையாக உணர்ந்து ருசித்துச் சுவைத்துச் சாப்பிட விடாமல், ஊட்டி விடுவது. அந்த வேலையின் போக்கில் குழந்தை ஏதாவது ரகளை செய்தால், இந்த வயதில் உனக்கு என்ன ஊட்டி விடுவது ஊட்டி....என்று பாய்வது. இது உணவு என்றில்லை, எல்லாவற்றிலும் சுட்டிக் காட்ட முடியும். குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் முட்டி மோதி அறிந்து தெளிந்து முன்னேறுவதற்கான உதவியை மட்டும் செய்ய வேண்டியவர்கள், அந்த ஏற்பாட்டில் தேவையற்ற குறுக்கீடுகளை, அதுவும் வன்முறை கிளர்ந்த குறுக்கீடுகளைச் செய்வதும், தாங்களும் அலுத்துக் கொண்டு, குழந்தையையும் நோகடிப்பதையும் வேறு என்ன சொல்வது ?
தங்கள் கனவைக் குழந்தைகள் மீது சுமத்தி பளுவை ஏற்றிவிடுவது குழந்தைகளின் பள்ளிப் பருவத்தைப் பதட்டம் நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. அதன் வெடிப்புகள் அதிர்ச்சியான விளைவுகளைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. மதிப்பெண்களின் துரத்தல்கள் கல்வி கற்றலின் இனிமையைச் சாகடித்து, அச்சமூட்டுகிற ஒரு திகில் பயணமாக மாற்றப்படுகிறது. அதைக் கடந்துவருகிற வேட்கையோ, துணிவோ வளர்த்துக் கொள்ளாத குழந்தைகள் என்னென்ன செய்யத் தலைப்படுகின்றனர் என்கிற துயரமும், அவலமுமான செய்திகளை தினமும் நாளேடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாமும் அடுத்தவரோடு ஒப்பிடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறோம் என்பதை உணரவேண்டும். ஒப்பீடு முன்னேற்றத்திற்கான படிக்கட்டு அல்ல. குழந்தையின் சுயத்தை அழிக்கும் உருட்டுக்கட்டை அது.
குழந்தைகளின் கருத்தை மதிக்காமல் இருந்து கொண்டு, அவர்களை 'வீட்டுப் பொறுப்பு' அறிந்தவர்களாக வளர்க்க முடியாது. இந்த முரண்பாடு தான் தவிர்க்கக் கூடிய மோதல்களைக் குடும்பத்தில் உருவாக்குகிறது. சின்னஞ்சிறு பிஞ்சுகள் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்கிற செய்திகளை மேதாவித்தனத்தோடு கேட்டு நகர்ந்துவிடக் கூடாது. அவர்களது கவனிப்புத் திறன், பேச்சுமொழி, கண் ஜாடைகள்....எல்லா ஜாலங்களையும் ரசித்து ஊக்குவிப்பது வளர்ந்த பிறகும் மதிக்கப்படவேண்டும். 'பிறர்முன்னே மறந்தும் உரையாட மாட்டேன்' என்று யசோதை கண்ணனுக்கு உறுதிமொழி கொடுப்பதாக ஆழ்வார் பாடியிருப்பது (நாலாயிர திவ்விய பிரபந்தம்) கவனிக்கத் தக்கது. அடுத்தவர்முன் குழந்தையை மட்டமாகப் பேசக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்தவர்களை குழந்தைமுன் மட்டமாகப் பேசுவதும் பிறகு சிக்கல் ஏற்படுத்தக் கூடியது.
குழந்தைகளைப் போல் மறப்போம், மன்னிப்போம் பண்பு பெரியவர்களிடம் இலேசில் வந்துவிடாது. அதை அங்கீகரிக்கும் மனசு வேண்டும் நமக்கு. வீட்டின் விதிமுறைகளைப் பெரியவர்கள் மீறுவதைக் குழந்தைகள் சுவாரசியமாகக் கவனித்துக் குறும்பாக அம்பலப்படுத்தவும் செய்யும்போது, மனமுவந்து நமது பிழைகளை ஒப்புக் கொள்வது அவர்களது குணாம்சத்தையும் வளப்படுத்தும். அதைவிட்டு, நியாயப்படுத்தி இரைந்து பொரிந்து தள்ளி அவர்களை வாயடைத்துவிடுவது தவறான முன்னுதாரணங்களைத் தான் அவர்கள் மூளையில் பதியவைக்கும். பின்னர் அதன் தாக்கத்தில் அவர்கள் செயல்படும்போது தாங்க முடியாத சங்கடம்தான் மிஞ்சும்.
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்போது, அன்றைக்கு மட்டுமான பரிசளிப்பாகத் தேர்ந்தெடுத்தால், இனிப்பு ஒரு நாளோடு நாவினின்று அகன்றுவிடும். வேறு வகை பரிசுகளும் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் பரிசளிக்க யோசித்தால் அது இவற்றுக்கெல்லாம் மேலான பெருமையாக அமையும். நூல் வாசிப்பைப் புகட்டப் பெறும் குழந்தைகள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். வண்ண வண்ண சித்திரங்களில் வரி வரியாக அவர்களை உள் நோக்கி ஈர்க்கும் புத்தக உலகம் சொல்லிக் கொடுப்பது கதைகளையும், கற்பனைகளையும் மட்டுமல்ல...காலகாலத்திற்கும் தெவிட்டாத ரசனை உலகின் முகவரிதான் புத்தகம். எதிர்கால வாழ்க்கையிலும் மன உளைச்சல், மன அழுத்தம், தோல்வி மனப்பான்மை குடியேறாது வாழ்க்கையைச் சந்திக்கும் மந்திரங்களை அவை கற்றுக் கொடுக்கும். அப்படியான நூல்களைத் தேடக் கற்றுக் கொடுப்போம் குழந்தைகளுக்கு. அதற்கு நாமும் வாசிப்பை விட்டுவிடாதிருந்தால் இன்னும் கூடுதல் இன்பமாக அமையும் அந்தத் தேடல்.
அல்லல்படும் மனிதரிடம் மாய தேவதை தோன்றி, நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று முதலில் நாம் சந்தித்த கேள்விக்கு, குழந்தைகள் நிரம்பிய சூழலில் அன்பு கொண்டாடியாக வாழ விரும்புகிறேன் என்ற பதிலை அந்த மனிதருக்குச் சொல்லத் தெரிந்திருக்குமானால், அதைவிட இன்பமான வரம் வேறு என்ன வேண்டும்?
(இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எழுதியவர் நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன்)
எனது 400வது பதிவு!
“நான் பாட வந்த பாட்லை இன்னும் பாடவில்லை
யாழின் நரம்புகளில் சுருதி கூட்டி கூட்டியே
என் காலம் கழிகிறது”
என்னும் தாகூரின் கவிதை வரிகளே இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது!
இது எனது 400 வது பதிவு!
ஓவியர் உசேன் இந்தப் பக்கத்தை தன் வண்ணங்களால் நிறைக்கிறார்.
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
அப்படி என்ன வரைந்துவிட்டார் ஓவியர் உசேன்?
நேற்றைய எனது பதிவு வெளியிடும்போதே தெரியும், அனானிகளின் படையெடுப்பு இருக்கும் என்று. அப்படித்தான் ஆகியிருக்கிறது. இதில் ஏன் மறைந்து மறைந்து பேச வேண்டும் எனத் தெரியவில்லை. டோண்டு சார் மாதிரி வெளிப்படையாகவே பேசலாமே.
உசேன் மீதான தாக்குதல் குறித்து பேசும்போது சில எதிர்மறையான கருத்துக்கள் வந்திருக்கின்றன. அவைகளை இப்படித் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
1. உசேன் ஒரு முஸ்லீம். இந்து மத வெறுப்பாளன். எனவே அவர் இந்து மதக் கடவுள்களைப் பற்றி படம் வரைந்திருக்கக் கூடாது.
2.அவர் சார்ந்த மதம் குறித்து உசேன் இப்படி வரைவாரா? முகம்மதுவையும், கதிஜா அம்மையாரையும் ஏன் உசேன் நிர்வாணமாக வரையவில்லை?
3.உசேன் என்ன வரைந்தார் என்பதை ஏன் சொல்லப்படவில்லை.ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
இவைகளோடு, உசேனுக்காக இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தஸ்லிமா நஸ்ரின் விஷயத்தில் மேற்கு வங்க அரசு நடந்து கொண்ட விதத்தைப் பற்றி ஒன்றும் வாயைத் திறக்க மாட்டேன்கிறீர்கள் என்று கேள்விகள் கேட்கின்றன. அதையும் வேதனையான விஷயமாகவே பார்க்கிறேன். எங்கோ பிழைகள் இருந்திருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் அவை தடுமாற்றங்கள். தவறுகள். ஆனால் உசேன் விஷயத்தில் நடந்திருப்பது குற்றங்கள். அதைத்தான் ராஜீவ் தவான் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சில கேள்விகளை எதிர்பார்த்தேன். ஏன் அவை அழுத்தமாக வரவில்லை எனத் தெரியவில்லை. இப்போது சில உண்மைகளையும், எனக்குப் புரிந்த கருத்துக்களையும் சொல்ல வேண்டியது அவசியம் என உணர்கிறேன்.
எம்.எப். உசேன் ஒன்றரை வயதிலேயே ‘தாயை இழந்து’ விட்டார். சிறுவயதில் இவர் ராம லீலா நாடகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர், மன ஆறுதல் கொண்டவர். சிறுவனாக இருந்தபோது அதிகமாக தாயற்ற பிள்ளையாய் பல பயங்கரக் கனவுகளைக் கண்டு அலறுவது உண்டு! ஆனால் ராமலீலா இவருக்கு சுகபலத்தைக் கொடுத்தது என்கிறார். வால்மீகி ராமாயணத்தையும், துளசிதாசர் ராமாயணத்தையும் தெளிவாகப் படித்துத் தேறியவர். கீதையை விரும்பிப் படித்தவர். உபநிஷத்துக்களைப் படித்து உள்வாங்கியவர். ஒருமுறை 1968 ஆம் ஆண்டு ராம்மனோகர் லோகியா, ராமாயணக் காவியத்தை சித்திர வடிவங்களில் வரைந்து தன்திறமையைக் காட்ட வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று ஏழு ஆண்டுகள் செலவு செய்து ராமாயணத்தை விளக்கும் 150 சித்திரங்களைப் படைத்தார். இவர் விநாயகர் உருவத்தை வரைவது உண்டு. அப்படி நூற்றுக் கணக்கான சித்திரங்களை பல மாடல்களில் வரைந்து தள்ளினார். இவர் ஒரு பெரிய கேன்வாசில் சித்திரம் வரையும் வேலைகளைத் துவங்குவதற்கு முன்பாக ஒரு விநாயகர் உருவத்தை வரைந்து விட்டுத்தான் பிறகு பெரும் வரைவுப் பணியைத் துவக்குவார்.
