மகர ஜோதி குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் சொன்னது தவறா?
நேற்று பின்னூட்டத்தில்  ‘பகுத்தறிவு’ என்னும் பெயரில் ஒருவர் கிண்டலாக கேள்வி கேட்டு இருக்கிறார். நாம் சொல்லிய ஒரு கருத்து,  இன்னொருவரின் சிந்தனையின் ஒரு மூலையில் இருப்பதும்,  அதன் தொடர்ச்சியாக நம்மை அறிய முற்படுவதும்  மகிழ்ச்சியே.

அயோத்தி தீர்ப்பு பற்றிய எனது பதிவொன்றில் ‘பகுத்தறிவு’ இப்படி  கருத்தொன்றைப் பதிவு செய்து  இருக்கிறார். “அயோத்தி பற்றிய தங்களுடைய பார்வையும் தீர்ப்பு பற்றிய அலசலும் மிக அருமை! அது சரி! சபரிமலை சோதி இயற்கையா? மனிதனால் உருவாக்கப்படுகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது! கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் 'அது மக்களின் நம்பிக்கை! அதில் எல்லாம் கேள்வி கேட்கலாமா?' என்று கேட்டிருக்கிறார். நீங்களாவது அதைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்! ஏமாற்றம் தான்! ஒரு வேளை கேரளத் தோழர்கள் பாரதிய சனதாவுடன் கூட்டணி பேசிவருகிறார்களோ!”

கடந்த ஜனவரி 14ம்தேதி சபரிமலையில் நடந்த துயரத்தையொட்டி தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், கேரள உயர்நீதிமன்றம் மகரஜோதியின்  ஆதிமூலம் குறித்து அறிய முயன்று பார்க்கிறது. ஏதேனும் பெரும் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகுதான்,  இப்படித் திடுமென தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு விட்டவர்களாய் பரக்கப் பரக்கப் பார்ப்பார்கள் போலிருக்கிறது.

மகரதீபம் என்பது வானில் தோன்றும் அற்புதம்  என்றும்,  மனிதர்களின் காரியம் என்றும் எதிரும் புதிருமாக  வாக்குமூலங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. வனத்துறையினரின் கருத்து ஒன்றாக இருக்கிறது. கோவில் நிர்வாகத்தின் கருத்து ஒன்றாக இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும்போது கேரள முதல்வர் அச்சுதானந்தன், “இது லட்சக்கணக்கான மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதில் உண்மையறியும் ஆர்வம் அரசுக்கு இல்லை. ஜோதிடர்களை வைத்தோ, விஞ்ஞானிகளையோ வைத்து ஆராயும் திட்டமும் அரசுக்கு இல்லை” என்றுதான் சொல்லியிருக்கிறார்.  முதலில் ஒன்றை சுட்டிக் காட்டிவிடுவது நல்லது. பகுத்தறிவு சொல்வது போல “அது மக்களின் நம்பிக்கை, அதில் எல்லாம் கேள்வி கேட்கலாமா?’ என்று அச்சுதானந்தன்  சொல்லவில்லை. அந்தத் தொனியும் இல்லை.

