வா.மு.கோமுவின் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ நாவல் எனக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பற்றி கேள்விப்பட்டு, படிக்கவேண்டும் என உந்துதல் ஏற்பட்டு, புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்து படித்தால், புஷ்பா தங்கதுரையின் எழுத்துக்களை விடவும் மோசமாக உணர்ந்தேன். நாற்பது நாளைக்குள் எழுதப்பட்ட இந்த நாவலைப் பற்றி இப்படித்தான் பின்பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது:
பாலின்பத்தின் வேட்கைகளும், வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் என்றும் சொல்லக்கூடாதவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆசாபாசங்களும், இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது.
நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.
ஆனால் இந்த நாவல் இன்பமூட்டவுமில்லை. பயப்பட வைக்கவுமில்லை. தமிழ்ச்சினிமாவில் வருகிற விடலைகளின் அபத்தக் காதல், காமம் எல்லாம் நாவலில் மேலும் முற்றிய நிலையிலிருந்தன. ஆண் பெண் உறவுகள் எப்போதும் முறுக்கேறிய நிலையிலிருந்தன. உடல் குறித்த உரையாடல்கள் எந்த சுவராசியமுமில்லாமல் அயற்சியை உண்டு பண்ணின. எவ்வளவோ சொல்வதற்கு வேண்டியிருக்கிற சமூகத்தின் மொத்த வெளியிலும் இவைகளையா நிரப்பி, பொதுப்பண்பாடு என்று முத்திரை குத்துவது?
காதல், காமம் குறித்து பொதுவெளியில் பேசவேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இன்னும் நிறைய நிறைய பேசலாம். அதன் அழகை, அர்த்தங்களை, அந்தரங்கச் சுவைகளைப் பேசவேண்டும். வாழ்வின் வசீகரமான நுட்பமான பகுதிகள் அவை. அப்பட்டமாக, அப்படியே பேசுகிறோம் என்பது வக்கிரங்களாக மாறிவிடக் கூடும். ‘அதிலென்ன ரகசியம் வேண்டியிருக்கிறது, நாசூக்கு வேண்டியிருக்கிறது, சமூகத்தின் வழமைகளை கட்டுடைக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குரல்கள் எழக்கூடும். தங்கையின் மீது தன் காதலனுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்று அக்கா புரிந்துகொண்டவுடன், தங்கை இரவில் சுயபோகம் (இங்கு நாகரீகமான வார்த்தை குறிப்பிடப்பட்டு இருக்கிறது) செய்துகொள்கிறவள் என்று காதலனிடம் தங்கையைப் பற்றிப் போட்டுக் கொடுப்பது இன்பமூட்டுவதாக இருக்கிறதா? பயப்பட வைப்பதாக இருக்கிறதா? எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. இதைப் போல நூறு விஷயங்கள் கொண்டதுதான் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்’.
பதிவர் ராகவன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ’சில விஷயங்களை சொல்லாமல் விடுவதுதான் அழகு’ என்று. உண்மைதான். எப்போதோ படித்த ஒரு கதையை இங்கு சொல்ல வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாட்டில், அரசன் மக்களை ரொம்பக் கொடுமைப்படுத்துவான். ரொட்டிக்கு வழியில்லாமல் கஷ்டப்படுவார்கள். அரசி நல்லவளாயிருப்பாள். எல்லோரும் அவளிடம் போய் முறையிடுவார்கள். அரசி, மக்களுக்காக அரசனிடம் பேசுவாள். ‘மக்களுக்காக இவ்வளவு வருத்தப்படுகிறியே..அந்த இழிந்த மனிதர்களுக்காக எது வேண்டுமானாலும் நீ செய்யத் தயாரா?” என்று கேட்பான். அவள் சம்மதிப்பாள். ”நண்பகலில், நகரத்தின் வீதிகளில் நீ ஆடையில்லாமல் நடந்து வா” என்பான் அரசன். மக்களுக்காக அரசியும் அவ்வாறேச் செய்வாள். தங்கள் அரசியின் கோலத்தைப் பார்க்காமல் மக்கள் அனைவரும் தங்கள் கதவுகளை மூடிக்கொள்வார்கள். அப்போது அந்த எழுத்தாளர் எழுதுவார்....’ மக்களின் அன்பினாலும், தனது கருணையாலும் நெய்யப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு அரசி நடந்து வந்தாள்’ என்று. இங்கே படைப்பு இன்பமூட்டுவதாக இருக்கிறது. பச்சை, நீலம், மஞ்சள் என்றில்லாமல் எழுத்துக்களை இந்த நிறத்தில் பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது!
வா.மு.கோமுவின் ’மண்பூதம்’ என்னும் சிறுகதையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முதல் கதையான ’பச்சைமனிதன்’ மொழியும், படிமங்களும் வித்தியாசமாய் இருந்தது. முதலில் இங்கிருந்து வா.மு.கோமுவை படித்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அவரது ‘ஒரு பிற்பகல் மரணம்’ சிறுகதைத் தொகுதியும் அடுத்து படிப்பதற்காக வைத்திருக்கிறேன்.