இவரிடம் சில முஸ்லீம்கள், ஏன் நீங்கள் இசுலாமிய தத்துவத்தை விளக்கும் வகையில் சித்திரங்கள் வரையக் கூடாது என்ற கேட்ட போது உங்களுக்கு இந்துக்களுக்கு உள்ளது போல் சகிப்புத் தன்மை கிடையாது, ஒரு எழுத்து வடிவத்தில் தவறு வந்து விட்டாலும், அந்தச் சித்திரத்தைக் கிழித்து எறிந்து விடுவீர்கள் என்று பதில் சொன்னார்.
இவர் தன் மகள் ரயீசாவுக்குத் திருமணம் நடத்தியபோது இவர் திருமண அழைப்பிதழ் முஸ்லீம்கள் பலரை அதிரவைத்து விட்டது. சிவன் தொடையில் பார்வதி அமர்ந்திருப்பது போலவும், சிவனுடைய ஒரு கை பார்வதியின் மார்பின் மேல் உள்ளது போலவும் அதில் இவர் வரைந்த சித்திரம் இருந்தது. உலகம் பூராவும் உள்ள தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார். இவரின் உணர்வில், இரத்தத்தில் எது ஊறிக் கிடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அவர் தன்னை ஒரு முஸ்லீமாக பார்க்கவில்லை. இந்துமத வெறுப்பும் அவருக்குள் ஓடவில்லை. இந்த மண்ணின் வரலாற்றை, மரபை, கலாச்சாரத்தை நேசித்த் ஒரு ஓவியர். அவர் வரைந்திருக்கும் எண்ணற்ற ஓவியங்கள் குறித்து உலகமே பேசுகிறது. வியக்கிறது. ஆனால் அவருடைய ஒருசில ஓவியங்களை மட்டுமே இந்தியா சர்ச்சைக்குள்ளாக்கி பேசிக்கொண்டு இருக்கிறது. இதுதான் விந்தையும், துயரமும் ஆகும். அவர் மீது கல்லெறிபவர்கள் அவரது அற்புதமான ஓவியங்கள் குறித்தும், மகத்தான கலைமனம் குறித்தும் மௌனமே சாதிக்கிறார்கள்.
இந்து மதமாக இன்று கற்பிக்கப்படும் மதத்தின் புராணங்களில் பரிசுத்தத்திற்கு மறு பெயர் நிர்வாணம் என்று சொல்லுகிறது, புனிதம் என்று சொல்லுகிறது. கோயில்களில் உள்ள சிலைகள், தெய்வங்களின் கதைகள், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், மகா பாரதம் - இவைகள் நிர்வாணம் என்பதை தெய்வ வடிவில்தான் பார்க்கின்றன. சிவலிங்கம் என்பதே படைப்பின் ரகசியம் பொதிந்த குறியீடாகவே இருக்கிறது. இதையெல்லாம் கற்றுத் தெளிந்த உசேன் இந்து பெண் தெய்வங்களை அந்த நோக்கில்தான், ஒரு ஓவியர் என்ற உணர்வோடு வரைந்தார். அதில் கலைத்தன்மையை பார்ப்பதை விட்டுவிட்டு உள்ளர்த்தம் கற்பிக்கவே சிலர் இருந்தார்கள்.
ஒரு ஓவியத்தில் சோகமே உருவகமாக, விரிந்த கூந்தலுடன் மண்டியிட்டுச் சரிந்துகிடக்கும் ஒரு பெண்ணாக இந்தியாவைச் சித்தரித்திருந்தார் உசேன். நிர்வாணமான அந்த பெண் அழுதுகொண்டு இருப்பாள். பெரும் கலவரங்களால் சோதனைகளுக்குள்ளாகியிருந்த தேசத்தின் நிலை குறித்து வெதும்பிய ஒரு கலைஞனின் பார்வை அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஓவியத்தை வாங்கிய ஒருவர் அதைப் 'பாரத மாதா' எனப் பெயரிட்டு அழைத்தபோது நெருக்கடி தொடங்கியது. 'பாரத மாதா'வை உசேன் ஆபாசமாகச் சித்தரித்துவிட்டதாகக் குற்றம் சுமத்தி, அவரது ஓவியங்களை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து விட்டார் என ஒரே அலறல்களும் கூப்பாடுகளும் கேட்கின்றன.இந்தியாவின் முக்கிய கலை விமர்சகர்களில் ஒருவராகிய ஷில்பி அகர்வால் அந்த ஓவியம் குறித்து ஆழமான விளக்கங்கள் கொடுக்கிறார். “சரஸ்வதி கலையின் தெய்வம். தன்னை முழுவதுமாய் கரைத்துக்கொண்டு, சகலத்தையும் கலையில் இழந்து, தன்னையே மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் சித்திரம் இது. கலையும், கலைஞனின் ஆன்மாவும் ஒரு புள்ளியில் காணாமல் போகும் தருணம் இது. மீன்கள், தாமரை, மயில் எல்லாவற்றோடும் ஒளி ஊடுருவும் அறிவியல் விதியையும் உள்ளடக்கியிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பு. ஆச்சரியமாக, நமது மரபுகளும், விழுமியங்களும் ஒரு கலைப்படைப்பில் பெண்ணுக்கும், தாய்க்கும் உள்ள வித்தியாசங்களை புரியவைக்கின்றன. நாம் மோனலிசாவில் கலையின் அழகாக ஒரு பெண்ணைப் பார்த்தால், உசேனின் சரஸ்வதியில் ஒரு தாயைப் பார்க்கலாம்” என்கிறார். இந்த வித்தியாசங்களும், நுட்பங்களும் அறியாதவர்கள்தாம் உசேனை ஓட ஓட துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
உசேனின் வீடு தாக்கப்பட்டது. மதிப்புமிக்க அவரது ஓவியங்கள் சிதைக்கப்பட்டன. அவரது ஓவியக் கண்காட்சிக்கு எங்கும் அனுமதி இல்லை. தேசத்தையும், இந்துக் கடவுள்களையும் அவமதித்துவிட்டதாக அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன.உசேன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்குகளை விசாரிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்தைப் பணித்தது. மகத்தான தீர்ப்பு ஒன்று மாண்புமிகு நீதிபதி சஞ்சய் கிஷன் அவர்களால் வழங்கப்பட்டது.
காமசூத்ரா'வை உருவாக்கிய தேசத்தின் பாலியல் அணுகுமுறைகள் குறித்த வரலாற்றுரீதியிலான சான்றுகளைத் தன் தீர்ப்பில் நினைவுகூர்கிறார் கௌல். பாலியல் ஒரு கலை என்னும் ஆரோக்கியமான புரிதலைக் கொண்டவை நம் மரபுகள். இந்தியர்கள் பாலியலை ஒரு கலையாகக் கற்றுக்கொண்டனர்; பரிசோதனைகளை மேற்கொண்டனர்; அதன் நுட்பங்களை சக மனிதர்களுடன் பகிர்ந்துகொண்டனர்; பிறகு அவற்றை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் காப்பியங்களாகவும் நடனங்களாகவும் மாற்றித் தொடர்ந்துவரும் தலை முறைகளுக்குக் கையளித்துச் சென்றனர். பாலியல் செயல்பாடுகளை அவர்கள் ஒருபோதும் பாவமாகக் கருதியதில்லை, மூடிய கதவுகளுக்குள் விவாதிக்கும் ஒரு விஷயமாகவும் கருதவில்லை. வாழ்வை முழுமைப்படுத்தும் அதன் உன்னதமான ஒரு பகுதியாகவே பாலியலை இந்தியர்கள் கருதினர் எனக் குறிப்பிடும் கௌல், பண்பாட்டைத் தூய்மைப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அடிப்படைவாதிகள் உண்மையில் தேசத்தை மறுமலர்ச்சிக் காலத்திற்கு முந்தைய ஒரு காலத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறார்கள் எனக் கடுமையாக விமர்சிக்கிறார்.
இந்து மரபின் தொன்மையான பண்புகளாக விளங்கிய சகிப்புத்தன்மையையும் பன்முக அடையாளங்களையும் சுட்டிக்காட்டும் நீதிபதி, அடிப்படைவாதம் அந்தக் கூறுகளை அழித்துவிட்டதுதான் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். சகிப்புத்தன்மையும் பன்முக அடையாளங்களுக்கான அங்கீகாரமுமே ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருக்க முடியும் எனவும் வலியுறுத்துகிறார் கௌல். அடிப்படைவாத நடைமுறைகளால் உருவாகியுள்ள பதற்றம், மனித உரிமை, கருத்து படைப்புச் சுதந்திரம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கும் இத்தீர்ப்பின் ஒரு முக்கியமான வரி, அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு கருத்துச் சுதந்திரம் பற்றிய ஒரு பொன்மொழியாகக் கருதப்படுவதற்கும்கூடத் தகுதியானது.
FREEDOM OF SPEECH HAS NO MEANING IF THERE IS NO FREEDOM AFTER SPEECH...
(கருத்து வெளிப்பட்ட பின்னர் சுதந்திரம் இருக்கவில்லையெனில் கருத்துச் சுதந்திரத்திற்கு எந்தப் பொருளும் இல்லை.)