அயோத்திப் பிரச்சினையில்  எழுப்பப்படுகிற நம்பிக்கைக்கும், மகரஜோதியின் நம்பிக்கைக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அயோத்தி,  இரு மதத்தினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை.  மேலும் நில உரிமை குறித்த விவகாரமாகவும் இருக்கிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்துகிற அரசியல் அமைப்பில், அரசு அதில் தலையிட்டாக வேண்டிய கட்டாயம் உண்டு.   மகரஜோதி விவகாரம் அப்படியானதல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின், ஒரு பிரிவினரது வழிபாட்டுமுறை மட்டுமே  சம்பந்தப்பட்டது.  அதில் அரசு கருத்து சொல்வதென்பது, வேறுவிதமான விளைவுகளையும் சமூகத்தில் ஏற்படுத்தும் சாத்தியங்கள் கொண்டதாக இருக்கிறது.  முஸ்லீம்களின், கிறித்துவர்களின்  வழிபாட்டு முறையின் நம்பிக்கைகள் குறித்துப் பேசாத கம்யூனிஸ்டுகள், இந்துக்களின் வழிபாட்டு முறையை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது ஏன் என்ற கேள்விகளும்,  மூஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் தாஜா செய்து ஓட்டுவங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் என்றும் கொதித்து எழுவார்கள்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், இதுதான் சமயம் என, கிறித்துவர்களின் வழிபாட்டு முறை குறித்தும், முஸ்லீம்களின் வழிபாட்டு முறை குறித்தும் பொதுவெளியில், பழித்துப் பேச ஆரம்பிப்பார்கள்.  பர்தா அணிவதிலிருந்து ஆரம்பித்து,  கன்னி மேரி வரை விவாதங்கள் ஆரம்பிப்பார்கள். ஒருவித சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த  மத அடிப்படைவாதிகள் முனைவார்கள்.  இவைகளைத் தவிர்க்கும் பொருட்டே, கேரள முதல்வர் என்ற முறையில் அச்சுதானந்தன் பேசியிருக்க வேண்டும்.  அரசியலில் மதங்களுக்கு இடமிருக்கத் தேவையில்லை என்கிற பார்வையிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும். ஜோதிடங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை கொண்டு இருக்கிற அவரைப் போன்றவர்கள், “ஜோதிடர்களை வைத்தோ, விஞ்ஞானிகளையோ வைத்து ஆராயும் திட்டமும் அரசுக்கு இல்லை”  என்னும் சொல்வதில் இருக்கும் கவனத்தையும், எச்சரிக்கையையும்  இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

இங்கே, முதல்வர் அச்சுதானந்தனின் சக அமைச்சர் சுதாகர் சொல்வதையும் சேர்த்து பகுத்தறிவு போன்றவர்கள் கவனிக்க வேண்டும். “மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிற வெளிச்சமே.  ஆதிவாசிகளின் இந்தப் பழக்க வழக்கத்திற்கு அரசின் மின்சாரத்துறையும்,  காவல்துறையும் உதவியாக இருக்கிறது. இதை நான் கடந்த காலத்திலும் கூறி வந்திருக்கிறேன். இருந்த போதிலும், இதில் தலையிடுவது அரசின் வேலையல்ல”.  மதங்களின் இந்த நம்பிக்கைகள் யாவும் ‘மூட நம்பிக்கைகள்’ என்பது தோழர்.அச்சுதானந்தன் அவர்களுக்கும் தெரியும்.  இந்த  ‘மூடத்தனத்தை’ அகற்றும் பணியை கல்வியாலும், இயக்கத்தின் இடைவிடாத பிரச்சாரங்களினாலும் செய்வதே சரியாய் இருக்கும் என்பது இடதுசாரிகளின் பார்வை.  அரசியலைக் கொண்டு வந்து அதில் சேர்க்கும்போது, பிரச்சினைகள் மேலும் சிக்கல் நிறைந்ததாக மாறும். அதைத்தான் அச்சுதானந்தன் சொல்லாமல் இப்படி சொல்லியிருக்க வேண்டும்.

நுட்பமான, உணர்ச்சிகரமான  விஷயங்களில் மூக்கை நுழைத்து முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விட்டால், அது காலமெல்லாம்  கண்ணி வெடிகளாய் வெடித்துக் கொண்டு இருக்கும். இந்தத் தெளிவும், நிதானமும் இல்லாமல், ராமரை வழிபட, மசூதியின் கதவுகளைத் திறந்துவிட்டு, மத நம்பிக்கைகளில்  மத்திய அரசு தலையிட்டதன் விபரீதங்களைத்தான்  இந்த தேசம் பார்த்துக் கொண்டு இருக்கிறதே! 

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. >>மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிற வெளிச்சமே.

  This is right. There are AGARM UGARAM MAGARAM in the path of self realization.

  Lord ayyappa is a enlightened soul. He made மகர ஜோதி as symbolic representation for self realization.

  People misunderstood or never understood what was that..

  Please see this link..
  http://www.vallalyaar.com/?p=359

  மகர ஜோதி is in us. Its anma in the form of light.