நேற்று குடியரசு தின விழா நிகழ்வில் பீட்டர் அல்போன்ஸ் சுதந்திர இந்தியா, காங்கிரஸ் குறித்தெல்லாம் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தலையிலடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. காமராஜரைப் பற்றிச் சொல்லும்போது அவர் மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர், அவரது குடும்பத்தைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார். மூப்பனாரைப் பற்றி சொல்லும்போது அவருக்கு என்று ஒரு பாரம்பரியமும், வரலாறும் ஏற்கனவே இருந்தது என்றார். பண்மும், நிலமும் கொண்டவர்களுக்குத்தான் வரலாறு இருக்கிறது எனப் புரிதல் கொண்ட இவரைப் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியின் அறிவுஜீவிகளில் அடக்கம் போலும்.
கலைஞர் டி.வியில் நேற்று காட்டிய இசையும், நாட்டியமுமான அந்த நிகழ்ச்சியில் மெய்மறந்து போனேன். உடல் ஊனம் கொண்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் வாழ்வின் முக்கிய அனுபவங்களில் ஒன்றாகி விட்டது. இசையோடு கலந்த அவர்களது அசைவுகள் பிரமிப்பில் ஆழ்த்தின. வனாந்திரத்தில் சிதறிக்கிடந்த அழகையெல்லாம் அள்ளிப்பருகியது போல இருந்தது. சூரியன் உதித்தது. பறவைகள் சிறகிசைத்தன. வண்ணத்துப் பூச்சிகள் காதல் செய்தன. தோகை விரித்து, கழுத்து வெட்டி மயில் ஒன்று நீர் குடித்து ஆடிய காட்சியில் கலையின் அழகெல்லாம் திரண்டிருந்தது. அழகு. அற்புதம். அதிசயம் எல்லாம்!
கரிசக்காட்டு மண் பிசைந்த மொழிக்காரன் அருமைத் தோழன் காமராஜ் இன்று 200வது பதிவு எழுதி இருக்கிறான். அவனுக்கு என் வாழ்த்துக்கள்.
தங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. பின்னூட்டம் இடா விடினும்..
பதிலளிநீக்குநண்பர் காமராஜுக்கு வாழ்த்துக்கள். அறிமுக படுத்திய உங்களுக்கு நன்றி
மாதவராஜ்,
பதிலளிநீக்குபகிர்தலுக்கு நன்றி.. வ.மு.கோ.மு வின் "தவளைகள் குதிக்கும் வயிறு" சிறுகதை தொகுப்பை ஆவலுடன் வாங்கி படித்து ஏமாந்து போனேன்..உடல் மொழி குறித்த இவரின் எழுத்துக்கள் ஏனோ அயர்ச்சியை மட்டுமே தந்தது.
அவ்வகையில் ஜே.பி.சாணைக்யாவின் எழுத்துக்கள் சிறந்தவை. அவரின் "ஆண்களின் படித்துறை" தொகுப்பு நல்ல எடுத்துக்காட்டு.
//காதல், காமம் குறித்து பொதுவெளியில் பேசவேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இன்னும் நிறைய நிறைய பேசலாம். அதன் அழகை, அர்த்தங்களை, அந்தரங்கச் சுவைகளைப் பேசவேண்டும். வாழ்வின் வசீகரமான நுட்பமான பகுதிகள் அவை. அப்பட்டமாக, அப்படியே பேசுகிறோம் என்பது வக்கிரங்களாக மாறிவிடக் கூடும். ‘//
பதிலளிநீக்குமிகச் சரியான பார்வை தோழர். எழுத்தாளனுக்கும் சமூகம் சார்ந்த பார்வையும் அக்கரையும் உண்டு என்பதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.
அரிப்பிற்கு சொரியுமிடமாக எழுத்துலகம் சிலநேரங்களில் அமைந்து விடுவதுதான் கொடுமை.
வாழ்த்துக்கள்
இனிய நண்பர் காமராஜ்க்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநல்ல வேளை !!! இத்தொகுப்பை வாங்க வேண்டும் என்று வெகுநாட்களாக ஆவல் இருந்தது.
பதிலளிநீக்குகாப்பாத்திட்டீங்க..!!!
கலைஞர் டிவியில் சீனக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சியை எதேச்சையாகத் தான் பார்க்க நேர்ந்தது.
உடல் ஊனமுற்ற ஒரு சீனப்பெண்மணி, ரஹ்மானின் "சின்ன சின்ன ஆசை" பாடலை,எந்த குறிப்புகளுமின்றி,
வரி பிசகாமல் தமிழில் பாடியது, ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியை தோற்றுவித்தது.
நாமெல்லாம் எங்கே இருக்கிறோம்.