தீர்ப்பின் தொடக்கத்தில் பாப்லோ பிக்காசோவின் மேற்கோள் ஒன்றினை எடுத்தாண்டிருக்கிறார் நீதிபதி. 'கலை ஒருபோதும் புனிதமானதல்ல, அதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடமிருந்தும் ரசிப்பதற்குப் போதிய அளவு தயாராகாதவர்களிடமிருந்தும் விலக்கப்பட்டிருப்பதே கலை. ஆம், அது அபாயகரமானது. எங்கே புனிதம் நிலவுகிறதோ அங்கே கலை இருப்பதில்லை' என்னும் அந்த மேற்கோளைத் தொடர்ந்து அடிப்படைவாதிகள் உசேனின் ஓவியத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை எனச் சுட்டிக்காட்டுகிறார் கௌல். குறிப்பிட்ட அந்த ஓவியம் ஆபாசமானதோ அருவருக்கத்தக்கதோ அல்ல, பாலியல் தூண்டலை உருவாக்கும் எந்த அம்சமும் துயரம் ததும்பும் அப்பெண்ணின் நிர்வாணத் தோற்றத்தில் இல்லை எனக் குறிப்பிடும் அவர், இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதல்களால் நாட்டைவிட்டு வெளியேறிக் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அயல்நாடுகளில் வசித்துவரும் 92வயது எம். எப். உசேன் இத்தீர்ப்பின் மூலம் தாய் நாட்டுக்குத் திரும்பித் தன் கலைப் பணியைத் தொடர்வார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்
ஆனால், உசேன் நாடு திரும்புவதற்கு இன்னமும் தடங்கல்களும், தடைகளும் இருக்கின்றன. கொலைவெறியோடு அவரை வெறுப்பவர்களிடமிருந்து அவருக்கு என்ன பாதுகாப்பு இந்த அரசு கொடுக்க இருக்கிறது. ஒரு மகத்தான கலைஞனை கொண்டாடுவதற்கு பதில் கொன்று தீர்ப்பதற்கு ஒரு கும்பல இருக்கிறதே என்பதே நம் கவலை.
உசேன் மீது விமர்சனம் இருக்கலாம். உசேனின் ஓவியங்கள் குறித்து வேறு பார்வைகள் இருக்கலாம். தப்பில்லை. ஆனால் அவரைத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் அறைகூவல் விடப்பட்டுள்ளது எப்படி சரியாகும். அதை கண்டித்து இங்கு யாரும் பின்னூட்டமிடவில்லை என்பது என் கவலை.
விவாதிப்போம்.
ஆதாரம்:
1.செம்மலர் பிப்ரவரி 2009
2.Hussain’s Saraswati Breathes A New Life From The Eyes Of An Artist
(An artical regarding M.F Hussain's artwork "Saraswati")
3.கருத்துக்குப் பின்னரும் சுதந்திரம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு (காலச்சுவடு தலையங்கம்)
ஓவியர் உசேன்: இந்துமத வெறியாட்டமும் ஒத்து ஊதும் காங்கிரஸும்
பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மதவெறியர்களும், அவர்களுக்குப் போட்டியாகக் கிளம்பிய சில காங்கிரஸ்காரர்களுமாக சேர்ந்துதான் அவர் வெளிநாட்டுக்குப் போய் தங்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தினர். அவருடைய ஓவியங்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் தொடர் பிரச்சாரங்களைச் செய்தது. காலம் காலமாக எவ்வாறு இந்துக்கடவுள்கள் பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டு வந்தனவோ, அதே போன்று தனது ஓவியத்திறமைகளால் அந்தக் கடவுள்களை சித்தரித்ததுதான் எம்.எப்.உசேன் செய்த குற்றம் என்று கூறினார்கள். ஏதாவது ஒரு மதரீதியான பிரச்சனையைக் கிளப்புவதற்காகக் காத்திருக்கும் பாஜக இதைக் கையில் எடுத்துக் கொண்டது.
1996 ஆம் ஆண்டில் உசேனின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். 1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் தெற்கு மும்பையில் உள்ள உசேனின் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்தனர். இது நடந்தபோதெல்லாம் உசேனுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. உசேனின் கண்களைத் தோண்டுபவருக்கோ அல்லது அவரது கைகளை வெட்டி எறிபவருக்கோ 1 கிலோ தங்கம் தருவதாக குஜராத்தைச் சேர்ந்த ஜசுபாய் படேல் வெளிப்படையாகவே அறிவித்தார். இதே காலகட்டத்தில் தான் மத்தியப் பிரதேச காங்கிரசின் சிறுபான்மைப்பிரிவு, உசேனின் கைகளை வெட்டி எறியும் தேச பக்தருக்கு 11 லட்சம் தருவதாகக் கூறியது. இத்தகைய வெறியூட்டும் வன்முறைப் பேச்சுகள் உசேனை விரட்டியது.
இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் பேச்சுகளுக்கு எதிராக சட்டம் தனது கடமையைச் செய்ததா..? இல்லை. கட்சிகள் வெளிப்படையாக வருத்தமாவது தெரிவித்தனவா...? கிடையவே கிடையாது. மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் வாயை மூடிக் கொண்டன. இந்தியா முழுவதும் பல நீதிமன்றங்களில் உசேன் மீது வழக்கு தொடரப்பட்டது. எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சூரத் நீதிமன்றத்தில் ஏப்ரல் 2006ல் வாரண்ட்டும் அவர் மீது வழங்கப்பட்டது. இது தவிர வெளிவாழ்க்கையிலும் அவர் மீது வசைமாரி பொழியும் வேலையை மத வெறியர்களும், உசேனை விரட்டுவது மூலம் அரசியல் லாபம் பெற நினைத்த சில காங்கிரஸ்காரர்களும் செய்து வந்தனர்.
இதற்கிடையில் நாடு முழுவதுமுள்ள வழக்குகளை 2006 டிசம்பர் 4 அன்று தில்லிக்கு மாற்றுவதென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் வந்த தீர்ப்பு உசேனுக்கு சாதகமாகவே இருந்தது. 2008 மே8 அன்று இந்தத்தீர்ப்பு வந்தது. கலை மற்றும் பேச்சுக்கான உரிமை உள்ளது என்று சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இந்தத்தீர்ப்பை வழங்கினார். இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் இமாச்சலப் பிரதேச மாநில அரசு தனது பள்ளிப்பாடத்திட்டத்தில் உசேன் குறித்த பாடத்தை நீக்கியது. அது மாணவர்களை எந்தவிதத்திலும் உத்வேகப்படுத்தும் பாடமாக இருக்காது என்பது மாநில அரசின் கருத்தாகும். நடைபாதையிலிருந்து தலைசிறந்த ஓவியர் என்ற அந்தஸ்தைப் பெற்ற ஒருவரின் வாழ்க்கை உத்வேகம் அளிக்காது என்று கூறினால் வேறு யாருடைய வாழ்க்கையைக் கற்றுத்தரப்போகிறார்கள்..?
கலைப்படைப்பைப் படைக்க உசேனுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அவர் மீதான மற்ற வழக்குகளுக்கும் இந்தகதிதான் நேரும். மாறியுள்ள சூழலில் அரசும் அவருக்கெதிரான வழக்குகளை விரைவில் முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்திய சட்டமுறைகள் குற்றம் சாட்டுபவருக்கு சாதகமாக இருக்கிறது. அதனால்தான் உசேனுக்கு எதிரான வழக்குகள் இழுத்துக் கொண்டே செல்கின்றன. இத்தனைக்கும் உசேன் மன்னிப்பே கேட்டுவிட்டார். இருந்தாலும் அரசியல் லாபத்தைக் கணக்கில் கொண்டவர்கள்தான் வழக்கு போட்டுள்ளதால் அவர்கள் முடிந்தவரையிலும் நீதிமன்றத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளப்போவதில்லை.
இந்நிலையில் வழக்குகள் மீது தீர்ப்புகளை விரைவுபடுத்த அரசு நினைக்கிறது. இந்தியாவுக்கு உசேன் திரும்பிவரும் நிலையில் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு தரவும் மத்திய அரசு தயாராகவுள்ளது. பெரும்பான்மை மதத்தைச்சேர்ந்தவர்களின் மத உணர்வுகளை ஓவியர் எம்.எப்.உசேனின் சில ஓவியங்கள் பாதிக்கின்றன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது என்று 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் காங்கிரசைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தில்லி மற்றும் மும்பை காவல்துறை ஆணையர்களுக்கு செய்தி அனுப்பினார். அதே கட்சி தற்போது அவரை மீண்டும் தனது பகடைக்காயாக மாற்ற நினைக்கிறது. அதற்காக வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கும் அவரை நாட்டிற்கு அழைத்து வந்து உச்சபட்ச பாதுகாப்பு என்ற கூண்டில் அடைக்கப்போகிறார்கள்.
ஆதாரம் :
ராஜீவ் தவான் கட்டுரை
(மெயில் டுடே-நவ.2)
நன்றி : தீக்கதிர்
அவனது பறவை
பூஸ்ட் வாங்கியதற்கு இலவசமாய்க் கிடைத்திருந்தது அது.
அருகில் படுத்து அம்மா தட்டிக்கொடுத்தாலும், அப்படிச் சில வேண்டியிருந்தது அவனுக்கு.
எதாவது ஒரு கணத்தில், அவன் கைகளிலிருந்து நழுவினாலும், கண்விழிக்காது கைகள் இருளில் துழாவி பற்றிக்கொள்ளும்.
அந்த பைக்கின் மீது இரவெல்லாம் சவாரி செய்து கொண்டு இருந்தான்.
பிறகு மாமா வாங்கித் தந்த காராக மாறியது அது.
அப்புறம் கடையில் பார்த்து அடம்பிடித்து வாங்கிய விமானமாகியது.
மேகங்கள் அவனை தழுவிச் சென்றன.
ஒருநாள் மாலையில் புத்தகம் ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தவன், இரவில் தலைக்குப் பக்கத்தில் அதை வைத்துக் கொண்டான்.
அதன் படத்திலிருந்த பறவையின் மீது கைகள் இருந்தன.
தூக்கத்தில் அன்று சிரிக்க ஆரம்பித்தான்.
பதறிய அம்மா எழுந்து “என்னம்மா” என்றாள்.
அவனது விரல்கள் பறவையின் மீது தடவிக்கொண்டு இருந்தன.
காலையில் எழுந்து அழ ஆரம்பித்தான்.
நேற்றுப் பார்த்த பறவையை காணவில்லை என்றான்.
”எல்லாப் படங்களும் அப்படியேதான் இருக்கின்றன” அம்மா சொல்லிப் பார்த்தாள்.
“என்ன மாயமோ” என அலுத்தும் போனாள்.
அவனது பறவையை ஒவ்வொரு பக்கமாய் திரும்பத் திரும்பத் தேடிக்கொண்டே இருந்தான் அவன்.
“ஒட்டத் தெரியாதபோது உடைப்பதையாவது நிறுத்துங்களேன்!”
