சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

சென்ற பதிவில் எழுதிய விஷயம் குறித்து, கேள்விகள், விளக்கங்கள், குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் என கொட்டிக்கிடக்கின்றன. நேர்ப்பார்வையில் உண்மை மிக எளிதாகவே யாருக்கும் புரியும். இதற்கு ஏன் இத்தனை குழப்பங்கள் என்பது அடுத்த அதிர்ச்சியாக இருக்கிறது.

நான் உன்னைச் சீண்டினால், நீ என்னைச் சீண்டலாம். நான் உன்னைத் திட்டினால் நீ என்னைத் திட்டலாம். நான் உன்னை அடித்தால், நீ என்னை அடிக்கலாம். இதுதான் விதி. இதற்குள் ஆட்டம் இருந்திருக்க வேண்டும். எல்லைகளையும், விதிகளையும் மீறி தப்பாக ஆடி, ஒருவர் இன்னொருவரை வன்மத்துடன் காயப்படுத்தி வீழ்த்தும்போது, பார்த்துக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு வரவேண்டிய கோபம்தான் எனக்கு வந்தது.

யார் முதலில் சீண்டினார்கள், ஏன் சீண்டினார்கள் என்ற ஆராய்ச்சி நிச்சயம் தேவைதான். ஒரு தவறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்கு அப்படியான பரிசீலனைகள் அவசியம்தான். ஆனால், அப்படி எதையும் சாவகாசமாய் திரும்பிக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இங்கே ஒருவர் காயம்பட்டு இருக்கிறார். அவமானத்திலும், அசிங்கத்திலும் அவரைப் புரட்டிப் போட்டு இருக்கிறார்கள் என்றால், அப்படி விதிகளை மீறித் தாக்கியவரை கடுமையாகச் சாடுவதும், தாக்கப்பட்டவருக்கு ஆறுதல் அளிப்பதும்தான் யாரும் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய முதலுதவி. அதைத்தான் நான் செய்தேன்.

தாக்கப்பட்ட முறை மிகக் கொடியது.  ஒரு பெண், அவள் நடத்தை, அவள் தோற்றம், அவள் குழந்தை என மிக வக்கிரமான முறையில் சித்திரிக்கப்பட்டு இருக்கிறார். வரலாறு நெடுக நிகழ்ந்ததுதான் இங்கும் நிகழ்ந்தது. ஆதிக்க சிந்தனை கொண்டவர்களின் வெறி, பெண்ணுடல் மீதான தாக்குதலாக மீண்டுமொரு முறை இங்கு எழுதப்பட்டு இருக்கிறது. அதைத்தான் நான் கண்டித்தேன் கடுமையாக.

”அவர் ரொம்பக் கண்ணியமானவர், அப்படியெல்லாம் இதுவரை எழுதி இருக்கிறாரா?” என்கிறார்கள். ஆமாம், சாதாரண, சகஜமான காலங்களில் அப்படித்தான் அவர்கள் காட்சியளிப்பார்கள். “நேற்று வரை, என்னோடு ஒன்றாக விளையாடியவன், என்னோடு சிரித்து பழகியவன், இப்போது ஒரே நாளில் கண்களில் வெறுப்பும், கொலைவெறியும் கொண்டு என்னைப் பார்க்கிறான்” என மதக் கலவரங்களின் போது எத்தனை சாட்சிகளையும், அதிர்ச்சிகளையும் காலம் பார்த்து திக்பிரமையடைந்திருக்கிறது. ஒரு சோதனையின் போதுதான் ஒருவரின் உண்மையான முகம் தெரியும். அது தெரிந்திருக்கிறது.

“அவன், இவன்” என ஏக வசனத்தில் நீங்கள் எழுதியது சரியா, அப்புறம் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் எனக் கூட கேள்விகள். ஒரு பெண்ணை அவிசாரி என ஆரம்பித்து அவர் எழுதிய அத்தனை வார்த்தைகளும் ஒன்று. நான் ‘அவன், இவன்’ என்று எழுதியதும் ஒன்று. எப்படியிருக்கிறது உங்கள் நியாயமும், நீதியும். இதுதான் மனுவின் சிந்தனை. எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும் மனு வைத்த கண்ணி வெடி வெடித்துக் கொண்டு இருக்கிறது! ஒருவருக்கு உரிய மரியாதையை, மதிப்பை அவரது காரியங்களும், சிந்தனைகளுமே ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.