  பதிலளிநீக்கு
 2. அரசியல் மீதான அரசியல் தலைவர்கள் மீதான
  சக மனிதர்கள் மீதான நம்பிக்கைகள் முற்றிலுமாக
  சிதைக்கப்படும்போது மதத்தின் மீதான க்ண்மூடித்தனமான
  நம்பிகையாவது இருந்து தொலைக்கட்டும்
  எனத்தான் எனக்குத் தோன்றுகிறது
  விரிவான பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. //“இது லட்சக்கணக்கான மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதில் உண்மையறியும் ஆர்வம் அரசுக்கு இல்லை. ஜோதிடர்களை வைத்தோ, விஞ்ஞானிகளையோ வைத்து ஆராயும் திட்டமும் அரசுக்கு இல்லை” //

  இது மக்களின் நம்பிக்கை என்று தானே வருகிறது ஒரு வேலை லட்சக்கணக்கானவர்கள் வேறு மக்கள் வேறு என்று சொல்ல வருகிறீர்களா?
  அச்சுதானந்தன் மகர சோதி எனும் மூட நம்பிக்கையின் மூலம் வரும் வருமானத்தை இழக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.
  அதே போல ஆராயும் திட்டம் அரசுக்கு இல்லை என்றால் அதுவும் கேள்வி கேட்கும் எண்ணம் இல்லை என்பது போல தானே வருகிறது? கொஞ்சம் விளக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 4. //இந்த ‘மூடத்தனத்தை’ அகற்றும் பணியை கல்வியாலும், இயக்கத்தின் இடைவிடாத பிரச்சாரங்களினாலும் செய்வதே சரியாய் இருக்கும் என்பது இடதுசாரிகளின் பார்வை //

  இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் இனி எந்த கல்வியை வைத்து அகற்றப் போகிறீர்கள்? இது தான் இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை

  பதிலளிநீக்கு
 5. Sir,
  Please refer recent Hindu (after the Bulmedu incident) detailed photo & article are published. Now in 'Letters to the Editor' a lot of letters being received.

  பதிலளிநீக்கு
 6. சரியான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இடதுசாரிகாரர்கள்தான் இவ்வளவு விளக்கங்களை கொடுக்க வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. விரிவான பதிவுக்கு நன்றி...
  அனைவருக்கும் பகுத்தறிவு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் பிறகு அதைப் பற்றி பகுத்தறிந்து கொண்டிருப்பார்கள்...
  மகர ஜோதியைப் பற்றிய விழிப்புணர்வு ஒரு நூறு துர் மரணம் தான் கற்றுக் கொடுக்கமுடியும்...
  இயற்கை மரணத்தை மோட்சம் என்று அதையும் உடைத்தெரிவார்கள் என்பது தான் நிஜம்...
  காலமே பொய்யடா இது காற்றடைத்த பைய்யடா !

  பதிலளிநீக்கு
 8. there is nothing wrong in questioning. While Galileo said that the GLOBE is round, the religious fundamentalists gave severe punishment to him, jailed him. But truth will come in one day. If most of the people accep one, it does not mean that it is true. ridiculous. Believing GOD is different from superstitious belief.

  பதிலளிநீக்கு
 9. தோழருக்கு,
  பின்னூட்டத்தில் தோழர் செந்திலான் கேட்டிருக்கும் முதல் கேள்வி தான் என்னுடையதும்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல “ அது மக்களின் நம்பிக்கை, அதில் எல்லாம் கேள்வி கேட்கலாமா?’ என்று அச்சுதானந்தன் சொல்லவில்லை” என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அரசின் உதவியுடன் ஏற்றப்பட்டு வருகின்ற மகர சோதியைப் பற்றி உயர்நீதிமன்றம் கேள்வி கேட்கும்போது ‘அது அரசு ஏற்றி வருகின்ற சோதி தான்!’ என்று சொல்லிவிட முதலமைச்சராக இருக்கின்ற அச்சுதானந்தன் தயங்குவது ஏன்? அமைச்சர் சுதாகர் அதைச் சொல்கிறார்; ஆனால் முதலமைச்சர் சொல்லத் தயங்குகிறாரே? ஏன் இந்த நிலை? //முஸ்லீம்களின், கிறித்துவர்களின் வழிபாட்டு முறையின் நம்பிக்கைகள் குறித்துப் பேசாத கம்யூனிஸ்டுகள், இந்துக்களின் வழிபாட்டு முறையை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது ஏன் என்ற கேள்விகளும், மூஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் தாஜா செய்து ஓட்டுவங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் என்றும் கொதித்து எழுவார்கள். // வழிபாட்டு முறையைப் பற்றி அச்சுதானந்தனோ கேரளப் பொதுவுடைமைக் கட்சியினரோ எந்தக் கேள்வியையும் எதிர்க்கருத்தையும் முன்வைக்கவில்லை. நீங்கள் சொல்வது போல மூடநம்பிக்கைகளைக் கல்வியாலும் இடைவிடாத பரப்புரையாலும் தாம் போக்க முடியும்! இங்கு கேள்வி உயர்நீதிமன்றத்தினுடையது! அக்கேள்விக்கு ஒருவரியில் அமைச்சர் சுதாகரைப் போல் விடை சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே! உங்களுடைய மேலான பார்வைக்கான அச்சுதானந்தன் சொன்ன செய்தி வந்த ‘தி இந்து’ இதழின் சுட்டியையும் ‘தி இந்தியன் எக்சுபிரசு’ இதழின் சுட்டியையும் இங்கு இணைத்திருக்கிறேன். (http://www.thehindu.com/news/national/article1105093.ece , http://www.indianexpress.com/news/fearing-backlash-achuthanandan-shuns-makara-jyothi-probe/740094/) . அரசினுடைய மின் துறையின் உதவியுடனும் காவல்துறையின் உதவியுடனும் செய்யப்படும் வேலையை இயற்கையா? செயற்கையா? என்பதற்கான விடையை அச்சுதானந்தன் சொல்வது போலச் ‘சோதிடர்களை வைத்தோ அறிவியலாளர்களை வைத்தோ’ ஆராய வேண்டிய தேவையில்லை தான்! அதே நேரம் அந்நிகழ்வு அரசின் உதவியுடன் தான் நடத்தப்படுகிறது என்று நீதிமன்றத்திடம் சொல்வதற்குத் தயக்கமும் ஒரு முதலமைச்சருக்குத் தேவையில்லை தான்!

