மார்க்சிய ஜோதி அணைவதில்லை!
 

ஜோதி பாசு!

மிகவும் நெருக்கமான, எப்போதும் கூடவே இருக்கிற ஒரு சக்தி போலவே இந்த பேர் புலப்படுகிறது. அபூர்வமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அறிய முடிகிறது. ஆரவாரமற்ற, அமைதியான, ஆறுதலான ஒரு உருவமாய் அருகே இருக்கிறார்.

அவரது போராட்டங்கள் நிறைந்த இளமைக் காலம் பற்றி, நீண்டகால முதலமைச்சராயிருந்த சாதனை பற்றி, இந்திய அரசியலில் கூட்டணி ஆட்சியை நடைமுறைப்படுத்திய திறனையும், தெளிவையும் பற்றி நிறைய சொல்ல முடியும். நேருவின் காலத்திலிருந்து மூன்று தலைமுறை அரசியலைத்தாண்டி, நான்காவது தலைமுறைக்குள் காலடி வைத்தபிறகும் களங்கம் சுமக்காமல் நெருப்பாகவே இருந்திருக்கிறார்.

இந்த அரசியலில் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரத்தில் நெடுநாள்  இருந்துகொண்டு இப்படியொரு பேரை பெறுவது சாதாரணமல்ல. ‘சத்தியசோதனை’க்கு சற்றும் குறைந்ததல்ல.

முதலாளித்துவ பாராளுமன்ற அமைப்பிற்குள் இருந்துகொண்டு, அதை எதிர்த்து போராடியபடி, சாத்தியப்பட்ட அளவு மக்களுக்கு அவரால் செய்ய முடிந்தது. மண்ணும், மனிதர்களும் அவரை உற்றுப் பார்த்தனர். கேட்டனர்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் அவர்
கம்பீரமாக உயர்த்திய கரங்கள், தேசத்தில் அலைஅலையாய் பரவின.

இந்த அமைப்பை எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு உந்துவிசையாக இருந்தார். ‘மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்’ என நம்பிக்கையோடு காலத்தைப் பார்த்த இளைஞர்களின் முன்னால் நடந்து கொண்டு இருந்தார். இடதுசாரிகளின் குரலையும், அரசியலையும், இந்த தேசத்தில் பரவலாக்கிய மார்க்சீய தூதன் அவர்.

எத்தனை போராட்டங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை பேச்சுக்கள், எத்தனை நெருக்கடிகள், எத்தனை சாதனைகள், எத்தனை பயணங்கள், எத்தனை வருடங்கள்.... போதும்... போதும்... அவர் ஓய்வெடுக்கட்டும்.

‘மெழுகு வர்த்தியிலிருந்து ஆயிரமாயிரம் மெழுகுவர்த்திகளை ஓளிரச் செய்யலாம். அதனால் மெழுகுவர்த்தியின் ஆயுள் குறைந்துவிடப் போவதில்லை’ என்னும் கவுதம புத்தரின் வார்த்தைகள் இந்த நேரத்தில் மிகுந்த அர்த்தமுள்ளவையாய் இருக்கின்றன.

மார்க்சீய ஜோதி ஒருபோதும் அணையாது. அதன் தொடர் ஒட்ட வெளிச்சத்தில் காலம் முன்னே நீண்டு செல்கிறது.......

வரலாறு அவர்! “இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார், இப்படியும் ஒரு அரசியல்வாதி இருந்திருக்கிறார்..” என இளையதலைமுறைக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் அவர் எப்போதும் அடையாளமாக இருக்கப் போகிறார்!

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. /*“இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார், இப்படியும் ஒரு அரசியல்வாதி இருந்திருக்கிறார்..” என இளையதலைமுறைக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் அவர் எப்போதும் அடையாளமாக இருக்கப் போகிறார்*/
  உண்மை.

  பதிலளிநீக்கு
 2. //மார்க்சீய ஜோதி ஒருபோதும் அணையாது. அதன் தொடர் ஒட்ட வெளிச்சத்தில் காலம் முன்னே நீண்டு செல்கிறது.....//

  உண்மைதான்......பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர் ஜோதிபாசு அவர்களுக்கு எனது அஞ்சலி

  பதிலளிநீக்கு
 4. The moment I think of him myheart melts.He came to madurai in 79 or 80 if Irememder correctly. There was no flight avilable from Madurai to madras on that day.The chief minister of west bengal travelled to madras by Vaigai expres sitting.The escort Kathirvelu (who retired as dy commr )was astonished for Basu profoundly apologised to him for the inconvenince caused to the police official.Madhavji,will we ever find a comrade like him?..... kashyapan

  பதிலளிநீக்கு
 5. My heart melts when I think of Jothi Basu. It was in 79 or 80 he came to Madurai.He adressed the lawers.Attended some other funtions.There was no flight on that day.And he left by vagai sitting upto madras.The escort Kadhirvelu (who retired as dy commr)was astonished when Basu profoundly apologisetohim for the inconvenince caused to him.Madhavji is there any chance of our meeting a man like him......kashyapan.

  பதிலளிநீக்கு
 6. அன்பு மாதவ்

  செறிவான ஒரு பதிவில் இத்தனை அழுத்தமும், ஆழமும், உருக்கமும் எப்படி கொண்டுவர முடிந்திருக்கிறது என்பது வியப்பாகவே இருக்கிறது....

  ஜோதிபாபுவின் தன் வரலாறு அற்புதமானது. ஒரு மனிதர் தனது வரலாற்றைச் சொல்லும் போதும் இயக்கத்தின் போக்கினையே சொல்ல விரும்பியிருக்கிறார் என்பது, நமது காலத்தில் நாம் காணக் கிடைத்த ஒரு மாணிக்கக் கல்.

