சொல்லித் தெரிவதில்லை - 1

மதிய உணவு முடித்து முதல் பீரியடு ஆரம்பிக்கப் போகிற சமயம். சுற்றிலும் வகுப்பறைக் கட்டிடங்களாக இருக்கிற அந்த பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் நடுவில் இருந்த மைதானத்து வேப்ப மரத்தடியில் அது நடந்துகொண்டு இருந்தது.

எதேச்சையாக வேப்பமரம் நோக்கி திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவி ஒருத்திதான் முதலில்  அதைப் பார்த்து “ச்சீய்...இதப் பாருங்கடி..” என முகத்தை மூடினாள். கொஞ்சநேரத்தில் சுற்றி இருந்த வகுப்புகள் யாவும் அல்லோலப்பட்டன. “அய்ய்ய்யே...” என்றுதான் எல்லோரிடமிருந்தும் வார்த்தைகள் வெளிப்பட்டன. பார்த்தவுடன்  கூச்சத்திலும், அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் திரும்பிய முகங்கள் ரகசியமாய் அங்கே திரும்பவும் பார்த்தன. “நல்லாப் பாத்துக்குங்கடி..” கிண்டல் செய்தனர். “போங்கப்பா..” என்று சிலர் பெஞ்சுகளில் தலை கவிழ்ந்துகொண்டனர். ஜன்னல்கள் அருகேயான பெஞ்சுகளில் இருந்தவர்களுக்குத்தான் தெளிவாக பார்க்க முடிந்தது. அந்த இடங்களுக்கு மவுசு கூடியது. “இப்படித்தானா....” என்று யாரோ சொல்ல சத்தமாய் சிரிப்புகள் எழுந்தன. “இப்படியில்ல..” என்று வேறு யாரோ சொல்ல பெரும் ஆரவாரமானது.

டீச்சர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். யாரும் இன்னும் வகுப்புகளுக்கு வராமலிருந்தார்கள். அவர்களுக்கான ஓய்வு அறையில் பரபரப்பு தெரிந்தது. வெளியே வந்து நிற்பதும், வகுப்பறையைப் பார்ப்பதும், வேப்பமரத்தடியை பார்ப்பதுமாக இருந்தனர். அவர்களும் சிரித்தனர். முகத்தை மூடினர். வெட்கப்பட்டனர்.

தமிழ் டீச்சர்தான் வெளியே வந்து “வாட்ச் மேன்... வாட்ச் மேன்” என்று கத்தினார்கள். எங்கேயோ இருந்து தலைதெறிக்க ஓடிவந்த, பள்ளியில் பணிபுரியும் ஒரே ஒரு ஆணான அவரும் அதைப் பார்த்தார். சங்கடப்பட்டு நின்றார். “எத்தன தடவ சொல்லியிருக்கேன். பள்ளிக்கூடத்துக்குள்ள அதுக பாட்டுக்கு நாய்ங்க உள்ளே வருது, போது, இஷ்டத்துக்கு திரியுதுன்னு... இப்ப பாருங்கய்யா.... கருமம்” என்று தலையில் அடித்தார்கள்.

வாட்ச்மேன் சில கற்களை பொறுக்கிக் கொண்டு அந்தப் பக்கம் விரைந்தார். எறிந்து பார்த்தார். இனி பலிக்காது. அதற்கான தருணம் தாண்டியிருந்தது.  சிரித்தவர்களுக்கு இப்போது பாவமாயுமிருந்தது. மீண்டும் தமிழ் டீச்சர்தான் வெளியே வந்து “ஒங்களுக்கு கூறுபாடு எதுவும் கெடையாது... போங்கய்யா...” என்று வாட்ச்மேனை விரட்டினார்கள்.

டீச்சர்கள் வகுப்பறைகளுக்கு வந்தார்கள். நுழைந்தவுடன் முதலில்  ஜன்னல்களையெல்லாம் வேகமாய் மூடினர். சென்ற பீரியடில் போர்டில் எழுதப்பட்டு இருந்த எழுத்துக்களை அழித்தனர். சின்னச் சின்னதாய் சிரிப்புகளும், முணுமுணுப்புகளுமாய் மாணவிகளிடம் அடர்ந்திருந்தது. அவரவர்க்கான புத்தகத்தை எடுத்துக்கொண்டு “சரி... பாடத்தை ஆரம்பிப்போம்” என்று முகங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அடக்கிவைக்க முடியாமல் மாணவிகள் ஹோவென்று சிரித்தனர். டீச்சர்களும் சிரித்தனர்.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. விவரம் சொல்லாமல் புரிய வைத்த தங்கள் எழுத்து அற்புதம்..

  பதிலளிநீக்கு
 2. ஆரம்பிச்சாச்சா என் தோழனே.
  நடத்து.

  பதிலளிநீக்கு
 3. சந்தனமுல்லை!
  :-))))


  தீபா!
  கலக்கலா..... இன்னும் இருக்கு!  அண்டோ!
  அழகான பதிவா! நன்றி தம்பி!


  பா.ரா!
  1. ஒ.கே!
  2.நிறைய இருக்கு... 1...2...3..... என்று!


  ரிஷபன்!
  சொல்லாமலே நிறைய சொல்ல முடியும்! பொறுத்திருந்து பாருங்க!


  ராமசாமி!
  இன்னும் நிறைய் கலக்க வேண்டியிருக்கே!  காமராஜ்!
  ஆமாம். தோழனே! ஆரம்ச்சிட்டேன். நடத்தாமல் விடப்போறதில்ல!

  பதிலளிநீக்கு
 4. நண்பர்களே!

  இப்படி நிறைய பேச, பகிர இருக்கு என்றே நினைக்கிறேன். சமீபத்தில் வா.மு.கோமுவின் நாவல் படித்தேன். பிடிக்கவில்லை. இங்கு சிலர் எழுதும் பதிவுகளையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். பிடிக்கவில்லை. அப்பட்டமாய் எழுதுவதை ‘கட்டுடைப்பது’ என்றும், நவீன யதார்த்தம் என்றும் அவை புழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பாதிப்பே இந்த சொற்சித்திரங்கள்.

  எதுவும் சொல்லாமலே காமத்தின் அழகை பாதுகாக்க முடியும் என்றே நினைக்கிறேன். அதன் முதல் அடி இது!

  பதிலளிநீக்கு
 5. //அப்பட்டமாய் எழுதுவதை ‘கட்டுடைப்பது’ என்றும், நவீன யதார்த்தம் என்றும் அவை புழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//
  நிச்சயமாக.

  பதிலளிநீக்கு
 6. அன்பு மாதவராஜ்,

  அழகான பதிவு. ஒரு விஷயத்தை சிறப்பா எப்படி சொல்லனும்னா, அத சொல்லாம விடுறது தான்னு ஜென் தத்துவம் மாதிரி, மறை பொருளாய் மினுக்கிக் கொண்டு திரியும் இது மாதிரி எழுத்துக்கள் எழுத ’மா’ ’தவ’ ‘ராஜ்’ ஆ இருக்கனும்னு நினைக்கிறேன் மாதவராஜ்.

  உங்களின் பின்னூட்டங்களின் பின்னூட்டம் இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தை கொஞ்சம் உஷ்னத்துடன் எறிந்து விட்டுச் செல்கிறது. வாழ்த்துக்கள் மாதவராஜ்!

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 7. Mathavji! kindly wait for the comment of Jnani(THEEM THARIKIDA) who is an exponent of sex education in schools......Kashyapan.

  பதிலளிநீக்கு
 8. சொல்லித்தெரிவதில்லை... உண்மைதான்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!