  பதிலளிநீக்கு
 10. உண்மையைச் சொன்னால், தேர்தலில் இந்துக்கள் வோட்டுகள் குறையுமோ அல்லது கோவிலுக்கு கூட்டம் குறைந்து வருமானம் குறைத்து விடுமோ என்ற பயத்தைத் தவிர ஒரு கம்யூனிஸ்ட் முதல்வருக்கு வேறு என்ன காரணம் இருக்கப் போகிறது? ஐயப்பன் கதையே ஒரு புருடாதானே? விஷ்ணுவின் மோகினி அவதாரம் செய்த வரலாற்றை ஸ்ரீமத் பாகவதத்தில் [8-ம் காண்டம் 12 வது அத்தியாயம்] வியாசதேவர் பதிவிட்டுள்ளார். பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிழ்தை ஸ்ரீ கிருஷ்ணர் மோகினி என்னும் அழகிய பெண்ணாக அவதாரமெடுத்து வந்து பங்கிட்டுக் கொடுக்கிறார். இந்த அழகில் மயங்கி சிவன் மோகினியைத் துரத்துகிறார், ஆனால் ஒரு போதும் அவரைத் தொட முடியவில்லை... என்று தான் கதை போகிறதே தவிர, இன்று கட்டுக் கதையாக உலவும் ஐயப்பன் கப்சா அதில் இல்லை. மேலும் ஐயப்பன் என்ற பெயர் வியசதேவரின் எந்த வேத நூல்களிலும் இல்லை வாழ்மீகி இராமாயணத்திலும் இல்லை. நம்ம ரஞ்சிதானந்தா மாதிரி பணம் பண்ண இது கேரளாக்காரன்களின் கற்பனை.

  பதிலளிநீக்கு
 11. ஐயா, உலகம் தட்டையானது அல்ல, அது கோள வடிவம் உடையது என்ற உண்மையை சொன்னால் , பல மதங்களை பின் பற்றும் பல ஆயிரக்கணக்கான மக்களின் மனம் புண்படும் என்று தெரிந்தும் அன்று ஒரு பகுத்தறிவாளன் உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லி உயிர் விட்டானே... அதை பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்ளும் நீங்களும், கேரளா முதல்வரும் எள்ளி நகை ஆடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.. மகர சோதி செயற்கை என்று சொல்வது மக்களின் நம்பிக்கையை புண் படுத்தும் என்றால், ஒரு சில மக்களையாவது திருத்தி பகுத்தறிவாளனாக மாற்றி விட்டு அதற்காக உயிரை கூட துறப்பது எவ்வளவோ மேலானது...