நம் எல்லோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறுமி சுமத்தி இருக்கிறாள். புவிப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களும், வினைகளும் எழும்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குரலை நாம் மறந்துவிட முடியாது. 1992ல் நடந்த முதல் புவிப் பாதுகாப்பு மாநாட்டில் கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி செரன் சுசுகி அனுமதி வாங்கி பேசிய வார்த்தைகள் இவை. இங்கு ஒலிப்பது ஒரு குழந்தையின் குரல் . எதிர்காலத்தின் நடுங்கும் குரல். முழுமையாகவும், பொறுமையாகவும் உற்றுக் கேளுங்கள்.
------------------------------------------------------
“ஹலோ.... நான் செரன் ...சுசுகி... இ.சி.ஓ.. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரோன்மெண்டல் சில்ரன்ஸ் ஆர்கனைசேஷனிலிருந்து பேச வந்திருக்கேன். நாங்கள் 12க்கும் 14க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர் சிறுமியர் கனடாவில் இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். வெனஸாசுடியி, மார்கன்கெய்ஸ்லர், மைக்கேல் க்விக் மற்றும் பலரோடு நான்.
நாங்கள் நாங்களாகவே பலரிடம் நிதி திரட்டி...... சுமார் ஆறாயிரம் மைல்கள் கடந்து பெரியவர்களான உங்களது வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ள இங்கே ரியோடி ஜெனரோவுக்கு வந்தோம். இங்கே இந்த மேடையில் பேசும் என்னிடம் செயல்திட்டம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நான் ஒரு சிறுமி. உங்கள் பார்வையில் சிறுகுழந்தை. நான் என் எதிர்காலத்திற்காக போராடுகிறேன். என் எதிர்காலத்தை தோற்பது என்பது ஒரு தேர்தலில் தோற்பது மாதிரியோ அல்லது நிதிச்சந்தையில் சில புள்ளிகளை தவறவிடுவது மாதிரியோ அல்ல. நான் இங்கே வருங்காலத்தின் அனைத்து சந்ததியினருக்காகவும் பேச வந்திருக்கேன்.
ஒருபோதும் செவிமடுக்கப்படாத பசியில் துடிக்கும் குழந்தைகளுக்காக பேச வந்திருக்கிறேன். போய் ஒளிந்து கொள்வதற்கு ஒரு இடம் இல்லாததால் தினந்தோறும் கொன்று குவிக்கப்படும் அழிவின் விளிம்பில் உள்ள இப்புவியின் எண்ணிலடங்கா விலங்குகளுக்காக நான் பேச வந்திருக்கிறேன். என் பேச்சைக் கேட்காமல் நீங்கள் இருந்து விடுவதை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன். செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போதெல்லாம் சூரிய ஒளியில் சாலையில் இறங்கி நடப்பதற்கே நான் அஞ்சுகிறேன். ஓசோன் படலத்தின் ஒட்டைகளே காரணம். காற்றை முழுமையாக இழுத்து சுவாசிக்க நான் அஞ்சுகிறேன். அதில் என்னென்ன வேதிப்பொருட்கள் எல்லாம் உள்ளனவோ.
வேன்கோவர் நதியில் என் தந்தையோடு இனிய விடுமுறை நாட்களில் நான் மீன்பிடிக்க போனது உண்டு. ஒருமுறை புற்றுநோய் தாக்கிய அனைத்து மீன்களையும் தூக்கி எறிய நேர்ந்ததால் இப்போதெல்லாம் போவது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒன்று பாக்கியில்லாமல் ஒரேயடியாய் அழிந்துவரும் தாவரத்தைப் பற்றியும், விலங்கைப் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம்.
என் வாழ்வில் சுதந்திரமாய் கூட்டம் கூட்டமாய் சுற்றித் திரியும் வனவிலங்குகளைப் பற்றியும், முற்றிலும் பறவைகளால் மொய்க்கப்பட்ட காடுகளைப் பற்றியும் கனவு காண முடிகிறது. எனக்கு பிறகு வரும் சந்ததிகளுக்கு அது கிட்டுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. என் வயதில் நீங்கள் இருந்த போது இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டிய சூழல் இருந்ததா?
இதெல்லாம் நமது கண்முன் வேகமாக நடக்கும்போது.... நாமோ நமக்கு எதோ அத்தனைக்கும் தீர்வு காண ஏராளமான நேரம் இருப்பதுபோல் மிக நிதானமாக இயல்பாக நடந்து கொள்கிறோம்.
நான் ஒரு சிறுமிதான். உங்கள் அர்த்தத்தில் ஒரு சிறு குழந்தை. என்னிடம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை. உங்களிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
ஓசோன் படலத்தில் விழுந்திருக்கும் ஓட்டைகளை எப்படி அடைப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஓடுவதை நிறுத்தி முற்றிலும் விஷமாகிப் போன ஒரு ஆற்றை திரும்ப ஓடவைப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒன்று பாக்கி இல்லாமல் முழுவதும் அழிந்துவிட்ட ஒரு விலங்கை திரும்ப உயிர்ப்பிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்து இன்று பாலைவனம் போலாகிவிட்ட இடத்தை மீண்டும் காடாக்குவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. திரும்ப பழையபடி ஒன்று சேர்த்து ஒட்டத் தெரியாதபோது உடைப்பதை நிறுத்துங்களேன்!
இங்கே நீங்கள் உங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவோ, தொழில் அதிபர்களாகவோ, அமைப்பாளர்களாகவோ, பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல அந்தஸ்தில் கூடி இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் யாருக்கோ அப்பாவாகவும், அம்மாவாகவும், அண்ணன் தங்கையாகவும் இன்னும் யாரோ குழந்தையின் மாமாவாக அத்தையாக இருப்பவர்கள்தான் என்பதையும் அல்லது நீங்களும் யாரோ பெரியவர்களின் குழந்தைகள்தாம் என்பதையும் நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை.
உங்கள் பார்வையில் நான் சிறு குழந்தைதான். ஆனால் எனக்குத் தெரியும், நாம் அனைவரும் முப்பது மில்லியன் வகை உயிரினமுமாக ஒரே குடும்பம் என்பதும், நாம் ஒரே காற்றை, குடிநீரை, மண்ணை பகிர்ந்து வாழ்ப்வர்கள் என்பதும் எத்தனை எல்லைகளிலிருந்து எத்தனை அரசுகள் அதிகாரம் செலுத்தினாலும் இந்த ஒரு அடிப்படை விஷயம் மாற்ற முடியாது என்பதும் குழந்தைகளான எங்களுக்குத் தெரியும்.
நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து ஒரே குழுவாக ஒரே ஒரு இலக்கை முன்வைத்து இயங்க வேண்டி இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை வெளியே உங்களிடம் சொல்ல முடியாத அளவிற்கு ஆத்திரத்தில் கண்ணிழந்தோ, அச்சத்தில் வார்த்தைகள் குழைந்தோ நான் நிற்கப் போவதில்லை.
எங்கள் நாட்டில் வசதியாய் வாழும் நாங்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தி பாதியில் தூக்கி எறிகிறோம். பலவற்றை அதற்கு முடிவே இல்லாதபடி தூக்கி எறிந்துகொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் நமது வசதிகளை இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள்ள தயங்குகிறோம். நம்மிடம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் நாம் கொஞ்சத்தை விட்டுத் தரவும், இருப்பதில் மிகக் குறைவான ஒன்றையும் பகிர்ந்து கொள்ளவும் அருவருக்கிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன் இங்கே பிரேசிலில் வீதிகளில் வசிக்கும் எங்கள் வயதையொத்த சில குழந்தைகளோடு சில மணிநேரங்கள் செலவிட்டபோது, எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர்களில் ஒரு சிறுவன், என் வயதொத்தவன், கூறிய வாசகத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. ‘இந்த வீதியில் வசிக்கும் சிறுவர் சிறுமியர் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடைய, இருக்க இடம், மருந்து, மற்றும் அன்பு, அரவணைப்பு இவை தர முடிகிற அளவுக்கு நான் செல்வந்தனாக இருக்கக் கூடாதா என்பதே என் ஆசை’
தன்னிடம் எதுவுமே இல்லாத வீதியில் வசிக்கும் ஒரு சிறுவன் எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ விரும்புகிற போது, எல்லாமே அளவுக்கு அதிகமாக வைத்திருக்கும் நாம் இவ்வளவு பேராசை பிடித்து துளியும் பகிர்ந்து தர மறுப்பது ஏன்?
இந்த சிறுவர்கள் எல்லோருமே என் வயதொத்தவர்கள் என்பதால் என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இங்கே நீங்கள் எங்கே பிறக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. நான் கூட அவர்களில் ஒருத்தியாக இருக்க முடியும். ரீயோவின் வீதிச் சிறுமியாய் அல்லது பட்டினியால் பரிதவிக்கும் சோமாலியாவின் குழந்தையாய், மத்திய கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியாய், ஏன் இந்தியாவில் பிச்சை எடுக்கும் ஒரு சிறுமியாகக்கூட நான் இருக்கலாம்.
நான் ஒரு சிறு குழந்தைதான். ஆனால் எனக்குத் தெரியும்..... யுத்தங்கள் செய்ய ஆயுதங்களுக்காக, ராணுவத்திற்காக செலவழிக்கும் பணத்தை வறுமையை முற்றிலும் ஒழிக்கவும், சுற்றுச்சூழல் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் நாம் திசை திருப்பினால் இந்தப் புவி எப்பேர்ப்பட்ட அற்புதமான வாழிடமாக மாறிவிடும் என்பது.
பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கும்போதே இந்த உலகத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என போதிக்கிறீர்கள். யாரோடும் சண்டை போடக் கூடாது.... அனைவருக்கும் மரியாதை தர வேண்டும்.... நமது குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.... எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யவே கூடாது....அடுத்தவர் பொருளை அபகரிக்கக் கூடாது.... இப்படி எங்களைப் பார்த்து எதையெல்லாம் செய்யக் கூடாது என்றீர்களோ அதையெல்லாம் பெரியவர்களாகிய நீங்கள் செய்வது ஏன்?
நீங்கள் எதற்காக இந்த மாநாடுகளில் கலந்துகொள்கிறீர்கள் என்பதையோ... யாருக்காக அவற்றை செய்கிறீர்கள் என்பதையோ தயவு செய்து மறந்து விடாதீர்கள் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் உங்கள் குழந்தைகள்.