“நீங்கள் பழைய பகையை மனதில் வைத்து, அதன் தொடர்ச்சியான எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்கள்” என்கிறார்கள். நர்சிமுமே அவரது பதிவில் அந்த தொனியில்தான் சொல்லியிருக்கிறார். என்ன செய்ய? இப்படித்தான் அவர்கள் ஒவ்வொன்றையும் பார்ப்பார்கள், சிந்திப்பார்கள் போலிருக்கிறது. அதுதான் இங்கு வினையாகி இருக்கிறது. சென்ற வருடத்தில், வலைப்பக்கங்களிலிருந்து சிறுகதைகளை தொகுத்து புத்தகம் வெளியிடலாம் என அழைப்பு விடுத்தபோது பலரும் சுட்டியை அனுப்பியிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ நர்சிம் அனுப்பவில்லை. நானே அவருக்குப் போன் செய்து, “தங்கள் அய்யனார் கம்மாவை அந்தத் தொகுப்பில் வெளியிடலாமா?” எனக் கேட்டேன். “ரொம்ப சந்தோஷம், மாதவராஜ், வெளியிடுங்கள்” என்றார். பின்னர் அதைத் தெரிவித்து பதிவிட்டு எனக்கு நன்றியும் தெரிவித்தார். “நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நர்சிம்” என்று அதற்கு பின்னூட்டமும் இட்டேன். தனது அய்யனார் கம்மா புத்தக வெளியீட்டிற்கு போனில் அழைப்பு விடுத்தார். அப்போது அவருக்குள் இந்த ‘மரியாதைதான்’ இருந்ததா?

வாடாத பக்கங்களில் அவரை மட்டும் கடுமையாக விமர்சித்ததாக குறிப்பிடுகிறார். எழுதியது இதுதான் :

அவரது பல பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். செம்பட்டைக்கிழவியும், அய்யனார் கம்மாவும் எனக்கும் பிடிக்கும். அவருடைய பதிவுகளை வாசித்திருப்பதால், ராஜாராம் சொல்லியிருக்கும் இந்தப் பதிவில் எனக்குப் பட்டதை இங்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அவருடைய சில பதிவுகளில், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரியும். சில நேரங்களில் சுஜாதாவாக முயற்சிப்பார். சில நேரங்களில் அனுஜன்யாவாக முயற்சிப்பார். இந்த தடவை இன்னும் மொழியை இறுக்கமாக்க முயற்சித்திருக்கிறார். என்னளவில் வசீகரம் தெரியவில்லை. அவருக்கான மொழியை அறிந்துகொள்ள ஒரு குளவி போல தொடர்ந்து பிரயத்தனப்படுகிறார் என்று மட்டும் தெரிகிறது. அது வசப்பட்டால், இன்னும் அவர் இயல்பாய் நிறைய சொல்லக்கூடும்.

இப்படி ஒரு சக பதிவரின் எழுத்து மீதான மதிப்பீட்டைச் சொல்லக் கூடாதா? இதற்கும் உள் அர்த்தம் கற்பிப்பீர்களா? அதே வாடாத பக்கங்களில் வாமு.கோமுவின் எழுத்தை நானும் வடகரைவேலனும் கடுமையாகத் தாக்கி எழுதியது அவர் கண்களில் படவில்லையா? வாமு.கோமு அதற்குப் பிறகு என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிக நேர்மையாகவும், சரளமாகவும் பேசினாரே? அந்த பக்குவம் ஏன் நர்சிம்முக்கு இல்லை. இதுதான் அவரிடம் உள்ள பிரச்சினையாகத் தெரிகிறது. தன் படைப்பு குறித்த விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாதவராய் இருந்திருக்கிறார். அதுதான் ‘அவரை’, இப்போது ‘அவனாக’ மாற்றி இருக்கிறது!

அவனது மரியாதை எனக்கு எப்போதுமே தேவையில்லை. அவனைப் போன்றவர்கள் மரியாதை செலுத்தினால் அதை ஒரு அழுக்காகவும், இழுக்காகவுமே பார்க்கிறேன். அதற்காக நன்றி நர்சிம்!

பதிவுலகம் குறித்த வருத்தங்களும், எரிச்சல்களும் அங்கங்கு தொனிக்கின்றன. ஒவ்வொன்றும் அதனதன் வளர்ச்சிப் போக்கில், புதிய புதிய பிரச்சினைகளோடும், புதிய புதிய ஒழுங்குமுறைகளோடும் தன்னை முன்னெடுத்துச் செல்லும். அதில் சிராய்ப்புகளும், சேதங்களும் இருக்கத்தான் செய்யும். அந்த வலியோடுதான் முன்னோக்கி நகர முடியும். இதிலிருந்து ஒவ்வொருவரும், தங்களுக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ளத் துணிந்தால், நாம் வளர்வோம்.