  பதிலளிநீக்கு
 12. அரசாங்கம் செய்தால் அரசாங்கம் செய்கிறது என்று சொல்லலாம். இல்லை என்றால் எப்படிச் சொல்வதாம்? தேவஸ்தானம் போர்டு செய்கிறது. அதில் நாங்கள் தலையிடமுடியாது என்கிற பொருளில்தான் சொல்ல முடியும். அச்சுதானந்தன் அதைத்தான் செய்திருக்கின்றார். ஓட்டு குறியாக இருந்திருந்தால் அமைச்சர் ஏன் அப்ப்டிப் பேசுகிறார்? உண்மை என்னவென்றால், பகுத்தறிவு என்கிற பெயரில் கம்யூனிச எதிர்ப்பாளர்கள்தான் இப்படி எதிர்மறையாகப் பேசுகின்றார்கள். விமரிசிக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 13. திரு அசோகன் முத்துசாமி அவர்களுக்கு
  எல்லா பகுத்தறிவு வாதியும் கம்யூனிஸ்ட் ஆக இருக்க வேண்டியது இல்லை.தேவசம் போர்டு என்பது அரசாங்கத்தின் கீழ் தானே இருக்கிறது. அதைக்கூட கேள்விகேட்க முடியாத முதல்வர் இருந்தென்ன லாபம்? முல்லைப் பெரியாரில் வம்படியாய் தமிழகத்துடன் மோதும் அச்சு தேவசம் நம்பூதிரிகளிடம் நடுங்குவது ஏன்? எனது மேலாளர் ஒரு மலையாளி அவர் சொன்னார் பினராயி விஜயன் தான் கேரளாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று. இதில் கம்முநிசம் எங்கே சென்றுவிட்டது ?

  பதிலளிநீக்கு
 14. அரசுக்கு வரும் வருமானத்தை இலக்க அசசிதனந்தானுக்கு விருப்பமில்லை .