நாங்கள் எந்த மாதிரி உலகத்தில் வளர்ந்து ஆளாகப் போகிறோம் என்று தீர்மானிக்கும் வேலையில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள். பெற்றோர்கள் எப்போதுமே குழந்தைகளான எங்களிடம், ‘கவலை வேண்டாம்... அனைத்தும் நன்றாக இருக்கும்.... உலகம் முடிவுக்கு வந்துவிடாது..’ என்று நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் அதை முன்வைத்து நீங்கள் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது.
பெரியவர்கள் நீங்கள் செய்யும் பல வேலைகள் என்னை இரவில் கண்விழித்து பயத்தில் அழவைப்பதாகவே உள்ளன. எங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். தயவுசெய்து அந்தச் சொற்களை பிரதிபலிக்குமாறு நடந்து கொள்ளுங்கள்! நன்றி.”
------------------------------------------------------
அந்தக் குழந்தை பேசி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் எதைக் கேட்டிருக்கிறோம்? அவமானமாய் இருக்கிறது.
நன்றி: ’புத்தகம் பேசுது’ மாத இதழ்
தமிழாக்கம்: இரா.நடராசன்
உங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்!
ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வுக்கு அவனுக்கு அழைப்பு வந்திருக்கும். எப்படியும் ஐ.ஏ.எஸ். ஆகிவிடுவான் என வீடே அவனை நம்பியிருக்கும். தாலுகா ஆபிஸில் பியூனாக வேலை பார்க்கும் அவனது தந்தையை எடுபிடி வேலைகள் செய்யச் சொல்ல மற்றவர்களுக்கு கூச்சம் வரும். எல்லாம் பொய்த்துப் போகும். விரக்தியால் வாடுவான். ரெயில்வே நிலையம் சென்று தனிமையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டு இருப்பான். கலைந்த முடியும், சவரம் செய்யப்படாத முடியுமான தோற்றம்.
அப்போது யாரோ அருகில் வருவது போலிருக்கும். நிமிர்ந்து பார்ப்பான். ஒரு இளம் தம்பதியினர் கையில் குழந்தையோடு நிற்பார்கள். அவளை அவனுக்குத் தெரியும். அவனோடு கல்லூரியில் படித்தவள். ”எங்க வகுப்பிலேயே இவந்தான் பிரில்லியண்ட்” என்று அவனை தன் கணவனிடம் அறிமுகம் செய்து வைப்பாள். அவள் கணவன், குழந்தைக்கு எதாவது வாங்கிவருவதாக குழந்தையோடு செல்வான். இவர்கள் இருவரும் அமைதியாகவே இருப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கணவன் வருவான். டிரெயினும் புறப்படும்.
ஓடிக்கொண்டு இருக்கும் டிரெயினில் அவள் குழந்தையை நெஞ்சோடு அணைத்தவாறு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருப்பாள். மௌனமாய் அழுகை பெருக்கெடுக்கும். அவள் கணவன் சட்டென்று பக்கத்தில் இருந்த பேப்பரை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொள்வான், தான் கவனித்து விட்டதை அவள் அறியவேண்டாம் என.(’ஆகாயப் பந்தல்’ சிறுகதை)
அவள் தன் அண்ணனோடும் அண்ணியோடும் இருப்பாள். ஒரு இளஞனை காதலிப்பாள். அதை அண்ணியிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வாள். அண்ணி எப்போதும் பழைய பாடல்களை பாடிக்கொண்டு இருப்பாள்.
அந்த இளைஞனுக்கு குடும்பச் சூழலால் வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகும். வேதக்கோயிலில் திருமணம் நடக்கும் அன்று முழுவதும் அழுது தவித்துப் போவாள். அண்ணிதான் அவளுக்கு ஆறுதல் சொல்வாள்.
பிறகு ஒருநாள் வீட்டின் பின்பக்கம் தனிமையாய் இருக்கும்போது “நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா..” என்று தன்னையுமறியாமல் பாடுவாள். எப்படி இந்த பாட்டு பாடத் தோன்றியது என ஒருகணம் யோசிப்பாள். எதோ புரிந்த மாதிரி இருக்க, அண்ணியைப் பார்க்க உள்ளே ஓடுவாள்.(’கண்ணில் தெரியும் வானம்’ சிறுகதை)
இவை எழுத்தாளர் ஷாஜஹான் எழுதிய இரண்டு சிறுகதைகளின் சுருக்கம். மிக அற்புதமான மொழியில், நுட்பமாய் எழுதக் கூடியவர். 1980களின் பிற்பகுதியில் என்னோடு எழுத ஆரம்பித்தவர். பத்து பதினைந்து கதைகள் போல எழுதினார். பிறகு என்னைப் போலவே எழுதாமல் போனவர். நேரில் சிரிக்கச் சிரிக்க பேசும் அவரின் கதைகள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும்போது நான் தேம்பி தேம்பி அழுதுதான் போயிருக்கிறேன். ‘மனசிருந்தால் புளிய இலையில் கூட படுத்துறங்கலாம்’ என்னும் அவரின் வார்த்தைகள் மகத்தான பொன்மொழி போல் எனக்குள்ளே இருக்கிறது.
ஷாஜஹானைப் பற்றி பிறிதொரு கணம் தனியாக ஒரு பதிவு எழுதுவேன். இப்போது அவரது சிறுகதைகளைப் பற்றி மட்டுமே. இவரது சிறுகதைகளை தொகுத்து ரொம்பநாள் கழித்து வம்சி புக்ஸ் “காட்டாறு’ என வெளியிட்டு இருக்கிறது.
“எல்லாக் கதைகளிலும் சொன்னதைவிட சொல்லாததே அதிகம். இது வாசகனின் படைப்பு சக்தி மீது எழுத்தாளன் கொள்ளும் நம்பிக்கையும், மரியாதையும் சார்ந்தது” என இவரது இந்த சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முன்னுரை எழுதியுள்ளார். “இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் வாசகனில் நுட்பமான அதிர்வலைகளை கிளர்த்துவதாய் இருக்கிறது” என்னும் அவரது வார்த்தைகள் சத்தியமான உண்மை.
கதைகளைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்.
காட்டாறு
விலை : ரூ.50/-
வெளியிடு:
வம்சி புக்ஸ்
19, டி.எம். சாரோன்
திருவண்ணாமலை - 606 601
கடவுளும் கர்நாடகா சினிமாவும்

அப்பாடி! என்று பெருமூச்சு விட்டு நிற்கிறது பி.ஜே.பி கட்சி. பத்து நாட்களுக்கும் மேலாக நடந்த பிரமாதமான நகைச்சுவைப் படத்திற்கு இப்போது இடைவேளை விடப்பட்டு இருக்கிறது. கடவுள் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.
பதவியேற்ற உடனேயே முதல்வர் அறையை பூஜை அறையாக்கி, ஹோமகுண்டம் எல்லாம் அமைத்தவர் எடியூரப்பா. கர்நாடகத்தின் அனைத்துக் கோவில்களுக்கும் சென்று காணிக்கை செலுத்தி வந்தவர் எடியூரப்பா. ஆனாலும் கடவுள் அவரை சோதிக்க ஆரம்பிக்கிறார். படம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
அவருடைய பி.ஜே.பிக் கட்சியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்கள் 41 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை ஓளித்துவைத்துக்கொள்கின்றனர். ‘இப்ப என்ன செய்வே’ என அதிபயங்கர சவால் விடுகின்றனர். எடியூரப்பா முதல்வர் பொறுப்பிலிருந்து விலகினால்தான் அந்த எம்.எல்.ஏக்களை உலகுக்கு காட்டுவதாக அறிவிக்கின்றனர். ”நீங்கள் கட்சியை பிளாக் மெயில் செய்கிறீர்களா” என நிருபர்கள் அவர்களிடம் கேட்கின்றனர். “இல்லை. கடவுள் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு” என்கின்றனர் அவர்கள். சஸ்பென்ஸ் கூடுகிறது. கடவுள் என்ன செய்யப் போகிறார் என பார்வையாளர்கள் இருக்கைகளின் விளிம்பில் வந்து உட்கார்கின்றனர்.
கால் வாரப்பட்டு விழுந்த நிலையிலும் “நான் நிறைய காணிக்கை செலுத்தி இருக்கிறேன். கடவுள் என்னை கைவிட மாட்டார்” என்று தன்னம்பிக்கையோடு இருக்கிறார் எடியூரப்பா. தன் பங்குக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கோவாவுக்கு இன்பச் சுற்றுலா அனுப்பி வைக்கிறார். ‘கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்’ பாடலின் ரீமேக் அமர்க்களப்படுத்துகிறது.
கட்சியை என்ன செய்வது தெரியாமல் மேலிட பா.ஜ.க தலைவர்கள் கர்நாடகம் வந்து சேர்கின்றனர். காட்சிகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கின்றன. கடவுளின் மீது பாரத்தைப் போட்டு, எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர் கைகளிடையே துண்டைப் போட்டு பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பார்க்கின்றனர். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவரது விசுவாசியான ஷோபா என்பவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டிய நிலைமைக்கு எடியூரப்பா தள்ளப்படுகிறார். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் “என்ன நம்பியவர்களை பலிகிடா ஆக்கிவிட்டேன். முதல்வர் பதவியில் நீடிக்க இதைச் செய்ய வேண்டியதாகிவிட்டது. கடவுளும் என்னை மன்னிக்க மாட்டார்” என கன்னட தொலைக் காட்சியில் கண்ணீர் விட்டு அழுது காண்பித்திருக்கிறார் எடியூரப்பா. உருக்கமான நடிப்பு. அத்தோடு இடைவேளை.
ஷோபாவின் ஆதரவாளர்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிக்கொண்டு இருக்கின்றனரே, எவ்வளவு பேர் சாகப் போகிறார்கள்? எடியூரப்பா இந்த தடவை தப்பலாம், அடுத்த தடவை தப்ப மாட்டார் என, முதல் ரவுண்டு வெற்றியில் இருக்கும் ரெட்டி சகோதரர்களின் அடுத்தக் கட்ட தாக்குதல் என்ன? ரெட்டி சகோதரர்களை எப்படி வஞ்சம் தீர்க்கப் போகிறார் எடியூரப்பா? ”நடந்தது, நடப்பது, நடக்கப் போவது’ அறிந்து பேசுகிற கடவுள் இதையெல்லாம் எப்படித் தீர்த்து, தன் பக்தர்களை மனம் கோணாமல் பாதுகாக்கப் போகிறார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் காலத் திரையில் விரைவில்...