  எளிமையின் கம்பீரமும், சமரசம்ற்ற கொள்கை உறுதியும், குழந்தையிடம் முக மலர்ச்சியோடு தன்னைப் பறிகொடுக்க முடிகிற வரமும் வாய்த்த மனிதர் யார் கிடைப்பார் இனிமேல் இப்பூவுலகில்....

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 7. பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகம் அறிந்ததில்லை.பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. //‘மெழுகு வர்த்தியிலிருந்து ஆயிரமாயிரம் மெழுகுவர்த்திகளை ஓளிரச் செய்யலாம். அதனால் மெழுகுவர்த்தியின் ஆயுள் குறைந்துவிடப் போவதில்லை’ என்னும் கவுதம புத்தரின் வார்த்தைகள் இந்த நேரத்தில் மிகுந்த அர்த்தமுள்ளவையாய் இருக்கின்றன.

  மார்க்சீய ஜோதி ஒருபோதும் அணையாது. அதன் தொடர் ஒட்ட வெளிச்சத்தில் காலம் முன்னே நீண்டு செல்கிறது....... //
  Red Salute to the great comrade.
  அற்புதமான் அஞ்சலி அங்கிள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. நூற்றுக்கு நூறு உண்மை உங்கள் கருத்துகள்! ஒரு தலைவர் எப்படிப்பட்ட எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் சோதிபாசு!

  பதிலளிநீக்கு
 10. தன்னலம் கருதாமல் கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைத்தவர் ஜோதிபாசு அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

  பதிலளிநீக்கு
 11. THE GREAT LEADER Comrade.Jyoti Basu life was full of hard work and dedication to his ideology.You have given the essence of his great life.As Mr.Kasyappan rightly said "will we ever find a comrade like him?"...He was the last experienced voice of communist movement..Your tribute melted my heart and made to shed tears...What and how the communist movement is going to work ?His life was the answer..Without BLUNDERs all have to travel with his memories---vimalavidya-Chalakkudy

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள மாதவ், வணக்கம். உங்கள் பதிவினை தொடர்ந்து வாசித்து வருபவன். எனது முதல் பதிலிடுகை...திருச்சியில் ஒரு அய்யப்பன் சாமி ஃப்ளக்ஸ் விளம்பரத்தில் ஒரு சிறுவனின் பெயர் ஜோதிபாசு என்கிற ஆறுமுகம் என்றிருந்தது. யாரோ ஒரு தோழர் ஆர்வக்கோளாரினால் பெயர் வைத்துவிட்டு பிற்பாடு ’நெருக்கடிகள்’ காரணமாக ‘திருந்தி விட்டார்’ என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் தமுஎகச மாவட்ட மாநாட்டில் 10ம் வகுப்பில் முதல் மதிப்பென் வாங்கியதற்காக எனது மகளுக்குப் பரிசளிக்கப்பட்ட புத்தகம் ‘ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு,; அதைக் காட்டி என்னோட புத்தகப் பரிசின் முதல்வர் தானே இன்று காலமான தலைவர் என்று அவள் என் சோகத்தைக் கிளறி விட கண்களில் கண்ணீருடன் அதை மீண்டும் ஒரு முறை மறுவாசிப்பு செய்யத் துவங்கி விட்டேன். எதிர்த்த வீட்டு பாட்டி ‘என்ன ஒங்க தலைவர் மறைவிற்காக இன்று ஆஃபீஸ் போகலையா? ஊர்வலம் போய்ட்டு வர்ரீங்களா’ என்று கேட்டு அவர்கள் வீட்டுப் பேப்பரைத் தரும் போது இங்கு எல்லா தினசரிகளிலும் தோழரை நினைவு கூர்ந்தது அவர் மேல் உள்ள மரியாதையை மேலும் உயர்த்தியது. 1980 வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டில் உரை நிகழ்த்த அவர் சென்னைக்கு வந்திருந்த போது மாநில அரசின் விருந்தினர் மாளிகையை மறுத்து எல்லா தோழர்களைப் போல விஜயசேஷமகாலிலேயே தோழர்களுடன் தோழனாக மிக எளிமையாகத் தங்கி இருந்தது நினைவுக்கு வந்தது. வேளாவேளைக்கு மருந்துகளை உட்கொண்டது ஒரு ஒழுங்கமைக்கப் பட்ட வாழ்வை மேற் கொண்டது இவை எல்லாம் தான் அவரை 95 வயது தாண்டியும் வாழவைத்தது என்று நினைத்துக் கொள்வேன். நாம் எல்லாம் தேசத்தின் சொத்துக்கள், நம்மை சேதப் படுத்திக் கொள்ள நமக்கே உரிமையில்லை, மாறாக நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது நம்மை இந்தப் போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொள்ள ஒரு வழிமுறையாகும் என்பதை அவரது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்நெறிகளில் இருந்து அறிந்துகொண்டேன். உங்கள் பதிவு மனதை நெகிழவைத்தது. செவ்வணக்கம் தோழர் ஜோதிபாசு. நாகநாதன், திருச்சி.

  பதிலளிநீக்கு
 13. //மார்க்சீய ஜோதி ஒருபோதும் அணையாது. அதன் தொடர் ஒட்ட வெளிச்சத்தில் காலம் முன்னே நீண்டு செல்கிறது.....//

  இதை தாண்டி சொல்வதற்கு ஒன்றுமில்லை அண்ணா!

  பதிலளிநீக்கு
 14. மகத்தான தலைவருக்கு செலுத்திய நினைவு அஞ்சலியில் தங்களையும் இணைத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!