சொந்த மண்ணும் சொந்தக் கால்களும்!

'என்ன பாட்டி சேமியா ஐஸ் சாப்பிடுறீங்களா?'

கேட்டதும் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வெட்கமும் , சந்தோஷமும் வந்துவிட்டது.  அப்போது கிளையில் அவர்கள் ஒருவர் மட்டுமே வாடிக்கையாளராக  இருந்தார்கள்.

'ஆமா..தம்பிக்கு எப்பவுமே வெளையாட்டுத்தான்.பாட்டிக்கிட்டே கேக்குற கேள்வியப் பாரு?'

'பாட்டி..ஒங்கக் கிட்ட முறுக்கு வேணுமா, கடலை உருண்டை வேணுமான்னு கேட்டா நா வெளையாடுறதாச் சொல்லலாம். ஐஸ்தான கேட்டேன். கடிக்க கிடிக்க  வேண்டியதில்லையே'

'அ..போங்க தம்பி.'  செல்லமாய் கோபப்பட்டார்கள்.

வாங்கிக் கொடுத்த போது மிகுந்த வாஞ்சையோடு பார்த்தார்கள். சொர்ணத்தாயம்மாள். வயசு  அம்பதுக்கு  மேலிருக்கும். நரை கலந்த முடி  ஒழுங்கற்று எனக்கென்ன என்று கலைந்திருக்கும். சாதாரணமாய் பேசும்போதே லேசாய் மூச்சிறைக்கும். எப்போதும் சின்ன  சுருதியோடு அசைந்தபடி இருக்கும் விரல்கள். ஒற்றை ஆளாய் குடும்பத்தை இழுத்த களைப்பு அந்த உடலிலும், மனசிலும் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.
முப்பது வருஷத்துக்கு மேலிருக்குமாம். ஒரு அதிகாலையில்  கருப்பட்டி கடித்து நீத்துப்பாகத்தை குடித்துவிட்டு  குருசாமி தலைக்கயிறையும், சுண்ணாம்பு கலந்த  குடுவைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவன்தான். பனைமரத்திலிருந்து கீழே விழுந்து  பேச்சு மூச்சற்று போனான். இதை இப்போது சொர்ணத்தாயம்மாள் சொல்லும்போதும் குரல் கரகரத்துவிடுகிறது. பார்வை  நிலைகுத்தி விடுகிறது. இரண்டு  ஆண்பிளைகளை வாழ்வின் அர்த்தமாகக் கொண்டு சொர்ணத்தாயம்மாள் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஊருக்கு வெளியே ஒற்றையடிப்பாதையாய் இழுத்துச் செல்லும் தேரிக்காட்டுக்குள் மூன்றுபேரின் வயிற்றுக்கான பிழைப்பு இருந்தது.. முட்களும் புதர்களுமாய்  அடர்ந்து கிடக்கும் ஒடை மரங்கள்தான் அந்த குடும்பத்திற்கு நிழல் தந்தன. காய்ந்த மரங்களை வெட்டி முள் அடித்து  ஒரு சுமை கொண்டு வந்து  ஊருக்குள்   பானைக்காரர் வீட்டிற்கு,  பட்டாணித் தாத்தா வீட்டிற்கு என்று மாற்றி மாற்றி  விறகு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களில் மாறி மாறி புண்களும்,  கைகளில் சிராய்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். தேகம் முழுவதும் வெயிலும், முட்களும் பாய்ந்திருக்கும்.

இன்று இரண்டு பையன்களில் மூத்தவன் பம்பாயில் கடலை மிட்டாய்க் கடையிலும், இரண்டாவது மகன் வண்டலூரில் ஒரு பலசரக்கு கடையிலும் வேலை  பார்த்து கொண்டிருக்கிறார்கள். சொர்ணத்தாயம்மாள் அதே ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். வங்கியின் இந்தக் கிராமத்துக் கிளைக்கு, வாரத்துக்கு இரண்டு நாள் வருவார்கள். இருபது ருபாயோ, பதினைஞ்சு ருபாயோ போடுவார்கள்.  ஒருநாளும் பணத்தைத் திரும்ப எடுத்ததே கிடையாது.

