மோடி : எழுந்திருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டும், எழுதப்பட்ட வரலாற்றின் தீர்ப்பும்!

modi4

 

வெறிபிடித்த வாட்களின் முன்னால் கண்களில் மரண பயம் தெறிக்க, கும்பிட்டு நிற்கும் அந்த இளைஞனின் முகம் கடந்தகாலத்திற்குள்ளிருந்து இன்னும் தலையெட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பும், 50 கரசேவகர்களும் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் மூஸ்லிம் மக்களை நரவேட்டையாடிய சங்பரிவாரத்தின் கொலைவெறியும் தாண்டவமாடுகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகும் அந்த  அதிர்வுகள் இன்னும் இந்த நிலத்தில் அடங்காமலிருக்கிறது. கோத்ரா ரயில் எரித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பெரும் குறைபாடுகளோடும், குளறுபடிகளோடும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சங்பரிவாரத்தினர் நடத்திய எல்லையற்ற வதைகளுக்கும், பெண்கள் மீதான  வன்முறைகளுக்கும் இங்கு பெரிதாய் எந்த தீர்ப்புகளும் இல்லை.

 

இப்போது, இவையெல்லாவற்றுக்கும் மூலமாகவும், மூளையாகவும் இருந்தவரைச் சுட்டிக்காட்டியபடி நீண்டிருக்கின்றன உண்மையின் விரல்கள். முஸ்லிம்களுக்குச் ‘‘சரியான பாடம்’’ கற்பித்திட வேண்டும் என்று கூறி, முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்திற்கும் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி உடந்தையாக இருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்களுடன் உறுதிவாக்குமூலம் ஒன்றை மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

குஜராத் மாநிலத்தில், 2002-ல் முஸ்லிம்கள் மீது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மதவெறிப் பரிவாரம் இனப்படுகொலைகளை நடத்திய சமயத்தில் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட், தற்போது உச்சநீதிமன்றத்தில் உறுதி வாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், ‘‘கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீக்கிரையாக்கப்பட்டு அதில் பயணம் செய்த 50 கரசேவகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, 2002 பிப்ரவரி 27 அன்று பின்னிரவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அப்போது அவர் காவல்துறை அதிகாரிகளிடம், இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதித்திடுமாறு கேட்டுக்கொண்டார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் சஞ்சீவ் பட் குறை கூறியிருக்கிறார். இக்குழுவானது தன் பணியை செய்யவில்லை என்றும், இனப்படுகொலைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வந்த சாட்சிகளையும் கூட மிரட்டியது என்றும் குறிப்பிட்டுள்ள சஞ்சீவ் பட், அதன்காரணமாகத்தான் உச்சநீதிமன்றத்தில் உண்மைகளைக் கூறுவதற்காக, தானே உறுதி வாக்குமூலம் பதிவு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

‘‘கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது. இச்சம்பவத்தைக் கண்டித்து ஏற்கனவே பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இனியும் நடக்காத வகையில், முஸ்லீம்களுக்குச் சரியான பாடம் கற்பித்திட வேண்டும். இந்துக்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. அவர்களது கோபம் வெளிப்பட அனுமதிக்க வேண்டியது அவசியம்’’ என்று முதல்வர் மோடி, காவல்துறை அதிகாரிகளிடையே பேசியதாக பட் தனது உறுதி வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மோடியின் இந்தப் பேச்சு, காவல் துறையினர் மத்தியிலும் மாநில நிர்வாகத்தின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது அடுத்தநாளே நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் வெளிப்பட்டது என்று சஞ்சீவ் பட் தன் உறுதிவாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இக்கூட்டம் நடைபெற்றபின் அதற்கு அடுத்த நாள் (2002 பிப்ரவரி 28) குல்பார்க் சொசைட்டி படுகொலை சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில்தான் காங்கிரஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த  ஜாப்ரி கொல்லப்பட்டார். அப்போது சஞ்சீவ் பட் மாநிலக் காவல்துறை உளவுப்பிரிவில் துணை ஆணையராக இருந்தார். மோடி நடத்திய கூட்டத்திலும் இவர் பங்கேற்றிருக்கிறார்.

 

முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தன் பணியை ஒழுங்காக செய்யவில்லை. இனப்படுகொலைகள் தொடர்பாக உண் மையைச் சொன்னவர்களையெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மிரட்டுகின்றனர். கே.டி. பந்த் என்பவர் 2002-ல் உளவுத்துறை உதவி அதிகாரியாக இருந்தவர். தன்னைக் குற்றம்புரிந்தவராகக் கருதி, தன்னைக் கைது செய்யப்போவதாக மேற்கண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு மிரட்டுவதாகத் தன்னிடம் கூறியதாக பட் தெரிவித்திருக்கிறார். சஞ்சீவ் பட், உறுதி வாக்குமூலத்துடன், மோடிக்கு எதிராக பல்வேறு சாட்சியங்களையும், ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சஞ்சீவ் பட்டின் இந்த வாக்குமூலத்தை மறுப்பதற்கு குஜராத் அரசும், சிறப்பு புலனாய்வுக்குழுவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், மோடியின் பங்கு என்ன என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் எழுப்பியுள்ளது.