  பதிலளிநீக்கு
 15. 1.கோவிலகள் அறநிலையத்துறையிடமோ இருக்க வேண்டும் என்பதுதான் மதச்சார்பற்ற சக்திகளின் நிலை. அப்படி அது கேரள அரசின் பொறுப்பில் இருந்தால் மகரஜோதியை விடுங்கள்,பகுத்தறிவுவாதிகள் கோவிலையே இழுத்து மூடுங்கள் என்றுதான் கோரிக்கை வைக்க வேண்டும். அது நடக்கிற காரியமல்ல. நீதிமன்றம் சொல்கிற ஆராய்ச்சியெல்லாம் மேலும் குழப்பத்திற்கே இட்டுச் செல்லும். அயோத்தியில் மசூதிக்கு கீழே கோவில் இருந்ததா என்ற ஆராய்ச்சி எங்கே கொண்டு போய்விட்டிருக்கின்றது என்பதை இன்று அனைவரும் அறிவோம். இத்தனைக்கும் உச்ச நீதிமன்றம் செய்ய மறுத்த ஆராய்ச்சி. 2.பகுத்தறிவுவாதிகள் எல்லாம் பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் அனைத்து வகையிலும் முற்போக்கானவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இருப்பதும் இல்லை. பகுத்தறிவுவாத முதலாளித்துவவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 3. முல்லைப் பெரியாறு பிரச்சனையை நீங்கள் கிளப்புவதிலிருந்தே நிங்கள் ஒரு முன் முடிவோடுதான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது. கம்யூனிச எதிர்ப்பு என்னும் முன் முடிவு.4. இப்படி வறட்டு நாத்திகம் பேசிப் பேசித்தான் ஆத்திகம் மேலும் செழிக்க உங்களைப் போன்றவர்கள் காரணமாகிவிட்டீர்கள் என்றொரு கருத்து மக்களிடம் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. 1 ) அநேகமாக அது 1980, 81 ஆக இருக்கலாம். தினமணியில் நான் ஒரு செய்தி படித்தேன். செய்தியின் சாரம் இதுதான்; 'சபரிமலையில் மகரஜோதி ஏற்ற சென்ற ஜீப் கவிழ்ந்து ____ பேர் படுகாயம். அவர்கள் பல பீப்பாய்களில் நெய், எண்ணெய் போன்ற பொருட்களை எடுத்து சென்றார்கள்.'
  2) ஆக மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்பதே உண்மை. மகரஜோதி மட்டும் அல்ல, எந்த ஜோதியும் மனிதர்களால் ஏற்றப்பட வேண்டும் அல்லது இயற்கையாக காடுகளில் ஏற்படும் மரங்களின் உரசலால் தீ பற்ற வேண்டும். ஆக இது ஒன்றும் ரகசியம் அல்ல. செய்தி முதல்முதலாக வந்தது 1980 என்று வைத்துக்கொண்டாலும் முப்பது வருடங்களுக்கு முன்பே இது அம்பலமான விஷயம் என்று கொள்ளலாம். அப்படியிருக்க இந்த செய்தியை ஆதாரமாக கொண்டே கேரள அரசு உண்மையை சொல்லி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லலாம், கேரள மக்கள் அனைவருக்கும் இது தெரிந்த உண்மைதான், என்ன ரகசியம்? இதையே வேறு மாதிரி சொல்லலாம்: 'இது மனிதர்களால் ஏற்றப்படுவது என்று எங்களுக்கு தெரியும், ஆனாலும் அந்த குறிப்பிட்ட நாளில் அந்த ஜோதியை தரிசிப்பது எங்களுக்கு மன நிம்மதி தருகின்றது' என்பதே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை.
  3) கம்யூனிஸ்டுக்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள் எனில் யார் சொல்வது? சேது சமுத்திர விசயத்தில் 'அங்கே ராமர் பாலம் கட்டப்பட்டது, குரங்குகளால் கட்டப்பட்டது என்பது இந்துக்களின் நம்பிக்கை' என மத்திய சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் சொன்னது பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் கிளப்பியது. ஏனெனில் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு சொல்வது நீதிமன்ற வழக்கு செல்லும் திசையையும் வேகத்தையும் திருப்பகூடும், மட்டுப்படுத்த (dilute) கூடும், மேலும் சேதுசமுத்திர திட்டத்தை எதிர்க்கின்ற மதவாத சக்திகளுக்கு மத்திய அரசே துணை போவதாகவும் ஆகும். எனவே மத்திய அமைச்சர் மௌனமாக இருந்திருக்கலாம், அல்லது விஞ்ஞான உண்மையை (குரங்குகளால் அப்படி ஒரு பாலத்தை கட்ட முடியாது) மட்டுமே சொல்லியிருக்கலாம். இந்த விசயத்தில் மட்டும் அல்ல, 17 லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமன் அங்கு பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்துத்வா நீதிபதிகள் ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லும் போது அப்படி இப்படி நெளியாமல் நேரடியாக நேர்மையாக அதை விமர்சனம் செய்தவர்கள் கம்யூனிஸ்டுக்கள் மட்டுமே. மதச்சார்பற்ற கம்யூனிஸ்டுக்கள் மட்டுமே யாருக்கும் அஞ்சாமல் உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லி வருகின்றார்கள், அப்படி இருக்க மகரஜோதி விசயத்தில் ஆத்திகர்களே நன்கு அறிந்த உண்மையை சொல்லி விடுவதால் என்ன ஆகிவிடப்போகின்றது?
  4) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 'மக்களிடையே விஞ்ஞான விழிப்புணர்வை வளர்க்க வேண்டும், அதற்காக அரசாங்கம் பாடுபட வேண்டும்' என சொல்கின்றது. ஆனால் என்ன செய்ய? மத்தியில் மிதவாத இந்துத்வா பேசும் காங்கிரஸ், அதிதீவிர இந்துத்வாவின் காவலன் பி.ஜே.பி. ... மாறி மாறி ஆட்சியில் இருந்தால் விஞ்ஞானம் வளருமா, அஞ்ஞானம் வளருமா? அணு இயற்பியலில் (nuclear physics) ஆராய்ச்சிப்பட்டம் பெற்ற முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறைக்கு பொறுப்பில் இருந்தபோதுதான் ஜோஷ்யத்தை ஒரு பாடமாக பல்கலைக்கழகங்கள் வைக்க வேண்டும் என அரசு ஆணை இட்டார்! இவர்தான் அயோத்திக்கு கடப்பாரையுடன் நேரடியாகவே சென்றவர், மசூதி இடிந்து விழும்போது உமாபாரதி ஆனந்தம் கொப்பளிக்க இவர் முதுகின் மேல்தான் ஏறிக்கொண்டார்! விஞ்ஞானம் ம....ரு கூட வளராது.
  இக்பால்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!