'பாட்டி.. எதுக்கு இங்க கிடந்து சங்கடப்படுறீங்க...பேசாம எதாவது ஒரு பையங்கிட்டப் போயி இருக்க வேண்டியதுதான?' ஒருநாள் கேட்ட போது முதலில் கவனிக்காத மாதிரி இருந்தார்கள். பணத்தை போட்டு விட்டு  கிளம்பும்போது 'அது வந்து தம்பி... நமக்கு இந்த மண்ணுதான்  ஒட்டும்.  இங்கதான் இந்த கட்டை வேகணும்.' என்றார்கள். முகம் அழுத்தமாயிருந்தது.

'இல்ல..ஒடம்பை கவனிக்க...கடைசிக் காலத்துல ஒத்தாசையா இருக்க.. பிள்ளைங்க கூட இருக்குறது நல்லாயிருக்கும்னு  சொன்னேன்.'
'பாவம்யா.. எங்கயாவது அதுக நல்லாயிருக்கட்டும். நம்ம என்ன அவுங்களுக்கு பெரிய படிப்பா படிக்க வச்சுட்டோம். எதோ ஆளாக்கியிருக்கோம். இனும அதுக  பாடு. நாம  தொந்தரவா இருக்கக் கூடாது'

'நீங்க இந்தப் பணத்த எடுத்து ஒங்க காலுக்கு வைத்தியம் பாக்கலாம்ல. கொஞ்சம் சத்தான ஆகாரம் எதாவது  சாப்பிடலாம்ல'

'ஆமா..இதச் சாப்புட்டுத்தான் உயிர் வாழப்போறமா. போகுறதுன்னா எப்படியும் போகும். ஆனா அம்மா ஈமச் செலவுக்குன்னு கூட எம்புள்ளைக நாளைக்கு  கலங்கி நிக்கக்கூடாது. யாரையும் எதிர் பார்க்கக் கூடாது. அதுக்குத்தான் இதெல்லாம்' பாஸ் புத்தகத்தை கண்ணில் ஒத்திக் கொண்டு  காலை கொஞ்சம்  நொண்டியபடி சொர்ணத்தாயம்மாள் நடந்து சென்றார்கள்.

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாம் புதைந்து இருக்கிறது. இத்தனை வயதுக்கு பிறகும்  தன் காலில் நிற்க வேண்டும் என்கிற ரோஷமும்,  இந்த மண்ணோடு உயிரைப் பிசைந்து வைத்திருக்கிற  உறவும் கிராமங்களில், எளிய மனிதர்களிடம்தான்  இருக்கிறது.

என்ன நேரத்தில் அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார்களோ  இரண்டு மாதத்துக்குள் சொர்ணத்தாயம்மாள் இறந்து போனார்கள்.  மத்தியானம் போல  கிளையில் பணிபுரிந்த மூன்று பேரும் பார்க்கச் சென்றோம். கோழிக்கூடு போல இருந்த சின்ன குடிசையின் வாசலில் சொர்ணத்தாயம்மாளை படுக்க வைத்திருந்தார்கள். கட்டை  விரல்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தக் கால்கள் ஒய்வெடுத்து இருந்தன. எத்தனை முறை இந்தக் கால்கள் வங்கியின் வாசலை மிதித்து இருக்கும். கண்கள்  கலங்கின. 'மூத்த பையன் வர்றதுக்கு நாளாகும். இளையவன் சாயங்காலம் வந்துருவான். வந்தவுடன் எடுக்க வேண்டியதுதான்' யாரோ சொல்லிக் கொண்டு  இருந்தார்கள். நாங்கள் திரும்பினோம்.

எத்தனையோ  வாடிக்கையாளர்கள்..எத்தனையோ மனிதர்கள்...எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் என்று காலம் வேகமாக தாவிச் சென்றாலும் சிலர் நமது  கண்களுக்குள்ளேயே நிறைந்து விடுகிறார்கள்.எப்போதாவது  லெட்ஜரை புரட்டும்போது முடிக்கப்பட்ட கணக்கு உள்ள  அந்தப் பக்கம் சொர்ணத்தாயம்மாளை  ஞாபகப்படுத்தி மறையும். கிளைகளில் கம்ப்யூட்டர்கள் வந்தபிறகு நினைவுகளின் அடுக்குகளில் புதைந்திருக்கிறார்கள் துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக.

(இது ஒரு மீள் பதிவு)

 

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கிளாஸ் !!!

    நெகிழ‌ வைத்த‌ ப‌திவு. எளிமையான‌ மொழிந‌டையில்
    ம‌யிலிற‌கால் வ‌ருடிய‌தைப் போல.