 

இப்படிப்பட்டவர்  காலத்தில்தான் குஜராத் வளர்ச்சி கண்டிருப்பதாக சில பத்திரிகைகள் நெஞ்சு விம்ம பேசுகின்றன. ‘இவர் போல ஒரு முதல்வர் தமிழகத்துக்கு எப்போது கிடைப்பார்?’ என தினமலர் சில வாரங்களுக்கு முன்பு தனது ஏக்கத்தைத் தெரிவித்திருக்கிறது. இவர்தான் தனக்குப் பிடித்த தலைவராக  காந்தியவாதி அன்னா ஹசாரே அகமகிழ்ந்திருந்தார். கடந்தகாலத்தை இவர்கள் மறந்துவிட்டுப் பேசுகிறார்களா? அல்லது இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்று கருதுகிறார்களா?  அல்லது மனம் திருந்திய மனிதனாக ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது அவரது இந்த கிரிமனல் செய்கைகளைத்தான் இவர்கள் கொண்டாடுகிறார்களா?

 

எப்படி இருந்தாலும்,  வரலாற்றில் ஹிட்லர்களின் வரிசையில்தான் மோடிக்கு இடமிருக்கிறது. அந்த தீர்ப்பை யாராலும் திருத்தவோ, அழிக்கவோ முடியாது.

(ஆதாரம்: தீக்கதிர்)

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மோடியை ஹிட்லருக்கு இணையாக கூறுவதை விட, ஸ்டாலினோடு ஒப்பிடுவதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து!

    ஸ்டாலின் காலத்தில், கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, சுமார் 30 லட்சம் என்கிறது, விக்கிபீடியா!

    பதிலளிநீக்கு
  2. ரம்மி வரலாற்றினை சரியாக படிப்பது நலம். . உலகறிந்த கொலைகாரன் ஹிட்லரையாவது சரியாக படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. @ ரம்மி.
    அரிப்பு அடங்கிவிட்டதா?

    பதிலளிநீக்கு
  4. மோடியை விமர்சிப்பவர்கள்,ஹிட்லருன் ஒப்பிடுபவர்கள் ராஜபக்‌ஷே விவகாரத்தில் என்ன சொல்கிறார்கள்.ராஜபக்‌ஷேயை மனிதகுலத்திற்கு எதிரான கிரிமினல், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியவர் என்று தீக்கதிர் எழுதியிருக்கிறதா இல்லை அப்படி சிபிஎம் பொலிட்பீரோ தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதா.
    திரு.மாதவராஜ் இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவேண்டும்.
    மழுப்பல் வார்த்தைகள் மூலம் பதில் வேண்டாம்.
    ஆம் எனில் மோதியை விமர்சிக்க உங்களுக்கு அருகதை உண்டு, இல்லையெனில்
    நீங்கள் யாருக்கு நண்பர்களோ இல்லையோ நிச்சயம் ஈழத்தமிழர்களுகு நண்பர்கள் அல்ல.

    பதிலளிநீக்கு
  5. tamil avargale! ஈழத்தமிழருக்கு நேர்ந்த கொடுமையை யார் நியாயப்படுத்த முடியும்? ஆனால் இலங்கையில் தமிழரின் நிலைதான்
    இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை. அங்கே ஒரே ஒரு ராஜ பக்ஷே, ஆனால் இங்கே ஆயிரம் லட்சம் சங் பரிவார
    ராஜ பக்ஷேக்கள்.

    பதிலளிநீக்கு
  6. @தமிழ்!
    இதே தீராத பக்கங்களில் இதற்கு முன்பு எழுதப்பட்டு இருக்கும் பதிவுகளைப் படித்து விட்டு பேசுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நட்புடன் ரமேஷ்!

    //Calculating the number of victims

    Researchers before the 1991 dissolution of the Soviet Union attempting to count the number of people killed under Stalin's regime produced estimates ranging from 3 to 60 million.[88] After the Soviet Union dissolved, evidence from the Soviet archives also became available, containing official records of the execution of approximately 800,000 prisoners under Stalin for either political or criminal offenses, around 1.7 million deaths in the Gulags and some 390,000 deaths during kulak forced resettlement – for a total of about 3 million officially recorded victims in these categories.[89]//

    basheer!

    யாருக்கு அரிப்பு இல்லை? பஷீர்!

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் பசு தோல் போற்திய புலிகள்தான்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!