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. விடாதீர்கள் மாதவராஜ், இதுவும் கடந்து போகும் என்ற மொன்னையாக அறிவுறை கூறி அக்கிரமத்தை அநியாயமாக மறைக்கின்றனர். கடந்துதான் போகும், ஆனால் எங்கு போகும் என்பதை தீர்மானிப்பது பதிவுலக முற்போக்காளர்களாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நிதானமான தெளிவான விளக்கங்கள். புரிகிறவர்களுக்குப் புரிந்தால் போதும். இனியும் தாங்கள் தன்னிலை விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. மனங்களை காயப்படுத்துவதில் இன்பம் காண்பவர்கள்... மனிதனின் மறுபக்கம் மிருகம்...

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கோபம் நியாயமானது தோழர்.

  சண்டைகள் ஓய்ந்து சமாதானம் உண்டாகட்டும், வேறென்ன சொல்ல?

  பதிலளிநீக்கு
 5. Like chat rooms, we (atleast I) should have the ignore option.

  so that as a reader, I can ignore or allow particular blogger's posts.

  பதிலளிநீக்கு
 6. "அவனது மரியாதை எனக்கு எப்போதுமே தேவையில்லை. அவனைப் போன்றவர்கள் மரியாதை செலுத்தினால் அதை ஒரு அழுக்காகவும், இழுக்காகவுமே பார்க்கிறேன்"

  மிக சரியான வார்த்தை தோழர்

  பதிலளிநீக்கு
 7. வளவள என இழுத்து கொண்டே போகாதீர்கள் மாதவராஜ். ஒரு வாரமாவது அவகாசம் கொடுத்து பிறகு அடுத்த பதிவை எழுதுங்கள். போன வருடமும் இப்படித்தான் அனைவரும் தீபாவை (அனானி பின்னூட்டத்தை வெளியிட்டு ஐந்தே நிமிடத்தில் அழித்ததற்கு) விடாமல் குத்தி குதறினர். அதுபோன்ற சமயங்களில் நிதானம் தவறுவது இயல்பு. அவரும் தவறி அப்துல்லாவை குதறினார். அப்போது தான் உங்களுக்கு அவரின் உண்மையான முகம் தெரிந்ததா ?

  // ஒரு சோதனையின் போதுதான் ஒருவரின் உண்மையான முகம் தெரியும். அது தெரிந்திருக்கிறது //

  நரசிம் உங்கள் மீதான மரியாதை குறித்து எழுதி இருப்பதும் அப்படி தான். செய்த தவறை ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் மனநிலையில் எழுதப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. -----நன்றி சந்தனமுல்லை. இனி நர்சிம் இல்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள். நிறைய எழுதுங்கள் தோழி. உங்கள் மீதிருந்த கோவம் போய்விட்டது. பதிவுலகம் மீதிருந்த ஆசையும் போய்விட்டது. ---

  தன்னுடைய வக்கிர மொழியின் மூலம் தனது கோபம் தீர்ந்துவிட்டதாக சொல்லும் அய்யோக்கியத்தனத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

  பதிலளிநீக்கு
 9. I am now residing in north India.VeryMuch new to blog.I despise such writings.Pl.mind I am a brahmin by birth.My sugussion is all of us prostrate before S.M.and ask her forgiveness for the wrong done by that bloody Narsim.This will isolate him.For saying this any body scold me that I say this because I am a brahmin let them have the pleasure of it.I care a hook for them...kashyapan.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் மாதவராஜ் அவர்களுக்கு,
  நான் தங்கள் வலைதளத்தை தொடர்ந்து வாசித்து வரும் பலரில் ஒருவன். நரசிம் அவர்களின் பதிவைப்பற்றிய தங்களின் நிலைப்பாட்டில் எனக்கு சிறு குழப்பம் அல்லது புரிந்துகொள்ள பக்குவம் போதவில்லை என்று நினைக்கிறேன்.

  சில நாட்களுக்கு முன்னர் "ஜெ என்றால்..." என்ற தங்கள் பதிவில் அந்த எழுத்தினை ஒரு நபரோடு உருவகப்படுத்தி பின்னூட்டமிட்டவர்களின் புரிதல்கள் தவறு என்று கூறிய நீங்கள் தற்பொழுது நரசிம் "புனைவு" என்று எழுதியதை தாக்குவது குழப்புகிறது...

  பதிலளிநீக்கு
 11. I ama against Narsim's post and attitude.

  But I feel your criticism on him is more of personal based, you are not attacking the issue or concept.

  Please approach this issue and criticise, attack with open mind not with pre determined mind.

  பதிலளிநீக்கு
 12. ராம்ஜி யாஹூ!

