வெண்ணிலா கபடிக் குழு

VennilaKabadiKuzhu

இருபத்தைந்து வருடங்களுக்கு மேலிருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் escape to victory  படம்பார்த்த போது ஏற்பட்ட மன ஒட்டங்கள் திரும்பின. முழுக்க கால்பந்து விளையாட்டை வைத்து எடுக்கப்பட்ட அந்தப்படம் ரொம்ப காலத்துக்கு கூடவே வந்துகொண்டிருந்தது. பீலி  ஒரு வீரராகவே வருவார். இறுதிக்காட்சிகளில் மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி ரசிக்கும். ஒரு விளையாட்டை வைத்து, திரைப்படத்தை இத்தனை சுவராஸ்யமாக எடுக்க முடிகிறதே என்ற பிரமித்துப் போயிருந்தேன். இத்தனைக்கும் காலபந்தை அவ்வளவு தூரம் விரும்பி பார்க்கிறவன் நான் இல்லைதான். பிறகு சில வருடங்களுக்கு முன் பார்த்த லகான்  ஹிந்தித்திரைப்படம்  ‘நம்மூர்’ கிரிக்கெட்டை வைத்துத்தான் கதை. ஆரவாரமாக பேசப்பட்ட படம். அதிலும் விளையாட்டை ரசிக்க முடிந்தது.

இவையெல்லாவற்றையும் விட வெண்ணிலா கபடி குழுவின் மீது எனக்கு மதிப்பு ஏற்பட்டது. முந்தாநாள்தான் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தமிழில் ஒரு முக்கியமான படமாகப் படுகிறது. ஆஹா, ஓஹோவென்று பெரிய பரபரப்புக்கள் இல்லாமல் அதுபாட்டுக்கு இந்த மண்ணையும், மண்ணின் விளையாட்டையும் நம் முன்னே அழகாகச் சொல்கிறது. escape to victoryயில் நாஜிக்களின் சிறையிலிருந்து, இந்த விளையாட்டை முன்வைத்து தப்புவது என்னும் பின்னணி பார்வையாளனை திரையோடு முடிச்சுப் போட்டு வைத்திருக்கும். லகானிலோ, காதல் நாட்டுப்பற்று போன்ற இத்யாதிகளும் சினிமாச் சமாச்சரங்களும் கலந்துதான் விளையாட்டு ஊட்டப்பட்டிருக்கும்.

வெண்ணிலா கபடி குழு அப்படியில்லை. காதல் இருக்கிறது. இருப்பதே தெரியாத காதல். போட்டி இருக்கிறது. சினிமாவின் வில்லத்தனங்களை ஓரளவுக்கு வடிகட்டிய போட்டி. கபடி, கபடி, கபடி என்னும் இந்த வார்த்தைகள் படம் முடிந்த பிறகும் காற்றில் நம்மைச் சுற்றி சுற்றி அலைந்து கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய கனவுகள் இல்லாமல், கபடி  மீது ஆர்வம் கொண்ட ஒரு ஊரின் வாலிபர்கள் அந்த விளையாட்டோடு சந்திக்கும் தருணங்கள்தான் இந்தப் படம். ஒவ்வொரு தடவை தோற்ற போதும், ’சரி விடுடா, அடுத்த விலையாட்டுல பாத்துப்போம்’ என்னும் சமாதானம்,  ஊர்க்காரர்கள் முன் தோற்று விடக் கூடாது என்னும் தன் மானம், “நீ சரியா விளையாடுல” என்னும் கடுகடுப்பு, என்று அந்த தருணங்கள் மிக நேர்மையாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. முதன் முதலாய் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதும், ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதும் அதைப் பார்த்து ஒரு விளையாட்டு வீரன் அழுவதும் முக்கியமான தருணம். வீட்டில் இருப்பவர்களுக்கு இவர்களது போக்கு பிடிக்காமல் திட்டுவதும், பிறகு ‘அட; என்று விளையாட்டைப் பார்ர்க்க வருவதும் எவ்வளவு அர்த்தமுள்ள தருணம்.