    சொர்ண‌த்தாய‌ம்மாள் ம‌ன‌தில் ப‌திகிறார்.

    பதிலளிநீக்கு
  2. சொந்தமண்ணையும் சொந்தக்கால்களையும் நம்பிய அந்தக்கால மனிதர்கள் அவர்களின் வைராக்கியம் அவர்களின் பழக்கவழக்கங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்
    நன்றி அண்ணா இந்த மீள்பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  3. மரணம் தான் எளிய மக்களுக்கு ஒய்வை தரும். அந்த எளிய மனிதர்களிடம் நாம் கற்று கொள்ள நிறைய உள்ளன. மனதை பாதித்த பதிவு.

    பதிலளிநீக்கு
  4. நெகிழ வைத்த பதிவு. மீள் பதிவிட்டதற்கு நன்றி மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள மாதவராஜ்

    மனிதம் மெய்யாலுமே மனிதம் தான் நிலையானது

    நன்றி

    ராதாகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  6. அண்ணா,
    இதைப்போல எத்தனையோ கால்கள்,
    சொந்த மண்ணைப் பிரியாமல்.
    குழந்தைகளுக்கு பாரமாயிருக்க விரும்பாமல்...
    மனதில் ஏதேதோ நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  7. மிக நெகிழ்வான பகிர்வு மாதவன்.

    எவ்வளவு அர்த்தங்கள் நிரம்பியதாகி விடுகிறது மனித வாழ்வு!

    மீள் பதிவிற்கு நன்றி மாது.

    பதிலளிநீக்கு
  8. /*இத்தனை வயதுக்கு பிறகும் தன் காலில் நிற்க வேண்டும் என்கிற ரோஷமும், இந்த மண்ணோடு உயிரைப் பிசைந்து வைத்திருக்கிற உறவும் கிராமங்களில், எளிய மனிதர்களிடம்தான் இருக்கிறது*/
    உண்மை. நெகிழ வைத்த பதிவு. சமீபத்தில் மண்ணை விட்டு மனமின்றி குழந்தைகளுக்காக வந்து விட்டு, மண்ணின் நினைவில் கலங்கிய ஒருவரின் முகமும் கண்ணுள் வந்து சென்றது...

    பதிலளிநீக்கு
  9. நெகிழ‌ வைத்த‌ ப‌திவு. இது போன்ற மனிதர்கள் தாம் நம் மனதிலும் ஆழ விதைத்துவிட்டு செல்கிறார்கள் நம்பிக்கையை.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு சார். சொர்ணத்தம்மாள்கள் இன்னும் நிறைய இருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  11. பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

    எப்போடா கல்லூரி படிப்பு முடியும் உடனே வெளிநாடு போய் பணம் சேர்க்க வேண்டும் என்ற மக்கள் நிறைந்த அருவருப்பான சூழலில் இந்த மாதிரி நல்ல மனிதர்கள் தான் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை அளிக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  12. "சொந்த மண்ணும் சொந்தக் கால்களும்!"
    இவைதான் நாடுகளை நிமிர்ந்து நிற்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அ.மு.செய்யது!
    ஜோதி!
    தமிழ் உதயம்!
    சரவணக்குமார்!
    ராகி!
    அம்பிகா!
    ராஜாராம்!
    அமுதா!
    அமிர்தவர்ஷிணி அம்மா!
    நவாஸூதீன்!
    அன்புடன் அருணா!

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சொந்த மண்.
    சொல்லும்போதே மனநெகிழ்வு.
    மீள்பதிவானாலும் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  15. மண்வாசனை வீச
    தேகநலம் காக்க
    திரவியம் தேட
    வெளியூர் நாட
    ஒரமாய் சிறிது மகிழ
    கொண்ட செல்வங்கள் நிறைய
    சொந்த ஊர் திரும்ப
    பந்த பாசம் மகிழ
    பறை சாற்ற
    உத்தமர் உறவு வேண்டும்.. ////


    [[Chitram}}

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதை - பகிர்வுக்கு நன்றி
    இரை தேட இந்த நகர ( நரக ) வாழ்க்கைய நோக்கி போனாலும் .. சொந்த மணுல முச்சு விடும் போதுதான் நெஞ்சு குழி நெரைது !!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!