  என் முதல் பதிவிலேயே, ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாய் சொல்லியிருந்தேன்.
  அதற்குப் பிறகு, இவ்விஷயம் குறித்து நேற்றுப் பதிவிட்ட நர்சிம்மும், என் பதிவில் பின்னூடமிட்ட சிலரும் இதனைத் தனிப்பட்டப் பிரச்சினையாகக் குறுக்கி இருந்தார்கள். அவர்கள் சொல்வது உண்மையல்ல என்பதைத் தெளிவு படுத்தவே சில விஷயங்களைச் சொல்ல வேண்டியதாயிற்று.

  பதிவில், ஆணாதிக்கம் குறித்தும், வன்மம் எப்படி ஒருவனுக்குள் உறங்கிக் கிடக்கிறது ஆழத்திற்குள் என்பதையும், மனுவின் வழிவந்த சிந்தனை என்பதையும் முதலிலேயே சொல்லித்தானே இருக்கிறேன்.

  இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கோள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. செந்தழல் ரவி!

  நீங்கள் குறிப்பிட்ட பகுதி, அந்த ஆளுக்குள் இன்னும் வன்மம் எப்படி உறைந்திருக்கிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது.

  ”என்னால் முடிந்த அளவு உன்னைக் காயப்படுத்தி விட்டேன். பழி வாங்கிவிட்டேன். இப்போது என் கோபம் தீர்ந்து போய்விட்டது” என்றுதான் அதில் அர்த்தம் தொனிக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. தியாகு!

  நிச்சயமாய் அதனை ஒரு நபரோடு உருவகப்படுத்தி நான் பதிவிடவில்லை. ஜெ என்றால் அவர்தான் என நம் மண்டைக்குள் உறைந்துபோனது எப்படி என்ற கேள்வியையும் நான் பின்னூட்டத்தில் எழுப்பி இருந்தேன்.

  ஆனால், இங்கு அப்படி இல்லை. இது கதையே வேறு நண்பரே.

  பதிலளிநீக்கு
 15. முதலில் ஒன்றும் தெரிய வில்லை... பின்பு தெரிந்துக்கொண்டேன்!!!
  தயவு செய்து அடிக்காதீர்கள்.... பின்பு சுமக்க வேண்டி இருக்கும்!!
  கற்றுக்கொடுத்த பாடம் போதும்!!!

  பதிலளிநீக்கு
 16. அன்பின் மாதவராஜ்,
  வன்மத்தை உடுத்த எழுத்து - கதையோ, பகடியோ, நையாண்டியோ - பொதுவில் உலவுகையில் அதை அவதானிக்கும் எவருக்கும் அதைக் கண்டிக்கவும், மறுக்கவும், விமர்சிக்கவும் உரிமை உண்டு. மிக மிக பொதுவான பார்வையில் உங்கள் கோவம் நியாயமானதே.

  ஆனால், மற்றொரு கோணத்தில் பார்க்கையில், என் வரையில், சம்பந்தப்பட்ட இரு இடுகைகளும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரிந்ததாக விட்டிருக்கலாம். இது இவரைக் குறித்தது, அது அவரைக் குறித்தது என்று வெளிப்படுத்தியது சரிதானா என்பது தெரியவில்லை. பல புதிய பதிவர்களின் பின்னூட்டங்களிப் படிக்கையில் தோன்றிய எண்ணம் இது.

  பதிலளிநீக்கு
 17. "அவனது மரியாதை எனக்கு எப்போதுமே தேவையில்லை. அவனைப் போன்றவர்கள் மரியாதை செலுத்தினால் அதை ஒரு அழுக்காகவும், இழுக்காகவுமே பார்க்கிறேன்"///////////////

  இப்பிரச்சினையை மொக்கை போட்டு நீர்த்துப்போகச் செய்ய நினைப்போரையும், சந்தனமுல்லையையும் நர்சிம் என்கிற பொறுக்கியையும் சமதட்டில் வைத்து பார்போரையும் அம்பலப்படுத்தி முகத்திரையை கிழிப்பது நமது கடமை!!!

  http://vrinternationalists.wordpress.com/2010/06/01/1397/

  பதிலளிநீக்கு
 18. மொத்தமாக பதிவுலகில் ஒரு 100+ தமிழ் பதிவர்கள் இருப்பீர்களா? ஏன் இப்படி அடித்துக்கொண்டு சாகிறீர்கள்? இது தான் தமிழனின் தனிப்பட்ட குணம் என்று நினைக்கிறேன். நம்மால் என்றுமே ஒரு community -ஆக சேர்ந்து வாழவே முடியாது.
  --thank God, i am just a reader!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!