கபடியை ஒவ்வொருவரும் உச்சரிப்பதில் இருந்து,  கால்சட்டையை லேசாய் தூக்கிக் கொண்டு கோட்டைத் தாண்டுவது என நுட்பமான சித்தரிப்புகள் மிக கவனமாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. கீழே உட்கார்ந்தபடியே ஒருவன் பாடி, காலை கையை நீட்டுவானே அதே போன்று ஒருவனை எங்கள் ஊரிலும் பார்த்திருக்கிறேன். விளையாட்டின் கூறுகளை காமிராவில் கொண்டு வருவது சாதாரண காரியமல்ல. இந்த ஒவ்வொரு காட்சியையும் “ஸ்டார்ட் காமிரா..” சொல்லியா எடுத்தார்கள் என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள். தமிழிச் சினிமா இதுவரை காட்டாத கிராமத்துக் காட்சிகள் சில்வற்றை போகிற போக்கில் மிக அனாயசமாக காமிரா காட்டிச் செல்கிறது.

படத்தில் விளையாட்டை எதுவும் முந்தி விடவில்லை. இயக்குனரை அதற்கு தூக்கி வைத்துக் கொண்டாடலாம். இறுதிக் காட்சியிலும் விளையாட்டுத்தான் அலைக்கழிக்கிறது. "கபடி, கபடி”  என்னும் வார்த்தைகள் வாழ்வின் வெம்மையோடும் துயரத்தோடும் அப்போது ஒலிக்கின்றன. "நீச்சலுக்கென்று ஆற்றுக்குப் போனவனை உள்வாங்கும் சுழி, அதைக் கண்டும் காணாமல் போகும் நதி, இதுதான் காலத்தின் விதி” என்னும் கவிதையாய் சோகம் படருகிறது.

பந்தா நாயகர்கள் இல்லாமல் மிகச் சாதாரணமாக நாம் நம் ஊரில் பார்க்கும் நமது நண்பர்களையும், நம்மையும் பார்த்துவிட்டு வந்தது போலிருக்கிறது. மசாலாத் தனங்கள் இல்லாமல், நேர்மையாய் இந்த மண்ணின் விளையாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெரிய பட்ஜெட் இல்லாமல் மிக குறைந்த செலவில் படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஊர் என்றாலே சமீப காலமாய் திரையில் வந்த பிம்பங்களையே திரும்பவும் காட்டாமல்,  இன்னொரு அசலான மண்ணையும், வாழ்வையும் காட்டியிருக்கிறது. அதனாலேயே இந்தப் படம் பிடித்திருக்கிறது.

இன்னொருமுறை பார்க்க வேண்டும்.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உத்தர கோச மங்கை பூங்குன்றன்5 ஏப்ரல், 2009 அன்று AM 9:56

    மாதவ், Escape 2 Victory ஹாலிவுட்டின் ஒரு கம்யூனிச விரோத படம். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் அளப்பரிய தியாகத்தை மறைக்க திட்டமிட்டு இது போன்ற பல படங்கள் அமெரிக்காவால வெளியிடப்பட்டன, நீங்கள் கம்யூனிஸ்ட் இல்லை என்பது எனக்குத் தெறியும், ஆனால் கம்யுனிச விரோதி என்பதை இப்போதுதான் அறிந்தேன்

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் பார்க்கணும் :-(

    பதிலளிநீக்கு
  3. மாதவ்,

    இந்தப் படம் எடுத்த இயக்குனர் இலக்கியத்தில் அதிகப் பரிட்சயம் இல்லாதவர், உலகத் திரைப்படங்கள் அதிகம் பார்த்திராதவர். கபடி விளையாட்டு அவரது தந்தையை அலைக்கழித்ததையும் அதனால் அவர் இழந்தவைகளையும் படமாக்கவேண்டி எடுத்திருக்கிறார்.

    பழனி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். படம் அந்தப் பகுதியில்தான் படமாக்கப் பட்டிருக்கிறது. இதுவரை வந்த கிராமப் படங்களில் கிராமத்தை அதன் உண்மை முகத்துடன் எந்த ஒப்பனையும் இல்லமல் காட்டியிருக்கிறார்.

    படத்திற்கு பாஸ்கர் சக்தி வசனம் எழுதியிருக்கிறார். படத்தின் பலங்களுள் அதுவும் ஒன்று.

    உன்னதம் மாத இதழில் இயக்குனரின் பேட்டி வந்திருக்கிறது. கிடைத்தால் படியுங்கள்.

    மேலும் வெட்டிப்பயல் பாலாஜி இதற்கு ஒரு நல்ல விமரசனம் அவரது வலையில் எழுதியிருக்கிறார்.

    சத்தமில்லாமல் கோவையில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப் போன்ற படங்கள் வரவேற்பைப் பெருவது ஆரோக்யமானது.

    பதிலளிநீக்கு
  4. அருமையாக இருக்கிறது உங்கள் விமர்சனம்!