கடவுள் ரொம்ப களைப்பாயிருக்கிறாராம். கால்ஷீட் பிரச்சினையிலும் அவதிப்படுகிறாராம்.
மழையின் தாளம் கேட்குது, மனிதா மனிதா வெளியே வா....!
வெளியே மழை பெய்து கொண்டு இருக்கிறது.
மாதவராஜ் பக்கங்கள் - 16
இந்தியா மட்டுமல்ல, உலகமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. ”வெளிநாட்டு முதலீடு உள்ளே வருகிறது, உள்ளே வருகிறது” என்று வாயைப் பிளந்துகொண்டே நமது ஆட்சியாளர்கள் இரு கை விரித்து காத்திருக்கிறார்கள். இந்த தேசத்தின் உடல், பொருள், ஆவி அனைத்தும் இந்த வெளிநாட்டு முதலீடுகளில்தான் இருப்பது போல ஒரு பெரும் பிரச்சாரத்தை நாள் தவறாமல் செய்துகொண்டு இருக்கிறார்கள். ”நல்ல காலம் பிறக்குது.... நல்ல காலம் பிறக்குது.... தொழில் வளருது, உற்பத்தி பெருகுது” என்று குடுகுடுப்பைக்காரன் போல மன்மோகன்சிங் பாடிக்கொண்டு இருக்கிறார். ஒருநாட்டின் பொருளாதாரம், வளம் எல்லாவற்றையும் ஒட்ட உறிஞ்சுவது தவிர இந்த சர்வதேச நிதி மூலதனத்திற்கு வேறு நோக்கங்கள் எதுவும் கிடையாது என்பதுதான் அப்பட்டமான பொருளாதார விதி. போனால் போகிறது என மூன்றாம் உலக நாடுகளின் மீது கரிசனம் கொண்டு முதலீடு செய்வது போல ஒரு படத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பூனைக்கு தென் அமெரிக்காவின் பிரேசில் என்னும் தேசம் மிக தைரியமாக இப்போது மணி கட்டி இருக்கிறது!
தனது நாடுகளில் முதலீடாக வரும் பணத்தின் மீது இரண்டு சதவீத வரியை விதிப்பது என பிரேசில் முடிவு செய்துள்ளது. இடதுசாரி சார்புள்ள லூலூ தலைமையிலான அரசின் இந்த துணிச்சலான முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே அதன் நோக்கமாகும். 1988ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியப்புலிகளுக்கு நுரை தள்ளியபோது இத்தகைய வரியை மலேசிய அரசு விதித்தது. அந்நிய முதலீடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் கஜானாவில் இருக்க வேண்டும் என்று சிலி நாடு கட்டுப்பாடு வைத்திருந்தது.
இருக்கும் வரை சுரண்டிவிட்டு அடுத்த நாட்டை நோக்கி ஓடும் முதலீட்டாளர்களுக்கு கடிவாளம் போடவே இத்தகைய நடவடிக்கைகள். அந்நிய முதலீடுகள் மீது போடப்படும் வரியை ஜேம்ஸ் டாபின் என்ற பிரபல பொருளாதார ஆய்வாளர் 1970களில் பரிந்துரைத்தார். இந்த வரிக்கு அவரது பெயரையே வைத்துவிட்டு கிடப்பில் போட்டார்கள். 40 ஆண்டுகள் கழித்து பிரேசில் இத்தகைய பொருளாதார நடவடிக்கைக்கு உயிர் கொடுத்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், உற்பத்தி பாதிப்பு என பெரும் பொருளாதாரச் சிக்கல்களும், நெருக்கடியும் மிகுந்த இந்தக் காலக் கட்டத்திலும் இந்தியா இதுபோன்ற துணிச்சலான முயற்சிகளில் இறங்கப் போவதில்லை என்பது தெரிகிறது. மாறாக, பொதுத்துறை நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை விற்பது என்னும் முடிவுக்கு வந்திருக்கிறது. தான் பசியால் வாடினாலும் பரவாயில்லை, வீட்டிற்கு வந்திருக்கும் கொலைகாரர்கள் மனம் கோணாமல் உபசரிப்பது என்னும் தாராள மயம்தான் காரணம். ”பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயங்கள்” என்றார் முன்னாள் பிரதமர் நேரு. “இல்லை... அவை தேசத்தின் வளர்ச்சிக்கு நந்திகள்” என்கிறார் மன்மோகன்சிங். அவ்வளவுதான் இருவரின் பொருளாதார சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் புதிய பொருளாதாரச் சித்தாந்தத்தின் நுழைவுவாயில். “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும்” துரோகங்களை எதிர்த்து தேசம் விழித்துக் கொண்டாக வேண்டிய நேரம் இது. தேசம் என்றால் மன்மோகன் அரசு அல்ல. மக்கள்!
“உலகை பணம் ஆள்வதற்கு பதிலாக உழைப்பு ஆண்டால் எப்படி இருக்கும்!” என உலகிற்கே நம்பிக்கைகளையும், கனவுகளையும் அள்ளி அள்ளித் தந்த சோவியத் புரட்சியின் நாள் இது. என் போன்ற பலரின் இளமைக்காலங்களில் ஆக்கிரமித்த சோஷசிசச் சித்தாந்தத்தின் நாள் இது. எங்கேங்கோ, யார் யாருடனோ பேசிக்கிடந்த எத்தனையோ இரவுகளில் நிலாவைப் போல நின்றிருந்த சித்திரம் இது. அந்த உயிரோட்டமான இலக்கியங்களில், சோவியத் வீதிகளில் பொழிந்த பனியை எடுத்து மேலெல்லாம் பூசிக்கொண்டு சிலிர்த்துக் கிடந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. நாடி நரம்புகளெல்லாம் வெப்பம் பற்றிக் கிடந்த நாட்கள் கண்முன்னால் தெரிகின்றன. காலத்தை கணிக்காத, மக்களின் உணர்வுகளை புரியாத சோவியத் தலைமையினால் அந்தக் கனவுப் பிரதேசம் ஒருநாள் கிரேன்கள் தூக்கியெறிந்த சிலைகளாய் சிதைந்து போனது. தொண்டையும், நாவும் அடைத்துப் போக விக்கிப் போன நாட்கள் வந்தன. வெடித்துச் சிதறிக் காணாமல் கரைவதற்கு அவை என்ன வெறும் மத்தாப்புகளா? உயிர்த்துடிப்புள்ள நினைவுகள். ஆரோக்கியமான சிந்தனைகள். இதோ அந்தப் பொறிகள் பற்றியெறிந்து கொண்டு இருக்கும் லத்தீன் அமெரிக்கா நம் முன்னால் எழுந்துகொண்டு இருக்கிறது! காலம் காத்துக் கிடக்கிறது. வரலாற்றின் முக்கியமான இந்த நாளை போற்றுகிறேன்!
எந்திரன் அறிவியல் படமாம்! இராவணன் சரித்திரப் படமாம்!!
நமது பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளில் இருந்த சுவராசியங்கள் போய் காலங்கள் ஆகிவிட்டன. இப்போது படித்தால் எரிச்சல்தான் வருகிறது. மிக மோசமான கிசு கிசு, எதிர்பார்ப்புகளைக் கூட்டுகிறோம் என அசட்டுத்தனங்கள், இரண்டு நடிகர்களுக்கு இடையே செயற்கையாக உருவாக்கப்படும் போட்டி என விவஸ்தையில்லாத சங்கதிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக சில முன்னணி நடிக நடிகையரின் பேட்டிகள் இருக்கிறதே.... ‘மனசே ரிலாக்ஸ்’ என சொல்லி அமைதிப்படுத்தத்தான் வேண்டும். அண்மையில் வேறு வழியில்லாமல் படித்த சில செய்திகள் அதிர்ச்சியையும், நகைச்சுவையையும், கோபத்தையும், ஆச்சரியத்தையும், தரக்கூடியவைகளாக இருந்தன.
அதிர்ச்சி:
“ஒவ்வொரு படத்தைக் கிளிக் செய்யும் போதும் அதற்கு முந்தைய வினாடியைத் தவற விட்டுட்டோமோன்னு நினைக்கத் தோணும். எனக்கு இடங்கள், அபிநயங்கள் ஆகியவற்றை விட மனிதர்களை, அவங்களோட இயல்பான பொழுதுகளைப் படம் பிடிக்க ஆசையா இருக்கு”
ரேவின் ரேஞ்சுக்கு மிக நுட்பமான இந்த உணர்வைச் சொல்லி இருப்பவர் அஜித். பில்லா படத்தில் நடித்த பிறகுமா இப்படியெல்லாம்....!
கோபம்:
சல்மான்கான் மற்றும் அசின் நடித்து வெளிவந்துள்ள லண்டன் டிரிம்ஸ் திரைப்படத்திற்கு எதிரான வன்முறையில் வழக்கம்போல் பஜ்ரங்தளத்தினர் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்துமதத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருக்கிறதென்று வழக்கம்போல் பழிசுமத்தி இருக்கின்றனர். மும்பையின் பல திரையரங்குக்குள் புகுந்து வழக்கம்போல் இரும்புக்கம்பிகளால் தாக்கி இருக்கின்றனர். இந்த வழக்கத்திற்கு எதிரான கோபம்தான் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது என்பதை அதற்குள் மறந்துவிட்டனர் போலும்! குப்பை படங்களையும் இவர்களது அதிரடி விளம்பரங்களால் ஓடவைத்து விடுவார்கள் .
நகைச்சுவை:
“நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பது கிடையாது. எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரி உழைக்கிறேன். எந்திரன் அறிவியல் படம். ராவணன் சரித்திரக் கதை. இரண்டிலும் வித்தியாசமான வேடம். ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன்”
இப்படிச் சொல்லி இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யாராய். அறிவுதான் அழகு என்றால் இந்த அம்மாவை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?