வா.மு.கோ.மு.-வின் மண்பூதம் சிறுகதைத் தொகுதி எனைப் பெரிதும் கவர்ந்தது அது போலவே அவரின் சொல்லக் கூசும் கவிதை கவிதைத் தொகுதியும் - இவர் எழுத்துகள் என்னை வசீகரிக்கின்றன
பதிலளிநீக்கு//பண்மு(பு?)ம், நிலமும் கொண்டவர்களுக்குத்தான் வரலாறு இருக்கிறது எனப் புரிதல் கொண்ட//
பதிலளிநீக்குசரேல்ன்னு ஒரு கத்தி போற போக்கில குத்தி நின்னுட்டேன் ஒரு சாடலை அல்லது நிராகரிப்பை பதிவு செய்கிற லாவகம்
வாமு. கோமு - புனுகுப் பூனையின் வாசனை ஏதோ ஒரு புள்ளியில்
அதன் உடல் ஒட்டிக் கொண்டிருக்கிறது
அன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குஅவசியமான பதிவு, அழகான பதிவும் கூட. வா.மு.கோமுவை படித்ததில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
“எவ்வளவோ சொல்வதற்கு வேண்டியிருக்கிற சமூகத்தின் மொத்த வெளியிலும் இவைகளையா நிரப்பி, பொதுப்பண்பாடு என்று முத்திரை குத்துவது? காதல், காமம் குறித்து பொதுவெளியில் பேசவேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இன்னும் நிறைய நிறைய பேசலாம். அதன் அழகை, அர்த்தங்களை, அந்தரங்கச் சுவைகளைப் பேசவேண்டும். வாழ்வின் வசீகரமான நுட்பமான பகுதிகள் அவை. அப்பட்டமாக, அப்படியே பேசுகிறோம் என்பது வக்கிரங்களாக மாறிவிடக் கூடும்.”
மேலே உள்ள பத்திக்கு ஒத்த கருத்துடையவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். வா.மு.கோமுவை நான் படிக்காததால் அதைப்பற்றி மேலும் பேசுவது உகந்ததல்ல.
உங்களின் மிக அழகான விமர்சன பார்வை அய்யனார் சாமி அருவாள் நுனிமாதிரி பளபளன்னு மின்னிக்கிட்டு கிடக்கு,
அன்பும், வாழ்த்தும்
ராகவன்
வாமு கோமுவின் மண்பூதம் வாசித்தேன். ஒரு வசீகரம் இருக்குதுங் அவரது வட்டார வழக்கில்.
பதிலளிநீக்குகள்ளியும் கைவசம்.. இருந்தது. முன்னுரையைப் படித்து முடிக்கும் முன்பே 4 ரவுண்டு அடித்து முடித்திருந்திருந்தால் நண்பனுக்கு பரிசளிக்கப் பட்டுவிட்டது.
நிராகரிக்கப் படவேண்டிய எழுத்து என்று எதுவும் எழுதப்படவில்லை என்றே நம்புகிறேன்.
மோகன்குமார்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
லேகா!
நன்றி. சாணக்கியாவின் நாவலை நான் படித்ததில்லை. படிக்க வேண்டும்.
ஆரூரன்!
நன்றி.
ஈரோடு கதிர்!
நன்றி.
அ.மு.செய்யது!
நன்றி.
மிக அருமையான நிகழ்ச்சி அது.
நந்தா!
மண்பூதம் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
நேசமித்திரன்!
நன்றி.
//வாமு. கோமு - புனுகுப் பூனையின் வாசனை ஏதோ ஒரு புள்ளியில்
அதன் உடல் ஒட்டிக் கொண்டிருக்கிறது//
:-)))
ராகவன்!
//வா.மு.கோமுவை படித்ததில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//
:-))))
ஜெகநாதன்!
நான் படித்ததில் அவரது அந்த நாவல் எனக்குப் பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்கிறேன். விமர்சனம் செய்கிறேன். நிராகரிக்கச் சொல்லவில்லை.
இன்னும் படிக்கவில்லை!
பதிலளிநீக்குகள்ளி படித்து விட்டீர்களா!?
விவாதங்களை எதிர் நோக்கியே எழுதப்பட்ட ஒரு தொகுப்புதான் "இந்த சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் "
பதிலளிநீக்குதமிழில் விமர்சகர்கள் குறைவு என்பதால் தங்களிடம் இருந்து இன்னும் ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர் நோக்கியுள்ளோம்.
அதே சமயம் பல நண்பர்களிடம் இருந்து பாராட்டுகளும் வந்துள்ளன.
மாற்றம் தேவைப்படும் இடங்களை நமக்கு நீங்கள் தனியாகவோ அல்லது போனிலோ கூட கூறலாம்.
விமர்சனங்கள் வாசகர்களின் மன எதிர்பார்ப்பை நமக்கு விளக்க ஏதுவாக அமையும் என்பதும் கருத்தில் கொள்கிறோம்.
இவருடைய ‘அழுவாச்சி வருதுங் சாமி’ கிடைத்தால் படித்துப் பாருங்கள். கோமுவின் ஆகச் சிறந்த சிறுகதைகள் அடங்கிய புத்தகம் அது.
பதிலளிநீக்குதபாலில் பெற
சுந்தரசுகன்,
அம்மாவீடு,
சி-46,இரண்டாம் தெரு,
முனிசிபல் காலனி, தஞ்சாவூர் 613007 க்கு 65ரூ. மணியார்டர் அனுப்பினால் கிடைக்கும்.