    //வடகரை வேலன் said...
    மாதவ்,

    சத்தமில்லாமல் கோவையில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.//

    அண்ணாச்சி ஏன் சவுண்ட் சிஸ்டத்தில் ஏதும் பிரச்சினையா?

    பதிலளிநீக்கு
  5. கண்டிப்பாக இது சிறந்த படம் தான் இயல்பாய் இருக்கும் இந்த படத்தின் காட்சிகள் தான் இந்த படத்தின் பலமே
    இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி நாயகனும் அவர் நண்பரும் தெருவழியாக நடந்து வரும்பொழுது அந்த வழியாக சைக்கிளில் மூட்டை வைத்து தள்ளி கொண்டு போகும் நண்பரின் தந்தயை பார்த்தவுடன் நண்பர் சட்டென்று நாயகனிடம் நிபோ மாப்ள நான் வருகிறேன் சொல்லிவிட்டு அவரிடம் சைக்கிளை வாங்கியபடி முன்னாடியே சொல்லகூடாதா நான் வந்திருப்பன்ல என்று சைக்கிளை நண்பர் தள்ளி கொண்டு போவார் இந்த காட்சியை பார்த்துவிட்டு எனக்கு நிண்ட பெருமுச்சு தான் வந்தது ரோட்டில் யாராவது அடிபட்டால் எவன் செத்தால் எனக்கு என்ன என்று பொய் கொண்டு இருக்கும் நகரவாசிகள் எங்கே கிராமங்களில் இயல்பாக உதவி செய்யும் அவர்கள் எங்கே

    பதிலளிநீக்கு
  6. தாமதமான விமர்சனம் என்றாலும் தரமான விமர்சனம்.

    படம் பார்க்கும் அளவுக்கு நேரமில்லை!! எனக்கு!!! பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பு நீண்ட நாட்களாக இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமர்சனம் இதை பார்த்து புரித்தவன் நான் ஒரு லாகான் பார்த்து ஆர்பரைத்து போல் என் தமிழ் மண்ணின் வாசனையை காட்டிய படம்

    நேற்று ஒரு கிராம்த்தின் திருவிழா பார்த்தேன் தொட்டியத்தில் அப்படியே ஒரு கபடி குழுவும் இருந்த்து ....

    :-) அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  8. நல்ல படத்திறுகு
    நல்ல விமர்சனம்.
    அருமையான படம்..

    பதிலளிநீக்கு
  9. படம் யதார்த்தமாக கதாநாயகத்தனமேதுமின்றி ஆர்ப்பாட்டமில்லாமல் தேர்ந்த இசை மற்றும் தொழில் நுட்பத்துடன் அருமையாக இருந்தது. பாஸ்கர் சக்தி அவர்களின் வசனமும் கூடுதல் பலம்.
    இயக்குனர் சுசீந்திரனுக்கு வாழ்த்துகள். படம் குறித்த தங்களின் பகிர்வு மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல படத்திற்கு நல்ல விமர்சனம்... பல படங்களில் காட்டத் தவறிய விஷயங்களை இந்த படத்தில் சத்தமே இல்லாமல் மிக இயல்பாக காட்டியுள்ளார் இயக்குனர்.

    இந்த வருடத்தின் மிக சிறந்த படம் வருடத்தின் துவக்கத்திலே வந்து விட்டது.

    சன்\கலைஞர் டீவிக்கள் கண்ட குப்பை படத்தை வாங்கறதுக்கு பதில் இந்த படத்தை வாங்கி புரமோட் பண்ணியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. வந்தும், கருத்தும் பதிவு செய்தும் சென்ற நைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    வடகரை வேலன் படம் குறித்து மேலதிக தகவல்கள் ஆச்சரியமானவை.

    வெட்டிப்பயல் அவர்களின் விமர்சனம் படிப்பேன்.

    உத்திரகோசமங்கை அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பார்த்த escape to victory படம் வைத்து சில ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறீர்கள். உங்கள் பார்வைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே..நானும் இப்படத்தை கடந்த வெள்ளியன்றுதான் பார்த்தேன். நீங்கள் தியேட்டரில் பார்த்திருக்கக் கூடும்.நான் இணையத்தில்.

    என் மனவரிகளை அப்படியே பதிந்திருக்கிறீர்கள்.

    சாப்பிடாமல் தாயிடம் எரிந்துவிழுந்து செல்லும் நாயகன் காரணத்தை நண்பனிடம் விளக்கும் வசனத்தில் அழுகை வந்தது எனக்கு.

    //இன்னொருமுறை பார்க்க வேண்டும்.//

    நானும் !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!