ஆச்சரியம்:
சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது பற்றி ஐ.நாவின் பெண்கள் மேம்பாட்டுக்கான நிதியமைப்பு பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வின் ஒரு பகுதியாக திரைப்படங்கள் எத்தகைய பங்கை வகிக்கின்றன என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தனது நடிப்புக்காக ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ள ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் அவர்கள் இந்த ஆய்வுக்குழு முன் தோன்றி “ஹாலிவுட் படங்களில் பலவீனமாக பெண்களைக் காட்டுகிறார்கள். உண்மை வாழ்க்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு இத்தகைய படங்கள் சொல்லும் செய்தியும் காரணமாக இருக்கலாம்” என சொல்லி இருக்கிறார். மேலும் “அத்தகைய பலவீனமான பெண் பாத்திரத்தை ஒருபோதும் தான் ஏற்றுக் கொள்வதில்லை” எனவும் சொல்லி இருக்கிறார்.
திருப்பதிக்கு வந்தவன்
இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி மலையடிவாரத்தில் சந்தேகத்தின் பேரில் அவனை போலீஸார் கைது செய்தனர். அவன் கையிலிருந்த டைரியின் 31.10.2009 தேதியிட்ட பக்கத்தில் தமிழில் இப்படி எழுதப்பட்டு இருந்தது.
அரக்கன் அவன் இங்கு வந்திருக்கிறான். தர்மம் அழிந்து அதர்மம் தோன்றும் போதெல்லாம் அவதாரம் எடுப்பதாகக் கூறியவர் எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்து காத்திருந்திருக்கிறார். சன்னதியில் வந்து நின்றிருக்கிறான் அவன். இன்று போய் நாளை வா என்று கூட தட்ட முடியாமல் சிறப்பு தரிசனம் தந்திருக்கிறார் இவர். ஐம்பதாயிரம் கோடி மதிப்புள்ள பெருமாளின் நகைகளோடு அவனது கணக்கும் சேர்ந்திருக்கலாம். நாள் நெடுக, கால் வலிக்க, கன்னத்தில் போட்டபடி பகவானை தரிசிக்க பொதுவழியில் நம்மக்கள் இன்னமும் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!!
அதற்குப் பிறகுள்ள எல்லாப் பக்கங்களையும் அவன் கிழித்து விட்டு இருந்தான். நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தோடு வந்திருக்கக் கூடும் என போலீஸார் புலன் விசாரணை செய்துகொண்டு இருக்கின்றனர். அவனோ எல்லாம் கொள்ளை போய்விட்டது என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறான்.
முக்கிய மூன்று செய்திகளும், முக்கிய நமது பத்திரிகைகளும்
ஒரே நாளில் சென்செக்ஸ் 507 புள்ளிகள் உயர்ந்தது!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.296 உயர்ந்தது!!
உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்கிறது!!!
இன்றைய முக்கிய செய்திகள் இவை. முதல் இரண்டு செய்திகள் கிட்டத்தட்ட அனேகமாக அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் இன்று பெரிது பெரிதாய் வந்திருக்கின்றன. மூன்றாவது செய்தியைச் சொல்லி இருப்பவர் இந்த தேசத்தின் விவசாயத்துறை அமைச்சர் மாண்புமிகு சரத்பவார் அவர்கள். புது தில்லியில் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் உணவு தானியப் பொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடும் பண வீக்கம் கவலையளிக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார். தீக்கதிர் பத்திரிகையில் இதுதான் முதல் பக்கத்தின் முக்கியச் செய்தியாக வந்திருக்கிறது. முக்கிய பத்திரிகைகளுக்கு இதெல்லாம் முக்கியச் செய்தியாகத் தெரியவில்லை போலும். தங்கமும், பங்குகளுமா பசியாற்றப் போகின்றன?
பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டு இருக்கின்றனர். வரலாறு காணாத அளவுக்கு பருப்பு வகைகளின் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. அரிசி உற்பத்தி 13 மில்லியன் டன் குறைவாக இருக்கிறது. சமாளிப்பதற்குத் தேவையான கையிருப்பு இருப்பதாகக் கூறி வந்தது மத்திய அரசு. இப்போது, இறக்குமதி மூலம் சரிசெய்ய இருக்கிறோம் என்கிறார் விவசாய அமைச்சர்.
தேசத்தை அச்சுறுத்தும் ஒரு மாபெரும் ஆபத்து சுனாமி போல் வர இருக்கிறது என்பதுதான் உண்மை. அதைத் தடுப்பதற்கான தெளிவான திட்டங்கள் இல்லாமல், இன்னமும் மன்மோகன் சிங் “ஒன்பது சதவீத வளர்ச்சி” என்று சதாநேரமும் உச்சரித்துக் கொண்டு இருக்கிறார்.
ஏறிக்கொண்டு இருக்கும் விலைவாசி, மேல்தட்டில் இருப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. மத்தியதர வர்க்கத்தினரை ஊசிமேல் உட்கார வைத்து அவதியுறச் செய்யும். அடித்தட்டு மக்களை கொன்று தீர்க்கும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் சதவீதம் 46 என UNICEF புள்ளிவிபரம் சொல்கிறது. இது ஆப்பிரிக்காவின் சஹாராப்பகுதியை விட அதிகம் என்றும் அதே அமைப்பு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. வரும் உணவுப் பஞ்சத்தினால் இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
சாதாரண மக்களின் வாழ்க்கை, வேதனைகள், துயரங்கள் எல்லாம் இந்த முக்கிய பத்திரிகைகளின் கண்களுக்குத் தெரிவது இல்லை. அவர்களின் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் பொதுமக்களிடம் எழுவதை அவை விரும்புவது இல்லை. அதனால்தான் இதை பெரிய அளவில் வெளிப்படுத்தும் அக்கறை இல்லை.
வாழ்க பத்திரிகை தர்மம்!!!
கிண்டர் ஜாய்
மேன்சன் மாடியிலிருந்து
முகச்சவரம் செய்தபடி பார்த்தவன்
பட்டாம்பூச்சியானேன்
இன்று சனிக்கிழமையாதலால்
சீருடைகள் இல்லை
சாலையெல்லாம்
வண்ண வண்ணப் பூக்கள்
அரை நாள் முடித்து
ஆறரை மணி நேரம் சென்றால்
என் பூக்களை பர்ர்க்கலாம்
நேற்றிரவே
இரண்டு கிண்டர் ஜாய்களை
வாங்கி வைத்து விட்டேன்
வழித்தெறிய முடியாத
அன்பு முத்தங்களும்
ஆசை முத்தங்களும்
ஒட்டிய உரோமங்களோடு
திங்கட்கிழமை காலை
மீண்டும் இங்கே
திரும்பி வருவேன்.
மாதவராஜ் பக்கங்கள் 15
பாராளுமன்றத் தேர்தலோடு ஓய்வெடுக்கப் போன ஜெயலலிதா திரும்பவும் வந்து அறிக்கை வாள்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டார். முல்லை பெரியாறு, ஸ்பெக்டராம் ஊழல், உலகத்தமிழ் மாநாடு என்று விர் விர்ரென சத்தங்கள் கேட்கின்றன. அறிக்கைகளின் அரசரை இவைகள் எதுவும் செய்துவிட முடியாது. அவரது ஆயுதக்காப்பகத்தில் ஓரு கோடி அறிக்கைகள் இருக்கின்றன. அவர் பாட்டுக்கு எடுத்து விட்டுக்கொண்டே இருக்கிறார். ”நீ யோக்கியமா” “நீ மட்டும் யோக்கியமா” இந்த முட்டல் மோதல்களை பார்த்து பார்த்து, கேட்டு கேட்டு, சலித்து சலித்துப் போனாலும் மக்கள் மீண்டும் அதை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். தங்களை வாட்டும் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் யோசிக்காமல் சுவராசியமான மனநிலைக்கு நகர்த்தப்படுகின்றனர். இவர்களை விட்டால் ஆளில்லை என்பதாய் சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த ‘ஒத்தையா ரெட்டையா’விலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது.
‘புன்னகைக்கும் பிங்கி’ ஞாபகமிருக்கிறதா. இந்தியாவுக்கு இன்னொரு ஆஸ்கார் வாங்கித் தந்த ஸ்மைல் பிங்கிதான். அந்த குட்டிப்பெண் இப்போது ஒன்றும் புன்னகைக்கவில்லை. ஆஸ்கார் பரிசு விழாவுக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் சென்று வந்த பெண் இப்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தின் அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார். அவரோடு ராம்பூர் தபாயைச் சேர்ந்த பெரியவர்களும் சென்று கொண்டு இருக்கின்றனர். குடிநீர் முதல் எந்த அடிப்படை வசதியுமற்ற தங்கள் கிராமங்களுக்கு எதாவது செய்ய முடியுமா என்கிற வேட்கை அவர்களுக்குள் இருக்கிறது. தங்கள் கிராமத்தை உலக வரைபடத்தில் காட்ட வைத்த அந்தப் பெண்ணுக்கு கிடைத்த பேரை உபயோகித்து ஒரு அங்குலமாவது தங்களை உயர்த்திக் கொள்ள முடியாதா என அந்த மக்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. தூண் விட்டு தூண் என்னும் அரசின் அலைக்கழிப்பால் சோர்ந்து போகாமல் பிங்கி நடந்து கொண்டு இருக்கிறார். தன் மண்ணுக்கு எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார் பிங்கி. ஆஸ்கார் ’புகழ்’ மற்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
“நான் யாரையும் புகழ்ந்ததே இல்லை. அனேகமாக எனது விமர்சனத்திற்கு ஆட்படாத தலைவர்களோ, மனிதர்களோ தமிழ்நாட்டில் இல்லை. எனக்கிருக்கிற ஆச்சரியமெல்லாம் என்னை இவர்கள் புகழ்ந்துகொண்டே இருப்பதுதான். அப்போதும் சரி, இப்போதும் சரி. எவ்வளவு நல்லவர்கள் நீங்கள். எல்லோரையும் இகழ்ந்துகொண்டே இருக்கும் ஒருவனை, புகழ்ந்துகொண்டே இருப்பதை விட உயர்ந்த குணம் வேறு இல்லை. எனவே உங்கள் அன்புக்கு நன்றி பாராட்டுகிறேன். அறியாமையால் உங்களை நான் இகழ்ந்திருக்கலாம். அறிந்து கொண்டதினால் நீங்கள் புகழ்ந்திருக்கலாம். “
இப்படி பேசியிருப்பவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட ஜே.கே பவளவிழா மலர் வெளியீட்டு விழா ஏற்புரையில்.
சமீபத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிக்க விஷயம் ஒன்றை இணையத்தின் மூலம் அறிய நேர்ந்தது. இலட்சம் இலட்சமாக மக்களைக் கொன்று பெரும் இனவெறி கொண்டவனாய் சித்தரிக்கப்படுகிற ஹிட்லர் ஒரு ஓவியர் என்னும் செய்திதான் அது. அவர் வரைந்த படங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அருமையாக இருக்கின்றன. இப்படி ஒரு கலைமனம் கொண்டவனுக்குள் மனிதர்களை அப்படி கொன்று குவிக்கும் இரக்கமற்ற கல்மனம் இருந்தது என்பது புதிராக தெரிகிறது. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் “அந்தப் படங்களை எல்லாம் பாருங்கள். ஒரு விசித்திரம் உண்டு” என்றார். எனக்குப் புரியவில்லை. ”அவரது ஓவியங்களில் ஒரு மனிதரைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. எல்லாம் நிலப்பரப்புகளாகவே இருக்கும். அதுதான் அவனுக்கு தன் நிலப்பரப்பை விரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்கிற வெறி!” என்றார். உண்மைதான். ஹிட்லரின் ஓவியங்களில் மனித முகங்கள் இல்லை! அவருக்கும் இல்லை!!
புஷ் மீது செருப்பு வீசப்பட்டதும், உலகம் முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். நேற்று அதுகுறித்த சில கார்ட்டூன்களை இந்த இணையத் தளத்தில் பார்த்தேன். வாய்விட்டு சிரிக்க வைத்தன. நீங்களும் ரசிக்க.....
அவர் அனுப்பிய குட்டிக்கதையை இங்கு பதிவிட்டதில் உற்சாகமாகிவிட்டார் போலும் பொன்ராஜ். பல செய்திகளையும், ஜோக்குகளையும் அனுப்பிக் கொண்டு இருக்கிறார். அதில் சார்லி சாப்ளிளின் புகழ்வாய்ந்த சொற்றொடர்கள் என்னைக் கவர்ந்தன. அவை இதுதான்:
- இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நமது துயரங்களும்தான்.
- நான் மழையில் நடந்து செல்லவே ஆசைப் படுகிறேன். ஏனென்றால் என் கண்ணீர் மற்றவர்களுக்குத் தெரியாது.
- உங்கள் வாழ்க்கையில் மிகவும் வீணடிக்கப்பட்ட நாள் எதுவென்றால், நீங்கள் சிரிக்க மறந்த நாளே!
இரண்டாவது சொற்றொடரிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
எனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது!
கல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்தேன். அழகான பூக்கள் அதில் இருந்தன. அம்முதான் அனுப்பி இருந்தாள். வீட்டில் வைத்து சொல்லாமல், இப்படி ஆச்சரியம் தரவேண்டும் என நினைத்திருக்க வேண்டும். ரசித்துவிட்டு வேலையில் மறந்து விட்டேன்.
சங்க அலுவலகம் எல்லாம் சென்று வீட்டிற்கு செல்லும்போது இரவாகி விட்டது. நானாக எதாவது சொல்லுவேன் என நினைத்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து ஏமாந்துபோய் அவளாக கேட்டாள். “பிறந்தநாள் வாழ்த்து உங்களுக்கு வந்திருந்ததா”வென கேட்கும்போது அவள் குரல் கம்மியிருந்தது. அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அதை அவள் கேட்காமல், நாமேச் சொல்லாமல் போய்விட்டோமே என்று எரிச்சல் வந்தது. “ஒண்ணும் வரவில்லையே” என்றேன். பதற்றத்துடன் “வரல்லியா.... நான் அனுப்பியிருந்தேனே” என்றாள்.
இந்த இடத்திலாவது அவளை சமாதானப்படுத்த முயன்றிருக்க வேண்டும். எனது மறதி, அவளுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைத் தரமுடியாத இயலாமை எல்லாம் எனக்குள் அடைந்திருந்தது. “ஆமா... இத வீட்டிலேயே சொல்லியிருக்கலாமே... ஒரு கார்டு அனுப்பனுமாக்கும்” என்றேன். துடித்துப் போனாள். “அப்ப கார்டு வந்துச்சா...” என்றாள் தழுதழுத்து. “ஆமா... பெரிய பிறந்த நாள்... இப்படியெல்லாம் கொண்டாடனுமாக்கும்” என்றேன் வீராப்புடன். “எனக்கு ஒங்க பிறந்தநாள் பெருசுதான்.... நா ஒரு முட்டாள்...” என அழ ஆரம்பித்தாள். அவளை சமாதானப்படுத்த முடியவில்லை அன்று முழுவதும்.
ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதியும் இந்த ஞாபகம் வந்து கொல்கிறது. ‘என்னடா மனுஷன் நீ’’ என்று அவமானமாய் உணர்கிறேன். ‘ஒனக்குல்லாம் ஒரு காதல், ஒரு கல்யாணம்’ என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஆண் என்னும் அகங்காரம் பிடித்த, அழுகிய மனிதனாய் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன். பிறப்போடு ஒட்டியிருப்பதை, பிறந்தநாளில் அறிவது சரிதான். எனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது.
பத்து வருடங்களுக்கு முன்பிருக்கும். ஒரு அக்டோபர் 31ம்தேதி மாலையில் சாத்தூரிலிருந்து திருச்செந்தூர் அருகில், காயாமொழிப் பக்கத்தில் இருக்கும் செங்குழி என்னும் எங்கள் சொந்த ஊருக்கு அம்மாவைப் பார்க்க சென்றேன். கோவில்பட்டியில் இறங்கி தூத்துக்குடி பஸ்ஸுக்கு காத்திருக்கும்போது எழுத்தாளர் கோணங்கியை பார்த்தேன். அப்படியே கைகளை அகல விரித்து, வாய்விட்டுச் சிரித்தபடி கட்டிக்கொண்டார். பிரியம் வந்தால், அப்படி நெகிழ்ந்து போகிறவர் அவர். “டீ சாப்பிடுவோம்” என அழைத்தார். பேசிக்கொண்டே இருந்தார்.
திடுமென ஞாபகம் வந்தவராய் “எங்க போறீங்க...” என்றார். சொன்னேன். ”என்ன திடீர்னு அம்மாவைப் பார்க்க...?” என்றார். “நாளைக்கு என் பிறந்தநாள். அம்மாவைப் பார்த்துட்டு வந்துரணும். அவ்வளவுதான்” என்றேன். எல்லா பிறந்த நாட்களுக்கும் அப்படிச் செல்வதில்லை. சிலதடவை அப்படித் தோன்றும். என்னையே உற்றுப் பார்த்து விட்டு, என் கைகளை கெட்டியாய் பற்றிக்கொண்டார். அதில் அவர் சொல்ல வந்த எல்லாமும் இருந்தது.
சட்டென்று “நாளைக்கா பிறந்தநாள்?” என கேட்டார். ஆமாம் என்றேன். “நவம்பர் ஒண்ணா” என்றார். ஆமாம் என்றேன். “என்னப்பா... இது” என்று ஆச்சரியப்பட்டவர், “எனக்கும் நாளைக்குத்தான் பிறந்த நாள்” என்றார். “இதைக் கொண்டாடனுமே என்றார். அவருடன் அந்த நேரத்தில் மதுவருந்த வேண்டும் என ஆசை வந்தது. “இல்ல... கோணங்கி, ஊருக்குப் போய் அம்மாவைப் பார்க்கணும்...” என்றேன். “ம்... பரவாயில்ல... இன்னொரு டீ சாப்பிட்டும் கொண்டாடலாம்” என்றார். பேசிப் பேசி மேலும் இரண்டு டீக்கள் சாப்பிட்டு, நேரம் ஆகிவிட்டதையறிந்து, அவரிடமிருந்து பிரிந்தேன்.
அதன்பிறகு தூத்துக்குடி வழியாக ஊருக்குச் செல்ல முடியாது. திருநெல்வேலி சென்று, திசையன்விளைக்குச் செல்லும் கடைசி பஸ்ஸைப் (அதற்கு காட்டுத் திருநெல்வேலி என்று ஒரு பேர் உண்டு) பிடித்து ஊரில் இறங்கும்போது மணி இரவு பதினொன்றே முக்கால் இருக்கும். அந்த சின்ன ஊர் முழுவதும் அசையாமல் மூச்சு விட்டுக் கிடந்தது. வாசலில் நின்று அம்மா என்றேன். “யப்பு... மாதவா...” என்று அவசரமாக எழும் சப்தம் கேட்டது. “அம்மா... மெல்ல வாருங்கள்’ என்றேன். வருவதை அம்மாவிடம் சொல்லியிருக்கவில்லை. லைட்டைப் போட்டு, கதவைத் திறந்து, என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்தார்கள். சிரித்துக்கொண்டே “எம்புள்ளைக்கு நாளைக்கு பொறந்த நாளுல்லா. எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கணும்னு சாமிய வேண்டிக்கிட்டு இருந்தேன். நீயே வந்துட்ட...” என ஒரே சந்தோஷம் அம்மாவுக்கு. இதைக் கொடுக்கத்தானே வந்தேன். ”யப்பு... இனிப்பா கொடுக்குறதுக்கு ஒண்ணுமில்லய ஒனக்கு” என்றவர்கள் கொஞ்சம் சீனியைத் தந்து, தண்ணீரும் தந்தார்கள். அந்த இனிப்பு இருக்கிறது அம்மாவின் நினைவாக மட்டும் இன்று.
பிறந்தநாட்களில் இப்போது கோணங்கியும் நினைவுக்கு வந்து விடுகிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல காலையிலிருந்து போன் செய்துகொண்டு இருக்கிறேன். சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக ஒரு பெண் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
நேற்று இரவு சரியாக பனிரெண்டு மணிக்கு என் மகள் எனக்கு ஒரு பேனாவைத் தந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாள். அவளுக்கு என் அம்மாவின் பேரைத்தான் வைத்திருக்கிறேன். உற்சாகமாய் எனது இன்னொரு வருடம் ஆரம்பிக்கிறது.......
| “பிடித்தவர், பிடிக்காதவர் ஏழு” என்னும் நேற்றைய பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். வாசித்து விட்டீர்களா? இந்தத் தொடர் விளையாட்டுக்கு மேலும் மூவரை அழைத்துள்ளேன். |











